தை மகளே வருக! தைரியமே தருக.

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail. sethumalar68 yahoo.com

தரணி எங்கும் மலர்ச்சியுற
தற்குறிகள் வீழ்ச்சியுற
தன்னலத்தார் கீழ்மையுற
தரமற்றோர் தாழ்ச்சியுற
தைமகளே வருக! தைரியமே தருக!

பாடுபடும் பாட்டாளி
பண்பான தொழிலாளி
பாரினையே புரக்கின்ற
பாரிலுயர் உழவர்களும்
பாங்குடனே உயர்வு பெற
தைமகளே வருக! தைரியமே தருக!

பிறருழைப்பைச் சுரண்டி வாழும்
பித்தர் மன எத்தர்களும்
பிழைபடவே எண்ணுகின்ற
பேடி மன வீணர்களும்
பேதை மனங்கொண்டோரும்
பேதங்கள் வளர்ப்போரும்
பேதலித்து ஒழிந்திடவே
தைமகளே வருக! தைரியமே தருக!

பிறர் மனதை வருத்துகின்ற
மானமிலாக் கோழைகளும்
பிரிவினையே பேசுகின்ற
பிற்போக்கு வாதிகளும்
பொல்லாங்கு பேசுகின்ற
பொல்லாத மனிதர்களும்
சொல்லாமல் திருந்திடவே
தைமகளே வருக! தைரியமே தருக!

கள்ள மனம் படைத்தோரும்
கபடு சூது உடையோரும்
கள்ளுண்டு களிப்போரும்
காமவெறி பிடித்தோரும்
கடமைகளை மறந்திங்கு
பொறுப்பின்றித் திரிவோரும்
காலிகளும் கூலிகளும்
கபட வேட தாரிகளும்
காலத்தைக் கடத்துகின்ற
கலிகாலச் சகுனிகளும்
காலத்தினால் மனம்மாறி
நல்வழியில் சென்றிடவே
தைமகளே வருக! தைரியமே தருக!

பணத்தாசை பிடித்தோரும்
பண்பு கெட்ட குடிலர்களும்
அமைதியைக் கெடுக்கின்ற
அன்பில்லா வம்பர்களும்
கொடிய மனத்தோரும்
கொடுமனக் கூனிகளும்
சொல்லாமல் திருந்திடவே
நல்லோரை எல்லோரும்
எந்நாளும் கொண்டாட
தைமகளே வருக! தைரியமே தருக!

நாட்டிற்கு உழைக்கின்ற
நன்மனத்தார் நன்மையுற
அன்புடையோர் அனைவருமே
அகிலத்தில் பெருகிவர
அன்பும் அமைதியுமே
அகிலத்தில் பெருகிடவே
போரும் பூசலுமே
பூமியில் அகன்றிடவே
மனித குலம் என்றென்றும்
மாண்புற்று மகிழ்ச்சியுற
தைமகளே வருக! தைரியமே தருக!

இனிமை வர இளமை வர
இளைஞர்கள் ஏற்றமுற
எளிமை வர ஏற்றம் வர
ஏழைகளின் வாழ்வுயர
செல்வம் வர செம்மை வர
சேர்ந்திருப்போர் நன்மைபெற
நன்மை வர நலமும் வர
நல்லோர்கள் பெருகிவர
பண்பு வர படிப்பு வர
பாரிலுள்ளோர் ஏற்றமுற
அன்பு வர அருளும் வர
அகிலமெலாம் மேன்மையுற
கல்வி வர கருணை வர
கலக்கமிலா வாழ்வு வர
தைமகளே வருக! தைரியமே தருக

Series Navigation