தாயே தமிழே வணக்கம்!

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

கோமதி நடராஜன்


பள்ளிச்சீருடையில்
பவனி வந்த, பருவத்தில்
தமிழும் இலக்கணமும்
இஞ்சியென்றே இருந்தேன்.
கட்டுக் கட்டாய் புத்தகம்
சுமந்த, கல்லூாி காலத்தில்
கவிதை ஒன்று எழுதக்
கனவில் கூடக் கருதியதில்லை.
கல்விக் கடலின் ஒரு
அலையைக் கூடத் தீண்டாமல்
ஆழ்கடல் நீந்தி, அக்கரையும்
கண்டது போல்,
கல்விகூடம் விட்டுக்
களைத்து நின்ற வேளையிலே,
அன்னையே!
உன் விரல் நுனிதான் பட்டதோ இல்லை
கூந்தல் நுனிதான் தொட்டதோ,நானறியேன்.
இன்று ,ஒரு கடிதம் என்றாலும்
அதைக் கவிதை வடிவில் காட்டத் துடிக்கின்றேன்.
என் எண்ணக் குவியல்களை
எழுத்தோவியமாய்த் தீட்ட ஏடு தேடுகின்றேன்.
காதவழிக் கடந்து சென்றாலும்
அந்தக் கம்பர் வழி எதுவென்று தேடுகின்றேன்.
பார்வைக்கே எட்டாமல் போனாலும்,
அந்தப் பாரதியின் பாதையில்,பாதம் வைத்துப்
பயணம் போகத் துடிக்கின்றேன்.
அட்டா!உன் விரல் பட்டதற்கே
இத்தனையென்றால்,
உன் அங்கம் பட வாாி அணைத்திருந்தால்
அற்புதங்கள் படைத்திருக்க மாட்டேனா ?
உச்சி முகர்ந்து உள்ளம் குளிர வைத்திருந்தால்
உலகை வியக்க வைத்திருக்க மாட்டேனா ?
ஏனோ தொியவில்லை,
நீ என்னைத் தொட்டதோடு விட்டுவிட்டாய்.
ஆனாலும் அன்னையே!
நான் உன்னை விடமாட்டேன்.
எழுதி எழுதி உன்னை என்னருகில் இழுப்பேன்,
நீ நனைய நனையக் கவிதை மழை பொழிவேன்.
நீயும் சேய் குரல் கேட்டு,
ஓடிவரும் தாயென வருவாய்,
அமுதென ஆசியை,
அள்ளி அள்ளித் தருவாய்.
அதுவரை,
என் எண்ணமும் ஓயாது,
எழுத்தாணியும் சாயாது.

***
சேய்கை எழுதியச் சித்திரம் போல,
மழலை வாய் வழி வந்த மொழி போல,
எதுகை இல்லை மோனையில்லை,
நானும் எழுதினேன் புதுக்கவிதை.
மறுக்கவில்லை பழிக்கவில்லை,
ஏற்றுக் கொண்டாள் தமிழன்னை.

ngomathi@rediffmail.co

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts