டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அரவிந்தன் நீலகண்டன்


I

ஒரு அறிவுஜீவியின் Polemical மேதாவிலாசமும் ஒரு ஹிந்துத்வ பாமரனின் பதிலும் பாவ்லாவிய உளறலும்

ராதா ராமசாமி: மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை.

நீலகண்டன்: மீரா நண்டா ஒரு மார்க்சியவாதி அல்ல என்பதை ராதா ராமசாமி அம்மையார் மறுக்கிறாரா ? ‘எங்களது சிவப்பு சூழலியல் குறிக்கோள்கள் அவர்களது காவிச் சூழலியலைக் காட்டிலும் மேலானவை ‘ என மீரா நண்டா தெள்ளத்தெளிவாகக் கூறுகையில் மீரா நந்தா ஒரு மதத்திற்கு (மார்க்சியத்திற்கு) ஆதரவாக இன்னொரு மதத்தினை (ஹிந்து தர்மம்) விமர்சிக்கவில்லை என எவ்வாறு கூற முடியும் என்பதை அம்மையார் சிந்தித்துப் பார்க்கலாம்.

ராதா ராமசாமி: அவர் வைக்கும் வாதங்களின் படி பார்த்தால் அறிவியல் ரீதியாக மதத்தின் கோட்பாடுகளை ஆராய வேண்டும், கொள்ளத்தக்கன இவை, தகாதவை இவை என பிரித்திட வேண்டும்.

நீலகண்டன்: மதம் அறிவியலின் அதே வழிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென சுவாமி விவேகானந்தர் கூறியிருந்தவற்றை அம்மையார் புரிந்து கொண்ட இலட்சணம் இது. சுவாமி விவேகானந்தர் மாத்திரமல்ல ஐஸக் அஸிமாவ்வும் கார்ல் சாகனும் கூட கூறியுள்ள விஷயம்தான் இது. ஆன்மிகத்தின் சாரத்தை கிரகித்து சக்கையை புறந்தள்ள அறிவியலின் செயல்பாடு போன்றதொரு செயல்பாடு அகத்தேடலிலும் அவசியம். உதாரணமாக, புராணங்களை நேரடி பொருள் கொள்ளுதல் – அகவயப்படுத்தி பொருள் கொள்ளுதல் ஆகிய இரு போக்குகளில் எது அறிவியலுடன் சமயம் மேற்கொள்ளும் உரையாடலால் அல்லது அறிவியலின் முறைமையை சமயம் மேற்கொள்வதால், விருத்தி அடையும் என்பதை அம்மையார் சிறிதே சிந்தித்தால் போதுமானது. கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால் தெயில் தி சார்டினா அல்லது கார்டினல் ராட்சிங்கரா – எவருடைய நிலைபாடு அறிவியலின் முறைமையை சமயம் மேற்கொள்வதால் வலு பெறும் என்பதை அம்மையார் சிந்தித்து பார்க்கலாம்.

ராதா ராமசாமி: கடவுள் இருக்கிறாரா இல்லையா…எங்கும் நிறை பரம்பொருள் என்பது tautology. இதை எப்படி நிரூபிப்பது. அரவிந்தன் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். இறந்தவர் நினைவாகக் செய்யப்படும் சடங்குகளுக்கு எனக்குத் தெரிந்த வரை அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை, எனவே அவை வீண் என்று அரவிந்தன் கூறுவாரா ?

நீலகண்டன்: மேலும் ஆன்மிகம் என்றாலே God சார்ந்ததென்று நீங்கள் கருதுவது அபத்தமானது. ஒரு வேதாந்த மரபு சந்நியாசி கிறிஸ்தவ படைப்புவாதியைப் போல ‘கடவுளை நிறுவும் ‘ சான்றுகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதன் மூலம் அறிவியலையும் மதத்தையும் சிறுமைப் படுத்தவேண்டியதில்லை. Personal God என்பது கூட அவனுக்கு/அவளுக்கு Impersonal அனுபவ நிலைக்கு இட்டுச்செல்லும் கருவிதான். கருவி மட்டும்தான். ஒவ்வொரு சமயச் சடங்குக்கும் அறிவியல் நிரூபணம் வேண்டுமெனக் கருதக் கூடியவருக்கு அந்தச் சடங்கை புறக்கணிக்கவும், ஒரு சடங்கின் உணர்ச்சி பூர்வ நிறைபாட்டால் அச்சடங்கை ஏற்பவருக்கு அதை செய்யவுமான சுதந்திர வெளியை ஹிந்து தர்மம் தருகிறது. இதற்கு முந்தைய பாராவில் நான் சுட்டிக்காட்டிய அம்மையாரின் தவறுதலான புரிதலால் எழுந்த மற்றொரு அபத்த கேள்வி இது.

ராதா ராமசாமி: விவேகானந்தர் அறிவியலுக்கு எதிரியல்ல, மீரா கேள்விக்குட்படுத்துவது அவர் முன்வைத்த சில கருத்துக்களை.அவர் அறிவியலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவர் கூறியவை எல்லாம் சரியாகிவிடாது. இந்த வேறுபாடு மிக அடிப்படையானது, அது அரவிந்தனுக்கு புரியவில்லை. ரிச்சர்ட் டாகின்சும், ஜே கோல்டும் வேறுபடும் புள்ளிகள் உண்டு. இருவரும் சிலவற்றில் ஒரே மாதிரி கருத்துத் தெரிவித்திருக்கலாம். ஆனால் வேறுபடும் புள்ளிகள் மிக முக்கியமானவை.

நீலகண்டன்: மீரா நண்டாவின் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளில் அம்மையார் சுவாமி விவேகானந்தரின் எந்தக் குறிப்பிட்ட கருத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக பொத்தாம் பொதுவாக சுவாமி விவேகானந்தரின் அறிவியல் சார்ந்த கருத்துகள் மூலம் அவர் ‘Cardinal Sin ‘ செய்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், நகைக்குப்புக்குரிய விதத்தில் ராமகிருஷ்ண இயக்க இலக்கியம் ஆழமான ஆரிய மேன்மைவாத தொனிகள் (deeply Hindu and Aryan supremacist overtones) கொண்டதாக அம்மையார் கூறுகிறார். ஆனால் அவருக்கு வக்காலத்து வாங்கும் ராதா ராமசாமி அம்மணியார் அதனை மாற்றி ‘விவேகானந்தர் அறிவியலுக்கு எதிரியல்ல, மீரா கேள்விக்குட்படுத்துவது அவர் முன்வைத்த சில கருத்துக்களை.அவர் அறிவியலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவர் கூறியவை எல்லாம் சரியாகிவிடாது. ‘ என்கிறார், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இதற்கு பெயர்தான் Polemics போலும். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் விவேகானந்தர் அறிவியலுக்கு எதிரியல்ல என certificate தருகிறார் ராதா அம்மையார் ‘அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் இடையிலேயான் கட்டுப்பாடற்ற பின்னி பிணைதலை தொடக்கிவைத்தவர் ‘ ‘அத்வைதம் பல நவீன அறிவியல் கண்டடைவுகளை முன்னரே கணித்திருந்தது என்பது போன்ற பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தவர் ‘ ‘இது அவரது ஆதார பாவச்செயல் ‘ என்பது போன்ற வார்த்தைகளால் சுவாமி விவேகானந்தரை அர்ச்சிக்கிறார் நண்டா. இந்நிலையில் ராமசாமி அம்மையார் இதனை மீரா நண்டாவும் சுவாமி விவேகானந்தரும் ஏதோ ரிச்சர்ட் டாவ்கின்ஸுக்கும் ஸ்டாபன் ஜே கோல்டுக்கும் உள்ள வேறுபாடாக காட்ட முயல்வது இடதுசாரி செப்படி வித்தையன்றி உண்மையல்ல. டாவ்கின்ஸ்-கோல்ட் சம்வாதத்தை சில காலமாகவே உன்னிப்பாக கவனித்தவன் என்கிற முறையில், ஒரு விஷயத்தை ராமசாமி அம்மையாருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். டாவ்கின்ஸும் கோட்டுக்கும் இடையே சில நேரங்களில் ஏற்பட்ட ஆளுமை மோதல்களை விலக்கிவிட்டுப் பார்த்தால், டாவ்கின்ஸும் கோல்ட்டும் பரிணாம உண்மை எனும் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள் அதன் செயல்முறை குறித்த Technical details களில் ஏற்பட்ட வேறுபாடுகள் (of punctured equilibrium and puncturing of punctured equilibrium) அது சார்ந்து எழுந்த கேள்விகளில் அதன் சில தத்துவார்த்த அழுத்தங்களில் மாறுபட்டவர்கள். ஒரு கிறிஸ்தவ சிருஷ்டிவாதியை வைத்து கிழிக்கப்படும் கோட்டில் அவர்கள் இருவரும் எந்த அணியில் இருப்பார்கள் என்பதை நாம் தெளிவாக அறியலாம். சுவாமி விவேகானந்தருக்கும் மீரா நண்டா, ஜான் தயால் மற்றும் இன்ன பிற ஹிந்து தர்ம விரோதிகள் ஆகியவர்களுக்கும் இடையே கிழிக்கப்படும் கோட்டைப் போல. பாரத அறிவியலில் ஒரு முக்கிய சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் அல்லது அதற்கு எழுச்சி தரும் ஆளுமையாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். அதனை முழுமையாக மறைத்து சுவாமி விவேகானந்தர் பாரத அறிவியலின் வரலாற்றில் ‘Cardinal Sin ‘ செயதவராக காட்டி வக்கிர வியாபாரத்தை மீரா நண்டா நடத்துகிறார்.

ராதா ராமசாமி: மீராவின் எழுத்துக்கள் பல polemical pieces என்று கருதத்தக்கவை.

நீலகண்டன்: சுபாஷ் காக் விஷயத்தில் காக் தமது நூலில் கூறாதவற்றை கூறியதாக மீரா கூறும் பொய்யும், ஜகதீஷ் சந்திர போஸ் குறித்து அவர் கூறியுள்ள அரைகுறை திரிபும் polemics எனில், அதில் எனக்கு எவ்வித பயிற்சியும் கிடையாது என்பது உண்மைதான்.

II

ஒரு மார்க்சிய எரிக் வான் டானிக்கனுக்கு

திரு. குமரி மைந்தனின் கடிதம் அசாதாரணமானது. பரிணாமத்தின் பல இயக்கங்களுள் ஒன்றுதான் co-evolution. அது ஒன்றையொன்று எதிர்த்து செயல்படும் thesis -> anti-thesis -> synthesis என்கிற போக்கில் தான் செயல்பட வேண்டுமென்பதுமில்லை. பழம் பெண்ணாதிக்க சமுதாயத்தின் விளைவாக ஆண்களிடையே ஓரினப்புணர்ச்சி ஏற்பட்டது என்பதெல்லாம் அபத்தமான ஊகங்கள். ஜெயமோகன் அவரது அறிவியல் புனைவுகதையினை ஒருபாதையின் ஊகத்தில் உருவாக்கியுள்ளார். ஒரு படைப்பாளியின் சுதந்திரம் அது. அறிவியல் புனைவுப் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் அறிவியல் விதிகள் கூட தலையிடமுடியாது. ஆனால் அவற்றை மார்க்சிய நீதி போதனை கதைகளாக குமரி மைந்தன் போன்றவர்கள் மாற்ற முயல்வது வருத்தம் தரும் விஷயமாகும். அவரது குமரி நிலநீட்சி, பண்டைய உலகின் உயர் தொழில்நுட்ப சமுதாயம், அதன் ஏற்றமும் வீழ்ச்சியும், அதற்கு அவர் தரும் மார்க்சிய விளக்கங்கள் போன்ற எதுவுமே சரியான அறிவியல் ஆதாரங்கள் அற்றவை என்பது மட்டுமல்ல சில விஷயங்கள் அறிவியலால் நிச்சயமாக மறுதலிக்கப்பட்டவை. (ஒரு கொசுறு: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்துகொண்டவர் மார்க்ஸ். எனவே தமது ‘மூலதனத்தை ‘ டார்வினுக்கு சமர்ப்பிக்கவும் முனைந்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னாளில் மார்க்சியம் டார்வினிய பரிணாமத்தின் மீதும் மரபணுவியல் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கட்டியம் கூறிய நிகழ்ச்சி இது.)

எடுத்துக்காட்டாக, ஐந்தாவது மருந்தின் கதைப் போக்கினை பின்வருமாறு மாற்றலாம். எய்ட்ஸ் வைரஸின் மரபணு மாற்றங்கள் மானுடத்துக்கு கேடுதான் விளைவிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு வேளை மூளையில் கணிதச்சமன்பாடுகளை திறம்படச் செய்யும் ஒரு நியூரானிய கட்டமைப்பை இன்னமும் அதிக செயலாக்கத்துடனும் அதீத படைப்புத்திறனுடனும் செயலாற்ற வைக்கும் புரதத்தை உருவாக்குவதாக எய்ட்ஸ் வைரஸ் மாறலாம். அப்போது மானுட சமுதாயம் ஹைஐவி வைரஸை உட்செலுத்த நான்-நீ என போட்டிப்போடலாம். ஓரினச் சேர்க்கை கூட ஒரு சிறப்பொழுக்கமாக மாறலாம். ‘அக்காலத்திலேயே மிகச் சிறந்த மனிதர்கள் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தனர். உதாரணமாக, லியனர்டோ டாவின்ஸி. எனவே இது தவறென கூறமுடியாது. ‘ என்கிற ரீதியில் ஒழுக்க குருக்கள் நமக்கு போதிக்கவும் செய்யலாம். நமது ஒழுக்கங்கள் பலவிதங்களில் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் உயிரியல் காரணிகளாலும் பல்வித சமுதாய விசைகளாலும் (அவற்றில் ஒன்றுதான் உற்பத்தி உறவு – அதன் தாக்கமும் கூட மார்க்சியம் கதைத்ததைக் காட்டிலும் அதீத சிக்கலான கட்டமைப்பு உடையது.) உருவானவை. அவை மாற்றமடையலாம். அம்மாற்றங்கள் நமக்கு தெரியாத நுண்ணிய அளவில் இருக்கக் கூடும் அல்லது திடுமென,சகிக்க முடியாத அளவில் படு அதீதமாக. எனவே குமரி மைந்தன், ஒரு மார்க்சிய எரிக் வான் டானிக்கனாக இருப்பதிலிருந்து சிறிதே வளர முற்படலாம். ராமர் கட்டிய பாலத்தை நாஸா கண்டுபிடித்ததாகக் கதை விடும் சமயப்பற்றாளர்களுக்கும் இது பொருந்தும்.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation