தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

தேவமைந்தன்


தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை.

பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த மனிதாபிமானப் பற்றுதான் அது. மனிதன் எவனே ஆயினும் மனிதனாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு கூடாது. “சமத்துவ மனிதாபிமானப் பெருஞ்சுனையின் இடையறாத ஓட்டமே, பெரியாரின் வாழ்க்கை என்னும் வீர, வெற்றிக்காவியம் ஆகும்” என்று சரியாகச் சொல்லியிருக்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.

1950ஆம் ஆண்டுவரை, நம் சிற்றூர்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களில் கூட வேனிற் காலத்துத் தண்ணீர்ப் பந்தல்களிலும் – எல்லாக் காலத்தும் சுறுசுறுப்பாக இயங்கும் தேநீர் விடுதிகளிலும் அனைத்துச் சாதிக்காரர்களும் ஒடுக்கப்பட்டவர்களை நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார். இதற்கு அடிப்படையாக அவர் ‘செல்லப் பிள்ளை’யாகவும் ‘செல்வர் பிள்ளை’யாகவும் ‘கட்டுக்கடங்காத பிள்ளை’யாகவும் வாழ்ந்த இளம்பருவத்திலேயே பட்டறிந்த நிகழ்ச்சிகள் அமைந்தன. “நாம் பலரை இழிவு படுத்த உரிமை கொண்டாடுவதால், சிலர் நம்மை இழிவு படுத்திக் காட்டுகிறார்கள். நாம் யாரையும் இழிவு படுத்தக் கூடாது; நம்மை யாரும் இழிவு படுத்த ஒப்புக் கொள்ளக்கூடாது. அத்தகைய சமத்துவ நிலையே சரியான நிலை” என்று கருதினார் துடுக்குப் பிள்ளை ராமசாமி… கருத்து செயல்பட்டது.

1942ஆம் ஆண்டுவரை, திண்ணைப் பள்ளிகளிலும் ‘பிரைமரி ஸ்கூல்’ என்று அன்று வழங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதியாரின் பிள்ளைகளும் கல்வி கற்பதில் பல பின்னடைவுகளையும் ஏச்சுப் பேச்சுக்களையும் அடைந்து, “நமக்குப் படிப்பே வராது!” என்று இடிந்துபோய் நொந்து வாழ்ந்த நிலையை மாற்றி ‘அனைவருக்கும் கல்வி’ என்ற இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் பெரியார்.

“கோயிலுக்குள் நான் ஏன் நுழையக் கூடாது? கோயிலின் கருவறைக்குள் போய் நான் ஏன் கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்தக் கூடாது?” என்று ஒடுக்கப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு இன்று நீதிமன்றத்துக்கும் சென்று வழக்காடும் அளவு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர் பெரியார்.

ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்குத் தகுந்த கூலி கேட்கவும் உரிமையற்றுக் கிடந்த நிலையை மாற்றியவர் பெரியார். எல்லாம் தங்கள் தலைவிதி என்று அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் குமைந்து கொண்டிருந்த அவலத்தை மாற்றி, “நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்தம்!” என்ற உண்மையை 1925ஆம் ஆண்டு முதலே கற்றுத் தந்து சமதர்ம சம உரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர் பெரியார்.

‘பங்கா’ இழுப்பது, எடுபிடி வேலைகள் செய்வது போன்ற கீழ்நிலை வேலைகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று 1946ஆம் ஆண்டுவரையில் தாழ்வு மனப்பான்மையுடன் கிடந்தவர்களுக்கு உணர்ச்சியூட்டி, எழுத்தர் பணி முதல் உயர்நீதி மன்ற நீதிபதிப் பணி வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வந்துசேர வழிவகுத்தவர் பெரியார்.

சமுதாயம், அரசியல், பொருளியல் முதலான துறைகளிலும் நெடுங்காலமாக இழிவைச் சுமத்திவந்தவையான மூடநம்பிக்கைகள், சாதிமதப் பழக்க வழக்கங்கள், உரிமை – உடைமை – வாய்ப்புப் பெறுவதில் பேதங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தார் பெரியார். கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் கிஞ்சிற்றேனும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றை எடுத்துரைத்தார். வாயில்லாப் பூச்சிகளாகவும் மரத்துவிட்ட மனமுள்ளவர்களாகவும் இருந்தவர்களை மானம் மிகுந்தவர்களாக மாற்றிக் காட்டினார் பெரியார்.

அரசியல் சமவுரிமையைப் பெரியார் மிகவும் வற்புறுத்தினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அந்த அந்த மதத்தவரின் – அந்த அந்த அந்தச் சாதியினரின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, அரசியல் பதவிகள் – அரசுப் பணிகள் – தொழில்துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் வரவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

பெரியாரின் வார்த்தைகளாலேயே சொல்வதானால் “பேதமும் கவலையும் ஒழிந்த சமதர்ம சமுதாய அமைப்பை உருவாக்குவதுதான்” அவர்தம் இறுதியானதும் உறுதியானதுமான முதல்நிலைக் குறிக்கோள் ஆகும். அதற்கு உதவாதவற்றை ஒதுக்கித் தள்ளவே முனைந்தார் அவர். இயக்க ரீதியில் மக்களை அணுகிச் செயல்புரிவது ஒன்று மட்டுமே செயல் வடிவம் என்று அறிவுறுத்தியவர் பெரியார். அப்படித் தம் குறிக்கோளுக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டு – உட்சாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெருளாதார பேத ஒழிப்பு, அரசியல் அலுவல் துறையில் நிலவும் மேற்சாதி ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றுக்கான செயல் வடிவிலான திட்டங்களை அமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்திட உரிய பணிகளை மேற்கொள்ளுவதையே பெரியார் வற்புறுத்தினார்.

‘எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?’ என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு பெரியார் கூறினார்: “பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் — ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் — பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் — ‘என்சைக்ளோபீடியா’, ‘ரேடியோ’ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்து அல்ல……..

ஜீவ சுபாவ உணர்ச்சியான — தன்மை உணர்ச்சியும் தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து — அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி — தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு சீவப் பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது.” கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி ஆகிய ஊர்களில் 1945ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெரியார் இவ்வாறு மொழிந்ததைக் ‘குடி அரசு’ ஏடு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் இவ்வாறு வெளியிட்டது.
மனிதன் முதல் முதலாக மற்றொரு மனிதனுடன் திருத்தமாகத் தொடர்புகொள்ள உருவாக்கிக் கொண்டது மொழி அல்லவா? அப்படி உருவான தமிழின் மேன்மைகள் குறித்து மிகவும் விரிவாகக் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளார் பெரியார். தமிழ்மொழி குறித்து அவர் கூறியதாவது: “தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். “இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது” என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கடந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப் போவோம்; பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கூறியதோடு விட்டுவிடாமல் திட்டவட்டமான தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைத்தார். அதன்படித்தான் இப்பொழுது அச்சகங்களிலும் தட்டெழுத்துப் பொறிகளிலும் கணினிகளிலும் தமிழ் பயன்படுத்தப் பெறுகிறது. கல்வி நிலையங்களிலும் பாடப் புத்தகங்களிலும் பெரியார் வழங்கிய எழுத்துச் சீர்திருத்தமே செயல்பட்டு வருகின்றது.

“பெரியார் செய்த தொண்டுகளில் மிகவும் தலைசிறந்தது பெண்ணடிமை நீக்கப் பாடுபட்டதுதான்” என்று மனோரஞ்சிதம் அம்மையார் 1982ஆம் ஆண்டிலேயே எழுதினார். நம் நாட்டில் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமைகள் போல விற்பது முன்பு மிக அதிகமாக இருந்தது. இராகு காலம் சகுனம் பார்ப்பதிலும், நாள் கிழமை பார்த்து நடப்பதிலும், ஒரு ஆண்டில் 108 பண்டிகை கொண்டாடுவதிலும் நம் பெண்களின் தொன்றுதொட்டு வந்த பழக்கங்கள். விரதம் பூஜை புனஸ்காரங்களில் நம் பெண்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று கூறலாம். அந்நாளில் படிப்பறிவு இல்லாததும், பகுத்தறிந்து பார்க்க இயலாமல் இருந்ததும், சொன்னதைப் பெரியவர்கள் கூறினார்கள் என்றதால் காரணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் ஆமைகளாக அடங்கிக் கிடக்க நேர்ந்ததும், இயற்கையான பலவீனமும் சேர்ந்து பெண் அடிமையானாள். இந்த நாடு உண்மையிலேயே முன்னேற வேண்டுமென்றால் பெண்ணடிமை தீர வேண்டும் என்று கருதினார். “பெண் ஏன் அடிமையானாள்?” என்று சிந்தித்துக் காரணங்களோடு எடுத்து எழுதினார். நம் பெண்கள் எதையும் சிந்தித்துப் பார்க்கும் திறமை பெற வேண்டும் என்று அயராது முயன்றார். பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று பாடுபட்டார். சமுதாயத்தில் பெண் தலைநிமிர்ந்து நிற்க ஆணும் பெண்ணும் சமமான தகுதி பெற பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப் பெறல் வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

சீர்திருத்தத் திருமண முறையைக் கொண்டு வந்து சூழ்நிலைகளால் பலிகடா ஆக்கப்பட்ட பெண்கள் மீண்டும் நல்வாழ்வுபெற வழிவகுத்தார். பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று கொண்டு வந்து திருமணத்தில் பெண்ணடிமையை ஒழித்தார்.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பெண்கள் ‘நகை மாட்டும் ஸ்டாண்டு’களாக மட்டுமே இருக்கக் கூடாது என்றார். தாய்ப்பாலோடு மூடநம்பிக்கையையும் சேர்த்துக் குழந்தையின் சிந்தனையை நம் தாய்மார்கள் முடப்படுத்தும் போக்கைக் கண்டித்தார். அறிவியல் முறையில் நம் நாடு முன்னேற வேண்டுமென்றால் நம் பெண்கள் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் நாட்டிற்குத் தொண்டு செய்யும் வீராங்கனைகளாக விளங்கவேண்டும் என்று திருமண மேடைகள்தோறும் முழங்கினார்.

அவர் முழக்கம் கேட்டு, “பெண்கள் வெளியில் வருவதே தவறு” என்று ஆண்களால் விதிக்கப்பட்ட அந்நாளில், பெரியாருடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், ‘பெரியார்’ என்ற பட்டம் தந்த நாராயணி அம்மையார், அலமேலு அப்பாத்துரை அம்மையார் முதலாக எத்தனையோ தாய்மார்கள் முன்வந்தார்கள். இந்தி எதிர்ப்பில் சிறை சென்றார்கள். பெரியார், தான் என்ன சொன்னாரோ அதைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கேற்ப, தம் துணைவியார் நாகம்மையாரையும் தமக்கை கண்ணம்மாவையும் பின்னாளில் மணியம்மையாரையும் பொதுவாழ்விலும் சுயமரியாதை இயக்கப் பணியிலும் பெரியார் ஈடுபடுத்தினார்.

அந்தக் காலத்திலேயே குடும்பக்கட்டுப்பாட்டையும் அரசுப்பணிகளில் பெண்களுக்குச் சமவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தியவர் பெரியாரே ஆவார். குழந்தைகளைச் சீர்திருத்த முறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்கினால் எதிர்காலத்தில் சாதிப் பாகுபாடு அறவே அழிந்துவிடும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். பிள்ளைகள் வளர்ந்த பின்பு சுயமரியாதை முறையில்தான் திருமணங்கள் செய்துவைக்க வேண்டும் என்றும் மொழிந்தார்.

மக்கள் அனைவரும் எந்த வகை வேறுபாடும் இன்றித் தன்மானத்துடன் வாழப் பகுத்தறிவிப் பணியை வாழ்நாளெல்லாம் செய்த பெரியார், தனது சுகத்தையே முதலில் புறந்தள்ளினார். வசதியாகச் சாய்வு நாற்காலிகள் – ‘சோபா’க்களில் அமர்ந்து கொள்ளுவதையும் தவிர்த்தார். “சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது” என்று தெரிவித்தார் பெரியார்.

அவர் வார்த்தைகளையே இங்கு தருகிறேன்.

“சாதாரணமாக நான் ‘ஈசிசேரில்’ உட்காருவதே கிடையாது….ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்பொழுது சாய்ந்துகொண்டு கால்கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவைகள். நான் அப்படிச் சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவன் அல்ல! மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச் சீட்டில் கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால் அதிகம் தூங்க மாட்டேன் இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம். இப்படி எனக்கு, ‘தூங்குவது என்ற பழக்கம் கூட வெறுப்பாகிவிட்டது! தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒரு விதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது.”
****
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 3 தொகுதிகள், சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி-2. 1974.
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியாரியல், 2 தொகுதிகள், தையல்நாயகி நினைவு நூல் வெளியீட்டகம், புதுச்சேரி-10. 2004.
சுந்தரவடிவேலு, நெ.து. புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை-600 002. 1979.
பெரியார் ஈ.வெ.ரா. எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, சென்னை-600 007. 1980.
வேலூர் செந்தமிழ்க்கோ. பெரியார் சாதித்ததுதான் என்ன?, அறிவுக்கனல் பதிப்பகம், வேலூர்-632 001. 1983.

karuppannan.pasupathy@gmail.com
http://kalapathy.blogspot.com

Series Navigation