நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

நேசகுமார்.


நாகூர் ஹனீஃபா பற்றிய அப்துல் கையூமின் கட்டுரையையும் அக்கட்டுரையை படித்துவிட்டு தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மலர்மன்னன் அவர்களது கட்டுரையையும் படித்தேன். அப்துல் கையூமும் மலர் மன்னனும் மிகவும் சுவையாகவும் தத்தமது நினைவுகளிலிருந்தும் எழுதியிருந்தார்கள்.நானும் எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அப்துல்கையூமைப் பற்றி முதலில் நான் படித்தது சக-நாகூரியான ஆபீதினின் பதிவு ஒன்றில் என்று நினைக்கின்றேன். பொதுவாக ஆபீதின் முதலான இந்த நாகூரிகள் சூஃபியிஸத்துடன் தொடர்பு கொண்டிருந்ததால் மிதவாதிகளாக இருப்பார்கள் என்ற என் நம்பிக்கை நாகூர் ரூமியின் எழுத்துக்களை, கருத்துக்களை பார்த்து தகர்ந்தது என்றாலும், கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கைகளையும் தகர்ப்பது போன்று இருக்கின்றன தொடர்ந்து தென்படும் இவர்களின் கருத்துக்கள்.

***

ஹனீஃபாவைப் பற்றி எழுத வந்த கட்டுரையில் அப்துல் ரகுமான் எழுதிய காஃபிர்களை தாக்கும் இந்த வரிகளை அப்துல் கையூம் அவர்கள் குறிப்பிட்டிருக்கத்தான் வேண்டுமா?

//”கல்லின் மீது

பூவை எறிபவர்கள்

இப்போது

பூவின் மீது

கல்லை எறிகிறார்கள்” //

அரபியர் தம்மிடையே வாழ்ந்துவந்த ஒரு நபர் திடீரென்று கடவுள் தன்னிடம் பேசுவதாகவும், தனது சொற்கள் கடவுளின் சொற்கள், தனது நடத்தை கடவுளின் நடத்தை என்று சொல்லி தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர, அப்படி யார் கேட்டாலும் எதிர்க்கக் கூடிய மக்கள் அதை ஏற்க மறுக்க பின்பு முஹமது அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை தமக்கு கீழ்ப்படிய வைத்த கதையை இப்படி இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?

இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது.

***

//”நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.”//

இந்த வரிகளுக்கு பின்பிருக்கும் வரலாற்றை, பொதுவான உளவியலை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். குறிப்பாக இப்படி உணர்வது, இஸ்லாமியர்களிடையே மதவெறியை தணித்து மனித நேயத்தை மலரச்செய்யும்.

நபித்துவம் என்பதே ஒருவர் கடவுள் தம்மூலம் மக்களுக்கு கட்டளைகளை வழங்குவதாகக் கூறி, அதன் மூலம் ஆளுமை நிலையை அடைவதுதான். இது மத்திய கிழக்கில் அந்தக்காலத்தில் வாடிக்கையாக நிகழ்ந்துவந்ததொன்று. மக்களை தமது விசேஷ சக்திகள் மூலம் (ஃபேரோ மன்னனிடம் மந்திர நிகழ்வுகளை காண்பித்த மோசஸ்), வன்முறை மூலம் தம் பக்கம் ஈர்த்து தானே அகில உலகிற்குமான ஏக நபி என்று அறிவிப்பது இந்த நபித்துவத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று. வெற்றி பெற்றவர்கள் நபியாகவும், தோல்வியுற்றவர்கள் ‘போலி நபி’யாகவும் வரலாற்றில் இடம் பெற்றனர். உதாரணம் – முஸலமா. இவரை நபி என்று நம்பி ஏற்று, அவரின் கீழ் பத்தாயிரம் அரபியர் திரண்டனர், பெரும் போருக்கு பின் இப்படை தோற்கடிக்கப்பட்ட்து. வென்றிருந்தால், அவரே கடைசி நபியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பின்பற்றும் நாயகமாக ஆகியிருப்பார். ஆனால், தோல்வியடைந்த்தால், அவரைப் பற்றிய விபரங்கள் கூட இன்று கிட்டவில்லை. இதில் தோல்வியும் பெற்று, மரணத்திற்குப் பின்பு வெற்றி பெற்றவர்களும் உண்டு – அதுவே இன்று கிறிஸ்துவமாக நிலவுகிறது.

இந்த நபித்துவத்துடன் சேர்ந்தே persecution என்ற கருத்தும் வருகிறது. ஏனெனில், உலகில் எங்குமே, யாருமே திடீரென்று பக்கத்து வீட்டுக்காரர் வந்து நான் கடவுளின் ஏக பிரதிநிதி, எனக்கே அதிகாரமெல்லாம், நான் சொல்வதெல்லாம் கடவுளின் வாக்கு என்று சொன்னால் யார் தான் ஏற்பார். இந்தியா மற்றும் மற்ற பாகன் சம்பிரதாயங்களிலும் இது போன்ற கூற்றுக்கள் உண்டு என்றாலும், இங்கே ஆட்சியதிகாரம், வரைமுறையற்ற தூல அடிபணிதல் நிர்ப்பந்தங்கள் இல்லை. எங்கோ ஒரு கோவனாண்டி ‘நான் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு அவதூத நிலையிலோ, உடல்-மன உணர்வுகளை தாண்டிய நிலையிலோ, மோன நிலையிலோ திளைத்திருப்பதை யாரும் விபரீதமாக, ஆபத்தான விஷயமாக கருதுவதில்லை. ஆனால் ம.கிழக்கில் தோன்றிய இந்த நபித்துவம் என்பது அப்படிப்பட்டதில்லை. நபித்துவத்துடனேயே இணைந்தது வன்முறை – ஏனெனில் ஒரு நபியின் கீழ் உலகு இரு பிரிவுகளாக பிரிந்து விடுகிறது.ஒரு பக்கம் கடவுளின் ஏக பிரதிநிதியான நபியானவர், எதிர்ப்பக்கம் ஏகப்பட்ட தஜ்ஜால்கள் (சைத்தான்கள்). இப்படி உலகை பிரிக்கும்போது சைத்தானின் பிரதிநிதிகளை, சைத்தானை பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டிய Warriorகளாக அந்த நபியும் அவருக்கு அடிபணிந்து இருக்கும் அவரது நம்பிக்கையாளர்களும் ஆகிவிடுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு வன்முறையை மற்றவர்கள் எதிர்ப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அது மிகவும் இயல்பானதும் கூட. எப்படி மோசஸை நபியென்று நம்பிய யூதர்கள் இயேசு கிறிஸ்துவை நபியென ஏற்க மறுத்து வன்முறையில் இறங்கினார்களோ, எப்படி இயேசு கிறிஸ்துவை நபியென்று நம்பிய கிறிஸ்துவர்கள் முஹமதை ஏற்க மறுத்தார்களோ, அப்படியே முஹமதை நபியென்று நம்பியவர்களை ஏற்க ஷியாக்கள் (அவர்களில் ஒரு பகுதி – அவர்கள் முஹமதின் மருமகன் அலியே இறைவனால் அனுப்பப்பட்ட நபி என்று நம்பினார்கள், ஜிப்ரீல் தவறாக முஹமதுவுக்கு வசனங்களை சொல்லிவிட்டார் என்று கருதினார்கள்) மறுத்தனர். காதியானில் பிறந்த அஹமது நபியை ஏற்ற அஹமதியா முஸ்லீம்களை ஏனைய முஸ்லீம்கள் ஏற்க மறுத்தனர். ஆங்காங்கே தோன்றிய வலிமார்களை ஏற்றவர்களை இன்று வஹாபிக்கள் மறுக்கின்றனர். வெளிப்படையாக நபியென்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும், ஒரு நபிக்கான அனைத்து குணாம்சங்களையும் கொண்ட அப்துல் வஹ்ஹாபை ஏற்பவர்களை மற்ற முஸ்லீம்கள் ஏற்க மறுக்கின்றனர்.

இவற்றில் ஒவ்வொரு குழுவும் தம்மை ஏற்காதவர்கள் மீது வன்முறையை ஏவச்சித்தமாயிருக்கின்றது. ஏற்காத குழு ஏற்பவர்கள் மீது வன்முறையை ஏவச்சித்தமாயிருக்கின்றது.

***

இதில் திடீரென்று ‘கல்லின் மீது பூவை எறிபவர்கள்’ எங்கு வந்தார்கள்? கல்லின் மீது அம்பை எய்த அரபியர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், கல்லின் மீது கல்லை எறியும் அரபியர்(மற்றும் முஸ்லீம்கள் – சைத்தானான கம்பத் தெய்வத்தின் மீது கல்லெறியும் ஹாஜிகள்) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எங்கும் அரபி பாகன்கள் கல்லின் மீது பூவை எறிந்து பூஜை செய்ததாக கேள்விப்பட்டதில்லை. இது இந்துக்களின் வழக்கம், இந்தியர்களின் வழக்கம், கீழத்தேய மதத்தவரின் வழக்கம்.

இதை அந்த நிகழ்வுடன் முடிச்சுப் போட்டிருப்பது பாடலை படிக்கும் இஸ்லாமியர்கள் மனதில் முஹமதை துன்புறுத்தியது இந்துக்கள் என்று நிறுவும் முயற்சியாகவே எனக்கு படுகிறது. இது எனது யூகம் மட்டுமல்ல, இதே திண்ணையில் ஒரு முறை ஹமீது ஜாஃபர் வள்ளலார் என்ற நபி/வலிமாரை இதே போன்று காஃபிர்கள் துன்புறுத்தியதாக எழுதியிருந்தார். இவரும் ஒரு நாங்கோரிதான் என்று நினைக்கிறேன், சூஃபியிஸத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பது எழுத்துக்களிலிருந்து தெரிகிறது.

இதெல்லாம் எனது கற்பனையாகக் கூட இருக்கலாம். இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

***

அடுத்ததாக, ‘கல்லின் மீது பூ எறிபவர்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகமே அநாகரிகமான ஒரு சிந்தனையின் வெளிப்பாடு. ஏனெனில், அந்த வார்த்தைப் பிரயோகத்துடனேயே இதுவும் வருகிறது:

// “காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை

ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.

//

ஒரு மதத்தின் இறை வழிபாட்டு முறைகள் கல்லில் பூ எறிவது என்று தாழ்வாகப் பேசிக்கொண்டே அதே கட்டுரையில் இன்னொரு கல்லை ‘இறைவனின் வீடு’ என்று கருதும் முரண்பாட்டை இஸ்லாமியர்களிடம் தான் காண முடிகிறது. இப்படி தனது நம்பிக்கைகள் எல்லாம் நேரடியாக இறைவனிடமிருந்து வந்த்து, அது எப்படி இருந்தாலும், அதற்கு எதாவது ஒரு இட்டுக்கட்டிய சால்ஜாப்பை – மிகவும் பகுத்தறிவான விளக்கம் போல முன்வைப்பதும், அதே போன்ற மற்றவர்களின் வழிபாட்டு முறைகள் எல்லாம் தவறு என்று கருதுவதும், அந்த தவறை வன்முறை மூலம் சரி செய்ய நினைப்பதும் தான் இன்றைய உலகின் தீவிரவாதத்திற்கு காரணம் என்பதை மிதவாத இஸ்லாமிய சகோதரர்களும் உணராததுதான் உலகின் துரதிர்ஷ்ட நிலை.

இங்கே இறையில்லம் என்று அப்துல் கையூம் மற்றும் ஏனைய இஸ்லாமியர்கள் கருதுவதை, ‘அகில உலகையும் பரிபாலிக்கும் ஏக இறைவனுக்கு இல்லமா’ என்று மற்றவர்கள் கேட்டால் அது எப்படி இஸ்லாமியர்களால் பார்க்கப் படும் என்று சகோதரர்கள் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும். உலகம் அந்த நிலையை நோக்கித்தான் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு இத்தனை நூற்றாண்டுகளாகியும் இந்தியாவில் நிலை கொள்ள முடியவில்லை. ஒரு நூறு வருடங்களுக்குள் அரேபிய தீபகற்பத்தையும் அடுத்திருந்த பிரதேசங்களையும் கோட்பாடின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்துவிட்ட ஜிஹாதிகளால், பதினான்கு நூற்றாண்டுகளாகியும் இந்தியாவை இக்கோட்பாட்டை பின்பற்ற வைக்க முடியவில்லை. மாறாக, சூஃபியிஸம் எதிர்நீச்சல் போட்டு இஸ்லாத்திற்குள் புகுந்தது. சூஃபியிஸமும் வன்முறைக்கோட்பாட்டிற்கு முழுவதுமாக விதிவிலக்கில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், இஸ்லாம் அதன் நேரிய வடிவில் இந்தியாவிற்குள் எந்த காலகட்டத்திலுமே பெருவாரியானவர்கள் பின்பற்றுகிற கோட்பாடாக இருக்க முடியாமல் போனதற்கு இந்த அடிப்படைக் கோணலும், அதை சித்தாந்த ரீதியாக சோதிக்காமல் ஏற்க மறுக்கும் ஆன்மீக பாரம்பரியமும் தான் காரணம் என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts