தீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே ?

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதா பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும், டான்ஸி நிலம் வாங்கிய வழக்கிலும் குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை இழுத்தும், தளர்த்தியும், எப்படியாவது சட்டத்தின் நெளிவு சுளிவுகளுக்குள் நுழைந்து தப்பி விட வேண்டியது என்பது தான் ஜெயலலிதாவின் நோக்கமாய் இருந்ததே தவிர , நேராய் வழக்கைச் சந்தித்து அதை ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் இருந்ததில்லை. இப்போதும் கூட இந்த வழக்கின் தீர்ப்பைச் சார்ந்து தான் , முதலமைச்சர் பதவி ஏற்பு என்ற ஒன்று – அது என்ன தான் வெறும் சம்பிரதாயமே என்றாலும் – நிகழ முடியும் என்ற ஒரு உண்மையினால் தான் இந்த வழக்கு இப்போதாவது முற்றுப் பெற்றிருக்கிறது. இல்லையென்றால் இன்னமும் இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்.

நான் சட்டம் படித்ததில்லை. பொதுப் புத்தியும், நடந்த நிகழ்ச்சியைப் பின்பற்றி தவறுகள் நடந்திருக்கலாம் என்று எல்லா பொது மக்களைப் போலவே நானும் எண்ணமிட்டேன். இப்போது கூட தவறு நடக்கவில்லை என்று சொல்லப் படவில்லை. இந்தத் தவறு சட்டரீதியாய்த் தண்டிக்க முடியாத ஒன்று என்று தான் தீர்ப்பு உணர்த்துகிறது.

பிளஸெண்ட் ஸ்டே ஹோட்டலில் விதிமுறைகள் மீறிக் கட்டப் பட்டிருப்பது நேரடியாய் ஜெயலலிதா சம்பந்தப் பட்ட விஷயமாய் இருந்தாலும் கூட , அதிகார பூர்வமாய் நடந்த ஒரு தவறு – நல்லெண்ணத்தினால் கூட இருக்கலாம் — என்று சொல்லலாம். இந்தத் தவறின் மூலமாக அவர் லாபம் அடைந்திருந்ததாய் மிக வலுவான சான்றுகளோடு நிரூபித்தல் சிரமம். . வருவாய்க்கு மீறிச் சொத்துச் சேர்த்த வழக்கில் ஆமாம், ஜெயலலிதா வருவாய்க்கு மீறிச் சொத்துச் சேர்த்தது உண்மை தான் என்று தீர்ப்பு வந்தால் கூட இந்த இந்தக் காரணங்களால் இந்த இந்தத் தொகைகள் எந்த கால கட்டத்தில் அவரிடம் வந்து அடைந்தன என்பது நிருப்பிப்பதும் கடினம். சாட்சிகள் வைத்துக் கொண்டு யாரும் லஞ்சம் வாங்குவதில்லையே. அதிலும் ‘பிள்ஸெண்ட் ஸ்டே ‘ ஹோட்டலில் விதி முறைகளை மீறியதற்காக இந்தப் பணம் பெறப் பட்டிருக்கலாம் என்று எந்தத் தொகையையும் தனிமைப் படுத்துவது மிகவும் சிரமம். எனவே, சந்தேகத்தின் ஆதாயத்தைக் குற்றம் சாட்டப் பட்டவருக்கு அளித்திருப்பது முறை தான் என்று தோன்றுகிறது.

ஆனால், டான்சி நிலம் வாங்கிய விவகாரம் இப்படிப் பட்டதல்ல. டான்சி நிலம் அரசிற்குச் சொந்தமானாலும், அரசு மேற்பார்வையில் உள்ள ஒரு குழுவிற்குச் சொந்தமாயினும், அரசின் முதல்வர் என்ற முறையில் அது குறித்து முடிவு எடுக்கும் உரிமையும், கடமையும் முதல்வருக்கு இருக்கிறது . எனவே தானே அதை வாங்குவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டிருப்பது – அரசிற்கு நட்டம் ஏற்படாவிட்டாலும் கூட ஒரு வரம்பு மீறிய செயல். இது வரம்பு மீறிய செயல் – வழிகாட்டுதல் விதிகளை மீறிய செயல் – என்று தீர்ப்பே ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தச் செயலில் தன் ஈடுபாடு கிடையாது என்று சொன்ன ஜெயலலிதா டான்சி நிலப் பத்திரத்தில் தான் கையொப்பமிடவில்லை என்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் முதல்வர் கையெழுத்தை யாரோ ஒருவர் போட்டு விடக் கூடிய அளவு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போயிருந்தது என்பது தான் இதன் பொருள். இது இன்னும் சில பிரசினைகளைக் கிளப்பி விடுகிறது. கையொப்பம் இட்டாலும் கையொப்பம் இடாவிட்டாலும் , டான்சி நிலத்தைத் தன் கம்பெனிக்காக அனுபவித்து வந்ததன் மூலம் டான்சி நிலம் வாங்கப் பட்டதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார் என்பது தானே பொருள்.

கையொப்பம் இட்டது நான் இல்லை என்று சொல்லி எப்படித் தப்பித்துக் கொள்ள முடியும் என்று எனக்குப் புரிட்யவில்லை.

இந்தத் தீர்ப்பை ஒட்டி ஜெயலலிதாவின் பொய்க் கையெழுத்துக்கு உடந்தையாய் இருந்ததாய், சசிகலா, பத்திரம் பதிவு செய்தவர் , சாட்சிக் கையொப்பம் இட்டவர் மேல் வழக்கு ஏது தொடரப் படுமா என்று தெரியவில்லை. முதலிலிருந்தே இந்தக் கையெழுத்து என்னுடையதல்ல என்று ஜெயலலிதா ஏன் சொல்லவில்லை என்று கேட்கலாம்.

இந்தத் தீர்ப்புகளை ஒட்டி சில தீர்வுகள் கிடைக்குமெனில் மகிழலாம்.

ஒன்று : இந்த வழிகாட்டும் தத்துவத்தை உடைப்பில் போட்டுவிட்டு, அர்சுப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்று திட்டவட்டமான குற்றவியல் விதிகள் வகுக்கப் பட வேண்டும்.

இரண்டு : அரசாங்கம் வேண்டாத அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரும் பொறுப்பை விட்டு விட வேண்டும். அரசு சாராத ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.

Series Navigation