ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சோதிப் பிரகாசம்


( ‘அசை ‘ ஒன்றாவது இதழில் வெளி வந்த ‘உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படை வாத ஜின்களும் ‘ என்ற கட்டுரைக்கு மறுப்பாக அதன் இரண்டாவது இதழில் வெளியானது.)

‘அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் உங்கள் அரசியலை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் ‘ என்று ஆங்கிலத்தில் நமக்கு அறிவுரை வழங்கியவாறே தமது கட்டுரையை (அசை, ஜனவரி-ஜுன் 2002)த் தொடங்குகிறார் ஜமாலன்! ஜமாலனுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நாம் பூரித்து நிற்கின்ற வேளையில், தமிழில் அவர் கூறுகிறார் — தமது அரசியலைப் பரிசோதித்துக் கொள்ளுகின்ற ஒரூ வாய்ப்பாகவும் தமது கட்டுரையை அவர் கருதிக் கொள்கிறார் என்று!

அடிப்படை வாதங்கள் பற்றிய தமது கருத்துகளைப் பொழிவதற்கு முன்னர், ‘மதம் ‘ பற்றிய தமது கருத்தாக்கத்தை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற வகையில் ஜமாலன் கூறுகின்ற ஒரு கருத்தினை முதலில் நாம் பார்ப்போம்:

‘இன்றைய மதங்கள் எல்லாம் தாய் வழி மதங்களை அழித்து அதன் மேல் கட்டப் பட்டுள்ள தந்தை வழி மதங்கள். தந்தை என்பவன் எப் பொழுதுமே அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதால் மதங்கள் இன்று உலக அரசாட்சிக்கான போட்டியில் குதித்து உள்ளன. மதங்களின் கருணை (தாய்மை) அழிக்கப் பட்டு வெறி (அதிகாரம்) மட்டும் எஞ்சிய நிலையே இன்று உள்ளது. ‘

மதங்களின் அதிகாரப் போட்டி பற்றிய ஜமாலனின் கருத்து இது.

சொற்களின் மேல் அவற்றின் அருத்தங்கள் வழுக்கிக் கொண்டு சென்று விடுவதாகப் பின்-புதின வாதிகள் கூறுகிறார்கள் என்று ஜெய மோகன் ஒரு முறை குறிப்பிட்டார். இப்படி, ஜமாலனின் அனைத்துக் கருத்துகளும் ஆங்காங்கே வழுக்கிக் கொண்டு சென்று விடுகின்றன. தாய்மையின் உணர்மங்களுடன் (sentiments) விண்ணில் பறந்து கொண்டு இருக்கின்ற அவர், பறந்து பறந்து களைத்து விட்டவரைப் போலத் திடுமென மண்ணுக்கு இறங்கி வருகிறார்; ஆனால், மண்ணில் கால் பதித்திட முடியாமல் வழுக்கிக் கொண்டு மீண்டும் விண்ணுக்கே சென்றும் விடுகிறார். எனவே, ஜமாலனின் கட்டுரையை எப்படி நாம் அணுகுவது என்பது நமக்கோ மிகப் பெரிய சிக்கல் ஆகி விடுகிறது.

ஆழ் மனம், தொல் மனம், நினைவிலி தளம், பிரக்ஞை, சாரம், மையம், சுயம், புதின வாதம், பின்-புதின வாதம், என்று எல்லாம் ஏராளமான கருத்துச் சிதறல்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்து, தமது அறிவாண்மைத் திறத்தினை ஜமாலன் நமக்குக் காட்டிச் செல்கிறார் என்பது சரிதான்! ஆனால், தன்னை வீழ்த்திட வேண்டிய அவசியம் எதையும், பின்னதாக எழுந்து வந்து இருக்கின்ற புதின வாதங்களுக்குக் கொடுக்காமல், தானாக வீழ்ந்து மடிந்து போய் விட்ட ஒரு முன்னதான வாதமாக மார்க்ஸியத்தை அவர் கருதுவதுதான் சரியானதாக நமக்குத் தெரிய வில்லை. இந்த அறிவாண்மை நாணயத்திற்காக ஜமாலனுக்கு நமது வணக்கங்களைத் தெரிவித்து விட்டு மதம் பற்றிய ஜமாலனின் கருத்துகளை இனி நாம் எதிர் கொள்ள முயல்வோம்.

மாங்காய்ப் பால்

உண்ணாமலும் உடுக்காமலும் ஓர் இடத்தில் உறையாமலும் மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கிறிஸ்தவனால் மட்டும் அல்ல, ஓர் இந்துவால் மட்டும் அல்ல, ஓர் இஸ்லாமியனால் கூட, இவை எல்லாம் இல்லாமல் உயிர் வாழ்ந்து விட முடியாது.

ஆனால், இவர்களுள் யாராவது ஓர் ‘அடிப்படை வாதி ‘யாக மாறி விட்டால் போதும், உணவு, உடை, உறையுள் என்று எதுவும் அவர்களுக்குத் தேவைப் படுவது இல்லை — கிறிஸ்தவ அடிப்படை வாதிகளாக அவர்கள் இருந்தாலும் சரி, இந்து அடிப்படை வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது இஸ்லாமிய அடிப்படை வாதிகளாக இருந்தாலும் சரி! ஏனென்றால், ஓர் அடிப்படை வாதியாக ஒருவன் மாறி விட்ட உடன் ‘மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் ‘ இருப்பவனாக அவன் மாறி விடுகிறான்.

தவம் செய்து கொண்டு மலை மேல் இருப்பவர்களின் குலை-மாங்காயில் இருந்து, அதாவது, நுரையீரல் மற்றும் இதயப் பகுதியில் இருந்து, ஒரு வகையான பால் சுரக்கும் என்பதும் அந்தப் பாலை அருந்தியே அவர்கள் உயிர் வாழ்ந்து விட முடியும் என்பதும் ஒரு சில மாயச் சித்தர்களின் நம்பிக்கை!

இப்படி ஒரு மாங்காய்ப் பால் சுரந்து ‘அடிப்படை வாதி ‘களை உயிர் வாழ வைக்கிறது என்பதையும், எனவேதான், அவர்களுக்கு உணவு, உடை, உறையுள் எவையும் தேவைப் படுவது இல்லை என்பதையும் ஜமாலனது கதையாடலின் பின் புலமாக நாம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஏனென்றால், எதை உண்டு, எதை உடுத்து, எதில் உறைந்து, அடிப்படை வாதிகள் (fundamentalists) உயிர் வாழ்கிறார்கள் என்பது பற்றிய எந்த ஒரு சொல்லாடலும் ஜமாலனின் கதையாடலில் காணப் பட வில்லை.

எனினும், அடிப்படை வாதம் பற்றிய ஜமாலனின் சொல்லாடலைக் கொச்சைப் படுத்துகின்ற ஒரு சித்தரிப்பு என்று இதனை அறிவாளர்கள் கருதி விடக் கூடும் என்பதால், இந்த அணுகுமுறையினைக் கை விட்டு விட்டு வேறு அணுகு முறைகளை நாம் கையாண்டு பார்க்கலாம். ஏனென்றால், வயிற்றில் இருந்து வாழ்க்கையை விளக்குகின்ற ஓர் ‘எச்சில் ‘ வாதமாக உப்பரிகையாளர்களுக்கு இது தோன்றி விடக் கூடும்.

அதிகாரப் பீடங்கள்

சரி, ஜமாலனின் கதையாடலை இப்படி நாம் அணுகிப் பார்ப்போம்: வானத்தில் கடவுள் உறங்கிக் கொண்டு இருந்தார். அவரைச் சுற்றி சில மதங்கள் வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன. தம்மில்-தாம்-ஆன இந்த மதங்கள், தம்மின்-பிறிது-ஆக மாறிட வேண்டும் என்று ஒரு நாள் முடிவு செய்தன. எனவே, வானத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கி வந்து, தாம் இறங்கிய இடங்களில் வாழ்ந்து கொண்டு வந்து இருந்த மனிதர்களை அவை பற்றிப் பிடித்துக் கொண்டன. எனினும், பிறிது-ஆனது-ஆகி விட்ட ஒரு நிறைவு அவற்றிற்கு ஏற்பட வில்லை. ஏனென்றால், ஆங்காங்கே அதிகாரப் பீடங்கள் உருவாகி, மனிதர்களை அடக்கு முறைக்கு ஆட்படுத்திக் கொண்டு வந்ததை மதங்கள் கண்டன.

இப்படி, அதிகாரப் பீடங்கள்தாம் உச்சமான பீடங்கள் என்பதைப் புரிந்து கொண்ட மதங்கள், உடனே அவற்றைக் கைப் பற்றியும் கொண்டன; அதிகாரப் பீடங்களைக் கைப் பற்றிய உடன், அதிகார மையங்களாக அவை மாறிப் போயும் விட்டன.

இந்த அடிப்படையில் ஜமாலனின் கதையாடலை நாம் புரிந்து கொள்ள முயன்றால், அதுவும் தவறு ஆகிப் போய் விடும் என்பது நமக்குத் தெரிகிறது. ஏனென்றால், மதத்திற்காக மதம், அதிகாரத்திற்காக அதிகாரம், பணத்திற்காக பணம், என்பதில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால், உலகு அளாவிய ஓர் அதிகாரமாக, தனியான ஓர் அதிகாரம் மாறி ஆக வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

அப்படி என்றால், ஜமாலனின் சொல்லாடலை எப்படி நாம் புரிந்து கொள்வது ? அவரே விளக்கம் கூறுகிறார்:

‘இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது ஒரு புவி சார் அரசியல் நிகழ்வாக, ஏகாதிபத்தியங்களின் மிக மோசமான ஆதிக்க வெறி மற்றும் பொருளியல் சுரண்டலின் பக்க விளைவாக உருவான ஓர் எதிர்ப்பே ‘ ஆகும் என்று!

நமது அறிவிற்கு எட்டிய வரை, இங்கு இருந்துதான் தமது கதையாடலை ஜமாலன் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், ஒரு முடிவாக மட்டும்தான் இதனை அவர் சொல்லாடி இருக்கிறார். ஆனால், ஏன் ?

ஏனென்றால், ‘புவி சார் அரசியல் நிகழ்வு ‘ என்பதைப் பற்றிச் சொல்லாடுவதற்காக, மண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் மண்ணின் வாழ்க்கையில் இருந்து எழுந்து விண்ணுக்கு மதங்கள் எப்படிப் பறந்து சென்று விடுகின்றன என்பதைப் பற்றியும் அவர் விளக்கிட வேண்டியது இருக்கும். ஆனால், சொல்லாடலுக்கு, அதாவது, அரட்டை அடிப்பதற்கு, ஒத்து வராத விசயங்கள் இவை என்பது அவருக்குத் தெரியும்.

இது மட்டுமா ? ‘ஏகாதிபத்தியங்களின் மிக மோசமான ஆதிக்க வெறி ‘ என்பது பற்றிச் சொல்லாடுவதற்காக, முதலாண்மை உற்பத்தி முறை பற்றியும் முதலாண்மைத் தேசங்களின் அயலாதிக்கம் பற்றியும் அவற்றின் ஆதிக்க வெறிக்குக் காரணம் ஆகின்ற வணிகப் போட்டிகள் பற்றியும், எனவே, பொருளாதாரம் பற்றியும் மனிதர்களின் பொருளாதார நலன்கள் பற்றியும் இந் நலன்களின் வேறுபாட்டினால் வேறு பட்டு நிற்கின்ற மனிதர்களின் வருக்கங்கள் பற்றியும் அவர் விளக்கிட வேண்டியது வரும். ஆனால், அரட்டை அடிப்பதற்கு முடியாத விசயங்கள் இவை என்பது அவருக்குத் தெரியும்.

வருக்கப் போராட்டத்தின் வரலாறாக வரலாற்றைச் சித்தரிப்பதற்கு ஆய்வுகளும் வாதங்களும் தேவை! ஆனால், ஜமாலனோ ஆய்வுகளிலும் தருக்கங்களிலும் நம்பிக்கை இல்லாதவர்! எனவே, அரட்டையை மட்டும் மிகவும் வசதியாக அவர் தேர்ந்து எடுத்துக் கொள்கிறார்.

ஆளும் கட்சிகளின் தந்திரங்களும் எதிர்க் கட்சிகளின் சதிகளும்தாம் வரலாற்று நிகழ்ச்சிகள் என்று சித்தரிப்பது மிகவும் எளிதுதான். கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும் அவர்களின் பண்பாடுகள், தந்திரங்கள், ஊழல்கள், குழி-பறிப்புகள் முதலியன பற்றியும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் அரட்டைகளையும் நாம் அடித்துக் கொள்ளலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கின்ற ஒரு போராட்டமாக வரலாற்றை விளக்குவது கூட மிகவும் எளிது ஆனதுதான். இது பற்றி அரட்டை அடிப்பது மிகவும் கிளு-கிளுப்பாகவும் இருக்கும்.

இது போல, மதங்களின் போராட்டம்தான் மனிதர்களின் போராட்டம் என்று வரலாறு பற்றிச் சொல்லாடுவது ‘பரவசமானது ‘தான் என்ற போதிலும், மத ‘அடிப்படை வாதிகளின் போராட்டமாக ‘ வரலாறு பற்றிச் சொல்லாடுவது ‘முரணியக்க ‘ விளையாட்டினை விட ‘வீர-தீரமாக ‘ இருக்கும் என்பதால், அடிப்படை வாதத்தை ஜமாலன் தேர்ந்து எடுத்துக் கொள்கிறார். மதத்தின் ஆதிக்கம், மதத்தின் நலன், மதங்களின் போராட்டம், என்று விண்ணகத்தில் மனிதனை நீச்சல் அடிக்க வைத்து விட்டு, தமக்குப் பிடித்தமான கதைகளை எல்லாம் அவர் அளந்து கொள்ளலாம் அல்லவா! அதாவது, கதையாடிக் கொள்ளலாம் அல்லவா!

எனவே, ஜமாலனின் கதையாடலை இப்படி நாம் அணுகுவோம்:

ஞானிகளின் போராட்டம்

திடும் என்று ஒரு நாள் புவியில் ஒரு ஞானி தோன்றினான். அவனுக்கே உரிய ஒரு திறனாக ( energy ) அளவிலா ஞானம் அவனுள் அடங்கிக் கிடந்தது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது என்ற போதிலும், என்ன வகையான ஞானம் என்று அதனை வரையறுப்பதற்காக முதலில் அதனைத் தீர்மானப் படுத்திட ( determine) வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான்.

ஆனால், இயற்கை ஞானமோ அவனுக்குப் பிடி பட வில்லை; இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவும் அவனுக்குப் பிடி பட வில்லை. உண்டு, உடுத்து, உறைவதற்காக உற்பத்தியில் மனிதர்கள் ஈடு பட வேண்டியது இருந்ததும் உற்பத்தியில் தொழில் நுட்பங்களை அவர்கள் பயன் படுத்திட வேண்டியது இருந்ததும் அவனுக்குப் பிடி பட வில்லை; ஆதாயம் என்றும் கூலி என்றும் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டு இருந்ததும் அவனுக்குப் பிடி பட வில்லை. ஏன் ?, ஆணும் பெண்ணும் என்று இணைந்தும் பிரிந்தும் மனிதர்கள் மோதிக் கொண்டு இருந்ததும் கூட அவனுக்குப் பிடி பட வில்லை. மூளையை நோக வைக்கின்ற முயற்சிகளாகவும் அவனுக்கு இவை தோன்றின.

எனவே, மூளை நோகாத வகையில், மனிதர்களின் கோட்பாடுகளையும் ( ideology ) கோட்பாட்டு நிறுவனங்களையும் பற்றிப் பிடித்துக் கொள்ள அவன் முற் பட்டான். ஆனால், அரசியல், கற்பு, முதலிய கோட்பாடுகளும் அரசு, குடும்பம், முதலிய அவற்றின் நிறுவனங்களும், அருவருப்பாக அவனுக்குத் தோன்றின. தங்கள் ஆறுதலுக்காக மக்கள் புனைந்து கொண்டு வந்து இருந்த கற்பனைகள், அதாவது, கதைகள், அவனைக் கவர்ந்திடத் தவற வில்லைதான் என்ற போதிலும், தங்கள் விடிவின் கற்பனையாக மனிதர்கள் படைத்துக் கொண்டு இருந்த கடவுள்தான் அவனைப் பெரிதும் கவர்ந்தார். எல்லா வல்லமைகளையும் எல்லா நலன்களையும் எல்லா அதிகாரங்களையும் தம்முள் ஒருங்கே கொண்டு இருப்பவர் அல்லவா, அவர்!

ஆனால், இந்த ஒரே கடவுளுக்கோ பல் வேறு மதங்கள்! எனவே, கடவுளின் விளையாட்டாக வாழ்க்கையையும் ‘மதப் போராட்டங்களின் முரணியக்கங்களாக ‘க் கோட்பாடுகளையும் அவன் கருத்தில் கொண்டான். அவனுக்கு மிகவும் உகந்ததாக இந்த மதக் கோட்பாடு இருந்தது. மெய் மறந்த நிலையில், ஒரு மலையை நோக்கி அவன் நடந்தான். மலையின் மீது ஏறி நின்று கொண்டு, கைகளை அகல விரித்து அவன் சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினான்:

‘பர மண்டலத்தின் கடவுளிடம் ஒன்றிப் போய் விடுவதுதான் மனித வாழ்க்கையின் மெய்மையான இலக்கு! ஆனால், சரியான மதத்தின் மூலம்தான் கடவுளை நாம் அடைந்திட முடியும். நான் கூறுகின்ற மதம்தான் சரியான மதமும் ஆகும்! ‘

கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தார்கள்; பர மண்டலங்களை நோக்கிக் கைகளை உயர்த்தினார்கள்; கண்களை மூடிக் கொண்டு செபித்தார்கள்!

ஆனால், வேறு திசைகளில் இருந்தும் ஆர்ப்பரிப்புகள் எழுந்து வந்து கொண்டு இருந்தன. சுற்றிலும் பார்த்தான் ஞானி. வெவ்வேறு மலைகளின் உச்சிகளில், வெவ்வேறு ஞானிகள் நின்று கொண்டு, இவனைப் போலவே சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்ததையும் அவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்தவர்களின் நடுவில் இருந்து, இதே மாதிரியான ஆர்ப்பரிப்புகள் எழுந்து வந்து கொண்டு இருந்ததையும் அவன் கண்டான்.

மற்ற ஞானிகளை இவன் பார்த்து விட்டதைப் போலவே அவர்களும் இவனைப் பார்த்து விட்டார்கள். சரியான மதம் எது ? என்று முதலில் ‘சொல்லாட ‘த் தொடங்கிய அவர்கள், பின்னர் ‘கையாட ‘த் தொடங்கி, இறுதியில், ஆயுதங்களைக் கையில் ஏந்திப் ‘போராட ‘த் தொடங்கினார்கள். மதப் போராட்டங்கள் உருவாயின!

இறைவனை அடையும் சரியான வழி இஸ்லாம் இசம் என்றான் ஒருவன்; இந்து இசம் என்றான் இன்னும் ஒருவன்; கிறிஸ்தவ இசம் என்றான் மற்றும் ஒருவன்! ஆனால், ஞானிகளுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றவர்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருந்ததைக் கவனித்திட அவர்கள் முற்பட வில்லை. மதப் போராட்டங்களின் வரலாறுதான் மனித வாழ்க்கையின் வரலாறு என்கின்ற ஒரு கதையாடலின் ஒற்றுமைதான் அது!

இந்த ஒற்றுமையின் வேற்றுமைகள்தாம் — ஒருமையின் பன்முகத் தன்மைகள்தாம் — பல் வேறு மதங்கள்! இந்த மதங்களின் போராட்டம்தான் அதிகாரத்திற்கான போராட்டம்! என்று தமது சொல்லாடலை ஜமாலன் தொடங்குகிறார். ஆனால், மதத்தின் ஞானமோ அல்லது ஞானிகளோ அவருக்குப் பிடிக்க வில்லை. எப்படியும், மதங்களின் தோற்றம் பற்றியும் அவர் சொல்லாடி ஆக வேண்டும் அல்லவா! எனவே, அவரது சொல்லாடலைத் தொடர்ந்து நாம் கவனிப்போம்.

குற்ற உணர்மை ( Guilty Consciousness )

‘பிராய்டு கூறியதைப் போல ஆதிச் சமுகத்தில் கொலை செய்யப் பட்ட தந்தை ( murder of the primal father ) பற்றிய நினைவு, குற்ற உணர்ச்சியால் மாற்றீடு செய்யப் பட்ட கடவுளின் இயக்கமாக ஆழ் மனத்தில் படிந்து கிடக்கலாம். இந்தக் கொலை மறக்கடிக்கப் பட்டு அல்லது ஒடுக்கப் பட்டு இருப்பதன் ஓர் அறிகுறிதான் மதங்கள். ‘

பின்-புதின வாதிகள் கூறிட வருகின்ற கருத்துகள் மற்றவர்களுக்குப் புரிவது இல்லை என்று அவர்கள் மேல் ஒரு குற்றச் சாட்டு இருப்பதாக ஜெய மோகன் ஒரு முறை குறிப்பிட்டார். ஆனால், இங்கே ஜமாலன் கூறிட வருகின்ற கருத்துகளை அவராவது புரிந்து கொண்டு இருக்க முடியுமா ? என்னும் ஐயம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. கூடவே, பாண்டிய நாட்டைக் கடல் விழுங்கி விட்டதற்குச் சிலப்பதிகாரத்தில் சொல்லப் படுகின்ற ஒரு காரணமும் நமது நினைவுக்கு வந்து விடுகிறது.

என்றோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு கோபத்தில், யாரோ ஒரு பாண்டிய மன்னன், இந்து மாக்கடலின் மேல் தனது வேலை வீசி எறிந்து விட்டானாம்! இந்தப் பழைய பகைக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காகத்தான், பஃறுளி ஆற்றையும் குமரி மலையையும் இந்து மாக்கடல் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டதாம்!

‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள ‘

என்று இதனைப் பாடுகிறார் இளங்கோ வடிகள்! ‘வான் பகை ‘ என்பதற்குப் ‘பழைய பகை ‘ என்று பொருள் கூறுகிறார் அரும்பத உரை காரர்!

குமரிக் கடலில் ஏற்பட்டு வந்து இருக்கின்ற கொந்தளிப்புகளைப் பற்றி நமக்குத் தெரியும். இவற்றால் பாண்டிய நாட்டின் பெரும் பகுதி கடலுக்குள் அமிழ்ந்து போனது என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். மேலும், கடலுக்குள் ஏற்படுகின்ற நில அதிர்ச்சிக்கும் எரிமலை வெடிப்புகளும்தாம் கடல்கோள்

களுக்குக் காரணம் என்பதும் நன்றாகவே நமக்குத் தெரியும். ஆனாலும், நம்மிடம் இளங்கோ அடிகள் கூறுகிறார் — கடலின் கோபம்தான் அதன் கொந்தளிப்புக்குக் காரணம் என்று!

இப்படி, யாரோ ஒரு தந்தையை எவனோ ஒருவன் கொன்று விட்ட ‘நினைவு ‘தான் ‘கடவுளின் இயக்கம் ‘ என்று கடவுளின் தோற்றத்திற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார் ஜமாலன்! யாருடைய தந்தையை, எதற்காக, யார் கொன்றார்கள், என்னும் விளக்கம் எதையும் அவர் கூறாததால், ‘கொலை செய்யப் பட்ட தந்தை ‘ என்பதை மட்டும் இங்கே நாம் எடுத்துக் கொள்வோம்.

‘செய்யப் பட்ட ‘ என்பது போன்ற செயப் பாட்டு வினைத் தொடர்களில் எப் பொழுதும் ஒரு வசதி உண்டு. யார் செய்தார்கள் என்பதைக் கூறாமலே ‘செய்யப் பட்ட ‘ நிகழ்ச்சிகளை அதில் நாம் குறிப்பிட்டு விட முடியும்! மேலும், ‘படிந்து கிடக்கலாம் ‘ என்று ஜமாலன் கூறுகின்ற ஐயப் பாட்டு வினை முற்றின் பொருளையும் நாம் புறக் கணித்து விடலாம். ஏனென்றால், நேர் மறையான ஒரு வினை முற்றாக அதன் அடுத்த வாக்கியம் அமைந்து முந்திய வாக்கியத்தின் பொருளை நிறைவு செய்து இருக்கிறது. எனவே, ‘படிந்து கிடக்கிறது ‘ என்றே இதனை நாம் பொருள் படுத்திக் கொள்ளலாம்.

ஜமாலன் இங்கே சொல்ல வருகின்ற கருத்துகளை முதலில் நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.

(1) கொலை செய்யப் பட்ட தந்தையைப் பற்றிய நினைவு!

இது காரணம்.

(2) கொலை செய்யப் பட்ட தந்தையைப் பற்றிய இந்த நினைவு, கடவுளின்

இயக்கமாக மாற்றீடு செய்யப் படுதல்!

இது காரியம்.

ஆனால்,

(3) இந்தக் காரியமாக இந்தக் காரணத்தை இங்கே மாற்றீடு செய்வதோ,

குற்ற உணர்மை!

இதுதான் கருவி.

(4) கொலை நடந்த இடம்: ஆதிச் சமுதாயம்!

(5) கொலை நடந்த காலம்: ஆதிக் காலம்!

(6) இந்த ஆதிக் கொலையின் நினைவு படிந்து கிடக்கின்ற இடமோ ஆழ்

மனம்!

(7) அது படிந்து கிடக்கின்ற காலமோ நிகழ் காலம்!

‘மறக்கடிக்கப் பட்டு ‘ என்னும் ஜமாலனின் கருத்தை இங்கே நாம் புறக் கணித்து விடலாம். ஏனென்றால், ‘மறக்கடிக்கப் படாமல் ஒடுக்கப் பட்டுப் படிந்து கிடக்கிறது ‘ என்பதுதான் நமக்கு அவர் தெரிவிக்க வருகின்ற கருத்து. மறக்கடிக்கப் பட்டு விட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய ‘நினைவு ‘, ‘ஆழ் மனத்தில் ‘ மட்டும் இன்றி ‘மேல் மனத்தில் ‘ கூட படிந்து கிடந்திட முடியாது அல்லவா ?

இங்கே, இரண்டு வகையான பங்குகளைக் குற்ற உணர்மை ஆற்றுகிறது.

ஒன்று: ஆழ் மனத்தில் படிந்து கிடக்கின்ற நினைவை, ஆதிக் காலத்தில் இருந்து நிகழ் காலம் வரை சுமந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு சுமை தாங்கியாக அது செயல் ஆற்றுகிறது. இந்தக் குற்ற உணர்மை மட்டும் இல்லாமல் போய் இருந்தால், கொலை செய்யப் பட்ட தந்தையின் நினைவு நம்மிடம் மறக்கடிக்கப் பட்டு இருந்து இருக்கும்!

எனவே, நினைவை விட முக்கியம் ஆனதாகக் குற்ற உணர்மை மாறுகிறது — கடவுளை விட முக்கியம் ஆனதாக மதம் மாறி விடுவதைப் போல! மதம் என்னும் ஒரு சுமை தாங்கி மட்டும் இல்லாமல் போய் இருந்தால், கடவுளுக்கு என்று புகலிடம் எதுவும் இருந்திட முடியாது அல்லவா ?

இரண்டு: கடவுளின் இயக்கமாகத் தந்தை பற்றிய நினைவை மாற்றீடு செய்கின்ற இந்தக் குற்ற உணர்மை, தனது அறிகுறியாக மதத்தை உருவாக்கிக் கொள்கிறது; அதாவது, மதத்தில் தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறது. சரியாகச் சொல்வது என்றால், ஒடுக்கப் பட்டுப் படிந்து கிடக்கின்ற, அதாவது, ஆழ் மனத்தின் உள்ளடக்கமாக அமைந்து கிடக்கின்ற, குற்ற உணர்மையின் வெளிப்பாடுகள்தாம் மதங்கள்!

அதாவது, ஒரே ஒரு கொலை! ஒரே ஒரு நினைவு! ஒரே ஒரு குற்ற உணர்மை! எனினும், பல் வேறு மதங்கள்!

இப் பொழுது, கொலை செய்யப் பட்ட தந்தையின் நினைவும் அதனால் ஆய குற்ற உணர்மையும் யாரிடமாவது இன்று படிந்து கிடக்கின்றனவா ? என்று ஒரு கேள்வியைக் கேட்டு ஜமாலனை மடக்கி விடலாம் என்று நாம் முயன்றால், அதனால் நாம் அடைந்திடப் போவதோ தோல்விதான்! ஏனென்றால், குற்ற உணர்மையினால், ஒரு கடவுளாக, ஏற்கனவே அந்த நினைவு மாற்றி அமைக்கப் பட்டு விட்டது; குற்ற உணர்மையின் அறிகுறிகளோ மதங்கள் ஆகியும் விட்டன.

இப்படி, கடவுளும் மதமும் நமது ஆழ் மனத்தில் படிந்து போய் விட்டதனால்தான், தந்தையின் நினைவும் அவரைக் கொலை செய்து விட்ட குற்ற உணர்மையும் நம்மிடம் இன்று இல்லாமல் போய் விட்டன. கடவுளையும் மதத்தையும் மட்டும் நாம் மறந்து விட நேர்ந்து விட்டால், அந்த நினைவும் குற்ற உணர்மையும் மீண்டும் நமது நினைவுக்கு வந்து விடும்; மீளுருவாக்கம் பெற்று நமது மனத்தை அவை வதை செய்யும்; உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் அல்லல் பட்டு, மன நோயாளிகள் ஆகி, எனது ஆழ் மனத்தைப் படித்திடக் கூடிய மேல் மனத்து மருத்துவர்களைத் தேடி நாம் அலைந்து திரிந்து கொண்டு இருக்கவும் நமக்கு நேர்ந்து விடலாம்!

ஆக, மதங்களின் தோற்றம் பற்றிய ஜமாலனின் கருத்தாக்கத்தை நாம் புரிந்து கொண்டு விட்டோம் என்பது உறுதி. காரண-காரியங்களுடன் கூடிய மிகச் சிறந்த ஒரு விளக்கமாகவும் நமக்கு இது தோன்றுகிறது. ஆனால், மதங்கள் தோன்றிய காரணத்தை இதன் மூலம் நாம் புரிந்து கொண்டு விட்டோமா ? என்றால், அதுதான் இல்லை! ஆனால், ஒன்றை மட்டும் மிகவும் நன்றாக நாம் புரிந்து கொண்டு விட்டோம் — குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாம் என்று!

ஏனென்றால், கூடு விட்டு கூடு பாயும் வித்தையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, இறந்தவர்களின் மனங்களில் இருந்து இருப்பவர்களின் மனங்களுக்குத் தாவித் தாவி, தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்ற மனிதத்தின் நினைவு இது!

புடவியின் உயிர்மையாக ( cosmic spirit ) இல்லை என்ற போதிலும், மனிதத்தின் உயிர்மையாக ( human spirit ) நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்ற நினைவு இது — ஜெய மோகனது ‘பின் தொடரும் நிழலின் குரலை ‘ப் போல!

இப் பொழுது சில கேள்விகளை எழுப்புவோம்!

பாமரத் தனத்தின் பகட்டுகள்

கொலை செய்யப் பட்ட அந்தத் தந்தை யார் ? ஒரே ஒரு தந்தையிடம் மட்டும் இருந்துதான் மனித இனம் தோன்றி வந்தது என்று ஜமாலன் நம்புகிறாரா ? அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், ஒரே ஓர் ஆதி மந்தி மட்டும் ஆதி மாந்தனாக விளர்ச்சி ( evolve ) அடைய, அந்த ஒரே ஓர் ஆதி மாந்தனிடம் இருந்துதான் மனித இனம் தோன்றி வந்ததா ?

கொலை செய்யப் பட்ட தந்தையின் நினைவுதான் ‘தந்தை வழி ‘ மதங்களுக்குக் காரணம் என்றால், கொலை செய்யப் பட்ட ஒரு தாயின் நினைவுதான் ‘தாய் வழி ‘ மதங்களுக்குக் காரணமா ?

அப்படி என்றால், மனிதர்களை மனிதர்கள் தின்று கொண்டு வந்து இருந்த நினைவுகளும் கடவுளுக்கு மனிதர்கள் நர பலி கொடுக்கப் பட்டு வந்த நினைவுகளும் என்ன ஆயின ?

குற்ற உணர்மைதான் மதத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்றால், ஒரு பேயாக அது மாறாமல் ஒரு கடவுளாக அது மாறி இருப்பதற்குக் காரணம் என்ன ? ஒரு வேளை, கடவுள்களாக நல்ல குற்றங்களின் நினைவுகளும் பேய்களாகக் கெட்ட குற்றங்களின் நினைவுகளும் மாறி விடுகின்றனவா ?

இந்தக் கேள்விகள் அத்தனையும் பாமரத் தனமான கேள்விகள் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது. ஆனால், மிகவும் பாமரத் தனமாக மதத்தைப் புரிந்து கொள்ள முயன்று இருக்கின்ற ஜமாலனின் பாமரத் தனம்தான் இதற்குக் காரணம்!

ஆனாலும், ‘மரணம் குறித்த பேரச்சத்தின் விளைவே மதங்களைத் தோற்றுவிக்கிறது ‘ என்றும் ‘சாத்தான்களோ, அரக்கர்களோ, எதிர்ப்பாளர்களோ இல்லாமல். . . மதங்கள் சாத்தியம் இல்லை ‘ என்றும் தமது பாமரத் தனத்தின் பகட்டுகளை ஜமாலனோ அடுக்கிக் கொண்டே போகிறார்.

ஆழ் மனம்

‘ஆழ் மனம் ‘ என்று ஒரு மாய மனத்தினை உளவியல் பகட்டுடன் நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே, ஜமாலன்! அதன் தன்மையையாவது அவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா ? என்றால், அதுவும் இல்லை!

‘ஆழ் மனம் ‘ என்றும் ‘மேல் மனம் ‘ என்றும், ‘மனிதனின் திண்மையான மனத்தில் ‘ ( concrete mind ) பிளவுகள் ஏற்படுவதற்கு, மனிதனின் கபடத் தனம்தான் காரணம். ஆனால், ஒரு மாயமாக இதனைப் புரிந்து கொள்ள முயல்வதோ பாமரத் தனம்தான் ஆகும். ஏனென்றால், மெய்மையை மூடி மறைத்துப் பொய்மையாக வாழ்ந்திட நாம் முற்படுகின்ற பொழுது மட்டும்தான் நமது மனத்தில் இத் தகு பிளவுகள் ஏற்படுகின்றன.

நமது ஆழ் மனத்திற்குள் அமிழ்ந்து கிடப்பவைதாம் என்ன ? வெளியில் சொல்வதற்கு நாம் வெட்கப் படுகின்ற நமது செயல்கள் மற்றும் ஆசைகள் மட்டும்தாமே! இதனால்தான் குற்ற உணர்மையினை ஆழ் மனத்தில் ஜமாலன் படியவும் விடுகிறார்!

ஆனால், இந்த ஆழ் மனமோ — பொய்மைகளின் புகலிடம்! வெட்கக் கேடுகளின் விளை நிலம்! நாணம் கொள்ளத் தக்க நமது இச்சைகளை நாம் மூடி மறைத்துக் கொள்கின்ற முக்காடு!

கபடத் தனத்தின் சித்து விளையாட்டுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, தங்களுக்கு வருமானம் தேடிக் கொள்வதற்கு வேண்டும் என்றால் மன நோய் மருத்துவர்களுக்கு இது பயன் படலாமே ஒழிய, மதங்களைப் புரிந்து கொள்வதற்கு ஜமாலனுக்கு இது பயன் பட்டு விட முடியாது!

மதங்களின் வளர்ச்சி

நுகர்ச்சி வாழ்க்கை ( consumptive life )க் காலத்தில் இயற்கைக்கு அடி பணிந்து கிடந்து வந்த மனிதர்கள், இயற்கைத் திறல்களை ( forces ) எல்லாம் தேவதைகளாக எண்ணி வழி பட்டுக் கொண்டு வந்தார்கள். தங்களுக்குச் சாதகமாக இயற்கையைப் பயன் படுத்திட முடியாத மனிதர்களின் உடல் பலவீனம் மட்டும் அல்ல, இயற்கைத் திறல்களை எளிதில் புரிந்து கொண்டு விட முடியாத மனிதர்களின் மனப் பலவீனமும் இதற்குக் காரணங்கள் ஆயின.

குலச் சமுதாயங்களாக ( tribal society ) மனிதர்கள் வாழ்ந்து வந்த உற்பத்தி வாழ்க்கைக் காலத்தில் ( productive life ), இயற்கைத் திறல்களைக் கட்டுப் படுத்திடக் கூடியவர்களாகக் கருதப் பட்டு வந்த குலத் தலைவர்களை, மந்திரக் காரர்களாகவும் குருக்களாகவும் கருதித் தங்கள் மதக் கோட்பாடுகளை மக்கள் வகுத்துக் கொண்டு இருந்தனர்.

ஆண்டை-அடிமைச் சமுதாயத்திலோ, மாண்டு போய் இருந்த குலப் பெருந் தலைவர்கள் தெய்வங்களாகக் கருதப் பட்டு வந்தனர் என்றால், அவர்களின் மறுநிகரிகளாக ( representatives )க் கருதப் பட்டு வந்தனர் ஆண்டைகள்!

வணிகம் வளரத் தொடங்கி இருந்த அரை-அடிமை அல்லது பண்ணையச் சமுதாயத்தில் ( feudal society ), கடவுளின் ‘அவதாரங்களாக ‘ மதப் போதகர்களும் மக்கள் நேயர்களும் கருதப் பட்டு வந்தனர். ஆளும் வருக்கங்களிடம் இருந்து பிரித்து எடுக்கப் பட்டுத் தனித்து விடப் பட்டு இருந்தனர் கடவுளர்கள்!

பண்ணையச் சமுதாயத்து உறவுகளுக்கு இடையே முதலாண்மை உற்பத்தி உறவுகள் தலையெடுக்கத் தொடங்கி இருந்த காலத்தில், மனிதனாக அவதாரம் எடுத்து மண்ணுக்கு இறங்கி வருகின்ற வேலைகளை எல்லாம் கடவுள் கை விட்டு விட நேர்ந்தது. தமக்குப் பதிலாகத் தமது மைந்தர்களை மண்ணுக்கு அவர் அனுப்பி வைத்திடத் தொடங்கினார். பணத்தைக் கடவுளும் சரக்குகளை அவரது குமாரர்களும் சரக்குகளின் மதிப்பினைப் புனித ஆவியும் விண்ணகத்தில் மறுநிகர்த்திடத் தொடங்கினர்.

இன்றைய முதலாண்மைச் சமுதாயத்திலோ, கடவுளின் மைந்தர்கள் மடிந்து விட நேர்ந்து விட்டது. உயிர்த்து எழுந்து விண்ணகத்திற்குத் தப்பிச் சென்று விட்டவர்களும் அவர்களுள் உண்டு. என்றைக்கு அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத ஒரு கரசியம் ( secret )! ஆனால், அப்படி அவர்கள் திரும்பி வருகின்ற பொழுது, பழைய உலகத்தை அழித்துப் புதியது ஓர் உலகத்தை அவர்கள் படைத்துக் கொண்டும் விடுவார்களாம்!

இந்த முதலாண்மைச் சமுதாயத்துக் கடவுள்தான் முழு முதல் ஆனவர்; அருவமானவர்; அனைத்து வேறுபாடுகளையும் தம்முள் அடக்கிக் கொள்கின்ற ஒருமையானவர்! ஏனென்றால், முதலின் ( capital ) உருவகம் அவர்!

பணத்தின் வடிவத்தில்தான் முதல் வெளிப் படுகிறது என்ற போதிலும், முதலும் பணமும் ஒன்று அல்ல என்பது கார்ல் மார்க்ஸின் கருத்து. மதிப்பின் வடிவம் பணம்தான் என்ற போதிலும், முதலோ மதிப்பு-நிகழ்ப்பாடு அல்லது நிகழ்கின்ற மதிப்பு. எனவே, இதற்கு உருவம் எதுவும் கிடையாது!

இப்படி, உருவமாகவும் அருவமாகவும் ‘முதல் ‘ இருக்கின்ற காரணத்தினால்தான், தந்தையின் உருவம் கொண்டவராகவும், அதே நேரத்தில், உருவம் இல்லாத அருவமாகவும் கடவுளை மனிதர்கள் இன்று கருதிக் கொள்ள முடிகிறது.

ஆதாயமும் கூலியும் முரண் பட்டு நிற்கின்ற இரண்டு எதிரிடைகள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த எதிரிடைகளின் ஒற்றுமையில்தான் உற்பத்தி என்பது இங்கே நடைபெற்றுக் கொண்டு வருகிறது; மனிதர்களின் உயிர் வாழ்க்கையும் நிலைநின்று கொண்டு வருகிறது.

இப்படி, கூலியினுள் ஆதாயமும் ஆதாயத்தினுள் கூலியும் அடங்கிக் கிடக்கின்ற காரணத்தினால்தான், ஆன்மிகத் தன்மையும் இறைமைத் தன்மையும் ஒவ்வொருவரின் உள்ளும் ஒரு-சேர அடங்கிக் கிடக்கின்றன என்னும் கருத்துகள் இங்கே உதயம் ஆகிட முடிகிறது. இது போல, தங்கள் திண்மை இயல்புகளாக

( concrete nature ) வருக்க இயல்புகளையும் ( class nature ) நுண்மை இயல்பாக ( abstract nature ) மனித நேயத்தையும் மனிதர்கள் சுமந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான், மனித நேயம் மிக்கவராகவும் கடவுள் கருதப் பட்டு வருகிறார். ( பார்க்க: மனத்தின் விடுதலை, அதிகாரம்-11.)

இன்றைய முதலாண்மைப் பொருளாதாரத்திற்கும் மதம், அரசியல், முதலிய கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை — முன்னதால் பின்னது நிலவரப் படுத்தப் படுகின்ற தீர்மானப் பாடுகளை — விரித்து எழுதுவது தனி ஒரு நூலைப் போல விரிவு ஆகி விடும் என்பதால், இத்துடன் இதனை முடித்துக் கொள்வதுதான் ஈண்டு பொருத்தம்!

விரிவாக இது பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், கார்ல் மார்க்ஸ் எழுதிய The German Ideology, The Holy Family, Early Writings முதலிய பிற நூல்களைப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையின் கேள்விகள், மனத்தின் விடுதலை, வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று: முதலாண்மைப் புரட்சி; பாகம் இரண்டு: தேசியத்தின் எழுச்சி, ஆகிய நூல்களும் இந்த வகையில் பயன் படலாம்.

ஏங்கெல்ஸ்

ஆண்-பெண்களின் சமுதாய நிலைமைகளில் ( status ) ஏற்பட்டு வந்து இருக்கின்ற மாற்றங்களுக்கு, சமுதாய நிலவரங்களின் வளர்ச்சி அல்ல, மதக் கருத்துகளில் ஏற்பட்டு வந்து இருக்கின்ற மாற்றங்கள்தாம் காரணம் என்று :பச்சோபன் என்பவர் எழுதினாராம் — ‘தாய் உரிமை ‘ என்னும் தமது நூலில்! ஏஸ்கிலஸ் என்பவர் எழுதி இருந்த ஒரு நாடகத்தையும் தமது கூற்றுக்கு ஆதாரமாக அவர் எடுத்துக் கொண்டு இருந்தாராம். இது பற்றி ஏங்கெல்ஸ் கூறுகின்ற சில கருத்துகளைச் சிறிது நாம் பார்ப்போம்.

திரையர்தம் போரில் இருந்து அப் பொழுதுதான் திரும்பி வந்து இருக்கிறான் அ:கம்னான். அவனது மனைவியின் பெயர் க்லைட்டம்னெஸ்ட்றா. அவர்களது மைந்தனின் பெயர் ஒரேஸ்ட்டஸ். ஆனால், க்லைட்டம்னெஸ்ட்றாவுக்கு ஏஜிஸ்தஸ் என்று ஒரு காதலனும் உண்டு.

தனது காதலனுக்காகத் தனது கணவனைக் கொல்கிறாள் மனைவி! தனது தந்தையைத் தனது தாய் கொன்று விட்டதற்குப் பழி வாங்குவதற்காகத் தனது தாயைக் கொல்கிறான் அவளது மைந்தன்! கடவுள்களின் மன்றத்திற்கு வழக்கு வருகிறது.

தாய் உரிமைக்கு ஆதரவாளர்களான எரின்யர்களும் தந்தை உரிமைக்கு ஆதரவாளரான அப்பல்லோவும் மன்றத்தின் நடுவரான எத்தினாவும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொள்கிறார்கள்.

தனது கணவரைக் கொன்று இருக்கிறார் க்லைட்டம்னெஸ்ட்ரா! அவரது கணவரோ எனது தந்தை! எனவே, தனது கணவரையும் எனது தந்தையையும் கொன்று விட்ட இரட்டைக் குற்றங்களை அவர் புரிந்து இருக்கிறார் என்று வாதிடுகிறான் ஒரேஸ்ட்டஸ் — அப்பல்லோவின் ஆதரவுடன்!

தனது கணவனைக் க்லைட்டம்னெஸ்ட்ரா கொன்றது குற்றம் அல்ல! ஏனென்றால், அவனுடன் அவளுக்கு அரத்தப் பந்தம் ( blood relationship ) எதுவும் இல்லை என்று வாதிடுகிறார்கள் எரின்யர்கள்!

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப் படுகிறது. இரு தரப்பிற்கும் சமமான அளவில் வாக்குகள் கிடைக்கின்றன. முடிவில் ஒரேஸ்ட்டஸுக்கு ஆதரவாக வாக்கு அளித்து அவனை விடுவிக்கிறாள் எத்தினா! அப் பொழுதே ‘தாய் உரிமை ‘ அழிந்து ‘தந்தை உரிமை ‘ நிலைநிறுத்தப் பட்டு விட்டது என்கிறார் :பச்சோபன்!

மனித உறவுகளை மதக் கருத்துகள்தாம் தீர்மானிக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகப் :பச்சோபன் கூறுகின்ற ஒரு கதை இது!

‘எரின்யர்களையும் அப்பல்லோவையும் எத்தினாவையும் ஏஸ்கிலஸ் நம்புவது போலவே :பச்சோபனும் நம்புகிறார்; மாய வாதத்தில்தான் இத் தகையது ஒரு கருத்தாக்கம் முடிவுற்று ஆக வேண்டும் ‘ என்று கூறுகின்ற ஏங்கெல்ஸ், ‘:பச்சோபனது நூல் முழுவதையும் ஆய்ந்து கொண்டு இருப்பது வீண் வேலை ‘ என்றும் குறிப்பிடுகிறார். ( பார்க்க: The Origin of the family, Private Property and the State, PP.10-11.)

இங்கே, பொருளாதார ‘நலன்களுக்கும் ‘ ( economic interest ) கோட்பாடுகளுக்கும் ( ideology ) இடையே உள்ள உறவு என்ன ? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

கோட்பாடு ( Ideology )

தங்கள் கொள்கைகளாக மனிதர்களால் கொள்ளப் படுவனதாம் கோட்பாடுகள்! இந்தக் கோட்பாடுகளோ மனிதர்களின் பொருளாதார அல்லது பருமையான (material ) நலன்களைப் பாது காத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு அவர்களால் கொள்ளப் படுபவை! அதாவது, தங்கள் பொருளாதார நலன்களைப் பாது காத்துக் கொள்ளுகின்ற வகையில், தங்களுக்கு என மனிதர்கள் வகுத்துக் கொள்கின்ற கொள்கைகள்தாம் கோட்பாடுகள் ஆகும். இப்படிக் கொள்ளப் படுகின்ற கொள்கைகள்தாம், அரசு, குடும்பம், மதம், முதலிய கோட்பாட்டு நிறுவனங்களின் அமைவாக்கத்துக்கும் காரணம். எனவேதான், மனிதர்களின் கருத்து நிலவரங்களை மனிதர்களின் பருமை நிலவரங்கள்தாம் தீர்மானிக்கின்றன என்று மார்க்ஸியம் கொள்கிறது.

ஓர் எடுத்துக் காட்டாக, ஒரு முதலாளி கூறுவதாக ‘வாழ்க்கையின் கேள்விக ‘ளில் வருகின்ற ஒரு கூற்றினை இங்கு நாம் பார்ப்போம்:

‘எனவே, ‘பொருளாதாரத் தீர்மான வாதத்திற்கு ‘ எதிராகக் கூக்குரல் எழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை.

அள்ளிக் கொடுத்து மகிழ்ச்சியால் பூரிக்கின்ற ‘வள்ளல் மனம் ‘ எனக்கும் இருக்கத்தான் செய்கிறது என்ற போதிலும், அதனால் எனது பொருளாதார நலன்கள் பாதிக்கப் பட்டு விடும் என்பதால், கூலி உயர்வு கேட்கின்ற உழைப்பாளர்களைத் தடி கொண்டு தாக்கியும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி ஆக்கியும் ஒரு கொலை கார வாழ்க்கையினை நான் நடத்துகிறேன் என்றால், இரும்புத் தனமான எனது பொருளாதார நலன்களினால் நசுக்கப் பட்டு, ஒரு ‘வருக்க மனமாக ‘ எனது ‘மனித மனம் ‘ மாற்றம் அடைகிறது என்றுதானே, பொருள்! ‘ ( பக்.227. )

இதுதான் வாழ்க்கையின் மெய்மை; வெறும் ‘நல் எண்ணப் புலம்பல் ‘ அல்ல! மார்க்ஸியத்தின் அடிப்படையும் இதுதான்!

மார்க்ஸியத்திற்கு எதிராக வாதங்கள் புரிவதற்குத் தாராளமாக ஜமாலன் முன் வரலாம். ஆனால், கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்னும் உத்தியாக, யாரும் வீழ்த்தாமல் மார்க்ஸியம் வீழ்ந்து விட்டது என்று அவர் கருதிக் கொள்வதில்தான் எந்தப் பயனும் இல்லை. மார்க்ஸின் நூல்களைக் கொஞ்சம் படித்தும்தான் பார்க்கலாமே!

அதை விட்டு விட்டு, நேற்றைய வாதம், இன்றைய வாதம், நாளைய வாதம், என்கின்ற பாணியில், முன்-புதின வாதம், பின்-புதின வாதம், பின்னைக்கும் பின்-புதின வாதம், என்று எல்லாம் மாயங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டு இருப்பதில் யாருக்கு என்ன பயன் ?

மூளை நோகாத ஞானங்கள்

பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், என்று வரலாற்றுக் கட்டங்களை டென்மார்க் நாட்டு அகழ்வு ஆய்வாளர்கள் வகைப் படுத்தினார்கள் என்று மார்:கன் கூறுகிறார். ‘தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைக் குறிக்கின்ற வகைப்பாடுகள் ( categories ) இவை என்பதால், அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வகைப்பாடுகள் இவை என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

குலச் சமுதாயக் காலம், அடிமைச் சமுதாயக் காலம், பண்ணையச் சமுதாயக் காலம் ( சாதிச் சமுதாயக் காலம் ), முதலாண்மைச் சமுதாயக் காலம் என்று, ‘உற்பத்தி உறவு ‘களின் அடிப்படையில் சமுதாயங்களை மார்க்ஸியம் வகைப் படுத்துகிறது. மனிதர்களின் ‘சமுதாய உறவு ‘களை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப் பட்டு இருக்கின்ற வகைப்பாடுகள் இவை என்பதால் — மனித ‘உறவுகளின் தன்மை ‘தான் மனித வாழ்க்கையின் தன்மையினைக் குணவரைப் படுத்திட ( characterize ) முடியும் என்பதால் — சமுதாய அக்கறையுடன் வரையறுக்கப் பட்டு இருக்கின்ற வகைப்பாடுகள் இவை என்பதிலும் ஐயம் எதுவும் இல்லை.

ஆனால், புதின வாதம், பின்-புதின வாதம் என்கின்ற வரையறைகள், வெறுமனே ‘காலம் ‘ பற்றிய வரையறைகளே அன்றி ‘மனித உறவுகள் ‘ பற்றிய வரையறைகள் அல்ல. சொல்லப் போனால், ஸ்தாலினசத்திற்கு எதிராக எழுந்து வந்து இருந்த வெறும் மாய வாதச் சிதறல்கள்தாம் இவை! ஆனால், உடல் நோகாத அறிவாளர்களின் மூளை நோகாத இந்தச் சிந்தனைகளோ இரண்டும்-கெட்டான் சிந்தனைகள் ஆகி விட்டன. இவைதாம் சிற்றுடைமை ( Petty bourgeois )ச் சிந்தனைகளும் ஆகும். முதலாளர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் இடையே, இரண்டும்-கெட்டான்களாக இடி பட்டுக் கொண்டு இருப்பவர்கள் அல்லவா, அவர்கள்!

ஆனால், மார்க்ஸின் சிந்தனைகளோ மனித வாதச் சிந்தனைகள் ஆகும். மனித இயல்பு என்றும் மனிதச் சாரம் என்றும் மனித விடுதலை என்றும் எதுவும் இருந்திட முடியாது என்று நாம் சொல்வதற்கு, நமது மூளையை வருத்தி நாம் உழைத்திட வேண்டிய தேவை எதுவும் நமக்கு இல்லை.

மூக்கு முட்டச் சோறும் சோம்பலில் கழிப்பதற்குக் கொஞ்சம் ஓய்வும் மாய வாதத்தின் மயக்கமும் காதல் பற்றியும் காமம் பற்றியும் விந்தையான சில சிந்தனைகளும், கூடவே, இவற்றைப் படித்துப் பகிர்ந்து கொள்வதற்குச் சில கதைகளும் கவிதைகளும் இருந்தால் போதும், ஒரு பின்-புதின வாதியாக யாரும் மாறி விடலாம்; தனது வருமானத்தையும் தனது வசதிகளையும் தவிரப் பிற அனைத்தையும் கட்டுடைத்தும் பார்த்துக் கொள்ளலாம்!

அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில சிந்தனைச் சிதறல்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, மனிதர்களின் சமுதாய வாழ்க்கையை அந்தச் சிதறல்களுக்குள் அடக்கி விட முடியும் என்கின்ற கற்பனையில் மூழ்கிக் கிடப்பவர்கள் இவர்கள்!

ஒரு முதலாளியாலோ அல்லது உழைப்பாளியாலோ இத் தகு கற்பனைகளில் மூழ்கி விட முடிவது இல்லை; அத் தகைய வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிட்டுவது இல்லை. ஏனென்றால், பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டு வருபவர்கள் அவர்கள்! ஆனால், இந்த மாய வாதச் சிந்தனை யாளர்களுக்கோ, உடல் நோகாத வாழ்க்கையும் மூளை நோகாத ஞானமும் எப்படியோ கிடைத்து விடுகின்றன.

கார்ல் மார்க்ஸ்

‘சமுதாய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அறிவாண்மை வாழ்க்கை ஆகிய அனைத்தையும், பருமை வாழ்க்கையின் உற்பத்தி முறை நிலவரப் படுத்துகிறது. மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்களின் உணர்மை அல்ல; மாறாக, அவர்களது சமுதாய வாழ்க்கைதான் அவர்களின் உணர்மையைத்

தீர்மானிக்கிறது ‘ என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். ( பார்க்க: Preface, A Contribution to the Critique of Political Economy அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று, பக்.93. )

இந்த அடிப்படையில்தான் மதத்தைப் பற்றி அவர் கூறுகிறார் — ‘மெய்மை உலகின் மறுபலிப்புதான் ( reflection ) மத உலகம் ‘ என்று! ( Capital,Vol-I, P.83. அல்லது கார்ல் மார்க்ஸ்:முதல்:அதிகாரம் ஒன்று:பணம்:தமிழாக்கம்; பக்.123. ) ஆனால், மத உலகின் மறுபலிப்புதான் மெய்மை உலகம் என்று கூறிட முற்படுகிறார் ஜமாலன்! அதே நேரத்தில், இஸ்லாமியர் இடையே நிலவி வந்து இருந்த சமன்மைப் பண்பிற்கு அவர்களது வணிகம்தான் காரணம் என்று கூறிடவும் அவர் தயங்க வில்லை.

‘ஆன்மா இல்லாத உலகின் ஆன்மா ‘ என்று மதத்தை மார்க்ஸ் சித்தரித்ததற்கு, தாங்கள் இழந்து விட்ட தங்கள் மனித இயல்பினைக் கடவுளில் கண்டு மனிதர்கள் ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள் என்பதுதான் காரணமே ஒழிய, முற்போக்கானவை என்று மதங்களை அவர் கருதியது அல்ல. மண்ணைப் பற்றிய விள்ளனமாக விண்ணைப் பற்றிய விள்ளனம் ( criticism ) மாறி ஆக வேண்டும் என்று அவர் கருதியதற்கும் இதுதான் காரணம்! ( பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் இரண்டு, பக்.201- 02. )

ஏனென்றால், ‘தொழில் மற்றும் கைமாற்று ஆகிய வற்றுடன் தொடர்பு படுத்திதான் மனித இனத்தின் வரலாற்றினை நாம் ஆய்தல் வேண்டும் ‘ ( The German Ideology, P.49. ) என்பதுதான் மார்க்ஸின் அடிப்படையான கருத்து. இதற்கு, மனிதர்களின் உணர்மைக்குச் செயல் முறையான பங்கு எதுவும் வாழ்க்கையில் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் கூறுவதாகப் பொருள் ஆகி விடாது. ஏனென்றால்,

‘தங்கள் வரலாற்றைத் தாங்கள்தாம் மனிதர்கள் படைக்கிறார்கள்; ஆனால், தாங்கள் விரும்புவது போல் அதனை அவர்கள் படைத்து விடுவது இல்லை. அவர்களாகத் தேர்கை செய்து கொண்ட சூழ் நிலைகளை ஆதாரமாகக் கொண்டும் வரலாறு படைக்கப் படுவது இல்லை. கடந்த காலத்தில் இருந்து வளர்ச்சி உற்று வந்து, நேரடியாக அவர்களை எதிர் கொண்டு நிற்கின்ற சூழ் நிலைகளை ஆதாரமாகக் கொண்டுதான், தங்கள் வரலாற்றை மனிதர்கள் படைக்கிறார்கள் ‘ ( பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று; பக்.67. ) என்பதுதான் வரலாற்றின் படைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்தாக்கம்.

ஆனால், வருக்க உணர்மை பெற்ற ஒரு முன்னணிப் படையாகக் கட்சியை மார்க்ஸ் கருதினார் என்று, லெனினின் காவுட்ஸ்கியிசத்தை மார்க்ஸின் மேல் ஏற்றி வைத்து விடுகிறார் ஜமாலன்! ( இது பற்றிப் பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் இரண்டு; அதிகாரம்-3: புரட்சிகர உணர்மை. )

மக்களுக்குக் கட்சி வழி காட்ட, கட்சிக்குத் தலைவர் வழி காட்ட, தேர்வு செய்யப் பட்ட ஒரு சிலரின் ஞானத்தினால் வழி நடத்தப் படுகின்ற ஒரு சமுதாயமாகப் பொதுமைச் சமுதாயத்தை ( communist society ) என்றைக்கும் கார்ல் மார்க்ஸ் கருதியது இல்லை.

வரலாற்றின் படைப்பு பற்றிய ஹே:கலின் கருத்தாக்கத்தையும் :ப்ருனோ :பாயரின் கருத்தாக்கத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்து, மார்க்ஸ் கூறுகின்ற ஒரு கருத்து இதனை நமக்குத் தெளிவு படுத்தும். ‘திறனாய்வு ‘ என்பதைப் புரட்சிகர உணர்மை ( revolutionary consciousness ) என்று மட்டும் ஈண்டு நாம் புரிந்து கொண்டால் போதும் ஆனது.

முதலாவதாக, ‘திறனாய்வுதான் முழுமையான உயிர்மை ( absolute spirit ) எனவும் தானேதான் அந்தத் திறனாய்வு எனவும், :ப்ருனோ :பாயர் பறை சாற்றுகிறார். (மக்கள்) திரளிடம் இருந்து திறனாய்வுக் கூறு விரட்டி அடிக்கப் படுவது போல, திறனாய்வில் இருந்து (மக்கள்) திரளின் கூறு விரட்டி அடிக்கப் படுகிறது. எனவே, திரளிடம் அல்லாமல், அதற்கு எனத் தேர்கை செய்யப் பட்ட சில தனி மனிதர்களிடம் — :பாயர் மற்றும் அவரது சீடர்களிடம் — தனது பிறப்பெடுப்பைத் திறனாய்வு காண்கிறது. ‘

இரண்டாவதாக, ‘. . . மனித இனத்தின் எஞ்சிய திரளுக்கு எதிராக, உலக உயிர்மை என்னும் பங்கினை உணர்மையாக அவர் ஆற்றுகிறார்; . . .ஒரு நோக்கத்துடன் — முதிர்ந்த சிந்திப்பிற்குப் பின்னர் — வரலாற்றை உருவாக்கி அவர் இயக்குகிறார். ‘ ( பார்க்க: The Holy Family, PP.101-02. அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.81. )

ஆக, மக்களுக்கு வழி காட்ட வந்தவராக என்றைக்கும் தம்மை மார்க்ஸ் கருதியது இல்லை என்பது தெளிவு.

‘உங்கள் போராட்டங்கள் மடமையானவை. அவற்றைக் கை விடுங்கள். உண்மையான போர் முழக்கங்களை உங்களுக்கு நாங்கள் நல்குவோம் என்று நாம் சொல்லப் போவது இல்லை; மாறாக, உலகம் ஏன் போராடிக் கொண்டு இருக்கிறது என்பதைச் சொல்லிட மட்டும்தான் போகிறோம். இதனைப் பற்றிய உணர்மையினை உலகம் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் — அது விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி! ‘ ( Early Writings, P.209 அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் இரண்டு; பக்.69. ) என்பதுதான் மார்க்ஸியப் பான்மை ஆகும்.

ஸ்தாலினிசத்தின் வீழ்ச்சி

மார்க்ஸைப் பொறுத்த வரை, ‘விடுதலையான தனி மனிதர்களின் சமுதாயம் ‘தான் பொதுமைச் சமுதாயமே ஒழிய ( பார்க்க: கார்ல் மார்க்ஸ்:முதல்:அதிகாரம் ஒன்று:பணம்:தமிழாக்கம்; பக்.122. ), ஆயர்களைப் பின் தொடர்கின்ற ஆடுகளைப் போல, தலைவர்களைப் பின் தொடர்கின்ற மனிதர்களின் மந்தைச் சமுதாயம் அல்ல! சரியாகச் சொல்வது என்றால், ‘விடுதலையான மனிதர்களின் விடுதலையான உறவுகளாக விரிகின்ற ஒரு சமுதாயம் ‘தான் பொதுமைச் சமுதாயம் ஆகும்.

இதனால்தான், சோவியத் ருஷ்யா வீழ்ச்சி அடைந்த உடன் மார்க்ஸியமும் வீழ்ச்சி அடைந்து விட்டது என்றும் இந்த வீழ்ச்சியில் எழுச்சி கண்டதுதான் அடிப்படை வாதம் என்றும் ஜமாலன் கூறுகின்ற பொழுது நமக்குச் சிரிப்பு வருகிறது.

மார்க்ஸியத்தின் வழி காட்டுதலில்தான் ‘புரட்சிகர மாற்றம் ‘ அடைந்ததாம் சோவியத் ருஷ்யா, ஜமாலன் கூறுகிறார்! அப்படி என்றால், மார்க்ஸ் என்று ஒருவர் மட்டும் பிறக்காமல் இருந்து இருந்தால், ருஷ்யாவில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு இருந்து இருக்காது என்று ஜமாலன் கருதுகிறாரா ? சில நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாக மட்டும் மார்க்ஸ் பிறந்து இருந்தால், மிகவும் முன்னரே ருஷ்யாவில் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்து இருக்குமா ? அப்படி என்றால், மார்க்ஸிய வாதிகளின் வழி காட்டுதலில் சமுகாண்மைச் சமுதாயத்தைச் சமைத்துக் கொண்டு இருந்த ருஷ்ய மக்கள், முதலாண்மை வாதிகளின் வழி காட்டுதலில் இன்று முதலாண்மைச் சமுதாயத்தை உருவாக்கிட முற்பட்டு விட்டார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா ? கேள்விகள் எழுகின்றன.

ஆட்சியாளர்களாகச் சோவியத் ருஷ்யாவில் அரியணை ஏறி இருந்த லெனின், திரோத்ஸ்கி, ஸ்தாலின் முதலியோர், மார்க்ஸிய வாதிகளாகத்தாம் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், ருஷ்யாவில் அன்று உருவாகி இருந்ததோ ‘அரசு முதலாண்மை ‘ச் சமுதாயம்! தமது இறுதி நாட்களில் ருஷ்யச் சமுதாயத்தை இப்படித்தான் லெனின் வரையறுத்தும் இருந்தார். ( பார்க்க: Collected Works, Vol.XXXII, PP. 334,335,344-45,346 அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் இரண்டு; பக்.156- 57. )

எனவே, ருஷ்யாவில் வீழ்ச்சி அடைந்தது அரசு முதலாண்மைச் சமுதாயமே ஒழிய, சமுகாண்மை ( socialist )ச் சமுதாயம் அல்ல. அதாவது, அரசு முதலாண்மையின் அதிகார வருக்கக் கோட்பாடான ஸ்தாலினிசம்தான் அங்கு வீழ்ச்சி அடைந்ததே ஒழிய, மார்க்ஸியம் அல்ல!

‘ ‘நலன் ‘ என்பதில் இருந்து ‘கருத்து ‘ என்பது எந்த அளவுக்கு வேறுபட்டு வந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு, கருத்து என்பது எப் பொழுதும் அவமானப் பட்டுதான் வந்து இருக்கிறது ‘ ( The Holy Family, Moscow, P.96. ) என்று மார்க்ஸ் கூறியது போல, சோவியத் ருஷ்யாவின் ஸ்தாலினிஸ்டுகளால், மார்க்ஸியம் இன்று அவமானப் பட்டு நிற்கிறது என்று வேண்டும் என்றால் ஜமாலன் கருதிக் கொள்ளலாம், அவ்வளவுதான்! இதில், ஸ்தாலினிஸ்டுகளுடன் திரோத்ஸ்கியிஸ்டுகளையும் நாம் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. ஏனென்றால், அரசு முதலாண்மைக்குச் சமுகாண்மை என்று பெயர் சூட்டி விடுவதில் யாருக்கும் திரோத்ஸ்கி சளைத்துப் போய் விட வில்லை!

இனி, அடிப்படை வாதம் பற்றிய ஜமாலனின் கருத்துகளைச் சிறிது நாம் பார்ப்போம்.

அடிப்படை வாதம்

அரசியல் என்றாலும் சரி, கற்பு, கடப்பாடு முதலிய குடும்பக் கோட்பாடுகள் என்றாலும் சரி, மதம் என்றாலும் சரி, இவற்றின் வேர்களைப் பொருளாதார நலன்களில்தாம் நாம் தேடி ஆக வேண்டும் என்று மார்க்ஸியம் கூறுகிறது. ஆனால், அரசியலின் வேர்களை அரசியலிலும் மதத்தின் வேர்களை மதத்திலும்தாம் நாம் தேடிட வேண்டும் என்கின்ற ஒரு கொள்கையைக் கொண்டு இருக்கிறார் ஜமாலன்! விரிக்கில் பெருகும் என்பதால், ஜமாலன் வெளிப் படுத்துகின்ற அத்தனை கருத்துகளையும் பின் வருமாறு நாம் சுருக்கிக் கொள்ளலாம்:

ஒவ்வொரு மதத்தினர் இடையேயும் எழுகின்ற அடிப்படை வாதத்தின் வேர்கள், அந்தந்த மதங்களுக்கு உள்ளேதான் ஆழமாய்ப் புதைந்து கிடக்கின்றன. ஆனால், உலக அரசாட்சிக்கான போட்டியில் ஒவ்வொரு மதமும் இன்று ஈடு பட்டு நிற்பதால், அந்தந்த மதங்களின் ‘முன்னணிப் படைகளான ‘ அடிப்படை வாதிகள், உலகு அளாவிய போர்களில் இன்று ஈடு பட்டுக் கொண்டு வருகிறார்கள். ‘உலக அரசாட்சிக்கான மதங்களின் போட்டி ‘ என்பதுதான் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தனிச் சிறந்த கூறு!

அடிப்படை வாதம் பற்றிய ஜமாலனின் மையக் கருத்து இது!

முதலாண்மையின் மறுமலர்ச்சி

மலிவான சரக்குகளின் மூலம் உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியும் வலுவான தேசிய அரசுகளின் மூலம் பிற நாடுகளை அடிமைப் படுத்தியும், வெற்றி கரமாக வளர்ந்து வந்து கொண்டு இருந்த முதலாண்மை, இருபதாம் நூற்றாண்டில் தள்ளாடத் தொடங்கி இருந்தது. முதலாளர்களின் எதிர்ப் புரட்சிகளும் உலகப் போர்களும் இந்தத் தள்ளாட்டத்தின் அடையாளங்கள்தாம் என்றால் அது பிழை ஆகாது.

மன்னர் ஆட்சியும் பண்ணையக் கிழார்களும் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர், ருஷ்யாவில் அரசு முதலாண்மை உற்பத்தி முறை எழுச்சி கண்டதற்குக் கூட, தனியார் முதலாண்மையின் இந்தத் தள்ளாட்டம்தான் காரணம். இந்தத் தள்ளாட்டத்தின் தொடர்ச்சியில், பேரரசு நாடுகளாக இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகள் விடுதலை அடைந்தன என்றால், வேறு பிற நாடுகளிலோ தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி கண்டு வந்து இருந்தன.

அதே நேரத்தில், பழைய பண்ணையத்துடன் கூட்டுச் சேர்ந்துதான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற முதலாண்மையின் பலவீனமோ, மன்னர் ஆட்சிகளூக்கு ஆதரவாகவும் தேசியப் போராட்டங்களுக்கும் பொது நாயக ( democracy )ப் போராட்டங்களுக்கும் எதிராகவும், முதலாண்மைத் தேசங்களைத் திசை திருப்பி விட்டு இருந்தது.

ஆனால், அரசு முதலாண்மை என்பது முதலின் இயல்பான ஒரு வடிவம் அல்ல! எனவே, பழைய சமுதாய நிலவரங்களை ஒழித்துக் கட்டி விட்டு, அரசு முதலாண்மை வடிவத்தில் குறிப்பிட்டது ஒரு வளர்ச்சி நிலையினை எய்தி விட்ட உடன், அரசின் ஆதிக்கத்தில் இருந்து ‘முதல் ‘ விடுதலை பெற்றிடத் தக்க நிலவரங்கள் உருவாயின. பண்ணையத்துடன் கொண்டு இருந்த பிற் போக்கான கூட்டணியினை முறித்துக் கொள்ளுகின்ற அளவுக்கு வலிமை பெற்றும் முதல் திகழ்ந்திடத் தொடங்கியது.

முதலாண்மையின் இந்தப் புதிய எழுச்சிதான், உலகு எங்கிலும் அரசு முதலாண்மையின் வீழ்ச்சிக்கும் தேசிய இனங்களின் எழுச்சிக்கும் காரணம் ஆகும். எனவே, முதலாண்மையின் மறுமலர்ச்சி நூற்றாண்டு என்று இருபத்து ஒன்றாம் நூற்றாண்டை நாம் அழைப்பதில் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால், தேசிய இனங்களின் எழுச்சியும் தனி மனித உரிமைகளின் வளர்ச்சியும் ஏற்படத் தக்கது ஒரு முற்போக்கான நூற்றாண்டு இது!

அப்படி என்றால், இன்றைய அடிப்படை வாதத்திற்குக் காரணம் என்ன ? என்பது கேள்வி.

இங்கே, புரட்சிகரமான வருக்கம் என்று முதலாளர் வருக்கத்தைக் கார்ல் மார்க்ஸ் கணித்ததற்குக் காரணமாக அமைந்து இருந்த முதலாண்மையின் சில கூறுகளைச் சிறிது நாம் பார்ப்போம்.

(க) தனி மனித உரிமைகள்

விடுதலையான ஒரு தனி மனிதனாக ஒவ்வொரு மனிதனும் திகழ்ந்திடத் தக்க பருமை நிலவரங்களை முதலாண்மை உருவாக்குகிறது. சமன்மையும் ( equality ) கிளைமையும் ( fraternity ) மாண்பும் ( dignity ) ஒவ்வொரு மனிதன் இடத்தும் ஒப்பளிக்கப் ( recognize ) படத் தக்க நிலவரங்கள் இவை!

சமுதாய உறவுகளில் அடிமைப்பாடுகளும் முரண்பாடுகளும் பகைமைகளும் சாதிக் கொடுமைகளும் மனிதர்கள் இடையே நிலவிடத்தான் செய்கின்றன என்ற போதிலும், தனிப் பட்ட முறையில் ஒவ்வொரு மனிதனும் இங்கே விடுதலை ஆனவன்!

அப்படி என்றால், தங்கள் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும், அடக்கு முறையாக மற்றவர்கள் மீது திணிப்பதற்கு, எந்த ஒரு மனிதனுக்கும் இங்கே உரிமை இல்லை என்று பொருள்! இதன் அரசியல் வெளிப்பாடுதான் பொது நாயக ( democracy ) ஆட்சி முறையும் ஆகும்.

அரசியலில் இருந்து மதத்தை முதலாண்மை விலக்கி வைத்து இருப்பதால், எந்த மதத்தையும் தழுவிக் கொள்வதற்கு எந்த மனிதனுக்கும் இங்கே உரிமை உண்டு! ‘பெரும் பான்மை ‘யை அனுசரித்துதான் ‘சிறுபான்மையினர் ‘ செயல் பட்டிட வேண்டும் என்பது, அரசியலில் ஆளும் கட்சிகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் வேண்டும் என்றால் பொருந்தி வரலாமே ஒழிய, மத நம்பிக்கைகளுக்கு அல்ல! அரசியலில் கூட, பெரும் பான்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற அனைத்து உரிமைகளும் சிறுபான்மைக்கு உண்டு!

ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில், பெரும் பான்மை மதம் எது ? சிறு பான்மை மதம் எது ? என்கின்ற கேள்விகளுக்கே இடம் இல்லை. ஏனென்றால், மதம் என்பது ஆள்வயமானது ( personal ); மனிதர்களின் தனிப் பட்ட நம்பிக்கைகளைப் பொறுத்தது! விளைவாக, அரசியலிலோ, தனி மனித உரிமைகளிலோ, சட்டங்களிலோ தலையிடுவதற்கு எந்த மதத்திற்கும் உரிமை இல்லை!

எடுத்துக் காட்டாக, கடவுள் இணைத்த கணவனையும் மனைவியையும் மனிதன் பிரிக்க ஒண்ணாது என்றுதான் கிறிஸ்தவ மதம் கூறுகிறது. ஆனால், மண முறிவுக்கு என்று கிறிஸ்தவ மக்கள் இடையே சட்டங்கள் இருக்கின்றன; மண முறிவுகளைக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

பிரிக்க முடியாத பந்தங்களை உருவாக்குகின்ற ஒரு புனிதச் சடங்கு என்றுதான் திருமணங்களை இந்து மதம் கருதுகிறது. எனினும், இந்துத் திருமணச் சட்டமோ மண முறிவுக்கு ஒப்பளிப்பு நல்குகிறது.

ஆனால், திரு மணம் மற்றும் மகிழ் மணம் ஆகிய வற்றைச் சமுதாய ஒப்பந்தங்களாக மட்டும் கருதுகின்ற இஸ்லாம் மதத்திலோ, மண முறிவுகளை அறிவித்துக் கொள்ளுகின்ற உரிமையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சமன்மை இல்லை; கணவனின் அனுமதியை ஏற்கனவே பெற்று இருந்தால் மட்டும்தான் மண முறிவினை அறிவிக்கும் உரிமையை மனைவி பெறுகிறார்.

இப்படி, இந்துச் சட்டங்களும் (!) கிறிஸ்தவச் சட்டங்களும் (!) சட்டத்தின் எல்லைகளுக்கு அப்பால் மதங்களை ஓரம் கட்டி வைத்து இருக்கின்றன என்றால், இஸ்லாமியச் சட்டங்களோ மதத்தின் பெயரால்தான் இன்னமும் செயல் பட்டுக் கொண்டு வருகின்றன. பண்ணையக் கூறுகளும் சிற்றுடைமைப் பான்மைகளும், இஸ்லாம் சட்டங்கள் மேல் செலுத்தி வருகின்ற ஆதிக்கம்தான் இதற்குக் காரணம்.

ஆக, எதை உண்பது, எதை உடுப்பது, எப்படி வாழ்வது, என்பனவற்றில் மட்டும் அல்ல, பிற அனைத்து உலகாயத ( secular ) காரியங்களிலும், மதம் தலையிடுகின்ற உரிமையினை மறுத்து, தனி மனித உரிமைகளை நிலைநிறுத்திட முதலாண்மை முன் வருகிறது என்பது தெளிவு.

எனவேதான், தமது சைவ சித்தாந்த நண்பர்கள் தம்மை ஆழம் பார்க்கிறார்களோ என்று கவனித்திட வேண்டிய தேவையும் ஜமாலனுக்கு இல்லை!

இங்கே ஒரு கேள்வி எழலாம் — மனித உரிமைகள் எல்லாம் முதலாண்மையால் மெய்மைப் படுத்தப் பட்டு விட்டனவா ? என்று!

காலத்திற்குக் காலம் வளர்ந்து வந்து இருக்கின்ற சூழ் நிலைகளுக்கு ஏற்பத் தங்கள் வரலாற்றினைத் தாங்கள்தாம் மனிதர்கள் படைத்துக் கொள்கிறார்கள் என்று கார்ல் மார்க்ஸ் கூறியது போல, முதலாண்மையின் பருமை நிலவரங்கள் அடைந்து இருக்கின்ற பக்குவத்திற்கு ஏற்பத் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வது மனிதர்களின் பொறுப்புதான் ஆகும்

(ச) தேசிய இனங்கள் எழுச்சி

பல் வேறு தேசிய இனங்களையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டு ஆட்சி நடத்தி வந்த பேரரசுகளை உருக் குலைத்து, தங்கள் சொந்த ஆட்சியினைத் தேசிய இனங்கள் அமைத்துக் கொள்ளுகின்ற பருமை நிலவரங்களை, முதலாண்மை உருவாக்குகிறது.

அதாவது, அரசு முதலாண்மையை ஆதரித்து வந்த பேரரசுகளுக்குப் பல சமயங்களிலும், அயலாதிக்கத்தை எதிர்த்து எழுந்து வந்த தேசியப் போராட்டங்களுக்குச் சில சமயங்களிலும், ஆதரவு அளித்து வந்த அரசு முதலாண்மை அரசுகளைப் போல் அல்லாமல், விடுதலையான வணிகப் போட்டியினை உலக அளவில் வளர்த்திட விழைகின்ற முதலாண்மையின் மறுமலர்ச்சியோ, தேசிய இனங்களின் எழுச்சிக்குத் தேவையான பருமை நிலவரங்களை உருவாக்குகிறது.

ஆனால், ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல, தேசிய இனங்களின் விடுதலையினைச் சாதித்துக் கொள்வது தேசிய இனங்களின் பொறுப்புதான் ஆகும்.

இனி, அடிப்படை வாதத்திற்கு நாம் வருவோம்.

சிற்றுடைமையின் அடிப்படை வாதம்

விடுதலையான வணிகப் போட்டியினை அவசியப் படுத்தி வருகின்ற முதலாண்மையின் மறுமலர்ச்சியில், உலகச் சந்தையைச் சார்ந்தும் முற்றிலும் சமுதாய மயமாகவும் உற்பத்தியும் பகிர்வும் நடை பெற்று வந்திட முடிகிறது. முதலாண்மையினது அழிவின் அவசியங்களை உருவாக்கிடத் தக்க இத் தகு சூழ் நிலைகள், கூடவே, தொழில் நுட்பத்தையும் வளர்க்கின்றன.

இந்தத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் விடுதலையான வணிகப் போட்டியும் சிறு உற்பத்தியாளர்களான சிற்றுடைமைக் காரர்களை ( petty bourgeois )ச் சீரழித்து, ஒரு பக்கம் முதலாளர்களும் மறு பக்கம் உழைப்பாளர்களும் ஒருத் திரளுகின்ற சூழ் நிலைகளை உருவாக்குகின்றன.

இதனால், முதலாளர்களாக வளர்ந்திடவும் முடியாமல் உழைப்பாளர்களாக மாறிடவும் விரும்பாமல், ஓர் இரண்டும்-கெட்டான் நிலையில் சிற்றுடைமைக் காரர்கள் அல்லல் பட நேர்ந்து விடுகிறது. இந்தச் சிற்றுடைமைக் காரர்களின் ஒரு மூடு-மந்திர வாதம்தான் மத அடிப்படை வாதம் ஆகும். ( பார்க்க: வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் ஒன்று, முன்னுரை; பாகம் இரண்டு, பக்.179: முரட்டு வாதம். )

பண்ணையக் கிழார்களை எதிர்த்து முதலாளர்கள் போராடத் தொடங்கிய காலங்களில், முதலாண்மையின் பக்கம் நின்று இருந்தவர்கள் இவர்கள்! முதலாளர்கள் பலவீனம் அடைந்து இருந்த நேரங்களில், பண்ணையக் கிழார்களுக்கு ஆதரவாக நின்று இருந்தவர்களும் இவர்கள்தாம்!

தேசிய விடுதலைப் போராட்டங்களில் தேசியத்தின் பக்கம் நின்றிட இவர்கள் தயங்கிட வில்லைதான் என்ற போதிலும், முதலாண்மையின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, தங்கள் சிற்றுடைமைகளைப் பாது காத்துக் கொள்வதுதான், அப் பொழுதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. இதனால்தான், வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுற்றிட விரும்புகின்ற பிற்போக்காளர்கள் என்று இவர்களை லெனின் வரையறுத்திடவும் நேர்ந்தது. ( பார்க்க: Collected Works, Vol.I, P.353 அல்லது வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு; பக்.18-19. )

எல்லா எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளிலும் அடியாட்களாக முன் வந்து நிற்பவர்கள் இவர்கள்தாம்! ஹிட்லரின் முரட்டு வாதத்திற்கு ( fascism ) ஆதரவாளர்களாக நின்று கொண்டு இருந்தவர்களும் இவர்கள்தாம்!

பொதுப் படையாகச் சொல்வது என்றால், பழைமையின் பாது காவலர்கள் இவர்கள்! பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் மட்டும் மாற்றம் அடைந்து வருகின்ற பண்பாடுகளை, புவி எல்லைகளுக்கு உள்ளும் மத எல்லைகளுக்கு உள்ளும் மொழி எல்லைகளுக்கு உள்ளும் அடைத்து வைத்திட விரும்புபவர்கள்!

வெளிப்படையான முதலாண்மைப் பண்பாடு இவர்களுக்குப் பிடிப்பது இல்லை. மேலைப் பண்பாடு என்று அதனை ஒதுக்கி வைத்திடுகின்ற முயற்சிகளை என்றைக்கும் இவர்கள் கை விடப் போவதும் இல்லை! மேலைப் பண்பாடு கூட, முதலாண்மைப் பண்பாடாக மாறி வந்து இருக்கின்ற ஒரு பண்பாடுதான் என்பதும் இவர்களுக்குப் புரிவது இல்லை.

முதலாண்மையின் வளர்ச்சியில் தாங்கள் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்திடத் துடிக்கின்ற இவர்கள், இறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற ஒரு வாதம்தான் ‘மத அடிப்படை வாதம் ‘ ஆகும்.

ஆக, அழிவின் விளிம்பில் நின்று கொண்டு, புதிய வளர்ச்சிகள் அனைத்தையும் அழித்திடத் துடிக்கின்ற பிற்போக்காளர்களின் இறுதி ஆயுதம்தான் மத அடிப்படை வாதம் என்பது தெளிவு.

அமெரிக்காவின் மேல் தாலி:பான்கள் நடத்திய தாக்குதல், கிறிஸ்தவர்கள் மேல் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் அல்ல; மாறாக, உலக முதலாண்மையின் அதிபதிகளின் மேல், உலகின் மூலைகளில் ஓரம் கட்டப் பட்டு இருந்த சிற்றுடைமைக் காரர்கள் நடத்திய தாக்குதல்! இஸ்லாமிய நாடுகளில் முதலாண்மை வளர்ந்து, பழைய பொருளாதார அடிப்படைகளைத் தகர்த்து எறிந்து விடக் கூடாதே என்கின்ற பேரச்சம்தான் இதற்குக் காரணம்!

இந்து அடிப்படை வாதிகளுக்கும் இஸ்லாம் அடிப்படை வாதிகளுக்கும் இடையே இந்திய ஒன்றியத்தில் நடைபெற்று வருகின்ற மோதல்கள், இஸ்லாம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே நடைபெற்று வருகின்ற மோதல்கள் அல்ல; மாறாக, அரசு முதலாண்மை வீழ்ந்து, தனியார் முதலாண்மை வளர்ந்திடத் தக்க நிலவரங்களை எதிர்த்திட முடியாத சிற்றுடைமைக் காரர்கள், அழிவின் அச்சத்தில் மதி மயங்கிப் போய், பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்ற எதிர் மதக் காரர்களுக்கு எதிராகத் தொடுத்துக் கொண்டு இருக்கின்ற தாக்குதல்கள்தாம் இவை!

எனவே, முதலாண்மையின் வேகமான வளர்ச்சியில் மட்டும்தான் அடிப்படை வாதங்கள் தவிடு பொடி ஆகிட முடியும் என்பது முடிபு.

இறுதியாக, இந்தக் கட்டுரையின் கருத்துகளை நாம் ஆய்ந்து கொள்ளுகின்ற வகையில், தமது கருத்துகளை முன் மொழிந்து நமக்கு உதவி இருக்கின்ற ஜமாலனுக்கு நமது நன்றியினை நாம் தெரிவித்துக் கொள்வோம்! எதிர்க் கருத்துகளின் மோதல்களில்தாமே, தெளிவு பிறந்திட முடியும்!

sothipiragasam@lycos.com

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்