தீக்குளிக்கும் மனங்கள்!

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

குரு அரவிந்தன்


சுரேன் மருத்துவமனைக்குப் போகும்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு, குளிர் வேறு அவனை நடுங்க வைத்தது. குளிாில் நடுங்கினானா அல்லது எதிர் காலத்தை நினைத்து நடுங் கினானா என்பது அவனுக்கே பூியவில்லை. சுபாவையும் குழந் தையையும் வீட்டிற்கு கூட்டிப்போக டாக்டர் அனுமதித்தால் டாக்சி ஒன்றை பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பஸ்சுக்குள் இருந்த சூடு இதமாக இருந்தாலும், ஏனோ அவனது மனது மட்டும் விறைத்துப் போயிருந்தது. இரண்டு நாட்களாக குழம்பிக் கிடந்த மனசை ஒருவித மாகத் தேற்றிக்கொண்டுதான் ஆஸ்பத்திாிக்கு கிளம்பினான். குழந்தை பிறந்ததில் இருந்து அம்மா ஏன் இப்படி நடந்து கொள் கிறாள் என்பது அவனுக்குப் பூி யாத புதிராக இருந்தது. அம்மா இங்கே வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. தன்னுடைய சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம் என்ப தால் தொடக்கத்தில் இருந்தே அம்மாவிற்குச் சுபாவைப் பிடிப்ப தில்லை என்பதும் அம்மாவின் இப்படியான செய்கைகளுக்கு உறவினர்களும் ஒரு காரணம் என்பது அவனுக்குத் தொியும். ஊர் வம்பு என்றால் இலவச ஆலோசனை கொடுப்பதில் பழக்கப் பட்டவர்கள். ஒத்துப் போகாவிட்டால் போட்டு மிதிப்பார்கள்; இல்லாவிட்டால் தூற்றிவிட்டுப் போவார்கள். அம்மாவிற்கு உரமேத்திவிடும் இந்தச் சொந்தங்களை நினைக்க அவனுக்கு அவர்கள்மேல் வெறுப்பும் வந்தது. சுரேன் வேலையை இழந்த போதும் சாி, வேலையை இழந்தவர் களுக்கான இன்சுரன்ஸ் பணத்தைப் பெற்ற போதும் சாி, சுபா எதுவுமே சொல்லவில்லை. வேலை இழந்த வர்களுக்கான இன்சுரன்ஸ் பணம் நிறுத்தப்பட்டபோது சுபாவிற்கு அதிஷ்டவசமாய் ஒரு வேலை கிடைத்ததால் அந்த வருமானத்தை வைத்துக் கொண்டு ஒருவாறு குடும்பச் செலவைச் சமாளித்தனர். எவ்வளவோ தேடி யும் பொருத்தமான ஒரு வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதையிட்டு அவளுக்குச் சிறிது ஏமாற்றமாகவே இருந்தது. எப்படி யாவது ஒரு வேலைதேடி எடுத்து விடுவான் என்ற நம்பிக்கையோடு அவளது வருமானத்தில் அவர்கள் காலத்தை ஓட்டினர். அலுவல கத்தில் கூடுதலான வேலை இருக்கும்போது அவள் அதை முடித்து விட்டு தாமதமாகத் தான் வீட்டிற்கு வருவாள். மாமியார் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பதும் அவளைத் தொடர்ந்து வரும் மாமியாாின் அந்த மெளனப் பார்வையும் அவளுக்குப் பிடிப்பதில்லை. அந்தப் பார்வையைத் தவிர்ப்பதற்காகவே அவள் அனேகமான நாட்களில் மேலதிக வேலை செய்துவிட்டுத் தாமதமாக வீடுவரத் தொடங்கினாள்.

‘எங்கே போய்ச் சுத்திட்டு வர்றான்னு கேட்கமாட்டியா ? ‘ அம்மா முணுமுணுத்தாலும் சுரேன் மெளனம் காத்தான்.

பொருளாதார நெருக்கடி காரணமாகச் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் கணவன் மனைவிக்கிடையில் சில சமயங்களில் மனஸ்தாபம் ஏற்படத் தொடங் கியது. அது மட்டுமல்ல அவளது உழைப்பில் தான் சாப்பிடுவதாக அவனுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. ஆனாலும் அந்த நிலையைத் தவிர்க்க முடியாதென்பதால் அவன் அதைத் தனக்குள் ஜீரணித்துக் கொண்டான். அவர்களுக்குள் இருந்த சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தவோ என்னவே அந்தச் செய்தி குடும்ப டாக்டாின் வாயால் வந்தது.

‘உண்மையாவா டாக்டர் ? ‘ என்றான் வியப்புடன்.

‘ஆமாம்…. தகப்பனாகப் போகிறீர்கள்! எனது வாழ்த்துக்கள்! ‘ என்று சொல்லி சுபா கர்ப்பமாய் இருப்பதை நிச்சயப் படுத்தினார் டாக்டர். அவள் தாய்மை அடைந்ததில் அவனுக்குச் சந்தோஷம். குடும்பப் பொருளாதார நிலையை நினைத்து வருத்தப்பட்டாலும் குழந்தை ஒன்று வீட்டில் தவழ்ந்தால் அவர்களுக்குள் உள்ள இறுக்கம் தளரும் என்று எதிர்பார்த்தான்.

‘இந்த நிலையில் எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமா ? ‘ என்று சுபா அவனிடம் தனிமையில் கேட்ட போது, அவன் எதுவும் பேசாமல் மெளனம் சாதித்தான்.

அவளுக்குப் பதில் சொல்லும் நிலையில் தான் இல்லை என்பது அவனுக்குத் தொியும். ஆனால் அம்மா தங்களோடு இருக்கும்போது குழந்தையை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்த்தான். சுபாவும் அந்த நல்ல செய்தியை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்க வில்லை. பொருளாதாரச் சுமை போதாதென்று இதுவும் ஒரு சுமையாகப் போவதாக நினைத்தாள். கருவை அழிக்கவும் மனம் இடம் தராதபடியால் வருவது வரட்டுமென்ற நம்பிக்கையோடு கருவைச் சுமந்தாள்.

மாதங்கள் செல்லச் செல்லத் தாய்மையின் பொலிவில் சுபா மேலும் அழகாகத் தொிந்தாள்.

‘காங்கிராட்யுலேஷன் மிஸ்டர் சுரேன்! பேபி கேர்ள்! ‘ டாக்டர் அவனது கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுப் போனார்.

குழந்தையைக் குளிப்பாட்டி கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். புதிய வாாிசைப் பார்க்கும் போது தாயாாின் முகம் எப்படி மலரும் என்று கற்பனை பண்ணிக் கொண்டு தாயைப் பார்த்தான். என்ன இது ? முகம் மலர்ந்து உடம்பு பூாித்துப் போவதற்குப் பதிலாக ஏன் அம்மாவின் முகம் இப்படிக் கறுத்துப் போகிறது ?

பெண்குழந்தை என்பதால் அம்மாவிற்குப் பிடிக்கவில்லையோ ?

‘என்னம்மா பேத்தி என்னவாம் ? ‘ ஆவலோடு தாயாரைப் பார்த்துக் கேட்டபடி அருகே வந்தான்.

தாயார் எதுவும் பேசாமல் குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டுத் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘என்னம்மா, என்னாச்சு ? ‘ சுரேன் பதறிப் போய்க் கேட்டான்.

‘இல்லை தலை கிறுகிறுக்குது, அது தான் தாங்க முடிய வில்லை! ‘ தாய் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அவன் இப்போ குழந்தையின் முகத்தை வெளிச்சத்தில் வடிவாகப் பார்த்தான்.

‘என்ன இது ? ‘ தன்னையறி யாமலே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டு தாயாரைத் திரும்பிப் பார்த்தான்.

‘குழந்தையை மாறிக் கொடுத்துவிட்டார்களோ ? ‘

எப்படி ? எப்படி இது சாத்திய மாகும் ? அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. குழந்தையின் தோல், இமை முடி எல்லாம் வெள்ளையாய்….!

‘காட்டுக் காியன் ‘ என்று சில நண்பர்கள் அவனைப் பழிக்கும் போதுகூட வராத தாழ்வு மனப் பான்மை இப்போது அந்தக் குழந்தையைப் பார்த்ததும் அவனுக்கு பீறிட்டுக் கொண்டு வந்தது.

நெஞ்சுக்குள் விடைதொியாக் கேள்விபோல ஏதோ வலித்தது.குழந்தையை சுபாவிற்கு அருகே கிடத்திவிட்டு அவளைப் பார்த்தான். சுபா இன்னமும் அரை குறைத் தூக்க மயக்கத்திலிருந்தாள்.

‘சுபா… சுபா! குழந்தையைப் பார்த்தியா ? ‘ பதட்டப் பட்டான்.

அவள் மெல்லக் கண்திறந்து குழந்தையைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்கள் செருக மயங்கிப் போனாள்.

அந்த நேரம் உள்ளே வந்த டாக்டர் அவனது பதட்டத்தைப் புரிந்து கொண்டு அவனுக்கு குழந்தையைப் பற்றிய சில விளக்கங்களைச் சொன்னார்.

மயக்க நிலையில் சுபா இருந்தாலும் டாக்டர் சொல்வ தெல்லாம் அவளுக்கும் கேட்டது.

‘மிஸ்டர் சுரேன்! நீங்கள் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் இந்தப் பிரச்சனையை மிகவும் கவனமாக அணுக வேண்டும். எப்படி இந்தக் குழந்தை வெள்ளை நிறத்தோடு பிறந்தது என்று வீணாக அலட்டிக் கொள்ள வேண்டாம். எப்போதாவது ஒரு குழந்தை இப்படிப் பிறப்பதுண்டு. இதை ‘அல்பினோ ‘ என்று சொல்வார்கள். தோலிலும் முடியிலும் இதனால் ஏற்படும் நிறமாற்றத்தை அவதானிக்கலாம். இவர்களுக்கு சூாிய வெளிச்சத்தைப் பார்க்கும் போது கண்கூட அடிக்கடி கூசுவது போல இருக்கும். இதைத் தவிர வேறு எந்தக்

குறைபாடும் இவர்களிடம் இருக்காது. மற்றும்படி ஆரோக்கியமாகவே இருப்பார்கள். பயப்பட ஒன்றுமில்லை. இதற்காகக் கவலைப் படவேண்டாம். டேக்கிட் ஈஸி! ‘ டாக்டர் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.

தாயார் ஏற்கனவே வீட்டிற்குப் போய்விட்டபடியால் அவன் தாமதமாகத்தான் வீட்டிற்குத் திரும்பிப் போனான். உள்ளே நுழைந்தபோது அம்மா யாருடனோ போனில் பேசிக்

கொண்டிருப்பது அவனுக்கும் கேட்டது. ‘வெள்ளைக்கார பொஸ் ஜாக்கோ ஜாக்ஸனோவாம், ஓவர்டைம் செய்யச் சொல்லுறார் என்று வீட்டிலே வந்து சொல்லும் போதே நினைத்தேன். ஓவர்டைம் செய்யிறேன் என்று சொல்லி நேரம் கழிச்சு வீட்டிற்கு கண்ட நேரத்திலையும்

வரும்போதே ஏதோ விபரீதம் நடக்கப் போகு தென்று எனக்குத் தொியும். அப்படியே நடந்திட்டுது. இப்படி ஒரு அவமானத்தோடை எப்படி இனி இங்கே இருப்பன். யார் முகத்திலை முழிப்பன் ? ‘

அம்மா யாரோடு பேசுகிறா ? மறுபக்கத்தில் யாராய் இருக்கும் ? வம்பளக்கிறார்கள்!

‘ஆமா… பார்த்தால் பரமசாது மாதிாி இருந்து கொண்டு எல்லாருக்கும் தண்ணி காட்டிவிட்டாள். இந்தமாதிாி ஊமாஞ்சிகளை எல்லாம் நம்பக்கூடாது! ‘

சுபாவைப் பற்றி ஏச்சுக்கள், திட்டுக்கள் எல்லாம் அவன் காதில் விழுந்தன.

‘என்னம்மா ? இப்ப என்ன நடந்து போச்சென்று இப்படிக் குதிக்கிறீங்க ? ‘ சுரேன் இடைமறித்துக் கேட்டான்.

‘இன்னும் என்ன நடக்க இருக்கு ? நீ ஒரு ஆம்பிளையாக இருந்தால் தானே அவள் உனக்கு அடங்கி நடக்கிறதுக்கு! இரவிரவாய் ஆடிப்போட்டு வந்து இப்ப கையிலை ஒண்டோட…. இதை யாாிடம் போய்ச் சொல்வேன்! ‘ என்று அம்மா ஒப்பாாி வைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.

‘அம்மா தயவு செய்து பொறு மையாய் இருங்கோ! டாக்டர் விபரமாய் எல்லாம் சொன்னவர். இது ‘மெலனின் பிக்மென்ட் ‘ என்று சொல்லப்படும் நிறப்பொருள் கலம் இல்லாத காரணத்தால் சில குழந்தைகளுக்கு வரும் ஒருவித குறைபாடாம். எங்க கஷ்டகாலம் என்னுடைய குழந்தைக்கு வந்திருக்கு! ‘

‘உன்னுடைய குழந்தையோ ? நீ சும்மா மழுப்பாதை! குழந்தையைப் பார்த்திட்டு உன்னைப் போல இருக்கென்று யாராவது சொல்லுவினமே ? எப்படிச் சொல்லுவினம்…. கண்ணும், நிறமும், உன்னுடைய சாயல் இருந்தாத்தானே ? ‘

‘அம்மா சும்மா இருங்கோ! நீங்களும் ஒரு பெண் தானே! மனம் நொந்து போய் நாங்கள் இருக்கிறது போதாதென்று கண்டபடி நீங்களும் பேசாதையுங்கோ! தப்பான நோக்கத்தோட எதையும் பார்க்காதையுங்கோ!

தயவு செய்து சுபாவை இப்படியெல்லாம் திட்டாதையுங்கோ! ‘

‘ஓ! உனக்குச் சுபாவைப் பற்றிச் சொன்னால் பொத்திக் கொண்டு கோபம் வந்திடும். ஏன் நேரம் கழிச்சு வீட்டிற்கு வாறாள் என்று ஒரு நாளாவது வாயைத் திறந்து கேட்டிருக்கிறியா ? உண்மையைச் சொன்னால் உனக்கேன் கோபம் வருகுது ? குழந்தையைப் பார்த்திட்டு இனசனம் வாயை மூடிக் கொண்டா இருக்கப் போகினம் ? இனிமேல் அவளோட நானிந்த வீட்டிலை இருக்கமாட்டன்.

எனக்கு ஒரு வழி செய்து போட்டு நீ என்ன வேண்டும் என்றாலும் செய்! ‘

‘நிறுத்தம்மா போதும்! நீயே ஊரெல்லாம் கூட்டிக் கதை கட்டி விடுவாய் போல இருக்கு. நான் ஒன்றும் ராமனில்லை அவளைத் தீக்குளி என்று சொல்வதற்கு! ‘ கோபத்தோடு சத்தம் போட்டுச் சொல்லி விட்டுக் கதவை அடித்துச் சாத்திக் கொண்டு படுக்கைக்குப் போனான்.

அம்மா சுபா மீது கொண்ட வெறுப்பின் தாக்கம் இப்போது தான் வார்த்தைகளாய் வெடித்துக் கொண்டு வருகிறது. வெறும் வாயை மென்று கொண்டிருந்த உறவின ருக்கு அவல் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு இதுவே போதும்! ஒற்றுமையாய் இருக்கும் குடும்பத்தைச் சிதைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். நெடுநேரம் தூக்கம் வராமல் தவித்தவன் இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு முடிவு காண வேண்டும் என்று நினைத்தபடி

தூங்கிப் போனான்.

அவன் அறைக்குள் நுழைந்த போது சுபா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ட்ாிப் கொடுத்தி ருந்தார்கள். அவளது படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவளது முகத்தைப் பார்த்தான். தூக்கத்திலும் தாய்மையின் பூாிப்பு முகத்தில் தொிந்தது.

‘இந்தக் களங்கமில்லாத முகத்தைப் பார்த்தா அம்மா இப்படிச் சொன்னா ? ‘

‘வந்திட்டாங்களா, என்ன யோசிக்கிறீங்க ? ‘ சுபாவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டான்.

‘குழந்தையைக் கொஞ்சம் பிடியுங்களேன்! ‘ மார்போடு அணைத்திருந்த குழந்தைையை நீட்டினாள்.

அவன் மனசு சஞ்சலப் பட்டது. அவள் சொன்னது தனக்குக் கேட்காதது போல எங்கேயோ பார்வையைச் செலுத்தினான்.

‘என்னோட பொஸ் மிஸ்டர் ஜாக்ஸன் வந்திருந்தார். இந்த ஃப்ளவர் பாஸ்கட்டும், கிஃப்ட்டும் அவர்தான் கொண்டு வந்து கொடுத்தார். இத்தனை வேலைக்கு நடுவிலும் என்னைத் தேடி வந்திட்டாரே, ‘ஹீ இஸ் கிறேட்! ‘

‘ ‘ ஹீ இஸ் கிறேட் ? ‘ ‘

சம்மட்டியால் மண்டையில் அவனுக்கு அடித்தது போல இருந்தது. வீட்டிலே ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கிறது. இதை எப்படி இவளுக்கு எடுத்துச் சொல்லுவது ?

‘என்ன ஒரு மாதிாி இருக்கி றீங்க ? ‘ என்றாள் சுபா அவனது நிலைமை பூியாது.

இவன் ஒன்றுமில்லை என்பது போலத் தலையாட்டினான். ஆனாலும் முகம் காட்டிக் கொடுத்தது.

‘அப்போ குழந்தை இப்படிப் பிறந்திட்டுதே என்று வருத்தப் படுறீங்களா ? ‘

அவன் அதற்கும் இல்லை என்றே தலையாட்டினான்.

‘நாங்க செய்த பாவத்திற்கு இந்தக் குழந்தை என்ன செய்யும், அது பாவம்! ‘ என்று சொல்லிக் குழந்தையைக் கொஞ்சிவிட்டு மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள்.

‘இல்லை! சொந்தக்காரர் எல்லாம் குழந்தையைப் பற்றித் தப்பாய்ப் பேசுகினம், அதுதான்…! ‘ முடிக்காமல் நிறுத்தினான்.

‘அதுதான்…. என்ன ? ‘ அவள் ஆர்வமாய் அவனைப் பார்த்தாள்.

‘கொஞ்ச நாளைக்கு நாங்கள் வேறு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போய் இருப்போம் என்று நினைக்கிறேன் ‘

அம்மாவிடம் இருந்தாவது கொஞ்ச நாளைக்கு ஒதுங்கியிருந்தால் சுபாவிற்கு நல்லது என்று அவன் நினைத்தான். அவள் அவனை ஆச்சாியமாய்ப் பார்த்தாள்.

‘உண்மையாய்தான் சொல்லுறீங்களா ? ‘ என்றாள் நம்ப முடியாமல்.

‘ஆமாம் சுபா! ஒரு வருடமோ இரண்டு வருடமோ சொந்த பந்தத்தை விட்டு ஒதுங்கித் தூர இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன் ‘

‘நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டாங்களே! ‘

‘இல்லை சுபா! உன்னோட ஒப்பீனியனையும் கேட்கிறது நல்லதுதானே, சொல்லும்! ‘

‘எங்க பொஸ் அடுத்த மாதம் வேலை மாற்றலாகிப் போகிறார். வேறு இடத்தில் ஆரம்பிக்க இருக்கும் புதிய கிளைக்குப் பொறுப்பாகப் போகப் போகிறாராம். அதனாலே…! ‘

‘அதனாலே… ? ‘ அவள் சொல்லி முடிக்குமுன் அவன் அவசரப்பட்டான்.

‘என்னையும் கூட வர்றியான்னு கேட்கிறார், போவோமா ? ‘

—-

Malini.Aravinthan@unisen.ca

Series Navigation