அ.முத்துலிங்கம்
நான் சிறுவனாய் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அடிக்கடி ஒரு பாடகர் வருவார். மடியிலே சுருட்டி பத்திரமாக கஞ்சா இலை வைத்திருப்பார். நான் அவருக்கு தென்னந்தும்பை உருட்டிக் கொடுப்பேன். கஞ்சாவை எடுத்து கசக்கி குழாயிலே இட்டு, அதற்குமேல் தென்னந்தும்பு உருண்டையை வைத்து கொளுத்தி புகைப்பார். எங்கள் ஊரிலே அகிழான் பிடிப்பதற்கு புகை போடுவோம். இவரும் அப்படித்தான். உள்ளே புகை போனதும் பாட்டு ரெடியாகும். அவர் வாயை திறந்ததும் அவை துள்ளிக்கொண்டு வெளியே வந்துவிடும். நடுச்சாமம் வரைக்கும் அந்தப் பாட்டுகள் ஊர் முழுக்க கேட்கும்.
ஆப்பிரிக்காவில் நான் இருந்தபோது எங்கள் வீட்டில் கொங்கோ நாட்டு வேலைக்காரன் ஒருவன் வேலை செய்தான். அரிவாள் மணையில் உட்காருவது போலவே எப்பவும் கால்களை மடித்து உட்கார்ந்திருப்பான். என்ன வேலை கொடுத்தாலும் வேகமாகச் செய்து முடித்துவிடுவான். இவன் 14 மொழிகள் பேசுவான். ஒரு நாள் இவனை திடாரென்று காணவில்லை. பொலீஸில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்து அங்கே போனால் கஞ்சா புகைத்த குற்றத்திற்காக இவனை கைது செய்திருந்தார்கள். 14 மொழிகளில் அவன் கெஞ்சியும் அவனை சிறையில் தள்ளிவிட்டார்கள். அவனுடைய பெயர் அமோஸின். என்னுடைய துக்கம், 14 மொழிகளில் விற்பன்னனான இவன் – தன்னுடைய பெயரிலேயே தமிழின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் வைத்திருப்பவன் – தமிழை கற்றுதேறுமுன் சிறையில் அடைபட்டுவிட்டானே என்பதுதான்.
பாகிஸ்தானுக்கு போனேன். அங்கே பெஷாவார் என்னும் ஊரிலே எனக்கு வேலை. பெஷாவார் என்பது புஸ்பபூர் என்பதிலிருந்து மருவியது. பெயருக்கு ஏற்ற வகையாக எங்கள் வீட்டு தோட்டத்தில் விதவிதமான பூக்கள் பூத்தன. உலகத்தில் உள்ள அத்தனை வகையான பூக்களும் அங்கே இருந்தன என்றே நினைக்கிறேன். அதிலே பல பூக்களை நான் முன்பு பார்த்ததே கிடையாது. வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு தோட்டக்காரன் வந்து புஸ்து மொழியில் பூக்களுடன் உரையாடியபடியே பூந்தோட்டத்தை பராமரிப்பான்.
ஒரு நாள் ஐக்கிய நாடுகள் போதைப் பிரிவின் பெஷாவார் தலைவர் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். தோட்டத்தை பார்வையிட்டவர் ஓர் இடம் வந்ததும் அப்படியே அசையாது நின்றார். ஒரு பூவைக் காட்டி இதுவென்னவென்று தெரியுமா என்று கேட்டார். அது வட்டமான ரத்தச் சிவப்பு பூ. நான் சிவப்பு பூ என்றேன். கஞ்சாவுக்கு ஒருபடி மேலே மோசமானது இந்தச் செடி. இந்தப்பூவின் பெயர் பொப்பி, இதன் நெற்றில் இருந்துதான் அபின் தயாரிப்பார்கள் என்றார். அவருடைய நாடி குதிரை லாடம்போல மேலும் கீழும் அசைவதை நான் பார்த்தேன். காது கேட்பதை நிறுத்திவிட்டது. தோட்டக்காரன் புஸ்து பேசியபடி வேறு லாபகரமான வியாபாரமும் பார்த்திருக்கிறான் என்பது எனக்கு பின்னாலே தெரிந்தது. அடுத்தநாள் அந்தப் பூவும் இல்லை; அது பூத்த செடியும் இல்லை, அதை வளர்த்த தோட்டக்காரனும் இல்லை.
கனடாவுக்கு வந்து சேர்ந்தோம். நான் வந்தது அப்போதைய பிரதமர் ஜோன் கிறேட்டியனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் கஞ்சா புகைப்பதை ஒரு கனடிய கலாச்சாரமாக்க எவ்வளவு பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். வில்லியம்ஸ் என்ற பதின்பருவத்து பையன் பொது இடத்தில் கஞ்சா புகைத்து பிடிபட்டபோது அதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கஞ்சா புகைப்பது சட்டவிரோதமான காரியம் அல்ல என்று தீர்ப்பு சொல்லிவிட்டார். இதை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று மாவட்ட பொலீஸ் அதிபர் 30 கிராமுக்கு கீழே கஞ்சா வைத்திருப்பவர்களை தான் கைது செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். கிறேட்டியன் 2003ம் ஆண்டின் இறுதியில் இளைப்பாறியபோது தான் ஓய்வு நாட்களைக் கஞ்சா புகைத்து கழிப்பேன் என்று மக்களுக்கு உறுதி மொழி அளித்தார்.
இது இப்படியிருக்க, அமெரிக்காவில் பில் கிளின்டன் தான் இங்கிலாந்தில் இருந்தபோது இரண்டொரு முறை கஞ்சா அடித்ததை ஒப்புக்கொண்டார். பிரபல திகில் நாவல் அரசர் ஸ்டாபன் கிங், கஞ்சா ஒரு அருமையான பொருள், அதை வீடுகளில் பயிரிட்டு பராமரியுங்கள் என்று இளைய தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார். ஒன்ராறியோ வாவியையும் தாண்டிவந்த இந்த அறைகூவல் ரொறொன்ரோவிலேயே தங்கிவிட்டது.
நான் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீடு பல காலமாகப் பூட்டியிருந்தது. தொடைவரை இழுத்துவிட்ட பூட்சும், அழகான தொப்பியும் அணிந்த ஒரு பெண் அந்த வீட்டுக்கு ஒரு பெரிய ரொயோட்டா வாகனத்தை ஒட்டிக்கொண்டு அடிக்கடி வருவார். பூனை மேடையில் காட்சி வரும் பெண்கள் போல இடையை முன்னுக்கு தள்ளி, தலையை பின்னுக்கு வளைத்து, இடது தோள் மூட்டால் சிறிது திரும்பிப் பார்த்தபடி மெள்ள நடந்துவந்து அன்று வந்திருக்கும் கடிதங்களை பெட்டியில் இருந்து எடுத்துச் செல்வார்.
ஒரு முறை நான் அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். தன்னுடைய பெயர் லொலிற்றா என்றார். எதற்காக வீட்டைப் பூட்டி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படிப்பதாகவும், இருவருக்கும் எங்கள் ரோட்டிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டதாகவும், வருகிற யூன் மாதம் இந்த வீட்டுக்கு மாறிவிடுவார்கள் என்றும் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, எங்கள் அயலில் வரப்போகிறவர் நல்லவராயும், அழகாயும் இருக்கிறார் என்று. 24 மணி நேரத்துக்குள் இந்த எண்ணத்தில் மண் விழப்போவது எனக்கு அப்போது தெரியாது.
அன்று இரவு பதினொரு மணிக்கு எங்கள் வீட்டு கதவு மணி விடாமல் அடித்தது. என் மனைவி கண்ணாடியால் எட்டிப் பார்த்துவிட்டு கதவை திறக்க மறுத்துவிட்டாள். பொலீஸ்காரர்கள் போல தோற்றமளித்த இரண்டுபேர் நின்றார்கள். வடக்கயிறு முறுக்கியதுபோல திடகாத்திரமான தேகம்; கதவைத் திறக்காவிட்டால் ஒரு தள்ளிலேயே கதவை உடைக்கக்கூடிய வல்லமை படைத்த சதுரமான கைகள். நான் எட்டிப் பார்த்தேன். லேசாக கைகால்கள் நடுங்கின. பொலீஸ் பாட்ஜை தூக்கி காட்ட அது இரண்டாக பிளந்து விழுந்து ஆடியது. எத்தனை ஹொலிவுட் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆஹா, உடம்பு புல்லரித்தது.
பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி விசாரித்தார்கள். நான் அந்தப் பெண்ணின் பெயர், உயரம், எடை, நிறம், ரொயோட்டா ரன்னர் SR5 வாகனம், அதன் நம்பர் எல்லாத்தையும் கொடுத்தேன். இப்படியும் ஒருவனா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டதுடன் நன்றி கூறிவிட்டு மறைந்து போனார்கள். அன்று இரவு நான் அவர்களுடைய பாட்ஜ் பிளந்து விழுந்த அதிசயத்தை நினைத்தபடியே உறங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலைப் பேப்பர்கள், கொட்டை எழுத்தில் பக்கத்து வீட்டை பொலீஸார் நடுச் சாமத்தில் உடைத்து திடார் சோதனை செய்ததைப் பற்றி எழுதியிருந்தன. நில அறையில் காடாக கூரையை தொடும் கஞ்சா செடிகள் அங்கே வளர்ந்ததாகவும், அவற்றை பொலீஸ் அழித்ததாகவும், கடந்த வருடத்தில் மட்டும் இந்த வீட்டுக்காரர் இரண்டு மில்லியன் டொலருக்கு மேலே ஆதாயம் கண்டதாகவும் எழுதியிருந்தார்கள். நான் வெளியே வந்து பக்கத்து வீட்டை பார்த்தபோது, தன் பிள்ளைகள் பள்ளிக்கூடம் மாறுவதற்காக காத்திருப்பதாகச் சொன்ன பெண்ணின் கஞ்சா செடிகளையெல்லாம் பொலீஸார் இரவிரவாகவே அகற்றிவிட்டார்கள்.
எங்கள் ரோட்டிலேயே சனசமூக மையம் இருந்ததால் அன்று அதன் தலைவர் ஒரு அவசரக் கூட்டம் கூட்டி அதிலே பொலீஸ் அதிகாரியை பேசவைத்தார். அந்த உரையின் சுருக்கம் இதுதான். ரொறொன்ரோ வீடுகளில் சட்டவிரோதமாக கஞ்சா வளர்ப்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பொதுமக்கள் உதவியின்றி இந்த விரோதிகளைப் பிடிக்க முடியாது. அயல்வீடுகளை அவதானித்து பொலீசுக்கு தகவல் கொடுப்பதன் மூலமே இவற்றை தடுக்க முடியும். கஞ்சா வளர்க்கும் வீடுகளிலே அவதானிக்கவேண்டிய விசயங்கள்:
1) வீடு பூட்டியிருக்கும்; ஆள் நடமாட்டம் இராது.
2) எப்பொழுதும் திரைச்சீலைகள் இழுத்து வீட்டை மூடியபடியே இருக்கும்.
3) நில அறை விளக்குகள் பகலும், இரவும் தொடர்ந்து எரியும்.
4) எவ்வளவு பனி பெய்தாலும் கூரையில் பனி தங்காது; உருகி வழிந்துவிடும்.
உங்கள் ரோட்டில் நடந்த திடார் சோதனைக்கு காரணம் ஒரு நல்ல மனிதர் கொடுத்த தகவல். இப்படி பொலீஸ் அதிகாரி பேசினார்.
அவர் சொன்ன நல்ல மனிதர் நான்தான்.
இந்தச் சம்பவம் நடந்தபிறகு என்னுடைய மனைவி வேறு வீடு பார்க்கவேண்டும் என்று அடம் பிடித்தாள். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. நான் அண்ணாமலை சீரியலை முதலில் இருந்து கடைசிவரை அவளுடன் சேர்ந்து இனிமேல் டிவியில் பார்ப்பேன் என்று எவ்வளவோ சத்தியம் செய்தேன். சரிவரவில்லை.
ஒரு வீடு முகவரை நான் தேடிப் பிடித்தேன். அவர் பல வீடுகளை, பல மாதங்களாக எங்களுக்கு காட்டினார். ஒவ்வொரு சிவப்பு விளக்கிலும் காரை நிறுத்தி கைதொலைபேசியில் மின்னஞ்சல் படிப்பார். அடுத்த சிவப்பு விளக்கில் அதற்கு பதில் அனுப்புவார். இவர் வீட்டை விற்பதிலும் பார்க்க எங்களை இம்பிரெஸ் செய்வதையே அதிகம் விரும்பினார் என்று நினைக்கிறேன்.
இறுதியில் ஒரு நாள் மாலை நேரம் நாங்கள் ஒரு வீட்டை கண்டு பிடித்தோம். அது எல்லா விதத்திலும் சிறந்ததாக இருந்தது. பொலீஸ் அதிகாரி வீடு மாறும்போது கஞ்சா பயிர்செய்து பழக்கப்படாத வீடாகப் பார்த்து குடிபோகவேண்டும் என்பதை எச்சரித்திருந்தார். அந்த வீட்டு கார் தரிக்கும் இடம்கூட சுத்தமாக துப்புரவு செய்யப்பட்டு, பளிங்குபோல காட்சியளித்தது. இதுதான் எங்கள் வீடு என்று நினைத்த சமயத்தில் நாங்கள் இரண்டு பேரும் அந்த வீட்டின் கூரையை தற்செயலாக நிமிர்ந்து பார்த்தோம். அங்கே ஒரு பனிக்குவியலும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது. மனைவி என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். அப்பொழுதுதான் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஞாபகம் வந்தது அது கோடைக்காலம் என்று.
முற்றும்
Appadurai Muttulingam
amuttu@roger.com
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- அவுரங்கசீப்
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- எது உள்ளுணர்வு ?
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- இரவுகள் யாருடையவை ?
- மீண்டும் வெளிச்சம்
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எடின்பரோ குறிப்புகள் -11
- தவ்ஹீது பிராமணீயம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- திரவியம்
- பறவை
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- நானும், கஞ்சாவும்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- கடித இலக்கியம்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- காந்தியும் சு.ரா.வும்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- கன்னி பூசை