நண்பர் அருணகிரிக்கு அன்புடன் ஓர் மறுமொழி.

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

தாஜ்மகாத்மா காந்தி – பெரியார் சந்திப்பின் நேரடி உரையாடல் பதிவு, என்னுடைய அறிமுக உரையுடன் திண்ணையில் வெளியாகி இருந்தது. நண்பர் அருணகிரி அது குறித்த தனது காட்டமான கருத்தை தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்தைச் சொன்ன தில் எனக்கிருந்த அத்தனை உரிமையும் அவர் கருத்தை, அவர் வெளிப்படுத்துவதற்கும் உண்டு. பெரியாரை, அவர் ‘Fascist’ என்று சொல்லி இருப்பதையும் சேர்த்து.

நண்பர் அருணகிரியின் கருத்துகளை ஒட்டி, பொதுவாக சில விளக்கம் சொல்ல வேண்டும். பின்வாங்க முடியாது. காந்தி – பெரியார் உரையாடலை திண்ணையில் பதிவு செய்தவன் என்கிற முறையில் அது கட்டாயம். என் பக்க விளக்கத்தை முன்வைக்கும் முன்னால், என்னளவிலான சில தெளிவுகளை இங்கே வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுதல் அவசியம்.

நண்பர் அருணகிரி மாதிரி, பெரியாரை நான் ஒற்றைப் பரிமாணத்தில் காண்பவனல்ல, அவரது ஆகிருதிகளின் அத்தனைப் பக்கமும் தொடர்ந்துபோய் வலம் வந்தவன். திரும்பத் திரும்ப அவைகளை பரிசீலனைக்கு உட்படுத்தியவன். முடிவாய் என்னில் அவர் கலகக்காரராக, புரட்சியாளராக விசேசமானவரானார். தமிழ் மண்ணில் இப்படி ஒரு தலைவரென! வியக்கவும் வைத்தார்.

பெரியாரோடு இசைந்துப் போகிறவன் என்றாலும், அவரிடமிருந்து நான் வித்தியாசப் படுகிற புள்ளிகள் உண்டு. அதில் ஒன்று அவருடைய பிராமண வெறுப்பு. அது குறித்து அவர் முன் வைக்கும் காரண காரியங்கள் புரிய வருகிறபோதும், என்னால் அப்படி மனம் சுழித்துக் கொள்ள முடியாது. என்னுடைய பால்ய பிராமண நண்பர்களையும், எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அந்தப்பக்க ஆசான்களையும் ஒரு காலமும் தள்ளிவைத்துப் பார்க்க முடியாது. யார் எது சொன்னாலும் பாரதியை என்னில் அசைத்து விடுவது சாத்தியமே இல்லை. நான் ஈடுபாடு கொள்ளும் கலை இலக்கியத்தில், நுட்பம் சர்ந்த வித்தைகள் கற்றதெல்லாம் அவர்களிடம்தான். அவர்களுக்கான என் வற்றாத நன்றி என்றைக்கும் மங்காது.

இந்திய அரசியல் களத்தில் பிராமணர்கள் இல்லாத ஒரே இயக்கமாக பெரியார் தனது இயக்கத்தை வைத்திருந்தார். அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக பிரவேசித்தப்போது, அங்கே ஆளுமைகளாக வீற்றிருந்த பல பிராமணத் தலைவர்களால் அவர்
அலைகழிக்கப்பட்டார். அவரது எந்த ஒரு சமூகச் சீர்திருத்தமும் சபையேறமுடியவில்லை. ஒரு கட்டத்தில், தான் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியையே அவர் பிராமணக் கட்சியாக பார்க்கத் தொடங்கினார். தொடர்ந்து, குறுகிய காலத்திலேயே அந்த கட்சியிலிருந்தும், அதன் தலைமை பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்.

பெரியார் அன்று தொட்டு, பிராமணிஸத்துடன் பிராமண எதிர்ப்பையும் முன்வைத்தார். 1925 ல் தொடங்கிய இந்த எதிர்ப்பு, பின் அவரிடம் மெல்ல மெல்ல உக்கிரம் கொள்கிறது. அந்த உக்கிரத்தின் எதிர்வினையாக, நாலாபுறத்திலிருந்தும் மேவிய ஆதிக்க மனப்பான்மைக கொண்ட பிராமணர்களது சொல்லொன்னா எதிர்ப்பை எதிர்கொள்கிறார். நித்தம் நித்தம் அதை எதிர்கொண்டே தனது இயக்கத்தை மேல் எடுத்துச் சென்றார். அதையொட்டி, அவரது செயல்பாடுகளில் எந்த ஒரு பிராமண அடையாளத்தையும் அவர் ஒப்புக் கொள்வது கிடையாது. என்றாலும் அவரது இந்த ஒட்டு மொத்த பிராமண எதிர்ப்போடு என்னால் ஒன்ற முடிந்ததில்லை என்பதுதான் உண்மை. அவரை இப்படி மீறியதில் மன உலைச்சல் உண்டு. 1970 க்கு பிந்திய காலக்கட்டத்தில் பெரியாரை தேடிக் கண்டடைந்த பலரும், இந்த ரீதியிலான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதிகம் இருக்கக்கூடும்.

பெரியாரிடமிருந்து வித்தியாசப்படுகிற புள்ளிகள் மாதிரி, அவரை தாண்டிப்போன புள்ளிகளும் என்னில் உண்டு. மத அடிப் படைகளையும், அதில் தீவிரம் கொள்ளும் அடிப்படைவாதிகளையும் பெரியார் பலமாகவே சாடியிருக்கிறார். என்றாலும், இன்றைக்கு அதையொட்டிய என்னுடைய சாடல் இன்னும் பலம் வாய்ந்தது. அவர்கள் எந்த மத அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி ஜீரணிக்கவே முடிவதில்லை. ஆகவே ஆகாது. ஒரு நாளும் அவர்களை ஒப்புக் கொண்டதில்லை. ஒப்புக்கொள்ளப் போவதுமில்லை. சத்தியத்தில், நாளும் இவர்களது தொல்லைகள் சகிக்க கூடியதாகவும் இல்லை.

மத அடிப்படைவாதிகள் யாரும், இன்றைக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் மதத்தில் வேண்டி விரும்பி வந்து பிறந்தவர்கள் அல்ல! மதங்களின் தாழ்வாரத்தில் பிறக்க நேரிட்டதால், அவர்கள் மதங்களை சுமக்கிறார்கள். ஏதோ தேடித் துருவி, வேண்டி விரும்பி இன்றைக்கு இருக்கிற மதத்தில் பிறந்த மாதிரியான அவர்களது செய்கைகள் வேடிக்கையானது. இவர்கள் மங்கோலிய வில் பிறந்திருந்தால் அவர்களது முகலெட்சணமே மாறியிருக்கும். ஆப்ரிக்காவின் எங்கோ ஒரு காட்டில், அந்த காட்டுவாசிப் பெற்றேர்களுக்கு பிறந்திருக்கும் பட்சம் பாவப்பட்ட முகவிலாசம் கொண்டிருப்பார்கள்.

பெரியார் காலக்கட்டத்தைவிட, இன்றைக்கு இந்த மதஅடிப்படைவாதிகளின் அரக்கம் அதிகம். அதனால் அரங்கேறும் கொடுமைகளும் அதிகம். உலகம் பூராவும் தினம் தினம் அது அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. வானளாவியக் கட்டிடங்களை கூட பயணிகள் விமானத்தைக் கொண்டு தகர்கிறார்கள். ஒரு தேசத்து பெண்கள் அத்தனைப் பேர்களையும் படிக்கவிடாமல் மூளியாக்குகிறார்கள். கேட்டால் மதத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். ரயிலை கொளுத்துகிறார்கள். நாடு, நகரங்களை ரணகளப் படுத்துகிறார்கள். வழிப்பாட்டு தளத்தை தகர்த்து நாடு பூராவும் கலவரம் மூண்டு, கொலைகள் விழ பார்த்து வெற்றி களிப்பு கொள்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம், தம் மக்களது சுபிட்சம் என்பதான நிஜத் தேவைகளை மறைத்து, நாட்டு சுபீச்சத்துக்கென்றும்/ மத மறுமலர்ச்சி
க்கென்றும் இந்த அடிப்படைவாதிகள் தாராளமாக அடிப்படைவாதம் பேசுகிறார்கள். சமூகத்தையும் ரணகளப் படுத்துகிறார்கள். வாழும் சூழல் நரகமாக்கப்படும்போது, யதார்த்த வாழ்வில் இயங்க எண்ணம் கொண்ட பெரும்வாரியான பொதுமக்கள் நிம்மதி யற்று தவித்துப் போகிறார்கள். இந்த அடிப்படைவாதிகளை குறித்த கடும்பார்வை இப்படியே நாளும் என்னை முகம் சிவக்க வைக்கிறது.

நண்பர் அருணகிரியின் திண்ணை கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். அவற்றில் தென்படாத குழப்பமும், நெருடலும் இந்த மறுப்பில் பளிச்சிடுகிறது. காந்தி – பெரியார் சந்திப்பின் உரையாடல் பதிவை அவர் சந்தேகிக்கிறார். சரி! பின் எப்படி அதை யொட்டிய கருத்துகளை முன்வைத்து வழக்காடுகிறார்? அதில் அவருக்கு வேண்டிய கருத்துக்கள் தாராளமாக இனிக்கிறது. அவர் கோணப்படி இப்படி ஒரு சந்திப்பே நடக்கவில்லை, இந்த உரையாடல் ஒரு பொய், என்று அவர் தன் வாதத்தை மேலெடுத்துப் போயிருக்கவேண்டும்.

நண்பர் அருணகிரி, தனது திண்ணை மறுப்பில், தன் பக்க வாதத்தின் மேன்மைக்காக வேறெரு வலைப்பதிவின் முகவரி தந்திரு க்கிறார். அதில் போய் பார்த்தால், கேள்விப்படாத யாரோ ஒருவர், பெரியாரை, பெரியார் திடலில் தனிப்பட்ட முறையில், 1972ம் வாக்கில் சந்தித்து உரையாடியப் பதிவாக அது இருக்கிறது. மேற்கண்ட அந்தப் பதிவை நண்பர் அருணகிரி எந்த முகாந்திரத்தில் நம்பிக்கை கொண்டார்? காந்தி / பெரியார் சந்திப்பு உரையாடல் பதிவின் மீது சந்தேகம் எழுப்பும் அவர் இந்தப் பதிவை எப்படி கேள்வியே இல்லாமல் அங்கிகாரித்து வாசகர்களுக்கும் சிபாரிசு செய்கிறார்? ‘லாஜிக்’ வேண்டாமா?

நண்பர் அருணகிரி முன்வைத்த இந்த பதிவு குறித்தான சந்தேகம் ரொம்ப சரி. என்னிடம் அது சார்ந்த நம்பகமான சான்றுகள்
எதுவுமில்லை. அவர்களது அந்த சந்திப்புக் குறித்து வேறு ஏதேனும் ஒரு பதிப்பு, 1948 க்கும் முன் இருந்திருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை. யூகம்தான். நடப்பில், நாம் பதிவுகளை பலநேரம் நம்பவேண்டி இருக்கிறது.

காந்தி – பெரியார் சந்திப்பின், உரையாடலின் நம்பகத்தன்மையை தேடி, அது குறித்த புறசங்கதிகளில் கவனம் செய்தேன். இந்த பதிவு வெளிவந்து சுமார் 60 வருடக்காலத்தில், அதன் மீது நண்பர் அருணகிரி அளவில் சந்தேகத்தை எழுப்பியவர்கள் யாரும் இல்லை. திராவிட கழகத்தாரால் பல இடங்களில் இந்த உரையாடல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அதை யாரும் மறுத்ததாகவும் தெரியவில்லை. தவிர வெளிவர இருக்கும் ‘பெரியார்’ திரைப்படத்தில் இந்த சந்திப்பு இதே உரையாடல் கொண்டிருக்கிறதாகவும் அறியவந்தேன். மேலாய், அந்த உரையாடல் பெரியார் வாழ்ந்தக் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. தவிர, உண்மையை திரிக்கும் பழக்கம் பெரியார் வழியல்ல. திராவிட கழகமும் அதை செய்யாது. அவசியமுமல்ல.

நண்பர் அருணகிரி சொல்வது மாதிரி சரித்திரங்கள் பலநேரம் பொய்யானப் பதிவாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல அடிக்கடி அது மாற்றங்களுக்கும் உள்ளாகிறது. அது குறித்த கேள்விகள் எழும்போதும், சரித்திரத்தை சிதைக்கும் அல்லது திரிக்கும் ஆண்ட வர்க்கத்தார்கள், “அதில் என்ன தவறு?” என்று கேட்டதைப் படித்து அதிர்ந்திருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் புரா ணம் என்கிற அந்தஸ்த்தில், கணிக்க முடியாத காலத்து நிகழ்வுகளையும் மிக துல்லியமாய் கணிப்பதாக இருக்கிறது. பதினேலு லட்ச வருடத்திற்கு முன், எங்கள் அவதாரம் அவதரித்த இடம் இதுதான் என்று ‘landscape’ சகிதமாக மார்க்குறியிட்டு உரத்து முழங்கியதையும் நாம் எல்லோரும் கேள்வியே இல்லாமல் அவதானிக்கத்தான் செய்தோம்.

காந்தி பெரியார் சந்தித்து உரையாடுகிறபோது, காந்தி பெரியாரிடம் இப்படி கேட்கிறார்: “இராஜகோபாலாச்சாரியாரிடம் கூட உங் களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று. அதற்கு பெரியார்: “அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநல மில்லாதவர். ஆனால், என்வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.” யென பதில் சொல் கிறார். ரொம்பவும் நேரிடையான கேள்வி, நேரிடையான பதில். பெரியார் இங்கே பிராமின், பிராமின் அல்லாதார் என்கிற பொருள்படும்படி பேசி இருப்பதை, அன்றைய சமூக நடப்பு குறித்த கேட்டறிந்தவர்களுக்குக் கூட இது புரியும். குறைந்தப் பட்சம், வகுப்புக்கும் ஜாதிக்கும் அர்த்த வித்தியாசம் புரியவந்தால்கூடப் போதும்.

இதுபற்றி வியாக்கியானம் செய்திருக்கிற நண்பர் அருணகிரி, சம்பவக் காலம் குறித்த புரிதல் இல்லாமல், தேடலும் இல்லாமல் மறுப்பு செய்யவேண்டும் என்கிற ஒரே முகாந்திர உந்தலில் செயல்பட்டு இருக்கிறார். “என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படை த்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது என்றும் மனம் திறக்கிறார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் . அதாவது, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக இருந்த தனது சாதியின் நலனை , தன் சாதியைவிட மேலானதாகக்கருதப்படும் பார்ப்பன சாதிக்காரரின் கையில் கொடுக்க மனம் வராது என்கிறார் ராமசாமி நாயக்கர்.” அவரது இந்த மாதிரியான அர்த்தப்படுத்தலுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? ஒரு செய்தியை சரியாக உள்வாங்கிக் கொண்டு பேசுபவர்களிடம் தொடர்ந்து பேசமுடிகிற மாதிரி, இங்கே முடியவில்லை. மகா கஷ்டம்!

நண்பர் அருணகிரி, பெரியாரின் தலித் சிந்தனைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகம் எழுப்பும் விதத்தில், தனது மறுப்பு கட்டுரையில் ஒரு செய்தியை முன்வைத்திருக்கிறார். “ஆதிக்க சாதிகளால் ஹரிஜனங்கள் கொளுத்தப்பட்டபோது கூட அதனை எதிர்த்துப் பேசாமல் ஈ .வே.ரா.வால் இடிபோன்ற மவுனம் காக்க முடிந்தது” என்றிருக்கிறார்.

1968, டிசம்பர் – 25ல் வெண்மணி கிராமத்தில், நிலச் சுவான்தார்களை எதிர்த்து, கம்யூனிஸ்ட்கட்சி சார்பாக, விவசாயிகள் கூலி உயர்வுப் போராட்டம் ஒன்றை தீவிரமாக நடத்தினார்கள். இங்கே விவசாயிகள் தலித்துகள் என்பது இன்னொரு செய்தி. சம்மந்தப்பட்ட நிலச்சுவான்தார்கள், சுமார் இருபது விவசாயிகளை இரவோடுஇரவாக பிடித்துவந்து ஒரு வீட்டில் அடைத்து, வீட்டோடு அவர்களை கொளுத்தவும் செய்தார்கள்.

அகில இந்திய அளவிலான கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைமை, அந்த கொந்தளிப்பான பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசே கூட அந்த பிரச்சனைக்குள் ஓர் அளவுக்குமேல் போக முடியவில்லை. அன்றைக்கு தலித் மக்களில் பெரும்பாலானவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று அவர்கள் பின்னால்தான் நின்றார்கள். அன்றைய வாக்கில் நான் மதிக்கும் காமராஜ் அவர்கள் அரசியலில் பெரிய சக்தி. அவராலும்கூட பெரியார் மாதிரி ஆதங்கப்படத் தான் முடிந்தது. அந்த அளவுக்கு அகில இந்திய கம்யூனிஸ்டுகள் அந்த பிரச்சனையை உணர்வு பூர்வமாக கையாண்டார்கள். காலம் தாழ்ந்தாலும், அந்த ஆதிக்ககாரர்களை கம்யூனிஸ்டுகளும், அந்த கிராம தலித் மக்களும் சரியாகவே கணக்கும் தீர்த்தார்கள். இதில் பெரியாரை நுழைத்து கேள்விக்குள்ளாக்குவது ஏன்? அவர் அந்த ஆதிக்க சாதியினருக்கு ஏதேனும் குரல் கொடுத் தாரா என்ன? 29.12.68 விடுதலையில் இந்த வெண்மணி கிராமத்தில் நடந்தேறிய கொடுமைக் குறித்து, ‘இத்தகைய கொடுமைகளை தடுக்க இயலாமற்போன இந்திய அரசியல் சட்டம், ஜனநாயகம், குற்றத் தடுப்புச் சட்டங்களின் போதாமை குறித்து’ சீற்றம் கொண்டிருக்கிறார்.

அதே காலக்கட்டத்தில் இந்துகளுக்கான இயக்கம் வடக்கே பலப்பட்டுதான் இருந்தது. அன்றைக்கு அவர்கள், சிறுபான்மையினரும் தலித்து மக்களும் தங்களது உணவுக்காக அடிமாடாகிப்போன பசுக்களை கொள்வதை எதிர்ப்பவர்களாகவும், போராட்டம் செய்தவர்களாகவும் இருந்தார்கள். இந்த பிரச்சனையை முன்வைத்து அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களை, ஜனசங்கத்தினர் டில்லியில் அவர் தங்கிய வீட்டோடு சேர்த்து கொளுத்தினார்கள் என்கிற அளவுக்கு அடிமாடாகிப்போன பசுக்களுக்காக கொதித்தவர்கள் வெண்மணியில் கொளுத்தப்பட்ட தலித்துகளுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? தலித்துகள் இந்துகள் இல்லையா? அல்லது அடிமாடாகிப்போன பசுக்களைவிட குறைந்தவர்களா?

பெரியாரை நோக்கி தலித்துகளை மோதவிடும் அரசியல் என்பது இன்றைக்கு விசேசமாக நடந்துக் கொண்டிருக்கிறது. அரசியல்
வானில் இன்றைக்கு அது ‘ஃபேஷன்’! பெரியார் பெயரைச் சொன்னாலே உடல் நடுக்கம் கொள்கிற நண்பர் அருணகிரி போன்ற வர்களுக்கு அந்த மோதல் ஊட்டச்சத்தாகவும், நொறுக்குத் தீணியாகவும் இருக்கிறது என்பதை அறிவேன். இதற்காகவே சில தலித் அரசியவாதிகள் தயாரிக்கப்பட்டு மேடை ஏற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். என்றாலும் இதில் நண்பர் அருணகிரி மாதிரியான ஆட்கள் ரொம்ப நாள் குளிர் காயமுடியாது. அரசியல் கணக்கில் இப்படி மேடையேறுபவர்கள் இன்னொரு அரசியல் கணக்கில் அதை முடித்தும் கொள்வார்கள். தமிழகத்தில் தாங்களது வீழ்ச்சிக்கு ஓட்டு அரசியல்சாரா பெரியாரை விமர்சித்தது ஆகப் பெரிய காரணங்களில் ஒன்று என்பதாக இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் கணித்து கைசேதப்படுவதை நவீன தலித் தலைவர்கள் அறிய மாட்டார்களா என்ன? தவிர, டாக்டர் அம்பேத்காரும் – பெரியாரும் இரட்டைக் குழல் துப்பாக்கி! அவர்கள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய கலக அரசியல் அத்தனையும் பதிவாகத்தான் இருக்கிறது.

இராஜாராம் மோகன்ராயும், நாராயண குருவும், விவேகானந்தரும், பாரதியாரும், காந்தியடிகளும், அம்பேத்காரும் தத்தம் களங்களில் சீர்திருத்தங்களை செய்தார்கள் என்றும். இன்றும்கூட மாதா அமிர்தானந்த மாயியும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரும் அந்த காரியங்களை திறம்பட செய்கின்றார்கள் என்றும்,இந்து மதத்துக்கு உள்ளே இருந்தே ‘சாதி எதிர்ப்பு’ இயக்கங்கள் வெற்றிகரமாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் அருணகிரி தெளிவுப்படுத்தியிருக்கிறார். இது ரொம்ப சரியானப்பார்வை. மேலே கண்டுள்ள அத்தனைபேர்களும் என் மரியாதைக்குரியவர்களே. ராமானுஜம் மாதிரி இன்னும் ஒருசில சீர்திருத்த வாதிகளின் பெயர்கள்கூட விடுப்பட்டிருக்கிறது.

டாக்டர் அம்பேத்கார் தனது தலித் மக்களுக்காக, அன்றைக்கு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த மைய அரசோடும், அவர்களின் சூழலில் இருந்த காந்தியோடும் பலவிதமாக பல முறை போராடியப் பின்னர், அவர்களின் சூழ்ச்சிகளை சகிக்க முடியாமல்தான், லட்சம் தலித்துகளோடு புத்த மதத்தை தழுவினார். நண்பர் அருணகிரி மேற்கண்ட பட்டியலில் உள்ள பெரியவர்களில் இருந்து, டாக்டர்.அம்பேத்காரை சற்று கூடுதல் அர்த்தத்தோடு வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும்.

கொஞ்ச நாளாக, நான் சார்ந்திருக்கும் இலக்கிய வட்டத்தில், பெரியார் ஏன் நாராயண குரு மாதிரி, விவேகானந்தர் மாதிரி,
காந்தி, இராஜாராம் மோகன்ராய் மாதிரியெல்லாம் இயங்கவில்லை? அப்படி இயங்கி இருந்தால் என்ன? என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள். நண்பர் அருணகிரியும் அதையே வேறுகோணத்தில் இங்கே சுட்டுகிறார். ஆதங்கம் என்னவோ சரிதான்.
நான் கேட்கிறேன், “அவர்கள் ஏன் பெரியார் மாதிரி இயங்கவில்லை?” இந்த கேள்வி உரியவர்களுக்கு ரசிக்காது. சரி வேண் டாம். இது வேறு கேள்வி. “பெரியார் ஏன் அவர்கள் மாதிரி இயங்கவேண்டும்?”

மேலே கண்டிருக்கிற அந்த பெரியார்கள் எல்லாம் மதத்திற்குள் சீர்திருத்தம் என்கிற வட்டத்திற்குள் இயங்கியவர்கள். பெரியார், மதம் / சமூகம்/ அரசியல்/ பெண்ணியம்/ மூடதனத்திற்கான எதிர்ப்பு என்று பலபரிமாணங்களில் இயங்கியவர். 1920 வது காலக் கட்டத்தில் பெரியாரின் பெருவாரியான செயல்பாடுகள் கிளைவிட்டு துளிர்க்கத் தொடங்குகிறது.

அன்றைக்கு இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலக்கட்டம். ஜாலின்வாலாபாத் படுகொலை கலவரத்திற்குப் பிறகு அவனது மோசமான நடவடிக்கைகள் குறைய தொடங்குகிறது. மண்ணின் மைந்தர்கள் விழித்துக்கொள்ள துவங்கியதை அவன் அனுமானிக்கிறான். முதல் உலகப் போரில் அவன் எதிர்கொண்ட சங்கடங்கள் அவனை அலைகழித்தன. அதையொட்டி உலகின் அவன் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க கருதினான். தொடர்ந்து சில நாடுகளுக்கு கொடுக்கவும் செய் தான். இந்தியாவை பொறுத்தவரை, விடுதலைக் கொடுக்கத் தீர்மானித்ததை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு என்று தள் ளிப் போட்டு, மத்தியிலும் மாநிலங்களிலும் இந்தியர்களின் சுய ஆட்சி முறைக்கு வழி ஏற்படுத்தி தந்தான்.

அரசியலில் எல்லா நிலைகளிலும் பிராமண ஆளுமை கொடிகட்டிப் பறக்கிறது. அரசு ஆட்சிப் பதவிகள், அரசு நிர்வாகப் பதவிகள், அன்றைய இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸ் /கம்யூனிஸ்ட் – களின் அத்தனை தலைமைப் பதவிகளும் பிராம ணர்களுக்கே சொந்தமாகிறது. அன்றைக்கு பிரபல்யமான ஹைகோர்ட்வக்கீல்களாக விளங்கிய அத்தனை பிராமண வக்கீல்களும் அரசியலில் குதிக்கிறார்கள். அவர்களது சாணக்கியம் இங்கே கொடிக்கட்டிப் பறக்கிறது. பிற இன மக்களை எடுப்பிடியாகத்தான் ஏற்றார்கள். இன்னொருப் பக்கம், மதத்தின் மீதான பிராமணியக் கட்டை தளரவிடாமல் பார்த்துக் கொள்ளவும் செய்தார்கள். மத சீர்திருத்தம் பேசிய பாரதிக்கும் அவர்கள் ‘பைத்தியப்பட்டம்’ கட்ட தயங்வில்லை. சகமனிதர்களை அவர்களது வீதிகளின் மீது நடந்துப்போகவும் அனுமதித்தார்கள் இல்லை. கேரளத்து பிராமணர்களான நம்பூதிரிகள், நாயர் வகுப்பு பெண்களிடம் முறைத் தவறி ஆளுமை செய்ததற்கும் மதரீதியான நியாயம் கற்பித்தார்கள். பிற இந்து மக்களை சூத்திரர்கள் யென குறிப்பிடவும் அஞ் சவில்லை அவர்கள். இதற்கெல்லாம் வழித்தேடுபவராகத்தான் பெரியார் விஸ்தீரணக இயங்கினார். இதையொட்டி மற்றப்பெரியார் களின் சீர்திருத்தங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

ஆப்ரஹாம்லிங்கன் கருப்பர் இன மக்களுக்காக உரத்தக் குரல் கொடுத்ததால்தான் அங்கே அவர்களுக்கு விடுதலைக் கிடைத்தது. காந்தியும் நேதாஜியும் இன்னும் பல தலைவர்களும் வெள்ளையனை எதிர்த்து குரல் கொடுத்ததினால்தான் வெற்றிப் பெற்ற ர்கள். ரஷ்யாவில் ஜார்மன்னர்களின் ஆட்சியும், சௌத்ஆப்ரிக்காவில் இங்க்லீஸ் ஆட்சியும் இப்படியான சண்டமாருதமான எதிர்ப்பு குரலாலும் அதையொட்டிய நடவடிக்கையாலும்தான் வெளியேற்றப்பட்டது.

மடம் மாதிரி அமைத்துக் கொண்டு, தத்துவமும் யோகாவும் போதித்துக்கொண்டு, பஜனைப் பாடிக்கொண்டு இருப்பதென்பது ஓர் சீர்திருத்த இயக்கத்தின் அன்றாட நடவடிக்கையாக இருக்கும் என்றால், இந்த யுகம் முடியும் காலம்வரையுலும்கூட அவர்களால் அவர்களது குறிக்கோளை எட்டமுடியாது. ஒரு இனம், அதுவும் குறைந்த சதவீதம் கொண்ட இனம், கல்வியை பிற யாருக்கும் காலாதிகாலமாக காட்டித்தராத அந்த இனம், அந்த ஒரு சமூக தகுதியாலேயே மேலேபோன இனம், தங்களைத்தவிர பிற மக்களை இரண்டாம் நிலையில், அல்லது கீழ் நிலையில் வைத்துப் பார்க்கும் அந்த இனம். ஆனால், மற்றவர்கள் மட்டும் அவர்களை நேர்நோக்கி குரலை உயர்த்தி ஏதும் கேட்டுவிடக் கூடாது. கேள்விகள் வைக்கக்கூடாது. இதெல்லாம் என்ன தியரி? மேலே பட்டியலில் உள்ள பெரியார்களை ஒத்த ஒரு சீர்திருத்தவாதியாக பெரியாரை நினைத்துப் பார்க்கக்கூட இயலவில்லை!

சீர்திருத்தப் பெரியார்களில், நாராயணகுருவின் சேவையை பெரியார் பாராட்டியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சேவையாக அதைப் பார்த்து நல்ல விதமாகவே பாராட்டியிருக்கிறார். ஆனால், நாராயணகுரு வின் சொந்த மண்ணான கேரளம் – வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கேவில் வீதிகளில் நடக்கக்கூடாது, கேவிலுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று ஆளுமைக் கொண்ட வர்க்கம் தடைப்பிறப்பித்திருந்தை தகர்த்தெரிய அங்கே பெரியார்தான் வேண்டியிருந்தது. போனார், போராடினார், சிறைக் குப் போனார், தொடர்ந்து மனைவியை வரவழைத்து போராட்டம் செய்ய சொன்னார், அவரையும் சிறைவாழ்க்கைக்கு உட்படுத்தி னார். கடைசியில் பெரியாரைத்தான் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். போராட்டமும் வெற்றிப் பெற்றது. இப்படி எத்தனையோ சமூகப்போராட்டங்களை நடத்தியவர். வெற்றிகளையும் பெற்றவர் அவர். இத்தகைய செயல்பாடுகள்தான் மற்றப் பெரியார்களுக்கும், பெரியாருக்குமான வித்தியாசம்.

பெரியார் 90வயதுக்குமேல் வாழ்ந்தது குறித்தும்,இளம்பெண்ணை திருமணம் செய்ததுக் குறித்தும் நண்பர் அருணகிரி, ரொம்பவும் கவலைப்பட்டு இருக்கிறார். பெரியார் கடவுள் மறுப்பு செய்தபோதும், அவரை யாரும் ஒன்றும் செய்யவில்லை என்றும்,அதுதான் இந்து மதத்தின் சகிப்புத்தனம் கொண்ட சிறப்பொன்றும் சுட்டிக் காமித்திருக்கிறார். பௌத்தம் இங்கே சிதைக்கப்பட்ட, சமணம் கழுவேற்றப்பட்ட சரித்திர நடப்புகளை அறிய நண்பர்க்கு அவகாசம் இல்லையென்று நினைக்கிறேன். பாரதியை அவரது சூழல் காரர்கள் காபந்து செய்யமுடியாது போனது எதனால் என்று நண்பர் அறியவில்லை.

இந்த தமிழ்மண் 1930, 40, 50 களில் பெரியாரின் விரல் அசைவுகளில் அசைந்துக் கொண்டிருந்தது. ஒரே சூரியனாக இருந்தார். விரோதித்தவர்கள் நெருங்க முடியவில்லை அவரை. அதற்கு முந்திய 1920 – 30 காலக்கட்டத்தில் அவர் பலமுறை எதிரிகளின் சேட்டைகளுக்கு ஆளாகியிருக்கிறார். சொல்லடியும், கல்லடிகளையும் தாங்கித்தான் தன்னை நிலைநிறுத்திக் காட்டினார். அவர் தொன்னுத்தி சொச்ச வயதில் இறந்தார் என்பது நிஜமானாலும், “எம்மக்களுக்கு ஏற்பட்டடுவிட்ட அவப்பெயராக நிலைத்துவிட்ட சூத்திரப்பட்டத்தை என் காலத்தில் என்னால் துடைத்தெரிய முடியவில்லையே!” என்று மனம் நொந்துதான் செத்தார்.

பெரியார், மணியம்மை என்கிற இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கோலாகலத்தைப் பற்றி பேசலாம். பெரியாருக்கும் மணியம்மைக்கும் ஆன வயது வித்தியாசத்தை வெளிச்சம்போட்டு காட்டி அதில் ஒரு திருப்தி! இதை பெரிசு படுத்தி இளம் வய தான மணியம்மைக்காக நல்ல மனம் கொண்ட நண்பர் பச்சாதாபம் கொள்கிறார் என்றே வைத்துப் பார்ப்போம். 1. பெரியார் மணியம்மையை கட்டாயத்திருமணம் செய்துக் கொண்டிருக்க வேண்டும். 2. இந்த திருமணத்தைக் குறித்து மணியம்மை எப்போ தேனும் யாரிடமேனும் புலம்பி இருக்கவேண்டும். இந்த இரண்டும் இல்லாதபோது அதில் பிறர் எவரும் மூக்கை நுழைக்க எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது.

கூடாத் திருமணம் என்கிற கோணத்தில் தள்ளி நின்று பார்ப்பதாக சம்பந்தப்பட்டவர் விபரம் பேசலாம். இந்த மாதிரியான ‘சென் டிமென்டெல்லாம்’ பெரியார் பாஷையில் வெங்காயம்! இங்கே இப்படி குற்றம் காண்கிற நண்பர்,அன்றைக்கு புலக்கத்திலிருந்த பல்யத் திருமணம், இளம் வித்வைகளுக்கும் மறுவிவாக மறுப்பு, அவர்களுக்கு மொட்டைப் போட்டும் சடங்கு, சதி என்கிற உடன்கட்டை, மாதவிலக்கு காலத்தில் பெண்களை வெளித்திண்னையில் தள்ளிவைத்த கொடுமை என்று, நண்பர் வரிசையாகப் விமர்சித்து விட்டு பின்னர் மணியம்மைத் திருமணம் குறித்து மூக்கைச் சிந்தியிருக்கலாம்.

ஒரு பெண்ணுரிமை மாநாட்டில் பெரியார் கலந்துக் கொண்டபோது, அவர்கள் அவருக்கு ‘பெரியார்’ என்று பட்டம் தந்தார்கள்.
இன்னும் பல்வேறு இடங்களில் பல்வேறுமக்கள் அன்பின் பெருக்கால் பலவித பட்டம் தந்தார்கள். ஆனால், நார்த்திகன், புத்தன், கலகக்காரன்,தேசத்துரோகி என்றே அவர் தன்னை பலநேரங்களில் பெருமையாக சொல்லிக் கொண்டார். இன்றைக்கு நண்பர் அருணகிரி பெரியாரை ‘Fascist’ என்கிறார். ‘பெரியார் என்ற பதத்திற்கு என் அகராதியில் ‘Humanist’ என்று இருப்பது மாதிரி அவர் அகராதியில் அப்படி. கொஞ்சம் பழைய ‘எடிசனாக’ இருக்கலாம். அது ஒரு பிழையில்லை. நண்பர் அருணகிரி இன்னும் கூட பெரியாரை விமர்சனம் செய்யனும், உதாசீனம் செய்யனும், சுக்குச்சுக்காக கிழித்துப்போடனும் மனிதச் சுதந்திரத்தில் அதற்கு வலுவான இடமிருக்கத்தானே செய்கிறது. செய்யுங்கள். பெரியாரை தீர வாசித்துவிட்டு செய்யுங்கள். எனக்குத் தெரியும், அது உங்களால் முடியும். நன்றி!

*****************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்