திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

என் எஸ் நடேசன்


இந்திய டெனிஸ் வீராங்கனை சோனியா மிர்சாவின் குட்டையான டெனிஸ் கேட் பல இந்திய முல்லாகளின் கவனத்தை கவர்ந்துள்ளது. மிகவும் மனம் வருந்துகிறார்கள் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் கிறீஸ்துவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவருமாக கருதப்படும் சென் ஜெரோம் கூட அக்காலத்தில் பெண்களின் ஒழுக்கத்தில் கவலைகொண்டு எப்படி கன்னித்தன்மையை பாதுகாப்பது என்பதுபற்றி பல கட்டுரைகளை எழுதினார் என பெட்ரான் ரஸ்ஸல் கூறுகிறார். ஆதாரம்: History of Western Philosophy

பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் எல்லா மதவாதிகளுக்கும் சிந்தனையில் ஒற்றுமை உண்டென்பதை மேற்கண்ட செய்திகள் தெளிவாக்கின்றன. இதற்கு காரணம் என்ன?

முக்கிய சமயங்கள் எல்லாம் ஆண்களால், ஆண்களுக்காக நிறுவப்பட்டதா?

பொதுவாக எல்லா மதங்களும் பெண்களை தூய்மையற்றவர்களாகவும் மதவழிபாடுகளை நடத்த தகுதியற்றவர்களாகவும் இக்காலத்திலும் கூட புறக்கணிப்பதன் உள்நோக்கம் என்ன?

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய மூன்று படங்களை கடந்த மாதத்தில் பார்த்தேன். இவை மூன்றும் வெவ்வேறு கலாச்சார, சமூக, புவியியல் பின்னணிகளை பிரதிபலித்தாலும் கதைக்கருக்களில் ஒற்றுமையுள்ளது. பெண்களை ஏன் எமது தாய்மார்களை, சகோதரிகளை இந்த சமூகங்கள் எப்படி நடத்தியுள்ளார்கள் என்பதே. இப்படிப்பட்ட இவர்களின் கொடுமையான நடத்தைகள் கலைவடிவத்தில் திரைப்படங்களில் இக்காலத்தில் வரும்போதுகூட சகிப்புத்தன்மையற்று எதிர்க்கிறார்களே!

இவர்கள் யார்?

கங்கைக்கரையில் திபா மேக்தாவை படம் எடுக்க அனுமதி மறுத்து கலகம் செய்த ஆர்.எஸ்.எஸ். காரர்களும் மற்றைய தீவிர இந்துமதத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை இந்தியாவில் டாவின்சி கோட் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி அதில் வெற்றி அடைந்த கத்தோலிக்க சமய குருமார்களுமே.

டாவின்சி கோட்
புத்தகத்தை வாசித்த நாற்பது மில்லியனுக்கு மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். திரைப்படத்தை வந்த இரண்டாம் நாளே பார்த்தேன். டான் பிறவுணின் கதையை படமாக்கினாலும் படம் எடுத்தவர்கள் திரைக்கதையில் சமரசம் செய்துள்ளார்கள். புத்தகத்தில் பெண்பாத்திரத்தின் முதன்மை குறைக்கப்பட்டு திரைப்படத்தில் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் டாவின்சி கோட் தடைசெய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதகுருமார்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரசியல்வாதிகளால் தடைசெய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை செய்வது கடினமான காரியம். சினிமாவுக்கு தடைபோடுவது மிகவும் இலகுவானது. மதநம்பிக்கையுள்ள மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

இக்கால அரசியல்வாதிகள் மட்டுமல்ல அக்காலத்திலும் இவை நடந்தது. உரோம சாம்ராச்சியத்தின் அரசமதமாக கொன்ரான்ரின் மன்னரால் கிறித்துவ சமயம் பிரகடனப்படுத்தப்பட்டது. இருபது வீதமான கிறித்தவர்கள் ரோம சாம்ராச்சியத்தில் மற்ற சமயத்தவரைவிட கட்டுக்கோப்பாக இருந்தார்கள். தொடர்ந்து நடைபெறும் போர்களில் இவர்களது ஆதரவு மன்னனுக்கு தேவைப்பட்டது.

ஏன் மதகுருமார்கள் டாவின்சிகோட்டை எதிர்க்கிறார்கள்?

மத நம்பிக்கையின் மூல ஆதாரமாக இருப்பது தூய்மையான வரலாறு (Sacred History ) இறைதூதரான யேசுநாதர் சாதாரணமான மானிடர்கள்போல் காம, காதல் ஆசாபாசங்களுக்கு உட்பட்டு பெண்ணுடன் கலந்து (அதுவும் பைபிளின் விபசாரி என சொல்லப்படும் பெண்ணுடன்) குழந்தைக்கு தந்தையாகினார் என்பது இந்த வரலாற்று தூய்மைக்கு மாசு கற்பிக்கிறது.

பேர்டினண்ட் ரஸ்ஸல் கூறினார், முதலாம் நூற்றாண்டுக்கும் நாலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய மக்கள் தீவிரமான கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்த காலமாகும். இதற்கான காரணம் ரோம் சாம்ராச்சியம் அஸ்தமனமான நேரத்தில் பல போர்களை எதிர்நோக்கவேண்டி இருந்தகாலம். மக்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அல்லலுறும் மக்களிடம் மதவாதிகள் இலகுவாக பொன்னுலக வாழ்க்கைக்கு உறுதி அளித்துவிடுவார்கள். பூவுலக வாழ்க்கையில் கிடைக்காத விடயங்கள் இறந்தபின்பு கிடைப்பதற்கு மதம் உதவும் என்ற நம்பிக்கை மக்களிடம் வருவித்தார்கள்.

மத நம்பிக்கை ஆழமானது. இந்த நம்பிக்கை அடிப்படையிலே மதங்கள் கட்டி எழுப்பப்பட்டது. எனது கேள்வி: விஞ்ஞானம் வளர்ந்த இந்தக்காலத்தில் விஞ்ஞானத்தின் விளைவுகளை நுகர்ந்துகொண்டு மதநம்பிக்கையும் தீர்க்கமாக கடைப்பிடிக்கும் மக்கள் எப்படி டாவின்சி கோட் போன்ற கலைப்படைப்புகளால் பாதிக்கப்படுவார்கள்? விஞ்ஞானத்தின் உண்மையாலும் ஆதாரத்தாலும் சாதிக்கமுடியாததை கேவலம் ஒரு சினிமாப்படம் எப்படி சாதித்துவிடும?;

மெமொவார் ஒவ் ஏ ஹிஸா (Memoirs of a Geisha)

இந்த திரைப்படமும் புத்தகமாக வந்து பிரபலமாகியது. யப்பானிய ஹிஸாக்கள் எனப்படும் கலைப் பெண்கள் பற்றியது. இவர்கள் தமிழ்நாட்டு தேவதாசிகளுக்கு ஒப்பானவர்கள். ஏழை குடும்பங்களில் இருந்து தெரிந்து எடுத்து பிரத்தியேக வீடுகளில் இளைப்பாறிய கிசாக்களால் வளர்க்கப்படுவர். பாட்டு, நடனம், வாத்தியக் கருவிகளில் பயிற்றப்படுவார்கள். இவர்கள் வளர்ந்தபின் ஊரில் உள்ள பணக்காரர்களை தங்கள் உபசாரத்தால் மகிழ்விப்பார்கள். ஒரு பணம் படைத்தவரின் ஆசை நாயகியாகவும் இருப்பார்கள்.

இளம் சிறுமிகளாக இருந்து கன்னிகளாக வந்தவுடன் இவர்களை கன்னிகழிக்க பணக்காரர்கள் போட்டிபோடுவார்கள். இந்த பேரம் சந்தையில் நடக்கும் வியாபாரம்போல் நடைபெறும். இரண்டாம் உலகப்போரில் தோற்றதால் இந்த ஹிஸாக்கள் யப்பானில் அருகிவருகிறது.

இந்த திரைப்படம் பிரபலமான புத்தகத்தை தொடர்ந்து வந்தது. கலைப்படம்போல் இந்த படம் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பவர்களின் சிந்தனைக்கும் புரிதலுக்கும் இடம் அளிக்கிறது.

வாட்டர் (Water)
இந்தியாவில் மனுதர்மத்தை சாட்சிவைத்து விதவைகளை கொடுமைப்படுத்துதலை திரைக்கதையாக எடுத்த படம் இது. சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் விதவை மடத்தில் பிச்சை எடுத்து காலம் ஓட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அழகிய இளம் விதவை ஊரில் உள்ள பணக்காரரின் காமபசிக்கு இரையாகினாள். இந்த படத்தை கங்கைக்கரையில் எடுக்க அனுமதி மறுத்து கலகம் செய்ததால் இலங்கையில் எடுக்கவேண்டிய நிலை திபா மேத்தாவுக்கு ஏற்பட்டது.

ஒரு சமூகம். பெண்களை, வயது முதிர்ந்தவர்களை, குழந்தைகள் எப்படி நடத்துகிறது என்பதே அந்த சமூகத்தின் அளவுகோலாகும். இவர்களின் நிலைகளை பார்க்கும்போது எமது சமூகத்தின் நிலையை நாங்கள் மெச்சமுடியுமா?

—————————–
uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்