தொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

ரஞ்சித் பெர்னாண்டோ


Read by Manik Sandrasagra at the 112th birth Anniversary Commemorative Meeting of Ananda Coomaraswamy sponsored by the Cultural Survival Trust in association with the Taj Samudra, Colombo on Sunday lOth August 1989.

மேற்கில் புத்தமதம் பாராட்டப்படுவதற்குக் காரணம், அதில் என்னவெல்லாம் இல்லை என்பதால் தான் என்று ஒருமுறை ஆனந்த குமாரஸ்வாமி சொன்னார்; அதே நேரத்தில், ஒரு நூறாண்டுகளாக இந்துமதத்தை ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆராய்ந்திருந்தாலும், அந்த ஆராய்ச்சியைப் பற்றி சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் இந்துமதத்தைப் பற்றி சொல்வதெல்லாம் தவறு என்றே ஆரம்பிக்கவேண்டும் என்றும் சொன்னார். இது ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கும், அந்த நவீன சிந்தனைமுறையில் பயின்ற இந்தியர்களுக்கும் பொருந்தும்.

அதே போல, குமாரஸ்வாமியைப் பற்றியும் சொல்லலாம். அவர் இலங்கையிலும், இந்தியாவிலும் அவர் பாராட்டப்படுவதற்குக் காரணம், அவர் எப்படியெல்லாம் இல்லை என்பதால்தான். அதே நேரத்தில், அவரைப்பற்றி அவரது பிறந்த இடத்தில் சொன்ன விஷயங்களை மறுத்துத்தான் அவரைப்பற்றி சரியான மதிப்பை நாம் செய்யமுடியும்.

குமாரஸ்வாமி இந்தியாவிலும் இலங்கையிலும், ஒரு தேசபக்தராகவும், இந்தியவியல் ஆராய்ச்சியாளராகவும், கலை வரலாற்றாளராகவும், சிறந்த படிப்பாளராகவும், கிழக்கத்தியவியலாளராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். இந்தப் பரவலாக கொண்டிருக்கும் கருத்துக்களின் உண்மையை ஆராய்வதன் மூலம், நம் காலத்தின் மிகச்சிறந்த மனிதருள் ஒருவரைக் கண்டுகொள்ள இயலும்.

குமாரஸ்வாமியின் முதிர்ச்சி பெற்ற பெரும்பான்மையான எழுத்துக்களை ஒரே ஒரு தலைப்பின் கீழ் வைக்கலாம். அதாவது, பாரம்பரியம். இன்று நாம் பாரம்பரியம் என்ற வார்த்தைக்குக் கொண்டிருக்கும் பொருளோ, அல்லது நம் பழக்கவழக்கங்களோ சமூக அமைப்புக்களோ அல்ல. குமாரஸ்வாமியின் பாரம்பரியம், அனாதியான, அகில உலகத் தன்மை கொண்ட பாரம்பரியம். உலகத்தில் தோன்றிய அனைத்து உண்மையான மதங்களுக்கும், இந்த மதங்களால் சீரமைக்கப்பட்ட சமூகங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாரம்பரியம்.

பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான கூறை தன்னுடைய சிறப்பு ஆர்வத்தின் படி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார் குமாரஸ்வாமி – தன்னுடைய திறமைகளுக்கு ஏற்ற ஒன்றை – அதாவது பாரம்பரியமாக கலையை எப்படிப் பார்க்கிறோம் என்பது தான் அது. இவருடைய பார்வை கீழைத் தேசப் பார்வை எனினும், இன்று பழங்காலத்தில் வேரூன்றியுள்ள எந்தச் சமூகமும் , தாம் ஆதிவாசிச் சமூகம் என்பதில் பெருமை கொள்ளும் சமூகமும் மேற்கொள்ளும் பார்வை தான். இந்தப் பாரம்பரியப் பார்வை ஒர் உலகு தழுவிய தன்மை கொண்டது என்பதை , களைப்பே அடையாமல் திரும்பத் திரும்ப அவர் நிரூபணம் செய்யலானார். செவ்வியல் பார்வை என்று இன்று நாம் அழைக்கும் பார்வையை கிரேக்கர்கள் அளிக்கும் வரையில் , ஆனந்த குமாரஸ்வாமி கொண்டிருந்த பார்வைதான் கோலோச்சியிருந்தது என்பதையும் திரும்பத்திரும்ப அவர் அயராமல் ஊர்ஜிதம் செய்தவாறே இருந்தார்.

பிளேட்டோவைப்போலவே, குமாரஸ்வாமியும் தங்கள் தங்கள் காலத்திலே நடந்து கொண்டிருந்த மாறுதல்களுக்கு (முக்கியமாக குமாரஸ்வாமி வெறுத்தொதுக்கும் ‘கிரேக்க அற்புதத்து ‘க்கு) தீவிரமான எதிர்ப்பை தெரிவித்தார். வாழ்க்கைப் பற்றியும் கலை பற்றியும் கிரேக்கர்கள் கண்டுபிடித்த புதிய தவறான இந்தப் பார்வை, பின்னால் ரோமானியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் மத்திய காலங்களில் கிரிஸ்தவ அரசு காலத்தில் மக்களின் மனதிலிருந்து இது சென்றாலும், அதி உத்வேகத்துடன் மறுமலர்ச்சி காலத்தில் தன்னை உறுதியாக ஸ்தாபித்துக்கொண்டது. இதுவே நவீன உலகத்தின் பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் என்று குமாரஸ்வாமி சொல்கிறார்.

பாரம்பரிய சமூகங்களில், பகுத்தறிவுத் திறமை தாண்டி, மனிதன் எப்போதுமே, சுத்தமான உண்மையை அறியும் நேரடியான, உள்ளார்ந்த அறிவை பெற்றிருக்கிறான் என்று கருதப்பட்டான். இதை பாரம்பரிய சார்பு எழுத்தாளரான, கால் பாடான், ‘மற்ற எந்த அறிவும் கொடுக்காத, உடனடி நிச்சயத்தை இந்தப் பார்வை கொண்டிருக்கிறது ‘ என்று குறிப்பிடுகிறார்.

‘நவீன உலகில் நாம் ‘அறிவு முன்னேற்றம் ‘ என்ற கட்டுக்கோப்பில் சிந்திக்கிறோம். அதாவது இயற்கை பற்றிய அறிவைப் பற்றிய கருத்துக்களின் கோவைகளை முன்னேற்றமாக கருதுகிறோம். பாரம்பரிய அறிவின் பார்வையிலிருந்து, சில தனி மனிதர்கள் அறியாமையிலிருந்து பகுத்தறிவு அறிவுக்கு முன்னேற்றம் ஆவதும், காரண காரியம் சிந்திக்கும் பகுத்தறிவிலிருந்து உள்ளார்ந்த அறிவுக்கும் செல்வது தவிர வேறெந்த முன்னேற்றமும் கிடையாது. இந்த அறிவை நிர்ணயம் செய்ய முடியாது. மற்ற எல்லா அறிவுக்கும் மேலே அதுவே அறிவாக அமர்ந்திருக்கிறது.

பாரம்பரியப் பார்வையிலிருந்து பார்த்தால், கிரேக்கர்களின் தவறு, அவர்களது பகுத்தறிவை மட்டுமே மனிதனின் மிக உயர்ந்த குணாம்சமாக உயர்த்திப்பிடித்தது. குமாரஸ்வாமியின் நண்பரான ரெனே குவெனான் (Rene Guenon), ‘வரலாற்றிலிருந்து காணாமல் போகும் அந்தத் தருணத்தில், கிரேக்கர்கள், தங்களால் புரிந்து கொள்ள முடியாததைப் பழிவாங்க, மனித குலம் அனைத்தின் மீதும் தங்களது மன எல்லைகளை திணித்துவிட்டுப் போய்விட்டார்கள் ‘ என்று குறிப்பிடுகிறார். ‘தனி மனித மனத்தின் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒரு உண்மையான அறிவு இருக்கும் என்பதை, கிரேக்கர்களை விட இந்த நவீன உலகம் தீவிரமாக மறுக்கிறது ‘. மேலும், நமக்கெல்லாம் தெரிந்தது போல, பாரம்பரிய பார்வையிலிருந்து, இந்த மன எல்லைகள் குறுகிக்கொண்டே போவது போலவும் தோன்றுகிறது. இது நமது நவீன அறிவுப்பார்வையிலிருந்து, மாபெரும் அறிவு புரட்சியாகத் தோன்றுகிறது ‘

இந்த சின்ன உரையில் இதனைப் பற்றி இன்னும் விரிவாகப் பேச முடியாதென்றாலும், பிளேட்டோவின் கதையை இங்கு குறிப்பிடலாம். பூமிக்குக் கீழ் இருக்கும் ஒரு குகையில் வாழும் மனிதர்கள், பிறந்த நாள் முதலாக அந்தக் குகையை விட்டு வெளியே வராமல், எரியும் நெருப்பு குகைகளின் சுவர்களில் தெளிக்கும் நிழல்களுக்கு மட்டுமே பழக்கப்பட்டு, அந்த நிழல்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து தெளிந்து இருந்தாலும், அந்த குகையைக் கடந்து ஒரு உலகம் வெளியே இருக்கிறது என்பதைப் பற்றி தெரியாமலும், அதனால், அப்படி இருப்பதையே நம்பாமலும் இருப்பவர்களைப்பற்றிய கதை ஒன்றை பிளேட்டோ சொல்கிறார்.

பிளேட்டோ போலவே குமாரஸ்வாமியும், இந்த மனிதர்களைப்போலவே நாமும் இருளில் இருக்கிறோம் என்று நம்மிடம் உணர்த்த விழைகிறார்; நமது முன்னோர்கள் அறிந்ததும், புரிந்ததுமான இந்த இன்னொரு உலகத்தின் விஷயங்களின் ஒளியில் நாம் சிந்திக்க வேண்டுமென விழைகிறார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டுக் காட்டுவதுபோல, நவீன, பாரம்பரிய எதிர்ப்பு சமூகங்களில் கருத்தாக்கங்கள் எல்லாம் மனிதன் தன்னுடைய பகுத்தறிவினால் உருவாக்கியவை என்பதையும்,அதனால் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கருத்துக் கோவைகள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுக்காட்டுகிறார். மறுபக்கம், பாரம்பரிய சமூகங்களில், காலந்தோறும் நிலைத்து நிற்கும் நிரந்தர கருத்துருவாக்கங்கள் (தெய்வீக அல்லது காண்பிக்கப்பட்ட கருத்துக்கள் ideas of divine origin and revealed ) அடிப்படையில் உருவான சமூகங்களில் சமூகத்தின் எல்லா குணாம்சங்களும் தீர்மானிக்கப்பட்டவை என்பதையும் காட்டுகிறார். குமாரஸ்வாமியின் எழுத்துக்களில் அடிக்கடி வரும் ஒரு கருத்து, கலையை பாரம்பரிய பார்வைகொண்டு பார்ப்பது என்பது. ஐரோப்பிய கலையை குறிப்பிடும்போது, கிரேக்க ரோமன் கலையும், மறுமலர்ச்சி கலையும், எல்லா நவீன ஐரோப்பியக் கலைகளைப் போலவும், மண்ணிலிருந்து வேரிட்டு -குறிப்பிட்ட காலத்துடன் , இடத்துடன் சம்பந்தப் பட்டு : மொ பெ – உந்தப்பட்டதாகவும், அதனைச் சார்ந்த தத்துவங்கள் போலவே மனித மூலத்திலிருந்து உற்பத்தியானவை என்றும், ஆனால், பாரம்பரியக் கலை, பாரம்பரிய தத்துவவியலைப்போலவே மெடாபிஸிகலாகவும், ஆன்மீக குணாம்சத்தோடும், தெய்வீக மூலத்தோடும் இருக்கின்றன என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெரிய புத்தகமான ‘மத்தியகால சிங்களக் கலை ‘ (Medieval Sinhalese Art) ஆரம்பகால புத்தகம். அதில் அவர் இந்த இரண்டு பார்வைகளுக்கிடையேயான முரண்பாட்டை முழுதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்த முரண்பாடான பார்வைகள் பற்றிய கருத்து அவரது பின்னாளைய முக்கிய எழுத்துக்களின் அடிப்படையாக இருக்கிறது. அவரது ஆரம்பகால எழுத்துக்களில், மாபெரும் இந்தியாவின் பாரம்பரியக் கலைகள் பற்றிய ஆழமான புரிதல் இருந்ததைப் பார்க்கிறோம். மதத்தின் உண்மையான பொருளைப்பற்றிய குறிப்பிடத்தகுந்த புரிதலோடு இதைச் செய்கிறார். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் அவரது நவீனத்துவ மனச்சாய்வு, அதன் விளைவு, இவை அவர் பின்னால் வெறுத்து ஒதுக்கிய படிப்போடு – இங்கிலாந்தில் பெறப்பட்ட படிப்போடு – தொடர்புடையவை. ப்ரெஞ்ச் மெடாபிஸியனான (அப்பாலைத் தத்துவவாதி) ரெனே குவெனான் அவர்களோடு தொடர்பு ஏற்பட்டதன் பின்னர், குமாரஸ்வாமியின் எழுத்துக்கள் ஆணித்தரமாகவும், தெளிவாகவும், அழுத்தமாகவும் பக்குவப்பட்டு வெளிப்பட்டன.

உலக மதங்களைப் பற்றிய அகிலப்பார்வை கொண்டு நாம் உலக மதங்களையும், பாரம்பரியம் பற்றிய உண்மையான புரிதலையும் கொண்டு இன்றைய உலகை அணுக நேரும்போது, ரெனே குவெனான், ஆனந்த குமாரஸ்வாமி இருவரும் இந்த நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளின் பெரும் முக்கியத்துவம் கொண்ட சிந்தனையாளர்களாய்த் தனிப்பட்டுத் தெரியவருவார்கள். அவர்களைன் சமகாலத்தவருக்கும் , இவ்விருவருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இவ்விருவரின் தத்துவத்தை அடிப்ப்டையாய்க் கொண்டு பல இயக்கங்கள் இன்று உலகில் இயங்குகின்றன. Perennial Philosophy – என்றைக்குமான தத்துவம் என்ற பெயரில் இது நம் குழப்ப உலகின் பல நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளது.

ஆனந்த குமாரஸ்வாமியை வெறும் கலை வரலாற்றாசிரியர் என்றோ, புகழ்பெற்ற கீழைத்தத்துவ ஆய்வாளர் என்றோ புரிந்து கொள்ள முயன்றால், இதே பெயரிட்டு அழைக்க வல்ல மற்றவர்களிடமிருந்து எவ்விதம் இவர் வேறுபட்டிருக்கிறார் என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் பாரம்பரியச் சமூகங்களின் கலையையும், வாழ்வையும், மேல்திசை நோக்கிலிருந்து ( ‘ அவநம்பிக்கை கொண்ட , பரிணாமப் பார்வை கொண்ட அணுகுமுறை ‘ என்பது குமாரஸ்வாமியின் சொல்.) பார்த்தவர்கள். பாரம்பரியத்தை அதன் பார்வைகள் கொண்டே தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது குமாரஸ்வாமியின் பார்வை. இதைப் புரிந்துகொண்டால் தான் நாம் குமாரஸ்வாமியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

நிலப்பிரபுத்துவ – படி நிலை கொண்ட ஆனால், பாரம்பரிய அப்பாலைத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியச் சமூகங்கள், இன்று போற்றுதலுக்குள்ளாகும் சமத்துவ சமுதாயம் என்று சொல்லப்படுபவற்றைக் காட்டிலும் சிறப்பானவை என்பது அவர் பார்வை. பிளேட்டோவைப் போலவே , குமாரஸ்வாமியும் ஜனநாயக அரசு மிக மோசமான அரசமைப்பு என்று எண்ணினார். மற்ற பொருளாயத அமைப்பையும் அவர் சிலாகிக்க வில்லை. சாதியம் , அரசதிகாரம் என்பவற்றில் அவர் காட்டிய உற்சாகம், வெறும் உணர்ச்சி பூர்வமானதல்ல. ஆன்மீகக் குருத்துவத்திற்கும், லெளகீக அதிகாரத்திற்குமான மிக ஆழமான உறவைத் தெளிவாய்ப் புரிந்து கொண்ட நிலையில் எழுந்தது அவருடைய இந்தப் பார்வை. இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மேற்கொண்ட பாதைகள் அவருக்கு உவப்பாய் இருந்திருக்காது. ஆனால் இது தவிர்க்க முடியாதது என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார்.

தொடக்கத்திலிருந்தே மேற்கு, கீழைத்தேசங்கள் மீது செலுத்திய செல்வாக்கை அவர் கண்டனம் செய்து தான் வந்திருக்கிறார், இதனால், சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசீயத் தலைவர்களில் ஒருவராக அவர் காணப் பட்டதும் உண்டு. ஆனால் இங்கும் மிக முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் ஏகாதிபத்தியம்பற்றியோ, மக்களின் மீதி அன்னியர் அரசாட்சி என்பதைப் பற்றியோ கவலை காட்டவில்லை. மாறாக, பாரம்பரிய சமூகங்களில் இவை ஏற்படுத்தும் ஒழுங்குக் குலைவினால் புனிதம் அகன்று போனதைக் கண்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எந்த மதிப்பீடுகளைக் கொண்டிருந்தனவோ அவற்றை அவர் வெறுத்தார், ஆனால், பாரம்பரிய பிரிட்டன் கொண்டிருந்த மதிப்பீடுகள் கீழைத்தேய மதிப்பீடுகள் போலவே மதிக்கத் தக்கவை என்றும் கருதினார்.

முடிவாக , மதிப்பிற்குரிய ஆங்கிலேய கலைஞர்-தத்துவவாதியும் , குமாரஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான எரிக் கில் அஞ்சலி செலுத்திய வார்த்தைகளைக் குறிப்பிடுவது பொருத்தமாய் இருக்கும் :

‘ நான் ஒரு மாமனிதரின் செல்வாக்கு குறித்து மிக நன்றியுடையவனாய் இருக்கிறேன்- அவர் தத்துவவாதி-மதத்தத்துவ இயலாளர் ஆனந்த குமாரஸ்வாமி. மற்றவர்கள் வாழ்க்கை பற்றியும், மதம் பற்றியும் , மனிதனின் செயல்பாடுகள் பற்றியும் உண்மைகளை எழுதியுள்ளனர். மற்றவர்கள் தெளிவான ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். சிலர் கிறுஸ்துவத் தத்துவ ஞானத்தைப் புரிந்துள்ளனர். பிற சிலர் இந்துமதம், பெளத்தம் பற்றிய ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காமம் தோய்ந்த சிற்பங்களின் , ஓவியங்களின் முக்கியத்துவம் என்னவென்று மற்றவர்கள் புரிந்துள்ளனர். மற்றவர்கள் நேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அன்பாகவும், கருணையுடனும் வாழ்ந்துள்ளனர். ஆனால் இந்த எல்லாமே ஒருங்கிணைந்த ஒருவரைக் காண இயலாது. அவருடைய சீடன் என்று நான் என்னைச் சொல்லிக் கொள்ள மாட்டேன் . அது அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும். ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல முடியும்: ஆனந்த குமாரஸ்வாமியைத் தவிர ,வேறு எந்த எழுத்தாளரும், வாழ்க்கை பற்றியும், மதம் பற்றியும், கருணை பற்றியும் இவ்வளவு தோய்ந்த உண்மையை , இவ்வளவு அறிவும். புரிதலும் கொண்டு எழுதிவிடவில்லை . ‘

http://kataragama.org/research/primordial_tradition.htm


ஆனந்த குமாரஸ்வாமியின் மேற்கோள்கள்

‘நாம் நாட்டுப் பாடலைப் ‘பாதுகாக்கிறோம். ‘ ஆனால் அந்த நாட்டுப் பாடல்கள் உருவான ஒரு வாழ்க்கை முறையை அழிக்கிறோம். மியூசியம் தோறும் நாம் அந்தப் பாரம்பரிய வாழ்க்கையைக் காட்டுவதில் பெருமைப் படுகிறோம், ஆனால் அந்த வாழ்க்கையை வாழ வொண்ணாத வாறு நாம் செய்து விட்டோம். ‘

‘Am I my Brother ‘s Keeper ? ‘ New York, Asia Press 1947

‘ எண்ணற்ற மக்களின் திருப்தியை , நம் கலாசாரம் கொண்டு ஒரே தலைமுறையில் நாம் அழித்துவிட முடியும். உள்ளூர்ச் சந்தையில் எண்ணிக்கையில் பெரிதான உற்பத்தியின் முன்னால் பொறுப்புள்ள கலைப் படைப்பாளி செயல் பட முடியாது. அமைப்புகளின் ஊடே , ஒரே தரத்திய பொருள் உற்பத்தியின் முன்னே கலைஞனின் கலை துவம்சம் செய்யப்பட்டு , கலைஞன் ‘வேலை ‘ தேட நிர்ப்பந்திக்கப் படுகிறான். வாழ்க்கையைக் காட்டிலும் வியாபாரம் முக்கியமாகியது. தொழில்மயமாக்கப் பட்ட உலகில் பாரம்பரிய சமூகம் இணைகிறது. மேலை நாடுகள் பொருளாதார அரசியல் காரணங்களுக்காக் வெறுக்கப் படுவது ஒரு புறம். இதைக் காட்டிலும், ஆன்மீகக் காரணங்கள் மேற்கு மீதுள்ள வெறுப்புக்குத் தாமே அறியாமல் காரணமாகின்றன. ‘

Christian and Oriental Philosophy of Art 1943

சிங்கள மக்கள் 18-ம் நூற்றாண்டில் இருந்ததைக் காட்டிலும் இப்போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்பதே னெ கருத்து. கலாசார வளர்ச்சி என்பது, புதிய ஆசைகளை உருவாக்குகிறது. இந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக மனிதன் மேலும் கஷ்டப் படவேண்டும். ஆசைப் பூர்த்திகளின் எண்ணிக்கையல்ல நம் மகிழ்ச்சியை நிர்ணயிப்பது. மாறாக, ஆசைகளின் தரம் என்ன ? இது தான் நம் முன்னேற்றத்திற்கு அளவுகோலாய் ஆக வேண்டும். இன்றைய சிங்கள ரசனையை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால் , அப்படியொன்றும் முன்னேற்றம் நடந்ததாய்த் தெரியவில்லை. எண்ணிக்கையும் , பல்வேறு பொருட்களும், புதிய பொருட்களும் மனமகிழ்வின் அடையாளம் அல்ல.

Mediaeval Sinhalese Art 1908

‘ பாரம்பரிய ‘காட்டுமிராண்டி ‘ வாழ்க்கை முறை ‘அறிவுபூர்வமானதல்ல ‘ என்று நமக்குத் தோன்றலாம். நம் நடைமுறைக்கு ஒவ்வாததாய் நமக்குத் தோன்றலாம். தெய்வீகம் என்று எண்ணம் கொண்ட பாரம்பரியப் புரிதல்கள் நம் லெளகீகத்துடன் ஒத்துப் போகாதது என்றும் தோன்றலாம். அவனுடைய வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ளாத நம் அறியாமையைக் காட்டிலும் , காரண காரியங்கள் அறியாத அவன் அறியாமை ஒன்றும் பெரிதல்ல. ‘

Primitive Mentality 1939

இன்று மியூசியம்களில் பாதுகாக்கத் தகுதி வாய்ந்தது என்று கருதப் படும் கலைப் பொருட்களை நான் பார்க்கிறேன். இவற்றில் பல மிகச் சாதாரணமாய்க் கிடைத்தவையே. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பி மெற்கொள்ளும் வேலையைச் செய்து தன் சம்பாத்தியத்தைப் பெறுவது என்ற லட்சியம் நிறைவேறிய ஒரு சமூகத்தைத் தான் நாம் பண்பட்ட சமூகம் எனக் கூற முடியும். வேலைகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப் பட்ட சமூகத்தைத் தான் நாம் இப்படி இனங்காணமுடியும். இதுதான் ‘ஸ்வதர்மம் ‘ . நான் எந்த புதிய தத்துவத்தையும் ஸ்தாபிக்க முயலவில்லை. எந்தப் புதுச் சிந்தனைப் போக்கையும் தொடங்கவில்லை. நான் சொல்ல விரும்பியதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது, என்று சொன்ன ஆந்ரே ழீட்-உடன் நான் உடன் படுகிறேன். ஹெராக்லிடஸ்-இன் கூற்று: ‘வார்த்தை எல்லோருக்கும் பொதுவானதே. எல்லாச் செய்ல்பாடுகளின் உந்துசக்தியை அறிவதே மேலான அறிவு. ‘ ஜெரெமியாவின் வாக்கே என் வாக்கும்: ‘ மனிதக் கலாசாரம் முழுமையும் ஆன்மாவின் ஒரே மொழியின் வேறு வேறு வெளிப்பாடுகளே. மொழி வேறுபாட்டைக் கடந்து ‘ஒரு பொதுவான சொல்லாடலின் அகிலம் ‘ இருக்கவே செய்கிறது. ‘

After dinner speech on the occasion of his 70th birthday 1947

***

Series Navigation