தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்
புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எ·ப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.
இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப் போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது. ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை…
புதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான் வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு மீட்டர் கிட்டத்தில் போயிருப்பேன். அதோ கார் ரேடியேட்டரின் குழாய் போல எதோ ஒன்று. எவருடைய காராவது வழியில் பிரேக்டெளன் ஆகி வில்லங்கப்பட்டிருப்பார்களோ… ஆ அது ஒரு நீண்ட கருத்த பல்லி. அப்படியே அந்த மட்டப்பாறைமேல் செத்தசவமாய்ச் சுருண்டு கிடக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு அது நிழலைவிட்டு வெளியே வந்து இப்படி மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதுக்கே தெரிய வேண்டாமா?
பக்கத்திலேயே நொந்து மெலிந்த சில கால்நடைகள் தள்ளாடி ஆலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. பட்டணத்தில் வாகனப்புகைபோல அப்போது புழுதி மேலெழுந்தது. அவை தண்ணித் தொட்டியை அடைந்து வாயை வைத்து அந்த வெந்நீரை வயிறார உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தன. சரியான தாகம் போல. களைத்திருந்த சில பட்சிகளும் கீழிறங்கி வந்தன. தாகசாந்தி பண்ணிக் கொண்டன. பின் மீண்டும் நிழல்தேடிப் பறந்து போயின. அறிவாளிப் பறவைகள். வெக்கையில் இருந்து தப்பிக்க அவை வழிவகை தேடின. மனிதனுக்கு இந்தளவு உஷார் கிடையாது. நானே வெந்துக்கிட்டிருந்தேன். மணி ஒன்பதரைதான் ஆகிறது…
என் வண்டிக்குத் திரும்புகிறேன். மாட்டுக் கூட்டத்துள் தடுமாறியபடி ஒரு காளைமாடு முட்டிமோதி ஊடறுத்து வந்தது. ஒட்டலும் உரசலும் மறுத்தலும் முரண்டுதலும் இடித்து நகர்த்தலுமாய் ஒரே களேபரம். கொம்புச்சண்டையாகி ரகளையாகி விடுமோ என்றிருந்தது. ஆடி அசைந்து தள்ளாடி அவை தண்ணீர்த் தொட்டியை நெருங்கின. கால்பந்தாட்டம் முடிந்தபின் ரசிகர்கள் வளாகத்துக்குள் நுழைகிறதைப் போல அவை ஒருசேர தொட்டியை எட்ட முயன்றன. எதிர்பார்க்கவேயில்லை. தொட்டியின் துருப்பிடித்த இரும்புக் கால்கள் சட்டென நொறுங்கின. தோட்டதில் உட்காரும் பெரிய பெஞ்சை மடித்தாப் போல தொட்டி சரிந்தது. உள்ளேயிருந்த பழுப்புத் தண்ணீர் சரிந்து மண்தூசியில் குட்டையாய்த் தேங்கியது. காற்றாடி இன்னும் சுழன்று கொண்டிருந்ததால், உடைந்த தண்ணீர்க் குழாயில் இருந்து இன்னமும் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தேன்.
சோனி மாடுகள் எல்லாம் அசந்துபோய் அந்தத் தரையை வெறித்தன. சட்டென்று விடுபட்டாப்போல அவை காலை உதறி தூசியெழுப்பி தெற்கு நோக்கி நடையிட்டன. எங்காவது நிழலோ தீவனமோ தேடி அவை புறப்பட்டிருக்கலாம்.
என்னிடம் அந்தத் தொட்டியைச் சரிசெய்ய கருவிகள் இல்லை. அந்த சோலி காத்திருக்க வேண்டியதுதான். சுவரில் ஏறி அந்தக் குழாயை நேராக்கி வைத்தேன். இதாவது மேலும் சேதமடையாமல் மிஞ்சட்டும். அடுத்த வேலை இருந்தது. கிளம்பினேன்.
—
ரே பான் ஒண்ணு ஒண்ணரை குப்பி ரம் செவ்வாய் மாலையில் குடித்துத் தீர்த்திருந்தான். கீழ்ப்பக்கம் முக்னித் நிலையத்தில் ரே பான்தான் பொறுப்பாளன். புதன் காலையில் கிடங்கின் கட்டாந்தரையில் அவன் படுத்துருண்டு கொண்டிருந்தான். அதிர்ஷ்டம்தான். அவன் கூரையடியில் இருந்தான். இல்லாட்டி அந்தக் கருத்த பல்லிபோல அவனும் வெயிலில் வெந்து விரைத்துத் துவண்டிருப்பான். குறட்டை. வாயிலிருந்து கெட்டியான கூழாய் வழியும் ஜொள்ளு.
பிறகு அந்தக் காலைநேர உஷ்ணம் நாற்பதுக்கு எகிறியது. மனுசனால் பழக்கப்படாத ஒரு ஓட்டகமந்தை பதினேழாவது காற்றாலை நோக்கி நடையிட்டது. முள்ளுக்காட்டு வழி. துருப்பிடித்த காலித் தொட்டிதான் அவற்றுக்கு வாய்த்தது…
பாலைவனப் பிராணிகள். தண்ணீரை அவை மோப்பம் பிடிக்க வல்லவை. ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை. கடும் தாகத்தில் அவை வந்திருக்கலாம். வெப்பசூழலில் ஒட்டகங்கள் பத்து பன்னிரெண்டு நாளுக்கொருதரம் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பாலைவனத்தின் சுதந்திரமான இந்தப் பிராணிகள் மேலதிக நாள்கூட தாக்குப் பிடித்து வந்திருக்கலாம்.
அடுத்து தண்ணீர் கிடைக்கிற இடம் என்றால் பக்கத்தில் பொறுப்பாளன் வீடு, பதினோரு கிலோமீட்டர் தூரத்தில். உண்ணியேறிய அந்தப் பிராணிகள் சாவதானமாக ரே பானின் கீழ்ப்பக்கக் குடியிருப்பு நோக்கி வாகனத்தடத்தைப் பார்த்துக் கிளம்பின. அப்புறமாய் நான் அந்த மூன்றுகுளம்பு பாதத் தடங்களை கவனித்தபோது நினைத்தேன். இருபதும் அதற்கதிகமாகவும் ஒட்டகங்கள் வந்திருக்கலாம். வரைபடமோ தெருவில் வழிகாட்டும் அடையாளங்களோ இல்லாமல் அவை போகுமிடம் அறிந்தவை. தேவை தண்ணீர். அந்த அவசரமே அவற்றுக்கு வழி காட்டிப் போக வல்லதாய் இருக்கலாம்… நீங்கள் இதை மறுக்கலாம்!
குடிபோதைத் தூக்கத்தில் இருந்து ரே பான் கண் விழித்தான். எப்பிடியோ எழுந்து உட்கார்ந்து விட்டான். வியர்வை பெருகி சட்டையே நனைந்திருந்தது. முகத்தில் கண்களில் உதடுகளில் என்று டஜன் கணக்கில் ஈக்கள் வந்து மொய்த்தன. தகரக்கூரையில் இருந்து வெல்டிங் செய்கிறாப் போல வெப்பம் இறங்கிக் கொண்டிருந்தது. உலர்ந்துபோன எலும்புத் துண்டாய் அவன் தொண்டையே வறண்டுகிடந்தது.
மூலையில் சில பெட்டிகள். அவற்றில் சில வாகனஉதிரி பாகங்கள், சமையலறையில் கழுவ உதவும் உபகரணங்கள், மற்றும் கொண்டுவரப்பட்ட சில சாமான்களும் சுவரோரம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்தப் பக்கமாய் மூப்பது நாற்பது பெரிய எண்ணெய்ப் பீப்பாய்கள். மோட்டார் ஆயில். ரசாயனப் பொருட்கள். சில காலியாகவும் இருந்தன. அவரச ஆத்திரத்துக்கு அந்தக் காலி பீப்பாய்களில் தண்ணீர் எடுத்து வருவதும் உண்டு. அடிக்கடி அவன்போய்க் கொண்டு வருவான்.
ரே எழுந்து வாசலை நோக்கித் தள்ளாடிப் போனான். தலைபாரம். முந்தைய ராத்திரியின் போதை இன்னும் விலகவில்லை போல.
பிற்பாடு நான் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, அப்போதுகூட அவன் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை. பதட்டம் விலகாமல் அவன் சொன்னது சரியாக விளங்கவில்லை… கிடங்கின் கதவை அவன் திறக்கிறான். நேரே முகம்நீட்டும் பயங்கரமான பாலைவன ஒட்டகம். அதன் பிளந்த, எச்சில் ஒழுகும் உதடுகள். தடுமாறும் காலுடன் பின்வாங்கினான். டஜனோ அதற்கு மேலோ ஒட்டகங்கள் ஒடுங்கிய வாசலுக்குள் பிதுக்கிக்கொண்டு புகுந்தன. முதலில் அவை அவனை சட்டைசெய்யவில்லை. அவனுக்குப் புரிந்தது, எல்லாப் பிராணியும் இப்பிடி உள்ள புகுந்தால் கிடங்கின் கதி அதோகதி.
”வெளிய போங்க பேமானி முண்டங்களா… போங்க. போங்க வெளிய!” என்று அலறினான்.
ஒட்டகங்கள் திரும்பி அவனைப் பார்த்து, அசுரவேகமாய் வாசலை மறித்துக் கொண்டு நின்றன. ஒன்றை ஒன்று இடித்துத் தள்ளிக் கொண்டன. விநோதமாய் அவை முனகி ஓலமிட்டன. நீளமான பாம்புபோன்ற அவற்றின் கழுத்துகள் ஆடி ஒன்றையொன்று முட்டிக் கொண்டன. சுவரோரம் அடுக்கி வைக்கப்பப்பட்டிருந்த பெட்டிகளை அவை முட்டித்தள்ளின. கெட்டியான பச்சை எச்சில் முட்டைகளுடன் அவற்றின் வாயில் இருந்து நுரையாய் வழிந்தது. அறையெங்கும் ஒட்டக நாற்றம்.
பான் ஒரே விநாடியில் சுதாரித்தான். அதுகள் உக்கிரப்பட்டிருக்கின்றன, தெரிந்தது. அந்தக் கடுப்பில் அவை எத்தனை ஆபத்தானவை… அதை அவன் விளக்காவிட்டாலும் எனக்குப் புரிகிறது. வெலவெலத்திருந்தான். இந்த பாலை ஒட்டகங்கள் மனுசனின் கைப்பகுதியிலிருந்தும் கழுத்திலிருந்தும் ஒரு பெரிய பட்டாணி அளவு சதையை அப்படியே கடித்து எடுக்க வல்லவை. ஒரு பழைய கதைகூட உண்டு. திமில் சிலிர்த்த ஆண் ஒட்டகத்திடம் ஒரு ஆசாமி மாட்டிக்கிட்டான். வந்த ஆத்திரத்தில் அந்த ஒட்டகம் அவன் நெற்றியையே ஒட்டுமொத்தமாய் ஆப்பிளைக் கடிக்கிறாப் போல கடிச்செடுத்திட்டதாம்.
ஒருக்களித்து மெல்ல அடிவைத்தான் பான். பீப்பாய்கள் பக்கம் போனான். தகரபிரமிட் மேல் ஏறி தடுமாறினான். அந்தநேரத்தில் அந்த இடம்தான் அவனுக்குப் பாதுகாப்பு தர முடியுமாய் இருந்தது… ஆ அதுவே ஒரு கெட்ட கனவின் ஆரம்பம்.
முதலில் அந்தப் டிரம்களின் அதிக உயரத்துக்கு அவன் ஏறிவிட்டான். அப்படியே உட்கார்ந்திருக்கலாம். இந்த மிருகங்கள் வெறுத்துப்போய் அந்த இடத்தைக் காலி செய்து போய்விடும். ஓட்டகத்துக்கு ஏறத் தெரியாது, ஆகவே நமக்கு ஒரு வில்லங்கமுங் கிடையாது. ஆனால் ஒரு பயில்வான் ஒட்டகம் ஒரு டிரம்மை முகத்தின் பக்கவாட்டில் முட்டியது.
மிரண்டுபோய் பான் அடுத்த டிரம்முக்குத் துள்ளினான். வெறிபிடித்த இந்த மிருகங்களை விட்டு எட்டிப் போய்விடலாம். எதிர்பார்க்கவேயில்லை. டிரம் மூடி துருப்பிடித்துக் கிடந்தது, சட்டென்று அவன்பாரம் தாளமாட்டாமல் உள்வாங்கியது. துண்டுதுகளாய் ஆரஞ்சு நிறத்தில் பொடிந்து உதிர்ந்தது. அவனது ரெண்டு காலுமே பொளக்கென்று உள்ளே போனது. உடையுடுத்திக் கொண்டாப்போல அவன் இடுப்புவரை மறைத்து நின்றான்.
ஒருவிநாடி பத்திரமாய் இருக்கிறதாய் நினைத்தான். ஆனால் ஆடிக்கொண்டிருந்தான். நிலைதடுமாறினான். பீப்பாய் அசைந்து உருள ஆரம்பித்தது. அவனால் அதை நிறுத்த முடியவில்லை. உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டு முடங்கிக் கொண்டான். துணிதுவைக்கும் எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டாப் போலிருந்தது. பீப்பாய் முன்பக்கம் உருண்டது. எங்கோ முட்டி துள்ளி எகிறி திரும்ப அந்த பீப்பாய்க் குவியலோடு வந்து சேர்ந்தது.
கலவரப்பட்ட அந்த ஓட்டகமந்தைக்கு நடுவில் அது வளைந்து நெளிந்த பக்கமாய் அப்படியே நின்றது. வெளியே எடுத்த கார் என்ஜின்போல ஒட்டகங்கள் அபார இரைச்சலோடு அடித்தொண்டையில் கத்தின. அவை துள்ளி அந்த பீப்பாயை எத்தின. மகா ஆக்ரோஷமாயிருந்தன அவை. கர்ஜித்தன. என் ஆயுசில் நான் கேட்டதிலேயே கோரமான அலறல் அது, என்றான் பான்.
ஓரத்து இரும்புத் தூண்கள் கட்டுக்கட்டாக அந்த பீப்பாய்மேல் விழுந்தன. உலோக ஜெயில்! மேலும் எண்ணெய்ப் பீப்பாய்கள் முட்டித் தள்ளப்பட்டு அவனைச் சுற்றி விழுந்தன. அரைடன் எடையுள்ள ஒரு ஒட்டகம் நீளமான குழாயைப் பொருத்தியிருந்த பட்டையை உருவி அவனைப் பார்க்க விட்டெறிந்தது. இதனால் மேலும் கலவரப்பட்டும் ஆத்திரப்பட்டும் போயின பிராணிகள்.
நம்ம கதை முடிஞ்சிட்டது, என்றே பான் நினைத்தான். வெச்சி நசுக்கப் போகுது. எத்தித் தள்ளப் போவுது. அல்லது கடிச்சே சாவடிக்கப் போவுது. மவனே பொழச்சிக் கிடந்தா இந்தத் தண்ணியடிக்கிற பழக்கத்தை விட்டுறணும். எப்பிடியாவது பொழைச்சிக்கிட்டா, வேலைக்காராள்கிட்ட நல்லதனமா நடந்துக்கணும்… கிடங்கை ஒழுங்கா பாத்துக்கணும். தண்ணி வசதியை எப்பவும் வெச்சிருக்கணும்… துருப்பிடித்த பழைய அந்த டின்னுக்குள் என்னென்னவோ யோசனைகள், பிரதிக்ஞைகள்! வாழ்க்கை, அவன் வாழ்க்கை, இத்தனை முக்கியமான விஷயமாய் அதுவரை உணர்ந்ததேயில்லை!
ஒருவழியாக விஷயம் அடங்கியது. ஒட்டகங்கள் நிதானப் பட்டன. வெளியேறின. தொட்டியில் நிறைய தண்ணீர் குடித்தன. திரும்ப பாலைவனம் பார்க்க நடையிட்டன. நான் நினைக்கிறேன் – அதுகளின் காரியம் முடிந்தது. கிளம்பிப் போய்விட்டன.
—
புதன்கிழமை மாலைவாக்கில் நான் பானின் இடத்துக்குப் போனேன். வெப்பம் முப்பதுகளுக்குக் கீழே இறங்கி விட்டிருந்தது. வீடு காலியாக இருந்தது. அது ஆச்சர்யமாய் இல்லை. நான் ஒருவனே இங்கே இன்னும் இன்னும் வேலையை உதறிவிட்டுப் போகாதவன். வாசலில் ஜீப் நின்றது. பானைக் காணவில்லை. உள்ளே எல்லாமே காரேபூரேயென்று கிடந்தது, அதுவும் வழக்கந்தான். ரெண்டு மூணு தடவை நான் கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் வரவில்லை. கிடங்கைச் சுற்றி அவன் பேரைக் கூப்பிட்டபடி போனபோதுதான் அந்த அலறல்!
கிடங்கு பற்றி வெளிப்பார்வையில் வித்தியாசமில்லை. டிரம்கள், தூண்கள், வயர்கள், பலகைகள், மற்றும் உலர்ந்த ரத்தம் என்று எங்கும் தெரிந்தது. பிராணிக் கழிவுகள் கிடந்தன. தரையெங்கும் சிதறிக் கிடக்கும் பெட்டி உடைசல்கள். மேகம்போல ஈக்கூட்டத்தின் ஙொய்ய். எ·க்கிரும்புச் சுவர்கள் மோதி வளைக்கப் பட்டிருந்தன. கதவே தொங்கிக் கொண்டிருந்தது. சூறாவளி வந்து போனாப் போல.
”நீங்க வந்ததுல சந்தோஷம்.” பான் டிரம்முக்குள் இருந்து கூப்பிட்டான். ”க்ரிக்கி, சும்மா நின்னுட்டிருக்காதே முட்டாப்பய மவனே, வந்து என்னை வெளிய எடு.” அதே கடுப்பேத்தும் குரல்.
”கால் உடைஞ்சிட்டாப்லிருக்கு. தோள்லயும் வலி. நான் உடம்பே வளைஞ்சி கெடக்கேன்… ஆஆஆஆ!” முனகினான். ”ஆஆஆ.”
”என்னாச்சி?” அவன்முன் குனிந்து கேட்டேன். ”எதும் சண்டை கிண்டை போட்டியா? என்னாது தலைல, ரத்தமா?”
”ம், தக்காளிச்சாறு இல்லை அது” என்றான் அவன்.
”ஆ சரி, சொல்லு என்னாச்சி?”
”துரு… ஆஆஆஆ. கேடுகெட்ட துரு!” என்று முனகினான். சோகக் குரல். ”துரு, அதுதான் பிரச்னை.” கண்கள் சுழன்றன. தாடை துவண்டு மயக்கமானான்.
அப்ப அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. பிறகுங்கூடப் புரியவில்லை.
அவனை என்னால் வெளிக் கொண்டுவர முடியவில்லை. மோதலில் அவன் கால் பிரண்டிருந்தது. அதை மேலும் கெடுத்து விட்டு விடுவேனோ என்று பயமாய் இருந்தது. தோள்பட்டை பொம்மி மேலெழுந்திருந்தது. ஒரு எலும்பு உடைந்து எக்குத் தப்பா கோணிக் கொண்டிருக்கலாம். தலையில் ஆழமாய்க் காயங்கள். வேறிடங்களிலும் அடி பட்டிருந்தது. பட்டணத்தில் உள்ள செவிலி ஒருத்திக்கு ரேடியோவில் தகவல் சொன்னேன். உடனே அவனை அழைத்து வருகிறதாகச் சொன்னேன்.
வாகனத்தில் சாமான் அடுக்கும் வின்ச் மூலம் டிரம்மைத் தூக்கினேன். உள்ளே ரே பான்! எ·ப் -250 மாடல் வண்டி. பின்பக்கமாய் டிரம்மை வைத்தேன். அது உருண்டுவிடாமல் முட்டுக் கொடுத்தேன். அவன் தலைக்கும் உடம்புக்கும் மெத்தை தலையணை என்று வைத்தேன். அவனுக்கு நினைவு திரும்பியதும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தந்தேன். நாற்பத்தியிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மருத்துவமுகாமுக்கு வண்டியை ஓட்டிப் போனேன்.
பெரியவர் டெட் ஹார்பர் டிரம்மை வெட்டும் எந்திரக் கருவியால் ரெண்டு பாதியாய்த் திறந்தார். பானின் காதில் பஞ்சடைத்தோம். எந்திரச் சத்தத்தில் செவிடாகி விடக் கூடாது. தலைக்குமேல் ஈரப் போர்வை போர்த்தினோம். எந்திரத்தில் இருந்து கிளம்பும் தீப்பொறிகள் அவனைச் சுட்டுவிடக் கூடாது. வெட்டி முடித்து அவனை ஒரு மருத்துவப் படுக்கையில் தூக்கி வைத்தோம். வானரோந்துப் பணியில் இருக்கும் மருத்துவரை உடனே அழைக்கப் போனாள் செவிலி. அத்தனை மோசமாய் இருந்தான் அவன்.
வியாழன் புலர்காலை. விமானம் வர நாங்கள் காத்திருந்தோம். அப்போதுதான் ரே பான் தன் கதையைச் சொன்னான். நடக்க முடியாத, அவனால் நடக்க முடியாத கதை. ஆனால் அது நிஜம். அவனது உடைந்த குறுகிப்போன உடம்பே சாட்சி.
அந்த நோயாளிப் படுக்கையை விமானத்தில் ஏற்றியபோது அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் – ”துருதான். மூலப் பிரச்னையே துருதான்…”
—
ரே பான் பின்னால் அந்தப் பகுதிக்கு வரவேயில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்தபின் அவன் குடியை ஏறக்கட்டிவிட்டு தெற்குப் பக்கமாய்ப் போய்விட்டான் என்றார்கள் சிலர். டார்வின் நகரத்துக்கு குடிபோய்விட்டாக சிலர். என்னாச்சி தெரியவில்லை, ஒருவேளை அது தெரியாமலேயே போய்விடக் கூடும். என்றாலும் ஒட்டகங்கள் அவனைப் பார்க்க வந்த நாள்… அதை ஜனங்கள் வெகுகாலம் பேசிக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
>>>
RUST/Charles Maekivi
நம்ம தாஸ்தயேவ்ஸ்கி கூட இதேமாதிரி ஒரு விநோத சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறார். ஒரு மிருகக் காட்சி சாலையில் நண்பனுடன் முதலை ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, நண்பன் வழுக்கி முதலைத் தொட்டிக்குள், திறந்திருந்த முதலைவாய்க்குள் விழுந்து விடுகிறான். வாயைமூடி, முழுங்க முடியாமல் திரும்ப முதலை வாயைத்திறக்கையில் அவன் விலுக்கென்று மேலே வரும்போது அவனது பரிதவிப்பில் அவன் கண்ணாடி துள்ளித் தனியே வெளியே விழும். திரும்ப அவன் உள்ளே போய்விடுவான். நடந்த நிகழ்ச்சியின் நம்பவியலாத் தன்மையில் சட்டென்று தாஸ்தயேவ்ஸ்கி (நான் என்று அமைந்த கதை) விழுந்து விழுந்து சிரிப்பார். ரொம்ப நீண்ட கதை. ஆனால் அவரது பிற கதைகளைப் போல சத்தாய் அது வளம்பெறவில்லை என்று தோன்றியது.
துரு – என்ற தலைப்பை ஒட்டுவதற்குள் வம்பாடு படுகிறார் இந்த ஆசிரியர். அப்படி நிறுத்தியும் அது ரொம்ப சுவாரஸ்யமான தலைப்பாகப் படவில்லை. உரையாடலில் போல இருமுறை தலைப்பை அழுத்துகிறார். குறிப்பிடாமலே புரிந்திருக்கும் அது. பாலைவனத்தில் ஒரு விநோத சம்பவம். வாசிக்கப் புதிதாய் இருந்தது. சார்லஸ் மெய்கிவி கல்வித்துறையில் பணியாற்றுகிறார். மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரைப் புத்தகங்கள், வீட்டுப்பாடத் துணைநூல்கள் என எழுதுகிறார்.
storysankar@rediffmail.com
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23