டர்மெரின் – 2

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

ஸ்ரீ மங்கை


——————-

மும்பையின் மே மாத வெயில் எட்டுமணிக்கே தெரியத் தொடங்கியிருந்தது. அந்த நீல நிற மாருதிக்கு நெடுஞ்சாலையில் விரைவது அன்று சிரமமாக இல்லை. “இன்னும் ஒரு மணி நேரம்தான் “- அபிஜீத் நினைத்துக்கொண்டான். ” ஒன்பதுக்கு அப்புறம், இந்த சாலையில் நாய் கூட நுழையமுடியாது.. சே .. என்ன ஒரு ட்ரா·பிக்”
கிணுகிணுத்த செல்போனின் ரீங்காரம் முதலில் அபிஜீத்தை ஈர்க்கவில்லை. இரண்டாம் முறை அலறியபோதுதான் – அவசரமாகக் காரை ஓரங்கட்டினான்.
“அபி?” கட்டையான குரல்..சுத்தமாக ஞாபகமில்லை. யார் இது?
“நான்.. டாக்டர்.தாஸ், பயோக்ரோம் லாப்”(Biochrome Lab)..

“சொல்லுங்க சார்” வியந்தான்.அட,, இவரா?
“இன்று எனது லாப் வரை வரமுடியுமா? கொஞ்சம் பேசணும்”.
“அந்த ரியாஜெண்ட் ஆர்டரா? போனவாரமே டெலிவரி பண்ணிட்டேனே டாக்டர்”
“அதில்லேப்பா… “குரல் மறுமுனையில் தயங்கியது,” கொஞ்சம் தனியாப் பேசணும்”.
“ம்ம்.. பத்து…பத்துமணிக்கு வந்தாப்போதுமா?”
” சரி”. போன் சட்டென்று வைக்கப்பட்டது..

அபிஜீத் விழித்தான். பயோக்ரோம் ,மும்பையிலேயே மிகப்பெரிய ,படு நவீனமான பரிசோதனைச்சாலை அது. கான்ட்ராக்ட் ரிசெர்ச் லாப் என்ற புது நாய்க்குடைகளில், தனித்து நின்று, தனக்கென்று ஒரு நிலையை உருவாக்கிக்கொண்ட பிரமாண்டமான ஆய்வுச்சாலை. அதன் இயக்குனர் கூப்பிடுகிறாரென்றால்? அதுவும், தன்னை? லாப் கெமிக்கல், பிப்பெட், ப்யூரெட் என்று விற்பவனை?

அழைத்தார்கள்தான் ஒருகாலத்தில்…எப்படியெல்லாம் வரவேற்றார்கள்? “மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் ” என்றாலே “கூப்பிடு அவனை”என்று வருந்தி வருந்தி ஆய்வுக்கூடங்கள் அழைத்த பொற்காலம் இரண்டு வருடங்கள் முன்புவரை….
அபிஜீத் கழுத்து வியர்வையைத் துடைத்துக்கொண்டான். வெயில் எரித்தது.. எல்லாம் முடிந்துபோனது..

“அனைவருக்கும் என் காலை வணக்கங்கள்” … என்று தொடங்கும்அபியின் குரல் திடமாக..
“புது மூலக்கூறு கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் நிறுவனத்தின் வாழ்த்துக்களும், கருவிகளும்(instruments) நிச்சயம் உங்கள் முயற்சிகளை திருவினையாக்கும். ஆயிரம் உதாரணம் சொல்லலாம் அமெரிக்காவில்..” எல்லா இடங்களிலும் இப்படித்தான்.அவன் சன்னமாக, உறுதியாக பேசத் தொடங்கியதும், விஞ்ஞானிகள் நிமிர்ந்து அமர்வார்கள். முடிந்து போகும்போது, கருவிகளுக்கான ஆர்டர் – லட்சக்கணக்கான டாலர் மதிப்புகளுக்கு உறுதியாகியிருக்கும்.

அமெரிக்கக்கம்பெனி உற்சாகப்படுத்தியது. கருவிகளை ,தேவைக்கேற்ப பொருத்திக் கொடுக்கும் “கான்·பிகரேஷன் எக்ஸ்பர்ட்” எனக் கொண்டாடியது… அத்தனையும் போனது..ஒரேயொரு சந்தர்ப்பத்தில் தொலைந்தது…
அபி கண்களை மூடிக்கொண்டான்.. பின்னங்கழுத்து எரிந்தது. ஏ.ஸி போடவேண்டாம். பெட்ரோல் குடிக்கும்… பணமில்லை. அடக்கி வாசிக்கவேண்டும்.

பயோக்ரோம் இருக்கும் இடத்தை நெருங்குமுன்னே அதன் பிரமாண்டம் தெரிந்தது. “பயோக்ரோம் எங்கள் மென்பொருள் உபயோகிக்கிறது” என்று பெருமையடித்துக்கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனத்தின்(software company) பெரிய பெரிய பேனர்கள் (banner)நெடுஞ்சாலை ஓரத்தில் ஒளிர்ந்தன.
பச்சைக் கண்ணாடிகள் பதித்த கட்டிடம் பயோக்ரோம் என்று மிகப்பெரிய எழுத்துக்களில் அறிவிக்க, வரவேற்பில் இருந்த பெண் மிகச்சன்னமாகப் பேசினாள்.. போனில் எண்களை ஒற்றி,
“டாக்டர் தாஸ்?அபிஜீத் என்று ஒருவர்..”
“…….”
“சரி. பரிசோதனைச்சாலை அனுமதி அட்டை தரலாமா அவருக்கு?”
தயாராக வைக்கப்பட்டிருந்த அனுமதி அட்டையை அபிஜீத்திடம் நீட்டினாள்.
இரண்டாம் தளம், மூன்றாவது கேபின்”.

பெரிய அடையாள அட்டையை கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு, லி·ட்டுக்காக நின்றான். மீண்டும் பழைய நினைவுகள் நிழலாடின.
” அபிஜீத்.. உனது திறமையை இந்தக்கம்பனி மதிக்கிறது. ஆனால், கம்பெனிக்கு லாபம் வரும்வகையில் லக்னோ டென்டரில் நீ கருவியை வடிவமைத்த விதம்(configuration) அமையவில்லை. உன் விளக்கம் தேவை” ஆங்கிலோ சாக்ஸன் உச்சரிப்போடு அந்த வெள்ளைக்கிழவன் சொன்னபோது பற்றிக்கொண்டு வந்தது
.”மன்னிக்கவும். என்னால் லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டாததையெல்லாம் சேர்க்கமுடியாது.லக்னோ டென்டரில் தேவைப்படுவது நீங்கள் சொல்வதில் பாதி போதுமானது”
“உன்னை யாருடா கேட்டது? சொன்னமாதிரி கான்·பிகர் செய்யவேண்டியதுதானே? பெரிய காந்தின்னு நினைப்பு” குத்திய வார்த்தைகள் உசுப்பிவிட, வார்த்தைகள் தடித்தன.. கண்ணியமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டான். தெரிஞ்ச ஒரே தொழில் ஆய்வுக்கூடம்(lab) சார்ந்தவை மட்டுமே. இரண்டு மாதம் திண்டாடியபின்,பிப்பெட்,கெமிக்கல் என நண்பர்கள் கொடுத்த சிறு சிறு ஆர்டர்களில் வாழ்க்கை மத்தியதரத்தில் ஓடத் தொடங்கியது.இரண்டுவருட தடுமாற்ற வாழ்க்கை , பணமில்லையெனில் எப்படி உலகம் மதிக்கும் என கற்றுக்கொடுத்திருந்தது.

டாக்டர் தாஸ் மிக ஒல்லியாக இருந்தார். ஒடிந்து விழுந்துவிடுவார் போல. கண்களின் தீட்சண்யம் “நான் மிகப் படித்தவன்” என்று காட்டியது. வெள்ளையாக குறுந்தாடி வைத்திருந்தார். கை குலுக்கினார்.
“என்ன விசயம் சார்?”
“உட்காருப்பா. சொல்றேன்”. கொஞ்சம் பதட்டமாக(panic) இருந்தார். கைகளில் ஒரு பென்சிலை அனவசியமாக உருட்டிக்கொண்டிருந்தார்.
” எதில் தொடங்குவதென்று தெரியலை. உனக்குத் தெரியாது.. நாங்கள் ஒரு மாலிக்யூலின் இரண்டாம் கட்டப் பரிசோதனையில் இருக்கிறோம். ஆன்ட்டி கேன்ஸர். இங்கிலாந்தில் உருவாக்கிய மூலக்கூறு..”
” சொல்லுங்கள். தெரியாது”
” அது எனது ப்ராஜெக்ட். அதற்குத்தான் உன்னோட பழைய கம்பெனியிலிருந்து மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வாங்கினேன்”
” ம்ம்ம்..”
“எனது டேட்டா எல்லாம் இதிலே”” தனது லாப்டாப்பைக் காட்டினார்” இதிலே இருக்கு. லாப்-லேகூட எந்த கம்யூட்டரிலும் வைக்கலை. அவ்வளவு சீக்ரெட்”
“இன்னும் நான் என்ன செய்யணும்னு சொல்லலை சார்”.
“சொல்றேன். ” மேசை மீது குனிந்தார் “இரண்டு நாளா என்னை யாரோ தொடர்ந்து வருவதுபோல ஒரு உணர்வு.” தயங்கினார்.
” சார்? இது போலீஸ் சமாச்சாரம்”
” எனக்குச் சந்தேகம்.. இந்த பின் தொடர்தல் ஏனோ இந்த ப்ராஜெக்ட் முடிவுகளுக்குத்தானோன்னு…அனாவசியமா, போலீஸ் அது இதுன்னு பதட்டப்படுத்த(panic) விரும்பலை. வேண்டாத விளம்பரம் சேரும் – இந்த ப்ராஜெக்ட் படு சீக்ரெட்.”
“சரி. இருக்கட்டும். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?”
” உனக்கு இந்தக் கருவி அத்துப்படி. நிறைய இடத்துல நீ வித்திருக்கே. என்னாலே, இந்த டேட்டாவெல்லாம் இங்கே வைச்சு ஆராய(analyse) முடியாது” கொஞ்சம் நிறுத்தினார். பென்சில் இன்னும் அனாவசியமாக உருண்டுகொண்டிருந்தது.
” இதன் மென்பொருள் போட்ட வேறொரு கம்ப்யூட்டரில், நீ எனக்காக இந்த டேட்டாவை போட்டு,ரிசல்ட் கொண்டு வரணும். அவ்வளவுதான்” டாக்டர் தாஸ் எழுந்தார்.”ப்ளீஸ்”
அபிஜீத்திற்குள் சிறு கோபம் எழுந்தது.
“யார் செய்வாங்க சார்? இப்போது நான் அந்தக் கம்பெனில இல்லை. யாரும் ஏறெடுத்டும் பார்க்கமாட்டாங்க”
“புரியுதுப்பா” என்றார் ” எப்படியாவது ஒரேயொரு தடவை செய்துதந்துடு. அதுவும் இன்னிக்கு,நாளைக்குள்ளே”
“எப்படிசார் முடியும்?”
“முடியணும். மாட்டேன்-னு சொல்லிடாதே” அவர் கண்களில் வினோதனான பயம் தெரிந்தது.
“டேட்டா மட்டும் போதாது.டாக்டர். எப்படி செய்யணும்-னு ப்ரோக்ராம் வேணும்.,அதுவும், அதே கருவியிலே போடறமாதிரி”
“எல்லாம் இந்த சி.டிலே இருக்கு” அவர் நீட்டிய சோனி குறுந்தட்டு தங்கமாகப் பளபளத்தது.
“யார்கிட்டேயும் சொல்லாதே. முக்கியமா, இங்கே மூச்சுவிட்டுறாதே” சொன்னவரின் குரல் மூச்சுக்காற்றாய் வந்தது.
குறுந்தட்டை வாங்கிக்கொண்டவன் மெல்ல எழுந்தான்”புது லாப்டாப்- ஆ சார்? நல்லா இருக்கு.போனதடவை தோஷிபா இருந்ததாக ஞாபகம்..”
தாஸ் சிரித்தார்” எல்லாம் ஒரே எழவுதான். 2.1 கிகாஹெர்ட்ஸ். ஒரு ஜி.பி ராம். வேகத்தைப்பாரு. என்னோட பழைய எம் எஸ் டாஸ் தேவலைன்னு… இந்த லாப்-லெ எல்லோருக்கும் காம்பாக் தான்.”

காரில் அமர்ந்தவன் மெதுவாகக் கிளப்பி நெடுஞ்சாலை சிக்னலுக்கு காத்திருந்தான். எங்கே போவது..? சிஸ்கிராப்?(Sysgraph) டாக்டர் நட்கர்னி கேட்டுக்கொண்டால் செய்வான்… போன் பண்ணலாமா? செல்போனை எடுத்தான்., கார் கதவருகே நிழலாடியது.
“யெஸ்?”
“ஹலோ,பின் டயர்லே காத்து இல்லேசார். பாருங்க”சொன்ன மனிதன் முன்னே போக, கதவைத்திறந்து குனிந்து பார்த்த அபிஜீத், சரேலென தலையில் அடிவிழ, நிலைகுலைந்தான்.. கண்கள் இருட்டிக்கொண்டு வர,..காரிலிருந்து சரிந்தான்.

“டாக்டர் தாஸ்.. எனக்கு விளக்கம் தேவையில்லை. ஆறுமாதங்கள் முன்னால் நீங்கள் கருவிகள் வாங்கியதற்கு தகுந்த காரணங்கள் இல்லை என தணிக்கை குழு(audit committee) சொல்கிறது. “குரல் உயர்த்தி, மேசைமேல் காகிதங்களை எறிந்தவருக்கு அறுவது வயது இருக்கும்.
“டாக்டர் மேத்தா, எனது நாற்பது வருட அனுபவ ப்ரோட்டீன் கெமிஸ்ட்ரியில், இதுவரை யாரும் இப்படிக் கேட்டதில்லை. இட் இஸ் இன்ஸல்ட்டிங்.” தாஸ் படபடத்தார். அந்தக் கண்ணாடி கேபின் வாசலில் ” டாக்டர் எஸ்.மேத்தா, சி.ஓ.ஓ ” என்ற பித்தளைப்பலகை பிரஸ்ஸோவில் பளிச்சிட்டது.
“டாக்டர் தாஸ், தணிக்கைக் குழுவின் பரிந்துரைகளை நான் மட்டுமல்ல, யாரும் மீறமுடியாது. நீங்கள் காரணங்கள் தந்தேயாகவேண்டும். இன்னும் இரு நாட்களில். தங்களது முக்கிய பணிகளிலிருந்து இந்த மீட்டிங்கிற்க்கு வந்ததற்கு நன்றி.”
தாஸ் எழுந்தார் ” முயற்சிக்கிறேன்.”
சொல்லாமல் சொல்கிறாயா..மேத்தா “நீ போகலாம்”‘என?

“டாக்டர் தாஸ்?” இன்டர்கம் கிணுகிணுத்தது. ” இரண்டு பேர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.. அப்பாயின்ட்மென்ட்இருக்காம்”
“யாருக்கும் அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கலையே? எந்த கம்பெனி?”
“ஏதோ யூ.பி.எஸ் ஸிஸ்டம் பத்தி பேசணுமாம்”
“சரி வரச்சொல்”
உள்ளே நுழைந்தவர்கள் பச்சை நிற கழுத்துப்பட்டை அணிந்திருந்தார்கள். அவர்களில் ஒருவனின் சிரிப்பு வினோதமாக இருந்தது. நாற்காலியில் அமராமல், நேராக
தாஸை நெருங்கினார்கள். அவர் சப்தம் எழுப்புமுன், மேசையைத்தாண்டி ஒருவன் லாப்டாப்பை மூடினான்.

அபிஜீத் விண்ணென்று தெறித்த பின்னந்தலையை தடவிக்கொண்ட்டான். தலை பாரமாகக்கனக்க தள்ளாடினான். சர் சர்ரென்று லாரிகள் விரைய, குழம்பினான்.
“எங்கே இருக்கிறோம்?” பூனா 90 கிலோமீட்டர் என்றது மைல்கல்..திகைத்தான் “மை காட்.. பூனா ரோட்.. எப்படி வந்தேன்? கார், பிளிங்கர் விளக்குகள் பளிச்சிட,கச்சிதமாக, சாலைஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. பயோக்ரோம் -லிருந்து இங்குவரை கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர்.. ஏன் வந்தேன்? யார் ஓட்டினார்கள்.?

லாப்டாப் பையை அவசரமாகத் திறந்து பார்த்தான். சி.டி… எங்கே? அதைத்தவிர, எல்லாம் இருந்தது. செல்போனிலிருந்து தாஸ் நம்பரைத் தேடினான்.
டாக்டர் தாஸின் போன் மணி அடித்துக்கொண்டேயிருந்தது. இரண்டு நிமிடம் கழித்து நின்றும் போனது.

அபிஜித் பயோக்ரோம் வாசலில் வந்தபோது, பலரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். வரவேற்பறைப்பெண், தோள் பையை மாட்டிக்கொண்டிருந்தாள். ” சாரி சார். விசிட்டிங் டைம் அஞ்சு மணி வரைதான். டாக்டர் தாஸ் இப்போ இல்லை. ரெண்டுபேர் கூட கிளம்பிப்போயிட்டார்”
“யாருன்னு தெரியுமா?”
“தெரியாது சார். என்னெவோ யு.பி.எஸ் கம்பனின்னு எழுதியிருக்காங்க. டாக்டர் டெமோ பார்க்கப் போறதாக போகும்போது சொன்னாங்க”
“அவர் சொன்னாரா?”
இல்லை. அவங்கள்ள ஒரு ஆள் சொன்னார். எனி வே, நாளைக்கு வாங்க”

என்னவோ தவறு நடந்திருக்கிறது.. அபிஜித்திற்கு உள்மனம் உறுத்தியது. “டாய்லெட் எந்தப்பக்கம்?”
டாய்லெட் பக்கம் ஒதுங்கி, மெதுவாக மாடிப்படியேறி, தாஸின் கேபின்-க்கு விரைந்தான். மூடப்பட்டிருந்தது. கதவின் கண்ணாடியில் உற்றுப் பார்த்தான். லைட் எரிந்துகொண்டிருந்ததில், லாப்டாப்பின் ஸ்க்ரீன் ஸேவரில் “பயோக்ரோம்” என்ற எழுத்துக்கள் மாறிமாறி வந்துகொண்டிருந்தன.

“எங்க தொழில்ல போட்டி மிக அதிகம். ரொம்ப சீக்ரெட்டாகத்தான் எல்லா ஆய்வுகளும் செய்வோம். மில்லியன் டாலர்களில் போட்டிங்கறதாலே, யார் மேலும் நம்பிக்கை என்பது கிடையாது.” மேத்தா சொல்லிக்கொண்டிருந்தார். எதிரே இருந்த வெள்ளை ஸ·பாரி ஸ¥ட் மனிதர் முடிநிறைந்த கைகளை வெறுமே சொறிந்துகொண்டிருந்தார். கோதுமை நிறம், டெல்லியென சொல்லாமல் சொல்லியது.
“போலீஸ்ல எ·ப்.ஐ.ஆர் நேத்திக்கே கொடுத்திட்டோம். எங்க கம்பெனில இப்படி ஒன்னு நடந்ததுன்னு வெளியே தெரிந்தா, வெளிநாட்டு பிஸினஸ் படுத்துடும். அதான், ஸ்ரீவத்ஸவாகிட்டே நானே போன் பண்ணினேன்” மேத்தா சொன்னதும், ஸ·பாரி தலையாட்டினார். ம்ம்… ஹோம் மினிஸ்ட்டரி பின்னணி. அதுதான், கேஸ் என்னளவில் வந்திருக்கிறது.
” காணாமல் போன தாஸ்-க்கும் உங்களுக்கும் எதாவது தகறாறு.. சமீபத்தில்?’
“இல்லை. நேத்திக்கு, ஆடிட் கமிட்டிலே அவரது செலவு குறித்து பேசினோம். விளக்கம் தரும்படி சொன்னேன். கோபிச்சுக்கிட்டு போனார். ஆனா,..இப்படி”
“என்ன செலவு?”
“அதிகமா கருவிகள் வாங்கியிருந்தார். ஆய்வுக்குத் தேவையானதுதானான்னு விளக்கம் கேட்டோம்”
‘கடந்த ஒரு வாரமா அவரோட நடவடிக்கையில எதாவது மாறுதல் இருந்ததா?”
“ம்ம்.. அப்படியெல்லாம் இருந்ததாகத் தெரியலை. தேவையில்லாமல் ஆய்வுகளில் நான் மூக்கை நுழைப்பதில்லை. புது ப்ராஜெக்ட் வரும் சீசன் இப்போ. அதுல நான் மும்முரமாக இருக்கேன்.”மேத்தா, மூக்குக்கண்ணாடியை கழட்டித் துடைத்தார்.
“ஒரு வாரமா, அவருக்கு வந்த போன்களின் நம்பர், அவர் போன் செய்த நம்பர்கள், அவரைப்பார்க்கவந்தவர்களின் விபரம் தெரியணும். முடியுமா?”
“முடியும். தீபக், நம்ம அட்மின் குல்கர்னிகிட்டே சாரை கூட்டிட்டுப் போ. வேற எதாவது வேணும்னா சொல்லுங்க, மிஸ்டர்.ராஜீவ்.” மேத்தாவின் குரலில் கவலை தெரிந்தது.
“நன்றி. இப்போ இது போதும்.” ராஜீவ் எழுந்தார். அருகிலிருந்த மற்றொரு ஸ·பாரியும் எழுந்துகொண்டார். நாற்பதைத் தொட்டுக்கொண்டிருந்த ராஜீவ் நடையில் ஒரு கர்வம் தெரிந்தது. பின்னால் வந்துகொண்டிருந்த ச·பாரிக்கு அருகில் வரும்படி சைகை செய்தார்.
“யாதவ்,எதாவது முக்கியமா கவனிச்சீங்களா?”
‘இல்ல சார். மேத்தாவின் பாடி லேங்க்வேஜ் உண்மையானதாப் படுகிறது”.
இருவரும் முதல் தளத்திற்கு வந்தனர்.
“மூன்று முப்பத்தஞ்சுக்கு வெளியே போயிருக்கார். அடையாள அட்டை கவுன்Tடர்ல பதிஞ்சிருக்கு. அதுக்கு அப்புறம் உள்ளே வரலை.
நேத்திக்கு கடைசியாக இரண்டுபேர் பார்க்க வந்திருக்காங்க. அப்பாயின்ட்மென்ட் இல்லாமல். அவர் அனுமதிச்சிருக்கார்.
காலேல, அபிஜீத்-னு ஒருத்தர் – வித் அப்பாயின்ட்மென்ட்.”
குல்கர்னி சொல்லச்சொல்ல, எண்கள் குறிக்கப்பட்டன. விளிக்கப்பட்டனர்.

“என்னைக் கூப்பிட்டப்போ எட்டு எட்டரை இருக்கும். அவர்கிட்ட இருக்கிற டேட்டாவை வேற இடத்தில போட்டு ரிசல்ட் கொண்டுவரச்சொன்னார்” அபிஜீத் சொல்லச் சொல்ல, ராஜீவ் அவன் கண்களை நேராக ஊடுருவினார். பொய் சொல்கிறாய் பையா…எத்தனை பேரைப்பாத்திருக்கேன் உன்னைமாதிரி..?

“எல்லாரையும் விட்டுட்டு , வெளியாள் உங்கிட்டே எதுக்கு கொடுக்கணும்? அதுவும் இத்தனை முக்கியமான டேட்டா?’
அதுதான் எனக்கும் தெரியலைசார். கேட்டதுக்கு, இங்கே இதை வச்சா பாதுகாப்பில்லை-ன்னு சொன்னார்”
“சரி அந்த டேட்டா எங்கே?”
“அதுதான் சொன்னேனே. யாரே எடுத்துட்டாங்க. அடிச்சுப்போட்டுட்டு. இங்கே தொட்டுப்பாருங்க.இன்னும் வீக்கம் இருக்கு” பின்னந்தலையைக் காட்டினான். ராஜீவ் அவனை கூர்ந்து பார்த்தார். குற்றவியல் அறிவு தலைக்குள் குறுகுறுத்தது.

“பயோக்ரோம் மாதிரி எத்தனை கம்பெனி இருக்கு இங்கே?”
“எக்கச்சக்கம் சார். ரெண்டு பெட்ரூம் ·ப்ளாட்ல கூட இப்பெல்லாம் லாப் ஆரம்பிச்சுடராங்க. டாலர் மோகம்”
“பெரிய கம்பெனி எத்தனை? தாஸ் மாதிரி ஆட்களை வேலைக்கு எடுக்கற அளவுக்கு..”
“எப்படிங்க சொல்லமுடியும்.? சின்ன கம்பெனி கூட இப்பெல்லாம் வங்கிக் கடன் வாங்கி, பெரிய ப்ராஜெக்ட் போடறாங்க. தாஸ் மாதிர் ஆளை, பங்குதாரராகக் கூடச் சேத்துக்கலாம்”
ராஜீவ் மொளனித்தார். இவன் சொல்வதில் உண்மை. இப்போ பயோடெக்னாலெஜி என்பது, அஞ்சு வருஷம் முன்னால கம்யூட்டர் மாதிரி. புற்றீசல் மாதிரி புதுக்கம்பெனிகள் எண்ணிக்கை. இந்தத் திருப்பதி கூட்டத்தில் தாஸ் என்ற மொட்டையை எங்கே தேடுவது?

“யாதவ், எல்லா பன்னாட்டு விமான நிலையங்களிலேயும் அலெர்ட் பண்ணுங்க. நேத்துப்போன பயணிகள் பட்டியல்ல தாஸின் பாஸ்போர்ட் நம்பர் தேடுங்க. நேபால், வடகிழக்கு எல்லை மாநிலங்கள் எல்லாத்துலேயும் அலெர்ட் பன்ணனும். புரியுதா?’ ராஜீவின் கட்டளைகள் அடுக்கடுக்காய் பறந்தன. போன்கள் அலறின. செல்நம்பர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.
“அபிஜீத், நீங்கள் போகலாம். எதாவது வேண்டுமானால் கூப்பிடுகிறேன். உனக்கு எதுவும் தகவல் கிடைத்தால் என் செல்நம்பரில் அழைக்கலாம்”. ராஜீவின் செல்நம்பரை தன் நோக்கியாவில் பதிந்துகொண்டான். விட்டால் போதும். சே, என்ன ஒரு விடியல் இரண்டு நாளாய்..?

வீட்டிற்கு வந்தவன்,கூரியரில் வந்த கடிதத்தை படித்து கவனமாய் வைத்தான். வீட்டு லோன்… இரண்டுமாதமாய் கட்டவில்லை. எச்சரிக்கை கடிதம்…பத்தாயிரம் … எங்கே போவது? அந்த பெங்களூர் வேலை.. இன்னும் முடிவாவில்லை என்கிறான்.. சன்னலில் முகத்தை அழுத்திக்கொண்டான். தலை பாறாங்கல்லாய் கனத்தது.
ப்ரிட்ஜைத் திறந்தவன், சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டான். தயிர் உரை ஊற்றவில்லை.
மனைவியும் பிள்ளையும் ஊருக்கு விடுமுறையில் போயிருப்பதால் எல்லாம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது..
பக்கத்து வீட்டில் மணியடித்தான்.. கதவைத்திறந்தவர் ஒருக்களித்து, வேட்டியை மறுகையால் கட்டிக்கொண்டிருந்தார்.
“சாரி மாமா. ஒரு சின்ன உதவி வேணும்”
“சொல்லுப்பா.. என்ன ·பார்மாலிடி இப்போ?” அன்பாகக் கடிந்துகொண்டவரின் இதமான பேச்சில் வலி கொஞ்சம் மறந்தான்.
“தயிர்தானே. இப்போ சாதம் வடிக்கப்போறியா. அதெல்லாம் வேண்டாம். இங்கேயே சாப்பிடு. ஒரு ஆளுக்கு கூடப்பண்ணுவது ஒண்ணும் சிரமமில்லை” கமலா மாமியின் பரிவிலும், உடல் களைப்பிலும் மறுக்கமுடியவில்லை..
“நாளைக்கு என் பையன் வர்றான் நாக்பூர்லேர்ந்து.” சொல்லும்போதே மாமாவின் குரல் கம்மியது. தொடர்ந்தார்.
“பேத்திக்கு இப்போ ஆவணி வந்தா மூணு வயசு. என்னமோ அங்கே டாக்டர் சொன்னார்னு, டெஸ்டெல்லாம் எடுக்கணுமாம். டாடா ஹாஸ்பிடல்ல”.
அபிஜீத் நிமிர்ந்தான்” டாடாவிலேயா? என்ன குழந்தைக்கு?”
மாமா மொளனித்தார். மாமி தொடர்ந்தாள் ” என்னமோ தலைவலிக்கிறதுன்னு ஒரேடியா அழுதுண்டே இருக்கு-ன்னு அங்கே சோதனை பண்ணிப்பார்த்தாளாம். அவா உடனே இங்கே அனுப்பிச்சிருக்கா..கான்ஸர்-னு சந்தேகப்படறா. பகவானே என்ன சோதனையோ?” விசும்ப ஆரம்பித்தாள்.
” அடேடே. என்னப்பா எழுந்துட்டே. ” மாமா பதறினார்.
“சாரி.. சாப்பிடறப்போ இதெல்லாம் பேசினது என் தப்புதான்.” மாமா தன்னையே நொந்துகொள்ள, “பரவாயில்லை மாமா. பசியில்லை. அவ்வளவுதான்.’ என்று சமாளித்தான்
“ஒண்ணுமிருக்காது மாமி. பயப்படாதீங்க.” சமாதானம் சொன்னாலும், மனம் கனத்தது. கான்ஸர் ஹாஸ்பிடல்ல மருத்துவப்பரிசோதனைன்னு சொன்னால்..
சுப்பிரமணியன் மாமா , பி.ஏ.ஆர்.ஸி யிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களே ஆயிருந்தன. திடீரென அவருக்கு வயதானதைப் போலத் தெரிந்தாலும், உற்சாகமாகவே காட்டிக்கொண்டார்.
சுப்பிரமணியன் மாமாவின் இரண்டாவது மகன் நாக்பூரில் தனியார் நிறுவனமொன்றில் பணிசெய்வதாக மாமி சொல்லி அறிந்திருந்தான். “இன்னிக்கு சரியா விடியவில்லை”யென்று நினைத்துக்கொண்டே, படுக்கையில் சாய்ந்தவன், சட்டென உறங்கிப் போனான்.
.

“தாஸின் ப்ராஜெக்டை கவனிக்க டாக்டர் விஜயரங்கனை நியமித்திருக்கிறோம். ஏறக்குறைய முடிந்துவிட்ட ப்ராஜெக்ட் என்பதால், அவருக்கு கடினமாயிருக்காது என்ற நம்பிக்கையில்..”மேத்தா சொல்லிக்கொண்டிருக்க, டாக்டர் விஜயரங்கன், புன்னகையுடன் தலையாட்டினார்.
“டேட்டா எல்லாம் இருக்கா டாக்டர் விஜயரங்கன்” கேட்ட ராஜீவ் ,கிடைத்த பதிலில் ஆச்சரியமானார்.
“எல்லாம் இருக்கே. லாப் சர்வரில் எல்லா டேட்டாவும் இன்னிக்கு வரை அப்டேட்டா இருக்கு”.
எப்படி சாத்தியம்? லாப் கம்ப்யுட்டரில் தாஸ் டேட்டா வைக்கவில்லை என்றும், லாப்டாப்பில் மட்டும் வைத்திருப்பதாகவுமல்லவா அந்த அபிஜீத் சொன்னான்?
“தாஸின் லாப்டாப் இப்போது எங்கே, டாக்டர் மேத்தா?”
“அப்படியே அவர் கேபின் ல வைச்சிருக்கோம். அதான்,’உங்கள் ஆட்கள் அதைத்தொடவேண்டாம்-னுடாங்களே.”
ராஜீவ் , யாதவை அழைத்தார்” அந்தப் பையன் அபிஜீத்.. அவனைக் கூப்பிடுங்க”
அபிஜீத் பயோக்ரோம் லாப் அடைந்தபோது, ராஜீவ் மேலிருந்து ‘நேராக இங்கே வா’ என்று சைகை காட்டினார்.
‘இந்த லாப்டாப்-பைத்தான் அன்னிக்கு பார்த்தியா?” அபிஜீத் கூர்ந்து கவனித்தான். எடுத்துப் புரட்டிப் பார்த்தான் ” ஆமாங்க. காம்பாக் -தான் அன்னிக்கு பார்த்தது”
“அந்த கருவிகளின் டேட்டா கோப்புகளை இதிலே காட்டு. யாருப்பா ஐ.டி மேனேஜர்? இதுனோட பாஸ்வேர்ட் கொடுங்க”
அபி அந்த லாப்டாப்பினுள் புகுந்தான். சில நிமிடங்களுக்குப் பின் “இதுதாங்க”
ராஜீவ் எட்டிப்பார்த்தார்.”ம்ம்” என்றார்.
சுத்தமாப் புரியலை. என்னவோ படம் . இவன் உண்மையைத்தான் அன்னிக்கு சொன்னானா-ன்னு பாக்கத்தான் -நினைத்துக்கொண்டார்.
கிளம்பும்போது, அபிஜீத் “சார்” என்றான் சன்னமாக.
‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தனியா”.
“இப்ப சொல்லு” . இருவரும் ஹோட்டல் மாரியாட்-டின் காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.
“அந்த லாப்டாப் தாஸோடதுதான். ஆனா, ஹார்ட் டிஸ்க் அவரோடதிலே”
ராஜீவ் சட்டென நிமிர்ந்தார்.
‘எப்படிச் சொல்லறே?’சுறுசுறுப்பானார்
“அவரோட கம்பூட்டர் புதியது-ன்னு அவரே சொன்னார். ஆனா, நேத்து லாப்டாப்போட அடிப்பக்கத்துல கீறல்கள் இருந்தன -அவசரமாக திருகாணிகள் கழட்டப்பட்டிருப்பதோட அடையாளமா. வாரண்ட்டி ஸ்டிக்கர் கிழிபட்டிருந்தது. ”
“ம்ம்.. ” யோசித்தார். ” கம்பெனிக்காரங்களே ரிப்பேர் செய்திருக்கலாம் – இதுக்கு முன்னாலே”
“. இது வேற ஹார்ட் டிஸ்க்க்காத்தான் இருக்கணும்.. அதுல இருக்கிற கோப்புகளோட தேதி பார்த்த்தேன். பலதும் அவர் காணாமல் போன நாளுக்கு முந்தியநாள் உண்டாக்கியது.”
பயல் பரவாயில்லையே.. சபாஷ் என்றார் ராஜீவ் மனதுள்.
“வெரிகுட் அப்சர்வேஷன். ஏன் அப்பவே சொல்லலை?”
“அங்கே யாருக்கும் தெரியவேண்டாம்னுதான் சார். எந்த புத்துல எந்தப் பாம்பு-ன்னு யாருக்குத் தெரியும்?”
கொஞ்சம் ஓவர்தான் என்று நினைத்தார் இப்போது.
“சார், எனக்குத் தோணுது.. தாஸ் கடத்தப்படலை. அவர் முக்கியமான டேட்டாவோட வெளியேறியிருக்கார்”
“அவர் கடத்தப்பட்டார்னு உனக்கு யார் சொன்னது?”
அபிஜீத் திணறினான்” நான் ஊகிச்சேன் சார்”
“லுக். மிஸ்டர் அபிஜீத். உங்கள் ஊகத்தையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள்.இது ஒரு இன்டஸ்ட்ரி எஸ்பியனேஜ். நிறுவங்களுக்குள் நடக்கும் ஒரு பேராசைப் போட்டி. தாஸ் என்ன செய்தார் என்பது எனக்கு முக்கியமல்ல. அவர் எங்கே என்பதுதா இப்போது கேள்வி. இந்த மூலக்கூறு, வெண்டைக்காய் எல்லாம் அந்தந்த நிறுவனங்கள் அடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை. புரியுதா?’
‘சரி..சரி சார்” என்றான் அபிஜீத் முகம் சிறுத்தவனாய்.
“ஓகே. உனது உதவிக்கு நன்றி. நல்ல தகவல் இது. எதுவும் தெரியுமானால் கூப்பிடு” என்ற ராஜீவ் எழுந்தார்.
முதலில் அந்த லேப்டாப்பை எடுத்துச் சோதனை செய்யவேண்டும். “யாதவ்” அழைத்தார்.

பெதாலிங் ஜெயா- மலேசியா
————————————–

அந்த அறையின் விளக்கு மிக மங்கலாக மினுமினுத்து எரிந்தது. மூலையில் சுருண்டுகிடந்த மனிதன் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு எழுந்தான். “சோப்ரா! ஏன் இவ்வளவு நேரம்?’ என்றான். அவசரமாக, சன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.
கீழே நின்ற வெள்ளை நிற புரோட்டான் மெல்ல, கட்டிடத்தின் பின்பகுதிக்கு ஊர்ந்தது. லி·ப்ட்டை உபயோகிக்காமல், பின்புறப்படிகளில் ஓசையெழுப்பாமல் இருவரும் இறங்கினர்.
கார், விமான நிலையம் நோக்கி விரையும்போது, உள்ளேயிருந்தவன் செல்போனில் “தாஸ்,பாஸ்போர்ட் பத்திரம்’ என்ற ஒலி கரகரப்பாகக் கேட்டது. பின் திரும்பிப்பார்த்தவன் புன்னகைத்தான்.
“ரியோ எப்ப போய்ச்சேருவோம்?’
” முதல்ல மணிலா. அப்புறம் மெல்போர்ன்.அங்கேயிருந்து ஏழு மணி நேரம்”.
“ஆட்கள் வருவாங்க இல்ல? ரியோ போனதில்லே நான் இதுவரை. கார்னிவெல் நேரத்துல போகாம என்னப்பா இது?”. மெல்லச் சிரித்தார்கள்
அவர்கள், பின்னேயிருந்து வந்த கிரான்ட் விட்டாரா-விலிருந்து நீண்ட துப்பாக்கியின் முனையைக் கவனிக்கவில்லை.

இச்சாலக்கரஞ்சி- கோலாப்பூர் அருகே, மகாராஷ்ட்ரா
——————————————————————–

“டாக்டர் கோக்லே மீட்டிங்ல இருக்கார். கொஞ்சம் காத்திருக்கணும். ” சொன்ன வரவேற்பரைப்பெண் மிகப்பெரிதாகப் பொட்டு வைத்திருந்தாள்.
“காய் ரே, ..” எவனோடோ போனில் கதையடிக்க ஆரம்பித்தாள்.
அபிஜீத் நாற்காலியில் கடுப்போடு அமர்ந்தான். அரசாங்க ஆய்வுக்கூடம் என்றாலே, இப்படி விட்டேத்தியாகத்தான் இருக்கவேண்டுமா?
கோலாப்பூர் வெயில் நாற்பதைத்தாண்டியது அன்று. வியர்வையின்றி எரிந்தது. மின்விசிறியும் நின்றுபோக, அபிஜீத் எழுந்துகொண்டான். இன்னும் அரைமணிநேரம் காத்திருக்கவேண்டும்… பழைய கம்பெனி வேலையென்றால், இன்னோரம், அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு போய்க்கொண்டேஇருந்திருப்பேன்.. இப்போ…?

வெறுப்பில், டீப்பாய் மேல் கிடந்த பத்திரிகைகளை புரட்டினான். நாலு மாதம் முன்னே புனேயில் நடந்த “இயற்கை வேதியியல் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கு” பற்றிய புல்லட்டின். அசிரத்தையாகப் புரட்டியவன், சட்டென நிமிர்ந்தான்.
“மஞ்சள் கிழங்கின் ஆன்ட்டி கேன்ஸர் தன்மை குறித்த மூலக்கூறு ஆய்வு’ பற்றிய சொற்பொழிவில், முதல் வரிசையில்,
டாக்டர் தாஸ்…
“கோக்லே இன்னும் மீட்டிங்ல இருக்காரே… “அரை மணியாகும்..அதிருக்கட்டும்..என்னப்பா,நீயி? போனதடவை ஆர்டர் வாங்கும்போது, ம்யூசிகல் கீ போர்ட் கேட்டேன்ல.. இன்னும் வந்து சேரல,” பர்ச்சேஸ் மேனேஜர் தேஷ்பாண்டே ஆரம்பிக்க, அபிஜீத் வழிந்தான்.

“சார். கொஞ்சம் டயம் கொடுங்க.. பைசா இன்னும் முழுசா வரலை. எழுபது சதவீதம்தானே கொடுத்திருக்கீங்க..பாக்கியும் வரட்டும்.”
“இங்கே வரணும்னு இல்ல. பூனால, என் மச்சினன் வீடு ஸ்டேஷன் பக்கத்திலே…”

கோக்லே மீட்டிங்கிலிருந்து வெளிவந்ததும், அவசரமாக அவர் அறைப்பக்கம் ஒதுங்கினான்

“மஞ்சள் கிழங்கு ஒரு இயற்கை அற்புதம். அதன் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் , ஆன்ட்டி பயாட்டிக் தன்மை நம் பாட்டிக்குப் பாட்டிக்கும் தெரியும். அதுல இருக்கிற சில மூலக்கூறுகளை பத்தித்தான் என்னோட அந்த லெக்சர்’ பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார் டாக்டர் கோக்லே.
அபிஜீத் இடைவெட்டினான்” மன்னிக்கவும் டாக்டர். அதுக்கும் பயோக்ரோம் லாப்-க்கும் என்ன சம்பந்தம்?”
“பயோக்ரோம்? ஒரு சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசாங்கம் தந்த ப்ராஜெக்ட். மஞ்சள் பத்தி ஏற்கெனவே நமது சி.எஸ்.ஐ.ஆர்(CSIR) பாதுகாப்புரிமை (Intellectual Property Rights)வாங்கியாச்சு.ஒரு பயலும் அனுமதியில்லாம ஒண்ணும் செய்யமுடியாது”

“அப்போ,டாக்டர் தாஸ் எதுக்கு உங்களோட செமினாருக்கு வந்திருந்தார்?”

“ஓ. டாக்டர் தாஸ்! சரியான கிறுக்கன். என்னோட ஆராய்ச்சிக்கு “பணம் தர்றேன்.. டர்மெரின் -என்ற மூலக்கூறை எப்படி தனித்துப் பிரிச்செடுக்க்கறது-ங்கற மெத்தட் மட்டும் கொடுத்துடு”-ன்னு பலமுறை கேட்டான். நான் முடியாது-ன்னுட்டேன்.”
“அப்படி டர்மெரின் -ல என்ன இருக்கு?”
‘தெரியாது. இனிமேத்தான் ஆராயணும். வேற மூலக்கூறுகளோட சேர்த்து சிந்த்தஸிஸ்(Synthesis) பண்ணினா, வேற பெரிய மூலக்கூறு கிடைக்கலாம்.. அதுக்கெல்லாம் பணம் வேணும். கருவிகள் வேணும் ” கோகலே பெருமூச்செறிந்தார்.
” நான் ரிடயர் ஆகும்வரை அதெல்லாம் நடக்கப்போவதில்லை. என் ஆய்வு பத்தி ரெ·பரன்ஸ் கொடுத்து எவனோ, அஞ்சு வருஷம் கழிச்சு டாக்டரேட் வாங்கிப்போவான் .சரி, போன டென்டர்ல, ஒரு ·பாரின் ட்Tரிப் சேக்கச்சொன்னேனே.. பயிற்சிக்குன்னு… என்ன ஆச்சு? யு.எஸ் ல என் பொண்ணு சான்·ப்ரான்ஸிஸ்கோல இருக்கா. அவளையும் பார்த்ததா ஆயிரும்.”
அபிஜீத்திற்கு ஏதோ விளங்கியது போலிருந்தது…
ராஜீவின் செல்போன் சிணுங்கியது. யார் இது கோலாப்பூர் பக்கத்திலிருந்து..?

மாமாவின் மகன் குடும்பம் வந்திருந்தது.
“ஹலோ, நான் கிருஷ்ணன்”. அறிமுகப்படுத்திக்கொண்டவருக்கு லேசாக காதோரம் நரைக்கத்தொடங்கியிருந்தது. பனியனிலிருந்து தொப்பை சரிந்திருந்தது. மார்பைச் சொறிந்துகொண்டவர் “பார்வதி’ என்று குரல் கொடுத்தார்.
” டாடா ஹாஸ்பிடல் எப்படிப்போணும்னு சார் கிட்டே கேட்டுக்கோ” என்றவர், ” பாம்பே எத்தனை தடவை வந்தாலும் புரியவே மாட்டேங்கிறது” -இயல்பாக சிரித்தார். அபிஜீத்திற்கு சட்டென அவரைப் பிடித்துபோனது.

மாமியின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை அவன் முகம் பார்த்து விழித்தது. ஐந்து நிமிடங்களில் சகஜமாக, அருகில் அமர்ந்து கொண்டது.
” உன் பேர் என்ன சொல்லு… மாமாகிட்டே”
குழந்தை மெதுவாக'”காயத்ரி ” என்றது.
“நன்னா ஆடுவா. டி.விலே எந்த சீரியல் வந்தாலும், டக்-குனு சொல்லிடுவா. பாட்டு அத்தனையும் மனப்பாடம்” சொல்லும்போதே பார்வதியின் குரலில் தாயின் கர்வம் தெரிந்தது.
“நாளைக்கு நானே கூட்டிக்கொண்டு போய்விடுகிறேன். பஸ் , ரயில் என்று அவதிப்படவேண்டாம்’ என்ற அபிஜீத்தை நன்றியுடன் கிருஷ்ணன் தோளில் தட்டினார்.
” என்னவோ டெஸ்ட் -ங்கிறான். பார்ப்போம். எல்லாம் பகவான் செயல்’
அபிஜீத்துக்கு ஆச்சரியமாக் இருந்தது.சட்டென இவர்களுக்கு எப்படி தத்துவம் வருகிறது?
காயத்ரிக்குக் கொடுத்த சாக்லேட்டின் துண்டங்கள் சட்டையில் கறை படிந்திருந்ததைக் கவனித்தவன் ,சலவைக்கு இட மனமின்றி, ஹாங்கரில் மாட்டினான்.

“ஒன்று தெளிவாகக் கூறிவிடுகிறேன். பயோக்ரோம் நேர்மையான வழிகளில் மட்டுமே ஆராய்ச்சி செய்கிறது. எங்களுக்கும் எந்த டர்மெரின் மூலக்கூறு பற்றிய ப்ராஜெக்ட்டுக்கும் சம்பந்தமில்லை” டாக்டர் மேத்தாவின் குரல் உறுதியாக இருந்தது.
” எங்கள் ப்ராஜெக்ட்கள் எல்லாமே அமெரிக்க எ·.டி.ஏ (US FDA) விதிமுறைகளுக்கும், அவர்களின் தணிக்கைக்கும் உட்பட்டது. எதாவது விதிமுறைகளுக்கு மீறிய ஆய்வுகளைச் செய்தால், அனுமதி பறிபோய்விடும். பில்லியன் டாலர் பிஸினஸ்.ராஜீவ். புரிந்துகொள்ளுங்கள். ஒரு டர்மெரின் மாலிக்யூல் கொண்டு எங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்கமாட்டோம்” ஆவேசமாகப் பேசினார்.
“சரி. டாக்டர் தாஸ் மேல் உங்கள் தணிக்கைக் குழு கொண்டூவந்த குற்றச்சாட்டு என்ன ?”
“குற்றச்சாட்டு அல்ல. அது ஒரு அப்சர்வேஷன் மட்டுமே. அவர் ஆறு மாதம் முன்பு வாங்கிய கருவிகள் மதிப்பு ஒரு மில்லியன் டாலர். இதன் தேவை என்ன என்பதுதான் கேள்வி”
“அதன் பர்ச்சேஸ் ஆர்டர்கள் கிடைக்குமா?’
“தருகிறேன். ஏன்?”
‘வேண்டும். அவ்வளவுதான்.”

அந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அபியுடன், பார்வதியும்,காயத்ரியும் நின்றுகொண்டிருந்தனர். பினாயில் வாடையுடன் ஏதோ மருந்தின் நெடி கலந்து விபரீதமாக மணக்க, காயத்ரி முனகத்தொடங்கினாள்.
“அம்மா, நெஞ்சு வலிக்கிறது”
குழந்தையின் முகத்தைப் பார்த்த அபிஜீத் கலவரப்படத்தொடங்கினான்.
அவசரமாக அவன் செய்த சில போன்களில், நிலமையின் தீவிரம் பெரிய டாக்டர்களை எட்ட, காயத்ரி, அவசர சிகிக்சையில் சேர்க்கப்பட்டாள். கிருஷ்ணன் விரைந்து வந்தார். என்னென்னமோ சோதனைகளுக்குப் பிறகு, காயத்ரி விசேஷ வார்டு-க்கு மாற்றப்பட்டாள்.

அடுத்தநாள், பார்வதியின் கழுத்தில் தங்கச்சங்கிலிக்குப் பதில் மஞ்சள் சரடு மின்னியதை, அபிஜீத் கவனிக்கவில்லை.

ஹோட்டல் மரியாட்-டில் மூன்றாவது மாடியில், ராஜீவின் அறையை அபிஜீத் தட்டியபோது, மாலை ஆறுமணியாகிவிட்டிருந்தது.
அவரது கட்டிலில் பல காகிதங்கள் இறைந்து கிடந்தன.
உட்கார் என்று சைகை காட்டினார்.
“இந்த பர்ச்சேஸ் ஆர்டர்களை கவனி’ அபிஜீத் நீட்டிய காகிதங்களை பொறுமையாகப் படித்தான்.
“இன்டரஸ்டிங்” விசிலடித்தான்..
“என்ன?”
“சார். இவர் வாங்கிய கருவிக்கும் இவர் செய்துகொண்டிருந்த ஆய்வுக்கும் சம்பந்தமில்லை.”
“புரியற மாதிரி சொல்”
” கொஞ்சம் கடினம். சுருக்கமாகச் சொல்கிறேன். மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்ல பல ரகம் உண்டு. இரண்டு வகை மிக முக்கியம் .ட்ட்ரிபிள் க்வாட்ருபோல் (Triple Quadrupole) உள்ளது ஒன்று- இது மூலக்கூறு எவ்வளவு இருக்கு(quantity) என்பதையும், மூலக்கூறு எடையையும்(molecular weight) காட்டும்.இதுதான் அவரோட ஆய்வுக்கு வேண்டியது.”
“சரி. மேலே சொல்”
“இன்னோரு ரகம், அயான் ட்ராப் (ion trap)என்னும் வகைசேர்ந்தது. இது தெரியாத மூலக்கூற்றின் வடிவம்( structural elucidation), அதனோட எடை (molecular weight)இதையெல்லாம் காட்டும். இது பெரும்பாலும், புதுசா தயாரிச்சிருக்கிற, தெரியாத மூலக்கூறின்( new , unidentified molecule’s structure) வடிவம் பற்றி தெரிந்துகொள்ள உதவும். அடிப்படை ஆய்வுக்கு உதவும். இதைத்தான் தாஸ் இப்போ வாங்கியிருக்கார். ”
“ம்ம்.. கொஞ்சம் புரியுது. அதாவது, அவரோட ஆய்வுக்குத் தேவையானதை வாங்காம, புதுசா மூலக்கூறு கண்டுபிடிக்க கருவி வாங்கியிருக்கார்-னு சொல்லறே”.
“அதான் சார். இதுக்கும் அந்த மஞ்சள் டர்மெரின்-2 ஆய்வுக்கும் எதோ தொடர்பு இருக்கு.”
‘என்ன செய்திருக்க முடியும்?”
” இப்படி இருக்கலாம் சார். பயோக்ரோம்- ல அவரோட ஆய்வுக்கு வந்தது ஒரு ஆன்ட்டி கான்ஸர் மூலக்கூறு. அதனோட இந்த டர்மெரின்-2 மூலக்கூறை சேர்த்து புதுசாக ஒரு மூலக்க்கூறைத் தயாரித்திருக்கலாம்.அவர் “நான் தயாரிச்சது”-ன்னு காப்புரிமை வாங்க திட்டமிட்ருக்கலாம்..”
“நல்ல லாஜிக். ஆனால் என்ன நிரூபணம்? டர்மெரின்-2 எப்படி அவருக்குக் கிடைக்கும்? டாக்டர்.கோக்லேதான் மறுத்துட்டதாகச் சொல்லறாரே?’
அபிஜீத் சிரித்தான்”சார். அரசாங்க லாப். கொஞ்சம் தள்ளினால், எல்லாக்கதவும் திறக்க்கும். கோக்லேக்குத் தெரியாமலேயே”
“எங்கே போய் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்? நம்ம நாடு “மஞ்சள் என்னோடது-ன்னு” சண்டை போட்டா?”
“அது முழு மஞ்சள் மூலக்கூறுகளுக்குத்தான் பொருந்தும். கொஞ்சம் எடுத்து வேற மூலக்கூறோட ஒட்டவைச்சு, நான் இதை மஞ்சள்லேர்ந்து எடுக்கவேயில்லைன்னு சாதிச்சார்னா? அதுவும் திறமையான சட்டநிபுணர்களை வாங்கி வாதாடினா, என்ன செய்ய முடியும்?. இதெல்லாம், தென் அமெரிக்க நாடுகள்லேர்ந்து சுலபமாப் பண்ணிட முடியும். ப்ரேசில் இதுக்கெல்லாம் ஒரு சொர்க்கம்.” அபிஜீத் பேசப்பேச, ராஜீவ் வாயடைத்துப் போனார்

அபிஜீத் போனபிறகும், நெடுநேரம், நெடுஞ்சாலையில் எறும்புச்சாரையாய் ஊரும் கார்களை வெறித்துக்கொண்டிருந்தார்.

அபிஜீத் வீட்டை நெருங்கியபோது, சிறு கூட்டம் கூடியிருந்தது. சுப்பிரமணியன் மாமா நாற்காலியில் உறைந்திருக்க, அருகில் கிருஷ்ணன் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார்.
“ஆமா சார். இன்னும் பத்து நாள் லீவு வேணும். சொந்தக்காரங்களுக்கு சொல்லியாச்சு”
உள்ளேயிருந்து கேட்ட அழுகைக்குரல்களில் அபி உறைந்தான்..
அபியின் கைகளைப்பற்றிக்கொண்டு கிருஷ்ணன் விக்கி விக்கி அழத்தொடங்கினார்.
” எல்லாம் முடிஞ்சுபோச்சுப்பா.. இன்னிக்கும் ஏதோ சோதனைன்னுதான் சொன்னாங்க. ஏதோ ஒரு ஊசியாம்.. அஞ்சாயிரம் ரூபாய் ஒரு தடவை போடறதுக்கு. போட்டாச்சுன்னா, குழந்தை துடியாத் துடிக்கிறாள். அம்மா அம்மா ..ன்னு அவ அழறதைக் கேட்டா மனசைப் பிறாண்டறது.”

” சரி,போறதுன்னு, பி.எ·ப்-ல கை வைச்சேன். பார்வதியோட சங்கிலி, தாலிக்கொடி வரை அடகு வச்சாச்சு. இன்னிக்குக் காலேல… யாரும் பாக்கறதுக்கு முன்னாலே….”
தன் கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு அழும் அந்த நல்லவரை என்னவென்று சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் அபி திணறினான். கண்களில் படலமாக நீர் நிறைந்து வழிய, கிடத்தியிருந்த குழந்தையின் முகம் மிக மங்கலாகத் தெரிந்தது.

யாதவ், விறைப்பாக சல்யூட் அடித்தார்.”சொல்லுங்க” என்றார் ராஜீவ், கோப்புகளை அடுக்கியபடியே.
“தாஸ்ஸோட வீட்டைச்சுத்தி சோதனை போட்டதுல, இது கிடைச்சது ”
யாதவ் நீட்டிய பழுப்பான அரசாங்க காகித உறையில் சிறிய தகடு ஒன்று தங்கமாக மின்னியது.
” இந்த செல்போன் சிம் கார்ட் யாரோடதுன்னு பார்த்துடீங்களா?’
” அஸிம்-னு பேர்ல வாங்கியிருக்காங்க. தேடிப் பிடிச்சு விரட்டினதுல, தாஸ் உபயோகத்திற்காக வாங்கிக்கொடுத்திருக்காங்க’
“யாரு?”
“பயோஜெனசிஸ்-ங்கிற கம்பெனில இருந்து..அஸிம் வெறும் இடைத்தரகர்தான். அவனோட ஆள் பயோஜெனசிஸ்-ல யாருங்கிறதும் தெரிஞ்சாச்சு.
“விசாரிச்சீங்களா?”
ஆமா சார். தாஸ்,பயோக்ரோம் ஆய்வு பற்றி சொல்லறதுக்கு மட்டும் இந்த சிம் கார்டு உபயோகிக்க, கொடுத்திருக்காங்க””யாதவ், மேசைமேல் தன் கோப்புகளை வைத்தார். “என்ன சார் இது… டர்மெரின், மஞ்சள், வெங்காயம், பச்சைமிளகாய்-னு”
“தாஸ் எங்கே இப்போ?”
“தெரியாதாம் சார். அவர் கிட்டே கிட்டத்தட்ட ஒரு கோடி கொடுத்திருக்காங்க. ஸ்விஸ் அக்கவுன்ட்ல. இந்த விவரத்துக்கு. அவரைக்காணோம்னு அவங்களும் தேடிக்கிட்டிருக்காங்க”
ராஜீவ் பேசாமல் தேனீர்க்கோப்பையை வெறித்துக்கொண்டிருந்தார்.
யாதவ்,” பயோஜெனஸிஸ் மேல நடவடிக்கை எடுப்பமா சார்? அவங்க, சட்டப்படி வாதாடினாலும்…”
“தாஸ் கிடைப்பாரா?’
யாதவ் மெளனமானார்.
‘யாதவ். நம்ம வேலை இதுவல்ல. தாஸ் என்ற விஞ்ஞானி..இல்லை இப்போ ஒரு சமூக விரோதி-யைத்தான் நம்ம தேடணும். அவர்கிட்டே, இந்தியாவின் விலைமதிக்க முடியாத அறிவுச் சொத்து இருக்கு. முதல்ல சி.எஸ்.ஐ.ஆர் – மத்திய விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொல்லணும்- டர்மெரின் காப்புரிமை பற்றி. என்னென்னு சொல்லறது?. எப்படி நிரூபிக்கமுடியும்? – உலக அளவில் காப்புரிமை பற்றி.?. ஒரு டேட்டாவும் இல்லாமல்..?”
செல்போன் கிணுகிணுத்தது. யாதவ் காதில் ஒற்றினார்.”யெஸ்.. ஓ.காட்..”
“சார், தாஸை மலேசியால ட்ரேஸ் பண்ணிட்டாங்க”

அபிஜீத் காரைத் துடைக்க வாளியுடன் அமர்ந்தான். கார் துடைத்துக்கொண்டிருந்தவனை நிறுத்தியாகிவிட்டது. நூத்தி இருபத்தி அஞ்சு ரூபாய் மிச்சம் மாசம்…
டிரைவர் இருக்கையின் அடியில் ரப்பர் மேட்-களை அகற்றிய போது ஏதோ ஒன்று பளபளத்தது. திருப்பிப்பார்த்தான். சோனி எழுநூற்று ஐம்பது மெகாபைட் என்பது தவிர எதுவும் எழுதப்படாத அந்தக் குறுந்தகடு காலைவெயிலில் மினுமினுத்தது. ஒருக்கால்.. ஒருக்கால். அதுவாக இருக்குமோ?
அவசரம் அவசரமாக ·ப்ளாட்டினுள் விரைந்தவன் லாப்டாப்பை உயிர்ப்பித்தான். பச்சை எல்.இ.டி மினுமினுக்க சி.டி.ராம் சுழலத்தொடங்க,திரையில், அக்குறுந்தகட்டின் ஜாதகம் வரத்தொடங்கியது. உற்றுப்பார்த்தான். டர்ம்_1, மெத்தட்ஸ்,டேட்டா_1 என்று தெளிவாகத் தெரிந்தது
டாக்டர் தாஸ்ஸின் குறுந்தட்டு. எல்லா டேட்டாவும், மெத்தட் களும்… டர்மெரின் ஆய்வாக இருக்கலாம். சட்டைக்குள் வைத்திருந்தது விழுந்திருக்கிறது. லாப்டாப் பையில் இருந்து கெமிக்கல் விலைப்பட்டியல் இருந்த குறுந்தட்டை எடுத்துப்போயிருக்கிறார்கள்.. அதுவும் சோனி என்பதால்.. அவசரத்தில் தெரியாமல்…
நெஞ்சு படபடத்தது இது டாக்டர் தாஸ் தவிர தனக்குமட்டுமே தெரியும். பலப்பல மில்லியன் டாலர்கள் குவியும் -சரியான ஆய்வுக்கு உட்படுத்தினால்…. பயோ ஜெனஸிஸ் போன்றவர்கள் காலில் விழுவார்கள்..மில்லியன் டாலர்… நினைக்கவே சுகமாக இருந்தது..
செல்போன் அடித்தது அபிஜீத் தடுமாறி எழுந்தான்..
“சொல்லுங்க ராஜீவ் சார். தாஸ் கிடைச்சாரா?’
கிடைச்சாச்சு..மலேசியாவில”
“கிரேட். அப்போ எல்லா விசயமும் இனிமே சொல்லிருவாரு”
மறுமுனையில் குரல் தயங்கியது” சொல்ல மாட்டார். அவரால் முடியாது”
“ஏன்?”
“அவர் இறந்து இரண்டு நாளாச்சு. அவரோட இருந்த கம்ப்யுட்டரை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இந்த கேஸ் மூடப்பட்டுவிட்டது. சி.எஸ்.ஐ.ஆர் -க்கு சொல்லிட்டேன் அந்த டர்மெரின் விசயத்தை. அவங்க பாத்துப்பாங்க. உன் உதவிக்கு நன்றி அபிஜீத். இன்னிக்கு டெல்லி புறப்படறேன். டெல்லி வந்தா என்னை வந்து பாரு”. போன் வைக்கப்பட்டது.

அபிஜீத் மலைத்தான். யாரும் எனக்கு இனி போட்டியில்லை. உலக அளவில், பயோக்ரோம், பயோஜெனஸிஸ் போன்ற கம்பனிகளில் பேரம்பேசி, மூலக்கூறை பதிவுசெய்துவிட்டால், ராயல்டி மட்டுமே ஏழுதலைமுறைக்குப் போதும்.. ஆன்ட்டி கான்ஸர் மூலக்கூறு. உலகம் முழுதும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும்…குறைந்தபட்சம் பத்து மில்லியன் டாலர்கள் கிடைக்குமா?…

ஹாங்கரில் தொங்கிய சட்டையை அணிந்துகொண்டான். பிசு பிசுவென எதோ விரலில் ஒட்ட, எரிச்சலில் பார்த்தான்.
சாக்லேட் கறை.. காயத்ரி அன்று சட்டையில் துடைத்தது…

சட்டென நண்டுப்பிடி அவன் இதயத்தில் இறுகியது..
‘ஒரு ஊசி அஞ்சாயிரம் ரூவாய்.. உடனே போடணும்”
“பி.எ·ப் ல முழுசும் எடுத்தாச்சு. பார்வதியோட கொடி, வளையல் எல்லாம் அடகு வைச்சிருக்கேன். குழந்தை பொழைச்சாப் போறும்”…

டர்மெரின் – 2 விலிருந்து உருவாக்கப்படும் மருந்து, உலக அளவில் பயங்கரமாக விளம்பரப்படுத்தப்பட்டு, எதாவது சர்வ தேச மருத்துவ கூட்டத்தில் வெளியிடப்படும்.
காயத்ரி போன்ற குழந்தைகளுக்கு சிகிக்சை, பத்தாயிரம் ரூபாய் ஒரு ஊசிக்கு என்ற விலையில் எட்டாமல் போகும்… , குறுகுறுவென்ற கண்களுடன், தழையத்தழைய பாவாடையில் அங்கும் இங்கும் ஓடியாட முடியாமல் ஆயிரமாயிரம் குழந்தைகள், மஞ்சள் விளையும் நாட்டிலேயே, அதன் மருத்துவபலன் கிட்டாமல் மரிக்கும்…
மில்லியன் டாலர்கள் சில கிருஷ்ணன்களின் ஆயுள்கால சேமிப்பிலும்,பார்வதிகளின் தாலிக்கொடிகளிலும் உருவாக்கப்படும்..

இரவு முழுதும் அவன் தூங்கவில்லை.

அந்த கூரியர் கம்பெனியன் “டாகுமெண்ட் ரிசெப்ஷன்” பெண் டி “ர்ட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத நிறத்தில் மிடி அணிந்திருந்தாள்.’ டெல்லிக்கு சார்ஜ் முப்பது ரூவா சார். பாக்கெட்டுல என்னது?” என்றாள், புஸ¤ புசுவென்று ப்ளாஸ்டிக் பபுள் கவரில் (bubble envelope)வைக்கப்பட்டிருந்த குறுந்தட்டை எடுத்தவாறே.
‘இதுக்கெல்லாம் டெக்ளரேஷன் கொடுக்கணும் சார் கமர்ஷியல் இன்வாய்ஸ் இல்லேன்னா.. இதுனோட மதிப்பு எவ்வளவு போடட்டும்?”
“விலைமதிப்பு இல்லாததுமா இது!’ அபிஜீத் சொன்னதை அவள் கவனிக்கவில்லை
“இருவது ரூபா மதிப்பு போடட்டுமா ?’ என்றவள், பெறுநன் முகவரி எழுதும்போது ஆச்சரியமானாள்
“சார்? இந்த முகவரி சரிதானா?”
ஆமாம். தெளிவா எழுதுங்க.. டாக்டர். அப்துல் கலாம், ஜனாதிபதி, ..”
நிதானமாகச் சொன்னவன், முப்பது ரூபாய் வைத்துவிட்டு, திரும்பிப்பார்க்காமல் நடந்தான். மனம், அன்றைய வானம் போல் தெளிவாக இருந்தது.
——————————

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை