தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

பெஞ்சமின் லெபோ


அன்புடையீர்!

வணக்கம்.
நண்பர் தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை படித்தேன், படி தேன் குடித்தது போல் சுவைத்தேன். உதிரிப்பூக்களை எடுத்து அழகிய மாலையாய்த் தொடுத்திருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
புலமைக் காய்சலையும் கவிஞர் உரிமத்தையும் இணைத்த பாங்கு அருமை!

ஆங்கில இலக்கியப் புலத்துள் நுழைந்து கூறிய கருத்துகளும் பொருத்தமானவை. ஆதலால் அவை பெருத்த பாரட்டுக்குரியனவே!
ஆங்கிலப் பெருங் கவிஞர்களில் ஷேக்ஸ்பியரை முந்த எப்படி ஒருவர் இல்லையோ அதே போல் கால இட வழு அமைப்பதிலும் அவரை அடிக்க ஆள் இல்லை என்பதை ஆங்கில இலக்கிய வல்லுநர்கள் நன்கறிவர். ஆகவே அவரைத் தம் கட்டுரையில் நண்பர் சுட்டிக் காட்டியதும் நன்றே!

குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்குத் தண்டதமிழ்ச் சாத்தன், கண்ணகி கோவலன் கதையைக் கூற, ”சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என அடிகள் உரைக்கிறார். உடனே சாத்தனார் வெகுண்டெழுந்து “நான் சொன்ன கதையை வைத்து நீ என்ன காவியம் எழுதுவது! நானே எழத மாட்டேனா? வக்கில்லையா எனக்கு” என்று கூறவில்லை! மாறாக, திறந்த மனத்தோடு பரந்த உள்ளத்தோடு, “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” என்று உரைக்கிறார். சங்க காலத்தே நிலவி இருந்த இந்தப் பண்பு, சிலப்பதிகாரத்திலும் வாழ்ந்திருந்த இப்பண்பு பிற்காலத்தில் குறிப்பாகக் கம்பர் காலத்திலிருந்து மாறிவிட்டது. கம்பனுக்கும் அவ்வைக்கும் கம்பனுக்கும் ஒட்டக் கூத்தனுக்கும் நிலவியதாகச் சொல்லப்படும் புலமைக் காய்ச்சல்கள் தமிழுலகம் நன்கறிந்தவையே. அவர்கள் காலத்திலாவது புலமை இருந்து அதன் அடிப்படையில் காய்ச்சல் இருந்தது. ஆனால் இன்று புலமையே இல்லாமல் வெறும் காய்ச்சல் மட்டுமே நின்று நிலவுகின்ற நிலையில், தேவமைந்தன், “தமிழுலகைப் பொறுத்த அளவில் புலமைக் காய்ச்சல் ஒருவருக்கு வர இவ்வளவு வலிமையான காரணிகள தேவையில்லை. ஒருவரின் சமயச் சார்போ, ஒருமை பன்மை மயக்கமோ, மரபியல் முரணோ போதுமானவை.” என்று குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு உண்மையே!

அதுவும் இக்காலத்தே பூத்துக்குலுங்கும் தமிழ் வலைப்பூக்களில் (blogs) ஒருவருக்கொருவர் முரண்பட்டு, உள்ளபடி உண்மைப் பெயரைக் குறிப்பிடாமல், நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி முகவிலிகளாய் (annonym, annonymous) ஒருவரை ஒருவர் சாடி கும்மி அடிப்பதும் கும்மி கும்மி அடிப்பதும் தொடர்கதைகளாகிவிட்டன. திரைப்படப் பாடல்கள் வரை தம் கட்டுரையை நீட்டிய நண்பர் இதனையும் சுட்டிக் காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மற்றவர்களைப் போல் எடுத்தோம் எழுதினோம் என்று இல்லாமல் ஆராய்சிப்பணி போலவே இங்கும் தமக்கு உதவிய நூல்களைப் பட்டியல் இட்டுக் காட்டி இருப்பது தேவ மைந்தனுக்ககே உரிய இனிய பண்பு. எப்படி, உதவிய நண்பர்களைச் சுட்டிக் காட்டுவது நன்றி பாராட்டும் செயலோ அது போலவே உதவிய நூல்களையும் சுட்டிக் காட்டுதல் நன்றி பாராட்டும் செயலே!

ஆக அருமையான கட்டுரை படைத்த அன்பர்க்கு இதயங்கனிந்த பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

அன்பன்
பெஞ்சமின் லெபோ
சர்சல் (பிரான்சு)


benjaminlebeau@yahoo.fr

Series Navigation