நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

தாஜ்ஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளி நடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தது. நேற்று ஊர்கூடி பஞ்சாயத்து துவங்கிய நேரத்தில் பிடித்த மழை! இன்னும் விட்டபாடில்லை! பள்ளிவாசலுக்கு வேறு போயாகனும். நேற்றைக்கு நேரமில்லாமல் ஒத்திவைத்து விட்டு வந்த கேசு ஒன்னு இன்றைக்கு விசாரிக்க வேண்டி இருக்கிறது. அதன் மனுவை இராத்திரி பிரித்து பார்த்தேன்.

ரசூல் அண்ணன் வந்திருக்காங்களா?

இங்கே இருக்கேன் தம்பி!

உங்க கேசை நாளைக்கி வைச்சிக்கலாம் அண்ணே. எதுக்கும் உங்க மனைவியின் ஊர்க்காரப் பெரியவங்களை நாளைக்கி வரச் சொல்லி தகவல் கொடுத்தனுப்புங்க. ஒங்கப்பக்கத்துலே தகவல் சொல்லி அனுப்ப தக்க ஆள் இல்லேன்னா, நம்ம மொதினார் கிட் டே செய்தியைச் சொல்லி, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புங்க.

சரி தம்பி.

இந்த மனுவெ யார்ணே எழுதுனா?

காதரை வச்சி எழுதுனேன் தம்பி.

தங்கப் பல்லு காதரா?

ஆமாம்.

அவன் எந்த மனுவையும் சரியா எழுத தரமாட்டான். ஐஞ்சு குடு, பத்து குடுன்னு பணத்துலேதான் குறியா நிப்பான். மப்புலே இருந்தானாண்ணே?

தெரியலே தம்பி!

கணக்குப் பிள்ளை இங்கே வாங்க, இந்த மனுவுலே ‘ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்’ன்னு மட்டும் எழுதி இருக்கே கவனிக்கலையா நீங்க! அதெ, ‘நாட்டாண்மை, பஞ்சாயத்து, மற்றும் ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்’ன்னு எழுது ங்க. அதேட சேர்ந்த மாதிரி மறக்காம ‘வரஹ்’கை பிராக்கெட்லே போட்டுங்க. மனுனா… தர்த்தீபா… இருக்கனும்! நாளைக்கி எவ னாவது இதை வச்சி கேள்வி கேட்டு, ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசிப் போறானுங்க!

கணக்குப் பிள்ளை, அதன்படி சரி செய்து எழுதி, ரிஜிஸ்டர் புத்தகத்தில் அந்த மனுவை பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டார்.

*****

இன்றைக்கு ரசூல் மனைவியின் ஊர்க்காரப் பெரியவர்கள் வந்திருக்கக்கூடும். இஷா முடிந்த கையோடு ‘நகரா’ அடித்து விட்டார் கள். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையை சலவை அடுக்கில் தேடினேன். வீட்டில் நிச்சயம் சப்தம் எழும். நேற்றைக்கும் இன் றைக்கும் இதே கூத்தென்றால் சப்தம் எழாமல் என்ன செய்யும்? என் பாட்டி இப்போ உயிரோட இருந்திருந்தா, பஞ்சாயத்துலே நான் இருந்திருக்க விட்டிருக்கவே மாட்டாங்க. “யத்தா…, பாவா…, ஊர்லே பஞ்சாயத்துன்னு ஆசைப்பட்டு அங்கே போயி உட் கார்ந்து பேசிகிசிடாதே.. டா..! ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டம் நம்மலே வந்து சுத்தும்!” இப்படி அவுங்க சொன்ன எத்தனையோ வார்த்தைகள் சப்தசுத்தமா உடம்புல எங்கோ ஒரு முடுக்குல உசிரோட இருக்கத்தான் இருக்கு. ஊரும், ஆசையும் விட்டாதானே!

நேற்று அந்த மழையிலும் பள்ளிவாசல் வெளி வராந்தா ரொம்பி வழிகிற அளவுக்கு ஜமாத்துகாரர்களின் கூட்டம்! வியப்பாகத் தான் இருந்தது. கேசு அப்படி! ஊருக்கு ஒரு நல்ல காரியம் ஆற்ற ‘நாலு பேரைக் கலக்கனும்’ என்கிற கணக்கில், இரவு இஷாவு க்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வாங்கன்னு எல்லோரையும் எத்தனை தரம் கூப்பிட்டாலும் அப்ப ஒருத்தரும் வரமாட்டாங்க!

பொதுவாக இப்படியான கேசுலாம் கோடைக்காலம் பார்க்கத்தான் தோதா வந்து தகிக்கும். ‘நகரா’ கூட அடிக்க வேண்டாம்! இரவு எவ்வளவு நேரமானாலும் பெரிசு, சிறிசுன்னு சப்ஜாடா ஆஜாராகி விடுவார்கள். பள்ளிவாசல் வராந்தாவில் காற்றுவேறு பிச்சுகிட்டு வரும்! புழுக்க காலத்து சொர்க்கபுரி மாதிரி! சாரையாக வந்து குவிந்து விடுவார்கள்! “இங்கே மட்டும் எப்படி இத்தனை காற்று அடிக்குது ஹஜ்ரத்து?”என்று நொண்டி பசீரு ஊர் ஹஜ்ரத்தை பார்த்து கேட்க, ‘ஆண்டவன்ற ஹொஜரத்து!’ என்றார் அவர். கேட் டுக்கொண்டு நின்ற எனக்கு சிரிப்பு வந்தது. சுவரற்ற அந்த வராந்தவும், சுற்றியுள்ள மரம் மட்டைகளும் கூட சிரித்திருக்கும்.

பொதுவாக இப்படியான கேசுகளைத் துப்புத் துலக்கி தேடிப் பிடித்து பஞ்சாயத்துக்கு கொண்டுவது சேர்க்கும் பக்கிரிகனியும் இப் பொழுது ஊரில் இல்லை. ஒரு சோத்துக்கடைக்கு, புரோட்டா வீசவென்று ‘புரொஃபசனல்’ சகிதமாய் கிழக்கு மலேசிய நகரான ‘சாபா’வுக்குப் போய்விட்டான். ஆனாலும் அவனது வேர் இங்கேதானே இருக்கிறது. துளிர்கள் அதில் வெடித்துக் கிளம்பாதா என்ன? நேற்றைய அந்த வழக்கில், உண்மையை நெருங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. தோண்டத் தோண்ட உண்மையின் வலை ஒன்றுக்குள் ஒன்றாய் எப்படியெப்படியோ போய்க்கொண்டே இருந்தது.ஆக, அது சிக்கியும் கஷ்டம். கடைசியில் அதைப் பூசி மூடி மொளுக பெரும்பாடாகிவிட்டது. ‘கோகோ’ன்னு கத்தி, வழவழான்னு பேசி, பஞ்சாயத்தை முடித்து வீடு திரும்ப நடுராத் திரி. கஷ்டம்தான்! என்ன செய்ய? பிரச்சனைக்குரிய குடும்பத் தலைவன் வெளிநாட்டில் இருக்கிறான். கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி யில் பில்லருக்கு கம்பி வளைக்கும் பணி. ஆண் இல்லாத வீட்டிற்கு ஊர்தான் பாதுகாப்புன்னு எழுதப்படாத சட்டம்வேறு! என்ன செய்ய?

எங்க முத்தவல்லி ஹஜ்ஜுக்குப் போய் வந்ததில் இருந்து எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டேன் என்கிறார். கையில் தசுவமணி யோடு பஞ்சாயித்துக்கு மட்டும் தவராமல் ஆஜர்! இது குறித்து பலதரம் அவரிடம் நான் பேசி விட்டேன்.

இப்படி வந்து ஒன்னும் பேசாம உட்கார்ந்துட்டா எப்படிண்ணே? நீங்க பஞ்சாயத்தே தொடங்கி விசாரிங்க.

நீயே விசாரிப்பா… சிராஜு. உன் சப்தத்துக்குதான் இவனுங்க அடங்குறானுங்க!

இல்லண்ணே… நீங்க விசாரிச்சாதான் நல்லா இருக்கும், என்ன இருந்தாலும் நான் புதுசுதானே!

நீயேன் இதுக்குப் போயி இப்படி பயப்படுறே? உதவி தலைவரப்பா நீ!

அது இல்லேண்ண… அனுபவம் போதாதுலே…!

எல்லாம் போக போக சரியா வந்துடும்…. பயப்படாதே. அஞ்சு கேசுகளை விசாரிச்சோமுன்னு வைய்யி, வாதி பிரதிவாதின்னு பத்துபேர்லே அஞ்சு பேரு நிச்சயம் விரோதியாதான் ஆவான்; சமயத்துலே அம்புட்டு பேர்களும்… அப்படியே ஆனாலும் ஆச்ச ரியப்படுவதற்கில்லை. இதுக்கெல்லாம் அசந்தோம்னு வைய்யி, இல்லே, பயந்தோம்னு வைய்யி… காரியம் நடக்காதுப்பா. நீ பயப் படவே கூடாது!

இது பயமில்லண்ணே, தயக்கம்!

என்னவேண்டியிருக்கு தயக்கம்! முதல்லே அந்தத் தயக்கத்த தள்ளிவைய்யி. பஞ்சாயத்து பண்ணுறவங்களுக்கு அது ஆகவே ஆகாது. இது ஒன்னும் சுப்ரீம் கோர்ட் இல்லே! ரெண்டு பேருக்கும் பாதகமில்லாம அப்படி இப்படின்னு பேசிவிடறதுதான் இந் தப் பஞ்சாயத்து. ஆண்டவன் பள்ளிவாசலுலே உட்கார்ந்து பேசுறதையும் மீறி அவனுங்க நின்னானுங்கன்னா… அதன் பிறகு அவ னுங்களுக்கு போலீஸு, கோர்ட்டுதான். இல்லே… பைய மவனுங்க… வெட்டிகிட்டு சாவுறானுங்க; நமக்கென்ன!

அவரை தொடர்ந்து மறுத்து மறுத்துப் பேசமுடியாது. அது அவருக்கு ஆகாது. ‘பிரஷர்’கார மனுஷன். அதுவும் அவர் கொதித்து விட்டால் அவ்வளவு தான். மலைமாதிரி சாய்ந்து விடுவார்.

அவர் வயதுக்காரர்கள் யாராவது அவரிடம், “நீ ஏன் இப்பல்லாம் கேசே விசாரிக்கமாட்டேங்கிறே ராவுத்தரே?” என்று கேட்டால், “வாங்கிக் கட்டிகிட்ட பாவம் போதாதா?” என்பாராம்! சில நேரம், “வயதாயிடுச்சுல்லே… முடியிலப்பா” என்று நழுவி விடுவாராம்.

*****

சென்ற ஆண்டில் முத்தவல்லியின் பெண்டாட்டிக்கு இடது கால் கனத்து வீங்கிவிட்டது. அவர்கள் வீட்டில் யாருக்கு ஒன்றென்றா லும் முதலில் ‘கொழுந்து’ என்று அறியப்படும் ‘சிவ கொழுந்து’ ஜோசியரைத்தான் அழைத்து வைத்துப்பார்ப்பாங்க. அவன் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யவும் செய்வாங்க. நல்லா போயிடுறதாவும் சொல்றாங்க. இப்பவும் அவன்தான் வந்து பார்த்திரு க்கான். மேலே ஓடு இடப்பட்ட அந்த இரண்டுகட்டு கல் வீட்டின் உள்ளே, தெரு வாசலுக்கும்; கொல்லை வாசலுக்குமா மூணு முறை நடந்து விட்டு, திறந்த பெரிய முற்றத்தின் மையம் பார்க்க நிஷ்டையில உட்கார்ந்தவனா…. ‘இது நல்லா போகாது’ன்னு ஒத் தவரியிலே சொல்லிட்டானாம்.

பதறிப்போன முத்தவல்லி, ‘ஏன்’னு கேட்க, “இது சாபம். உங்களுக்கு யாரோ விட்டது, ஒரு லெக்கணத்துலே ‘மிஸ்’ஆயி உங்க மனைவியெ அடிச்சிடுச்சி. உயிருக்கு ஒன்னும் பாதகமில்லை. இனிமெயாவது பார்த்து நடந்துக்குங்க” என்று கூறியபடி புறப்பட்டு விட்டானாம். கொழுந்து சொல்லிவிட்டுப் போனதிலேர்ந்து அவர் மனைவி மாய்ந்து மாய்ந்து அவரை திட்டி தீர்த்திருக்காங்க. ‘நீ செஞ்ச வினையெல்லாம் இப்ப நான் சுமக்குறேன்… நாட்டாண்மையா இருக்காதிங்கனா கேட்கிறிங்களா? உங்களுக்கு அந்தப் பதவியை விட்டுத் தொலைக்கவும் மனசு வராது. சாவுற வரைக்கும் அந்தப் பட்டமும் பதவியும் வேணும். எப்படியாவது தொலை ஞ்சு போங்க. ஆனா இனியொரு தரம் பஞ்சாயித்துலே வாயகீயத் திறந்திங்கனு வையுங்க அப்புறம் இருக்கு சேதி’ன்னு கடுமை யா கண்டிச்சிருக்காங்க. அதனால்தான் இவரு பஞ்சாயத்துல்ல எதையும் விசாரிப்பது இல்லை, பேசுறது இல்லைன்னு அவர் பக்க த்து வீட்டு மொய்தீன் பிச்சை ஒருதரம் என்கிட்டெ சொன்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

இது குறித்து அடுத்த நாளிளோ, அதற்கு அடுத்தடுத்த நாளிளோ அகமதுகிட்டே கேட்டேன். அகமது என் வயசுகாரன்தான். கூட ஒன்னா படிச்சவன். முத்தவல்லிக்கு கடைசி மைத்துனன். ஹைஸ்கூலில் பத்தாவது படிக்கும்போது ஒரு கிருஸ்துவப் பெண்ணைக் தீவிரமாக காதலித்தான். கட்டினாள் அவளைத்தான் கட்டிக்குவேன், இல்லாதுப் போனால் விஷம் குடித்து மவுத்தாயிடுவேன் என்பான்!

ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே?

காதல்னா அப்படிதாண்டா! உனக்கு தெரியாது.

அதுயென்னடா அவபெயரு சாந்தி எலிசபெத்?

அவுங்க அப்பா இந்து, அம்மா கிருஸ்டீன் அதான் அப்படி வெச்சிருக்காங்க.

இதை யாரு உனக்கு சொன்னா?

ஜோசப்பு!

ஜோசப்பு எங்கள் உடன் படிப்பவன். அவன்தான் இருவருக்கும் பாலமாக இருந்திருந்தான். அவள் அகமதை திருமணம் செய்ய
சம்மதிக்கும் பட்சம் மதம்மாற கூடத் தயாராக இருந்தான். அதற்காக தனக்கு ஒரு கிருஸ்துவப் பெயரைக்கூட தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். ஒரு நாள், ஊரைவிட்டுத் தள்ளி தனியே என்னை சுடுகாட்டுப் பக்கம் அழைத்துப் போய் யார் காதிலும் விழாத அளவுக்கு அந்தப் பெயர் தேர்வைச் சொன்னான்! அவன் சொன்னது என் காதிலேயே விழவில்லை. சுடுகாட்டுக்கிட்டே கூப்பிட்டு வந்து வச்சிக்கிட்டு இத்தனை மெதுவா சொல்றே! இங்கே யாருடா இருக்கா? என்றேன். அதன்பிறகும் என் காதில் விழும் அள
வில் மட்டும்தான் சொன்னான்: ‘அல்ஃபோன்ஸோ!’

அகமதை சட்டுன்னு பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம் லூசுமாதிரிதான் தெரியும்; ஆனா அவன் அப்படி இல்லே. அப்படி இருந்தால் நாடு தழுவிய ஒரு இயக்கத்துலே அவனுக்கு நகரப் பொறுப்பு தருவாங்களா? பேசவேண்டிய நேரத்திலே கத்துவதும், கத்த வேண்டிய நேரத்திலே பேசுவதும் அவன் சுபாவம்! இதை வைத்து சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. சரியா சொன்னா, அவனது மேடைப் பேச்சுக்கு இந்த சுபாவம்தான் ரொம்பவும் கைகொடுத்திருக்கு. வெளியூர்களுக்கெல்லாம் அவனை பேசக் கூப்பி டுகிறார்களாம்! ‘இறைநேசக் குரலோன்’ என்ற அடைமொழிவேறு! வெளியூர்களில் உள்ள முஸ்லீம்களும் அப்படித்தான் அவனை அறிந்து வைத்திருக்கிறார்கள்! போலீஸ் பதிவில்கூட அவனது பெயர் இந்த அடைமொழியோடுதான் பதிவாகியிருக்கிறதாம்!

அவன் ‘நஜாத்’துலே இருக்கான்னு தெரியும். ஆனா, அதில் உள்ள இரண்டு பிரிவில் எதில் இருக்கிறான் என்பதோ, என்ன பொறுப்புலே இருக்கான் என்பதோ தெரியாது. அவன் அந்த இயக்கத்துலே இருப்பதாலேயே அந்த மைத்துனனை முத்தவல்லிக்குப் பிடிக்காது. “காலம் காலமா தொழுவுற தொழுகையிலே போயி, அப்படி தொழுகக் கூடாது இப்படி தொழுகு, இப்படி தொழுகக் கூடாது அப்படி தொழுகுன்னு புதுசா பேசிக்கிட்டு அலையிறானுங்க” என்று திட்டுவார். சமயத்துலே, “வேலை வெட்டியில்லாதப் பசங்க” என்றும் சேர்த்துக் கொள்வார். அவர் அப்படி சேர்த்து பேசறது தன்னைத்தான்னு அகமதுக்கு தெரியும்.

ஒரு தரம் அவன் தனது பெரிய அக்காவைப் பார்க்க போயிருந்தப்ப “உன் புருஷன் பேசுறது சரில்லெ, எங்க பசங்க ரொம்ப கோபப்படுறாங்க, கண்டபடி பேச வேனான்னு சொல்லிவை. மறுபடியும் மறுபடியும் அவரு இப்படியே பேசுனாருன்னா பசங்களெ கன்ரோல் பண்ண என்னால முடியாது. அப்புறம் அவரு போகிற டி.வி.எஸ். ஃபிஃப்டியிலே பாம்தான் வெடிக்கும்” என்று அவன் சொல்லவும், பேரன் பேத்தியெடுத்த அந்த அக்கா, தனது சின்னத் தம்பியின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்காங்க. பின்னர் செல்லமா “ஒரு கலிச்சல்லெ போறவனே.. என்னடா பேசுறே”ன்னு தம்பியை திட்டிவும், கொஞ்சம் தள்ளி கதவு மறைவிரு ந்து இதை கேட்டுக் கொண்டிருந்த முத்தவல்லி, முதல் வேலையா வீட்டு வாசல் கதவை போய் அடைச்சிருக்காரு. அதோடே வந்த வேகத்திலே வெறவுகட்டெ ஒன்னெ எடுத்து, அவனை மாத்து மாத்துன்னு மாத்தியிருக்காரு. அவர் பெண்ஜாதி குறுக்க விழு ந்து தடுக்கலைன்னா அன்னிக்கே அவன் மவுத்துதான்.

அப்புறம் ஒரு மாசம் கணக்கா பக்கத்து டவுனில் உள்ள கிளினிக் ஒன்றில் தங்கி, வைத்தியம் பார்த்து, சுகமாகி வந்தான். இடைப் பட்ட நாட்களில் “எங்கே அகமதுன்னு?” அவனது சகாக்களிடம் கேட்டா, “தலைமை கழகத்திலிருந்து அழைப்பு வந்து அண்ணெ மதராஸ் போயிருக்காங்க, மேட்டுப் பாளையத்துலே நடக்கிற பயிற்சி வகுப்புக்கு போயிருக்காங்க” என்பார்கள். ஊர் முஹல்லா வின் பஞ்சாயத்துலே உபதலைவர் பதவியை நான் ஒப்புக்கொண்டதில் இருந்து என் மீது அவனுக்கு கோபம்.’எல்லோரும் தொப்பி போட்டு தொழுவுற பள்ளிவாசலுலே’ நான் பஞ்சாயக்காரனா இருக்கிறேன்னு.

இந்தபாரு அகமது, என்னை, உங்க மச்சான்தான் பயணம் போகிறவரையிலே பஞ்சாயத்துலே இருப்பான்னு கட்டாயப் படுத்தி னாரு.. என்னாலேயும் மீற முடியிலே. என்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே!

தெரியும்.. தெரியும்… நீ ஒரு நாத்திகன்! நீ ஆண்டன் பள்ளியிலே பஞ்சாயத்துப் பண்றே!

வெள்ளிக் கிழமைகள்ளே தொழுவவும் போய்கிட்டு இருக்கிறேன் அகமது!

அது வேறையா, உங்களெயெல்லாம் கணக்கெடுத்துதான் வைத்திருக்கோம். ஸ்பெஷல் பாம்தான்… பொறு மொவனே பொறு.

மொதல்லே அதைச் செய்! புண்ணியமா போகும். ஆமா, எப்ப செய்றதா உத்தேசம்?

அவனைப் பார்க்க பார்க்க சிரிப்பு வேற வந்து கொண்டே இருந்தது. அவன், என் சிரிப்பை கண்டு கொண்டதாகவே தெரியவி ல்லை. மிகவும் உணர்ச்சிமேவிய தொனியில் பேசிக்கொண்டே போனான்.

நம்ம ஜாதி மக்களுக்காக வாழ்வுரிமை மாநாடு மாவட்டம் மாவட்டமா நடத்தி, இட ஒதுகீடு கேட்டுப் போராடிட்டு இருக்கோம், அதுலே வெற்றிவாகை சூடிய பிறகு உங்ககிட்டதான் வருவோம்.

அப்ப இந்த ஜென்மத்துலே எங்கள ஒன்னும் செய்யப் போறதில்லைன்னு சொல்லு!

என்ன சொல்றே?

வந்து சொல்வதாக அன்றைக்கு அவனிடமிருந்து தப்பி வந்தவன்தான் அதன் பிறகு அவனை நான் பார்க்கவே இல்லை. அவனது மச்சான் குறித்து கேட்க அவனைத் தேடியபோது, ஒரு நாள் ஊர் மீன்கடையின் கூட்ட நெரிசலில் எதிரில் வந்து முட்டிய நிலை யில் ‘என்னடா’ என்றான். அவனை மார்க்கெட்டுக்கு வெளியே அழைத்து வந்து சிகரெட்பாக்கெட்டைத் திறந்தேன். புகைத்தபடியே பேசினோம்.

உங்க அக்கா உடல்நிலையை வைத்தியம் பார்க்க வந்த சிவகொழுந்து என்னமோ சொன்னானாமே!

ஆமாம். எங்க அக்காகூட போன்லெ சொல்லுச்சு. அவன் ஒரு வீணாப்போனவன் இவனொரு வீணாப்போனவன், அவன் சொன் னாங்கிறத்துக்காக இவன் ரொம்பவும் இடிஞ்சிப்போயிட்டானாம். இரண்டு வருஷத்திற்கு முந்தி, நீ… அப்போ துபாயிலெ இருந்தே, ரகமத் நகரிலே காசிம் பொண்டாட்டி இருக்காள..

ம்..

அவ எவனோடேயோ தொடர்பு வைச்சிருக்கிறதா அரசல் புரசலா செய்தி கிடைக்கவும், இவருபோயி கமுக்கமா விசாரிச்சிருக் காரு.

ம்..

இவரு கேட்டதுதான் தாமதம்…. அவ புடுச்சிகிட்டா. பேயாட்டம் ஆடி, கத்தோகத்துன்னு கத்தியும் இருக்கா. இவரும் பதிலு க்கு ஒன்னுகெடக்க ஒன்னு பேசியிருக்காரு. அவ ஆத்திரத்திலே மண்ணெ அள்ளி இறைச்சிருக்கா..! ரொம்ப நாள் அதைப் பற் றியே புலம்பிட்டு இருந்தாரு.

ம்…

இப்போ சிவகொழுந்து சொன்னதுகப்புறம் அந்த நெனெப்பு கூடிக்கிச்சின்னு நினைக்கிறேன்! அவ சாபமா இருக்குமோன்னு குழம்பிட்டு கிடக்கிறாராம். இப்பல்லாம் பஞ்சாயத்துக்கு வந்தா ஒன்னும் பேசுவது இல்லையாமே?

ஆமாம். அது சரி, சரியா தெரியாமா இவரு ஏன் அந்தப் பொம்பளைக்கிட்டே ஒன்னு கிடக்க ஒன்னு கேட்கனுமாம்?

நாக்க தொங்கப் போட்டுட்டு அலையிற கேசுங்க! ஏதாவது கிடைக்காதன்னு.

உனக்கு உன் மச்சான புடிக்கிலே என்கிறதுக்காக அவருமேலே இப்படி அபாண்டம் பேசுறதா!

அவரு, வயசுல என்ன கூத்து அடிச்சாருன்னு எங்க அக்காவ நீ கேட்டாத்தான் தெரியும்.

கொழுந்து சொன்னத நீ நம்புறியா?

பைத்தியமா நானு, அவன் சொல்றத நம்புறதுக்கு? அவரு அப்படியே நம்புவாரு! அவன் சொல்றதெல்லாம் அவருக்கு வேத
வாக்கு! அந்த அளவுக்கு அவன் கிட்டே ஈமான் கொண்டு கெடக்குறாரு! இதுலே ஹஜ்ஜுக்கு வேற போய்ட்டு வந்திருக்காரு! அந்த சிவகொழுந்து போன ஒன்னரை வருஷத்திற்கு முந்தி, போலீசுலெ ஒரு சந்தேகக் கேசுலே மாட்டிக்கிட்டான்.

எந்த கேசு?

அதான் பக்கத்து கிராமத்துலே புதையலுக்குன்னு ஒரு ஏழுவயசு குழந்தையைப் பலி கொடுக்கலே; அந்த கேசுல! அதுலே ஜாமீன் எடுக்க இவருகிட்டே கொழுந்து வீட்டுக்காரங்க வந்து கேட்டுருக்காங்க, இவரு பயந்துகிட்டு மாட்டேன்னுட்டார். அந்த ஆத்திரம் அவனுக்கு. நேரம் பார்த்துகிட்டே இருந்தான். நேரம் சரியா வாய்ச்சிச்சி. வந்து ஆப்பு வச்சுட்டு போயிட்டான். நல்லா படுன்னு.

அகமது நல்லாதான் பேச கத்துகிட்டு இருக்கான்னு தோணியது. வா அகமது, டீ சாப்பிடாலாம் என்று கூப்பிட்டேன்..

குறுக்குப் பேட்டைக்கு சீக்கிரம் கிளம்பனும்!

அங்கே இன்னைக்கி சந்தனகூடுலே நடக்குது! உனக்கு அங்கே என்ன வேலை?

கிண்டலா! என் மாமியா ஊரு அது, மறந்துட்டியா? இன்னெக்கிப் போகலேன்னு வையி, அவ்வளவுதான்.

ஐந்து வருஷத்திற்கு முந்தி அவனுக்கு ஏதோ ‘சேட்டை’ன்னு அந்த தர்காவுலேதான் இருபத்தியொரு நாள் வைத்திருந்தாங்க. அங்கே போயிதான் நல்லா போச்சுன்னு என் கிட்டேயெல்லாம்… அந்த தர்காவைப் பற்றி பெருமையா சொல்லியிருக்கான். நான் கூட கிண்டல் அடிச்ச ஞாபகம். இப்ப சொல்வானா? மாட்டான். இப்பவும் அந்த மகிமைக்காகத்தான் ஓடுறான். கேட்ட மாமியா வீட்டுக்குப் போறேன்கிறான்! திருட்டுப் பய!

*****

மின்னலும் இடியும் வானத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. மழை கொஞ்சம் நேரம் விட்டா போதும். பஞ்சாயத்தபோயி முடிச் சிட்டு வந்திடலாம். பொண்டாட்டி வேணாம்கிற கேசு. அந்த கிழக்குத்தெரு ரசூலுக்கு இப்ப இருக்கிறது ரெண்டாவது பொண்டாட்டி! முதல் மனைவிக்கு பிள்ளை இல்லே, மதிக்க மாட்டேங்கறா, அது இதுன்னு என்னென்னமோ காரணங்கள் சொல்லி தலாக் சொல்லிட்டாரு. ஒரு ஃபிரான்ஸ் மாப்பிளைக்கு இரண்டாம்தாரமா வாக்கப்பட்டு, இப்போ அந்த பெண் அங்கே நல்லா இருக்கா. மூனு குழந்தைகள் வேறு! இப்பவுள்ள பொண் ஜாதியே இவரு கட்டிகிட்ட வகையிலே இந்த பெண்ணுக்கும் குழந்தை இல்லை. இரண்டு வருஷமா ரெண்டுபேருக்கும் தெனைக்கும் சண்டை. ‘என்ன ரசூலண்ணெ?’ என்றால், ‘இவ சரியில்லே தம்பி’ என்கிறார்.

அவர் மனைவியே கூப்பிட்டு கேட்டா ‘அவருக்கு அப்பலேந்து சக்கரை வியாதி இருக்கு! நான் என்ன சுகத்த கண்டேன். சரின்னு பல்லைக்கடிச்சுகிட்டு இருந்தாலும் இவருக்கு எப்பவும் என்கிட்ட சந்தேகப் பேச்சுதான். வயலுக்கு போயிட்டு வந்த மனுஷன் கைகால கழுவமாட்டான்? நேரபோயி அறையே பார்க்கிறதும், கட்டிலுக்கு கீழே பார்க்கிறதும், பீரோவ தொறந்து பார்க்கிறதும், பரண்மேலே பார்க்கிறதும்… இப்படியா ஒருமனுஷன் சந்தேகப்படுறது? ஒருத்தி அப்படி ஒருத்தனே வச்சிகிட்டு இருந்தாளும் இப் படியா மாட்டிக்கிற மாதிரி மறைச்சி ஒழிச்சிலாம் வைப்பா? நீங்களே சொல்லுங்க நியாயத்த..” என்றார். வெளியே விசாரிச்ச வகை யிலே யாரோ ஒரு ஆட்டோக்காரன் வந்து வந்துட்டுப் போறதா சொல்றாங்க. ஒன்னும் புரியிலே.

தலாக்கு கேட்டு வர கேசுகளையெல்லாம் பெரும்பாலும் ஒன்னா சேர்த்து வைக்கத்தான் கடைசிவரை நிப்போம். முடியாம போச்சு ன்னாலும் இஸ்லாமிய மதரஸாக்களுக்கு இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்து அவர்களிடம் ஃபத்வா வாங்கி வாங்கன்னு காலம் கடத்துவோம். மறுபடியும் கூப்பிட்டு வச்சுப் பேசுவோம். ஆகாத பட்சத்துக்குத்தான் தலாக்.

இப்படிதான், போன வருஷம் ‘மண்டை’ வீட்டு சாவன்னா முவன்னா மகன் ஜாகீரு சௌதியில் இருந்து ஊர் வந்திருந்தப்ப மனை வியை தலாக் விட நின்னான். இரண்டாம் கல்யாண ஆசை! காசு பணத்தோடெயும், அங்கத்திய இஸ்லாமிய நடப்புகளை அறிந் ததோடெயும் ஊர்வந்த அவனுக்கு, இங்கத்திய நடப்பு பெரிசா தெரியில! அவன் மனைவியோட அத்தா வந்து எங்ககிட்ட அழுது முறையிடவும், அவனைக் கூப்பிட்டு “உன் மனைவியே தலாக் விடப் போறேன்னு பேசிகிட்டு திரியிறியாமே.. காரணகாரியம் வேணாமா?” ன்னு கேட்டா, “இஸ்லாத்துலேயே அனுமதி இருக்கிறப்போ.. காரணகாரியம் அதுஇதுன்னு என்னங்க நீங்க இப்படி கிராஸ் செய்றீங்க?” என்றான்.

அவன் துடுக்கா பேசுறதே கேட்டமாத்திரத்திலெ, பஞ்சாயத்துலே செயலாளராக இருக்கும் கண்ணு ஹமீது கோபப்பட்டு சீறிட் டான். “இஸ்லாத்துலே அனுமதி இருக்கு, ஹதீஸ்லே ஆதாரம் இருக்குங்கிறதெல்லாம் சரிதான். இது ஊரு, இங்கே இந்த நிர் வாகத்துக்கு கட்டுப்பட்டுதான் எல்லாம். நாளைக்கி ஒன்னுன்னா நாங்கத்தான் நிக்கனும். எங்க தாவுதான் தீரும். சௌதிக்கு போனமா சம்பாதிச்சிட்டு வந்தோமான்னு இல்லாமே…. இவனுங்களுக்கு ரொம்பவுதான் குளிர் விட்டுப் போச்சு.” என்று கத்தவும் அடங்கிவிட்டான்.

“இவனுங்களிட்டே கொஞ்சம் அசந்த தாபால்ல தலாக் எழுதுறதும், டெலிபோன்ல தலாக் சொல்றதுமால்ல இருகிறானுங்க! கேட்டா
‘சரியத்துல’ அதுக்கு அனுமதியிருக்கு அலையிறானுங்க! பொம்பளைப் பிள்ளைப்பெற்று வளர்த்து செலவு செஞ்சி கட்டிக்குடுத்துப்
பாருங்கடா… அப்ப, உங்கப் பிள்ளைகளை கட்டிக்கிட்டவன் தலாக் சொன்னா அததோட வேதனைப்புரியும். இவன்களுக்கு எல் லாமே விளையாட்டா போச்சு”ன்னு என் பங்குக்கு குரல் எழுப்பினேன். இரண்டு மாசத்துக்கு முன்னாடி அந்த ஜாகீருக்கு இரட் டைக் குழந்தைங்க! ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க! ஜாகீர் என்ன நினைச்சானோ தெரியிலை, ‘என் கண்ணெ திறந்திட்டிங்க மாமா’ன்னு என்னைக்கியும் இல்லாம.. கடிதம் எழுதி இருந்தான்.

இந்த ரசூல் கேசைப் பொருத்தவரை பெரிய கஷ்டம் இருப்பதாக தெரியவில்லை. மண்டைய ஒடைச்சிகிட்டு சர்ச்சைப் பண்ணத் தேவையும் இருக்காது. ரெண்டு பேரும் பிரியிறதைதான் விரும்புவதா தெரியுது. ரசூலுக்கு இதைவிட தண்டனையும் கிடையாது!
இதே வேலையா இருக்காரு! நேரா இறுதிக் கட்டத்திற்கே போயிடலாம் என்றுதான் தோன்றுகிறது. நேரம் ஆகாது. முத்தவல்லி கூடமாட ஒத்துழைச்சா இன்னும் சீக்கிறமே முடிச்சிடலாம். மழைதான் விடவே மாட்டேன் என்கிறது! அதுசரி… ஏன் இப்படி குழம் பிட்டே இருக்கேன்…? உராய்ந்து உராய்ந்து அடியால சிதையிறேனோ?

வாயில் கதவை யாரோ தட்டும் சப்தம்கேட்டு, திறக்கப் போனேன். “எங்கப் போறீங்க?” என்று மனைவியும், “சொன்னா கேட்கவே மாட்டானே… ஏய் சிராஜி நில்லுடா!” என்று என் அம்மாவும் குரலை உயர்த்தினார்கள். கதவைத்திறந்தபோது அங்கே ‘மோதினார்’ நின்றுக் கொண்டிருந்தார்.

இன்னெக்கி பஞ்சாயத்து இல்லேன்னு சொல்லிட்டு வரச்சொன்னாரு முத்தவல்லி.

ஏன், பெண் சார்பா அவுங்க ஊர்லேயிருந்து யாரும் வரலயா?

வரலே தம்பி. காலையிலே நான்தான் அந்த ஊருக்குபோய் சொல்லிட்டுவந்தேன். இந்த ஊத்தாதமழையிலெ அவுங்க எப்படி வரத் தான் முடியும்! அவுங்க பக்கத்து ஏரிகூட மத்தியானம் பார்க்க ஒடைச்சுக்கிட்டதாம்! என்ன மழைபெய்யுது! என் வயசுக்கும் பார்த்தது இல்லை! அப்புறம், இன்னொரு விசயம் தம்பி…..

சொல்லுங்க…

யாரிடமும் மூச்சு விட்டுடாதிங்க…

இல்லை… சொல்லுங்க.

இன்னிக்கி…. மகரிபு நேரம் பார்க்க….

ம்…

முத்தவல்லி வீட்டு… நடு முற்றத்துல.. இடி விழுந்திடுச்சாம்…!

*************
satajdeen@mail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்