தமிழில் குழந்தைப் பாடல்கள்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

ஜடாயு


எங்கள் ஒன்றரை வயது மகள் பேச ஆரம்பித்து உடனே பாடவும் ஆரம்பித்து விட்டாள். மழலை மொழியில் அவள் பாடும் அரைகுறைப் பாடல் வரிகள் கூட என் செவிகளுக்கு அளவில்லா ஆனந்தம் தரத் தொடங்கின. ‘குழலினிது யாழினிது.. ‘ என்னும் பொய்யில் புலவரின் அனுபவத்தை நேரடியாக உணர்ந்தேன்.

இந்தப் பாடல் வரிகளை அவள் எப்படிக் கற்றுக் கொள்கிறாள் என்று சில சமயங்களில் அனுமானிப்பது கூட கடினமாக இருந்தது. அவளைத் தூங்க வைப்பதற்காக நாங்கள் பாடும் பாடல்கள், அடிக்கடி நாங்கள் கேட்கும்/முணுமுணுக்கும் திரை இசை மற்றும் பக்திப் பாடல்கள், இது தவிர நாங்கள் உட்கார்த்தி வைத்து சொல்லிக் கொடுத்த பாடல்கள் எல்லாவற்றிலிருந்தும் சிற்சில வரிகள் சில சமயம் முழுப் பாடல்களை அவளே பாடுவாள்.

இவற்றில் ஆங்கிலப் பாடல்கள் எல்லாமே குழந்தைகளுக்கான எளிமையான, பிரபலமான ‘ரைம்ஸ் ‘ வகையைச் சார்ந்தவை. ‘கிழவன் மெக்டொனால்ட் பண்ணை ‘, ‘ஜாக்கும் ஜில்லும் ‘ ‘வா வா கறுப்பு ஆடே ‘ போன்ற பாடல்கள். இவற்றில் பல பாடல்கள் நாங்கள் வாழும் இடம், சூழ்நிலை மற்றும் கலாசாரத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாதவை – கறுப்பு ஆடு ஒன்றைப் பார்த்து ‘உன்னிடம் கம்பளி இருக்கிறதா ‘ என்று நம் குழந்தைகள் பாடுவது னோ ஒரு மாதிரி தான் படுகிறது.. மல்பெரி என்ற நாம் பார்க்காத ஒரு செடியை வைத்து ‘here we go around the mulberry bush.. ‘ என்று பாடக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பாடல்களின் எளிமை மற்றும் ஓசை நயம் நன்றாக இருக்கிறது தான்..ஆனால் பாடலின் பொருள் தான் அன்னியமாகப் படுகிறது.. இதில்லாமல் பொதுவாக எல்லா நாட்டினருக்கும் நன்றாகப் படும் ‘மின்னும் மின்னும் சிறு விண்மீன் ‘ போன்ற ஆங்கிலக் குழந்தைப் பாடல்களும் இருக்கின்றன.

தமிழ் நாட்டிலும், மற்ற இந்திய நகரங்களிலும் வாழும் படித்த, மேல் மற்றும் மத்திய தரக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த ஆங்கிலப் பாடல்களைப் பாடிக் கொண்டு தான் வளர்கின்றன.. பல வீடுகளில் பெற்றோர்களுக்கே தமிழில் குழந்தைப் பாடல்கள் எதுவும் தெரிவதில்லை.. அவர்களும் பெரும்பாலும் ‘ரைம்ஸ் ‘ கேட்டு வளர்ந்தவர்களே. சிறுநகர் மற்றும் கிராமப் புறங்களில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நகர வாழ்வின் பல கூறுகளை அப்படியே பல கிராமங்களும் பின்பற்றத் தொடங்கி விட்டதால் அங்கும் நிலைமை இப்படித் தான் இருக்கக் கூடும்.

இதில்லாமல் தப்பித் தவறிக் குழந்தைகள் தமிழில் பாடினாலும், அவை சமீபத்திய திரைப் பாடல்களாகவே இருக்கும் – என் மகள் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்… எல்லாம் சொல்லவே… ஓர் நாள் போதுமா ‘ என்று மழலை கலந்து பாடுவதைக் கேட்டு சிரிப்பு வருகிறது.. இத்துடன் ‘ஆசை ஆசை இப்பொழுது.. ‘, ‘தோ தோ தோ ஒன்று ‘ போன்ற பாடல்களின் பல்லவிகளையும் அவள் பாடுகிறாள். சில பாடல்களின் வரிகள் நன்றாகவே இருக்கின்றன, இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் பாடும்போது பொருந்தாதது போலத் தான் படுகிறது. இதாவது பரவாயில்லை, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ ‘ ‘ஹையோ பத்திக்கிச்சு ‘ மாதிரி பாடல்களையெல்லாம் சில -4 வயதுக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துப் பாட வைக்கிறார்கள். நாராசமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது.. தயவு செய்து தமிழ்ப் பாடல் என்ற பெயரில் இத்தகைய பாடல்களை உங்கள் சிறு குழந்தைகள் பாட ஊக்குவிக்காதீர்கள்.

தமிழில் குழந்தைகளுக்காகவென்றே பாடல்கள் எழுதப்படுவது அரிதாகிவிட்டது. இன்னும் ஒரு தலைமுறை போனால் இவற்றைப் பாடுவதும் கேட்பதும் கூட அரிதாகி விடுமோ என்று தோன்றுகிறது. எங்கள் பெண்ணுக்கு சில கர்ண பரம்பரையாக வரும் பாடல்களைக் கற்றுக் கொடுத்தோம்.. ‘நிலா நிலா ஓடி வா ‘, ‘மாம்பழமாம் மாம்பழம் ‘, ‘ஆனை ஆனை அழகர் ஆனை ‘, ‘பிள்ளையார் பிள்ளையார் ‘ போன்ற பாடல்களை அவள் பாடும்போது மிக இனிமையாக இருக்கும்… இவற்றில் சில பாடல்களின் வரிகள் சரியாகப் படுவதில்லை. ‘அம்மா இங்கே வா வா – ஆசை முத்தம் தா தா ‘ நல்லது. ‘இலையில் சோறு போட்டு – ஈயைத் தூர ஓட்டு ‘.. இது சரியில்லையே.. வீட்டில் நல்ல சுகாதாரமான சூழலில் நாம் சாப்பிடுகிறோம், ஈயே வருவதில்லை, பின் அதை எதற்காக ஓட்ட வேண்டும் ? ? ‘இன்டெர்நெட்டைப் போட்டு – ஈமெயில் எல்லாம் காட்டு ‘ என்று மாற்றிப் பாடிக் கொள்ள வேண்டியது தான் !

‘அண்ணா ஓடி வா – வெண்ணிலாவிலே – புள்ளி மானைப் போல் – துள்ளியாடவே ‘ என்னும் அழகான பாடலை எங்கள் பாட்டி கற்றுத் தந்தார். ‘யசோதா நந்த பாலனே – ஏழை எந்தன் மீதில் கோபமா – பேதை எந்தன் வார்த்தை கேளாயோ – இன்னும் பேசாதிருப்பதேனோ மாதவா ‘ என்ற கொஞ்சலான பாடல் என் பெண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

‘மாடு மேய்க்கும் கண்ணே, நீ போக வேண்டாம் சொன்னேன்

காய்ச்சின பால் தாரேன், கல்கண்டு சீனி தாரேன்

கையினிலே வெண்ணெய் தாரேன், வெயிலிலே போக வேண்டாம் ‘

என்ற பாடலை சமீபத்தில் ஒரு ஒலிப்பேழையில் (திருமதி அருணா சாய்ராம்) கேட்டேன். என்ன அழகான பழைய பாடல் ! இது போன்ற பாடல்களையெல்லாம் பிரபலப் படுத்தவேண்டும். சிறுவயது முதலே நம் தாய்மொழிப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தால், பின்னால் தமிழில் பேசும்போது உச்சரிப்பு தெளிவாக இருக்கவும் துணைபுரியும். குறிப்பாக தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் வசிக்கும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இது.

பி. கு:

அமரர் கல்கியின் புதல்வியும், சிறந்த எழுத்தாளருமான திருமதி ஆனந்தி ராமசந்திரன், ‘அதோ பார் தம்பி ‘ என்ற பெயரில் அற்புதமான ஒலிப்பேழை ஒன்றைக் கொணர்ந்திருக்கிறார். பல நல்ல குழந்தைப் பாடல்களை மோகனம், கல்யாணி போன்ற மனம் கவரும் பாரம்பரிய ராகங்களின் சாயல் லேசாக வரும்படி அதே சமயம் பாடுவதற்கும் எளிமையான வகையில், சில குழந்தைகளும், பெரியவர்களும் இதில் பாடியிருக்கிறார்கள்.. தமிழ்ப் பாடல்களையும், பாரம்பரிய இசையையும் ஒருசேர குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தும் மிக நல்ல முயற்சி.

இந்த ஒலிப்பேழை பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம் :

சார்ஸுர் (Charsur) டிஜிடல் வொர்க்ஸ்டேஷன், 75 பீமண்ண முதலி தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 60008

மின் அஞ்சல்: charsur@hotmail.com

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு