டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

என் எஸ் நடேசன்


ஒரு காலத்தில் வாழ்ந்த அரசன் தனது செல்வத்தையெல்லாம் நவின மோஸ்தாில் உடைகளை அணிவதில் விரயமாக்கினான். அவனது நேரம் இராச்சிய விடயங்களை விட்டு, உடையலங்காரத்தில் கழிந்தது.

ஒரு நாள் அவனது சபைக்கு வந்த சில நெசவான்கள் தங்களால் புதமையான துணி நெய்ய முடியும். அந்த துணியில் ஆடை தயாாித்து அணியும் போது மிகவும் அழகாக இருக்கும். ஆனால் முட்டாள்களின் கண்களுக்கு அந்த உடை தென்படாது! என்றனர்.

இப்படியான துணியில் உருவாக்கிய ஆடைகளை அணிய விரும்பிய அரசன் பொன்னும் பொருளும் கொடுத்து தனக்கு ஆடை தயாாிக்க துணி நெய்யும்படி கட்டளை இட்டான்.

தொடர்ச்சியாக துணி நெய்வதற்கு நெசவாளர்கள் பொன்னும் பொருளும் பெற்றனர்.

துணி நெய்வதை பார்வை இட அரசன் தனது மந்திாியை அனுப்பினான். மந்திாி பார்த்தபோது தறியில் துணி இருக்கவில்லை. மனத்துக்குள் ஆச்சாியப்பட்டாலும் எதுவும் சொல்லாமல் அரசனிடம் மிகச்சிறந்த துணி நெய்யப்படுகிறது எனக் கூறினார்.

அரசன் தனது அரண்மனை உத்தியோகத்தரை துணியை பார்வை இட அனுப்பியபோதும் இதுவே நடந்தது.

இறுதியாக அரசாின் வருடாந்த ஊர்வலத்துக்கு உடைகள் தேவைப்பட்டபோது அரசன் வந்து தறியை பார்த்தான். வெறுமையாக இருந்தது. நெசவாளர்கள் ‘அரசே! இந்த துணி மென்மையானது. நாங்கள் வெட்டி தருகிறோம் ‘ என கூறி கத்திாி கோலால் காற்றில் வெட்டுவது போல் வெட்டி துணியை எடுத்து ஆடைகளாக்கினார்கள். அரசன் ஆச்சாியப்பட்டாலும் ஆடைகளை வாங்கி உடுப்பதாக பாவனை செய்து கொண்டார். உடை முட்டாள்களின் கண்களுக்கு தொியாது என்பது அவன் மனத்தில் இருந்தது.

உடைகளை அணிந்து கொண்டு அரசன் உலா சென்றபோது மந்திாிகள் மற்றும் உத்தியோகத்தினர் ‘ஆகா ஓகோ ‘ என பாராட்டினர். அரசனும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தான்.

ஊலா முடியும் தறுவாயில் சிறுவன் ஒருவன் ‘ஐயே அரசாின் உடம்பில் எதுவும் இல்லை ‘ என சிாித்தான்.

அப்பொழுதுதான் அரசன் தான் முட்டாளாகியதை உணர்ந்து கொண்டான்.

இருநூறு வருடங்களுக்கு முன்பு டென்மார்க்கில் பிறந்து சிறுவர்களுக்கு கதைகள் எழுதிய கான்ஸ் கிாிஸ்ாியன் அன்டர்சனின் (Han Christian Anderson) கதைகளில்

இந்த கதை எனக்குப்பிடித்தது. சிறுவயதில் இதைபடித்த காலத்தில் எழுதியவரை அறியவில்லை. சில வருடங்களின் முன் மெல்பேர்னில் பாரதி பள்ளி சிறுவர்களால் நாடகமாக அரங்கேறியபோது எக்காலத்தும் பொருந்தும் அரசியல் தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கிாிஸ்ாியன் அன்டர்சன் பதினைந்து வயதாக இருக்கும்போது ஒரு ஜிப்சி பெண் “இந்த கொப்பன்கேகனே உன்னை கொண்டாடும்” என ஆரூடம் கூறினார்.

1805ம் ஆண்டு ஏப்பிரல் ஐந்தாம் திகதி பிறந்த அண்டர்சனுக்கு டென்மார்க் மட்டுமல்ல பல நாடுகளில் விழா எடுக்கப்படுகிறது.

சிறுவயதில் வறுமையின் கொடுமையில் இருந்து தப்ப கற்பனை உலகத்தில் கதைகள் புனைவதிலும், பாவைகள் செய்வதிலும் நேரத்தை கழித்தார். சிறுவர்களுக்கான 168 கதைகள் இருநூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அக்கிளி டக்கிளிங், லிட்டில் மேர்மயிட் பிரபலமானவை. உலகத்தில் கடந்த காலத்தில் கிாிஸ்ாியன் அன்டர்சனின் கதைகளை கேட்டு வளர்ந்த குழந்தைகள் ஏராளம். இவர்களுக்கு ஒரு உலகத்தை சிருஸ்டித்து கொடுத்த பெருமை அன்டர்சனுக்கு உண்டு.

தமிழ் மொழியில் இப்படி எவ்வளவு கதைகள் எமது கலாச்சார பின்னணியோடு கிடைத்தன என்பது கேள்விக்குாிய விடயம். பஞ்ச தந்திர கதைகள், ஈசாப் கதைகள் வேற்று மொழியில் இருந்து வந்தவை. குழந்தைகள் இலக்கியம், சிறுவர் நாடகங்கள் எமது மொழியில் எக்காலத்திலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகும்.

இளமையில் கேட்டும் கதைகள், பார்க்கும் சம்பவங்கள், வளர்ந்த குடும்ப சூழ்நிலை குழந்தைகளை சிறுவர்களாக்கி பின் மனிதர்களாக்குகிறது.

தமிழ் பொியவர்கள் உலகம் வன்முறை நிறைந்தது. இன, மத, சாதிய மற்றும் பால் வன்முறைகளோடு தற்பொழுது அரசியல் மற்றும் சினிமா வன்முறையும் சேர்ந்துகொண்டுள்ளது.

முரண்பாடுகளுக்கு தீர்வு வன்முறை என்பது வேதவாக்காக குழந்தைகளின் மனங்களில் பதிந்தால் எக்காலத்திலும் மாறாது.

கிாிஸ்ாியன் அன்டர்சனை நினைவு கூரும் இவ்வேளையில் தரமான சிறுவர் இலக்கியம், நாடகங்களின் தேவை தமிழில் உண்டென்று சொல்ல வேண்டி உள்ளது.

—-

nadesan@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்