தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
விடியற்காலை மணி நாலு. அலாரம் ஒலித்தது. விஜயா தூக்கக் கலக்கத்துடனேயே கையை நீட்டி பட்டனை அழுத்தி அலாரத்தை நிறுத்தினாள்.
“என்னங்க! வம்சீயை கொஞ்சம் எழுப்பி விடுங்களேன்.” கண்களைத் திறக்காமலேயே சொன்னாள்.
“அவனை நீயே எழுப்பு. எப்படியும் நான் ஐந்தரை மணிக்கு எழுந்து கொள்ளணும். ஒரு மணி நேரமாவது என்னை நிம்மதியாக தூங்க விடு.” எரிச்சலுடன் சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் சேஷாத்ரி.
வேறு விழியில்லாமல் விஜயா எழுந்து கொண்டு மகனுடைய அறையை நோக்கி நடந்தாள்.
“வம்சீ! எழுந்து கொள். மணி நாலு ஆகிவிட்டது.” தட்டி எழுப்பினாள்.
ஆழமான உறக்கத்தில் இருந்த வம்சீ திடுக்கிட்டு எழுந்து கொண்டான். கண்களை வலுக்கட்டாயமாக திறந்தவன் “அம்மா! ப்ளீஸ்… சற்று நேரம் தூங்க விடு. தூக்கம் வருகிறது. ஐந்து மணிக்கு எழுப்பு” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
“தினமும் இதே ரோதனையாகிவிட்டது உன்னோடு. முதலில் எழுந்துகொள். விழிப்பு வரும் வரையில் அப்படித்தான் தூக்கக் கலக்கமாக இருக்கும். போய் பல் தேய்த்து விட்டு வா. டீ பொட்டு தருகிறேன்.” வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்தாள். டம்ளரில் நீரை எடுத்து வந்து கண்களைத் துடைத்து விட்டாள்.
“ப்ளீஸ் ம்மமீ! உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன். நாளைக்கு படிக்கிறேன். இன்றைக்கு விட்டு விடு.” மறுபடியும் கட்டிலில் படுக்கப் போனான்.
“சொன்னால் கேட்டுக் கொள் வம்சீ! என் உயிரை எடுக்காதே. உன் படிப்பு முடிவதற்குள் என் உயிரே போய் விடும் போலிருக்கு. அலாரம் வைத்தாலும் நிறுத்திவிட்டு தூங்குகிறாயே என்று நானே வந்து எழுப்புகிறேன். அப்படியும் எழுந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி? ஒரு நாள் போல் உன்னுடன் இதே பிரச்னைதான். படிக்க மாட்டேன் என்றால் எப்படி முடியும்? முதலில் பல் தேய்க்கப் போ.”
பக்கத்து அறையிலிருந்து “வம்சீ! எழுந்துகொள்” என்று சேஷாத்ரி கத்தியது கேட்டதும் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு வேகமாக பாத்ரூமை நோக்கி நடந்தான்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வம்சீக்கு சமீபத்தில்தான் பதினேழு வயது முடிந்திருந்தது. பிளஸ் டூ தேர்வுகள் நடக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. பிளஸ் டூ முதல் வருடத்திலிருந்தே எம்.செட். கோச்சிங் தரும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். அந்தப் பள்ளியில் இரண்டரை மணி வரையில் எம்.செட். கோச்சிங் வகுப்புகளை நடத்துவார்கள். இந்த கோச்சங் பதினோராம் வகுப்பிலேயே தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் முடிப்பார்கள்.
வம்சீ கணக்கிலும், சயின்ஸ் பாடத்திலும் பின் தங்கியிருப்பதால் ட்யுஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கணக்கு வாத்தியாரின் வீட்டுக்கு காலை ஆறு மணிக்கு போக வேண்டும். அந்த வாத்தியார் எவ்வளவு பிசி என்றால் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையில் ஒரு பேட்ச், ஏழிலிருந்து எட்டு மணி வரையில் ஒரு பேட்ச், மறு படியும் மாலை ஆறிலிருந்து எட்டு மணி வரையில் வரிசையாக இரண்டு பேட்ச்கள் ட்யுஷன் எடுத்து வந்தார். வேலையிலிருந்து ரிடையர் ஆன பிறகு அவருடைய வருமானம் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதைத் தவிர இரண்டு எம்.செட். கோச்சங் செண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒரு மணி நேரம் வகுப்பு எடுப்பதற்காக வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காரிலேயே அழைத்துப் போய் மறுபடியும் வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அவர் கணக்கில் புலி. மாணவர்களுக்கு புரியும் விதமாக சொல்லித் தருவார் என்றும், ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார் என்றும் பெயர் பெற்று இருந்தார்.
காலையில் எம்.செட். மாணவர்களுக்கும் மாலையில் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கும் வகுப்புகளை எடுப்பார். தெருவுக்கு ஒரு கோச்சங் செண்டரும், மூலைக்கு ஒரு தனியார் கல்லூரியும் முளைத்த பிறகு கணக்கு மற்றும் சயின்ஸ் வாத்தியார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து விட்டது. பெற்றோர்களும் எப்படியாவது தம் குழந்தைகளை எம்.செட். எழுத வைத்து சீட் வாங்கி விட வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலையாத குறையாக தவித்துக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஆறுமணிக்கு ட்யுஷன் தொடங்கி விடும் என்பதால் மாணவர்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து தயாராகி கிளம்ப வேண்டும். வகுப்பு நடக்கும் இடம் ரொம்ப தொலைவு என்றால் தந்தை ஸ்கூட்டரிலேயோ காரிலேயோ கொண்டு போய் விடுவார். வாத்தியார் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை அன்றாடம் செய்து கொண்டு போகவில்லை என்றால் வகுப்பிலிருந்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் வம்சீயை தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுப்பி, வீட்டுப் பாடத்தை செய்ய வைப்பார்கள். ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த வம்சிக்கு ஒரு நாளுக்கு ஆறு ஏழு மணிநேரம் தூங்கும் நேரத்தைத் தவிர கொஞ்சம் கூட ஓய்வு என்பதே கிடையாது.
விஜயாவும் சேஷாத்ரியும் சேர்ந்து மகனுக்காக டைம்டேபிள் போட்டார்கள். காலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரையில் கணக்குப் பாடத்தின் ஹோம்வர்க். பிறகு ஆறுமணியிலிருந்து ஏழுமணி வரையில் ட்யூஷன். ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரையில் வேறு ஒரு வாத்தியாரிடம் ·பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ட்யூஷன்.
பிறகு வீட்டுக்கு வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு கிளம்ப வேண்டும். ஒன்பதிலிருந்து இரண்டு மணி வரையில் பள்ளியின் நேரம். பிற்பகல் இரண்டரை மணி முதல் நாலரை மணி வரையில் அங்கேயே எம்.செட். கோச்சிங் கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து முகம் கழுவிக் கொண்டு டிபன் சாப்பிட்ட பிறகு மாலை ஏழுமணி முதல் ஒன்பது மணி வரையில் பள்ளிக் கூடத்தில் கொடுத்த பாடங்களை படிக்கணும். ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கி மறுநாள் காலை நான்கு மணிக்கு விழித்துக் கொள்ளணும்.
விஜயா டீ தயாரித்து எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள். மகன் மேஜையின் முன்னால் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற நிம்மதியுடன் சென்றாள். ஐந்து மணி வரையில் வீட்டு பாடத்தை செய்து முடித்துவிட்டு, தாய் கொடுத்த பாலையும், வேக வைத்த முட்டையையும் சாப்பிட்டுவிட்டு ட்யூஷனுக்குக் கிளம்பினான். வாத்தியார் வீடு கொஞ்சம் தொலைவு என்பதால் ஐந்தரை மணிக்கு சேஷாத்ரி மகனை கொண்டு போய் விட்டு விட்டு வருவான். கடந்த பதினெட்டு மாதங்களாக ஒரு தவம் போல் இஞ்ஜினியரிங் சீட்டுக்காக மகனுடன் சேர்ந்து விஜயாவும், சேஷாத்ரியும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
மூத்த மகன் வருண் வம்சியை விட இரண்டு வருடங்கள் பெரியவன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் நல்ல ரேங்க் வாங்கி கரக்பூரில் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே அவன் புத்திசாலி. அதோடு பெற்றோர்கள் செய்து கொடுத்த வசதிகளை பயன்படுத்திக் கொண்டு, கடுமையாக உழைத்து ஐ.ஐ.டி.யில் இடம் பெற்று விட்டான்.
வருணுடன் ஒப்பிடும் போது வம்சி படிப்பில் கொஞ்சம் பின் தங்கியிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணனை போல் உழைக்க வேண்டும் என்ற பிடிவாதமோ, படிப்பில் ஆர்வமோ இருக்கவில்லை.
“பெரியவனுடன் நமக்கு எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை. இவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் படி .. படி என்று சொல்ல வேண்டியிருக்கு. கொஞ்சம் கூட படிப்பில் கவனமே இல்லை. இந்த காம்பிடீஷன் யுகத்தில் படிப்பு இல்லை என்றால் எப்படி பிழைக்க முடியும்?” என்ற கவலை விஜயாவை, சேஷாத்ரியை பிடித்துக் கொண்டுவிட்டது.
சேஷாத்ரி ஒரு கம்பெனியில் இஞ்ஜினியர். விஜயா வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த வசதிகளுக்கும் குறையில்லாத குடித்தனம். குழந்தைகள் இருவருக்கும் நல்ல படிப்பு சொல்லிக் கொடுப்பதுதான், தாம் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய சொத்து என்று நம்பினார்கள்.
குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, பெரிய படிப்புகளை சொல்லிக் கொடுத்தால் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. டொனேஷன் கொடுத்து சீட் வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாததால், கஷ்டப்பட்டு படித்து வீட் வாங்க வேண்டும் என்று குழந்தைகளிடம் பத்தாவது படிக்கும் போதே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளின் படிப்புக்காக சினிமா, டிராமா, லீவுக்கு வெளி ஊர்களுக்கு போவது எல்லாம் நிறுத்தி விடுவார்கள். செலவை பார்க்காமல் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்து, பேப்பர், பேனா, புத்தகம் என்று எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்து குழந்தைகளின் ஒளி மயமான எதிர்காலத்திற்கு நல்ல வழியை அமைத்துத் தர வேண்டும் என்று தவியாய் தவிக்கும் பெற்றோர்களின் அவர்களும் ஒருத்தர். ப்ளஸ் டூ முடித்து எம்.செட்டில் நல்ல ரேங்க கிடைத்து கல்லூரியல் சீட் கிடைத்துவிட்டால் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொள்ளலாமே. எம்.செட்டில் நல்ல ரேங்க் கிடைக்கவில்லை என்றால் பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்காது. பணம் கட்டி படிக்க வைப்பது சக்திக்கு மீஞ்சிய செயல் என்பதால் “படி படி” என்று இரவும் பகலும் குழந்தைகளின் பின்னாலேயே இருப்பார்கள்.
பெற்றோரின் யோசனைகள் இவ்வாறு இருக்கும் போது, வம்சீக்கு சிறுவயதிலிருந்து படிப்பு என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருந்தது. போறாத குறைக்கு வீட்டில் வருண் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். கிரிக்கெட் விளையாடுவதற்கு அழைத்தாலும் வர மாட்டான். வம்சீக்கு வி¨யாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் கிரிக்கெட் என்றால் உயிரையே விட்டு விடுவான். டி.வி. பார்ப்பதும், காமிக் புத்தகங்களை படிப்பதும் அவனுக்கு ரொம்ப விருப்பமான விஷயங்களாக இருந்து வந்தன. ஒன்றாம் வகுப்பிலிருந்தே தாய் தந்தையரின் வாயிலிருந்து படிப்பு என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் வந்ததாக அவனுக்கு நினைவு இல்லை. சற்று நேரம் வெறுமே உட்கார்ந்தால் போதும். “போய் படிக்கக் கூடாதா? எப்போ பார்த்தாலும் விளையாட்டுதானா?” என்று தாய் அதட்டுவாள். “நேரத்தை வீணாக்காதே. பரீட்சைக்கு முன்னால் படித்தால் போதும் என்று நினைப்பது சரியில்லை.” தந்தை பின்பாட்டு பாடுவார்.
ஒன்றாம் வகுப்பிலிருந்தே அவனுக்கு ட்யூஷன் தொடங்கிவிட்டது. பள்ளியிலிருந்த வந்ததுமே அடுத்த வீட்டு ஆன்டீயிடம் ட்யூஷன் படிக்கப் போகணும் என்றால் அவனுக்கு அழுகை பொங்கி வரும். ‘கொஞ்ச நேரம் கூட விளையாட விடமாட்டார்கள்’ என்று மனதிலேயே திட்டிக் கொள்வான்.
ட்யூஷன் முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது தாய் வங்கியிலிருந்து வந்துவிட்டிருப்பாள். டி.வி. முன்னால் உட்கார்ந்திருக்கும் வம்சியைப் பார்த்து “புத்தகத்தை எடு. கணக்கு போட்டு பாரு. மனப்பாடம் பண்ணு” என்று விழிகளை உருட்டுடி கோபமாக பார்ப்பாள்.
ஞாயிறு காலை வேளையில் தெரு பசங்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக சொன்னால் கோலைக் குற்றாவாளியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஞாயிறு அன்று தாய் தந்தை இருவரும் வீட்டில் இருப்பதால் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை இடுவார்கள். மாலை வேளையில் மட்டும் போனால் போகிறது என்று கொஞ்ச நேரம் விளையாட அனுமதிப்பார்கள். மற்றபடி நாள் முழுவதும் படிப்பு படிப்பு என்ற பஜனைதான். அந்த வார்த்தையைக் கேட்டாலே வம்சிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டுவரும். “எப்போ பார்த்தாலும் பாழாய் போன படிப்புதானா? நான் படிக்கவே மாட்டேன்” என்று நினைப்பான். பரீட்சையில் பெயில் ஆகி அம்மா, அப்பாவை அழ வைத்தால் என்ன என்ற அளவுக்கு எரிச்சல் ஏற்பட்டதும் உண்டு.
ஆறாவது ஏழாவது படிக்கும் போது அறுபது, எழுபது என்று மதிப்பெண்கள் வந்த போது விஜயாவும், சேஷாத்ரியும் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்கள். “இப்பவே இப்படி என்றால் பத்தாவதிலும், பிளஸ் டூவிலும் என்ன மதிப்பெண்கள் வாங்கப் போகிறாயோ? உனக்கு படிப்பின் மீது கொஞ்சம் கூட கவனம் இல்லை” என்று திட்டினார்கள்.
“அண்ணா படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் நானும் வாங்கியாகணும் என்று சட்டமா? அவன் ஒரு புத்தகப் புழு. அவனுக்கு கணக்குப் பாடம் நன்றாக வரும். எனக்கு வராது. அதனால் என்னவாம்?” பன்னிரெண்டு வயதில் வம்சி தனக்குள்ளேயே குமுறினான்.
பத்தாவது வகுப்புக்கு வந்த போது நண்பர்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும், ரேங்க் வாங்க வேண்டும் என்று போட்டி போடுவதை கவனித்த பிறகு அவனுடைய எண்ணங்களில் மாற்றம் வந்தது. படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். படிக்கும் போது எல்லாம் புரிவது போல் இருக்கும். ஆனால் பிறகு மறந்து போய்விடும். அதிலும் கணக்குப் பாடம் அவனுக்கு மூளையில் ஏற மறுத்தது. கணக்கில் ஐம்பதும் அறுபதும் மதிப்ப¦ண்கள் வந்த போது குற்றவாளியைப் போல் பார்த்தார்கள்.
“எனக்கு கணக்குப் பாடம் வராது. என்னைப் போய் முதல் க்ரூப் எடுக்கச் சொல்றீங்களே?” ப்ளஸ் டூவின் போது சயின்ஸ் குரூப் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தான் வம்சி.
“காமர்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டால் மேற்கொண்டு பெரிசா என்ன படிக்க முடியும்? கணக்குப் பாடம் உனக்கு கஷ்டமாக இருந்தால் ட்யூஷனுக்கு ஏற்பாடு செய்கிறேன். இப்போ உன்னை சேர்க்கப் போகும் பள்ளியில் அவர்களே எம்.செட். கோச்சிங்கும் கொடுப்பார்கள். கொஞ்சம் கவனம் செலுத்தி படித்தால் கணக்கு பாடம் புரியாமல் எப்படி போகும்?” தாய் தந்தை இருவரும் மாறி மாறி உபதேசம் செய்தார்கள்.
“அண்ணன் இஞ்ஜியரிங் படித்தால் நானும் அதையே படித்தாக வேண்டுமா? அதைத் தவிர வேறு படிப்பே இல்லையா? ஆயிரத்தெட்டு கோர்ஸ¤கள் இருக்கு. எனக்கு விருப்பம் இல்லாத சப்ஜெக்ட்டை படிக்க சொல்லி என்னை வற்புறுத்தாதீங்க.” வம்சி வாதம் புரிந்தான்.
“வம்சீ! ஆர்ட்ஸ் அல்லது காமர்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டாயானால் ன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ கடைசி வரையிலும் புரிபடாது. சிவில் சர்வீஸ் எக்ஸாம் மட்டும் ரொம்ப சுலபமா? அதற்கும் நன்றாக படிக்கணும். எல்லோருக்கும் ஐ.ஏ.எஸ். கிடைத்து விடுகிறதா என்ன? அப்படி கிடைக்காத பட்சத்தில் வெறும் பி.ஏ., எம்.ஏ. வை படித்து எதை சாதிக்க முடியும்? எம்.செட். எழுதினாய் என்றால் பிளஸ் டூவுக்கு பிறகு நீ எந்த லைனில் போகப் போகிறாயோ முன்னாடியே தெரிந்து விடுவதால் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும். உன்னுடைய நன்மைக்குத்தான் சொல்கிறோம். புரிந்துகொள். ஐ.ஐ.டி. உன் சக்திக்கு மிஞ்சியது என்று எங்களுக்கும் தெரியும். அதான் எம்.செட். கோச்சிங் எடுத்துக் கொள் என்று சொல்கிறோம்.”
“எம்.செட்டில் ரேங்க் வரவில்லை என்றால் என்ன செய்வீங்க? முன்னாடியே சொல்லி விடுகிறேன். கச்சிதமாக எனக்கு ரேங்க் வராது. பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம். ஏமாற்றம் அடையவும் வேண்டாம்.” வம்சி கோபமாக சொன்னான்.
“வராது வராது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எதுவும் வராது. மனம் இருந்தால் தானாக வழி பிறக்கும். எதைச் சாதிக்க வேண்டும் என்றாலும் பிடிவாதமும், விடா முயற்சியும் தேவை. இரண்டு வருடங்கள் கோச்சிங் எப்படியும் இருக்கும். ட்யூஷனுக்கும் ஏற்பாடு செய்கிறோம். கவனமாக படி. கிடைக்கவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” தந்தை விளக்கமாக சொன்னார்.
பெற்றோர் மட்டுமே இல்லை. நண்பர்கள் யார் வீட்டுக்கு போனாலும் அவர்களுடைய பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளை எம்.செட். பரீட்சைக்கு தயார் படுத்துவதில் முனைந்திருப்பதை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் சயின்ஸ் க்ரூப் எடுத்துக் கொண்டான். தாய் தந்தை கோச்சிங் வகுப்புகள் மற்றும் ட்யூஷனுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
முதல் டர்ம் பரீட்சையில் கணக்கு பாடத்திலும், ·பிசிக்ஸிலும் குறைந்த மதிப்பெண்கள் வந்ததும் வம்சிக்கு தன்னால் படிக்க முடியாது என்ற பயம் வந்து விட்டது. பெற்றோரும் கவலைப் பாட்டார்கள். படி படி என்ற நச்சரிப்பு மேலும் அதிகமாகி விட்டது. பிரைவேட் வாத்தியார் மேலும் மேலும் வீட்டுப் பாடங்களை கொடுத்து அடுத்த நானே செய்து கொண்டு வரச் சொன்னார். ஒரே நாளில் ஐம்பது கணக்குகளையும் போட்டு காண்பிக்க வேண்டும்.
பள்ளிப் படிப்பு, கோச்சிங் வகுப்புகள், ட்யூஷன், ஹோம் வர்க் என்று ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காததால் வம்சிக்கு படிப்பு என்றாலே மிரட்சியாக இருந்தது. அரை இறுதி பரீட்சையில் ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், மனதளவில் அவன் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறானோ தாய் தந்தை உணரவே இல்லை. சரியான தூக்கம் இல்லாமல், சக்திக்கு மிஞ்சிய உடல் உழைப்பாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டு துவண்டு போயிருந்தான். கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் ஏற்பட்டு, பார்த்ததுமே உடல் நலம் குன்றியவன் போல் தென்பட்டான். மகன் களைத்துப் போகிறானே என்று விஜயா பால், முட்டை, காம்பிளான் என்று சத்துள்ள உணவாக கொடுக்கத் தொடங்கினாள்.
“இந்த இரண்டு வருடங்களும் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும் வம்சீ! எங்களுடைய தவிப்பை புரிந்துகொள். எங்கள் கவலை எல்லாம் உன்னைப் பற்றிதான்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்.
கன்றுகுட்டியை போல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு துறுதுறுவென்று இருந்த வம்சியிடம் அந்த துள்ளல் எல்லாம் காணாமல் போய் விட்டது. கம்பீரமாக இருக்கத் தொடங்கினான். பேச்சும் குறைந்துவிட்டது. எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் படித்தாலும் மூளையில் எதுவும் ஏறுவதாகத் தெரியவில்லை. எப்படியோ முதலாவது ஆண்டு முடிந்தது. இரண்டாவது வருடம் படிப்பின் சுமை மேலும் அதிகமாகிவிட்டது. நாள் முழுவதும் படிப்பு சொல்லித் தருவதுடன் அடிக்கடி பரீட்சைகளை நடத்தி வந்தார்கள். தம் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியும், ரிசர்வேஷனும் நிறைந்த நம் நாட்டில் படிப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்று வம்சிக்குப் புரிந்தாலும் அந்தப் படிபபு தன் சக்திக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியது. ப்ள்ஸ் டூ தேர்வுகளுக்காக படிக்கணும். அது முடிந்ததும் எம்.செட். தேர்வுகள். அதைத் தவிர தனியார் கல்லூரிகள் நடத்தும் நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும். ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்றாவது கிடைக்கட்டும் என்று நான்கைந்து தனியார் கல்லூரிகளுக்கும் அப்ளிகேஷன் போட வைத்தார்கள். இவை எல்லாம் முடியணும் என்றால் இன்னும் நான்கைந்து மாதங்கள் படிக்க வேண்டியிருக்கும்.
இவ்வளவு படிப்பை தன்னால் படிக்க முடியாது என்று வம்சி மிரண்டு போயக் கொண்டிருந்தான்.
பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பித்தன. தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதே கேள்வித்தாள்கள் லீக் ஆகிவிட்டதென்று தேர்வுகளை ரத்து செய்து விட்டார்கள். மறு தேர்வுகள் ஒரு மாதததிற்கு பிறகு நடத்தப்படும் என்ற செய்திஏழு லட்சம் மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய வேதனையை, வருத்ததை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இரவு பகல் பாராமல், வெயில் மழையை பொருட்படுத்தாமல் படிப்பை ஒரு தவமாக மேற்கொண்ட மாணவர்களின் வேதனையை அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.
கடவுளே! மறுபடியும் படிக்க வேண்டுமா என்ற வேதனை. காளான்களைப் போல் தெருவுக்கு ஒரு கோச்சிங் செண்டரும், மூலைக்கொரு தனியார் கல்லூரியும் முளைத்து விட்டிருந்தன. தம்முடைய கல்லூரியின் பெயரும், புகழும் பரவ வேண்டும் என்பதற்காக பணத்தை அள்ளி வீசி கேள்வித்தாள்களை விலை கொடுத்து வாங்கி இரவோடு இரவாக தம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வுகளில் முதல் இடங்களை பெற்று வருகின்றன. அதை பேப்பர்களில் விளம்பரம் செய்து மாணவர்களையும், பெற்றோர்களையம் தம் பக்கம் ஈர்க்கும் வியாபார தந்திரம் இது. சிலருடைய சுயநலத்திற்காக இத்தனை லட்சம் மாணவர்கள் பலியாகிவிட்டார்கள். கல்வியை வியாபாரமாக்கி, பணத்தை சம்பாதிப்பதையே குறிக் கோளாக வைத்துக் கொண்டு செயல்படும் அந்த அரக்கர்களை சபிக்காதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
*****************************************************************************
“வம்சீ! எந்த முஹ¥ர்த்தத்தில் நீ வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாயோ உன் விஷயத்தில் எல்லாமே அதே போல் நடக்கிறது. எல்லாம் நம் தலையெழுத்து.” விஜயா நொந்து கொள்வது போல் சொன்னாள். மறுபடியும் மகனை பரீட்சைக்கு தயார் செய்ய வேண்டுமே என்ற வேதனை அவளுக்கு.
“பிளஸ் டூ தேர்வுகள் முடிந்துவிட்டால் எம்.செட்டுக்கு நன்றாக படிக்க முடியும் என்று நினைத்தால் இப்படியாகி விட்டதே.” சேஷாத்ரியின் குரலில் ஏமாற்றம் வெளிப்பட்டது.
வம்சிக்கு துக்கம் பொங்கி வந்தது. தன்னுடைய அறைக்குள் சென்று சின்னக் குழந்தையைப் போல் ஹோவென்று அழுதான். தேர்வுகளூக்காக மறுபடியும் படிக்க வேண்டும் என்ற நினைப்பே அவனை நிலைக்குலையச் செய்தது. தங்களுடைய வேதனையில் மூழ்கியிருந்த விஜயா, சேஷாத்ரி மகனின் மனநிலையை சரியாக எடை போட தவறிவிட்டார்கள்.
காலையில் மகனை எழுப்புவதற்காக வந்த விஜயா “வம்சீ!” என்று வீலென்று அலறினாள். “என்னங்க! இங்கே வந்து பாருங்களேன்” என்று குரலெடுத்து கத்தினாள். அந்த கத்தலை கேட்டு வேகமாக ஓடி வந்த சேஷாத்ரி கண்கள் நிலைகுத்த அப்படியே நின்று விட்டான். வம்சியின் உடல் மின் விசிறியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் எழுதிய கடிதம் மேஜை மீது படபடத்தது.
மம்மீ! டாடீ!
நான் செய்த இந்த காரியம் உங்களுக்கு வேதனையைத் தரும் என்ற எனக்குத் தெரியும்.
தொடக்கத்திலிருந்தே எனக்கு படிப்பு என்றால் பயம் அதிகம். பெரிய பெரிய படிப்புகளை என்னால் படிக்க முடியாது அம்மா! சிறுவயது முதல் படி படி என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து கேட்டு கேட்டு சலிப்படைந்து விட்டேன். இவ்வளவு பெரிய படிப்புகளை படிக்கும் திறமையோ, புத்திசாலித்தனமோ எனக்கு இல்லை. எல்லா பெற்றோர்களும் உங்களைப் போலவே தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எல்லோரும் டாக்டரோ, இஞ்ஜினியரோ ஆக வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?
அண்ணாவுக்கு திறமை இருந்தது. படிப்பில் ஆர்வம் இருந்தது. அவன் படித்தான். ஆர்வமும், திறமையும் இல்லாத என்னை கட்டாயப் படுத்தினால் மட்டும் படிப்பு வந்து விடுமா? இந்த படிப்பு டென்ஷனில் எனக்கு மூளையே குழம்பிப் போய் விடும் போல் இருக்கிறது. என்ன படிக்கிறேனோ எனக்கே புரியவில்லை.
அம்மா! அழகான பலூனில் காற்றை நிரப்பி அது வானத்தில் பறக்கும் போது பார்த்து மகிழவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பலூனின் கொள் அளவையும் மீறி பெரிதாக்க வேண்டும் என்று மேலும் மேலும் காற்றை நிரப்ப முயற்சி செய்தால் ·பட் என்று வெடித்துவிடும் இல்லையா. என்னுடைய நிலைமையும் அதுதான்.
சிறு வயது முதல் ஒரு நாள் கூட நீங்கள் என்னை ரிலாக்ஸ் ஆக இருக்க அனுமதித்தது இல்லை. மகன் பெரிய படிப்பு படிக்கிறான் என்ற பெருமை உங்களுக்கு வேண்டும். மகன் இஞஜினியர் ஆக இருந்தால் உங்களுக்குப் பெருமை. ஐ.ஐ.டி.யில் படிக்கிறான் என்றான் பெருமை. அதுவே ஐ.டி.ஐ.யில் படிக்கிறான் என்றால் சிறுமை.
இஞ்ஜினியரிங் அல்லாமல் கேடரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்க், பிரிண்டிங் டெக்னாலஜி இவை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களைப் போல் எல்லா பெற்றோரும் இப்படி எம்.செட்., ஐ.ஐ.டி. என்று பைத்தியம் போல் அலைவதால் தெருவுக்கு ஒரு கொச்சிங் செண்டர் காளான் போல் முளைத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றன. விலை கொடுத்து கேள்வித்தாள்களை வாங்கி லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாட்டம் ஆடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் உங்களைப் போன்ற பெற்றோர்கள்தாம். பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தினால் இந்த கோச்சிங் செண்டர்களுக்கு வேலையே இல்லையே? இதற்கு முன்பு மெடிசன், இஞ்ஜினியரிங் படித்தவர்கள் எல்லாம் எந்த கோச்சிங் செண்டருக்கு போனார்கள்? திறமை, தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும் தம் குழந்தைகளை இந்த நுழைவுத் தேர்வுகளை எழுத வைப்பதால்தான் கல்வி வியாபார பொருளாக மாறிவிட்டது.
இஞ்ஜினியரிங் படிக்கவில்லை என்றால் எனக்கு எதிர்காலமே இருக்காது என்று நீங்க நினைத்தீங்க. உங்களுடைய விருப்பத்திற்காக என் சக்திக்கும் மீறி உழைத்தேன். ஆனால் கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டதால் மணபடியும் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயம். என் மீதே எனக்கு நம்பிக்கை போய் விட்டது.
மறுபடியும் படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப தேர்வுகளை எழுதவேண்டும்.
ரேங்க் வரவில்லை என்றால் கடன் வாங்கியாவது என்னை தனியார் கல்லூரியில் சேர்த்து விடுவீங்க. அங்கே நாலு வருடங்கள் படித்து கரை ஏற வேண்டும். அது முடிந்ததும் அமெரிக்கா போகும் படலம் ஆரம்பமாகிவிடும். G.R.E., TOEFL எழுதணும். அமெரிக்காவுக்கு போய் பற்றுப் பாத்திரம் தேய்த்துக் கொண்டே இரண்டு வருடங்கள் எம்.எஸ். படிக்கணும். மேலும் வசதி பட்டால் பி.ஹெச்.டி. படித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும். இதையெல்லாம் நினைத்து பார்க்கும் போதே என் உடல் நடுங்குகிறது. என்னால் இவ்வளவு பெரிய படிப்புகளை படிக்க முடியாது அம்மா!
உயிரோடு இருந்தால் படி படி என்று துரத்தாமல் நீங்க என்னை விடப் போவதில்லை. செத்துப் போய் விட்டால் உங்களால் என்னை துரத்த முடியாது இல்லையா? அதான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.
அம்மா! அப்பா! உங்களுடைய விருப்பங்களை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள குழந்தைகளை பலிக்கடாவாக ஆக்காதீங்க. அவர்களால் தூக்க முடியாத சுமையை அவர்களுடைய தலையில் வைக்காதீங்க. வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு உண்மையிலேயே திறமையும், விருப்பம் இருந்தால் தவிர அந்தந்த கோர்ஸ¤களில் சேர்க்கமாட்டார்களாம். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை தேரந்தெடுக்கும் உரிமை அங்கே குழந்தைகளுக்கு இருக்கிறதாம். இந்தப் படிப்பு உயர்வு. இது தாழ்வு என்ற பாகுபாடு அங்கே இல்லையாம். எத்தனை சின்ன வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சொந்த கால்களில் நிற்க முயற்சி செய்வார்களாம்.
நம் நாட்டிலும் அந்த நிலைமை உருவாக வேண்டும். பெற்றோரின் எண்ணங்களில் மாற்றம் வர வேண்டும். வெளிநாட்டில் இருப்பது போல் நம் நாட்டிலும் குழந்தைகளின் திறமை, புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப அந்தந்த துறையை தேர்ந்து எடுப்பதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் இந்த நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டத்திற்கும், கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்களின் ஆட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படும். நான் மட்டும் இந்த நாட்டில் பிறக்காமல் இருந்திருந்தால், இப்படி வாழ்க்கை ஆரம்பமாகும் முன்பே மிரண்டு போய் உயிரை மாய்த்துக் கொண்டிருக்க மாட்டேனோ என்னவோ.
நான் இந்தக் காரியத்தை செய்ததற்கு காரணம் உங்களுடைய பேராசையா? என்னுடைய இயலாமையா? இல்லை தற்போதைய கல்வியின் போக்கா? தவறு யாருடையது என்ற என்னுடைய கேள்விக்கு இது வரையில் பதில் கிடைக்கவில்லை. இதைப் படித்த பிறகாவது உங்களைப் போன்ற பெற்றோர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்று உணர்ந்தால் அது போதும்.
உங்கள் வம்சீ
“வம்சீ!”
சேஷாத்ரி, விஜயாவின் கதறல் எத்தனை பெற்றோர்களின் காதுகளில் விழுந்ததோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
முற்றும்
தெலுங்கில் D.Kameswari
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23