ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

சு.வெங்கடேசன்.

ஜெயமோகனின் படைப்புகளில் இயல்பான நகையுணர்வு பரவி ஒடுவதாக இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில் அவர் விடுக்கிற பிரகடனங்கள் பல நேரங்களில் நகையுணர்வை ஏற்படுத்துவதாக இலக்கிய நண்பர்கள் சொல்வதுண்டு.அப்படியொரு நகையுணர்வு மிக்க பிரகடனம்தான் ‘அறுவை சிகிச்சைக்கு கடப்பாறை : ஈ.வே.ரா. வின் அணுகுமுறை ‘ என்ற இணையதளக்கட்டுரையில் ஜெயமோகன் முன்வைத்திருப்பது.

‘தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதீக மரபை ஆக்கப்பூர்வமாக விமர்சித்த, அவைதீக மரபை தீவிரமாக முன்வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை ‘ என்பதுதான் ஜெயமோகனின் பிரகடனம். அவர் விரும்பாவிட்டாலும் அவரது எழுத்தில் பரவி ஒடுகிற நகையுணர்வு இந்த வரிகளில் மேலோங்கியிருப்பதை நம்மால் முழுமையாக உணரமுடிகிறது. ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுப்பார். இந்த வரிகளை எழுதும்போது என் ஆழ்மனதில் துளியளவு நகையுணர்வு கூட ஏற்படவில்லை என்னைக் கொச்சைப்படுத்த இப்படிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக கூறுவார்.

ஒரு படைப்பாளி என்ற முறையில் அவரின் கருத்துக்களை நாம் ஏற்போம். ஆனால் படைப்பாளி அறியாத அம்சத்தை படைப்பில் இருந்து வாசகனால் காணமுடியும். அது படைப்பின் வெற்றியே என்பதையும் அவருக்கு நினைவு கூறுவோம். இயல்பாக தோன்றுகிற நகையுணர்வை விலக்கி வைத்துவிட்டு அவரது பிரகடனத்துக்குள் இருக்கும் கருத்தை ஆராய்வோம்.

000

1995ம் ஆண்டு வெளிவந்த ஜெயமோகனின் ‘நாவல், என்ற ஆய்வு நூலில் சுமார் 122 ஆண்டு கால தமிழ் நாவல் வரலாற்றின் அனைத்து நாவல்களையும் நிராகரித்தார். முழுமைபெற்ற நாவல் தமிழில் எழுதப்படவேயில்லை என்று கூறிய இவர் சில முக்கிய நாவல்களை பட்டியலிட்டு அவையும் நாவலுக்கான முயற்சிதானேத் தவிர நாவல் இல்லை என்கிறார். ஒரு படைப்பாளியையும் அவருடைய சாதனையையும் நான் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகவோ, அலட்சியம் செய்திருப்பதாகவோ கூறிவிட முடியாது என்றும்துணிந்து கூறினார்.

இவர் ஏன் இப்படி கருத்துக்களை முன்வைக்கிறார், இதற்குள் இருக்கும் உண்மை என்ன என்பதை கண்டறிய சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘விஷ்ணுபுரம் ‘, ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ ஆகிய இரண்டு நாவல்களை எழுதிவிட்டு ‘எனது இரு நாவல்களை சர்வதேச புகழ் பெற்ற பல நாவல்களின் தரத்தைவிட மேலானது என்று தயங்காமல் கூற முடியும் ‘[தமிழ்.காம்] என்று ஜெயமோகன் கூறியபோது பல பூனைகள் கோணிப்பையில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறின.

தான் நுழைவதற்குமுன் ஏற்கனவே இருந்த அனைத்தின் மீதும் ஒரு பேரழிவை நிகழ்த்திவிட்டு, தன் பாதங்களை புனிதத்தன்மையுடன்பதிவு செய்கிற செயலை வரலாற்றின் பல கட்டங்களில் பார்த்திருக்கிறோம். [பேரழிவையும், புனிதத்தையும் ஒற்றைப்புள்ளியிலேயே வரலாறு அறிமுகப்படுத்துகிறது] ஆனால் இந்த சதிநுட்ப அரசியலை தமிழ் இலக்கிய உலகில் சாத்தியப்படுத்தியது ஜெயமோகனைத்தவிர இன்னொரு படைப்பாளி இல்லை என்பதே உண்மை. இந்த உண்மைக்குள் இருக்கும் அடிப்படை அரசியலை புரிந்து கொள்வது ஜெயமோகனின் கருத்துலகை புரிந்துகொள்ள பெரிதும் துணைநிற்கும்.

(இரண்டு)

இதுவரை வெளிவந்துள்ள ஜெயமோகனின் படைப்புகளில் முக்கியமானதென அவரும், பிறரும் கருதுகிற விஷ்ணுபுரத்தில் இருந்து நம் ஆய்வினைத் துவங்குவோம். ‘என் நடை போதிய அளவு தயாராகிவிட்டது என்பதை திசைகளின் நடுவே மூலம் அறிந்தேன். அப்படி அறிந்துகொண்ட பின்தான் விஷ்ணுபுரத்தை எழுதத்துவங்கினேன் ‘ என்று ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இங்குதான் திசைகளின் நடுவே கதையும் முக்கியத்துவம்பெறுகிறது. 1995-ல் வெளிவந்த ‘நாவல் ‘ நூலின் முழு அர்த்தமும் 2001ல் தெரியவந்ததைப் போல விஷ்ணுபுரத்தை எழுதுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘திசைகளின் நடுவே ‘ சிறுகதையை விஷ்ணுபுரத்தின்வழியே படிப்பது முக்கியமாகிறது.

எந்த ஒரு பெரும்பணியைத் துவக்குமுன் பலியிடுவது ஒரு ஐதீக முறை. மாபெரும் புவன ஞான மையமான விஷ்ணுபுரத்தை உருவாக்கும் பணி துவங்குமுன் பலியிடுதலின் அவசியத்தை உணர்ந்த ஜெயமோகனின் மனம் திசைகளின் நடுவே வழியாக செயலாற்றியுள்ளது.

மகாஞானி அக்கினிதத்தனால் உருவாக்கப்பட உள்ள விஷ்ணுபுரத்திற்கு பலியிட ஜெயமோகன் தேர்வு செய்தது ஒரு சார்வாகனை. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இவரின் முன்னோர்கள் செய்த தேர்வினைப் போல.

‘பிராமணர்களே..புரோகிதர்களே….யாருமில்லையா இங்கு ? இந்தப்பாவிக்கு பாடம் புகட்ட ஆளில்லையா ? ‘ என அர்ச்சுனன்கூவியவுடன் நாலாபக்கமும் இருந்து பிறீட்டு வந்த பிராமண புரோகிதக் கூட்டம் பச்சை ரத்தம் தெறிக்க அவனை அடித்து வீழ்த்துகிறது. கைகால்களை கட்டி நெய்யினையூற்றி உயிரோடு எரிக்கிறது.

‘தஸ்யூக்களே, சூத்திரர்களே கேளுங்கள். காமம் ஒன்றே புருஷார்த்தம். அதை அடையவேண்டிய வழிமுறை எதுவோ அதுவே தர்மம். அதற்குரிய உபகரணங்களே பொருள். மோட்சம் என்பது திருப்திகரமான மரணமேயாகும் ‘ என முழங்கிய சார்வாகனை உயிரோடு எரித்தது நெய்யல்ல…பிராமணீய சதியும், ஐதீக வெறியும்தான். ஆனால் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிற ஜெயமோகனின் மனம், அவனை எரித்த நெருப்புக்கு அவனுடைய ஞானத்தை காரணம் காட்டுகிறது, எரித்தவனின் இடத்தில் நின்றுகொண்டு.

விஷ்ணுபுரத்தை எழுதுமுன் திசைகளின் நடுவே மூலம் ‘என் நடை போதிய அளவு தயாராகிவிட்டது ‘ என ஜெயமோகன் சொன்னது ‘வெறும் நடையை ‘ மட்டுமல்ல.

000

‘கதைகளாக இருக்கலாம். ஆனால் எவ்வளவு அற்புதமான கதைகள். மனித மனம்தான் எவ்வளவு தூரம் மேலெழுகிறது, எவ்வளவு உன்னதங்களை நோக்கி அது கைநீட்டுகிறது ‘ என்று நாவலுக்குள் எழுதப்பட்டுள்ள வரிகள் இந்நாவலுக்காக எழுதப்பட்டவைகளே. ஆனால் எதை நோக்கிய மேலெழுதல் ? எந்த உன்னதத்தை நோக்கிய நகர்வுகள் ? என்ற கேள்வியை முன்வைத்தால் பளிச்சென முன்வந்து நிற்கும் இந்த நாவலின் சுயரூபம்.

சமணர்களின் கபாலங்களை பிளந்து வெளிவந்த கழுமரத்து நுனியும், வெட்டிச் சாய்க்கப்பட்ட பெளத்த பிட்சுகளின் தலைகளும், சங்கரமடங்களின் அடியில் தேங்கி நிற்கிற தத்துவ ஞானிகளின் ரத்தச் சகதியும், சூளையில் வெந்து தணிந்த தர்க்கவாதிகளின் திருமேனியுமாக பாதைகளின் இருபக்கமும் சாட்சிகள் சரிய வாழ்வின் உண்மையைத்தேடி நீண்ட காலம் அலந்தனர் நமது முன்னோர்கள். ஆனால் ஒற்றைத் தன்மையோடு மத பாசிசத்தை அடிமனதில் தேக்கிவைத்துக் கொண்டு மேல்கட்டுமானமாக ‘புண்ணிய பூமியை ‘ நிலைநிறுத்த துடிக்கும் சாத்விக் ரிதம்பராவின் குரலும், ஜெயமோகன் எனும்பாணனின் கதையும் ஒரே புள்ளியில் அவிழ்க்கமுடியாத முடிச்சாய்க் கிடக்கிறது.

அதனால்தான் ‘தான் சற்றும் விரும்பாத ‘ நாத்திகத் தன்மையை நாவலின் அடியாழத்தில் வெட்டிச் சாய்க்கிறார். ‘என் ஆழ்மன இயக்கமே ‘ வெற்றி பெற்றதென ஆனந்த கூத்தாடுகிறார். மடப்பள்ளிகளில் தின்று கொழுத்த சாஸ்திரீய மரபுகளை ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் உப்பிப் பெருக்குகிறார்.

‘வியூகம் வகுக்கும் சாத்திரியனுக்கு ஏடுகளே உணவு. ஞானமே வாள். ‘ ஜெயமோகன் எனும் பாணன் சொல்லும்விஷ்ணுபுரத்தில் வாழ்வின் அடிப்படை குறித்த தேடல் ஞானவான்களுக்கு மட்டுமே. அரசியல் கோட்பாடு சார்ந்த இரண்டாம்தர வாசக ஞானசூன்யங்களுக்கு கரிய நிழலும் கறுப்பு நாயும்தான்.

000

விஷ்ணுபுரத்தின் ஜீவனாய் ஒளிர்வது அதன் சிற்ப மரபு. மூன்று பாகங்களிலும் கொஞ்சமும் சலிப்பின்றி நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட எத்தனையோ சிற்பங்கள் வர்ணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பமும் கல்லை மீறி வெளிவரத் துடிக்கும் ஏதோ ஒன்றினால் செதுக்கப்பட்டிருக்கிறது.

விஷ்ணுபுரத்தின் சிற்ப அமைப்பை விளக்குபவை இரு நூல்கள். மகாதந்திர சமுச்சாயம், மகாஜோதிர்மய ஸ்தாபத்தியம். ஒன்று தாந்திரீக வழிகள். இன்னொன்று சிற்ப விதிகள். சிற்பிகள் விஷயத்திலும் , தச்சர்கள் விஷயத்திலும் , சாஸ்திரிகள் விஷயத்திலும்பிழை பொறுப்பது என்ற பேச்சே விஷ்ணுபுரமரபில் இருந்ததில்லை. இந்த மரபுகளை மீற விஷ்ணுபுரத்தை உருவாக்கிய அக்கினிதத்தனுக்கே அனுமதியில்லை. அதனால்தான் சிறுபிழை செய்த பெருந்தச்சனை அவனது இருகட்டை விரல்களும், கண்களும் பறிக்குமாறு மகாஞானி சூரியதத்தர் உத்தரவிடுகிறார்.

விஷ்ணுபுரத்தின் சிற்ப மரபுக்கும், கலை நுணுக்கத்திற்கும் பிரமிக்கத்தக்க பேரழகிற்கும் அடியில் சோனாவைப் போல் அல்லாமல் உண்மையான சிவப்புநிற ரத்த ஆறு ஒடிக்கொண்டே இருக்கிறது.

இராஜ கோபுரத்தில் இருந்து புறப்பட்டு வரும் காண்டாமணியின் சுவர்ண கண்டம் காற்றில் அசைந்து வருவதை அணுஅணுவாக உணரமுடிகிற நூலாசிரியனுக்கு கோபுரத்தின் அடியில் வெட்டுப்பட்டு விழுகிற கட்டைவிரல்களின் துடிப்பை உணரமுடியாமல் போகிறது. தாசித்தெருக்களில் விம்மிய முலைகளை பருகத்தவிக்கிற காவிய வரிகள் தேர்க்காலுக்கடியில் அறுபடுகிற தச்சர்களின் ஆணுறுப்புகளை பதிவுசெய்ய மறுக்கிறது.

000

நாவலின் மையப்பகுதியான கிருஷ்ணபட்சி பரீட்சை நடக்கும் விஷ்ணுபுரத்தின் ஞானசபைக்கு சமணர்கள்,பெளத்தர்கள்,சார்வாகர்கள்மீமாம்சகர்கள் என எல்லோரும் வருகிறார்கள். பிராமணீய வைதீக மரபு தனது ஞான பூமிக்குள் எல்லோரையும் எப்படி அனுமதித்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இதற்கு கதைசொல்லும் பாணன் ஒரு நல்ல விளக்கத்தை கொடுக்கிறான். ‘விஷ்ணுபுரத்தை எழுப்பிய அக்கினிதத்தன் காலத்தில் மனுஸ்ருமிதி இல்லை. யமஸ்ருமிதியே நிலவியது. அது ஞான சதஸூக்கு எல்லாச் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கிறது. ‘

மனுஸ்மிருதிக்கு முற்பட்ட காலத்திற்கே போய் ஞான சதஸூக்கு எல்லாச்சட்டங்களில் இருந்தும் விலக்குப் பெற்று வருகிறான் பாணன். ஆனால் அப்படி எல்லாச்¢சட்டங்களிலிருந்தும் விலக்குப் பெறப்பட்ட ஞானசபைக்குள் கடைசிவரை நீச சாதி மக்களையும், பெண்களையும்வரவிடாமல் சர்வ ஜாக்கிரதையாக தடுத்து வைத்துள்ளான். அதாவது மனுவின் காலத்திற்கும் முன்பே போய் தன்வர்ண விசுவாசத்திற்கு அடிக்கல்நாட்டி அக மகிழ்கிறான்.

முதுகுத்தோல் பிய்ந்து சிதிலமாக ரணம் பரவிக்கிடக்கிற போது சோமன் என்ற மறவன் சொல்வான் ‘ரணமல்ல அநீதிதான் மிகவும் வலி தருவது ‘ என்று. விஷ்ணுபுரத்தின் வலிமைக்கும், வளமைக்கும் காரணம் இந்த அநீதியும், ரணமும் அதை உக்கிரமாக பிடித்திருக்கும் வர்ணமும்தான்.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் சமூக கட்டுமானத்தின் நுகத்தடியில் சிதையுண்டு கிடந்த சக்திகள் கொஞ்சம் தலை நிமிர்கிற இந்த நேரத்தில் அதன்மீது எந்த கூச்சநாச்சமின்றி காவியரசத்தோடு காறி உமிழ்கிறது அநீதி.

000

‘விராட புருஷனின் குண்டலினி இது முழுமையாக எழுந்து சுடர் எழ வேண்டும். அந்த தங்கக் கொடிமரம் நெற்றிப்புள்ளியான சகஸ்ரவிந்து அங்கு ஞான வடிவமாகிய கிருஷ்ணபருந்து வந்து அமர வேண்டும். இந்த ஆலயத்தின் ஞான வழி திறக்கும். ‘ அப்போதுதான் ஞானசபை வெற்றியை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். இல்லையேல் கழுமரம் காணவேண்டும். இந்த விதிமுறைப்படி அக்கினிதத்தனனுருவாகிய ஞானசபையில்பவதத்தனின் முன்னிலையில் கிருஷ்ணபட்சி பரிட்சை நடக்கிறது.

வைதீக ஞானபூமியான விஷ்ணுபுரத்தின் திருக்கோயில் கதவு திறந்து அங்கீகரிப்பதே வெற்றி என்று போட்டியின் விதிகள் கூறுகின்றது. இந்த பிராமணீய நம்பிக்கைக்குள் நின்றுகொண்டு பெளத்தர்களும், சமணர்களும், சார்வாகர்களும் வாதாட எப்படி வந்தனர் என்பது இந்நாவலின் அடித்தளத்தையே உடைத்தெறிகிற கேள்வி.

ஞானமேடையில் தர்க்கம், தர்க்கம், தர்க்கம் மட்டுமேயான தர்க்கம். முடிவில் அக்கினிதத்தன் உருவாக்கிய சூத்திரக்கல்லை தன் தர்க்கத்தால் பிடுங்கி எறிகிறான் இளம் பெளத்த பிட்சு அஜீதன்.

நேற்றுவரை மடப்பள்ளிகளில் மலைமலையாய் சோறு குவியும்.உபவீதிகளில் ஏழைகளும் இரவலர்களும் வயிறு கொதிக்க தவித்தலைவார்கள். ஊட்டுப்புரைகளில் நெய்யமுதும் கனியமுதும் இறைபடும். எச்சில் இலைக்குவியல்கள் மீது நாய்களுடன் நிஷாதர் மல்லாடுவார்கள்.இப்போது காலம் மாறிவிட்டது. வீதிகளில் உழன்றுகொண்டிருந்த நீச சாதி மக்களுக்கு கோட்டைக் கதவு திறந்து விடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அவர்களுடைய காலம் வந்துவிட்டது. நகரின் இருண்ட தெருக்களில் தர்ம முரசம் முழங்குகிறது. இன்று முதல் எந்த மனித உயிரும் மதிப்பிற்குரிய விருந்தாளிதான் என்று பிரகடனப்படுத்துகிறது பெளத்தம்.

‘இந்த மாநகரம் வாள் வலிமையாலோ குலவலிமையாலோ நிலை நிற்கவில்லை. சொல்வலிமையால்தான் நிலைநிறுத்தப்படுவது ‘ எனச் சொல்லப்பட்ட விஷ்ணுபுரத்து ஞானசபையின் ‘சொல்லை ‘பிடுங்கி எரிகிறது பிராமணீயம்.அக்கினிதத்தனின் வம்ச ஞானியான பவதத்தனையே வெட்டிவீசுகிறது. தர்க்கத்தால் வெற்றி பெற்ற இளம் பெளத்த பிட்சு அஜீதனுக்கு எதிராக சதி அரங்கேறுகிறது. ஆதிக்கத்தை இழக்க நேரிடும்போது முழுக்கொடூரத்தையும் காட்டி நிற்கு பிராமணீயத்தின் ராட்சஷ உருவத்தை கொஞ்சமும் சித்தரிக்காமல்பளிச்சென தாவிச் செல்கிறான் கதை சொல்லும் பாணன்.

ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியக் கருத்தியல் உலகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிற பிராமணீயத்தின் கோரமுகம் முழுவடிவத்துடன்வெளிவருகிற இந்த இடத்தில் படைப்பின் நேர்மையை வர்ண விசுவாசத்துக்கு பலியிட்டு, அறத்தின் பேரால் அதுவரை நிகழ்த்தப்பட்ட அனைத்துக் கீழ்மைகளையும், வன்முறைகளையும் புறக்கதவின் வழியே தப்பிக்கவைத்து அகமகிழ்கிறான் கதை சொல்லும் பாணன்.

பசித்த வயிற்றையும், பொது உடமைகளையும், ஏழையின் ஏக்கப்பெருமூச்சையும் பேசிய பெளத்தனின் ஆட்சி பத்துப்பக்கங்களே எழுதப்படுகிறது. மீதி எல்லாப் பக்கங்களிலும் பஜகோவிந்தமே.

000

மேகங்கள்மீது மயன் கட்டிய கோவில், இங்கு தேவர்கள் மட்டுமே வரமுடியும். இது மகத்தான மாய நகரம். இதை பார்க்காதவர்கள் இப்படியொரு நகரம் உண்மையிலேயே இருக்கிறதென நம்பமாட்டார்கள். எல்லையற்ற நாதப் பெருவெளியில் நிரம்பி உள்ள நகரம். இங்கு பாயும் சோனா சாதாரண நதியல்ல. இதன் ஒளியும், நிறமும் வேறு எந்த நதிக்கும் கிடையாது. சோனாவின் காற்றுக்குக் கூட விசேஷ வேகமும் நேரமும் உண்டு.தினமும் காலையில் கோபுரத்தில் மோதி பிரகாரங்களில் சுழன்று ஆலயமணிகளை ஒவ்வொன்றாக அடிக்கும் அதிசயக் காற்று. இங்குள்ள மிருகநயினி ஒளிவீசும் தாவரம்.

இவ்வளவு அற்புத பேரழகு படைத்த விஷ்ணுபுரத்தை நாவலின் மூன்றாம் பாகத்தில் வெறிகொண்டு அழிக்கிறான் கதைசொல்லும்பாணன். இந்த அழிவுக்கும் ஆக்ரோஷத்திற்கும் என்ன காரணம் ? வைதீக எதிர்ப்பா ? இயற்கையின் சீற்றமா ? வெறும் ஊழியா ? எதுவும் இல்லை. ‘இந்தப் பிரளயத்தில் விஷ்ணுபுரம் அழியும் என்பது ஐதீகம் ‘.

எந்த ஐதீகத்தை நிலை நிறுத்த மகத்துவங்கள் அப்பிக்கிடக்கிற விஷ்ணுபுரம் அணுஅணுவாக செதுக்கப்பட்டதோ அதே ஐதீகத்தை நிலைநிறுத்தவே ஒரு கற்சிலைகூட மிஞ்சாமல் முழுமையாக நீரில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்த நாவலின் அத்தனைப் பக்கங்களுக்கும்அடியில் அதிர்ந்து கொண்டிருக்கிற ஒற்றைச் சொல் ‘ஐதீக வெறி ‘.

000

காலம், தத்துவம், தர்க்கம், காவிய மேன்மை, ஹரிதுங்காவின் பேரழகு, பிரளயத்தின் பேரழிவு, தாசித்தெருக்களில் பிறீட்டு வெளிவரும்காமக்கொப்புளங்கள், தேவபாஷையின் புனிதம், சோன நதியின் நெருப்பு வரிகள், வாள்போல் மின்னுகிற சொற்கள், யமஸ்மிருதியும்மனுஸ்மிருதியும் ஆன்மாவாய் இயங்கும் அத்தியாயங்கள் என அனைத்தும் கொண்டு வர்ண சிந்தனைகளையும், வைதீக மரபுகளையும்பணிவோடு ஏற்றுக்கொள்ள வைக்க நினைத்த ஜெயமோகனின் பச்சையான முயற்சியே விஷ்ணுபுரம்.

(மூன்று) பூர்வ மிமாம்சம், உத்திர மிமாம்சம் அல்லது வேதாந்தம், சாக்கியம், யோகம்,நியாயம், வைசேடிகம் ஆகிய ஆறும் (சட் தரிசனங்கள்) வேத தத்துவத்தை ஏற்றுக்கொண்ட வைதீக மதங்கள். வேத தத்துவத்தை ஏற்றுக்கொள்லாத அவைதீக மதங்கள் என அழைக்கப்படுவது லோகாயுதம், பெளத்தம், சமணம், அஜிவகம் ஆகிய நான்கும். வேதங்கள், பிரமனங்கள்,ஆரண்யங்கள்,உபநிடதங்கள், சூத்திரங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் ஆகியவை பிராமணீய இலக்கியங்கள்.

வேத சிந்தனையை ஏற்க மறுத்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பெருமளவு சிதைத்து அழிக்கப்பட்டுவிட்டன. வேதங்களை பிராமன நூலாக ஏற்றவர்கள் இவர்களுக்கு அளித்த பதிலில் இருந்தே அவைதீக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் பரவலாக அறியப்படுகிறது.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் இறுதி அல்லது சாரம் என்பது பொருள். வேதாந்த சூத்திரங்களுக்கு சங்கராச்சாரியார்,இராமானுஜ ஆச்சாரியார், நிம்பார்க்காச்சாரியார், மத்துவச்சாரியார், வல்லபாவ்வாரியார் ஆகிய ஐவரும் புகழ் பெற்ற உரையினை-மூலத்தை விட-சிறந்ததென கருதப்படுகிற உரையினை எழுதியுள்ளனர்.

வேதசூத்திரங்களுக்கு எழுதப்பட்ட உரைகள் கடவுளையும், ஆன்மாவையும் வெவ்வேறு வழிகளில் காண்கின்றன. ஆனால் உண்மையில்சங்கரரின் கண்ணோட்டம் ஒருவகையிலும், மற்ற நால்வரின் கண்ணோட்டம் ஒரு வகையிலும் அமைந்துள்ளன. வேதாந்த சூத்திரங்கள் அத்வைதத்தையே [உடல் வேறு உயிர் வேறு அல்ல.இரண்டும் ஒன்றே] போதிக்கிறது என்பது சங்கரரின் கருத்து. அத்வைத வேதாந்தத்திற்கு சங்கரரே முழு உருவம் கொடுக்கிறார்.

முதலில் குறிப்பிட்ட இணையதளக ¢கட்டுரையில் ஜெயமோகன் முன்வைக்கும் கருத்து ‘ஹெகல் இன்றி மார்க்ஸ் இல்லை என்பது போல சங்கரர் இன்றி நவீன மறுமலர்ச்சி சிந்தனைகள் இல்லை ‘ என்பது. இங்கு சங்கரரின் சிந்தனையில் ஜெயமோகன் காணுகிற நவீன மறுமலர்ச்சி என்ன என்பது குறித்து விளக்கப்படவில்லை.

உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்,பகவத் கீதை ஆகிய நூல்களுக்கு உரையும் வேறுபல நூல்களையும் எழுதிய சங்கரர் வைதீக தத்துவங்கள் வீழ்ச்சியடைந்த ஒருகாலக்கட்டத்தில் அதனை தூக்கி நிறுத்தியதில் பெரும் பங்காற்றியவர். இந்து மதத்தின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிற குப்தர்கள் காலத்தின் தொடர்ச்சியாக அந்த பொற்கால விளைவுகளுக்கு அடித்தளமாக இருந்தவர். சங்கரரின் அடிப்படை அம்சமே அறிவுநூல்கலையும், தர்க்கங்களையும் அடியோடு தகர்ப்பதுதான். தனது பெருமை படைத்த நூலை [பிரம்ம சூத்திர பாஷ்யம்] ஆரம்பிக்கும்போதே ‘பிராமணீயம் அறிவின் மூலங்களான சான்றுகள்- அளவைகள் எனப்படுபவை யாவுமே தான் கூறும் வேதாந்த தத்துவ ஞானத்தின் பயனற்றவையே ஆகும் ‘ என்கிறார்.

வர்ண அடுக்குகளை நியாயப்படுத்தியதிலும், நிலை நிறுத்தியதிலும் முக்கிய வினையாற்றிய சங்கரர் ‘சூத்திரனுக்கு வேத அத்யானம் இல்லாததனால்வித்தைகளுக்கு உரிமை கிடையாது. வேத அத்யானம் முடிந்து வேதப்பொருளை கிரகித்தவனையே வைதீக விசயத்தில் அதிகாரம் உள்ளவனாகக் கொள்வர். வேத அத்தியானத்திற்கு முன்னர் உபநயனம் செய்ய வேண்டியிருப்பதால் சூத்திரனுக்கு வேத அத்தியானம் இல்லை. உபநயனம் மூவர்ண விசயமாகும்….சூத்திரனுக்கு நாகரீகம் கிடையாது. சூத்திரன் நான்காவது வர்ணத்தவன். சூத்திரன்மூவருணத்தாரைப்போல இரு சாதியினன் அல்ல. ஒரே சாதியினன். சூத்திரனுக்கு உபநயனம் இல்லை என்பது சாரம். ‘ என்கிறார்.

‘ஒருபுறம் மிகுந்த ஜனநாயகத் தன்மை கொண்ட பிரமாயிசமும், மற்றொருபுறம் சாதிகளும், கிளைச்சாதிகளும், புறச்சாதிகளும், நாகரீகம் பெறாத பழங்குடிகளும், குற்றப் பரம்பரை பழங்குடிகளும் நிறைந்த ஒரு சமூகம் இருக்கிறது. இதைவிட பெரிய முரண்பாடு இருக்க முடியுமா ? இதைவிட நகைப்பிற்குரியது மகாசங்கராச்சாரியாரின் போதனைகள். பிரம்மா இருக்கிறார் என்றும், பிரம்மாதான் உண்மை என்றும் அவர் எல்லாவற்றிலும்நிறைந்துள்ளார் என்றும் போதித்தவர் சங்கராச்சாரியார்தான். அதே சமயம் பிராமணீய சமூகத்தின் எல்லா அநியாயங்களையும் அவர்ஆதரித்தார். ஒரு பைத்தியக்காரன் தான் இப்படிப்பட்ட இரண்டு முரண்பாடுகளை போதிப்பவனாக இருப்பதில் மகிழ்ச்சியடைய முடியும் என்கிறார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார்.

பைத்தியக்காரச்செயலென அம்பேத்காருக்குப் படுவது மறுமலர்ச்சி செயலென ஜெயமோகனுக்குப் படுகிறது. எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் உருக்கொள்கிறது. விளிம்பில் இருந்து பார்த்த அம்பேத்காருக்கு பைத்தியக்காரச் செயலென தெரிந்தது. மையத்திலிருந்து பார்க்கிற ஜெயமோகனுக்கு அந்த அதிகார மையத்தை வலுப்படுவதற்கான மறுமலர்ச்சி என்றே தெரியும்.

கருத்து முதல்வாதியாக ஹெகல் இருந்தாலும் எல்லாப்பொருளும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருப்பதை வலியுறுத்தும் இயக்கவியல்வாதியாகவும் இருந்தார். இந்த இயக்கவியல் தத்துவ ஞானத்தின் தொடர்ச்சியாக புரட்சிகர விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வந்தடைந்த ‘இடது ஹெகலியர்களில் ‘ ஒருவராக மார்க்ஸ் இருந்தார். ஹெகலின் தொடர்ச்சியே மார்க்ஸ் என்பது நிதர்சனம்.

ஆனால் சங்கரர் இன்றி நவீன மறுமலர்ச்சி இல்லை என்ற கருத்தானது மறுமலர்ச்சி என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வியோடு தொடர்புடையது. முழு உண்மையும் பொருந்துவதாகச் சொன்னால், சங்கரர் இன்றி நவீன பிராமணீயம் இல்லை. நவீன பிராமணியத்தை வந்தடைகிற பாதையையே மறுமலர்ச்சியேன வர்ணிக்கிறார் ஜெயமோகன். அதனால்தான் வர்ணக் கொள்கையையும் தீட்டையும் வெறியோடு முன்வைக்கிற அத்வைதத்தை ‘பக்தி சடங்கு ஆகியவற்றிற்கு எதிரான தூய அறிவாக ‘ இவரால் காணமுடிகிறது.

‘நமது பழமொழிகள் கணிசமானவை அத்வைத சார்பு கொண்டவை ‘ என்கிறார். இங்கு குறிப்பிடப்படுகின்ற ‘நமது ‘ என்ற அடைப்புக்குள்ளிருப்பது யார் ? வைதீகச் சிந்தனை துளியுமற்ற நாட்டுப்புற உழைக்கும் மக்களின் வாழ்வோடு பின்னிக்கிடக்கிற பழமொழிகளை,சொலவடைகளை இவர் அறிவாரா ? மத நிறுவனங்களின் பிடியில் சிக்கி அழிந்து விடாமல் இன்னும் தங்களின் பூர்வ அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் கூட்டத்தின் அடிநாதத்தை உணரமுடியுமா இவரால் ?

தூய அறிவு என்று ஜெயமோகனால் முன்வைக்கப்படுகிற அத்வைதம் இங்கு தன்னை நிலைநிறுத்த என்ன செய்தது ? மகாயான பெளத்தர்களிடமிருந்து தத்துவ ஞானங்களை ஏராளமாக திருடியது. அவர்களின் ஆதார அமைப்பான மடங்களை இதுவும் நிறுவியது. தேவி பிரசாத் சட்டோபத்தியாயா கூறுவது போல ‘சங்கரர் நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை, அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டவும், பரப்பவும் நிறுவினார், நல்ல உணர்வுடன் அவசியம் என்று கருதியே செய்த ஒன்று. இது மகாயானத்தை அப்படியே காப்பியடித்த செயல். மகாயான பெளத்தத்தை பெரிதும் வெறுப்பது போல் நடித்துக் கொண்டே சங்கரர் இதைச் செய்தார். ‘கடந்த 15 ஆண்டு தமிழ் கருத்துலகில் வைதீக மரபை பெரிது விமர்சிப்பவன் தான்தான் என்று நடித்துக் கொண்டே ஜெயமோகன் செய்து கொண்டிருப்பதைப் போல.

(நான்கு)

இரண்டாம் உலகப்போர் முடிவுற்றவுடன் 1945 நவம்பர் 20 முதல் 1946 அக்டோபர் 1ம் தேதி வரை நியூரென்பர்கில் இராணுவக் குற்றவாளிகள்மீது நீதிவிசாரணை நடந்தது. 50 மில்லியனுக்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும 4 திரில்லியன் டாலர் பொருட்சேதத்துக்கும்காரணமான இந்த யுத்தம் குறித்த விசாரணையில்தான் வரலாற்றில் முதன்முறையாக குற்றவாளிகள் மட்டுமின்றி அவர்கள் தோற்றுவித்த நிறுவனங்கள், மனிதவெறுப்புத் தத்துவங்கள், கருத்துக்கள் ஆகியவையும் விசாரித்து வெட்டவெளிச்சமாக்கப்பட்டன.

பாசிசத்தின் மனிதவெறுப்புச் சாரத்தையும், பல லட்சக்கணக்கான மனித உயிர்களை அழித்துக் கட்டவும், அவர்களை பாதுகாக்கும்கருத்துக்களை ஒழித்துக்கட்டவும், ஜெர்மானிய இராணுவ வெறியின் ஆக்கிரமிப்புச் சாரத்தையும், குரூரமிக்க இனவெறியையும்சோஷலிஷ அரசை ஒழித்துக்கட்ட அது கொண்டிருந்த நாட்டத்தையும் நியூரென்பர்க் விசாரணை உலகுக்குமுன் அம்பலப்படுத்தியது.

ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பின் நியூரென்பர்க் விசாரணையில் அம்பலமான பாசிச மனப்பதிவுகளை, கொடூரமான அடிப்படைவாத வெறியை , வரலாற்றின் இருள் அடுக்குகளின் வழியே இரகசியமாய் எடுத்துவந்து நிகழ்காலச் சாயம் பூசி இலக்கியம் என்ற போர்வைக்குள் இருந்து பின்தொடரும் நிழலின் குரலென முன்வைத்திருக்கிறார் ஜெயமோகன்.

கம்யூனிச சித்தாந்தம் அறிமுகமான இந்த 150 ஆண்டுகளில் உலகமெங்கும் அதன்மீது எதிரிகளும் , கோழைகளும் நெஞ்சுப் பொறுக்கமுடியாமல் காறி உமிழ்ந்தது கொஞ்ச நஞ்சமல்ல. அந்த உமிழ்நீரையெல்லாம் சேகரிப்பதில் ஜெயமோகனுக்கு உள்ள ஆர்வமும், ஈடுபாடும் நம்மை பிரமிக்க வைக்கிறது. சேகரித்த உமிழ்நீரை ஒரு டப்பாவில் அடைத்து தன் பங்கிற்கு தினமும் காலை எழுந்து பல்துலக்காமல் காறிக் காறி உமிழ்ந்திருக்கிறார்.நீரின் கொள்ளளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த பெரும்பாடு பட்டிருக்கிறார். உலக உமிழ்நீரும், உள்ளூர் உமிழ் நீரும் கலக்கிற பொழுது வரும் சகிக்க முடியாத துர்நாற்றத்தின் ஊடே இவரது மனம் ஆனந்தவயப்படுகிறது. மேலெழுகிறது. புதிய தரிசனங்களைத் தொடுகிறது. உலக உமிழ்நீருக்கு ஈடாக தன் தொண்டையில் சுரந்த நீர் இருப்பதை நினைத்து ஆங்காரமடைகிறது இவரது சுயம். 723 பக்கங்களில், மேப்லித்தோ தாளில் 10புள்ளி எழுத்துக்களில் காலிக்கோ கட்டுக்குள் உமிழ்நீரை அடைப்பதென்ன சாதாரண பணியா ? எல்லாக் கட்டுக்களையும் உடைத்து உமிழ்நீர் வாசியாக தன்னை நிரூபித்துள்ள கணம் இவரது வாழ்வையே திருப்தி கொள்ள வைக்கிற கணமல்லவா ?

நினைக்கும் பொழுதே குமட்டலெடுக்கிற இந்தக் குரூரச் செயலின் உச்சம் இந்த உமிழ்நீர் டப்பாவுக்கு வள்ளுவனின் வரிகளை லேபிள் ஆக்கியதும், மாமனிதன் லேவ் தால்ஸ்தோய்க்கு இதனை காணிக்கையாக்கியதும்.

தேனிலவு நாளில் விஷ்ணுபுரம் குறித்து பேசுவதும், மனப் பிறழ்வில் இருந்து மீண்டுகொண்டிருக்கிற அருணாச்சலத்திற்கு விஷ்ணுபுரத்தை படிக்கக் கொடுப்பதும் எவ்வளவு வக்கிரம் மிகுந்த துணிகர செயல்! இந்த செயல்களை நிகழ்த்தி பழக்கப்பட்ட மனம்தான் உமிழ்நீர் டப்பாவை லேவ்தால்ஸ்தோய்க்கு சமர்ப்பிக்கும்.

000

‘கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒளிபெற்ற வரிகளுக்கு ஒப்பு சொல்லத்தக்க தகுதி படைத்த பத்து வரியை நூறு வருட மார்க்சீய அறிவியக்கத்தால் உருவாக்க முடியவில்லை ‘ என்பது ஜெயமோகனின் கண்டுபிடிப்பு. கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒளிபெற்று அதைவிட மகத்தான ஒளிபொருந்திய வாழ்வையும், வரலாற்றையும் உலகில் நிதர்சனமாக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதகுலத்தின் கனவில் மட்டும் இருந்த ‘அற்புத ஒளியை ‘ 1917ல் நடைபெற்ற ருஷ்யப் புரட்சி நிதர்சன ஒளியாக மாற்றியது, அந்தப் புரட்சி தன்னைக் காத்து நிலைநிறுத்திக் கொள்ள பட்ட துன்பங்கள், அடைந்த இழப்புகள் ஏராளம். 1917 முதல் 1921 வரை நான்கு ஆண்டுகாலம் நடைபெற்ற போரின் இறுதியில் சோஷலிசத்தின் முதல் குழந்தை மீட்கப்பட்ட பொழுது ருஷ்யாவின் கிராமங்கள் தோறும் எஞ்சியது சில ஆடவர்கள் மட்டுமே.

ஆனால் இந்தப் புரட்சி மனிதகுலத்திற்கு தந்தது ஏராளம்.உலக வரலாறு தன்னை பூரிப்போடு பதிவுசெய்து கொண்ட நாட்கள் அவை. இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகள், அடிமைப்பட்ட நாடுகளின் வீரஞ்செறிந்த அரசியல் பயணத்திற்கு ருஷ்யா தந்த ஆன்ம பலத்திற்கு இணை வேறு உண்டா ? மனிதகுலத்தின் மகோன்னத பூமியாக சோவியத் மண் மாற்றப்பட்டபொழுது உலகமெங்கும் மனித மனங்களில் அது பாய்ச்சிய ஒளிச்சுடருக்கு நிகருண்டா ? வரலாறு எழுதப்படாத இடத்திலிருந்து எழுதப்பட்டபொழுது அதுவரை எழுதப்பட்ட வரலாறுகளெல்லாம்வெட்கித்தலைகுனிந்ததல்லவா ?¢

சுரண்டலையும்,ஆதிக்க ஆட்சிமுறையையும் தூக்கி வீசி உழைக்கும் மக்களின் நலன் காக்கவும், மனிதகுல மேம்பாட்டுக்காகவும்வழிவகுத்த அந்த யுகப்புரட்சி கம்பீரமாக பயணம் செய்த சில ஆண்டுகளிலேயே -1930களின் இறுதியில்- பூமிப்பந்தையே அஞ்சி நடுங்கச் செய்த பாசிச ஹிட்லரின் இராணுவ அணிவகுப்பை சோஷலிசத் தாயகம் தன்னந்தனியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இதுவரை படைக்கப்பெற்ற அத்தனை இலக்கியங்களின் வீரகதைகளுக்கும் நிகரான மெய்சிலிர்க்கும் தியாக வரலாற்றை அந்த யுத்தத்தில் சோவியத் மக்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்.

உலகமே யுத்தத்தின் முடிவை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தது. மன்னர்கள், ஆட்சியாளர்கள், முதலாளிகள், கலைஞர்கள், சாமனியர்கள் என எல்லோரும் யுத்தத்தின் கண்கொண்டே அளக்கப்பட்டார்கள். மனசாட்சி கொண்ட மனிதர்கள் எல்லோரும் சோவியத் படையின் நகர்வுகள்குறித்து மனம் அதிர காத்துக் கிடந்தார்கள்.மகாகவி தாகூர் மரணப் படுக்கையில் இருக்கும்போது கூட போர்முனைச் செய்தி பற்றியே கடைசிவரை கேட்டுக்கொண்டிருந்தார். ‘ருஷ்யா வெற்றியடைந்தால் மற்ற எல்லோரைக் காட்டிலும் நான் அதிகமான மகிழ்ச்சியடைவேன் ‘ என்று திரும்ப திரும்ப கூறினார்.

இந்த பாசிச சர்வாதிகாரியின் கையால் உலக சரித்திரம் எழுதப்பட இருந்ததை தடுக்க சோவியத் மக்கள் தந்த விலை கொஞ்சமா ? 1945 ஏப்ரல் முதல் மே 8 வரையான காலக் கட்டத்தில் மட்டும் கொல்லப்பட்ட செஞ்சேனை வீரர்கள் 3 லட்சம் பேர். இந்த வீரச்சமரின்இறுதியில் 1945 மே 8ம் நாள் ஜெர்மன் வீழ்ந்தது. மனித குலத்தின் குரல்வளையை நெருக்கிகொண்டிருந்த இராட்சஷனின் கரத்தை பெர்லினில் நடப்பட்ட செங்கொடி வெட்டி வீழ்த்தியது. பிரபல ஜெர்மானிய எழுத்தாளர். தோமஸ் மான் அந்த நாளில் எழுதினார். ‘பேய் ஒன்று கொல்லப்பட்ட இன்னேரம் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமின்றி ஜெர்மனிக்கும் மகத்தானதாகும். தேசீய சோஷலிசம் என்ற பயங்கரமான அசாதாரணமான ஒரு விபரீதம் உயிழந்தது. ஜெர்மனியானது குறைந்த பட்சம் ஹிட்லரின் நாடு என்றழைக்கப்படும் ஒரு சாபத்திலிருந்து தப்பியது ‘.

இருபதாம் நூற்றாண்டில் இந்த யுத்த வெற்றிக்கு நிகரான பரிசு மனித குலத்துக்கு வேறென்ன ? அதன்பின் உலகமெங்கும் ‘மக்கள் நல அரசுகள் ‘ உதயமாக வேறென்ன காரணம் ? முதலாளித்துவத்தின் வள்ளல் மனப்பாங்கா ?¢ ஆன்மிகக் கருணையா ? எல்லாம் உருவானது ஒரு சித்தாந்தத்தின் ஒளிச்சுடரால். அதை நடைமுறைப்படுத்திய மக்களில் தியாகக் கனலால்.

பழைய புராணங்களில் எல்லாம் ஒரு மிகப் பெரிய போருக்கு பின்பு சூன்யங்களும் , விரக்தியுமே நாயகர்களை பி ன் தொடரும் நிழலாய் விரட்டுகிறது. விளிம்புகளில் கொண்டுபோய் நிறுத்தி வேறெதையோ தேடச்செய்கிறது. ராமரும் , பாண்டவர்களும் தங்கள் அந்திமத்தை இப்படித்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒரு பெரும் புயலுக்கு பின்பு வரும் அமைதியெனவும், அதுதான் சாந்தியின் வலிமை எனவும் ஆன்மீகவாதிகள் சித்தரித்து வந்தார்கள். சோவியத் புரட்சி இதையும் தகர்த்து எறிந்து ரத்த சாட்சியாய் நின்றது. ஒரு மக்கள் யுத்தத்திற்குப் பிறகு , பேரழிவுக்குப் பிறகு அமைதியில் வாழ்வை தேடுவதற்குப் பதிலாக,வாழ்வில் அமைதி காண முயற்சித்தது. அவர்கள் தேர்ந்தெடுத்த தத்துவம் அதற்கு அடித்தளமானது..

000

இன்று சோவியத் ரஷ்யா இல்லை. வேறு பல சோஷலிச நாடுகளும் இல்லை. சோஷலிச முகாமிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சோவியத் ரஷ்யாவிலும் பிற சோஷலிச நாடுகளிலும் கிடைத்துள்ள அனுபவத்தின் அடிப்படையில் தன்னை முழுமையாக பரிசீலனைக்கு உட்படுத்தாத கம்யூனிஸ்ட் இருக்க மாட்டான். அப்படி இருப்பானேயானால் அவன் கம்யூனிஸ்ட்டாக இருக்க மாட்டான். இந்த பேரிழப்பிற்கு ஈடான பேரனுபவத்தை கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தத்துவம் என்ற முறையில் அது நடைமுறைப்படுத்தும்போது வரும் தவறுகளையும், வீழ்ச்சிகளையும் அனுபவ அடிப்படையில் மீண்டும் உள்வாங்கிக் கொள்ளும் சுயபலம் மார்க்சீயத்திற்கு உண்டு.

சோஷலிசத்தை நிர்மாணிக்க இதுவரை யாரும் செல்லாத ஒரு பழக்கமில்லாத வழியில் சென்றதால், சோவியத் யூனியனும் மற்ற சோஷலிச நாடுகளும் சில மோசமான தவறுகளைச் செய்தன. சோஷலிசத்தை நிர்மாணிப்பதில் உள்ள நீண்ட காலத் தன்மையைச் சரிவரப் புரிந்து கொள்ளாததினாலும் கட்சியின் பங்கு மற்றும் அரசு பற்றிய தவறான கண்ணோட்டத்தினாலும், பொருளாதார மாற்றத்தினை உரிய காலத்தில் செய்யாததினாலும், பொருளாதாரத்தை சரியாக நிர்வகிக்காததாலும், சோஷலிச ஜனநாயகத்தை வலுப்படுத்தத் தவறியதாலும், தத்துவார்த்த உணர்வு மட்டத்தில் ஏற்பட்டுள்ள சிதைவுகளினாலும் இந்தத் தவறுகள் ஏற்பட்டன. சோஷலிசத்தை சிதைக்க ஏகாதிபத்தியம் எடுத்து வந்த தொடர்ச்சியான முயற்சிக்கு இந்த தவறுகள் உதவின. இத்தகையத் தவறுகளால் மார்க்சீய லெனீய கோட்பாடுகள் செல்லத்தக்கவை அல்ல என்றாகிவிடாது. மாறாக இவை புரட்சிகர தத்துவம் மற்றும் நடைமுறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவாகவே என்பதைக் காட்டுகின்றன….கம்யூனிச இயக்கமும், புரட்சிகர சக்திகளும் இந்த தவறுகளிலிருந்து படிப்பினையை கற்றுக்கொண்டு, மீண்டும் அணி சேர்ந்து ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்குச் சக்திகள் தொடுக்கும் தாக்குதல்களின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்.மீண்டும் முன்னைக் காட்டிலும் ஒளிபொருந்திய ஒரு சமூகத்தை நிர்மாணிக்கும்.அதிலும் புதிய தவறுகள் ஏற்படலாம். ஒரு பின்னடைவு உருவாகலாம். அந்த அனுபவங்களிலிருந்து சமூகம்பாடமும் உரமும் பெற்று மேலும் முன்னேறும்.1887ல் உருவான பாரீஸ் கம்யூன் 70 நாட்களே ஆயுள் கொண்டிருந்தது. அதன் அனுபவத்தை உள்வாங்கி 1917ல் உதயமான சோவியத் கம்யூன் 70 ஆண்டுகாலம் நீடித்தது. இப்போது அந்த அனுபவங்களை தோளில் சுமந்து உலகம் பயனம் செய்து கொண்டிருக்கிறது நம்பிக்கையோடு.

000

நான் சோஷலிசத்தின் தீமைகளை சொல்லப் போகிறேன். ஸ்டாலினிச அழிவுகளை சொல்லப் போகிறேன் என்று கிளம்பி பாசிசம், நாசிசம், ஸ்டாலினிசம் என்று மூன்றையும் ஒரே நேர்கோட்டில் வைத்து ஜெயமோகன் எழுதியுள்ள இந்த நாவல் இரண்டு காலக் கட்டங்களில் நடக்கிறது. அந்த இரண்டு காலக்கட்டத்தையும் நேர்மையோடு பதிவு செய்திருக்கிறரா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

(1)1940 களில் மனித குலத்தையே இரத்தச் சாக்காட்டில் புதைத்த ஜெர்மானிய பாசிசத்தின் கொடூர உருவத்தை துளியும் பதிவு செய்யாமல் அந்தப் பேரழிவில் இருந்து, விலை மதிக்க முடியாத தியாகங்கள் மூலம் மனித குலத்தை மீட்ட சோஷலிச மண்ணையும், அதனுடைய செஞ்சேனையின் வீரப்புதல்வர்களையும் தலைமை தாங்கி நடத்திய ஸ்டாலினையும் சகலவிதத்திலும் கொடூரமாக தாக்கி கேவலப் படுத்தியுள்ளார் ஜெயமோகன் -1940களில் ஜெர்மானிய பாசிஸ்டுகள் செய்துள்ளதைப் போலவே.

(2)1980-90 களில் இந்தியாவில் இந்து மதவெறிக் கூட்டம் அரசியல் அதிகாரத்தை பிடிக்க நிகழ்த்திய கோரத்தாண்டவங்கள்தான் எத்தனை ?. ரத யாத்திரை, கரசேவை, மசூதிகள் இடிப்பு, பள்ளிவாசல்கள் இடிப்பு, பாதிரி உயிரோடு எரித்துக் கொலை, கன்னியாஸ்திரிகள் மீது பாலியல் பலாத்காரம் என்று இவர்கள் செய்ததெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இவைகள் குறித்து சிறிதும் பேசமல் மதவாதம் என்ற பூச்சாண்டியை கம்யூனிஸ்டுகள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படி ஒன்றுமில்லை எனச் சொல்லி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும் அதன் தலைவர்கள்மீதும் தாறுமாறாக பாய்கிறார் ஜெயமோகன்.

‘இந்தியாவை இந்து மயமாக்குவோம், இந்து மதத்தை இராணுவ மயமாக்குவோம் ‘ எனப் பிரகடனப் படுத்தி 1925ல் துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இன்று பாசிச விஷக்காற்றை இந்தியாவெங்கும் ஊதிப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்லாமும், கம்யூனிசமும் இராணுவத்தையே நம்பி இருப்பதாகவும் மூலதனம் மற்றும் குரானின் கொலைத் தேவைகள் கனக்கில் அடங்காதது என்றும் மூலதனத்தின் தேவை இப்பொழுது முடிந்திருக்கிறதென்றும் குரானின் தேவை இன்னும் நூறுவருடம் இருக்குமென்று வெறிபிடித்து எழுதிப் போகிறார். கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது இவர் ஏன் இவ்வளவு வெறுப்பை கக்க வேண்டும் ?

இந்தியாவில் ஓரு கும்பலுக்கு கம்யூனிஸ்டுகளும், இஸ்லாமியர்களும் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்- ஹிட்லருக்கு யூதர்கள் தேவைப்பட்டதைப் போல.

000

‘கே,கே.எம் மிகுந்த தைரியசாலி என்று இளம் வயதிலேயே பேரெடுத்தவர்.திருவிதாங்கூர் அரசு அவரை திருவனந்தபுரம் ஜெயிலிலே வைத்திருந்தபொழுது லாண்டரி மூட்டைகளுடன் அமர்ந்து தப்பினார். தோட்டங்களை நடத்திவந்த கங்காணிகளும், ரெளடிகளும் அவரை உள்ளூர அஞ்சினர். தோழர்.கே.கே.எம் தனிமனிதனாக இருண்ட காடுகளை ஊடுருவி ரப்பர்த் தோட்டத் தொழிலாளிகளை இணைத்து சங்கத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார். இன்று ஒன்றரை லட்சம் உறுப்பினர்களுடன் விரிந்து கிடக்கும் சங்கம் உண்மையில் அவருடைய தனிப்பட்ட சாதனைதான். அறுபது வருட கால உழைப்பிற்குப் பிறகு அவருக்கு உடமை என்று உடைகளைத் தவிர ஏதுமல்ல ‘ இவ்வளவு பெருமைகளுடைய கே.கே.எம் நாவலின் முக்கியப் பாத்திரம். அறுபதாண்டு இயக்க வாழ்க்கைக்குப் பின் கடைசியாக கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துபவராக மாறுகிறார். கிருஷ்ண லீலா நாடகத்தில் குசேலர் வேடமேற்று நடித்து பாபவிமோசனம் பெறுகிறார்.

இயக்கத்தில் கே.கே.எம்மிற்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர் அருணாச்சலம். பல ஆண்டுகளாக சங்க வாழ்க்கை, கட்சி வாழ்க்கையென வாழ்ந்த அருணாச்சலம் கடைசியில் பைத்தியமடைகிறார். பின் பைத்தியத்தில் இருந்து மீண்டு பெளர்ணமிகளில் திருவெட்டாறு ஆற்றுமணலில் சமஸ்தாபராத பூஜைக்கு ஏற்பாடு செய்பவராக மாறுகிறார். மூன்று நாள் உபவாசமிருந்து குளிர்ந்த நீரில் குளித்து மணற்பரப்பில் அடுப்புச் சுவாலையுடன் ஈர உடையுடன் சமையல் செய்து ஒன்பது வகை உணவுகளை சமைத்து பறிமாறி வாய்க்கரிசி படைத்து, கணியார் மந்திரங்களைச் சொல்லி முழுச்சடங்கும் நிகழ்த்தி பலிச்சோற்றை ஆற்றிவிட்டு பரிகாரம் பெறும் நபராக மாறுகிறார்.

நாவலின் கடைசிப்பக்கம் ஜெயமோகன் அருணாச்சலத்திற்கு எழுதும் கடிதத்துடன் முடிகிறது. அந்தக் கடிதத்திலும் ‘விடையாக ஆளுக்கொரு கனவினை அல்லது குறியீட்டை உருவாக்கிக் கொள்கிறீர்கள். அது உங்களை ஆறவைத்து இக உலகில் இம்சையின்றி மேலும் வாழ வழிவகுக்கிறது, பரிகாரங்களினூடாகவே மண்ணில் நாம் வாழ்கிறோம் இல்லையா ? அந்த ஆவுடைலிங்கத்தையும், சமஸ்தாபராத பூஜையையும் கண்டுபிடிக்காவிட்டால் நீங்களும் ஒரு சந்தையில் செத்துக் கிடக்க வேண்டியதுதான். பாவம் வார்னீஸ் வீரபத்திர பிள்ளை, கடைசி வரை அவருக்கு முழு திருப்தி தரும் படிமம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியவே இல்லை ‘ என்று எழுதுகிறார்.

‘இக உலகில் இம்சையின்றி வாழ ‘ இந்த நாவலின் முக்கியப் பாத்திரங்கள் அனைத்தும் ஆண்டவனிடத்திலும், மதத்திலும் தஞ்சமடைய வைக்கிறார்ஜெயமோகன். குழந்தை அம்மாவிடம் ஓடுவதைப்போல அத்தனைக் கதாப்பாத்திரங்களும் மதத்தை நோக்கி, ஆண்டவனை நோக்கி ஓடிவருகிறது ‘ என்று பூரிப்படைகிறார்.

இங்குதான் இவரது அத்வைதம் அம்மணமாகிறது. வாழ்வைவிட்டு புறமுதுகு காட்டி ஒடுபவர்களே இவருக்கு உதாரண புருஷர்களாகி விடுகிறார்கள். தங்களோடு இந்த உலகம் ஆரம்பித்து தங்களோடு இந்த உலகம் முடிந்துவிடுகிறது என்கிற மனஓட்டமே, அறிவுத் தளர்ச்சியே இயக்கத்தின்கதவுகளை மூடிவிடுகிறது; நம்பிக்கையின் ஊற்றுக்களை அடைத்துவிடுகிறது. நின்றுபோனவர்கள் தங்களைச் சூழும் வெறுமையில் யாரையாவது, எதையாவது கொண்டு நிரப்பி அதில் மூழ்கி விடுகிறார்கள். அந்த யாராவது, எதையாவது என்பது குடும்பமாக இருக்கலாம்..அனாதைக் குழந்தைகளாக..ஒரு மதுக் கோப்பையாக இருக்கலாம். ஜெயமோகனுக்கு அந்த இடத்தில் வேகவேகமாக கிருஷ்ணனையும், ஆவுடைலிங்கத்தையும் கொண்டுபோய்வைத்துவிட்டு (பாபர் மசூதியில் ராமரை வைத்தது போல) ‘பாருங்கள்..பாருங்கள் ‘ என்று நான்கு திசைகளிலும் சுழன்று சுழன்று வேடிக்கை காட்டுகிறார்.அவர் ஒன்றை மறந்து விடுகிறார். கே,கே.எம்மும், அருணாச்சலமும் கரை ஒதுங்கும் அலைகளே. ஆனால் நதி என்பது ஜீவனோடு நகர்ந்து கொண்டேதானிருக்கும்.

மார்க்சின் படுக்கையறை, ஸ்டாலினின் அந்தப்புரம், லெனினின் பிரெஞ்சுக்காதலி என பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான தலைவர்களை கேவலப்படுத்தி-ஜோசி,பி.டி.ஆர், இ.எம்.எஸ், சுர்ஜித் போன்ற இந்தியாவின் பொதுவுடமை இயக்கத் தலைவர்களை யெல்லாம் கீழ்மைப்படுத்தி- தியாகம், செங்கொடி, சிகாகோ நகரத்தெரு, ‘ இன்குலாப் ஜிந்தாபாத ‘¢ போன்ற வீரமிக்க குறியீடுகளையும், முழக்கங்களையும், கேலியும்கிண்டலும் செய்து-கடைசியாக கட்சித்தலைவர்களையெல்லாம் கொண்டு போய் மதத்திலே சேர்த்து ‘அப்பாடா ‘ என்று பெருமூச்சுவிடுகிறார் ஜெயமோகன்.

ஆட்டோக்காரனாக, அத்வைதியாக, நீதிமானாக, படைப்பாளியாக என்னென்ன வேஷமெல்லாமோ அணிந்து வருகிற ஜெயமோகன் தன் ‘மூல உருவத்துடன் ‘ வெளிவருகிற நேர்மையை கற்றுக் கொள்ள வேண்டும். தாழ்ந்து போன ஒரு பிச்சைக் காரனிடமிருந்து கூட அதனைக் கற்றுக் கொள்ளலாம்.

‘ஒரு முதிரா பழங்குடி சமூகம் கூட மார்க்சீயத்தை விட அதிகமாக மெய்யிலைக் கொண்டிருக்கும் ‘ என எழுத அவருக்கு உரிமையிருக்கிறது. பிச்சைக்காரனிடம் இருக்கும் மெய்யியல் கூட ஒரு எழுத்தாளனிடம் இல்லாதது குறித்து வேதனையடைய எல்லோருக்கும் இருக்கும் உரிமையைப் போல.

(ஐந்து)

‘ஈ.வே.ரா ஒரு இந்து ரிஷி ‘ எனச் சித்தரிக்கும் பல நூறு மேற்கோள்களை திரட்டி வைத்திருக்கும் நண்பர் ஒருவர் ஜெயமோகனுக்கு உண்டு. நண்பனைப் பற்றிச் சொல். அவனைப் பற்றி புரிந்து கொள்ள என்ற பழமொழியும் உண்டு. நண்பனை விட சளைத்தவரல்ல ஜெயமோகன்என்பதைக் காட்டத்தான் முதலிலே குறிப்பிட்ட இணையதளக் கட்டுரையில் பெரியார் மீது வாரி வாரி இறைத்திருக்கிறார்.

‘ஈ.வே.ரா எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப் பற்றி அவருடைய ஞானம் மிகமிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம், பொதுவுடமை குறித்துப்பேசுகிறார். அதைப்பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அதைப்பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற்கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காணமுடியாது. அவர் மதம் குறித்தும் கடவுள் குறித்தும்பேசுகிறார். ஆனால் அவை குறித்து அவரது புரிதல் மிகச்சாதாரணமானது ‘ என்பதெல்லாம் ஜெயமோகனின் கண்டுபிடிப்பு.

தமிழக பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்ப நாட்களில் பொதுவுடமை சமத்துவம் குறித்த சிந்தனைகளை முதன்முதலில் உரக்கப்பேசியவர் பெரியார். பெரியார் சிங்காரவேலர் உறவு தமிழக இடதுசாரி அரசியல் வரலாற்றின் துவக்க நாட்களில் மிகமுக்கிய பாத்திரம்வகித்தது. அந்த சித்தாந்தத்தின்பால் ஆழமிக்க ஈர்ப்பினை கொண்டிருந்தார் பெரியார். 1930களில் எழுந்த புதிய நெருக்கடிகளையொட்டி சமத்துவ, பொதுவுடமை கருத்துக்களில் இருந்து தன்னையும் தனது இயக்கத்தையும் விலக்கிக் கொண்டார்.

‘இன்றைய சர்க்கார் வெள்ளைக்காரர், பார்ப்பனர், பணக்காரர் ஆகிய மூவருடைய கூட்டு வியாபாரமாய் நடைபெறுகிறது. இம்மூன்று கூட்டமும் ஏழைகளுக்கு நன்மை செய்யவோ, தீண்டாமையை விலக்கவோ சுலபத்தில் சம்மதிக்குமா ? ‘ என்று 1929ல் கேட்ட பெரயார்¢ பின்ால் மேற்சொன்னதில் ஒரு எதிரியை மட்டும் தேர்வு செய்து தனது அரசியல் பயணத்தைநடத்தினார். இந்த செயல் குறித்து பெரியார் மீதான கம்யூனிஸ்டுகளின் விமர்சனம் எப்பொழுதும் பொருந்தும்.

ஆனால் தொழிலாளர் இயக்கங்களுக்கு எதிர் சிந்தனையுடன் பெரியார் இருந்தார் என்பது ஜெயமோகனின் நோக்கம் சார்ந்த கருத்தாகும். தமிழக அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த பெரியாரின் செயலும், சிந்தனையும்தொழிலாளர் இயக்க அரசியல் பாதைக்கு வலுமிக்க பங்களிப்பினை செலுத்தியுள்ளது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

‘மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது.கண்ணில்படக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. கோவிலுக்குள் போகக்கூடாது. குளத்தில் தண்னீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குளம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யவோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சாண்டமாருதத்தால் துகலாக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும்சர்வதயாபரர் என்று யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்ன வென்று நினைப்பது நீங்களே முடிவு செய்யுங்கள் ‘ என்று கூறிய பெரியார்தனது கடைசி பிறந்த நாளில் கூட ‘நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகிற ஒரு தொண்டனாவேன் அதாவது சாதி அமைப்பை அடியோடு அழிக்கபாடுபடுவேன்.. சாதி அமைப்பு என்பது கடவுள் மதம் மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும்என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுவேன் ‘ என முழங்கினார்.

மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் துறை என்பதாக ஒரு துறையை சர்க்கார் ஏற்படுத்தி அதன்மூலம் பள்ளிகளிலும், பொது இடங்கலிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சாரம் செய்ய வகை செய்தாலொழிய மதக் கேடும், சாதிக் கேடும், சாத்திரப் புராணக்கேடும் ஒரு நாளும் நமது நாட்டை-சமுதாயத்தை விட்டு ஒழியப்போவதில்லை ‘ என்று கூறிய பெரியார் சாதி, மதம்,கடவுள் ஆகியவற்றின் ஆணிவேரை பிடுங்கி எரியும் பணியை மிக உக்கிரத்தோடு நடத்தியவர். தனக்குச் சரி என்று பட்டதை துணிந்து செயல்படுத்தினார. அவரின் அணுகுமுறை மற்றும் கையாளும் உத்திகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள்கூட அவரின் நோக்கத்தை பெரிதும் மதித்தனர். சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தியலை தமிழ்ச்சமூகத்தில் நிலை நிறுத்தியதில் பெரியாரின் பங்களிப்புக் குறித்து இரண்டு கருத்துக்கு வாய்ப்பே இல்லை-சனாதான வாதிகளைத் தவிர.

‘சாதி என்பது பிராமணச் சதி என்று ஒற்றை வரியில் புரிந்து கொண்ட ஈ.வே.ரா உண்மையில் சாதியின் எடையின் அடித்தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துகளை ஏமாற்றினார் ‘ என்கிறார் ஜெயமோகன் . ‘பறையர் என்ற இழிவு நீங்காமல் சூத்திரர் என்ற இழிவு நீங்காது ‘ எனக் கருதிய பெரியாரின் அடிப்படைக் கோட்பாடான வர்ணாசிரம எதிர்ப்பு சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு போன்றவையெல்லாம் தலீத் விடுதலைக்கான கருத்தியலன்றி வேறென்ன ? ஒற்றை வரியில் புரிந்து கொண்டாலும் நூறு வரியில் புரிந்து கொண்டாலும சாதி என்பது பிராமணச் சதியே. இவ்வலவு காலம் கழித்தும் விழுங்க முடியாத ஆலகால விஷயமாக சிலருக்கு இருக்கிறது இந்தக் கருத்து.

பிற்படுத்தப்பட்ட மக்களை தலித் மக்களின் பிரதான எதிரியாக காட்ட முயற்சிக்கும் ஜெயமோகனின் சிந்தனை பிராமணீயத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில் இருந்து பெறப்பட்டதாகும். இன்றைய காலக் கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியும் தலித் பகுதியும்தான் சாதீய மோதலின் பிரதான களமாக இருக்கிறது.ஆனால் இதனுடைய கருத்தியல் உள்ளடக்கம் பிராமணீயமே.சமூக வாழ்வில் புதைந்து கிடக்கும் வர்ணாசிரமத்தின் நரம்புகளை அறுத்து எரிவதே சாதீயக் கட்டுமானத்தின் சிதைவினை சாத்தியப்படுத்தும்.

பொது உடைமை இயக்க கருத்தினையும், தலீத்தியக் கருத்தினையும், பெரியாரீயக் கருத்துக்கு எதிராக நிறுத்த படாதபடும் ஜெயமோகன் ஆசைக்கு ஏற்ப கருத்துக்களை நகர்த்துவதை விட்டுவிட்டு உண்மைக்கு அருகில் வர கொஞ்சமாவது முயற்சிக்க வேண்டும்.

‘பெரியாரின் இயக்கம் அறிவியக்கமாக ஆகவில்லை, தமிழின் பொதுவான அறிவுச் செயல்படுவதற்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது ‘ என்ற உண்மையை கடைசியாக கண்டறிகிறார் ஜெயமோகன் . தமிழ் மண்ணில் பிராமணீய-வைதீக கருத்துக்களுக்கு ஆழமான பின்னடைவை உருவாக்கிய ஒரு இயக்கத்தை அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை உருவாக்கிய இயக்கமாகக் காணுகிறார். பிராமணீயத்தை மட்டுமே அறிவியக்கமாகக் காணுகிற ஒருவர் இதைத் தவிர வேறு முடிவுகளுக்குப் போனால்தான் ஆச்சரியம்.

ஆனாலும் ஆச்சரியப்படுத்தாமல் கட்டுரையை முடிக்க மனமில்லை ஜெயமோகனுக்கு. எனவே அடுத்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். ‘ஈ.வே.ரா தமிழகத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட பிம்பமாக கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு உருவாக்கப்படுள்ள கெடுபிடுகளுக்கு அஞ்சித்தான் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் செயல்பட முடிகிறது ‘ என்றும் காலச்சுவட்டு ஆசிரியர் குழு மூலம் கண்டுபிடிப்பை நிறுவுகிறார். தன்னுடைய தொடை நடுங்குவதற்கு பூமி நடுக்கம்தான் காரணம் என வாதிடுகிற ஜெயமோகனிடம் நாம் கேட்க விரும்புவது இதுதான்.

இன்றைய சமூகச் சூழலில் அறிவுஜீவிகள்மீது கெடுபிடியை நிகழ்த்திக் கொண்டிருப்பது யார் ? உசேனின் ஒவியக்கூடத்தை எரித்தது யார் ? சகமத் நாடக நிகழ்வுகளை தாக்கியது யார் ? அயோத்தியில் வைக்கப்பட்ட கண்காட்சியை தீக்கிரை ஆக்கியது யார் ? ஃபயர் திரையிடப்பட்ட திரையரங்குகளை அடித்து நொறுக்கியது யார் ? ஷப்னா ஹாஸ்மி மீதான கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியது யார் ? கீதையின் மறுபக்கம் நூலை தடை செய்யச் சொன்னது யார் ? பேராசிரியர்கள் சுமித் சர்க்கார் , கே.எம்.பணிக்கர் மற்றும் டி.கே.வி .சுப்ரமணியன் உட்பட 12 புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களை இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தில் இருந்து வெளியேற்றியது யார் ? இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் (I.C.S.S.R.) தலைவரை வெளியேற்றிவிட்டு பாரதீய ஜனதாவின் முன்னாள் டெல்லி எம்.பி எம்.சோந்தியை நியமித்தது யார் ? பாடத்திட்ட மறு பரிசீலனைக் குழுவின் தலைவரை மாற்றி அந்த பொறுப்புக்கு ‘ இந்துத்துவா என்பது ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை ‘ எனத் தீர்ப்பளித்த முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவை நியமித்தது யார் ? இடதுசாரி அறிவுஜீவிகளை பயங்கரவாதிகள் என அறிவித்து , எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விட இதுதான் ஆபத்தானது எனச் சொன்னதும், அதன்படி செயல்பட்டு வருவதும் யார் ?

இந்தக் கேள்விக்கான பதில் ஜெயமோகனுக்கு தெரியாதது அல்ல.அவர் ஒரு அத்வைதவாதி. கேள்வி, பதில் இரண்டும் வேறு வேறு அல்ல. ஒன்றே என்னும் கொள்கை உடையவர். அந்த ஒன்று தனக்குள்ளும் ,தான் அந்த ஒன்றுக்குள்ளும் இருப்பதை கண்டுணர்ந்தவர். ‘தூய அறிவு ‘ என்றால் சும்மாவா ?

(ஆறு)

ஒருபுறம் மார்க்சீய அறிவியக்கம் தோற்றுப்போய் விட்டதென்றும் , இன்னொருபுறம் பெரியாரின் இயக்கம் அறிவியக்கமே அல்ல என்றும் கூறுகிற ஜெயமோகன் , அத்வைதத்தை தூய அறிவாக முன்வைக்கிறார்.

உண்மையை புறக்கணித்துவிட்ட ஒரு சிந்தனை தெளிவில்லாததாகிவிடுகிறது. தெளிவில்லாதது ஆகிவிடும்போது அது ஆணவப்பிடிவாத கருத்துரையாக ஆகிவிடுகிறது. ஆணவப்பிடிவாத கருத்துரையாக ஆகும்போது திறந்தமனம் இருப்பதில்லை. திறந்த மனம் இல்லையென்றால் அங்கே இருப்பது மடிந்துபோன மனம்தான். தான் மட்டும் கெட்டுப் போவதோடு நின்றுவிடாமல் பிற எல்லாவற்றையும் கூட கெடுத்துவிடுகிறது. சங்கரர் இப்படிப்பட்ட இழிந்த பண்புடைய சிந்தனையின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறார் என்கிறார், கன்னட எழுத்தாளர் பகவான்.

பகவான் குறிப்பிடுகின்ற இந்த இழிந்த பண்புடைய சிந்தனையின் பிரதிநிதியாக கடந்த பதினைந்து ஆண்டுக்காலம் தமிழ்க் கருத்துலகில் செயல்பட்டு வரும் ஜெயமோகனின் எழுத்துக்களை இரண்டுவகையாக மட்டுமே பிரிக்க முடியும்.

1. வைதீக வெறிபிடித்த எழுத்து.

2.வைதீகம் மற்றும் பழமைவாதக் கருத்துக்களை எதிர்க்கிற கருத்துக்கள் மற்றும் இயக்கங்களை தாக்குகிற வெறிகொண்ட எழுத்து.

இந்த இரண்டு அடைப்புக்குள்ளும் அடங்காத ஒற்றைச் சொல் கூட ஜெயமோகனால் இன்னும் எழுதப்பட வில்லை.

000 000 000

000

Series Navigation