திருட்டும் தீர்ப்பும்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

அமானுஷ்ய புத்ரன்


மனத்தின் சந்து பொந்துகள்
மலை முகடுகள்
அங்கெல்லாம்
ஒளிந்து கொள்ள ஓடுகிறாய்.
நீயே
களவாடப்பட்டவன் தான்.
டி.என்.ஏ யின்
முறுக்கிழையில்
அமினோ அமிலங்கள்
குத்தாட்டமும்
குதியாட்டமும்
போட்டுக்கொண்டதினாலும்
அதன் இரண்டு உயிர்கள்
ஏதோ ஒரு நள்ளிருட்டில்
ஊஞ்சல் ஆடியதினாலும்
வந்து விழுந்தாய்.

அந்த மனுஷ புத்திரனின்
“ஜெனடிக்” சூத்திரம்
எங்கிருந்தோ
எதிலிருந்தோ
கையாடப்பட்டது தான்.
பட்டினத்தார் சொன்னாலும்
ஒன்றுதான்.
டாக்டர் ஹர்கோபிந்த்
கொரானா
சொன்னாலும் ஒன்றுதான்.
செல் எனும்
உயிர்ச்சிற்றறைக்குள்
ஒளிந்து கொண்டாலும்
உன் நிழல்
உன்னை திருடுகிறது.
உன்னைத்தின்கிரது.
உன் எலும்பையும் தாண்டி
உன்னுள்
விறைத்துக்கொண்டிருக்கும்
லட்சக்கணக்கான
ஆண்டுகளின்
அச்சுப்பதிப்பு எல்லாமே
அச்சப்பதிப்புகள் தான்.
அதனால்
கல் எலும்பு ·பாசில்கள் கூட
ஏ.கே 47 களை
கருவுற்று
வைத்திருக்கின்றன.
இந்த இரத்தவெறி
எத்தனை எத்தனை
இருபத்தியன்றாம்
நூற்றாண்டுகளை
கவசம் வைத்துக் கொண்டு
வந்தாலும்
அது அழிக்கப்பட வெண்டும்.
அது துடைத்தெறியப்பட
வேண்டும்.
ஏ புதிய மானிடமே
உன் புதிய சுவாசத்தில்
அன்பின் சூறாவளிகள்
சுழற்றி வந்து வீசட்டும்.

ஆனாலும்
அந்த திருட்டு சுமை
உன் மீது
இன்னும் ஏறியிருக்கிறது.
உன் முதுகில்
உன் நெற்றியில்
கண்ணுக்கு தெரியாத
அந்த முத்திரை
நீ பண்ணும் கலவரங்களில்
களேபரங்களில்
நன்கு தெரிகிறது.
புரட்டி புரட்டி
படித்துப்பார்க்கலாம்.
“இந்த தம்ளர் இந்த ஓட்டலில்
இருந்து
திருடப்பட்டது.”….
திருடப்பட்ட அந்த வெறி…
உன்னை நீயே
சுரண்டிக்கொள்வது…
உன்னை நீயே படுகொலை செய்து
கொள்வது…
உனக்கு நீயே பாசாங்கு
காட்டிக்கொள்வது…
உன்னை நீ கனவு
கான்பதற்குப்பதில்
உன்னை நீயே உணவு
ஆக்கிக்கொண்டாய்…
உன் மானுட ஒளிக்கு
கருவறை கட்ட அடித்தளம்
போட்டு
முகம் தெரியாத
ஏதோ ஒரு அதிகாரியிடம்
“பிளான்” அப்புரூவலும்
வாங்கி
பூசை செய்து சூடம்
கொளுத்தி
நீ கட்டிடம் எழுப்பியபோது
நீ கண்டாய்..
ஒரு பொய் நின்றது.
கள்ளத்தனத்தின்
பெரும்பூதாம்
உன் முன் நின்றது.
உன் கருவறையை
புனிதமாக்க வந்தவன் என்று
சொன்னாய்.
ஆனால்
வைரக்கல் பதித்து
சலவைக்கல் விரித்து
நீ பூவேலை செய்ததெல்லாம்
உன் கபாலங்களைக்
குவித்து வைக்கும்
“குடோனு”க்குத் தான்.
எல்லாம் திருடப்பட்டது
தான்.

கொலைவெறியில்
சூடேறிய வாசகங்கள் எல்லாம்
திருடப்பட்டது தான்.
துப்பாக்கிகள் மனிதனை
திருடிக்கொண்டன.
எல்லாம் திருடப்பட்டது
தான்.
கடவுள்களும்
சைத்தான்களுமே
அந்த திருட்டு வழக்குக்கு
கூண்டில் ஏறி
நின்று
கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்புகள்
எழுதுவதற்கும்
அவர்களே
அங்கு
அமர்ந்திருக்கிறார்கள்.

========================================================
அமானுஷ்ய புத்ரன்
21-02-07
epsivan@gmail.com

Series Navigation

அமானுஷ்ய புத்ரன்

அமானுஷ்ய புத்ரன்