துரோகிக்கு மிகவும் நன்றி

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,


வஞ்சித்த சினேகமொன்றினை
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்

கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று

எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை

நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்

வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்

சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்

இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி


-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி – ‘நாம்’ மலேசிய காலாண்டிதழ் ஜனவரி – மார்ச் 2009
mrishanshareef@gmail.com

Series Navigation