தீராநதி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

வேதா


மஞ்சள் வெயில் காய்கின்ற மாலையில், எங்கிருந்தோ வேகம் பிடித்தபடி வரும் மேகம்…..உதடுகளில் கருமையைப் பூசிக்கொண்டு பூமியை முத்தமிடத் தயாராய்! இந்த மழையும் மாலையும் என் சுவாசத்தில் முழுதாய்க் கலந்து எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும் ? வேலை நிமித்தமாய் நீயும், மேற்படிப்பின் பொருட்டு நானும் இந்த மண்ணில் வந்து சந்தித்த நாளும் கூட இதே போல மண் வாசம் கிளப்பியது. நண்பர்களின் துணைக்காக நடக்க ஆரம்பித்து வெகு சீக்கிரம் நண்பர்களாகிப் போனோமே…..அனைத்தும் அறிந்தவளாக இருந்தவள் உன் அருகில் மட்டும் குழந்தையாகிப் போன சுகம்….அனுபவித்துத் தீரவில்லை உன் உயிராய் இருந்த அந்த நாட்கள்!!

‘சில் ‘லென்ற காற்று வருடியதில் சிலிர்த்துப் போனேன் நான். என் கவிதை புத்தகத்தை காற்று புரட்டியது. ‘சீக்கிரமே உன்னைப் பார்த்து சேதிகள் கொஞ்சம் பேச வேண்டும்…. ‘ என்றைக்கோ நான் எழுதி வைத்த வரிகள். அப்போது நீ நைஜீரியா சென்றிருந்தாய். ம்….அதுதான் உன்னைக் கடைசியாகப் பார்த்தது கூட! என்னை எத்தனை தவிக்க வைத்து விட்டாய் ? ‘நான் பத்தினி ‘ என்ற சினிமாத்தனம் நிச்சயம் இல்லை என்னிடத்தில்….ஆனால், உன்னோடு உண்மையாய் வாழ்ந்த ஒரே காரணத்தால் சொல்கிறேன், என் நம்பிக்கை அசாத்தியமானது தான்! ஊரும் உறவும் , விபத்தில் நீ காணவில்லை என்றதும் , ‘ அவனும் செத்திருப்பான் ‘ என்றார்கள். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. இதோ இன்று வரையில் உனக்காக இதே புதிய மண்ணில் வாசம் கலைக்காத மல்லிகையாய், இன்னமும் காத்திருக்கிறேன். இந்தத் தைரியம் எத்தனை பேருக்கு வரும் ? ‘அவ அங்கயே வேற கல்யாணம் பண்ணியிருப்பா… ‘ ‘ அவனே போயாச்சு…, இவ இன்னும் லண்டன்ல தான் இருப்பேன்னு அடம் பிடிக்கறான்னா என்ன அர்த்தம் ? ‘ ‘ அவ சரியில்ல… ‘ எப்படியெல்லாம் பேசினார்கள் ? ? ? நீ கேட்டிருந்தால் ஒருவேளை மனசு சங்கடப்பட்டிருப்பாய்……இந்தக் காரணங்களுக்காகத் தான் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அந்தப் பக்கமே போகவில்லை! உன் நினைவில், உன் சுவடுகள் பதிந்த இந்த இடத்தைவிட்டு வர என்னால் எப்போதும் முடியாதுதான்…. ‘ஒத்தையா அங்க என்ன பண்றே ? ‘ நெருங்கிய தோழி கேட்டதற்கு, நிம்மதியாய் நாம் வாழ்ந்த அந்த நிமிடங்களை பதிலாய் சொல்ல முடியுமா என்ன ? ஒவ்வொரு முறை பேசும்போதும் அண்ணியிடம் அழுகை உடையும் குரலில்… ‘அவர் இன்னும் எங்கயோ உயிரோட தான் இருக்கார்…நான் மனசார நம்பறேன். சீக்கிரமே என்னைத் தேடிக் கட்டாயம் வருவார். ரெண்டு பேரும் நீங்க எல்லாரும் ஆச்சரியப்படற மாதிரி , ஜோடியா வந்து இறங்குவோம்..பார்த்துட்டே இருங்க! ‘ என்று சமாதானம் செய்வேன்.

இதோ அந்த அதிசயம் நடக்கப் போகிறது, இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ வருவதாகச் சொல்லி இருக்கிறாய்……இன்னமும் நடக்கப்போவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக எங்கிருந்தாய் ? என்னை ஏன் இதுவரையில் தனியே தவிக்க விட்டாய் ? என்னைப் பார்க்காமல் உன்னால் எப்படி இருக்க முடிந்தது ? இன்னும் அடுக்கடுக்காய் பல கேள்விகள்…சின்ன பிரிவைக்கூடத் தாங்க முடியாமல், ‘உன்னிடம் நிறைய வாசிக்க வேண்டும், என் நெஞ்செல்லாம் கவிதைகள் ‘ என்று எழுதி வைத்தாயே…..உண்மையில் என்ன நடந்தது ? நிமிடங்கள் கரையக் கரைய, சின்னதாய் பதட்டம் எனக்குள்ளே அதிகரித்தது. நான் அமர்ந்திருந்த குன்றிலிருந்து சாலையை உற்று கவனித்தேன். தொலைநோக்கியில் நீல நிற கார் ஒன்று வருவது தெரிந்தது. நீயாகவும் இருக்கலாம்!

நம்முடைய முதலிரவுக்கு முன்னரே நாம் நிறைய பேசிவிட்டதால் அன்றைக்கு என்று புதிதாய் பேச ஏதும் தயக்கம் இருக்கவில்லைதான்! ஆனால் இப்போது என்ன பேசுவது ? எதை எதையோ சொல்லத் துடிக்கிறது என் மனசு….நான் பேசுவது இந்நேரம் உனக்குக் கேட்குமோ ? என்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் இந்நேரம் நீ என்னவெல்லாம் நினைத்தபடி இருப்பாய் ? உன்னுடன் வாழ்ந்தது இன்னமும் உள்ளுக்குள் இனிக்கிறது. தொடர்புகள் பெருகி உலகம் விரல்நுனியில் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில், இதுவரையில் உனக்கு ஏன் இந்த தலைமறைவு வாழ்க்கை ?

எத்தனை களைப்பாய் வீடு திரும்பினாலும், மறக்காமல் நான் எழுதிய கவிதையை அழகாக நிறுத்தி, சுகம் சுகமாய் வாசித்துக் காட்டுவாயே ? ‘வாசிப்பது உன்னை நேசிப்பதற்குச் சமம்! ‘ என்று சொல்லி உன் முத்திரை பதிப்பாயே ? என் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாய் மொழிபெயர்ப்பாயே ? என்னவாயிற்று உனக்கு ? இதையெல்லாம் மறந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உன்னால் எப்படி இருக்க முடிந்தது ? ‘நம்ம ரெண்டு பேர் மேலயும் ரொம்ப கண் திருஷ்டி இருக்கும்னு தோணுது. இப்பவெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உங்களப் புகழ்ந்து பேசறதில்லை ‘ என்று நான் புலம்பியபோதெல்லாம், ‘நமக்கு ஒண்ணும் ஆகாது! ‘ என்று அழுத்தமாகச் சொல்வாயே…..

உன்னைப் பார்க்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு என்னை எப்படியெல்லாமோ குடைந்தது. மெல்லியதாய் இருந்த கோபம் இப்போது இன்னும் அதிகரித்த மாதிரி தெரிந்தது. எல்லாம் போகட்டும்….இப்போது என்ன காரணத்தால் திடாரென்று என்னைத் தொடர்பு கொண்டாய் ? சீக்கிரம் வந்துவிடேன்!…..உன்னிடம் நிறையப் பேச வேண்டும். ஆற்றாமையால் துடிக்கும் இதயத்தை அழுத்திப் பிடித்தேன். காற்று வீசியபோதும் கொஞ்சமாக நெற்றியில் வியர்த்தது. மாத்திரை எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். உன்னைப் பார்ப்பதற்குள் எனக்கு எதுவும் ஆகிவிடாதே ? ? முப்பது வயதிற்குள் மூவாயிரம் தடவைகள் தீக்குளித்திருக்கிறேன். ‘ உன் தோளில் முகம் புதைத்து ஆசை தீர அழ வேண்டும் ‘ , அதன் பின் எனக்கு என்ன ஆனாலும் சரி;

ஒரே மாதிரி வைத்திருந்ததில் முழங்கால் வலித்தது. எட்டிப் பிடித்து ஊன்றுகோலின் துணையோடு என்னை நிறுத்தினேன். வேலை கொடுத்த உற்சாகத்தில் இதுவரை உனக்காக எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து விட்டேன்….மனதில் தெம்பு இருக்கும் அளவு உடலில் இருப்பதில்லை, பெரும்பாலும்!! சிறிது தூரம் நடந்தால் தேவலை என்று தோன்றியது. காதுகளில் மாட்டியிருந்த வாக்மேனைக் கழற்றினேன். ‘மம்மா!! ‘ என்றொரு மழலை இசை பின்னாலிருந்து மிதந்து வந்தது.

வேகமாகத் திரும்பிய என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. கொஞ்ச தூரத்தில் கார் நின்றிருக்க, பூனைக் கண்களோடு அவள் தெரிந்தாள். அருகில் அதோ…என் கவிஞன், ஒரு கவிதையைக் கையில் ஏந்தியபடி!!

கொஞ்ச நேரம் நாங்கள் யாருமே பேசவில்லை. மூவரின் அமைதியில் பயந்துபோன குழந்தை லேசாகச் சிணுங்கியது. எனக்காக அவள் அழுதிருப்பாளோ ? அவளின் சிவந்த கன்னங்கள் சொல்லியது. இல்லை…இல்லை…..உனக்காகத்தான் அழுதிருப்பாள். நீ விட்டுவிடுவாயோ ? என்று பயந்திருப்பாள். அவன் கண்களை நேரில் பார்க்க என்னால் முடியவில்லை. பேசவும் பிடிக்கவில்லை. என் உயிராக இருந்த நீயா இப்படி ?

அவள் தான் மவுனத்தைக் கிழித்தாள். புரியாத மொழியில் ஏதேதோ அழுதபடியே சொன்னாள். ‘ஸ்பானிஷ் இண்டியன் ‘ ‘விபத்தில் ஆறு மாதங்கள் கோமாவில் கிடந்திருக்கிறேன்; இவள் தான் எனக்கு எல்லாம்….. ‘ அழுத்தமான உச்சரிப்பு, ‘இனிமேலும் அவள்தான் உனக்கு எல்லாம்! ‘ என்று சொல்லாமல் சொல்லியது. என் ஒவ்வொரு செல்லையும் உடைத்துக் கொண்டு அழுகை பீறிட்டது. ஊன்றுகோல் கை நழுவ, என் பேலன்ஸ் தவறியது. மரக்கிளையில் சாய்ந்து கொண்டேன். கைகளால் தாங்கியபோதும் என் செயற்கைக் கால் அவர்களுக்குத் தெரியாதபடி பார்த்துக் கொண்டேன். அதற்குப்பின் அவர்கள் சொன்ன எதுவும் என் காதுகளில் விழவில்லை……கண்களில் நீர்ப்படலம்….கஷ்டப்பட்டு சிரிக்க முயன்றேன். நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தது.

அவள் கிட்டத்தட்ட இருவரையும் இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். அதோ…முதன்முதலில் பள்ளி செல்லும் குழந்தை போல, என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி , என் உயிரை வேரோடு பறித்துக்கொண்டு நீ….புரிகிறது! நீ இன்னமும் உயிரோடு தான் இருக்கிறாய்…உன் உள்ளுக்குள் நான் இன்னமும் கலந்திருக்கிறேன், பிரிக்க முடியாதபடி…..ஒரு நீண்ட தவம் முடித்த பெருமையில் நிம்மதியாய் மூச்சு விட்டேன்; எங்கிருந்தோ திரண்டு வந்த மேகமெல்லாம், உதடுகளில் கருமை பூசிக்கொண்டு பூமியை முத்தமிடத் தயாராக….பருவங்கள் கடந்து என் கன்னங்களில் புதிதாய்…., ஒரு மழையின் முதல் துளி!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா