டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

ஞாநி


சினிமா உலகத்தைப் பல சமயங்களில் நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்பதால் எனக்கு சினிமா பிடிக்காது என்று ஒரு சிலர் தப்பான கருத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அரசியலும் அப்படியே. பத்திரிகையும் அப்படியே. டி.வியும் அப்படியே. நாடகமும் அப்படியே. மனித உறவுகளும் அப்படியே. இவையெல்லாம் பிடித்தவை என்பதால்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியே வருகிறது. நமக்குப் பிடித்தவை நல்லபடியாக இருக்கவேண்டும்; ஆனால் இல்லையே என்ற வருத்தத்தின் அடிப்படையிலிருந்துதான் விமர்சனங்கள் எழுகின்றன.

தீவிர இலக்கியவாதிகள், அரசியல் விமர்சகர்கள் இவர்களெல்லாம் சினிமா ரசிகனக இருக்கக் கூடாது என்று நினைக்கும் சிலர் இந்தத் துறைகளில் இருக்கிறார்கள். இதே போல சினிமா உபாசகர்களாக இருக்கும் சிலர் அச்சடித்த எழுத்தை படிப்பதே ஒரு பாவச் செயல் என்று கருதுகிறார்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு அச்சு, சினிமா இரண்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ரசனையும் உடைய சிலர் இருக்கிறார்கள். முதலில் சொல்ல வேண்டிய பெயர் அசோகமித்திரன். அடுத்து தியடோர் பாஸ்கரன், விட்டல்ராவ். இனிய ஆச்சரியமாக அமைந்தது வரலாற்றாளர்- தொகுப்பாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு சினிமாவில் இருக்கும் அக்கறையும் அறிவும். ஒரே கூட்டத்துக்காக இருவரும் ஒரு முறை திருவண்ணாமலை சென்றபோது பயண அலுப்பு- நீக்கு உரையாடலில் இது தெரிய வந்தது. சுற்றுச் சூழல் கட்டுரையாளர் ரவி சீனிவாஸ் சினிமாப் பாட்டிலும், நடிகைகள் பற்றிய சினிமா பத்திரிகைத் துணுக்குகளிலும் ஆழ்ந்த புலமை உடையவர்.

காலமும் சினிமாவும் சிலரை மாற்றிவிடுகின்றன. 1978-79ல் வீதி தெரு நாடக இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எங்களில் பலர் மெரினா கடற்கரையில் நாடகங்களை நடத்தி முடித்து விட்டு அவசர அவசரமாக கலைவாணர் அரங்கத்தில் சத்யஜித் ரே, மிருணாள் சென் படங்களைப் பார்க்க ஓடுவோம். ஆனால் எழுத்தாளர் பூமணி மட்டும் கொட்டகையில் மூன்று மணி நேரம் உட்கார்ந்து படம் பார்ப்பது வீண் என்று சொல்லிவிட்டு போய்விடுவார். வீதி இயக்கத்தில் இருந்தவர்களிலேயே பின்னாளில் திரைப்பட இயக்குநர் ஆனது அவர் ஒருவர்தான் !

திரைப்பட இயக்குநர் ஆவது இன்றைக்கு பல இளைஞர்களுக்கு மாபெரும் கனவு. பொதுவாக சினிமா இயக்கும் ஆசை உள்ள பலருக்கு டி.வி மீடியம் என்பது கீழானது என்ற எண்ணம் உண்டு. சினிமா வாய்ப்பை துரத்தித் துரத்திக் களைத்துப் போன பலரைக் கடைசியில் டி.விதான் உயிர் வாழவைத்திருக்கிறது. அண்மைக் காலமாக சினிமா கனவு உள்ள பல இளைஞர்கள் குறும்பட இயக்குநர் என்ற முத்திரையுடன் வலம் வருகிறார்கள். டி.வி. நிகழ்ச்சியில் வேலை செய்கிறேன் என்று சொல்லிக் கொள்வதை விட இந்த லேபிள் அதிக அந்தஸ்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தக் குறும்படங்கள் எல்லாமே வீடியோ படங்கள்தான். சினிமாவை விட நவீனமான வீடியோ தொழில் நுட்பம்தான் படமெடுப்பதை ஜனநாயகப்படுத்தியிருக்கிறது. ஒரு ஹேண்டிகேம் உதவியுடன் இன்று வெறும் 5000 ரூபாயில் குறும்படம் எடுத்து விடலாம். ஒளிபரப்புத் தரத்துக்கான 15 நிமிடப் படம் எடுக்க அதிக பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் போதும்.

படம் எடுப்பது பெரிசல்ல. கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ கூடப் படம் எடுக்கப் பணம் சேர்த்து விடலாம். ஆனால் எடுத்த படங்களை எப்படி பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதுதான் இன்றைய குறும்படக்காரர்களின் முதன்மையான பிரச்சினை. பல இளைஞர்களுக்கு தங்கள் படங்களை எப்படி உலகப் பட விழாக்களுக்கு அனுப்புவது என்பதெல்லாம் தெரியாது. தரமான படத்துக்காக வாழ்க்கையையே தியாகம் செய்து விட்டு மக்கள் இயக்கம் நடத்தும் குறும்படக் காவலர்கள் போல பத்திரிகைகளில் சித்திரிக்கப்படுபவர்கள் இந்த தொழில் ரகசியங்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்வது இல்லை.

இப்போதைக்கு குறும்படங்களை எடுக்கும் பலர் அவற்றை சி.டியில் பதிந்து விசிட்டிங் கார்ட் போல சி.டிகளை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மேஜையிலேயே ஏழெட்டு சி.டி.கள் சேர்ந்திருக்கின்றன. அந்தப் படங்களைப் பற்றி அடுத்த இதழில்.

இப்போதைக்கு குறும்படங்களைக் காட்டுவதற்கு ஒரு சில திரைப்பட சங்கங்கள் முன்வந்திருக்கின்றன. நெய்வேலியில் நிலக்கரி நகரத் திரைப்படச் சங்கத்தில் துடிப்பான மிடில் ஏஜ் இளைஞர்கள் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை அண்மையில் புத்தகக்கண்காட்சி நிறைவு நாளில் நடத்தினார்கள். காவ்யா புகழேந்தியின் அப்பா, அருள் எழிலனின் ராஜாங்கத்தின் முடிவு, ஜெயபாஸ்கரனின் சென்னைப்பட்டணம் ஆகிய படங்களைக் காட்டினார்கள். அப்பாவின் இயக்குநரை சந்தித்தேன் . அவர் படத்தைத் தவறவிட்டேன். அந்தப்படம் ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

டி.வி சேனல்கள் நிறைய குறும்படங்களைக் காட்ட முடியும். காட்ட வேண்டும். ஆனால் சன், விஜய், ராஜ் எல்லம் இதில் இதுவரை அக்கறை காட்டவில்லை. பொதிகையில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் படிக்கும்போது எடுத்த படங்களை சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்புகிறார்கள். இந்தப்படங்களை ஒளிபரப்புவதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் இவை மாணவர்கள் சினிமா பற்றிக் கற்றுக் கொள்ளும் வயதில், கமர்ஷியல் சினிமா கனவு, கலைப்பட பாதிப்பு , வாழ்க்கை + தொழில் நுட்பம் பற்றிய முதிர்ச்சியின்மை எல்லாம் கலந்த நிலையில் பார்வையாளர்கள் யார் என்று இலக்கு நிர்ணயிக்காமல் எடுக்கப்பட்டவை.

நெய்வேலியில் பார்த்த படங்களில் அருள் எழிலனின் ராஜாங்கத்தின் முடிவு, சதத் ஹாசன் மாண்ட்டோவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதே சுகம் என்ற நிலை நமக்கு வாய்க்காதா என்பது பலரின் ஆதங்கம். புத்திசாலித்தனமாகவும் அன்பாகவும் பேசக் கூடிய ஒரு பெண்ணின் நட்பு கிடைக்காதா என்பது இன்னொரு ஆதங்கம். இந்த இரண்டையும் திறமையுடன் பயன்படுத்துகிறது மாண்ட்டோவின் கதை. எழிலன் தானே நடித்து இயக்கியுள்ள விதம் படத்தை ரசிக்க வைக்கிறது.

ஜெயபாஸ்கரனின் சென்னைப்பட்டணம் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து முகவரியைத் தொலைத்து விட்டு அல்லாடும் ஒரு முட்டாள் இளைஞனின் அனுபவங்கள் பற்றியது. நகரத்தில் கெட்டவர்களும் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று படத்தில் சொன்னாலும் படத்தின் தொனி நகரத்துக்கு எதிரானது. கிராமம் ஏதோ ஒரு இழந்த சொர்க்கம் என்கிற மூட நம்பிக்கைதான் நகரத்தை இழிவாகப் பார்க்க்ச் செய்கிறது. டி.வி, வீடியோவால் பிழைத்துக் கொண்டு அதைக் கீழானதாக் கருதுவது போல நகரத்தின் எல்லா வசதிகளையும் ( குறிப்பாக் அன்றாடம் ஜாதி அடையாளத்திலிருந்து தப்பித்திருப்பது ) பயன்படுத்திக் கொண்டு அதை மதிக்கத் தவறுவது முதிர்ச்சியற்ற மன நிலைதான். எனினும் இந்தப் படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது. கிராம இளைஞனின் நடிப்பு மட்டுமே தேறும்.

இனி புத்தக் கண்காட்சியைப் போல குறும்பட விழாவையும் ஆண்டு தோறும் எற்பாடு செய்வது பற்றி நெய்வேலி லிக்னைட் நிர்வாகமும் திரைப்பட சங்கமும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வணிகப் படங்களைப் போல, குறும்படங்களையும், நீளமான வித்யாசமான முயற்சிகளையும் கொட்டகைகளில் திரையிடும் வாய்ப்பு இல்லாத நிலையில், பட விழாக்கள்தான் ஒரே களமாக இருக்கின்றன.

ஆனால் பட விழாக்களில் காட்டும் செய்திப் படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வேண்டும் என்று பி.ஜே.பி ஆட்சியில் விதி கொண்டு வரப்பட்டது. பிப்ரவரியில் மும்பையில் நடந்த குறும்பட விழாவுக்கான் அறிவிப்பில் இந்த விதி இருந்ததைக் கண்டதும் நான் ஈ மெயில் வழியே எதிர்ப்பை விழா அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன். எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்த இன்னொருவர் இயகுநர் ஆர்.வி.ரமணி. நாடு முழுவதிலிருந்தும் பல கலைஞர்கள் எதிர்ப்பு காட்டியதும் அந்த விதி தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால் எதிர்ப்பு காட்டியவர்களின் படங்கள் விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப் படவில்லை. ( திருப்பதி பாலியல் தொழிலாளர்கள் பற்றிய என் படமும்தான்.) இதன் விளைவாக விகல்ப் என்ற மாற்றுப் பட விழாவை சில கலைஞர்கள் ஏற்பாடு செய்தார்கள். அந்தப் படங்களை சென்னை உட்பட பல நகரங்களில் இப்போது காட்டி வருகிறார்கள். பி.ஜே.பி அரசு அனுமதிக்க மறுத்த படங்களில் முக்கியமானது ராகேஷ் சர்மா குஜராத் முஸ்லிம் படுகொலைகள் பற்றி எடுத்த ‘ ஃபைனல் சொல்யூஷன் ‘.

புதிய காங்கிரஸ் அரசும் செய்திப் படங்களுக்கு தணிக்கை சான்று இருக்க வேண்டுமென்ற விதியை இன்னும் நீக்கவில்லை. அக்டோபரில் கோவாவில் நடக்க இருக்கும் பட விழாவுக்கு இந்த விதி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆபாசமான படங்களைத் தணிக்கை விதிகளுக்கு உட்படுத்துவது பற்றி அக்கறையில்லாத அரசுகள் அரசியல் படங்களுக்கு மட்டுமே கத்தியைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. தணிக்கைக் குழுவின் அராஜகத்துக்கு அண்மை உதாரணம் ‘ நியூ ‘. விதிகளின்படி தணிக்கை செய்திருந்தால் இந்தப் படத்தில் சரி பாதியை வெட்டி எறிய வேண்டியிருக்கும். ‘பாய்ஸ் ‘ பட சர்ச்சையின்போது தாங்கள் தயாரிப்பாளரால் ஏமாற்றப்பட்டதாகப் புலம்பிய சென்னை தணிக்கை அதிகாரிகள் ‘ நியூ ‘ விஷயத்தில் முதல் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

தனியார் தயாரிப்பாளர்கள் எப்போதும் லாப நோக்கம் மட்டுமே உடையவர்களாக இருப்பதுதான் அவர்களுடைய இயல்பு. ஆனால் மக்கள் பணத்தில் நேரடியாக செயல்படும் அரசு அமைப்புகள் மக்கள் நலனையே லாபமாகக் கருதி செய்ல்பட்டாக வேண்டும்.

நேருவின் ஆரோக்கியமான கலை இலக்கியப் பார்வையின் விளைவாக இப்படி உருவாக்கப்பட்டவைதான் சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி ஆகியவை. இவற்றில் சாகித்ய அகாதமி அண்மைக் காலமாக எழுத்தாளர்கள் பற்றிய செய்திப் படங்களைப் பல லட்ச ரூபாய் செலவில் தயாரித்து வருகிறது. இதில் எட்டு படங்களை சென்னையில் திரையிட்டுக் காட்டினார்கள்.

ஒரு மொழியின் படைப்பாளி பற்றி இன்னொரு மொழியினர்க்கு ஆங்கிலம் வழியாகத் தெரியப்படுத்துவதே அகாதமியின் நோக்கம். ஆனால் படம் எடுத்த பலரின் நோக்கம் கொஞ்சம் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்று தோன்றியது.

மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன், கவிஞர் பாலாமணி அம்மா பற்றிய கே.எம்.மதுசூதனனின் படங்கள் மலையாள வாசகருக்குக் கூட அவர்களை சரியாக அறிமுகப்படுத்தாதவை. பாரதியார் பற்றிய செளதாமிணியின் தமிழ்ப் படம் எடுத்தவரையும் பங்கேற்றவர்களையும் தவிர வேறு யாருக்கும் உதவாத குழப்பமான படம்.

கன்னடக் கவிஞர் கோபாலகிருஷ்ண அடிகா பற்றி கிரீஷ் கர்னாட் எடுத்த படம் ஒன்றுதான் அடிகாவின் கவிதை, கன்னட இலக்கியத்தில் அவரது பங்கு, அவருடைய அரசியல் பார்வை என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்தியது. இன்னொரு கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.அன்ந்தமூர்த்தி பற்றிய கிருஷ்ண மசாடியின் படமும் ஓரளவு அனந்தமூர்த்தியை அறிமுகப்படுத்தியது.

மலையாளத்தோடு ஒப்பிட்டால், தமிழ்ப் படைப்பாளிகள் ஜெயகாந்தன் ( இயக்கம்: சா.கந்தசாமி) அசோகமித்திரன் (அம்ஷன்குமார்), இந்திரா பார்த்தசாரதி (ரவி சுப்பிரமணியன்) பற்றிய படங்கள் அற்புதமானவை. கன்னடத்தோடு ஒப்பிடும்போது சுமார் ரகத்துக்குப் போய்விடும்.

ரவி சுப்பிரமணியன் இ.பாவின் நாடகாசிரியர் பரிமாணத்தை மட்டுமாக முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். தொழில் நுட்ப ரீதியாக பலவீனமாக இருந்தது. அதில் இ.பாவை யாரோ கோட்டோவியத்தில் வரைவதை இடையிடையே காட்டிய உத்தி வீண். ஜெயகாந்தன், அசோகமித்திரன் படங்களில் பளிச்சிடுவது அந்தப் படைப்பாளிகளின் ஆளுமைதான். அசோகமித்திரன் படத்தின் சிறப்பம்சம் பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் எடிட்டிங் நேர்த்தியும். எனினும் இந்தப் படங்கள் வேற்று மொழியினருக்கு இவர்களை அறிமுகம் செய்வதில் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.

ஒரு படைப்பாளியை படத்திலோ, கட்டுரையிலோ இன்னொருவர் வெளிப்படுத்துவது என்பது ஒரு தனிக் கலை. அதிலும் ஒரு படைப்பாளியை புகைப்படத்தின் மூலம் புலப்படுத்துவது மிகவும் நுட்பமான கலை. ( சு.ரா, கி.ரா, போன்றோரை இளவேனில் எடுத்தது போல) எழுத்தாளரை போஸ் கொடுக்கச் செய்து எடுப்பதில் இது வெளிப்படாது. படைப்பாளியை அவர் இயல்பில் விட்டுவிட்டு, அவரது ஆளுமைக்கு உகந்த ஒளியமைப்பு, சூழல் இவற்றில் வெளிப்படுத்துவதே புகைப்படக்கலைஞரின் திறமை. சத்யஜித் ரேவை நிமாய் கோஷ் எடுத்த படங்களில் இதைக் காணலாம்.

இந்தக் கலையில் உலகப் புகழ் பெற்றிருந்த பிரெஞ்ச் கலைஞர் ஹென்ரி கார்ட்டியர் பிரெஸ்ஸன் அண்மையில் 95வது வயதில் இறந்தார். காந்திஜி சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு அவரை சந்தித்தவர் ப்ரெஸ்ஸன். காந்தியின் இறுதி ஊர்வலம், ரமண மகரிஷியின் மரணத்தருவாய், கும்பமேளா, மகாராஜா வீட்டுக் கல்யாணம் என்று இந்தியாவில் ப்ரெஸ்ஸன் எடுத்த புகைப்படங்களை இந்திரா காந்தி கலை மையம் வாங்கி வைத்துள்ளது.

பிரெஞ்ச் எழுத்தாளர் சிந்தனையாளர் சார்த்தர், ஓவியர் பிக்காசோ என்று ப்ரெஸ்ஸன் பல படைப்பாளிகளை எடுத்த புகைப் படங்கள், பத்திரிகைச் செய்திப் படக்காரராக அவர் எடுத்தவை எல்லாமே இன்றும் மதிக்கப்படுபவை.

ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு புகைப்படக்காரரான ப்ரெஸ்ஸன் படமெடுப்பவன் முகம் வெளியே தெரிய வேண்டியதில்லை என்ர கொளகையுடையவர். அதனால் அவருக்கு ஆக்ஸ்போர்டில் டாக்டர் பட்டம் தந்த போது மேடையில் முகம் தெரியாமல் மறைத்துக் கொண்டார். அமெரிக்காவில் பயணம் செய்யும்போது ஹேன்க் கார்ட்டர் என்று வேறு பெயரில் பயனம் செய்தார். இரண்டாம் உலக்ப்போரில் ராணுவத்தில் இருந்தபோது ஜெர்மன் படைகளிடம் சிக்கி 35 மாதம் கைதியாக இருந்தார். மூன்று முறை தப்பிக்க முயற்சித்து இரு முறை சிக்கினார். ஓவியரான ப்ரெஸ்ஸன் கடைசி காலத்தை ஓவியம் தீட்டுவதில் செலவழித்தார். குறும்படங்களும் எடுத்திருக்கிறார். அவற்றையெல்லம் பார்க்கும் வாய்ப்பு சென்னைக்கு எப்போது கிட்டும் என்று தெரியவில்லை.

நல்ல படங்களை, மாறுபட்ட முயற்சிகளைப் பார்ப்பதற்கு சென்னைக்கு கிட்டும் வாய்ப்புகள் கோவை, மதுரைக்கெல்லாம் கிட்டுவதில்லை. இன்னும் சின்ன சின்ன ஊர்களுக்கு போய்ச் சேரும் வாய்ப்பே இல்லை. அந்த விதத்தில் வீடியோ-சி.டி புரட்சி பயனுள்ளதுதான். என்றாலும் எல்லா ஊர்களிலும் மக்கள் படம் பார்க்கும் கொட்டகைகளிலும், டி.வி செட்டுகளிலும் நல்ல படங்கள் இடம் பெற வேண்டும். மக்களிடம் அதிகம் புழங்கும் பத்திரிகைகளில் நல்ல கதைகளும் கட்டுரைகளும் வரவேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இந்த விருப்பத்தினால்தான் வணிகச் சூழலுக்குள் நடக்கும் ஓரளவு ஆரோக்கியமான விஷயங்களை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது.

அப்படி நான் அண்மையில் பார்த்த, வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிற ஒரு தமிழ் சினிமா – அழகிய தீயே. நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்து நடித்து , ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படம் என் கணக்கில், தீங்கு செய்யாத பொழுதுபோக்கு ( harmless entertainement ) பிரிவில் வரும். யதார்த்தத்துக்குப் பொருந்தாத ஆனால் சினிமாவுக்கு மட்டும் பொருந்தும் லாஜிக்குகள் நிரம்பிய இந்தப் படத்தில் ஆபாசமும் வன்முறையும் இல்லை. ஒரே ஒரு காட்சி நாய்க்குட்டி வாங்குவதாக எண்ணிக் கொண்டு விபசார விடுதியில் ‘ குட்டி ‘களை வாங்கும் பேச்சில் ஈடுபடுவதாக வருகிறது. முழுப்படத்துக்கும் துளியும் தொடர்பில்லாத இந்த நான்கைந்து நிமிடக் காட்சியை நீக்கிவிட்டால் படம் துளியும் பாதிக்கப்படாது. இன்னும் நல்ல படமாகிவிடும். பிரசன்னா முதல் எல்லாருடைய கச்சிதமான நடிப்பும் சுவாரஸ்யமான வசனங்களும் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்க ஏற்றதாக்குகின்றன. நியூவுக்கு சரியான எதிர்ப்பு இந்த மாதிரி படங்களுக்கு தரக்கூடிய ஆதரவுதான்.

டைரி பகுதியில் புத்தகங்களைப் பற்றியே எழுதுவதில்லையே என்று ஒரு வாசகர் வருத்தப்பட்டார். இனி ஒவ்வொரு டைரியிலும் ஒரு புத்தகத்தைப் பரிந்துரைக்க திட்டம். இந்த இதழ் பரிந்துரை : விடுதலை ராஜேந்திரன் எழுதிய சங் பரிவாரின் சதி வரலாறு ( வெளியீடு தந்தை பெரியார் திராவிடர் கழகம், 27 2வது தளம், கே.எம்.என் வீதி, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028. பக்கங்கள்-232,விலை ரூ 60) மார்ச் 1940ல் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் கலந்து கொண்ட மாநாட்டுக்கு ஆள் வராததால் நுழைவுக் கட்டணத்தை நான்கணாவிலிருந்து இரண்டணா ஆக்கியும் மக்கள் வரவில்லை. அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்சும் பி.ஜே.பியும் வேரூன்ற முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ள இந்த நூல சிறந்த வழிகாட்டி. வெளி நாட்டிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணம் வாங்குவது பற்றிய தகவல்கள் தொகுப்பு இன்னொரு சிறப்பம்சம்.

தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி