தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

பரிமளம்


(அதாவது, ‘தமிழ்ச்சினிமாவில் காரண காரியங்களைப் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்’ என்னும் பழைய வேண்டுகோளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.)

எம்.ஜி.ஆர் தோன்றி வெளிவந்துள்ள படங்கள் ஒரு ஐந்தாறு இருக்கும். (தேவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம்தான் தயாரித்திருக்கிறார்) அவ்வாறே ரஜினி ஒரு நாலைந்து, கமல் ஒரு ஏழெட்டு, சிவாஜி ஒரு டசன் படங்களில் நடித்திருப்பார்கள். இக்காலத்தில் ஆண்டுக்கு மூன்று நான்கு படங்களே வெளிவருகின்றன.

முதல் காட்சியிலேயே பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியை அமைத்து பார்வையாளர்களை வியக்க வைப்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வழக்கம். அது போல முதல் காட்சியிலேயே ஏதாவது நம்பமுடியாத ஒரு துணுக்குக் காட்சியைக் காட்டிப் பார்வையாளர்களை நறுக்கென்று கிள்ளுவதற்கு இயக்குநர்கள் படாதபாடு படுகிறார்கள். அப்படிக் கிள்ளும்போது இயக்குநரின் பெயரைத் திரையில் காட்டினால் இன்னும் நல்லது.

ஹீரோ, ஹீரோயினிகள் ஒவ்வொரு படத்திலும் தாம் தோன்றும் முதல் காட்சியில் முகத்தை அப்படியே நேராகக் காட்டிவிடுவதில்லை (பெண்களின் முகங்களைவிட மற்ற உறுப்புகள் அதிகக் கவனம் பெறும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்). முகத்தைப் பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் திருப்போ திருப்பென்று திருப்புகிறார்கள். சில நேரங்களில் அறிமுகமாகின்றவரின் பேச்சுக்குரல் முதலில் கேட்கும். பிறகுதான் கழுத்தை வளைத்து முகத்தைக் காட்டுவார்கள். அப்படியானால் அந்தப் பக்கம் இருக்கிற மரத்தையோ அல்லது சுவரையோ பார்த்தா முதலில் பேசினார்கள் ?

ஜெயிலர் வந்து ‘இன்று உனக்கு விடுதலை’ என்று சொன்னால்தான் பல கைதிகளுக்கு அன்று தமக்கு விடுதலை என்பதே தெரியும்! (இவ்வளவு மூடர்களாக இருப்பவர்கள் சிறையிலேயே இன்னும் கொஞ்ச காலம் இருந்தாலும் பாதகமில்லை.)

பெரும்பாலான பழைய படங்களில் கிழவன்கள் தமிழ்நாட்டின் கொளுத்தும் வெயிலில் கோட்டு, டையெல்லாம் அணிந்து கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்து பாட்டுப் பாடிக் காதலிக்கிறார்கள். கோட்டு இல்லை என்றாலும் மற்ற படங்களில் மற்றவர்கள் வெயிலில்தான் ஆடிப் பாடுகிறார்கள். மெதுவோட்டம் ஓடுபவர்களும் நண்பகல் நேரங்களில் ஓடுகிறார்கள். வெயிலில் படிக்கும், வெயிலில் ஓய்வெடுக்கும் காட்சிகளும் உண்டு. (நடிப்புத் தொழில் சுலபம் என்று யார் சொன்னது ?)

பணக்காரர்கள் எப்போதும் கோட்டு, டையோடுதான் இருக்கிறார்கள்.

ஹீரோக்களைப் பொருத்த வரை அடிதடி சண்டையே பிரச்சினைக்குத் தீர்வு. (போலீஸ்காரர்களே நீதிமன்றத்தை நம்புவதில்லை என்னும் போது இவர்களைக் குற்றம் சொல்லவும் தயக்கமாக இருக்கிறது.) பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் என்பதை அறிந்தவர்கள் யாருமிலர்.

குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் படங்கள் மிகக் குறைவு. அவர்கள் நன்கு பழுத்தவர்கள்; மகா அறிவாளிகள்; சகல கலா வல்லவர்கள். பழைய படங்களில் இவர்கள் குழந்தைகள் போல நடந்துகொள்ள வில்லையென்றாலும் சொந்தக் குரலில் பேசியாவது நடித்தனர். பிறகு குழந்தைக் குரல்களும் காணாமல் போய்விட்டன.

அறைக்குள்ளிருக்கும் அலமாரியைத் திறந்தால் கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் துப்பாக்கி இருக்கும். துப்பாக்கி வைத்திருப்பது அவ்வளவு சுலபம்.

விருந்துச் சாப்பாட்டைப் பார்க்கிற அத்தனைப் பேரும் சோற்றை வாரி வாரி வாயில் போட்டு அப்பிக் கொள்கிறார்கள். தாயார் சோற்றைக் கவளங்களாக உருட்டிக் கையில் வைத்தால்தான் அவர் மடியில் படுத்திருக்கும் தடிப்பிள்ளை சாப்பிடுவான். பாசத்தில் மூழ்கி எழுந்த தாய்க்குலம் பெண் பிள்ளைகளுக்குச் சோறூட்டுவதில்லை.

ஏன் தமிழ்ப்பட நாயகர்களுக்குத் தங்கைகள் மட்டுமே இருக்கிறார்கள் ? வில்லன் அக்காளைக் கற்பழித்தால் ஆகாதா ? அம்மாவையும் தங்கையையும் கட்டிக் கட்டிப் பிடிக்காமல் அன்பைக் காட்ட முடியாது.

குடும்பங்கள் தனித் தீவுகள். அக்கம் பக்கத்து வீட்டாரோ, குழந்தைகளின் நண்பர்களோ இந்த வீடுகளுக்கு வருவதில்லை.

பாட்டுச் சத்தம் கேட்கும். ஆனால் பாடுபவர்கள் அருகிலேயே இருந்தாலும் எங்கே இருக்கிறார்கள் என்பது தேடுபவர்களுக்குத் தெரியாது. தேடு தேடு என்று மூன்று நான்கு நிமிடங்கள் தேடுவார்கள்.

தூரத்தில் இருப்பவர்கள் கேமராவின் ‘பிரேமுக்குள்’ தோன்றாதவரை அவர் இங்கிருக்கும் நடிகரின் கண்களுக்குத் தென்படமாட்டார் என்று முன்பு எழுதியிருந்தேன். இது தவறு. அருகில் இருக்கும் நபர் கூட ‘பிரேமுக்குள்’ தோன்றினாலொழிய பக்கத்திலிருக்கும் நடிகரின் கண்களில் தென்படுவதில்லை என்பதே உண்மை.

மலைமேல் ஒரு கோயில்/நாயகியின் கழுத்தில் அவளது விருப்பமில்லாமல் தாலியைக் கட்ட வில்லன் தயாராகிறான்/சென்னையின் ஏதோ ஒரு சாலையில் நம் ஹீரோ மோட்டார் சைக்களில் விரைகிறான்/வில்லன் தாலியை எடுத்துவிட்டான்/ஹீரோ இன்னும் மோட்டார் சைக்களில் விரைகிறான் /வில்லன் தாலியைக் கட்ட…./அப்பாடா ஹீரோ தடுத்துவிட்டான். அது சரி, ஹீரோ என்ன சூப்பர் மேனா ? சாதாரண ஆளாக இருந்தால் முதலிரவு முடிவதற்குள் வில்லனைத் தடுப்பதே அரிதாயிற்றே.

கழுதை வயது இருக்கும் கிராமத்துப் பெண்கள் கூட மாராப்புத் துணி இல்லாமல் பருத்த தனங்களின் மேல் ஒரு ரவிக்கை மட்டும் அணிந்து ஊரைச் சுற்றி வருகிறார்கள். எந்தக் கிராமம் என்றுதான் தெரியவில்லை.

ரகசியம் பேசுகிறவர்கள் கத்துகிற கத்தில் நம் காது கிழிகிறது.

நடிக்கும் போது பேச்சைப் பதிவு செய்யும் வழக்கம் போய், டப்பிங் அரங்குகளில் வசனங்கள் பதிவு செய்யப்படுவது படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பல வகைகளில் நன்மை அளிக்கலாம். ஆனால் படம் பார்க்கும் போது குரல்கள் தட்டையாக இருப்பது (முக்கியமாகப் பெண் குரல்கள், ஐயோ!) எரிச்சலையே உண்டாக்குகிறது.

****

ஏதோ படங்கள் வருகின்றன. மக்களும் பார்க்கிறார்கள். பார்ப்பதோடு சரி, அவற்றையொட்டித் தம் வாழ்வை மாற்றிக் கொள்வதில்லை (ஓட்டுப் போடுவதைத் தவிர) என்பது ஆறுதலளிக்கக் கூடிய செய்தி.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்