தன்படை வெட்டிச் சாதல் [தளைய சிங்கம் விமரிசனக்கூட்டப் பிரச்சினை பற்றி]

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

நாஞ்சில்நாடன்


காலச்சுவடு ஜூலை ஆகஸ்ட் 2002 இதழிலும் திண்ணை இணையதளத்தின் பல்வேறு இதழ்களிலும் மே 4,5,6 நாட்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த முகாம் பற்றிய கட்டுரை பார்த்தேன்.அதில் பங்கு கொண்டவன் என்றமுறையில் சில விளக்கங்கள் தருவது அவசியமென கருதுகிறேன்.

வாரக்கடைசியில் மனதுக்கு உகந்த இடங்களுக்கு பெயர்வதோ, ஆ ண்டுக்கு ஒரு முறை ஓரிரு மாதங்கள் விடுப்பில் இடம்பெயர்ந்து வாழ்வதோ , தமிழ் எழுத்தாளனுக்கு விதிக்கப்பட்டதல்ல. எப்போதும் முன்வாசலில் காத்திருக்கும் செலவுகளுடன் கைகலப்புகள். இந்தச்சூழலில் இலக்கியமுகாம்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆனாலும் பெரியவிடுதலையாக கருதப்படுகின்றன.

இயற்கைச்சூழல் ,குடும்ப நெருக்கடிகளில் இருந்து தாற்காலிக விடுதலை ,ஒத்த மனவார்ப்பு உடையவர்களுடன் சந்திப்புகள் ,உரையாடல்கள், காலாற நடத்தல்.சில்லறை சச்சரவுகள் மற்றும் ஏதாவது ஓர் இலக்கியக் கொள்கைபற்றியோ படைப்பாளி பற்றியோ கட்டுரைகள் வாதங்கள் பிரதிவாதங்கள்.

காலச்சுவடு நடத்திய பாம்பன்விளை பில்லர்ஸ் ஹோம் கூட்டங்கள் , சொல்புதிது நடத்திய ஊட்டி நாராயண குருகுல முகாம் என்று பத்துக்கும் குறைவான முகாம்களில் மட்டுமே நான் பங்கு கொண்டிருக்கிறேன். மூட்டை மூட்டையாக இலக்கியக் கொள்கைகளும் தத்துவங்களும் அவிழ்க்கப்பட்டு கடைபரத்தப்பட்டிருந்தாலும் நான் கொள்முதல் செய்தது குறைவுதான். என் தாச்சீலை பதக்கு கொள்ள மறுத்தபோதிலும் சில பார்வைகள் தெளிவாகிக் கிடைத்திருக்கின்றன. கிரேக்கம் லத்தீன் என்று நான் மயங்கியிருந்த கருதுகோள்கள் பல பிடிபட்ட்டிருக்கின்றன.

ஆண்டுபூரா தொலைபேசிமணி , தட்டச்சு ஒலி, தொலைபேசியின் மறுமுனை மிரட்டல்களுக்கு மாறி மாறி பொய்கள் என செத்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு இலக்கிய ஆளுமை மிகுந்தவர்களோடும் , துடிப்பான பார்வைகள் கொண்டிருப்பவர்களோடும் தோளுரசி நடப்பது எவ்வளவு உற்சாகமூட்டும் விஷயம்.

எனது வாழ்க்கைசூழலில் நான் சந்தித்து உரையாடி இருக்கவே முடியாத எவ்வளவு நண்பர்களை இந்த முகாம்கள் நெருக்கமாக்கியிருக்கின்றன! மோகனரங்கன் ,சூத்ரதாரி, எம் யுவன், ராஜ் கெளதமன், தேவதேவன், ந.முருகேசபாண்டியன், லட்சுமி மணிவண்ணன், சிபிச்செல்வன், ராஜேந்திர சோழன்,பிரபஞ்சன், சமயவேல், சுரேஷ்குமார இந்திரஜித், மனுஷ்யபுத்திரன், தர்மராஜன், பிரேம்,மாலதி மைத்ரி, எஸ். அருண்மொழிநங்கை,தேவ காந்தன், தேவிபாரதி, கெளதமசித்தார்த்தன், இமையம் , ஜி எஸ் ஆர் கிருஷ்ணன்,க.பஞ்சாங்கம்,என்.சிவராமன் என எத்தனை இலக்கிய நண்பர்கள்.

விடைபெற்றுகொண்டு வரும்போது மனம் பிரிவில் கனத்திருந்தாலும் தோன்றுவதுண்டு ஆண்டுக்கு இரண்டு முகாம்களில் கலந்து கொண்டால் போதும் புத்துயிர்ப்போடு வாழ என.

இனி ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு முகாம் சாத்தியமில்லை என சம்பந்தப்பட்டவர்கள் கூறுவதும் , எந்த இலக்கியமுகாம்களிலும் பங்கெடுப்பது எதிர்காலத்தில் தேவைதானா என்று நண்பர்கள் வினவுவதும் நீங்கள் வெளியிட்ட கட்டுரையின் நோக்கம் நிறைவேறியதற்கான அறிகுறிகள்.

ஊட்டி நாராயணகுருகுலத்தில் நான் மூன்று முகாம்களில் கலந்துகொண்டிருக்கிறேன். நல்ல அமைதியான வசீகரமான இயற்கைசூழல். எல்லா முகாம்களிலும் காலைநேர மலைநேர ந்டைகள் உல்லாசமானவை .என்றாலும் நாராயணகுருகுலத்தில் அவை இன்னமும் ஈர்ப்பானவை. நடப்பது என்பது எப்போதுமே தூரம்கடப்பது மட்டுமல்ல. அமர்வுகளை விடவும் வெ ளிப்படையான செறிவானகருத்துப்பரிமாற்றங்கள் .சமயங்களில் வம்பளப்பும் புறம்கூறலும் இருக்கும். ஆனால் எந்த முகாமில் அது இல்லை ? பகல்பூராவும் கட்டுரைகளின் இறுக்கத்தில் இருந்துவிட்டு வெளியேவரும்போது ஓய்வான பிற நேரங்களில் இலக்கியம் இலக்கியவாதிக ள் சார்ந்த எதைப்பற்றியும் பேச்சு அமையும். ஆனால் வம்புக்கு அல்லது புறம்கூறுவதற்கு என்று எந்த முகாமும் நடக்க இயலாது .நாராயணகுருகுலத்தில் நடந்தது வம்பு மட்டுமே என்று காட்டப் பாடுபடுகிறது நீங்கள் வெளியிட்ட கட்டுரை.

கிறிஸ்துவ அறக்கட்டளை வளாகங்களில் நடக்கும் முகாம்களில் ஏற்பாடுகள் செய்துதந்துவிட்டு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள் .ஆனால் அந்த ஒதுங்கலே கூட மறைமுகக் கண்காணிப்பு போல தோன்றும். இந்து அறக்கட்டளை இடங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.ஆனால் ஊட்டி நாராயண குருகுலத்தில் துறவிகளும் இன்முகத்துடன் வாதங்களில் பங்கேற்பார்கள் . புத்தர் பற்றி புத்த பூர்ணிமா அன்று இரவு சுவாமி [டாக்டர்] தம்பானும் சுவாமி வினய சைதன்யாவும் முன்பொரு முகாமில் இரவு எட்டு மணிக்கு ஆற்றிய உரையை என்னால் இன்னும் மறக்க இயலவில்லை .

அங்கு மற்றொரு விஷயம் .பங்கேற்போர் தூங்கி எழுந்திருக்காத நிலையில் துறவிகள் நமக்காக ‘கட்டன் சாயா ‘தயாரித்துக் கொண்டிருப்பார்கள் .இரவுகளில் கம்பளிப்போர்வைகள் வினியோகிக்க சுமந்துகொண்டிருப்பார்கள். நாம் அமர்ந்து எழுந்துபோனபிறகு பாய்களையும் விரிப்புகளையும் சுருட்டிக் கொண்டிருப்பார்கள். முகாம்களுக்கு என்றே ஒரு துறவி கல்லட்டி மலை உச்சி ஆசிரமத்திலிருந்து காட்டு நாரத்தங்காய் ஊறுகாய் தயாரித்து எடுத்துக் கொண்டு வருவார் . குளிக்க வெந்நீர் போடுதல், காய்கறி அரிதல், சமைத்தல், பரிமாறுதல் என எந்த முகச்சுளிப்பும் இன்றி இயல்பாக இருப்பார்கள் .

ஒரு குளிர்மண்டிய டிசம்பர்காலையில் கட்டன் சாயா தயாரியிருக்குமோ என தேடிப்போகையில் சுவாமி வினயசைதன்யா தரையிலமர்ந்து இருபத்தைந்து பேருக்கு கோதுமைப்புட்டு செய்ய மாவு பிசைந்துகொண்டிருந்தார் .ஜெயமோகன் ஒருமுறைகுறிப்பிட்டது போல அவர் கற்றிருந்த புத்தகங்களின் பின்னட்டை க் குறிப்புகளைக் கூட நான் படித்திருக்க வாய்ப்பில்லை .

மிகுந்த வருத்தமாக இருக்கிறது . ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விடம் .

சற்று யோசித்தால் தெரியும் , வெறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவில் தங்குமிடம் உணவு இலவசமாக இருபததைந்துபேர் பங்கேற்கும் மூன்றுநாள் முகாம் சாத்தியமா என. தமிழ் இலக்கியத்தின் மேலும் இலக்கியவாதிகள் மேலும் நாராயண குருகுலத்து துறவிகளுக்கு இருந்த மதிப்பு வெகுவாக களங்கப்பட்டு போயிருக்கும் .

வாசகர்கள் அறியவேண்டிய மற்றொன்று , சுவாமி வினய சைதன்யா ஈழவர்களுக்கு எதிரானவர் என்று நிறுவும் முயற்சி பிழையானது என்று . தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் வெளிப்படுத்திய ஆதங்கம் நாராயணகுருவை ஒரு ஈழவச்சார்பானவராக பார்ப்பது பற்றியது . வ உ சியை வெள்ளாளனாகவும் , பாரதியை ஐயராகவும், காமராசரை நாடாராகவும் காந்தியை வணிக வைசியராகவும் பார்ப்பது போன்று ஒரு மாமனிதனின் ஆளுமையை சாதிச்சகதியில்போட்டு மிதிக்கமுயல்வதற்கு எதிரான மனநிலை கொண்டவர அவர் . இன்னுமொரு செய்தி, நாராயணகுரு , நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி போல சுவாமி வினயசைதன்யாவும் ஈழவராக இருந்தவர்தான். நீங்கள் வெளியிட்ட கட்டுரையின் பிற செய்திகள்பற்றிய நம்பகமற்ற தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு .

ஜெயமோகன் மூக்கடைப்புக்கு ஆக்டிஃபைட் மாத்திரை தின்றால் அது தூக்கமாத்திரை ஆகிவிடுகிறது.அவரும் சேது ஆகிவிடுகிறார்.

இன்னொன்று ஜெயமோகன் சுந்தர ராமசாமியை மூன்று நாட்களில் நடந்த அமர்வுகளிலோ அல்லது பிற உரையாடல்களிலோ எங்குமே அவமரியாதையாகக் குறிப்பிடவில்லை .வேதசகாய குமாரும் ஜெயமோகனும் சுந்தர ராமசாமியை பரம்பொருளுக்கு அடுத்த இடத்தில்வைத்து பேசிய நாட்களும் உண்டு.இன்று கடுமையாக விமரிசனம் செய்கிறார்கள். இரண்டுக்குமே இலக்கியத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பின்னணிகள் இருக்கலாம். ஆனால் எந்தக்காலத்திலும் அவரை அவமரியாதை செய்தவர்கள் அல்ல.

முகாமின் முதல்நாள் நல்ல மழைபெய்து கொண்டிருந்தது .ஜெயமோகன் வந்த பேருந்து மிகதாமதமாக வந்தது .மாலைவரை எதுவுமே நடக்கவில்லை . மழைக்கு பாதுகாப்பான கண்ணாடிக்கதவுகளும் அடைப்புகளும் கொண்ட பூமுகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் கோணங்கி வழங்கிய[ராஜ நாயகம் அவருக்கு கோணங்கி இப்பட்டத்தை வழங்கியதாகந்தன் மூலக் கட்டுரையில் சொல்லியிருந்தார் ] ‘வசீகர கோமாளி ‘ பட்டம் மறுமுறை நிறுவப்பட்டு கொண்டிருந்தது . தளைய சிங்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவந்த முகாமா அல்லது தமிழ் சினிமாவின் வெளிப்புறப் படப்பிடிப்பு ஓய்வு இடைவேளையா எனும் ஐயம் ஏற்படும் அளவுக்கு நடிக ந்டிகைகள்பற்றிய துணுக்குகள் , துக்கடாக்கள் மிமிக்ரிகள், அபிநயங்கள்… இரவில் சிலநண்பர்கள் இதுகுறித்து சில நண்பர்கள் ஜெயமோகனிடம் முறையிட்டபோது யாரும் நேரில் சொல்லவேண்டாம் தானே சொல்லிக் கொள்வதாக சொன்னார்.

முதல்நாள் இரவு ஒரு அமர்வு. மறுநாள் காலை ஒரு அமர்வு . தொடங்கியசற்று நேரத்திலேயே ஒரு பங்கேற்பாளி வெளியேற்றப்படுகிறார் .குற்றம் கழுதையை புணர்ந்தது பற்றிய விரிவான செய்முறை அபிநயம். நவீன நாடக மைமிங் போல .கழுதை பஞ்ச கல்யாணியா கல்யாண்சுந்தரமா என்பது போன்ற ஆதாரபூர்வமானதகவல்கள் .மூன்றுமுறை அறிவுறுத்தப்பட்டபிறகும் தளையசிங்கத்தை விவாதிக்கும் ஓர் அமர்வில் ஒருவர் இதைச் செய்தால் என்ன செய்வீர்கள் ? அமர்வில் வெங்கட் சாமிநாதன் இருக்கிறார் , சுவாமி வினய சைதன்யா இருக்கிறார்,பெண்கள் ,சிறுவர்கள் இருக்கிறார்கள். எல்லா ஆண்மகனிடமும் குறி இருக்கிறது , அதை எப்போது கையில் எடுத்து கொஞ்சுவது என்றில்லையா ? இதில் ‘பொம்பிளைச்சீக்கு ‘ போன்ற பிரயோகம் வேறு . இந்த லட்சணத்தில் நாம் பெண்ணியமும் பேசுகிறோம்.

தளைய சிங்கத்தின் படைப்புகள்பற்றியும் அவரது கருத்தியல் பற்றியும் விவாதங்கள் நடைபெற்ற அமர்வுகளில் ஒன்றேகாலே அரைக்கால் அமர்வுகளில் பங்கு பெற்றவர் தளையசிங்கத்துக்கு சுவிசேஷ எழுப்புதல் ஆராதனை ந்டைபெற்றதாக கூறுகிறார் . ஆனால் கழுதைப்புணர்ச்சி பற்றிய விரிவுரையும் செய்முறையும் இல்லாதுபோயிருந்தால் இதுபோன்ற கருத்து செறிவுள்ளகட்டுரை கலாபூர்வமான கட்டுரை தமிழிலக்கியத்துக்கு கிடைக்காமல் போயிருக்கும். என்னெ தமிழன்னை செய்த தவம்.

எல்லா முகாம்களிலும் அதை நடத்துபவர்களின் திவான்கள் பிரதானிகள் சற்று அதிகமாக பேசுவார்கள் .ஒன்றும் குற்றமில்லை அதில் .அமர்வுதவிர்த்த நேரங்களில் வம்பளப்பும் உண்டு.கைகலப்பும் உண்டு.சொறிந்து கொடுப்பதும் சொறிவதற்கு வாகாக வளைந்து கொடுப்பதும் உண்டு.இலக்கியவாதி என்பவன் தேவதூதன் அல்லவே.ஆனால் இவற்றை மாத்திரம் காட்சிப்படுத்தினால் ஏற்கனவே நமது மதிப்பு வெகுசன ஊடகங்களிலும் அரசியல்வாதிகளிடத்தும் கல்வியாளர்களிடமும் கொடிகட்டிபறக்கிறது .அத்துடன் கோமணமும் சேர்ந்துபறக்கும்.

ஜெயமோகன் சிலவிஷயங்களில் கண்டிப்பானவர். வருகிறவர்கள் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்கவேண்டும், அமர்வு நடக்கும்போது வெளியே கூடிநின்று பேசக்கூடாது, அரங்கினுள் மது அருந்தக்கூடாது என. இவற்றையெல்லாம் கிண்டல் செய்து எனது மலையாள நண்பர் விகடகவி விஜயகுமார் குனிசேரி [ஜெயமோகனுக்கும் ந்ண்பரே ] ‘நாஞ்சில் நக்கீரன் ‘ என்ற நீண்டகவிதைஎழுதி வெளியாகி இருக்கிறது .ஆனால் அதற்கும் ஒரு இலக்கியத்தரம் உண்டு. இந்தக்கட்டுப்பாடுகள் ஏதும் பங்கேற்பவரின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியதில்லை. அமுதம் பருக ராகு மாறுவேடத்தில் வந்ததே நஞ்சு துப்பத்தானோ என்று படுகிறது .துரியோதன சபைகிடக்கட்டும் ,பாண்டவர் சபையில்மட்டும் கழுதையை புணரும் செயல்முறைவிளக்கத்தை அனுமதிப்பார்களா ?

என்றாலும் அவரை சமாதானப்படுத்தி சுவாமி வினய சைதன்யா பெருந்தன்மையுடன் சொன்னார் எவரையும் வெளியேற்ற வேண்டாம் ,அமர்வு தொடரட்டும் என்று

எனக்கு ஜெயமோகனை பதிநான்கு ஆண்டுகளாக தெரியும். முப்பத்தாறு ஆண்டுகளாக வேதசகாயகுமாரை தெரியும். இருபத்தேழு ஆண்டுகளாக [காலச்சுவடு ] கண்ணனை தெரியும்.பழந்தமிழ் இலக்கியத்தில் ‘தன்படை வெட்டிச் சாதல் ‘ என்றுண்டு . அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாததால் தான் இந்தக்கடிதம்.

[இக்கடிதம் காலச்சுவடுக்கும் அனுப்பபட்டுள்ளது ]

1/8/2002

கோவை

Series Navigation

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்