தமிழுக்கு அவனென்றும் பேர்…

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


{புரட்சிக்கவியின் நினைவுகளுடன் சமர்ப்பனமாய் }

பாரதிக்கு தாசனானாய்…
தமிழ்ச்சாரதியாய் நேசமானாய் !
புதுவையில் பூத்த புதுமையே…
பூந்தமிழுக்கு வாய்த்த அருமையே !

இதயங்களில் தமிழாய் இனிப்பவனே…
இன்றைய இளைஞர்வரை இன்னமும் இருப்பவனே !
புரட்சிதனைத் தமிழனிடம் விதைத்தவனே…
புதுச்சிறுத்தையென கவிதையினால் உரைத்தவனே !

கனக சுப்புரத்தினமாய் பிறந்தவனே…
கவிதையில் கந்தக வரிகளாய் எரித்தவனே !
திருப்புளிசாமி அய்யாவிடம் பயின்றவனே…
திகட்டாத தமிழ் கொடுத்த தென்னவனே !

நிரந்தர நாத்திகன் நான் என்றவனே…
அறம் தரும் கடவுள் வாழ்த்தும் சொன்னவனே !
முரண்பாட்டுக் கவிஞன் நீ என்பேனோ ?
உன் திறம்பட்ட கற்பனையில் தெளிவேனோ ?

பழனியம்மை கைப்பிடித்த காதலனே…
பெண்மை உண்மையென கவிதை சொன்ன காரணனே !
ஒரு திருமணத்தில் பாரதியைத் தெரிந்தவனே…
சிறு குழந்தையெனத் தாசனாகித் தெளிந்தவனே !

இயற்கை பற்றி நீ சொன்ன பாடலெல்லாம் – இந்த
செயற்கையிலும் செம்மையாக நிலைக்குதடா !
காதல் சொல்லி நீ படைத்த காவியமும்…
நான் சாதல் வரை நெஞ்சம் விட்டு நகர்ந்திடுமோ !

தமிழுக்கு நீ சொன்ன தைரியத்தில்…
அந்த அமிழ்திற்கும் ஆயுசு நீண்டதடா !
பெண்ணுலகுக்கு நீ போட்ட சாலையினில்…
படித்த பெண்கள் குடும்பவிளக்காய் எரிந்தனடா !

தாயிற்கும் சேயிற்கும் வீரம் ஊட்டி…
வீரத்தாயென தமிழச்சி கத்தி செய்தாய் !
பெண்ணடிமை விதவை மணம் நீ பாடி…
புதுப் பூவுலகம் செய்யச் சொல்லிப் பொருள் கொடுத்தாய் !

கூட்டுறவு பொதுவுடைமை காக்க வேண்டி…
குயிலாகக் கூவிக் கூவிக் கவிதை செய்தாய் !
இனஉணர்வு சமவுரிமை நிலைக்க எண்ணி…
நித்திரையும் தொலைத்து நீ நிஜங்கள் நெய்தாய் !

பாட்டின் இடையிடையே இசையசைவு அமைத்த முறை
பாவேந்தர் பாரதிதாசன் வழி வந்த முறை என
பாருக்கு பகிரங்கமாக்கிய பைந்தமிழே உன்
பாசறையில் பாடம் கற்கா கவிஞன் உண்டா !

பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
தான் எழுதும் முன்…
‘பாரதிதாசன் துணை ‘ என்றல்லோ…
எழுதி வைத்தான் !
சுப்புரத்தினதாசன் என உன் பெயரை
‘சுரதா ‘
என சுருக்கி வைத்தான்…
உவமைக்கவி !
எத்தனையோ… எத்தனையோ…
கவிஞர் துளி
நீ பிடித்த கனலினின்றுத் தெரித்ததல்லோ !

அழகின் சிரிப்பும் – எதிர்பாரா முத்தமும்
அகிலம் முழுக்க உன் பெயர் பாடுமே…
இருண்ட வீடும் – பாண்டியன் பரிசும்
இன்னமும் சொல்லுமே உன் புகழ் புவியினிலே…
பிசிராந்தையார் மட்டும் சும்மாவா என்ன ?
இறந்தும் பொன்னாய் சாகித்ய அகாதமியல்லோ !

புரட்சிக்கவி மட்டுமா பாரதிதாசன் ?
இல்லை… இல்லை…
பொக்கை வாயும்
கெக்… கெக்… கேவென
கத்திச் சிரிக்கும்படி
‘கிண்டல்காரனாய் ‘
நீ படைத்த படைப்பெல்லாம்
ஒன்றா… இரண்டா… உவமையாய்ச் சொல்ல

விரகதாப கணவன்
வீட்டு வேலையில் மனைவி
தோழியிடம் தூது சொல்லித்
தோதுக்குக் கூப்பிடுகிறான்…

‘ஆக்குகின்றாள் அடுப்பில் சோறு
கொதிக்கிறதென்று கூறினாள் இங்கே
குளிர்கின்றதோ ‘ எனக் கூறி அனுப்பினேன்
‘இறக்கும் நேரம் என்றாள் வந்து !
வாழும் நேரமோ இங்கு மட்டும் ? ‘
என வார்த்தை ஜாலம்…
பாடிய பாண்டிக் குயிலே !

பாடியது போதாதென்றா
பாட்டெழுத சினிமா சென்றாய் !
அங்கும் உன் பேனாமுனை அசைத்ததடா…
கவிகாளமேகம்
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
பொன்முடி – என
புகழ் பெற்ற படங்களெல்லாம்
உன் கதை வசனம் பாடலாலே…
பரபரப்பாய் ஆனதடா !

பாட்டு மட்டுமா நீ படைத்தாய் ?
அனைத்துலக கவிஞர் மன்றம் தோற்றுவித்தாய் !
அரசியலில் அவைத்தலைமைப் பதவி பெற்றாய் !
குடும்பக் கட்டுப்பாட்டை கவிதையினில்
முதலில் சொன்னாய் !
புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு வாசல் திறந்தாய் !

உன்னால் தமிழுக்குக் கர்வம்…
தமிழால் தமிழனுக்குக் கர்வம்…
தமிழை உயிராக்கி…
அதனுள் உடலானவனே !

எத்தனையோ… எத்தனையோ…
முத்துக்கள் நீ கொடுத்திருந்தாலும்…
தத்துவமாய் தமிழனுக்கு
நீ சொன்ன தாரக மந்திரம்

‘ எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் ! ‘

இன்னமும் சங்காய் முழங்குதடா…
எங்களை நன்றாய் செதுக்குதடா !
—-

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்