ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சின்னக்கருப்பன்


இருபது வருடங்கள் என்ற நாவலின் முக்கியக் கதாபாத்திரமான டாக்டரை ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் சேரும்படி வேண்டுகோள் விடுப்பார். அதனை டாக்டர் மறுதலித்துவிடுவார். டாக்டர் பதில் கூறும்போது, பிரிட்டிஷாரை தான் எதிர்ப்பது உண்மையென்றாலும், அவர்கள் கீழே விழுந்து கிடக்கும்போது மிதிக்கமாட்டேன் என்று கூறுவார்.

ஜெயேந்திரர் போன்ற மதகுருக்களை நான் எதிர்ப்பது உண்மையென்றாலும், அவர்கள் மீது அரசில் இருக்கும் ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் தங்கள் அராஜக அரசியலை பிரயோகிக்கும்போது எதிர்க்காமல் இருக்க முடியவில்லை.

இதுவரை ஜெயலலிதா அரசு நடந்த முறை ஒன்று கூட எனக்கு உவப்பானதாக இல்லை என்பது என் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

மதமாற்றத் தடைசட்டம் கொண்டுவந்தது, அதனை தடாலென்று நீக்கிக்கொண்டது, ரேஷன் சட்டங்கள், அவைகள் தடாலென்ற நீக்கம், மின்சாரக் கட்டணம் பற்றிய அறிவிப்புகள், அவைகள் தடாலென்ற நீக்கங்கள் ஆகியவை அனைத்திலும் ஒரு அராஜக போக்கே நிலவி வந்திருப்பதை காணலாம். எவையும், ஜனநாயக ரீதியில் விவாதிக்கப்பட்டு, இது நல்லது இது கெட்டது போன்ற மக்கள் கருத்துக்கும் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்கும் பிறகு கொண்டுவரப்பட்டவையும் அல்ல. அவை நீக்கப்படும்போதும் எந்தவிதமான ஜனநாயக விவாதத்தின் பின்னர் நீக்கப்பட்டவையும் அல்ல. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தமிழக மக்கள் தங்களது சர்வாதிகாரியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற சொல்வடைக்கு ஏற்ப தமிழகத்தின் முதலமைச்சர்கள் நடந்துவந்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இன்னும் அதிக நேர்மையுடன் அதே சொல்வடையைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான தொழில்முனைவராக உழைப்பின் மூலம் முன்னேறிய ஒரு உணவக சொந்தக்காரரை அவரது உணவகத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க அரசியல் பலம் கொண்ட சிலர் முனைந்தார்கள், அதுவே அவரது துயரத்துக்குக் காரணம் என்ற வலுவான வதந்தி தமிழ்நாட்டில் உலவி வந்தது. சென்னையில் பல சுதந்திர தொழில் முனைவோர்கள் ஆங்காங்கே இருக்கும் ‘அரசியல் ரவுடிகளுக்கு ‘ மாதாந்திர பட்டுவாடா செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். நெஞ்சைத்தொட்டுச் சொன்னால், இன்று அரசியல் என்பது மாபியாக்கூட்டங்களின் முகமூடியாகவே இருக்கிறது. இது எனக்கு ஆச்சரியமான ஒன்று அல்ல. அல்லது புரிந்துகொள்ள முடியாத ஒன்றும் அல்ல. மக்கள் பிரதிநிதிகளின் தேர்வில் இருக்கும் குழப்படி இந்த விளைவைத்தான் உண்டுபண்ணும் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். அது பற்றி பின்னர் ஒரு முறை எழுத முயற்சிக்கிறேன்.

அப்படி அரசியல் பலம் கொண்ட பலரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அரசியல்தலைவர்களுக்கு நெருங்கிய பலர் திடாரென்று கொலையுண்டார்கள். தா கிருட்டிணன் கொலை, அண்ணா நகர் ரமேஷ் கொலை ஆகியவை மிகவும் தெளிவாகவே அரசியல் சம்பந்தப்பட்ட கொலைகளாக வெளிவந்தன. இது தவிர வெளிவராத பல ‘விபத்துக்களையும் ‘ எனக்குத் தெரியும். பலர் இப்படிப்பட்ட விபத்துக்களுக்கு பயந்து தங்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு பெரும் அரசியல் பிரமுகர்களுக்கு விற்ற விஷயம் எனக்குத் தெரியும். இன்னும் கூட பலர் விற்றுக்கொண்டிருக்கலாம். அதே போல, தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸ் விவகாரமும், சென்ற தேர்தலில் தோல்வியும் ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் விரோதம் வரக்காரணமாக இருந்ததா என்று எனக்குத் தெரியாது. (ஒவ்வொரு தேர்தல் தோல்வியும் ஒவ்வொரு ‘நெருக்கமான நண்பருக்கு ‘ மரண அடி என்பது வழமையாக ஆகிவருவது தெரிந்ததுதான். சோ, சுப்பிரமணியம் சாமி, ஜெயேந்திரர் என்று நீள்கிறது பட்டியல்). ஆகையால் உண்மையிலேயே ஜெயேந்திரர் குற்றத்துக்காக சிறைக்குச் சென்றாரா, பழிவாங்கும் நடவடிக்கையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறைக்குச் சென்றாரா என்பது யாரும் அறியாதது. அந்த ஒரு சந்தேகம் வருமளவுக்கு ஜெயலலிதா அரசும் இதுவரை இருந்த தமிழ்நாட்டு அரசுகளும் இருந்திருக்கின்றன என்பது நமது அரசியலமைப்பின் ஆதார லெஜிட்டிமஸியையே கேள்விக்குள்ளாக்குகிறது. இதுவரை ஜெயலலிதா அரசு செய்த செயல்களை பார்க்கும்போது அதன் நீட்சியாகவே இதனையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயேந்திரரை கைது செய்ததும் திடாரென்று ஜெயலலிதா அரசு ‘சட்ட ஒழுங்கை யார் என்றும் பார்க்காமல் நிலைநாட்டும் அரசு ‘ என்று பலருக்கு மாறியிருக்கலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை. இது இந்த அரசின் தொடரும் அதிகார துஷ்பிரயோகமாகவே பார்க்கிறேன்.

இந்த அரசின் சமீபத்திய சாதனைகளாக வீராணம் திட்டமும், வீரப்பன் வேட்டையும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இன்று அத்தோடு ஜெயேந்திரர் வேட்டையும் சேர்ந்துகொண்டிருக்கும். எந்த உயர்பதவியில் இருந்தாலும், எத்தகைய பணக்காரராக இருந்தாலும், சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று முரசறிவிக்கிறார் ஜெயலலிதா என்ற புகழ் பாடப்படுகிறது.

ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘நேற்றுவரை அவரை சாமியார் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அவரைப்பார்த்தால் மரியாதையாக இருந்தது. இவர் ஒரு கொலைகாரர் என்று படித்தபின்னால், அவரது கண்ணைப்பார்த்தால் திருட்டுமுழியாக இருக்கிறது ‘ என்று சொன்னார். அச்சு எழுத்தில் வந்துவிட்டால், அது உண்மைதான் என்று நம்பும் அளவுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டுவிட்டோம். அச்சடிக்கப்பட்ட எழுத்து என்பதாலேயே இன்று நாம் நம்புகிறோம்.

அச்சு ஊடகங்களும், பொதுவாக பொது ஊடகங்களும் வலிமை பெறுவது இதனாலேயே. இதனை எதிர்த்து என் போன்ற தனி மனிதர்களால் ஆகக்கூடியது இது போன்ற கட்டுரைகள் மட்டுமே என்பது வருந்தத்தக்க விஷயமே.

உதாரணமாக, வீரப்பன் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். வீரப்பன் என்பது ஒரு தனி ஒரு திருடன், கொள்ளைக்காரன் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அவன் கூட தமிழ் விடுதலைப்படை போன்ற தீவிரவாத திராவிட இயக்கக்குழு ஒன்று இணைந்ததும், வினோதமான பிம்பங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு புறம் அவனும் அவனுடன் கூட இருக்கும் தமிழ் விடுதலை பிரிவினைவாதக்குழுவும் தீவிரமாக அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்ற கட்டுமானமும், மறுபுறம் அவன் தமிழர்களின் விடுதலைவீரன், தமிழர்களின் தனிநிகர்த்தலைவன் போன்ற பிம்பங்களும் உருவாக்கப்படத்தொடங்கின. இவைகளை உருவாக்கியவர்கள் யார் யார் என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. தங்கள் தங்கள் அரசியல் சார்ந்து இந்த பிம்பங்களை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டில் தீவிர வாக்கு வங்கி அரசியலில் இருக்கிறார்கள். ஜாதி அரசியல் நடத்தும் ராமதாஸ் வீரப்பனின் ஜாதி காரணமாக அவனைப் புகழ்பாடத்தொடங்கினார். பிரிவினை வாதம் பேசிய குழுவில் அவன் இருந்ததால், பிரிவினைவாதத்தினை எதிர்க்கும் அரசியல் பகுதியினர், வீரப்பனுக்கு கிடைக்கத்தொடங்கிய அரசியல் லெஜிடிமஸியை தீவிரமாக எதிர்க்கத்தொடங்கினர். (நானும் இந்தப்பகுதியைச் சார்ந்தவனே.)

வீரப்பனை கைது செய்து, அவனை பேச வைத்து பலரது அரசியல் முகமூடிகள் களையப்பட்டிருந்தால், நல்லதாக இருந்திருக்கும். இது போன்று அரசியல் முகமூடி தரித்து பின்னால் கொள்ளைக்கூட்டங்கள் மூலம் பணம் பண்ணும் அரசியல் வாதிகளும், அதே வழியில் எதிர்காலத்தில் போகக்கூடிய அரசியல் வாதிகளும் தடுக்கப்பட்டிருப்பார்கள். அவன் கொலை செய்யப்பட்டதால் அது நடக்காமல் போனது. இதனை ஞாநி போன்ற பத்திரிக்கையாளர்கள் குறித்திருக்கிறார்கள். ஆனால், அவன் கொலை செய்யப்படத்தான் வேண்டுமா, கொலை செய்யாமல் அவனை பிடித்திருக்க முடியாதா போன்ற கேள்விகளை, நியாயமான ஒரு விசாரணைதான் பதில் சொல்லும். அப்படி நியாயமான ஒரு விசாரணை தமிழ்நாட்டில், அதுவும் கலைஞர் அல்லது ஜெயலலிதா மாற்றி மாற்றி அரசேறும் தமிழ்நாட்டில், நடக்கும் என்று தோன்றவில்லை. தோசையைத் திருப்பிப்போடும் தமிழகத்தில், ஜெயலலிதா கருணாநிதியையும், கருணாநிதி ஜெயலலிதாவையும் அனுசரித்துக்கொண்டு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக்கொள்ளும் அனுசரணை அரசியல் பலமற்ற உதிரிகளுக்கு கிடையாது.

அரசு உளவாளியாக இருக்கும் டாக்டர் வீட்டுக்கு போகும் இந்த வீரப்பனை அதே டாக்டர் மயக்க மருந்து கொடுக்க அதிரடிப்படை உள்ளே வந்து பிடித்திருக்க முடியாதா என்ற கேள்விக்கு எனக்கு பதில் இந்த அரசில் கிடைக்காது. ஒழிந்தான் அரக்கன் என்று பேசுவதிலும், அல்லது மறைந்தான் வீரத்திருமகன் என்று பேசுவதிலும், உரத்த சிந்தனை அமுக்கப்பட்டு, நம் எண்ணத்தை நிர்ணயிக்கும் ஊடகங்களே வெற்றி பெறுகின்றன.

வீரப்பனின் கொலை எனக்கு பல விஷயங்களை கேள்வி கேட்க வைத்தது. முதலாவது வீரப்பனை உயிருடன் பிடிப்பதில் யாருக்கு லாபம் இருக்க முடியும் ? ஜெயலலிதாவுக்குத்தானே ?

இன்றைய ஜெயலலிதா அரசின் தீவிர எதிர்க்கட்சிகளாக இருக்கும் கலைஞர், ராமதாஸ் ஏன் இன்னும் ரஜினிகாந்த் போன்றோரது சங்கடமான விஷயங்களை வெளிக்கொணர்ந்திருக்கலாம். வெளிப்படையாக பேசக்கூசும் வார்த்தைகளால் வீரப்பன் ஜெயலலிதாவை பேசியதை வைத்து சன் டிவி அரசியல் செய்தது அனைவருக்கும் தெரிந்ததுதானே. ஏன் ஜெயலலிதா அரசு வீரப்பனை உயிருடன் பிடிக்க ஆர்வம் காட்டவில்லை ? யாரைப் பாதுகாக்க அவனது கொலை நடந்தது என்று ஏன் நம் ஊடகங்களில் கேட்கப்படவில்லை ? உள்ளே வீரப்பன் கொலையில் அதிமுக, திமுக, (கர்னாடக) காங்கிரஸ் உடன்பாடு ஏதேனும் உண்டா ?

இதனையே நீட்டிக்கொண்டு செல்லலாம். ஏன் தா கிருட்டிணன் வழக்கில் பெயிலில் முக அழகிரி வெளியே செல்லுமாறு வழக்கு போடப்பட்டது ? ஏன் ஜெயேந்திரர் விஷயத்தில் பெயிலில் செல்வதையும் மறுக்கும் அளவுக்கு வழக்கு போடப்பட்டிருக்கிறது ? அரசியல்வாதிகளின் ஜாதி இன்று மேல்ஜாதி. அடித்தாலும் பிடித்தாலும், அவர்கள் ஒண்ணுக்குள் ஒண்ணு என்பதைக் காட்டுகிறதா ? (அதையே அரசியலில் நிரந்தரப்பகைவர்களும் இல்லை, நிரந்தர கூட்டாளிகளும் இல்லை, நிரந்தர ஏமாளிகள் என்பது பொதுமக்கள் என்று நிச்சயம் உண்டு என்று சொல்கிறார்களோ என்னவோ)

ஜெயேந்திரர் கொலைக் குற்றவாளி பட்டம் சாட்டப்பட்டு பெயிலில் வெளியே வரமுடியாத அளவுக்கு சிறையில் இருக்கிறார்.

அவர் உண்மையிலேயே குற்றம் புரிந்தவரா அல்லவா என்று பெரும்பாலான மக்களைப் போலவே எனக்கும் தெரியாது. நீதிமன்றத்தில் கிடைக்கும் நீதியைப் பெறட்டும். எனக்கு அக்கறையில்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை நம்புபவன் நான்.

ஆனால் சட்டத்தின் ஆட்சி, அது எந்த அளவுக்கு தவறானதாக, அரசியல் கட்சிகளின் ஆட்டத்துக்கு ஏற்றாற்போல ஆடுவதாக இருந்தாலும், அது இன்றியமையாமல் நமக்கு வேண்டும் என்று கருதுகிறேன். எப்பேர்ப்பட்ட ஒரு தனி மனிதனின் சர்வாதிகார ஆட்சியையும் விட, பெயரளவுக்காயினும் சட்டத்தின் ஆட்சியை என்னாளும் தேர்வேன். எப்படிப்பட்ட சட்டம் பணக்காரர்களையும் மேல்தட்டுக்காரர்களையும் பாதுகாக்க இயற்றப்பட்டாலும், அதே சட்டத்தின் மூலமாகக்கூட ஒரு சாதாரணனின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மாணவிகளை பஸ்ஸோடு வைத்து கொளுத்திய கட்சியினர் (இன்று எத்தனை பேருக்கு இது ஞாபகம் இருக்கிறது ?) ஜெயேந்திரரை ஜெயாடிவியில் குற்றவாளி என்றே தீர்ப்பளித்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். உதயகுமாரன் தொடங்கி தாகிருட்டிணன் வரைக்கும் வரும் நீண்ட வன்முறைப் பாரம்பரியம் மிக்கவர்கள் இன்று நீதியின் காவலனாய், சங்கரராமனுக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்த முனைகிறார்கள். மறுபுறம், குஜராத்தில் கொலைவெறியுடன் ஆடிய கூட்டத்தினர் ஜெயேந்திரரின் விடுதலைக்காக போராட்டம் நடத்த முனைகிறார்கள். சீக்கியர்களின் உடல்கள் மீது வெறியாட்டம் நடத்தியவர்கள், அவ்வாறு வெறியாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜெக்தீஷ் டைட்லருக்கு அமைச்சர் பதவி கொடுத்து கெளரவித்த கூட்டத்தினர், தமக்கும் ஜெயேந்திரர் கைதுக்கும் சம்பந்தமில்லை என்று குரல் கொடுக்கிறார்கள். நக்ஸலைட்டுகளும், கலைஞர் கருணாநிதியும் கைது செய்யப்பட்டால் மனித உரிமை மீறல் என்று உரத்த குரல் கொடுக்கும் பியூசிஎல் போன்ற ‘நடுநிலை ‘ அமைப்புக்கள், எதிர்பார்த்தது போலவே ஜெயேந்திரர் கைதை வரவேற்கிறார்கள். கருணாநிதி கைதின்போது எதிர்த்துக் குரல் கொடுத்த, சிபிஎம் சிபிஐ போன்ற இடதுசாரி கட்சிகள் இந்த கைதை வரவேற்று, ஜெயலலிதா அரசு எந்த காரணத்தினாலும் வளைந்து கொடுக்காமல் ஜெயேந்திரர் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதே வேளையில் ஊடகங்களின் நிறமாற்றமும் ஆச்சரியத்துக்குரியது.

நேற்றுவரை ஜெயேந்திரரை இந்து மதத்தின் போப்பாண்டவர் போல எழுதி வந்த ஆனந்தவிகடன் குமுதம் குழும இதழ்கள், காஞ்சி மடம் பற்றி அன்று அப்படி எழுதினோம், இன்று இப்படி எழுதினோம் என்று பட்டியலிட்டுக்கொண்டிருக்கின்றன. நேற்றுவரை ஜெயா டிவியில் ஜெயேந்திரர் புகழ் பாடி வந்துவிட்டு, இன்று அவரைப்பற்றி அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவியும் சளைக்காமல், ஜெயேந்திரர் கைது ‘புகழ் ‘ ஜெயலலிதாவுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற கருத்தில் தன் பங்குக்கு அவதூறுகளைப் பரப்பி வருகின்றது.

பூட்டிக்கிடந்த மடத்தின் சொத்துக்களை பல்வேறு சமூக நலப்பணிகளில் ஜெயேந்திரர் செலவு செய்யக் காரணமாக இருந்தார். சங்கர நேத்திராலயா, தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸ், அன்னதானம், தலித் குடியிருப்பு சீர்திருத்தம் போன்ற பல இடங்களில் சங்கரமடத்தின் சொத்துக்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளை தவறு என்று சொல்லக்கூடியவர்கள் நிச்சயம் சங்கரமடம் போன்ற பழமையான மடத்தில் இருப்பார்கள். அந்த எதிர்ப்பை அழிக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்ய முயலக்கூடியவரா இவர் என்ற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கூட மக்களுக்கு கேட்க இடம் கொடாமல் ஊடகங்கள் இன்று மூளைச்சலவையில் இறங்கியிருக்கின்றன. இதில் ஞாநியிலிருந்து குமுதம் வரைக்கும், ஜெயா டிவியிலிருந்து சன் டிவி வரைக்கும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து தினமலர் வரைக்கும் எல்லாத் திசைகளிலிலும் நடக்கிறது மூளைச்சலவை.

ஒருவர் குற்றவாளி என்று நிரூபணம் ஆவதற்கு முன்னரே அவர் பற்றிய அவதூறு செய்திகளையும் பொய்ச்செய்திகளையும் பத்திரிக்கைகளுக்கு கசிய விட்டு, பொதுமக்கள் மத்தியில் ஒருவர் குற்றவாளி என்ற பிம்பம் உருவாக உதவுகிறார்கள். இதனை வெல்லக்கட்டி போன்று விடலை விகடன்களும், ரிப்போர்ட்டர்களும் அள்ளிக்கொண்டு தங்கள் சர்க்குலேஷன்களை ஏற்றிக்கொள்கின்றன. இது ஜெயேந்திரர் விஷயத்தில் மட்டும் நடக்கவில்லை. குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டி போலீஸார் யாரைக் கைது செய்தாலும், இதே விஷயம்தான் நடக்கிறது. நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லும் முன்னரே மக்கள் மத்தியில் அவரது குணக்கொலை நடக்கவைக்கப்படுகிறது. இது விபச்சாரத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்களும் சரிதான். கொலைக்காக கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரும் சரிதான். இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே நடத்தப்படும் குணக்கொலை தவறு என்று சொல்லக்கூட இன்றைய தமிழ்நாட்டு ஊடகங்களில் ஆட்கள் இல்லை. திண்ணையிலும் பலர் இதனை எழுதி அலுத்துவிட்டார்கள்.

***

காஞ்சி மடத்தின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று கருணாநிதி குரல் கொடுத்திருக்கிறார். கூடவே அனைத்து அறிவுஜீவிகளும் அவர் வழிப்படி குரல் கொடுக்கிறார்கள்.

ஜெயேந்திரர் தன் மடாதிபதி பதவியை விட்டு விலகவேண்டும் என்று இப்போது குரல் கொடுப்பவர்கள், மடத்தின் சொத்துகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பேசுபவர்கள், கருணாநிதி கைது செய்யப்பட்டவுடன் தி மு க தலைமையை அவர் விட்டு விலகவேண்டும் என்றோ , தி மு க சொத்துகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்றோ பேசியிருந்தால் அவர்கள் சொல்லுக்கு மதிப்பிருக்கும். ஒரு நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார் என்பதன் காரணமாகவே அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்தாக இருந்தால், அவர் முதலில் திமுக சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கட்டும் அந்த கோரிக்கையின் பின்னால், காஞ்சி மடத்தின் சொத்துக்களைப் பற்றி அவர் பேசலாம்.

***

சொத்துக்கள் என்றவுடன் இன்னொன்றும் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாப்போன ஒரு பழமொழி, ‘சிவன் சொத்து குலநாசம் ‘ என்பது. ஆனால், இதனை நான் இன்னும் நம்புகிறேன். அண்ட பேரண்டமும், அகில உலகமும், உலக மக்களும் நாமும் புல் பூண்டும் சிவனின் சொத்தாக இருக்கும்போது, சிவன் கோவில் சொத்தை ஒரு தனி மனிதன் எடுத்துக்கொண்டால் சிவனுக்கு கோபம் வருமா என்ன என்று நீங்கள் கேட்கலாம்.

அதல்ல அதன் பொருள். சிவன் சொத்து என்பது வெறுமே சிவன் கோவில் சொத்து மட்டுமல்ல. இந்த பழமொழி தோன்றிய காலத்தில் சிவன் சொத்து என்பது ஊரின் பொதுச்சொத்தாக இருந்தது. அதனை இன்று சொல்ல வேண்டுமென்றால், ஊர் பொதுச்சொத்து என்று சொல்ல வேண்டும். மக்களின் வரிப்பணம், பொதுச்சொத்து (டான்ஸி இன்ன இதர) ஆகியவைகளே இன்று ‘சிவன் சொத்துக்கள் ‘. அந்தச் சொத்தை அபகரிப்பவனது குலம் நாசமடையும் என்பதே இன்றைய பொருள். இது காஞ்சி ஜெயேந்திரரும் ஒன்றுதான், ஜெயலலிதாவுக்கும் அதே, கருணாநிதிக்கும் அதே, அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக முஸ்லீம் லீக் கட்சியினருக்கும் அதே. பொதுச்சொத்தை அபகரிக்கும் அனைத்து மக்களுமே குல நாசம் அடைவார்கள்.

சாமியேதப்பா பூதமேதப்பா என்ற பெரியார் வழியில் வேண்டுமானால், கொச்சையாகப் புரிந்துகொள்ளப்பட்டு மனச்சாட்சியின் உறுத்தல் இன்றி நாஸ்திகர்கள் இந்து அற நிலையத்துறையை ‘நிர்வாகம் பண்ணி ‘, ‘தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப்பணத்தில் வீடுகட்டி ‘ வாழ்ந்திருக்கலாம். ஆனால், பொதுச்சொத்தை அபகரிக்கிறோம், நமக்குச் சொந்தமில்லாத ஒரு சொத்தை நாம் அனுபவிக்கிறோம் என்ற உணர்வு ஒரு மூலையிலாவது எப்பேர்ப்பட்ட ஊழல் பெருச்சாளிக்கும் உண்டு. அந்த உணர்வு போதும் அவனை அழிக்க. அந்த உணர்வு போதும் அவனது குல நாசத்தைக் கொண்டுவர. ஊர்ச்சொத்தை அபகரித்தவரது குடும்பம், ஒரே தலைமுறைக்குள் சிதறி நாசமானதை நானே பார்த்திருக்கிறேன்.

***

ஜெயேந்திரர் கைது பல அரசியல் கூட்டணி மாற்றங்களுக்கு முன்னோடி என்பது என் ஊகம். தனக்கும் பாஜகவுக்கும் உறவு முழுவதும் அறுந்துவிட்டது என்பதை ஜெயலலிதா சோனியாவுக்கு தெரிவிக்கும் படலம் என்பது என் கருத்து.

***

ஆனால் இது பற்றி சுதந்திர விவாதம் பண்ண முடியாத அளவிற்கு சுதந்திர மேடை ஒன்று தமிழ் நாட்டில் இல்லாதது என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. குங்குமம் ஆகட்டும், ஜே டி வி ஆகட்டும், சன் டி வி ஆகட்டும் பரபரப்பிற்கும், தம்முடைய அரசியல் நிலைபாட்டிற்கும் தக்க எல்லா நிகழ்ச்சிகளையும் உருட்டிச் சுருட்டிப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஜெயேந்திரரும் ஜெயலட்சுமியும் எல்லாமே ஒன்று தான். ஒரு இனக்குழுச்சார்பு அரசியலில் “என்னுடைய ஆள்” எப்படி நடத்தப் படுகிறான் என்பதும், “என்னுடையா ஆளுக்காக” குரல் கொடுப்பதும் தான் இங்கே நிரந்தரமாய் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கறிஞரைக் கைது செய்தால் வழக்கறிஞர்கள் போராட்டம், கருணாநிதியைக் கைது செய்தால் தி மு க ஆள் போராட்டம், ஜெயேந்திரரைக் கைது செய்தால் ஆர் எஸ் எஸ் போராட்டம் என்று நீதித்துறையையும், என்று காவல் துறையையும் சுதந்திரமாய்ச் செயல்பட முடியாதபடி இனக்குழு அரசியல் இங்கே முடக்கிப் போட்டிருக்கிறது. கருணாநிதி கைதின் போது , ஜெயலலிதாவைக் கண்டித்தவர்கள் , ஜெயேந்திரர் கைதின் போது மகிழ்வடைகிறார்கள் . ஜெயலலிதா மீது வழக்கு என்றால் பொய்வழக்கு என்றவர்கள், கருணாநிதி கைது நியாயம் என்று பேசுகிறார்கள். நடுநிலை மக்கள் திரள் இல்லாவிடினும் நடுநிலை அறிவுஜீவிகள் , நடுநிலை ஊடகங்கள், நடுநிலை நிறுவனங்கள் மற்றும் நீதி மற்றும் காவல் துறை அமைப்புகளைக் கட்டி எழுப்பாமல் ஜனநாயகம் காப்பாற்றப் படமாட்டாது. இந்த வழக்கில் கருணாநிதியின் அபிப்பிராயமோ, ஆர் எஸ் எஸ்ஸின் அபிப்பிராயமோ முக்கியம் அல்ல. நீதித்துறை சுதந்திரமாய்ச் செயல்பட அனுமதிக்கப்படவேண்டும் என்பது தான் முக்கியம்.

அப்படி ஒரு சுதந்திரமான நீதித்துறையும் சுதந்திரமான போலீஸ் அமைப்பும் இல்லாத நிலை, ஜனநாயகத்தின் அடிப்படை வேர்களையே அறுத்துக்கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு சுதந்திரமான நீதித்துறையும் சுதந்திரமான போலீஸ் அமைப்பும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் அரசியல்வாதிகள். ஆகவே, ஒரு வழக்கு வரும்போது, எது ஜோடனை எது உண்மை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே போல உண்மையான வழக்குக்களும், அரசியல் இடையூறு காரணமாக ஊற்றி மூடப்படும் என்பதும் இந்த அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அதனாலேயே இதே அரசியல் குழுக்கள் தங்கள் ஆள் கைது செய்யப்படும்போது தீவிர எதிர்ப்பு காட்டினால், அவை ஊற்றி மூடப்படும் என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

கைதுக்கு எதிராகப் போராட்டம் பண்ணத் தூண்டும் கயமை மிக்க அரசியலை அரசியல்வாதிகள் கைவிடவேண்டும் என்பது நான் கொள்கை ரீதியில் கேட்டாலும் அது நடைமுறையில் நிச்சயம் உதாசீனம் செய்யப்படும். பத்திரிகைகள் வெறும் செய்தியைச் சொல்லாமல், கழுகு , குருவி என்று ஊகங்களையும், கற்பனைகளயும் அள்ளித் தெளிப்பதை நிறுத்தவேண்டும் என்று கேட்டாலும், போலீஸ் கசியவிடும் செய்திகளை யார் ‘முந்தித்தருவது ‘ என்ற போட்டியில் காணாமல் போகும்.

ஆகவே, நடுநிலை அமைப்புகள் – பி யு சி எல், மக்கள் சக்தி, காவல்துறையின் நடைமுறைகளைக் கட்சி சார்பின்றிக் கண்காணிக்கும் நுகர்வோர் குழு என்று உருவாகி உண்மையான சமநிலையுடன் அவர்கள் செயல்படவேண்டும். இந்த ஒன்று இல்லாமல், ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation