ஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வளவ துரையன்


ஆதிகாலத்தில் பெண்ணின் தலைமையில் விளங்கிய சமுதாயமானது மாறி எப்போது சமுதாயத்துக்கும் குடும்பத்துக்கும் தலைமை எற்பவனாக ஆண் மாறினானோ, அப்போதிருந்தே பெண்களுக்குத் துன்பங்கள் தொடங்கிவிட்டன. பெண்ணைத் தனது ஏகபோக உரிமையாக நினைத்ததுமட்டுமன்றி தன் கையில் அகப்பட்ட வண்ணத்துப்பூச்சியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் உள்ள சிறுவனின் மனத்தைப் பெற்ற அரக்கனாக ஆண் மாறிவிட்டான். கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் பெண்கள் குடும்பத்தைவிட்டு வெளியே வரவேண்டாமென நினைத்துத்தான் மனம் ஒவ்வாமல் பல இல்லறங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பயனளிக்கும் என்றார் வள்ளுவர். அந்த இரு பண்புகளும் கணவன் மனைவி இருவரிடமும் குடிகொண்டிருக்கும்போது அந்த வண்டி நன்றாக ஓடுகிறது. ஒரு சக்கரத்தில் அன்பு என்னும் காற்று இல்லாதபோது அச்சக்கரம் பழுதடைந்து வண்டியும் தடுமாறுகிறது.

சுவாதியிடம் இருக்கும் குணத்தில் எள்ளளவையாவது மோகன் பெற்றிருந்தால் இந்த நாவலே எழுந்திருக்காது. எந்த ஒரு படைப்புமே முரணின் அடிப்படையில் எழும்போதுதான் சிறப்பாக மிளிர்கிறது. அவ்வகையில் ஜெயந்தி சங்கரின் குவியம் நாவல் ஒரு வெற்றிப்புதினம் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

மேலும் இந்நாவல் , பலவேறு ஒற்றைப்பரிமாணங்கள் அனைத்தும் இல்லறம் என்னும் மையத்தை நோக்கிக் குவிவதாகவே கட்டப்பட்டுள்ளது. உலக வாழ்வின் பல எதார்த்தங்களை நாவல் தொட்டுச் செல்வதால் நாவலின் உள்ளே சிலநேரங்களில் நாமே இருக்கிறோம் என்ற உணர்வு எழுகிறது.

நான்கு பிள்ளைகளில் ஒருவனிடம் மட்டுமே அதீத அன்புவைத்து அதனாலேயே துயரம் அடைந்த தசரதன்போல் மோகனின் அம்மாவும் மறைந்துபோகிறார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல அவனது தவறுகளை எல்லாம் மறைத்ததோடு அவை சரி என்ற வாதிட்டும் வந்தவள் ஒரு மணித்துளியில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்வது அவலத்தின் உச்சமாக எதிரொலிக்கிறது.

ஒரே காட்சியில் நான்கைந்து நடிகர்கள் நடித்தாலும் ஒருவரை ஒருவர் மறைக்காமல் நிற்கவைத்து நடிக்கவைக்கும் இயக்குநர்போல சுந்தர், மணி, சந்திரன், பத்மா ஆகியோரின் குடும்பங்களை நாவலாசிரியர் காட்டுகிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவத்தோடு காணப்படுகிறது.

இதுபோலவே சிங்கப்பூர் சென்று சுவாதி தங்கும் விடுதியில் உள்ள தீபிகா , மாலா, கலா போன்றவர்களும் இருக்கிறார்கள். “ஒத்தப் பொண்ணா பொறந்தாலே, வாழ்க்கையில கஷ்டம்தான் படுவா” என்று கிராமங்களில் ஒரு சொலவடையே உண்டு. பல காவியநாயகிகளும் அப்படித்தானே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

சுவாதியும் சிறுவயதுமுதலாக தொடர்ந்து துன்பங்களையே சந்தித்துவருகிறார்கள். இறுதியில் மெதுவாக வலிந்து ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறாள். அந்த முடிவை நோக்கிஅவள் சீராகச் செல்லுமாறு புதினம் நேர்த்தியான நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ளது. ஆனால் சுவாதியின் அம்மா தன் மகளின் முடிவை ஏற்க மறுப்பதுதான் அப்பாத்திரப்படைப்பின் பலமாகும். பழமையான அப்பாத்திரத்தோடு, பழமையானது கட்டியுள்ள தளையிலிருந்து விடுபட எத்தனிக்கும் சுவாதிக்கு ஏற்படும் சிக்கலே கதையின் மையமாகும்.

கட்டியிருந்த கட்டை பட்டென்று அறுத்துக்கொண்டு போகாமல் மெதுவாக அவிழ்த்துக்கொண்டு போகும் சுவாதி நாவலின் மையச்சரடாகிறாள். நாவலின் பல அத்தியாயங்கள் பின்னோக்கு உத்தியில் எழுதப்பட்டு சுவாரிசயத்தை ஊட்டுகின்றன.

நாட்குறிப்பு, கடிதம் ஆகியற்றின் வழியாக கதை நகர்வது நாவலின் மையம் பலவாறாகப் பிரிந்து கிடப்பது முதலியவை பின்நவீனத்துவ உத்திகளாகப் பார்க்கப்படலாம். நாவலின் இறுதிக்கட்டம் மிகவும் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்தன. நாவலை அதிகமாகக் கதையாசிரியரின் சித்தரிப்புவழியாகவே நகர்த்துவதுபோல தோன்றுவது ஒரு குறை. முக்கியமான இடங்களில் உரையாடல் இல்லை.
ஆனால் எல்லாக் குடும்பங்களிலும் காணப்பட்டு மறையும் நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ளதால் தொய்வின்றி வாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

(குவியம். நாவல். ஜெயந்தி சங்கர். சந்தியா பதிப்பகம்.. சென்னை-83. பக்கம் 192. விலை.ரூ100 )

Series Navigation