திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


‘Those who cannot remember the past are condemned to repeat it.’
George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner’s, 1905, page 284

திப்பு சுல்தான் என தற்போது அறியப்படுகிற பதேக் அலி திப்பு (1750-1799) குறித்து பொதுவாக ஒற்றைமுக சித்திரங்களே நிலவுகின்றன. எப்படி பிரிட்டிஷ் ஆவணங்கள் அவரை மதவெறி பிடித்த கொலைகாரனாக சித்தரிக்கின்றனவோ அதைப்போலவே அண்மையில் வெளிவரும் மார்க்ஸிய-இஸ்லாமிய அடிப்படைவாத ஆராய்ச்சி கட்டுரைகள் அவரை முற்போக்குவாதியும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு நல்லரசராக சித்தரிக்கின்றன. இந்த சித்தரிப்புகளுக்கு பின்னால் தெளிவான அரசியல் காரணிகள் உள்ளன. குறிப்பாக இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திப்புவின் புகழைப் பாடுவதன் பின்னால் இருக்கும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதக் காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திப்பு வாழ்ந்த காலகட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். மொகலாய பேரரசு தனது அந்திம காலகட்டத்தில் இருந்தது. இந்தியா முழுவதிலும் இசுலாமிய மேலாதிக்கம் வலுவிழந்து மராட்டிய-சீக்கிய வலு அதிகரித்து வந்தது. தெற்கில் பிரிட்டிஷார் மற்றொரு வலிமையான சக்தியாக உருவாகிவந்தனர். இந்தியாவின் நாளைய ஆட்சியாளர் யார் என்பது குறித்து தெளிவற்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. தக்காணத்தில் ஹைதராபாத் நிஜாம் பாரம்பரியமானதோர் இஸ்லாமிய சக்தியாக திகழ்ந்தாலும் ஆட்சி வலுவற்ற நிலையில் விளங்கினார். இந்நிலையில் மைசூர் குறுநில மன்னரின் அதிகாரிகளில் ஒருவரான ஹைதர் அலி வலிமை வாய்ந்த ஒரு சக்தியாக தன்னை உருவாக்கியிருந்தார். அவரின் மைந்தனான திப்பு இந்தியாவின் பாரம்பரிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுவிழந்த நிலையில் தன்னை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் ஒரு புதிய சக்தியாக உருமாற்ற விரும்பினார். இதற்கு அவருக்கு வலுவிழந்த நிலையிலும் இன்னமும் ஆட்சியாளர்களாக நீடித்து வந்த மொகலாய மன்னர் மற்றும் நிஜாம் தம்மை ஒரு சுல்தானாக அங்கீகரிக்க வேண்டுமென விரும்பினார். பிரிட்டிஷ் ஆதரவாளரான ஹைதராபாத் நிஸாம் திப்புவின் தகப்பனான ஹைதரை வெறும் ஜமீந்தார் என்றே குறிப்பிட்டு வந்தார். 1782 இல் திப்பு வசம் அதிகாரம் வந்தது. பின்னர் திப்பு 1784 இல் அப்போதைய மொகலாய பேரரசின் அதிகாரப்பூர்வ இளவரசர்களில் ஒருவராக தன்னை அங்கீகரிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். ஆனால் அது அன்றைய மொகலாய அரசரான மூன்றாம் ஷா ஆலமால் நிராகரிக்கப்பட்டது.[1] இது திப்புவுக்கு பிரச்சனையான விஷயமாகியது. திப்புவை போல சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு ஆசை கொண்ட ஒருவருக்கு அவருடைய இஸ்லாமிய படைவீரர்கள் மத்தியில் தான் ஒரு அங்கீகாரமற்ற கிளர்ச்சியாளன் எனும் பிம்பம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியும். எனவே தன்னை இஸ்லாமிய மதத்தினை பரப்பும் புனிதப்போராளியாகக் காட்டிக்கொள்ளவேண்டிய சூழலும் கட்டாயமும் திப்புவுக்கு ஏற்பட்டிருந்தது.

பொதுவாக திப்புவின் இஸ்லாமிய மதவெறிச்செயல்களை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட புனைவு என கூறும் நவீன மார்க்சிய மற்றும் இஸ்லாமியவாதிகள் திப்புவை மிகவும் பாராட்டி எழுதப்பட்ட மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானியின் ‘நிஷானி ஹைதூரி’ மிகுந்த பரவசத்துடன் திப்பு ‘விக்கிர ஆராதனையாளர்களை’ தரைமட்டமாக்கி அழித்ததை பாராட்டி பேசுவதை மறந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, கூர்க்கில் திப்புவின் வீரசாகசத்தை கிர்மானி பின்வருமாறு வர்ணிக்கிறார்: “வெற்றி கொண்ட சுல்தான் அங்கு அமீர்களையும் அதிகாரிகளையும் அதிக அளவில் அனுப்பி விக்கிரக ஆராதனையாளர்களை தண்டித்து முழு பிரதேசத்தையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்.” கிர்மானி வர்ணிக்கிறார்: “(திப்புவின் தளபதியான ஹ¤சைன் அலி கான் பக்ஷி) எட்டாயிரம் ஆண்கள், பெண்கள். குழந்தைகள் ஆகியோரை சிறைப்படுத்தி திரும்பினார். இதேவிதமாக மான்ஷியர் லாலே இந்த மனிதர்களின் பெரும் கூட்டமொன்றை கால்நடை கூட்டம் போல கொண்டு வந்தார்.”[2] மேலும் திருவிதாங்கூர் மீதான படையெடுப்பின் போது “சுல்தானின் வீரர்கள் உருவிய வாட்களுடன் மூன்று மைல்களுக்கு அவர்கள் பார்த்த கா·பீர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரத்தை இல்லாமலாக்கினர்” என கூறுகிறார் கிர்மானி. (தேசபக்தராக சித்தரிக்கப்படும் திப்பு இந்தியர்களை தாக்கி சிறைப்படுத்த ஐரோப்பிய அதிகாரிகளை பயன்படுத்த தயங்கவில்லை என்பது ஒரு முரண்நகை) கிர்மானி இந்த நிகழ்ச்சியில் எண்பதாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறுகிறார். இது அதீத எண்ணிக்கை என பல வரலாற்றறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[3] ஆனால் இப்படி ஒரு சுயசரிதையை தன் அரசவை வரலாற்றெழுத்தாளனால் எழுத வேண்டிய அவசியம் திப்புவுக்கு ஏன் ஏற்பட்டது? தன்னை விக்கிர ஆராதனையாளர்களை தண்டிக்கும் இஸ்லாமிய அரசனாக காட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளது என்பதும் அவ்வாறு காட்ட திப்பு தயங்கவில்லை என்பதுமே உண்மை. இதன் விளைவே கூர்க் முதல் மலபார் வரையிலான தமது படையெடுப்புகளில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது திப்பு காட்டிய மதவெறி வெளிப்பாடுகள். ஐரோப்பியருடன் தொடர்பற்ற கேரள சிரிய கிறிஸ்தவர்களும் திப்புவின் படையெடுப்பில் அழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.[4]

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் அல்லது சாம்ராஜ்யவாதிகள் திப்புவினை மோசமாக சித்தரிக்க எண்ணினார்கள் எனவே அவரது செயல்களைக் குறித்து கொடூரமாக வேண்டுமென்றே குறிப்பிட்டார்கள் என கொள்ள முடியுமா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. திப்பு தனது சக-இஸ்லாமிய தளபதிகளுக்கும் தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள் அவரது இஸ்லாமிய மதவெறியையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக சையது அப்துல் துலாய்க்கு திப்பு ஜனவரி 18 1790 இல் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடலாம்: “அல்லா மற்றும் அல்லாவின் தூதரான முகமதுவின் அருளால் கோழிக்கோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னமும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள் ஆனால் இவர்களையும் நான் வெகு விரைவில் இஸ்லாத்தை தழுவ செய்துவிடுவேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஜிகாத் ஆகும்.” [5] கேரளத்தில் திப்புவின் படையெடுப்பினை விவரிக்கையில் அது செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகியவர்களின் படையெடுப்பைப் போல பேரழிவை ஏற்படுத்தியதாக கேரள வரலாற்றாசிரியர் பி.எஸ்.சையது முகமது கூறுகிறார்.[6] டாக்டர்.சி.கே.கரீம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட ‘மலபார் மானுவல்’ திப்பு சுல்தான் கேரள படையெடுப்பின் போது தனது அதிகாரிகளுக்கு பிறப்பித்த ஆணையை தெளிவாக்குகிறது, “ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்கும் படி செய்ய வேண்டும். அவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் அன்பாகவோ ஆசை காட்டியோ அல்லது பலாத்காரமாகவோ அவர்களை இஸ்லாமை தழுவச் செய்ய வேண்டும்.”[7] திப்புவின் தமிழக படையெடுப்பின் போது (1790) பிற மதத்தவருடன் வாழ்ந்த முகமதிய பெண்களை திப்பு கழுவேற்றிக் கொன்றார். “மறுமை அச்சமும் வெட்கமும் இல்லாமல் தங்களுடைய களங்கமான உடல்களை பிறமதத்தவர்களுக்கு கொடுத்த முகமதிய பெண்கள் சுல்தானின் ஆணைப்படி கழுவேற்றப்பட்டனர்” என மிர் ஹ¤சைன் கிர்மானி விவரிக்கிறார்.[8]

திப்புவின் பிற மத துவேஷம் – தன்னுடைய படையெடுப்புகளை மதப்போர்களாக முரசறைந்த விதம் மராட்டியருக்கு திப்புவின் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளை திப்பு நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவே 1787 இல் மராட்டியருடன் அவர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் மராட்டிய பேஷ்வா தன்னை பாதுஷா என அழைக்க திப்பு கேட்டுக்கொண்டதை மராட்டியர்கள் மறுத்துவிட்டனர். இறுதியாக இருவருக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் திப்பு நவாப் என மராட்டியரால் அங்கீகரிக்கப்பட்டார்.[9] ஆழ்மனதில் பதிந்துவிட்டன என்றால் தமது கனவுகளுக்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆவணப்படுத்தி வந்தார். இக்கனவுகள் மூலம் அவர் தம்மை மதத்தினை காப்பாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிறவி என்று எண்ணிக்கொண்டார். இது எந்த அளவுக்கு அவர் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் தனது கனவுகளில் தம் அரசியல் எதிரிகளை கூட மதரீதியிலான எதிரிகளாக ‘கா·பிர்களாக’ உணரலானார்[10] 1792 இல் காரன்வாலிஸ் திப்புவை ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் தோற்கடித்த போது தன் அரசபதவியை காப்பாற்றிக்கொள்ள திப்பு தன் அரசில் பாதியை ஆங்கிலேயர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டதுடன் தன் மைந்தர்களையும் பிணை கைதிகளாக ஆங்கிலேயரிடம் அனுப்பிவைத்தார்.[11] திப்பு தன்னை ஒரு அரசன் என ஆங்கிலேயர் அங்கீகரிக்க என்ன சமரசத்தையும் செய்ய தயாராகியிருந்தார். இறுதி மைசூர் போர் கூட திப்பு ஆங்கிலேயரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது சரியான நேரத்தில் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கப்படாமல் ஆங்கிலேயர் தாக்குதலை தொடங்கிவிட்டதால் என ஒரு கருத்து நிலவுகிறது.[12] ஆனால் ஆங்கிலேயரோ ஹைதராபாத் நிஜாமிடம் நெருக்கமாக இருந்த அளவு திப்புவினை நம்பவில்லை. திப்புவின் நடத்தையும் இதற்கு ஒரு காரணம். திப்பு மிகவும் நட்புறவு கொண்டிருந்த பிரான்ஸ¤காரர்கள் குறித்து ஆங்கிலேயரிடமும் ஆங்கிலேயர் குறித்து ஒட்டோமான் சுல்தானிடமும், மராட்டியர்களைக் குறித்து ஒட்டோமான் சுல்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய முஸ்லீம் மன்னரிடமும் குறை கூறி கடிதங்கள் எழுதியிருந்தார். திப்பு பிரெஞ்ச்காரர்களிடம் நல்லுறவினை வளர்த்த போதிலும் கூட ஆங்கிலேய அதிகாரியான வெல்லஸ்லியிடம் பிரெஞ்சுக்காரர்களைக் குறித்து “மோசமான போக்கு கொண்டவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள், மானுட குலத்தின் எதிரிகள்” என கூறியிருந்தார்.[13]

அவர் ஓட்டோமான் சுல்தானுக்கும் ஆப்கானிஸ்தானிய அரசருக்கும் கா·பீர்களுக்கு எதிராக ஜிகாது செய்யும் ஒரு இஸ்லாமிய அரசன் எனும் அடிப்படையில் உதவிகள் கோரினார். திப்பு இஸ்தான்புல்லுக்கு முதலில் அனுப்பிய தூதுக்குழு 17 நவம்பர் 1785 இல் புறப்பட்டு இஸ்தான்புல்லை 25 செப்டம்பர் 1787 இல் சென்றடடைந்தது. ஜனவரி 1790 மீண்டும் திப்புவிடம் திரும்பி வந்தது. இந்த தூதுக்குழு மூலம் திப்பு தாம் ஓட்டோமான் சுல்தானை உலக முஸ்லீம்களின் காலீப்பாக தாம் கருதி மரியாதை செய்வதாகவும் மைசூரில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைக்கு உதவி செய்யவும் கோரிக்கை வைத்ததுடன் ஈராக்கில் உள்ள ஷியா புனித தலத்துக்கு நீர் கால்வாய் கட்ட தாம் உதவுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குரேஷி திப்புவின் முக்கிய நோக்கம் திப்புவை ஒருசுல்தானாக ஒட்டோமான் அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது என குறிப்பிடுகிறார்.[14] இதில் திப்பு ஓரளவு வெற்றி அடைந்தார். திப்பு ஒட்டோமான் சுல்தானின் மத உணர்வுகளை தூண்டி தமக்கு ஆதரவான இராணுவ உதவிக்கு அவரை பயன்படுத்திட முனைந்தார். இதில் பொய் பிரச்சாரத்தை பயன்படுத்தவும் திப்பு தயங்கவில்லை. உதாரணமாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை தாக்கி மதமாற்றுவதாகவும் மசூதிகளை கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்குவதாகவும் தம் கடிதத்தில் திப்பு குறிப்பிடுகிறார். பத்தாயிரம் முஸ்லீம் குழந்தைகள் வலுகட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் முஸ்லீம் மசூதிகளும் முஸ்லீம் இடுகாடுகளும் கிறிஸ்தவ சர்ச்களாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[15] இதனை திப்பு இராஜதந்திரம் என நினைத்தாரா அல்லது இஸ்லாமிய மதப்பற்றினால் உண்மையாகவே ஒட்டோமான் காலீப் மேலாதிக்கத்தினை ஏற்றாரா?

பிரிட்டிஷார் இதற்கிடையில் திப்புவின் இந்த முயற்சிகளை அறிந்துகொண்டனர். 1795 காலகட்டத்தில் பிரெஞ்சு அதிகாரிகளுடனும் திப்பு தம்முடைய இந்த ஒட்டோமான் பேரரசு தொடர்பினைக் குறித்து விவரித்திருந்தார். பிரெஞ்சு-ஒட்டோமான் உறவுகள் பிரெஞ்சு-மைசூர் உறவுகள் மூலம் வலுவான உறவினை ஏற்படுத்துவது இந்த பேச்சுகளின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1798 இல் பிரான்ஸ¤ எகிப்தின் மீது படையெடுத்தது ஒட்டோமான் சுல்தானியத்துக்கு பிரான்ஸ¤டனான உறவினை கடுமையாக பாதித்தது. இதனை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டோமான் சுல்தான் பிரான்ஸினை தூற்றி அவர்கள் இஸ்லாமுக்கு விரோதமாக செயல்படுவதைக் குறித்து கடிதம் எழுதி அதனை சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரி மூலம் திப்புவுக்கு சேர்ப்பித்தார். இக்கடிதத்தில் பிரான்ஸின் விடுதலைக் கோட்பாடு (liberty) மதநம்பிக்கைகளை பாழ்படுத்தி அழிப்பதாகும் என சுல்தான் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திப்பு அளித்த பதில் கடிதம் மிகவும் முக்கியமானது. இக்கடிதத்தில் (பிப்ரவரி 10 1799) திப்பு மராட்டியர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்றும், பிரிட்டிஷார்களுக்கு எதிராக தாம் போராடுவதாகவும், கூறியதுடன் வகாபிகளுக்கு எதிராக மெக்கா மதினா கர்பலா ஆகிய இடங்களில் தாம் புனரமைப்பில் உதவுவதாகவும் கூறினார்.[16] மேலும் தமது கடிதத்தில் பிரான்ஸ¤ ஒட்டோமான் சுல்தானுக்கு எதிரானது இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அதனுடன் முஸ்லீம்கள் உறவு கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.[17]

அண்மை காலமாக பரப்பப்படும் திப்பு ஆதரவு பிரச்சார மாயைகள் எந்த அளவுக்கு உண்மையை திரிக்கின்றன என்பதற்கு இந்த இடத்தில் ஒரு நல்ல உதாரணமாக இர்பான் ஹபீப்பினை குறிப்பிடலாம். “திப்பு ஒட்டோமான் சுல்தானை தனக்கு சமமானவராக பார்த்தாரே ஒழிய தனக்கு மேலானவராக பார்க்கவில்லை.” என்றும் ஓட்டோமான் சுல்தானை காலிப் என திப்பு அழைக்கவேயில்லை என்றும் ஹபீப் வாதிடுகிறார்.[18] ஆனால் முஸா·பர் ஆலம் & சுப்பிரமணியம் திப்பு-ஒட்டோமான் சுல்தான் கடிதங்களினை விரிவாக ஆராய்ச்சி செய்த தரவுகளின் மூலம் ஹபீப்பின் இந்த வாதத்தின் திரிபுகளை விளக்குகின்றனர். “1786-88 வரையிலான ஒட்டோமான் சுல்தான் – திப்பு ஆகியோரின் கடிதங்களை படிக்கும் போது தெள்ளத்தெளிவாக அது ஒரு பேரரசுக்கும் சிற்றரசுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்பது தெளிவாகிவிடும். மைசூர் தூதர் ஒட்டோமான் சுல்தானுக்கு எழுதும் கடிதத்தில் ‘ஈமான் கொண்ட சுல்தான்கள் அனைவருக்கும் அடைக்கலமே’ என ஒட்டோமான் சுல்தானை விளிக்கிறார். திப்புவே நேரடியாக எழுதிய கடிதத்தில்’ (ஒட்டோமான் சுல்தானின்) சமூகத்தில் தான் விண்ணப்பிப்பதாக’ கூறுகிறார். ஓட்டோமான் சுல்தானும் திப்புவின் கோரிக்கையை ‘விண்ணப்பம்’ என்றே கூறுகிறார். மேலும் திப்புவை குறிக்கும் ஒட்டோமான் சுல்தானின் விளிகள் எவ்வித அரச மரியாதைக்குரிய பதங்களும் இல்லாதவையாகவே அமைகின்றன. பின்னர் தொடரும் கடிதங்களிலும் இந்த சமமற்றத்தன்மையே தொடர்கிறது. திப்பு ஒரு அரசருக்கும் தாழ்வான விளிகளாலேயே அழைக்கப்படுகிறார். ஒட்டோமான் சுல்தான் திப்புவிடம் பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறும் கடிதத்துக்கு பதிலளிக்கையில் திப்பு தெளிவாக ஒட்டோமான் சுல்தானை காலிப் என்றே அழைக்கிறார்.”[19] ஆக, திப்புவுக்கு தேசபக்தி, வீரம் இத்யாதிகளை பூச எந்த அளவு வரலாற்று திரிபுகளை இர்·பான் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். திப்புவின் வீரத்தை போலவே அவர் மீது பூசப்படும் மற்றொரு பூச்சு அவருக்கு முற்போக்கு ஜனநாயக சமத்துவ எண்ணங்கள் இருந்ததாக பரப்பப்படும் பிரச்சாரமாகும். உதாரணமாக திப்பு அவர் காலத்திய எந்த குறுநில மன்னனையும் போலவே தன் நாட்டில் வசித்த எந்த பெண்ணையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இருந்தது என்பதுடன் அதற்காகவே தன் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்கிற எந்த வீட்டு படுக்கையறைக்குள்ளும் நுழைந்து விரும்புகிற பெண்ணை தூக்கி வர திப்புவின் வலதுகரமாக விளங்கிய அலி ராஜாகான் உரிமை பெற்றிருந்தான்.[20]

திப்புவின் செயல்பாடுகளை முழுமையாக பார்த்தால் அவரது அவசிய தேவையாக விளங்கியவை என்னென்ன என்பது தெளிவாக விளங்கும்.
1. தன்னை ஒரு இஸ்லாமிய அரசனாக ஒரு அதிகாரபூர்வ இஸ்லாமிய பீடம் (இந்தியாவிற்கு வெளியில் அமைந்ததென்றாலும்) அங்கீகரிக்க வேண்டும்.
2. இந்தியாவின் இஸ்லாமிய பேரரசின் வழித்தோன்றலாக தான் கருதப்பட வேண்டும்.
3. தன்னை இஸ்லாமிய அகிலத்தின் ஒரு பகுதியாக – தாழ்ந்த நிலையிலேனும்- இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அபிலாஷைகளுக்கு மேலாக ஒரு தொலைநோக்கு பார்வையை திப்பு உருவாக்கவில்லை. மராட்டியர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டாலும் அவர்களைக் குறித்து ஒரு வெளிநாட்டு மதபீட-அரசனிடம் குற்றம் சாட்டியதாகட்டும், பிரான்ஸ¤டன் ஒப்பந்தமும் நல்லுறவும் வளர்த்துக் கொண்டே மத அடிப்படையில் அவர்களை விரோதிகள் என புறந்தள்ளத் தயங்காததாகட்டும், ஒட்டோமான் காலீபியத்திடம் அங்கீகாரத்துக்காக ஏறத்தாழ மண்டியிட்டு அதனிடம் அதீத நம்பிக்கை வைத்ததாகட்டும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தனது மைந்தர்களையே பிணைக்கைதிகளாக பிரிட்டிஷாரிடம் பணயம் வைக்க முன்வந்ததாகட்டும், திப்பு தனது அங்கீகாரம் எனும் சிறிய இலாபத்துக்காக தொலைநோக்கில்லாமல் நடந்து கொண்ட ஒரு பெரும் ஆணவக்காரரும் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு வெறிக்காக மதத்தை பயன்படுத்த தயங்காத குறுநில மன்னனுமே அன்றி வேறெப்படியும் திகழவில்லை. இன்னும் சொன்னால் திப்புவின் மதவெறி பிடித்த தாக்குதல்கள் பிரிட்டிஷாருக்கு தங்கள் பிடியை மேலும் வலிமையாக்கிட மிகவும் உதவின. புகழ் பெற்ற காந்திய சிரிய கிறிஸ்தவரும் தேசியவாதியுமான ஜியார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கையை எழுதும் அவருடைய சந்ததி ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப் திருவிதாங்கூர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு கீழே வர திப்புவின் படையெடுப்பே ஒரு முக்கிய காரணமாக விளங்கியது என்கிறார்.[21]

நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலான மத அடிப்படைவாத சகோதரத்துவம் எனும் கோட்பாட்டினை வலியுறுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது பதேக் அலி திப்புவின் பரிதாபகரமான வாழ்க்கை. இன்றைக்கும் (பிப்ரவரி 2 2008: http://en.wikipedia.org/wiki/Sultan#Southern_Asia) விக்கிபீடியா விவரிக்கும் இந்தியா சுல்தானிய பரம்பரைகளில் திப்புவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது ஒரு கொடுமையான உண்மை. ஒரு வேளை திப்புவின் ஆன்மாவுக்கு (அப்படி ஒன்று இருக்குமானால்) கிடைக்கும் ஒரே ஆறுதல் அதற்கு இன்று கிடைத்திருக்கும் கற்பனையான வீரம் மற்றும் விவேகம் குறித்த பூச்சுக்கள்தாம். பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு இந்தியாவின் மீது படையெடுத்து ஆக்கிரமித்த இஸ்லாமிய அரசர்களின் பெயர்களை தமது ஏவுகணைகளுக்கு வைப்பது வழக்கம். கஸ்னாவி, கோரி ஆகிய பெயர்களை உதாரணமாக கூறலாம். அத்துடன் தமது ஏவுகணைக்கு திப்புவின் பெயரையும் வைத்துள்ளது.[22] ஆக, திப்பு இஸ்லாமிய ஆதிக்க-மேன்மைவாத மனோபாவ வரைப்படத்தில் ஒரு முக்கியபுள்ளியாக இன்றும் திகழ்வதற்கு இது மற்றுமொரு பிரத்யட்ச உதாரணமாகும். தெற்காசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒருவிதத்தில் இன்றைய காலிபத்தியமாக உருவெடுத்திருக்கும் சவூதிய வகாபியிசத்தின் முன் தங்கள் அங்கீகாரங்களை தேடுகின்றனர்…உள்ளூர் தர்காக்களை இடிப்பது முதல் ‘மார்க்கநெறி நடக்காத’தாக தாங்கள் கருதும் பெண்களை வெட்டிக்கொல்வது ஊடாக தற்கொலை-ஜிகாதிகளாக மரணிப்பது வரை இந்த அங்கீகாரம் தேடும் முயற்சிதான். இத்தகைய மனப்பாங்கின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக விளங்கியவரான திப்புவை இவர்கள் ஆதர்சிப்பது வியப்பல்ல. ஆனால் திப்புவின் முடிவு தரும் யதார்த்த பாடம் இந்த கற்பனை பூச்சுக்களால் மறக்கடிப்படுகிறது என்பதுதான் உண்மை.

‘Those who cannot remember the past are condemned to repeat it.’
George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner’s, 1905, page 284

(இன்றைய அரசியல் நோக்க திரிப்புகளுக்கு அப்பால் உண்மை வரலாற்றை தேடவேண்டும் என்று எழுதி இக்கட்டுரையை எழுதவும் இது தொடர்பான நூல்களைத் தேடவும் உத்வேகம் அளித்த அன்பு சகோதரர் திரு இப்னு பஷீர் அவர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)

சான்றுகள்:
1.இக்திதார் கராமத் சீமா, ‘Tipu Sultan’s relations with Ottoman emperor’, பிஸினஸ் ரெக்கார்டர் (பாகிஸ்தான்), மே 5-12, 2007
2.மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானி, ‘நிஷானி ஹைதூரி’, அத்தியாயம் ஆறு பக்.70 & அத்தியாயம் 12 பக். 153
3.Mohibbul Hasan The History of Tipu Sultan (Delhi) 1971 pp362-3 (விக்கிபீடியா கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டது.)
4.பார்க்க: ‘The Tiger and the Syrian Christians: Tipu Sultan’s ‘Padayottam’ : சிரிய கிறிஸ்தவ இணையதளம்:

The Tiger and the Syrian Christians: Tipu Sultan’s ‘Padayottam’


5.கே.எம்.பணிக்கர், பாஷா போஷிணி, ஆகஸ்ட் 1923
6.பி.எஸ்.சையது முகமது, கேரள முஸ்லீம் சரித்திரம், மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை, சி.நந்தகோபால் மேனன், “Tipu’s own testimony”, இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) மார்ச் 10 1990
7. முனைவர்.சி.கே.கரீம், மலபார் மானுவல், சைத்திரம் பதிப்பகம் (கேரள பல்கலைகழக துணையுடனான வெளியீடு),பக்.507
8.கிர்மானி, அத்தியாயம் 13. பக்.162
9.இக்திதார் கராமத் சீமா
10.மக்மூத் ஹ¤சைன், ‘Dreams of Tipu Sultan’, Pakistan historical society, 1976 (மேற்கோள் காட்டப்பட்ட நூல். அன்னிமேரி ஷிம்மல், ‘Islam in the Indian Subcontinent’, BRILL, 1980) பக்.169
11.பேரா.ஷேக் அலி, Wars and Agreements (of Tipu Sultan) www.Tipusultan.org
12. Binita Mehta, ‘Tipu Sultan: The Citizen King’ (chapter 3 of ‘Widows, Pariahs, and Bayadères: India As Spectacle’), Bucknell University Press 2002, p.90
13.இக்திதார் கராமத் சீமா, 2007
14. கமால்.ஹைச்.கர்பத், ‘The Politicization of Islam Reconstructing Identity, State, Faith, and Community in the Late Ottoman State’, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரசுரம், 2002, பக். 50
15.அஸ்மி ஆஸ்கன், ‘Pan-Islamism: Indian Muslims, the Ottomans and Britain (1877-1924)’, BRILL,துருக்கி, 1997, பக்.12
16.கமால்.ஹைச்.கர்பத், பக். 51
17. அஸ்மி ஆஸ்கன் , பக்.13
18. இர்·பான் ஹபீப், “Introduction” in , State and diplomacy under Tipu Sulan: documents and essays (புது டெல்லி 2001) பக். xi-xii
19. முஸா·பர் ஆலம், சஞ்சய் சுப்பிரமணியம், ‘Indo-Persian Travels in the Age of Discoveries, 1400-1800’, காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், 2007 பக்.324-5
20. கேட்டி பிரிட்டில்பாங்க், ‘Tipu Sultan’s Search For Legitimacy’, மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை எம்.வி.காமத்தின் ‘Tipu Sultan: Coming to terms with the past’
21. ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப், ‘George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist’, ஓரியண்ட் லாங்க்மேன் 2003. பக்.15
22. உபேந்திர சவுத்ரி, ‘Missile capability — India vs Pakistan: Who is superior?’, The Hindu Businessline ஜூன் 3 2002


Series Navigation