தம்மக்கள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ஜெயந்தி சங்கர்


இ ங் கு

தாமதமாகவேனும் இலக்கியா கவிழ்ந்து படுத்ததை எண்ணி மீனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “நேத்தி தாங்க குட்டி தானே திரும்பி குப்புரகமுந்து படுத்தா”, என்று ஒரு பள்ளிப்பெண்ணின் துள்ளலோடு தொலைபேசியில் அவள் சொன்னபோது, “அப்டியா, ஆனா கொழந்த தவழறதத் தான் எனக்குப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குது மீனா”, என்று நான் சொன்னதை தொலைபேசி மைக்கில் கேட்ட அம்மா, “கவுந்து படுக்குற பிள்ளையப் பார்த்தா மூஞ்சிய வேற பக்கம் திருப்பிக்கிடுவானான்னு கேளு”, என்று நக்கலடிப்பதும் லேசாகக் கேட்டது. அந்த நக்கல் தான் அம்மா. அதில்லாவிட்டால் அம்மாவின் தனித்தன்மை ஏது?

வீட்டின் நினைவுகளும் நாங்கள் அடித்த கும்மாளங்களும் நினைவில் சிறுசிறுமின்னல்களாய் வந்திட, “யம்மோவ், எம்பொண்டாட்டியயும் பிள்ளையையும் ஒழுங்கா பாத்துக்க, ஆமா சொல்லிப்புட்டேன்”, என்று நான் அம்மாவை வம்பிற்கிழுத்ததுமே, அருகில் வந்து தோலைபேசியைக் கையில், “போதுண்டா, பெரிய இவனாட்டம். எப்படா வர? அதச்சொல்லுடா மொத. என்ன வேலையோ என்னவோ பெத்த பிள்ளையக் கூடப் பாக்க வராம,.. அப்றம், யார்கிட்டயும் பிள்ளையவிட மீனாவுக்கு பயம், எங்கிட்ட கூட விட்டுட்டுக் குளிக்கப் போவக்கூட பயப் படுதுடா. அவ பார்வையிலயே இருக்கணுமாம்”, என்று சொன்னதில் எந்தவிதமான குற்றம் சொல்லும் தொனியைக் காணமுடியவில்லை. ஏதோ ஒரு வித ஆச்சரியமும் சுவாரஸியமும் சேர்ந்தாற்போலத் தோன்றியது. “இல்லங்க, அத்தை சும்மா கேலி பேசுறாங்க”, என்றபடியே மீனா வந்தாள் மறுமுனைக்கு. நான் இன்னும் என் மகளைப் பார்க்காமலே இருக்கிறேன் என்பதில் அம்மாவுக்கு இருந்த ஆதங்கம் மிக அதிகம்.

“மீனா இந்த ‘மீகோரெங்’1கையும் மத்ததையும் சாப்டுசாப்டு எனக்கு நாக்கு செத்தேப்போச்சு, போ. அம்மா சமையல் கூடவேணாம். உன்னோட சமையலாவது கெடைக்காதான்னு நாக்கு ஏங்குது. எனக்கும் வீட்டு நெனப்பாவே இருக்குது. ஒண்ணுலயும் மனசே பதியமாட்டங்குது”, என்று நான் சொன்னதைக் கேட்டு வெறுமே உம்கொட்டிக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைபேசி மட்டும் இல்லாதிருந்தால், என் வாழ்க்கையை நினைத்தும் பார்க்கமுடியவில்லை என்னால். கிட்டத்தட்ட நரகமாகிப் போயிருக்கும். ‘இதோ தீபாவளிக்கு வருகிறேன்’, என்று பலமுறை சொல்லி கார்த்திகை தீபமும் கூடக் கடந்து போனது.

சித்திரையில் பிறந்திருந்தாள் குழந்தை. கனவும் நினைவும் சிந்தனையும் குழந்தைபற்றியே சுற்றிச்சுற்றி வந்தது முதல் இருமாதங்களில். பிறகு போய்ப்பார்க்கும் ஆசையிலேயே நாட்கள் கடந்துபோக ஆரம்பித்தன. ஒரு மாதம் முன்னரே குறைப்பிரசவமாகிப் போனதில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பற்றி மீனாவுக்குள் எப்போதும் ஒருவித பதட்டம் இருந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் அம்மா கூடவேயிருந்து அவளையும் குழந்தையையும் கவனித்துக் கொண்டிருந்ததில் குழந்தை ஆறாம் மாதத்தில் இருக்கவேண்டிய எடையைக் கிட்டத்தட்ட எட்டியிருந்தாள். பத்து நாட்களுக்கு மீனா பிறந்தவீட்டுக்குப் போனபோதும் அங்கு பெரியவர்கள் யாருமில்லை என்று அம்மா கூடவே போய் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாள்.

மீனாவுடன் நீண்ட நேரம் பேசிடும் மனநிலையிலிருந்த எனக்கு, “கொஞ்சம் இருங்க, ஒங்க தம்பி பேசணுங்கறாரு”, என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்த போது ஒரே சலிப்பாக இருந்தது. இதோ போவோம் அதோ போவோம் என்று இலக்கியா பிறந்து ஆறுமாதமும் ஆகப்போகிறதே என்ற சுயபச்சாதாபமும் அக்கணத்தில் சலிப்புடன் சேர்ந்து எழுந்தது. வேறு நல்ல வேலையாவது கிடைக்கிறதா, ஹ¥ஹ¤ம் கிடைக்கிற பாடாய்த் தெரியவில்லை.

இப்போதெல்லாம் மீனா ‘கொழந்த அழுவுதுங்க’, என்றோ, ‘பால் குடுக்கணும்ங்க’, என்று கிசுகிசுப்பாகவோ, ‘தூங்க வச்சிகிட்டிருக்கேங்க’, குழந்தையை எழுப்பிவிடாத கவனத்துடன் அடிக் அடிக்குரலிலோ சொல்லிவிட்டுப் போகும் போகும் போது என்னில் சின்ன பொறாமை கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் நான் இப்போது இரண்டாம் பட்சமாகிப் போனேனோ. ஆனால், ஒரு நாளைக்குத் தொலைபேசாவிட்டாலும் அடுத்த நாள் பேசும் போது, “ஏங்க நேத்திக்கி போன் பண்ணல்ல?”, என்றுகேட்டுத் துளைத்தெடுத்து விடுகிறாள்.

ஒன்றரை வருடத்திற்கு முன் காரைக்குடியில் திருமணம் முடித்து விட்டு சிங்கப்பூருக்குக் கிளம்பும் நேரம். எனக்கு திரும்பிடும் டிக்கெட் இருந்தது. அதே விமானத்தில் மீனாவுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் வர வேண்டியிருந்தது. அதற்கு, “என்னால உங்கள விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாதுங்க”, என்று தனிமையில் ஒரு முறை பிழியப்பிழிய அழுதுவிட்டு, தான் கேலிக்குள்ளாவதையெல்லாம் பொருட்படுத்தாமல், விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை அழுது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தினாள். ஒரே வாரத்தில் பிறந்த வீடு இரண்டாம் பட்சமாகிப் போனதோ என்று சொல்லி அவர்கள் வீட்டில் கேலி செய்தனர்.

ஒரு வாரம் முன்பு முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்ததால், ‘புக்கித் பாத்தோக்’2கில் மூன்று மாதங்களுக்கு ஒரு ஈரறை வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அடுத்த நாளுக்கு அடுத்தநாள் மீனா வந்த பிறகுநேராக அங்கே போய்விட்டோம். சாலைகளின் சுத்தம், வாகனங்களின் வேகம், வானுயர் கட்டங்கள், பல்லின மக்கள், சுற்றுலாத் தலங்கள், திடீரென்று பெய்து திடீரென்று நிற்கும் மழை என்றும் ஒவ்வொன்றையும் சிறுகுழந்தையின் ஆர்வத்துடன் வெகுளியாக ரசித்தாள். முடிந்த வரை சுற்றிக் காண்பிக்கவே செய்தேன். நான் வேலைக்குப் போயிருக்கும் போது மீனாவுக்குத் துணையானாள் முருகனின் மனைவி.

வந்த இரண்டே மாதத்தில் மீனா கருவுற்றாள். அவள் மிகவும் பலகீனமாக இருந்ததாகவும் நல்ல சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். ஆனால், மீனாவோ வாய்க்குப் பிடிக்கவில்லை என்று வழக்கமான உணவையும் சாப்பிடாமல் அடம் பிடித்தாள். சாப்பிட்ட சொற்ப உணைவையும் அடிக்கடி வாந்தி வேறு எடுத்துக் கொண்டே இருந்ததால் ஏற்கனவே ஒல்லியாக இருந்தவள் மேலும் சோர்ந்து மெலிந்து போனாள். பேசாமல் ஊருக்கு அனுப்பினாலாவது அங்கிருப்பவர்கள் மீனாவைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து சீக்கிரமே ஊருக்கு அனுப்பி விட்டேன். அப்பா தன் மருமகளை தாங்குதாங்கென்று தாங்கினார். ஒரு நாள் தவறாமல், பாதாம் ஊற வைத்து, அரைத்து பாலில் குங்குமப்பூவுடன் கலந்து மீனாவைக் கட்டாயப் படுத்திக் குடிக்க வைத்து உடலையும் எடையும் ஓரளவிற்கு தேற்றினார்.
எஸ்பாஸ¤ம், அடுத்த ஒரே மாதத்தில், நிரந்தரவாசமும் பெற்று விட்டதில் முருகனால் தன் மனைவியைக் கூடவே வைத்துக் கொள்ள முடிந்தது. “டேய், தினமும் போனுக்கு செலவு பண்ணின காசுல நீ ஊருக்கே ஒரு நட போயிட்டு வந்திருக்கலாம்டா”, என்று அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது. என்றாலும், வேறு ‘மெயிண்டனன்ஸ்’ துறையிலோ அதற்கீடான வேறு ஒரு வேலை கிடைத்து விட்டால் நிம்மதியாகப் போய் வரலாமே ஊருக்குப் போவதைத் தள்ளிப் போடும் படியிருந்தது.

நான்கு வருடங்களாகி விட்டதால், நிரந்தரவாசத்திற்கு விண்ணப்பித்து விட நண்பர்கள் பரிந்துரைத்ததில், அதற்கும் அரைநாள் லீவெடுத்துக் கொண்டு குடிநுழைவுத்துறை அலுவலகத்துக்குப் போய் வந்தேன். வேலை தான் கிடைக்கவில்லையென்றால், நிரந்தரவாசம் விண்ணப்பித்ததும் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்தது. இப்போதெல்லாம் கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை கல்விக் கழகங்களுக்கே அனுப்பி நுணுக்கமாகச் சரி பார்த்து விட்டுத் தான் எஸ்பாஸோ நிரந்தரவாசமும் கொடுக்கிறார்கள். மேலும் சில மாதங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலை பார்க்கலாம் என்று சொல்லி விட்டது தான் ஒரே நிம்மதி.
முதல் முறை எனக்கு ஒன்றும் தெரியததால், “ஆபரேட்டர் வேலைக்கு ஒத்துக் கொள்கிறாயா?”, என்று கேட்டதற்கு அதிகம் யோசிக்காது தலையை ஆட்டியதில் என் துறையே மாறிப் போனது. அக்கணத்தில் ஏஜெண்ட்டுக்குக் கொடுத்ததை ஈட்டிடும் ஒரே எண்ணம் மனதில். அது வரை நான் தென்னிந்திய வடஇந்திய நிறுவனங்களில் கிட்டியிருந்த ஆறுவருட அனுபவத்திற்குப் பயனில்லாதும் போனது தான் சோகம். இம்முறை கவனமாக ஏஜென்ட் பிரச்சனைகளைத் தவிர்த்து விட்டு, நானே வேலை தேடிட முடிவெடுத்தேன்.

அ ங் கு

அத்தைக்கு மகள் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவளாகவே என்னைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தங்கினார். “மீனா, கல்யாணம் ஆன புதுசுல அம்மியில நான் மிளகு அரைக்கும் போது சிந்தாம சிதறாம அரைக்கணும்னு எவ்வளவோ கவனமாத் தான் இருப்பேன். ஆனாலும், பழக்கமே இல்லாததால சிந்தாம அரைக்கவே தெரியாது. பொறந்த வீட்டுல ஒரே மகள்னு செல்லம். சமைக்கவே கத்துக்கிடல. கட்டி கொடுத்தப்ப பதினஞ்சு வயசு எனக்கு. இப்டி சிந்திகிட்டே அரைச்சா உனக்கு பொட்டப் புள்ள தான் பொறக்கும்னு எங்க மாமியார் சொல்லிட்டே இருப்பாங்க. சுள்ளுசுள்ளுன்னு பேசுனாலும் மனசு முழுக்க எம்மேல பாசம் தான். இதோ, இதே அம்மி தான் மீனா. அப்ப நாங்க அறந்தாங்கில இருந்தோம். இப்ப என் கைப்பக்குவம் ஒவ்வொண்ணும் எங்க மாமியார் சொல்லிக் கொடுத்தது. பின்னால, மூணு ஆம்பளப் பிள்ளைங்க பொறந்துச்சு, மூத்தது பொறந்து ரெண்டே நாள்ள செத்தும் போச்சி. அப்பல்லாம் மாமியார் இல்ல. ப்ச்,.. பேரன்களப் பார்க்காமயே போய் சேர்ந்துட்டாங்கன்னு வைய்யேன். இங்க வந்தப்ப ரெண்டு பயலுகளும் நாலு வயசும் ஒரு வயசுமாயிருப்பானுக”, என்பார்.

இடையே புகுந்து, “ரெண்டு பேருல யாரு அத்தை அதிக வாலு?”, என்று கேட்கும் போதெல்லாம், “ஒம்புருஷன் தான். வாயும் வாயி. கையும் கையின்னு வையி. ஊர் வம்பு வம்பையெல்லாம் வலுவில இழுத்துட்டு வந்தாலும் நல்லாப் படிப்பான். இப்ப நெனச்சாலும் சிரிப்பா வரும் என்ன நெனச்சு எனக்கே. பொம்பளப்பிள்ள வேணும்னு ஆசப்பட்டு நானா அம்மியில ஒரு கை மிளக வச்சி நாலாப் பக்கமும் சிதறியடிச்சி அரைக்கிறதப் பார்த்து நம்ம பக்கத்து வீட்டுப் பாட்டி சிரிக்கும். அதுப் பின்னாடி, பொண்ணும் பொறக்கல பையனும் பொறக்கலனு வச்சிக்க”, என்று தன் கடந்த காலத்தின் இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது சொல்வார். தனக்குப் பேத்தி பிறந்ததில் அத்தையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருந்தது.

தவழ்ந்திடும் குழந்தையைப் பார்க்க வேண்டுமாம் அவருக்கு. சரி, அந்த ஆசையிலாவது, இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தை தவழும் போது சிங்கப்பூரிலிருந்து வருகிறாரா பார்ப்போம் என்று தோன்றியது. “பொங்கல் உன் கூட தான் மீனா. நிச்சயமா வந்துடுவேன். மனசெல்லாம் எனக்கு அங்க தான் இருக்கு”, என்று சொன்னார். ஆனால், மாசியே பிறந்து விட்டது. சமீபத்தில் பேசும் போது, “மூணு மாசம் வெயிட் பண்ணியாச்சு. கெடைச்சுடும்னு நெனச்சேன். ஆனா, எதிர்பார்க்கவேயில்ல, ‘பீஆர்’3 ரிஜெக்ட் ஆயிடுச்சும்மா. எஸ்பாஸ¤க்கு அப்ளை பண்ணிட்டு வரேன். என்ன?”, என்று சமாதானம் சொன்னார்.

குழந்தை பிறந்து மாதக் கணக்கில் பார்க்காமல் இருப்பது என்பது எத்தனை கடினம்? குளிக்கிற குழந்தையையோ குப்புரக்கவிழ்ந்து படுக்கும் குழந்தையைப் பார்க்கவும், தொட்டுத் தடவிடவும், தவழ்ந்திடும் குழந்தையைப் பார்த்துக் களித்தின்புறவும் அவருக்கு அதிருஷ்டமில்லாமல் இருப்பதை என்வென்பது? இதைச் சொன்னால், “அதான் இப்ப பார்க்காததுக்கெல்லாம் சேர்த்து வச்சி பார்க்கப் போறேனே. அதான் சீக்கிரமே இலக்கியாவுக்கு தம்பி ஒண்ணும் பெத்துகுடுக்கப் போறியே”, என்கிறார் சீண்டலுடன். “என்னால ஆகாதுப்பா. இந்த ஒண்ணே போதும் நமக்கு”, என்று நான் சொன்னது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையிலேயே எனக்கு இன்னொரு குழந்தை பெற்றிடும் எண்ணமே இல்லை.

விளம்பரங்கள் மற்றும் சினிமாவில் குழந்தைகளைப் பார்த்தாலும் ஏக்கமாக இருக்கிறதாம். “இங்க குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை ‘கிடீஸ் பேலஸ்’ஸத் தாண்டிப் போகும் போது, அங்க அழகழகா வச்சிருக்கற பொருட்களப் பாக்காறப்போ நம்ம கொழந்தை ஞாபகம் தான் வருது மீனா. நா வரும் போது வாங்கிட்டு வருவேன். குறிப்பா ஏதும் வேணும்னா சொல்லு மீனா”, என்று அவர் சொல்லும் போது, “நீங்க வாங்க. அத விட வேற என்ன வேணும்”, என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றியது. எனக்கு அவரைப் பார்த்திட இருந்த ஆசையை விட அவர் இன்னும் குழந்தையைப் பார்க்காமல் இருக்கிறாரே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது.

ஆயுள் குறைந்து விடும் என்று சொல்லி குழந்தையை வீடியோவோ போட்டோவோ எடுக்க அத்தை விடவில்லை. எல்லோரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் விட்டுக் கொடுத்திடத் தயாராய் இல்லை. ஒரு முறை திருட்டுத் தனமாக அத்தை வெளியே போயிருந்த நேரம் அவருக்குத் தெரியாமல் மச்சினன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தான். அதுவும் தெளிவாக வரவில்லை. ஆனாலும், அவரின் பார்ஸில் இடம் வைத்துக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். “அண்ணன் இன்னும் வந்து இலக்கியாவப் பாக்கல்ல. வேற சிங்கப்பூரு சிங்காரிய பிடிச்சிட்டாரோ என்னவோ? அண்ணி, எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கோங்க அண்ணி”, என்று என்னைக் கேலி செய்தான் மச்சினன் ஒரு முறை. அருகில் இருந்த மாமா தான், “டேய் டேய், சும்மா இருடா. அது மாதிரியெல்லாம் செய்யற ஆளு அவனில்ல. அது உனக்கே தெரியுமில்ல மீனா”, என்று கண்டித்து எனக்கும் சமாதானம் சொன்னார். மின்னஞ்சல் செய்திட மச்சினனின் சிநேகிதர் வீட்டுக்கு, மாயவரத்துக்குப் போக வேண்டும். கூட்டிப் போனான் மச்சினன் ஓரிரு முறை. எங்கள் கிராமத்தில் அந்த வசதியில்லை. அப்போது தான் ஒரே ஒரு முறை ‘வியூகாம்’ மூலமாக தன் மகளைப் பார்த்தார் அவர். அப்போது குழந்தை புது இடம் என்பதாலோ என்னவோ விடாமல் அழுது கொண்டிருந்தாள்.

வருவோர் போவோர், தெரிந்தவர், அக்கம் பக்கம் எல்லோரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குழந்தையின் அப்பா வராததற்குக் காரணம் அறிந்து கொள்ள விழையும் ஆர்வத்துடனும் வம்புடனும் பேசிய போது, அத்தை பார்த்துக் கொண்டார். பெரியண்ணி அதிகம் பேச மாட்டார். சின்னண்ணி, “ஏன் மீனா, ஒம்புருஷனுக்கு கொழந்தையப் பாக்கக் கூட வர முடியாம வேலையா? அதுவும் மொதப் பிள்ள. இன்னும் பாக்கவல்லயே”, என்று கேட்ட போது, ” இந்த வொர்க் பெர்மிட் முடியிது. அவருக்கு வேற வேலை தேட வேண்டியிருக்கு. அதான். இன்னும் ஒரே வாரத்துல வரேன்னிருக்காரு”, என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன். “ஒண்ர மாசத்துக்கு முன்ன நா உங்கண்ணனோட வந்தப்பவும் ஒரே வாரத்துல வரதாத் தானே சொன்ன”, என்றபோது நான் பேசாதிருந்தேன். என்ன தான் பேச? குழந்தை பிறந்து ஒரு வருடம் முடியும் நேரத்தில் யாருக்கும் தோன்றக் கூடியது தானே?

அன்றிரவு எல்லோரும் கிளம்பிப் போனதும், சிங்கப்பூருக்குத் தொலைபேசி நடந்ததையெல்லாம் சொல்லி வீராப்பாகவும் கடுமையாகவும், “எனக்காகவோ உங்களுக்காகவோ இல்லன்னாலும் மத்த எல்லார் வாயையும் அடைக்கிறதுக்காச்சும் வந்துட்டு போங்க. ஒரே வாரம் இருந்தாக் கூட போதும்”, என்று சொன்னேன். “மத்தவங்களுக்காக நாம ஆட முடியாது. இங்க பாரு, ஏப்ரல் மொத வாரம் நான் அங்க இருப்பேன். என்ன? நம்பல்லையா? நம்பு மீனா. அழுவுறியா என்ன? அழுவாதடி. பாப்பாவோட மொதப் பிறந்த நாளைக்கி நான் அங்க வல்லன்னா நீயே இங்க வந்துடு பாப்பாவத் தூக்கிட்டு. தம்பி ஏத்திவிடுவான். நா என்ன செய்ய, சொல்லு? ஏஜெண்ட் ·பீஸ் மிச்சப் படட்டுமேன்னு நானே சொந்தமா வேலைக்கு முயற்சி பண்ணேன். கெடைக்கல்ல. இப்ப ஏஜெண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். கெடைக்கும். ஏஜெண்ட் ·பீஸ் அழுது தான் ஆவணும்ன்றது என் விதின்னா யார் என்ன செய்ய? சரி, அதவிடு. சொல்லாம திடுதிப்புனு ஒம்முன்னால வந்து நிக்கறேனா இல்லையான்னு நீயே பாரேன்”, என்று சமாதானம் செய்தார். அவர் நிலையை நினைத்துப் பார்த்தால், என் கோபம் அர்த்தமற்றதென்றே பட்டது.

இன்னும் ஒரே வாரத்தில் இலக்கியாவுக்கு ஒரு வயது முடியவிருந்த போது தான் வந்துசேர்ந்தார். காதுகுத்து, முடியிறக்கம் என்று வீட்டில் அண்ணன்கள் அண்ணிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என்று கூடியிருந்தனர். அடுப்படியில் மெகாசீரியல்களாக காபியும் சமையலும் பரிமாறல்களுமாக சதா பாத்திரங்களின் ஓசை. அவ்வப்போது ஏலமும் முந்திரியும் மணத்தன. வீட்டின் குறுக்கும் நெடுக்கும் குழந்தைகளின் ஓட்டம். இன்னும் வர வேண்டிய விருந்தினர் இருந்தனர். சிங்கப்பூரில் எஸ்.பாஸ்ஸ¤க்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார். சிங்கப்பூரில் கிடைத்த வேலையைவிட இன்னும் நல்லவேலை ஒன்று இந்தோனீசியாவில் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கவே, அங்கு போய்விட்டு இந்தியா நேராக கிராமத்துக்கு வந்திறங்கினார். வந்திலிருந்து இலக்கியாவின் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். “ஏம்மா, ஒரு வாரத்துக்குள்ள நடக்க ஆரம்பிச்சுட்டாளா”, என்று கேட்டபடியே இருந்தார். “வேகவேகமா தவழும். நல்லா நடக்க வந்தவுடனேயே தவழறத நிறுத்திடுச்சு”, என்றார் மாமா.

வந்ததிலிருந்து இரண்டு நாட்களாக அவரைப் பார்த்தாலே புதுஆளைப் பார்க்கும் மிரட்சியில் அழுது கொண்டிருந்தவள் அவரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் வீரிட்டு அழுதாள். “குட்டி, அப்பாக்கு தவழ்ந்து காட்டுடா”, என்று அவளை ஒவ்வொரு முறையும் உட்கார வைத்து தவழும் நிலைக்குக் கொண்டு வரும்போதும் அலறினாள். அத்தை வேறு, “தவழற கொழந்தைய நீ பார்த்ததேல்லயோ? ஏண்டா அவள இந்த இம்சை பண்ற?”, என்று கேட்டு அவரைக் கடுப்படித்தார். தன் குழந்தையும் ஏதோ ஒரு குழந்தையும் ஒன்றா? குழந்தையோ புதிதாக நடக்கத் தெரிந்து கொண்ட பெருமையில் தவழ மறுத்து குடுகுடுவென்று ஓடிக் கொண்டேயிருந்தாள். “ஏம்மா இது இனி தவழாதா?”

1)மீகோரெங் – சேமியா வகை உணவு
2)புக்கித் பாத்தோக் – சிங்கப்பூரின் ஒரு வட்டாரத்தின் பெயர்
3)பீஆர் – நிரந்தரவாசம்

வடக்குவாசல் – ஜனவரி 2008


Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்