தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

கோபி


பெப்ரவரி 21 அன்று பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றில் விக்கிப்பீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் வெளியிடுவதற்காக ‘வலைக்களஞ்சியம்’ எனும் பெயரில் இயக்கம் ஒன்று தொடங்கத் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் செ. ச. செந்தில்நாதன் மறுநாள் ஒரு விரிவான வலைப்பதிவிட்டிருக்கிறார்.

விக்கிப்பீடியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பினும் இம்முயற்சி தமிழில் இணைய உள்ளடக்கத்தை, குறிப்பாக உரைத்தொகுப்பு அதிகரிப்பை நோக்கமாகக் கொண்டதே. ஆனால் தமிழில் இணைய உள்ளடக்கத்தின் தேவை குறித்துக்கூட இதுவரை விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவில்லை. அவ்வகையில் இம்முயற்சியை முன்வைத்துச் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம்.

இணைய உள்ளடக்க உருவாக்கம் இருவகைப்படுகிறது.
1. இணையத்திற்காகவென உருவாகும் உள்ளடக்கம்
2. ஏற்கனவே அச்சிலும் ஏனைய வடிவங்களிலும் வெளிவந்த உள்ளடக்கத்தை இணையமேற்றுவது

தமிழில் இணையத்தைப் பயன்படுத்துவோர் தொகை மொத்தத் தமிழர் தொகையில் சொற்பந்தான். அவர்களிலும் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபடக் கூடியோர் மிகக் குறைவே. அவ்வகையில் இணையத்திலான உள்ளடக்க உருவாக்கம் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு தமிழ் விக்கிப்பீடியா. அங்கு ஒரே நேரத்தில் மும்முரமாகப் பங்கைபோர்ர் எண்ணிக்கை பத்தைத் தாண்டுவதில்லை. இது தவிர வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வலைப்பதிவிடல் அவ்வாறு அதிகரிக்கவில்லை. செய்தி, அரசியல், சினிமா, இலக்கியம் இவற்றைத் தாண்டி இணையத்தளங்கள் தமிழில் இல்லையென்றே சொல்லலாம். இணைய இதழ்களும் மிகச் சிலவே.

உள்ளடக்க உருவாக்குனர்களுக்கும் இணையத்துக்குமான இடைவெளியைக் குறைப்பது உடன் நடைபெறக்கூடியதல்ல. நான்கரை ஆண்டு வளர்ச்சியின் பின்னரும் தினம் பத்துக் கட்டுரைகளே எழுதப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றாண்டுகளுக்கு தினம் 100 கட்டுரைகளை எழுதும் பயனர்கள் கிடைப்பது சாத்தியமா? அதற்கு வேண்டிய வளங்களைத் திரட்டுவது எவ்வாறு? அவ்வாறு திரட்டிய வளங்களைக் கொண்டு உச்சப்பயன் பெறுவதற்கான வழிவகைகள் என்ன? போன்ற கேள்விகள் எம்முன் உள்ளன.

இருக்கும் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி அதிக உள்ளடக்கத்தை இணையத்துக்குக் கொண்டுவருவதற்குப் பொருத்தமான வழி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தைக் கவனத்திலெடுப்பதே. ஆயினும் இது தமிழில் இதுவரை போதிய கவனம் பெறவே இல்லை. மதுரைத்திட்டம், சென்னை நூலகம், நூலகத் திட்டம், கீற்று ஆகிய நான்கு இணையத்தளங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.

மதுரைத்திட்டம், சென்னை நூலகம் ஆகியன பழந்தமிழ் நூல்களையும் அரசுடமை நூல்களையும் வெளியிட்டு வருகின்றன. கீற்று பெருமளவு சிற்றிதழ்களை இணையத்துக்குக் கொண்டு வருகின்றது. நூலகத் திட்டம் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும் இதழ்களையும் இணையத்தில் ஆவணப்படுத்துகின்றது.

இருக்கும் வளங்களிலிருந்து உச்சப்பயனைப் பெறும் முயற்சியில் நூலகத் திட்டம் தன்னை மாற்றியமைத்த விதம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. மேலோட்டமான மெய்ப்புப் பார்த்தலுடன் மின்னூல்களை வெளியிட்ட நூலகத் திட்டம் பின்னர் மின்வருடிகளைப் பயன்படுத்திப் படங்களாக்கிய பக்கங்களை pdf கோப்புக்களாக இணைத்து வெளியிடத் தொடங்கியது. அவ்வாறு வெளியிட்டுள்ள மின்னூல்களின் பொருளடக்க விபரங்கள் தட்டெழுதப்படுகின்றன. அதனால் தேடுபொறிகளில் அவை சிக்குவதால் ஆய்வாளர்களும் வாசகரும் பரந்ததொரு உள்ளடக்கத்தைத் தேடியடைவது சாத்தியமாகிறது. தமிழில் எழுத்துணரி சாத்தியமாகும்போது முழு உள்ளடக்கத்தையுமே தேடக்கூடிய நிலை தோன்றும்.

வெளியாகும் இதழ்களை உடனுக்குடன் இணையத்துக்குக் கொண்டுவரும் கீற்று வலைத்தளத்திற்கு மேலதிகமாக நூலகத் திட்டத்தினைப் போன்ற செயற்றிட்டங்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை. உரிய அனுமதி பெறுவதன் மூலம் பல எழுத்தாளர்களின் படைப்புக்களை இணையமேற்றுவது சாத்தியமானதே. கீற்று வலைத்தளத்தினர் இதற்கான முயற்சியெடுத்ததாக அறிவித்திருதபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தெரியவில்லை.

தமிழக அரசு பாடநூல்களை இணையத்துக்குக் கொண்டுவந்தது போலவே தஞ்சைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராச்சி நிறுவனம் போன்றவற்றின் வெளியீடுகள் இணையத்துக்குக் கொண்டுவரப்படுவது மிக அவசியம.

உண்மையில் இது ஓரிருவரோ ஒரு நிறுவனமோ செய்யக் கூடியதல்ல. பதிப்புரிமையாளரின் அனுமதி, மின்வடிவமாக்கம், இணைய வெளியீடு ஆகிய மூன்று படிநிலைகளைக் கொண்ட இம்முயற்சியின் ஒவ்வொரு படிநிலைக்கும் பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்புக் கிடைத்தாலே முயற்சி முழு வெற்றிபெறும்.

1. எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடன் தொடர்புடையவர்கள் உரிய அனுமதியை வாங்குவதோடு குறித்த நூல்கள், இதழ்களைப் பெற்று மின்வடிவமாக்கும் மையத்துக்குத் தொடர்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும். தகவற் திரட்டுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.
2. மின்வடிவமாக்குவதற்கான மையம் உரிய வசதிகளுடன் இருக்க வேண்டும். இத்தகைய மையமொன்றை அமைக்க செந்தில்நாதன் குறிப்பிட்டதுபோல அரச தனியார் உதவியுடன் அமைப்பாகத் திரழ்வது அவசியமாகும்.
3. மின்னாவணங்களை இணையத்தில் இலகுவாகவும் வினைத்திறனாகவும் கிடைக்கக் கூடியதாகக் கிடைக்கச் செய்ய ஆவன செய்ய வேண்டும். விபரத் தரவுகள் (metadata) போன்றவை உள்ளிடுவது முதல் வடிவமைப்பு, தொடர்ச்சி ஈறாகப் பல விடயங்கள் கவனத்திலெடுக்கப்படல் வேண்டும்.

இங்கே குறிப்பிடப்படும் முறைகள் பலருக்கும் புதியவையல்ல. உலகெங்கும் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த ஆய்வின் முடிவுகளை நம்மில் பலரும் வாசிக்கிறோம். ஆனால் அந்த அறிவைத் தமிழ்ச் சூழலில் பயன்படுத்த எவரும் இல்லை என்பதே நிதர்சனம். கூகிள் புத்தகங்கள், மில்லியன் புத்தகத் திட்டம் போன்றவற்றில் பல தமிழ் நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டாலும் அவை இலகுவில் பயன்படுத்தக் கூடியனவாக இல்லை. அத்துடன் அவை 1923 க்கு முந்தியவையே.

சமகால அறிவை இணையத்தில் திரட்டுவதற்கு போதிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். நூல்கள், சஞ்சிகைகளை மின்வருடுவது இம்முயற்சியின் சிறிய பகுதியே. முழுமையான நூல்களுக்கு அனுமதி பெறுவதை விடவும் நூற்பகுதிகள், இதழ்கள்+பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புக்களுக்கு அனுமதி பெறுவது இலகுவானது. பலதரப்பட்ட உள்ளடக்கம் இணையத்துக்கு வர வேண்டும். மின்வருடுவதைவிடத் தட்டெழுதுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இலக்கியம், அரசியல் ஆகிய சிறிய வட்டங்களுக்குள் நின்று விடாமல் வாழ்வியல் தேவைகளுக்கான உள்ளடக்கத்துக்கும் ஆய்வுகளுக்கும் அறிவியற்றுறைசார் தகவல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இம்முயற்சிகள் அனைத்தும் வெளிப்படையாக இருத்தலும் இணையம் மூலம் விரிவாகத் தெரிவிக்கப்படுவதும் பலரும் இணைந்து பங்களிப்பதை ஊக்குவிக்கும். அனைவரையும் ஒரே குடையின்கீழ் திரட்டுவதான முயற்சிகள் சாத்தியமற்றவை. செயற்றிட்டங்களின் தனித்துவமும் அவரவர் திறமைகளும், பங்களிப்பும் மதிக்கப்படுவதோடு தனித்தனித் தீவுகளாக நிற்காமல் ஒன்றிணைந்து முன்னேறுவது அவசியம். (மதுரைத்திட்டம்-சென்னை நூலகம் போன்று ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் வெளியிடுவது போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டும்) தமிழ் விக்கிப்பீடியாவை இதற்கு மிகவும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். தேடுபொறிகளில் முதன்மையிடம் பெறுவதனால் தேவையான உள்ளடக்கத்தை இணங்காணவும் உருவாகும் உள்ளடக்கங்களை இணைக்கவும் விக்கிபீடியா பொருத்தமானது.

பலரும் இணைந்து பங்களிப்பதற்கு ஏற்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டால் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சமென்ன பத்து லட்சம் கட்டுரைகளையே இணையத்துக்குக் கொண்டுவர முடியும்.

“வலைக்களஞ்சிய’த் தோழர்களையும் தமிழார்வமுள்ள அனைவரையும் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.

-கோபி-
kopinath@gmail.com

Series Navigation

author

கோபி

கோபி

Similar Posts