நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ரா.கிரிதரன்


அலை வந்து என்னைப் புரட்டியபோதுதான் அவனை கவனித்தேன். கையை முழுவதாக மூடி பின்னே மறைத்து வைத்திருந்தான். அப்படியே உட்கார்ந்ததெப்படி என்றுதான் தெரியவில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு பேரலை. உலகம் புரண்டுத் திரும்பியது. இவன் மட்டும் நனைந்தபடி என்னைப் பார்த்து உட்கார்ந்திருந்தான்.

‘என்னயா பார்க்கிறாய்’ – ரொம்ப வருடங்களுக்குப் பிறகு பேசினேன்.

அதிர்ச்சியில் சில வினாடிகள் பார்த்து நிதானத்திற்கு வந்தான். நண்டு பேசுவதில் திகைப்பில்லை, என்னைப் பார்ப்பதை கண்டு பிடித்த குற்ற உணர்விருந்தது அவன் பார்வையில்.

‘சும்மா பேசு. தப்பில்லை’ – குறுகுறுபார்வையை தன்பின்னே ஓட்டினான். சற்று தூரத்தில் ஒரு தம்பதி – இவன் கூட வந்தவர்களாக இருப்பார்கள்.

‘சே.. இங்க வந்தும் நிம்மதி இல்லை. உன்னால பேசாமல் இருக்க முடியாதா?’

`இருக்கலாம். ஆனா உன்னைப் பார்த்தா வேறெங்கையோ பார்த்தா மாதிரியில்ல இருக்கு?`

`உங்கப்பா என் தட்டிலே பார்த்திருப்பாரு. சும்மா அந்த பக்கம் போ!` – தள்ளிவிட்டதில் கவிழ்ந்து விழுந்தேன்.

`எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு. பாவப்படல வேனும்னா கதை சொல்லட்டா? `

`போலாமா` – என பின்னால் சத்தம் கேட்க – இங்கேயே இருந்து இந்த கதையை கேட்கலாம் என்றே அவனுக்குத் தோன்றியது.

`என்ன கதை?`

`நண்டு என்ன கதை சொல்லப்போகுதுன்னுதானே நினைக்கிறாய்? ஆப்பிள் நியூட்டனுக்கு சொன்ன கதை வேணுமா?`

`அய்யோ!`

`டிராட்ஸ்கியை குத்தினவன்கிட்ட அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவனை கொல்லாதீங்க. அவன் சொல்ல வேண்டிய கதை ஒண்ணு இருக்கு. இப்படி எல்லார்கிட்டேயும் கதை இருக்குதே! நானும் ஒரு கதை வெச்சிருக்கேன். ரொம்ப சின்ன கதை. உன்னைப் போல் ஒருவன் கதை.`

`என்னது??`

`ஆமா என்னோட வீட்டு ஓனரோட கதை. இல்லை இல்லை.. என் வீட்டை பங்கு போட்டவர் கதை. உன் கதை மாதிரி சோகமா இருக்கும் என நினைக்கிறேன்.`

`சரி சரி சொல்லு`

`எந்த கதை கேட்டாலும் , எங்கே நடக்குதுன்னு கேட்கணும். என்னதான் படிச்சியோ? அதோ, எதிரே ஆளுநர் மாளிகை இருக்கின்றதே. அதற்குப்பக்கத்தில் உள்ள லூயி பூங்காவிற்கு நடுவே இருக்கிற வீடுதான் அந்த இடம். `

`அந்த ஓட்டு வீடா?`

`அதே. அதே. ஓடுன்னு கேவலமா சொல்லாத. என்னோட சின்ன வயசு திடல் அது`.

`கதை நடந்தது சுமார் தொன்னூறு வருடத்திற்கு முன்னால். என்ன பார்க்கிறாய். இந்த கடல் இருந்த நாள் முதல் நண்டு இருக்கிறது. எம்டன் கப்பல் வந்தபோதுதான் நான் வயசுக்கே வந்தேன்.இப்படி சொல்ல ஆரம்பித்தால் கதை இன்றைக்கு முடியாது. ஒரே மூச்சில் வேகமாக முடிக்கிறேன் கேட்டுக்கோ. நீ உட்கார்ந்திருந்த இடத்தில் தான் மாசோசான் செட்டி உட்கார்ந்திருப்பார். அதே பாறைமேல தான்..எப்போவா? தினம் தான்….

——————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————–

இந்த வீட்டு கூரையிலிருந்து பார்த்தால் நீளமான அறைபோல இருக்கும். குடுகுடுவென ஓட்டின் வழியே புழக்கடைக்குச் செல்ல முடியும். என் அப்பா இருந்தவரை போட்டியே நடக்கும். என் அப்பாவின் அப்பாவும் இதையேதான் செய்திருக்கிறார். தாத்தா வீராப்புடன் நாலு காலில் பாய்வது கம்பீரமாக இருக்குமென அப்பா சொல்லிக் கேள்வி

எனக்கு நினைவுதெரிந்தவரை எல்லோரும் இங்கேயே பிறந்தவர்கள். இப்போது என் வீட்டில் இருப்பது மாசோசான் செட்டி. அவர் மனைவி தவிர எல்லோருமே இப்படித்தான் கூப்பிடுகிறார்கள். பல சமயம் என் வாலைபிடித்து தூக்கி எறிந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் உலகம் கவிழும். விடுவிடுவென அவர் அடிக்க வருவதற்குள் ஓடி ஒளிந்துக்கொள்வேன்.சூரியனை கடல் முழுங்கும்வரை காத்திருந்து அடிவைத்து ஓட்டில் மீண்டும் மறைந்துகொள்வேன்.

நான் கடவுளென இந்த வீட்டை இரவு காக்கும் நண்டு. மனிதர்கள் மேல் மிகுந்த பிரேமையுண்டு. அவர்கள் எந்த அறையிலிருந்தாலும் அந்த அறையின் உத்திரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன். கை விட்டு கை மாறிய வீடு. இப்போதிருக்கும் மாசொசான் செட்டி அவர் மனைவியுடன் வீட்டினுள் புகுந்த நாளில் நான் பிறந்தேன். அவர்கள் எனக்குக் கீழ் நிலை தெய்வங்கள். கூப்பிடும்போது ஓடி வருவார்கள்; மற்றபடி எந்தவிதமான அசெளகரியமும் கிடையாது.

எனக்குத் தெரிந்த வரை நல்லவிதமாகவே அவர்கள் வாழ்க்கை சென்று வந்தது. உத்திரத்திலிருந்து தான் எவ்வளவு துள்ளியமாக பல விஷயங்களைப் பார்க்க முடிகிறதே. அவர்கள் பேச்சு சத்தத்தைக் கேட்டே எந்த அறையிலிருக்கிறார்கள் எனக் தீர்மானமாய் கூறிவிடுவேன்.

அவர் மனைவி போல் நிதானமான பெண்ணை நான் பார்த்ததுகிடையாது. இல்லை, இல்லை இது சரி கிடையாது. நான் உலகத்திலேயே பார்த்த ஒரே பெண் இவள்மட்டுமே. அதனால் பதத்தை வைத்து மொத்த இனத்தை பிரித்தாய்வது தப்பு. ஆனாலும் மிக நிதானமான பெண்மணிதான். அத்தம்மாவைத் தவிர யாரிடமும் சிரித்து பேசமாட்டாள். அதிர்ந்து பேசுவதில் மாசோசான் செட்டியின் எதிர் விகிதம்.

மாசோசான் செட்டிக்கோ தன் வேலையான வட்டித் தொழிலிலும் அவருக்கு நிதானம் கிடையாது. ஊரில் பலரும் அவரிடம் மட்டுமே பணம் வாங்கி ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்திருந்தாலும் எப்போதுமே கோபமான வார்த்தைகளே வந்து விழும். உலகத்திலேயே பணத்திற்கு பல்லிளிப்பது போல் அகலமான இளிப்பு வேறேதும் கிடையாது.

தொழிலில் நட்டம் வந்ததோ, யாராவது வைத்த கண் என்பதாலா தெரியவில்லை, முன்னைப்போல் மாசோசான் செட்டிக்கு வட்டிப் பணம் பெருகவேயில்லை. ஊரில் எல்லோரும் அவர் மனைவி மலடி என்பதாலேயே அப்படி ஆனதாய் கிசுகிசுத்தாலும், அதை அவர் நம்பவில்லை. பொழுது போனால், இந்த கடல் கரை மணலில் நடக்க ஆரம்பிப்பார். வழி நெருக குச்சியால் தேய்த்துக்கொண்டே போவார். இப்படியே எவ்வளவு நேரம் கடத்துவார் எனத்தெரியாது. அனால், சாய்ங்காலமாக பாறையில் உட்கார்ந்து, கடலைப் பார்க்காமல், அதன் மேல் பறக்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார். ஏதோ ஒரு பெரிய மனக்குழப்பதிலேயே இருந்தார்.

இவர் போக்கு மனைவிக்குப் புரியவேயில்லை. எல்லாரும் வீஷேசம் உண்டா எனக் கேட்பது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை, ஆனால் திடீரென மாறிய தன் கணவனின் செயல்கள் அவளுக்கு புதிராகவே இருந்தது.

அன்று – அத்தம்மா சொன்னதுபோல், வீட்டில் தொட்டிலும் கட்டிவிட்டாள் –

`அவங்க அப்பாகூட கடைசி காலத்துல அப்படித்தான் இருந்தாங்களாம். திடுதிப்புனு ஒரு பதினெட்டு வயசு பொண்ணோட வந்து நின்னாராம்`

`அதெல்லாம் கதைன்னு சொல்லுவாரே`

`ஏதோ, சூது புரியாத இடத்தில, குத்திக் காட்டுன்னு சொல்லுவாங்க. சும்மா ஒரு தொட்டில் கட்டிவிடு. அத பார்த்தாவது..`

அந்த தொட்டிலை மேலிருந்து பார்க்க பரிதாபமாகவே இருந்தது. காலியான தொட்டில், இருப்பு கொள்ளாத ஆன்மாவைப் போல. அலைகழிக்க வைக்கும் மெளனம் என்றுமே அதைச் சுற்றி இருக்கும். அவ்வப்போது காற்றில் அது ஆடிக்கொண்டிருந்ததை என்னாலேயே பார்க்க முடியவில்லை. மாசோசான் செட்டியின் மனைவி அன்று அவள் கணவன் வரும்வரை கண்ணீரோடே இருந்தாள்.

மாசோசான் செட்டி வந்தார். இந்த மாதிரி நேரங்களில் போய் முக்கியமாக எதை செய்து கொண்டிருப்பேனெனத் தெரியாது. தேவையில்லாத வேலைகளை விட்டத்தில் செய்துகொண்டிருந்தேன்.

படுக்கை அறை முத்தத்தை சேருமிடத்திலிருந்து ‘பளார்’ என சத்தம் கேட்டது.

நான் இருந்த இடத்திலிருந்து ஒன்றுமே கேட்கவில்லை. சில நிமிட விசும்பல்கள்.அதன் பிறகு வேகவேகமாய் மாசோசான் செட்டி ரயில் நிலையத்துக்கு சென்றதாய் சிலர் சொன்னார்கள்; சிலர் அவர் கடலின் அலையை எதிர்கொண்டு நடந்து கொண்டேயிருந்தார், அதன் முடிவு தெரியும் வரை எனச் சொன்னார்கள்; பொறுமளுடன் சில் முடியாதவர்கள், அவர் பக்கத்து ஊரிலிருந்த பணக்கார மொட்டைக்கிழவியிடம் தன் ஆண்மையை சிறு வயதிலேயே விற்றிருந்தார், அதனாலே அவர் மனைவியும் சேராமல் இருந்தாரெனவும், தற்போது அந்த மொட்டைக் கிழவியுடன் ஆக்ரா பக்கம் சென்று வட்டித் தொழில் செய்து கொழிக்கிறார் என்றார்கள்.

என்ன காரணமெனத் தெரியவில்லை, மாசோசான் செட்டியை அன்றுதான் கடைசியாகப் பார்த்தார்கள். அதன் பிறகு அந்த ஊருக்கே அவர் வரவில்லை.

தன் தொன்னூறு வயதுவரை மாசோசான் செட்டியின் மனைவி அந்த வீட்டிலேயே வாழ்ந்து இறந்து போனார், தன் காதலி அத்தம்மாவுடன்.

**
girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்