தொலைதூர வெளிச்சங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

பா.பூபதி


இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றா
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. – நாலடியார்

கல்வியே, வாழ்க்கையின் இன்னல்களுக்கு காரணமான அறியாமை என்ற மயக்கத்தை தீர்க்கும் மருந்து. அம்மருந்தை பிச்சை எடுத்தாவது அருந்தவேண்டும் என நம் பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லாதவர்களுக்கு கூட சில சமயங்களில் கற்க வேண்டிய வயதில் கல்வியிலிருந்து விழகி நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. காலம் கடந்து விட்டதே என வருத்தபடுபவர்களையும், காலதாமதமாக கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்களையும், கரையேற்றும் விதமாக உருவானதுதான் தொலைதூர கல்வி முறை. ஆனால் இந்த கல்வி முறை படிப்பவர்களை பிரச்சனை எனும் கடலில் அழுத்துகிறதே தவிர யாரையும் கரையேற்றவில்லை,

முடிந்தவரை விளம்பரப்படுத்துவது, வரும் மாணவர்களை வளைத்துப்போடுவது என கூட்டம் சேர்பதையே குறிக்கோலாகக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன தொலைதூர கல்வி நிறுவனங்கள். ஒரு புகைப்படம், தேவையான சான்றிதல் நகல்கள், காசோலை இவைகள் இருந்தால் போது உங்கள் கல்வி பயணம் தொடங்கிவிடும். குறிப்பிட்ட தேதியில்தான் நீங்கள் சேர வேண்டும் என்ற அவசியமில்லை தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை மேற்கண்ட மூன்று விசயங்கள் உங்களிடம் இருந்தால் போது, அவற்றை கொடுத்து அடையாள அட்டையை வாங்கிவிட்டால் நீங்களும் மாணவரே! புத்தகம் கண்டிப்பாக உங்களை வந்து சேரும் அதுவரை எப்பொழுதும்போல உங்கள் பணியை நீங்கள் தொடரலாம்.

மாணவர்களை கவர்வதற்காக கவர்ச்சியான தலைப்புகளில் புதிது புதிதாக பாடத்திட்டங்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இவையெல்லாம் யாருக்காவது பயன்படுமா என யாரும் யோசிப்பதில்லை இதன் மூலம் எவ்வளவு மாணவர்களை பிடிக்கலாம் என்பதே அவர்களது குறிக்கோலாக இருக்கிறது. பாடத்திட்டத்தின் தலைப்பில் மயங்கும் மாணவர்கள் வெகுளித்தனமாக ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்பார்கள் “இதை படித்தால் எந்த வகையில் எங்களுக்கு பயன்படும்” இதற்கான பதிலை கல்வி நிறுவத்தை சார்ந்தவர்கள் மனதில் இப்படி நினைத்துக்கொள்வார்கள் “நீங்கள் படித்தால் எங்களுக்கு பணம் கிடைக்கும், அந்த வகையில் பயன்படும்”

வாமன அவதாரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன் மூன்றடி மண் தானே தாராளமாக எடுத்துக்கொள் என்று சொன்னாராம் உடனே பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைந்துபோன மகாபலி மன்னன் என் தலையில் வையுங்கள் என்றாராம். இரண்டடியில் விண்ணையும், மண்னையும் அளக்க முடியுமான என தெரியாது. ஆனால் இரண்டு மணி நேரத்தில் ஒரு புத்தகம் முழுவதையும் உங்களுக்கு சொல்லித்தந்துவிட முடியும். தொலைதூர கல்வியில் நீங்கள் சேர்ந்தால் இரண்டு மணி நேரத்தில் ஒரு புத்தகத்தை சொல்லித்தரும் அற்புதத்தை அனுபவிப்பீர்கள். இது இப்படித்தான், அது அப்படித்தான் என சொல்லித்தருபவர் அடுக்கிக்கொண்டே போவதைப்பார்த்து மகாபலி மன்னன் போல நீங்களும் திகைந்து போவீர்கள். வருடம் முழுவதும் நேரடியாக வகுப்பு சென்று படிப்பவர்களிலேயே பாதிபேர் திறமையற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்க இரண்டு மணி நேரத்தில் ஒரு புத்தகம் முழுவதையும் கற்றுக்கொள்ளும் மாணவர்களின் திறமையின் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. என்ன நடக்கிறது என்பதை பற்றி உங்களுக்கு எந்த வித சுயநினைவும் தேவையில்லை காலத்தை கடத்தினால் போது. குறிப்பிட்ட நாட்கள் கடந்ததும். உங்களுக்கு பட்டம் வந்துவிடும். தேர்வு! அதை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு எழுத தெரியுமா! நல்லது, அது போதும் தேர்வில் நேரம் முடியும் வரை எழுதிக்கொண்டே இருங்கள் நிச்சம் நீங்கள் எழுதியதில் ஒன்று இரண்டு தவிர அனைத்திலும் தேறி விடுவீர்கள். ஒரு சோதனைக்காக கேள்வி தொடர்ப்பாக நான்கு வரிகளை எழுதிவிட்டு தொடர்ச்சியாக ஆறு தன் வரலாறு கூறுதல் என்ற கட்டுரையை எழுதிவிட்டு வந்து பாருங்கள் நிச்சயம் நீங்கள் தேறிவிடுவீர்கள். அவ்வளவு தரமானதாக இருக்கிறது தொலைதூர கல்வி.

வேலைக்கு ஆட்கள் தேவை என நிறுவங்கள் விளம்பரம் கொடுக்கும் போதே சில குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்ட பழ்கலைக்கலங்களில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என குறிப்பிடுகிறார்கள். மற்ற பல்கலைகழகங்களில் நேரடியாக சென்று படித்தவர்களுக்கே மதிப்பு இல்லை என்கிற போது தொலைதூர கல்வியில் படித்தவர்களுக்கு மதிப்பு எங்கே இருக்கிறது. இதில் நாம் கோபப்பட ஒன்றுமில்லை தொலைதூர கல்வியில் படித்தால் நம்முடைய தரம் என்னவென்று நமக்கே நன்றாக தெரியும். எனவே தொலைதூர கல்வியில் பயின்ற மாணவனைக்கண்டாலே நிறுவனங்கள் தொலைதூரம் சென்று விடுகின்றன.

அப்படியானால் தொலைதூர கல்வியில் பயன் இல்லையா! என்றால் இருக்கிறது. திருமனத்திற்கு பத்திரிக்கையில் போடுவதற்காக படிக்கலாம், வீட்டில் சும்மா இருப்பவர்கள் பலன் எதிர்பார்க்காமல் படிக்கலாம் ஆனால் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் கண்டிப்பாக யோசித்த பிறகே இதில் சேர வேண்டும். ஏனெனில் அவர்கள் தொலைதூர கல்வியில் படித்து அதன் மூலமாக ஏதாவது சம்பாதிக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சியில் பண விரயத்தை தவிர வேறெதும் நடக்காது. என்ன படித்தீர்கள் என்று யாராவது கேட்கும் போது சொல்லும் பதிலில் இருக்கும் கம்பீரம் சரி எங்கு படித்தீர்கள் என்ற அடுத்த கேள்வியில் இருக்காது. சற்று சங்கோஜத்துடன் நான் தொலைதூர கல்வியில் படித்தேன் என்பார்கள் ஏனெனில் தொலைதூர கல்விக்கு சமுதாயத்தில் அவ்வளவுதான் மதிப்பு. தொலைதூர கல்வியால் அறிவு வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. வெட்டுவதற்காகவே வளர்க்கப்படும் கறிக்கோழிகளைப்போல, தொலைதூர கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாரிப்பதற்காகவே மாணவர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

Series Navigation

author

பா.பூபதி

பா.பூபதி

Similar Posts