சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

வ ஐ ச ஜெயபாலன்


8

அப்போதெல்லாம் சிகரட் புகைக்கிறவர்கள் குறைவு. யாழ்ப்பாணத்துப் புகையிலையும் சுருட்டும் இல்லையென்றால் தென் இலங்கையில் சிங்களவர்களுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாளிகளுக்கும் பொழுதும் விடியாது, கக்கூசுக்கும் போகாது. மத்தியானம் சாப்பிடுகிற உணவுகூட ஒழுங்காகச் செமிக்காது. யாழ்ப்பாணத்துச் சுருட்டு அத்தனை மதுரமாய் இருக்குமாம். சில வீடுகளில் ஆண்கள் புகைத்த சுருட்டின் மீதியை பெண்கள்கூட இரகசியமாக எடுத்துப் புகைப்பார்களாம். மலேசியா சிங்கப்பூர் போன இளைஞர்கள் அனுப்புகிற பணத்தோடு இப்படி சிங்களவரும் மலையாளிகளும் அள்ளித் தருகிற பணமும் சேர்ந்து யாழ்ப்பாணத்து மேல்சாதிகளைப் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தது. பணம் கொஞ்சம் கீழ் மட்டங்களுக்கும் சிந்தியதி யாழ்ப்பாணத்தின் சமூக ஒழுங்குகளை எல்லாம் புரட்டிப் போட ஆரம்பித்தது. ஒருமுறை அப்பாவைச் சந்திக்க வந்த இளைஞர்கள் சாதிக் கொடுமைக்கு எதிராகப் பேசினார்கள். தமிழரசுக் கட்சி சாதிக் கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை என அவர்கள் குற்றம் சுமத்திய பொழுது அப்பா கொஞ்சம் எரிச்சல் அடைந்தார். எல்லாம் படிப்படியாக மாறிக் கொண்டு வருகின்றது. சாதி பகுபாட்டை மறந்து தமிழர்கள் ஒற்றுமைப் பட்டு வருவது கொம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை அதனால்த்தான் நளவரையும் பள்ளரையும் தூண்டி விட்டுக் குட்டையைக் குழப்பப் பார்க்கிறார்கள் என்று அப்பா சொல்வார். . கொம்யூனிட்டுகள் சிங்களவர்களின் அடிவருடிகளாகி விட்டார்கள். உங்களைப் போன்ற இளைஞர்கள் அவர்களிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என அப்பா வலியுறுத்துவார். கம்யூனிஸ்டுகள் சிங்களவரின் அடி வருடிகள் என்பதை இளைஞர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இறுதியில் நெடுந்தீவில் எல்லாச் சாதியினரும் கலந்து கொள்கிறமாதிரி ஒரு சமபந்தி போசனம் ஏற்பாடு செய்வதாக முடிவாயிற்று. சாப்பாடுகள் எல்லவற்றையும் தானே ஒழுங்குபண்ணுவதாக அப்பா பிடிவாதமாகச் சொன்னார். உணவை எல்லோரும் சேர்ந்து சமைக்க வேண்டும், பிள்ளையார் கோவில் உள் மண்டபத்தில் சமபந்தி போசனம் ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கைகளை அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் கோவிலுக்குள் உயர்சாதியினர் மட்டும்தான் போகலாம் என்பதுதான் தமிழரசுக் கட்சியின் கொள்கையா என ஒருவன் கூச்சலிட்டான். எனக்குப் பயமாய் இருந்தது. இது தமிழர் அரசுக்கான போராட்டமா ? அல்லது உயர்சாதித் தமிழரது ஆதிக்கத்துக்கான போராட்டமா ? என யாரோ கேட்டார்கள். அப்பா நின்று நிதானித்துப் பொறுமையாகப் பேசினார். சமயத்துக்குள் அரசியலையும் அரசியலுக்குள் சமயத்தையும் கொண்டுபோகக் கூடாது என்பதுதான் தமிழரசுக் கட்சியின் கொள்கை என்றார். படிப்படியாக எல்லாம் சரியாகி கொண்டு வருகிறது என்றார். இந்தக் காலத்து இழைஞர்களுக்கு வேகம் அதிகம் என பாராட்டவும் செய்தார். இறுதியாக அந்த இளைஞர்கள் அரை மனதுடன் அப்பாவின் திட்டத்துக்கு இசைந்து போனார்கள். சமபந்தி போசனத்தில் கலந்து கொள்ள ஒடுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த சிலரை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு அழைத்து வருவதாகச் சொன்னார்கள். வந்தவர்களுள் தீவிர வாதியாக இருந்த தாடி கார இளைஞரை பக்கத்தில் அழைத்து உங்களுக்காக வனியசிங்கத்தையோ அல்லது இராசவரோதயத்தையோ பிரதம பேச்சாளர்களாக சேர்த்துக் கொள்ளலாம். என்றார். வனிய சிங்கம் முக்கால் பங்கு கொம்யூனிஸ்ட் கால் பங்கு தமிழரசுக் கட்ட்சி என்றார். தந்தி மூலம் பத்திரீகைகளுக்குச் செய்தி கொடுக்கவும் முடிவானது. தந்திச் செலவையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார்.

அப்பா இரண்டொரு வருடத்துக்கு ஒருமுறையேனும் யாழ்ப்பாணத்துப் புகையிலை வியாபாரிகளுடன் கேரளா எல்லாம் போய் வந்துகொண்டிருந்தார். ஆறு மாசம் சிங்கள பகுதியில் வியாபாரம் மூன்றுமாசம் வியாபாரப் பயணங்கள் மிகுதி மூன்றுமாசம் குடும்பம் என அவரது வாழ்க்கை போய்க்கொண்டிந்தது.

9

வாயாடி நம்பர் வண் என எனக்குப் புதிய பட்டம் சூட்டுவதற்க்காக மலையாள மண்ணில் இருந்து எனது ஊருக்கு லாம் மாஸ்டர் தம்பதிகள் வந்து சேரும்வரை கலிமாதான் எனது பட்டப் பெயராக இருந்தது. எனக்கும் தம்பிமாருக்கும் மட்டுமல்ல, எனது அப்பா, தாத்தா அவர்களது ஆண் சகோதரர்கள் என எனது தந்தை வழிச் சமூகத்துக்கே பல தலை முறைகளாக கலிமா தான் பட்டப் பெயர்.

எனது தந்தையாரின் ஊரான நெடுந்தீவு பட்டப் பெயர்களுக்குப் பெயர்போனது. கவிதைக்கு அடி எடுத்துக் கொடுப்பதைப் போல பட்டப் பெயர் வைக்கிறதில் பெயர்போன நாட்டுக் கவிகள் சிலர் எப்போதும் அந்தத்தீவில் இருந்தார்கள். கட்டணம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு துண்டு புகையிலைக்கோ அல்லது ஒரு வாய் வெற்றிலை பாக்குக்கோகூட பல தலை முறைகள் நிலைக்கக் கூடிய ஒரு நல்ல பட்டப் பெயரை பொன்னில் நகை அடிப்பதுபோல இயற்றித் தருவார்கள். சகோதரர்களோடு ஒற்றுமையும் தந்திரமும் கள்ளத்தனமும் உள்ள ஒருவருக்கு கக்கையர் என பட்டம் வைத்தால் அந்தப் பட்டப் பெயர் காக்கையரின் ஆண் வாரிசுகளுக்குத் தலை முறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்து வாய்மொழி வளக்கில் குடும்பப் பெயர் போல நிலைத்துவிடும். எல்லோரும் அவர்களைக் காக்கையர் கூட்டம் என்பார்கள். எனது ஊர் முன்னோர்கள் ஒருவரது பரம்பரைக்கும் அவரது இயல்புகளுக்கும் தொடர்புண்டு எனக் கருதினார்கள். எங்கள் ஊரைப் பொறுத்து பட்டப் பெயர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரதும் மரபணு அறிக்கையாகவே தொடர்ந்தது. ஒருவருக்குக் கலியாணம் பேசினாலும் சரி அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் வைப்பதானாலும் சரி அவர்கள் என்ன கூட்டம் என்பதை முதலில் விசாரிப்பார்கள்.

எனது அப்பா வழிப் பாட்டி காக்கையர் கூட்டத்தைச் சேர்ந்தவர். காக்கையர் கூட்டத்தைப் பற்றி சார்பானவர்களிடம் விசாரித்தால் ‘அவங்கள் காக்கையர் கூட்டம், நல்ல புத்தி சாதுரியமான ஆக்கள். கொஞ்சம் கள்ளப் புத்தி இருந்தாலும் சகோதரங்கள் நல்ல ஒற்றுமை. ஒண்டை ஒண்டு விட்டுக் கொடுக்காதுகள். நீ அவையோட சம்மந்தம் வைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ‘ என்பார்கள். எதிரானவர்களை விசாரித்தால் ‘ஐ ஐயோ உனக்கு வேற இடம் கிடைக்காமல் போயும் போயும் கக்கையர் கூட்த்துக்கிளையா மாப்பிளை எடுக்கப் போகிறாய் ?. ‘ என்பார்கள். அவங்கள் ஒற்றுமையாய் இருந்தாலும் சரியான தந்திரக் காறர். காகம் மாதிரி எப்பவும் யாரிட்ட எதை தட்டிப் பறிக்கலாம் என்கிற கள்ளப் புத்தி. எதற்க்கும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு எனப் புத்தி சொல்வார்கள். யோசித்துப் பார்த்தால் எனது முன்னோர்கள் ஒருவனுக்குப் பட்டப் பெயர் சூட்டுவதற்கூடாக அவனைப் பற்றிய தங்களது சமூக விமர்சனத்தையும் வைத்தார்களோ என எண்ணத் தோன்றும். ஐந்தாறு தலை முறையின் முன் பொது மற்றும் வலிமை இல்லாதவர்களது நில புலங்களை எதாவது காரணம் சொல்லி அபகரித்து வேலிகட்டி சொந்தங்கொண்டாடிய ஒருவர் இருந்தார். அவரை ஒரு இடத்தில் மலம் கழிக்க அனுமதித்தாலும் ஆபத்து, அந்த இடத்தையும் வேலி கட்டி சொந்தம் கொண்டாடி விடுவார் என்கிற வசவுக் கருத்தில் `பீச்சிக் கட்டியார்` எனப் பட்டம் வைத்து விட்டார்கள். கோவில் சொத்தை அபகரித்த ஒருவருக்கு `தெய்வம் தின்னி` என்பது பட்டப் பெயர்.

எங்களைக் கலிமா கூட்டம் என்பார்கள் என்றேன் அல்லவா. பல தலை முறைகளுக்குமுன் வர்த்தகரான எனது மூதாதையர் ஒருவர் சொந்த பந்தம் ஊர் மரபு மரியாதை ஒன்றும் பார்க்காமல் தனக்கு லாபம் வந்தால் சரி எனக் காரியமாற்றினார். போன இடமெல்லாம் ஊர்ச் சம்பிரதாயங்களுக்கு அமையாமல் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைத்துச் சண்டை வளர்த்து ஆதிக்கம் செய்ய முனந்தார். அவருக்கு ஊரை தின்ன வந்த நவீன கலியுக மிருகமான குதிரை என்கிற கருத்துத் தொனிக்க `கலிமா` எனப் பட்டம் வைத்து விட்டார்கள். அந்தப் பெயர் பல நூற்றாண்டுகளைத் தாண்டி பேச்சு வளக்கில் எங்கள் குடும்பப் பெயராகவே நிலைத்து விட்டது. எனது அப்பாவின் பெயர் வேலுப்பிள்ளை. ஊரில் போய் வேலுப்பிள்ளை என பெயர் சொல்லி விசாரித்தால் தெரியாது. ‘இங்க நூறு வேலுப் பிள்ளை இருக்கு நீ எந்த வேலுப்பிள்ளையக் கேட்கிறாய் ‘ என விசாரிப்பார்கள். பின்னர் காதுக்குள் குனிந்து மெதுவாக வேலுப்பிள்ளைக்கு என்ன பட்டப் பெயர் என விசாரிப்பார்கள். கலிமா என்றால் ஓ அவரா அவரை தெரியாத ஆட்கள் யார் என்றபடி வீட்டுக்கு வழி காட்டுவார்கள்.

லாம் மாஸ்டரும் அவரது அழகிய மனைவியும் ஊருக்கு வருகிற வரைக்கும் சின்னப் பையனான எனக்குக் கூட கலிமாதான் பட்டப் பெயர். ஏன் பல நூற்றாண்டுகளுக்குமுன் எனது ஊரவர்களுக்கு குதிரை மீது அத்தனை வெறுப்பு ? இதுதப் புதிரை எனது குடும்பக் கதைகளில் வந்த தகவல்களும் ஆசிரியர்கள் சொன்ன கருத்துகளும் பின்னர் நான் வாசித்தவையும்தான் விடுவித்தன. அந்தக் காலத்தில் நெடுந்தீவுக்கு பருத்தித் தீவு எனவும் பசுத் தீவு எனவும் பெயர்கள் இருந்தது. இராமேஸ்வரம் கோவிலுக்கு பாலும் பூக்களும் அங்கிருந்து போனதாக ஐதீகம். அங்கிருந்து பருத்தியும் பாற் பொருட்களும் இராமேஸ் வரத்துக்குப் போனதாம். திரும்பி வருகிற படகுகளில் சோழ மண்டிலக் கரைகளில் இருந்து யாழ்ப்பாண ராச்சியத்துக்குப் புலம் பெயருகிறவர்கள் நெடுந்தீவில் வந்து இறங்கினார்கள். ஊர் முழுவதும் பருத்தி தோடங்களாகவும் புல்வெளிகளாகவும் இருந்தது. ஒல்லாந்தர் குதிரை வளர்பதற்க்காக, எங்கள் ஊர்க்காரரின் பருத்தித் தோட்டங்களையும் புல்வெளிகளையும் ஆக்கிரமித்தார்கள். எனது முன்னோர்களை அவர்களது நீர்நிலைகளில் இருந்தும் வளமான நிலங்களில் இருந்தும் விரட்டி விட்டார்கள். புல்வெளிகளை அகட்டவும் மாரி வெள்ளத்தை அகற்றவும் ஊரின் நீர் நிலைகளை கடலுக்கு வெட்டி விட்டனர். ஊருள் கடல் புகுந்து சில பகுதிகள் உவரானது. குதிரைகளின் மேச்சலிலும் புழுதி கிழப்பும் பாச்சலிலும் ஊரே பலைவனமாகத் தொடங்கியது. சமய வழிபாடுகளைத் தடைபண்ணினார்கள். ஊரில் உள்ள எல்லோருமே கிறிஸ்துவர்களாகி தங்களுக்குக் குதிரை மேய்க்க வேண்டுமென ஒல்லாந்தர்கள் எதிர் பார்த்தார்கள். காலம் காலமாக தங்கள் குலதெய்வ வளிபாடுகளை விட்டு விட்டு இந்துக்களாக மாறவே மறுத்த எனது தீவின் மக்களில் பலர் கிறிஸ்துவர்களாக மாற மறுத்துக் கிளற்ச்சி செய்தார்கள்.

அந்த நாட்களில் எங்கிருந்தோ வந்திறங்கிய குதிரைகள் எஞ்சியிருந்த எனது முன்னோர்களின் தோட்ட நிலங்களையும் புன்செய்களையும் அழித்தன. ஒல்லந்தரை எதிர்த்தெழுந்த புதல்வர்களையும் வளமான நிலங்களையும் பறி கொடுத்தபின் உயிர் போனாலும் ஒல்லந்தர்களுக்குக் குதிரை மேய்க்கும் கூலியாட்களாக மாறுவதில்லை என்கிற சபதங்களோடும் தங்கள் குலதெய்வங்களோடும் ஊர்க் கோடிக்கு ஒதுங்கிச் சென்ற குடும்பங்களில் எனது மூதாதையர்களின் குடும்பமும் ஒன்று. ஊர்க் கோடியில் தரிசாகக் கிடந்த கல் நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்தார்கள். குதிரை அங்கும் வந்து வேலி பாய்ந்து பயிர் பச்சைகைளை தின்றது. போரும் அழிவும் புதுமைகளும் நிறைந்த கலியுகத்தின் வரவை அறிவிக்கும் கட்டியங் காரனாகவே எனது ஊருக்கு குதிரை கொண்டு வரப்பட்டது. அதனால்த்தான் குதிரைகள் மீது நூற்றாண்டுகளின் முன்னம் வாழ்ந்த என் முன்னோர்களுக்கு அத்தனை கோபம். அப்பாவைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு பிறர் சொல்கிற பதில்களைக் கேட்டிருக்கிறேன். ‘யார் கலிமா வேலுப்பிள்ளையை பற்றிக் கேட்கிறீங்களே ?. அவற்ற அப்பன் கலிமா கூட்டம். அவற்ற தாய் காகையர் கூட்டம். இரண்டு விந்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?. இதுக்குமேலே சொல்லிறதுக்கு என்ன இருக்கு. இனி நீங்களே யோசிச்சுப் பிடிய்கோ ‘ என்பார்கள். எனது பாட்டன் வழி மூதாதையர்கள் ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளற்ச்சிக் காரர்களாகவும் அதேசமயம் ஒல்லாந்தரையும் அவர்களது குதிரைகளையும் போல ஊரைச் சுரண்டி உலையில் போடுவதிலே கருத்துள்ளவர்களாகவும்மிருந்தார்களாம். மேலும் அவர்கள் அந்தக் குதிரைகளைப்போல தீராத காம வேட்கையோடு அலைந்தார்களாம். அதனால்தான் கலிமா என அவர்களுக்கு பட்டம் வந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனது பாட்டி வழி மூதாதையர்களுக்குக் காக்கைக் குணம். வர்த்தகரும் தமிழ்த் தேசிய வாதியுமான எனது அப்பாவுக்கு இரண்டு வம்சத்துக் குணங்களும் இருப்பதாக ஊரார் சொல்வது உண்மை போலத்தான் படுகிறது.

10

லாம் மாஸ்டர் புலமையுள்ள ஆங்கில ஆசிரியர். அதிலும் இலக்கியப் பாடம் நடத்துவதில் அவர் ஒரு புலி. இப்பவும் லாம் மாஸ்டரை நினைத்தால் அவர் கரும்பலகைக்கு முன்னே நின்று நடனமாதின் அபிநயத்துடன் வில்லியம் வேட்ஸ்வேத்தின் டபோடில்ஸ் மலர்கள் பற்றிய கவிதையை மீழ இயற்றுவது போல இற்றுவதுபோல இருக்கும்.

‘ஞான் மலைகள் மேலும் வெளிகள் மீதும் தவழும் முகிலாய் தனியனாய் அலைந்த பொழுதில் சட்டென அந்த ஏரிப் பக்கம், மரங்களின் கீழே கூட்டத் திரளாய் தென்றல் காற்றில் மோகித்து ஆடும் தங்க டபோலில்ஸ் மலர்களைக் கண்டேன் ‘ என தேனாய் மலையாளம் சிந்தும் பூந் தமிழில் அவர் கவிதை நிகழ்த்திக் காட்டத் தொடங்கினால் வகுப்பே மெய் மறந்து விடும். ஆடும் பூந்துணர்களாகவும் அவற்றின் அருகே புரளும் ஏரியாகவும் கைகளை விரித்து, உடல் முழுவதுமே அசைந்தாட ‘அவற்றின் அருகாய் அலைகள் ஆடும். எனினும் அவை அச்சுடர் கொளிக்கும் அலைகளை மிஞ்சும் ‘ என்பார். கண்மூடி இழைப்பாறுவது போலப் பாவனைசெய்தபடி அவர் அந்தக் கவிதையை முடிக்கும் அழகு என்னுள் இன்றும் உறைந்து கிடக்கிறது. ‘ என் உட் கண்ணுள் அவை மின்னலடிக்குதே. அவை ஏகாந்தத்தின் பேரானந்தமாம். பின்னர் மகிழ் நிறைய என் உள்ளம் டபோடில்ஸ் மலர்களுடன் ஆடுமே ‘ என்று கவிதை முடித்து சற்று நேரம் கண் மூடி இருப்பார். அவர் கண்களுள் நிறைந்த டபோடில்ஸ் மலர்கள் அவர் முகத்தில் பூத்தாடும். எனது மூடிய கண்களுக்குள் என் மனசிலாகிய அவரது அழகிய தேவதை மனைவி டபோடில்ஸ் மலர்க் காடாக நர்த்தன மிடுவாள்.

லாம் ரீச்சர் எங்கள் விஞ்ஞான ஆசியை. பாடம் நடக்கும் போது அவரது அழகினுள் பாதியும் விஞான பாடத்துக்குள் பாதியுமாக எங்கள் வகுப்பு சொக்கிப் போயிருக்கும். அவர் மல்லிகைப் பந்தலாய்க் கம கமத்தபடி எம்மைத் தாண்டி செல்கையில் மனசு கிறுங்கிப் போவேன். திருடச் சாத்தியமான போதெல்லாம் நான் அவருக்கு எங்கள் வீட்டில் இருந்தோ பக்கத்து வீடுகளில் இருந்தோ மலர்கள் கொண்டு தருவேன். வாங்கிச் சூடிக்கொண்டு தலையை வாஞ்சையுடன் நீவி விடுவார். அந்தக் கணம் நான் தேவதைகளோடு சுவர்க்கத்தில் இருப்பேன். ஒரு விடுமுறையின் முன்னர் லாம் ரீச்சர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தன்னோடு மன்னாரைச் சேர்ந்த ஒரு பெண் படித்ததாகச் சொன்னார். அடுத்த வாரம் தனது மன்னார்த் தோழியின் வீட்டுக்கு செல்ல இருப்பதாகவும் லாம் ரீச்சர் சொன்னபோது நான் குறுக்கிட்டேன். எனது அப்பா மன்னாரில் கடை வைத்திருப்பதாக அவருக்குத் தெரிவித்தேன். கடையின் பெயரையும் சொல்லி நேரமிருந்தால் எங்கள் கடைக்குப் போய்வாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டேன்.

லாம் மாஸ்டர் பாடமெடுக்கும்போது நான் பகிடி ஒன்றும் விடுவதில்லை. எப்போ அவர் ஆங்கிலக் கவிதைகள் படிப்பிப்பார் எனக் காத்துக் கிடப்பேன். ஆனாலும் அவர் ஆங்கில இலக்கணம் படிப்பிக்கிற நாட்களில் வகுப்புக்கு மட்டம் போடத் திட்ட மிடுவேன். ஆனால் லாம் ரீச்சரின் வகுப்புகளை நான் ஒரு போதுமே தவற விட்டது கிடையாது. அவரது வகுப்பில் எல்லாவற்றிலும் கெட்டிக்காரனாக விளங்கவே ஆசைப்பட்டேன். அதிகம் பேசுவது ஒருபோதும் எனது நோக்கமாக இருந்ததில்லை. ஆனால் அதுதான் இறுதியில் நிகழ்ந்தது. ஒருமுறை அப்பிளில் இரும்புச் சத்து இருப்பதாகப் படிப்பித்தார். மெதுவாக எழுந்து பாடத்தில் சந்தேகம் கேட்கும் பாவனையில் அப்பவியாக எழுந்து நின்றேன். லாம் ரீச்சரும் உண்மையான கற்பிக்கும் ஆர்வத்துடன் ‘கேள் ‘ என்றார். ‘ரீச்சர் ஒரு வில்லுக் கத்தி செய்ய எத்தனை அப்பிள் பழம் தேவை ‘ எனக் கேட்டேன். நான் சொல்லி முடிக்க முன்னமே லாம் ரீச்சரும் மாணவர்களும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். அன்று அவரை நெடு நேரம் சிரிக்க வைப்பதிலும் அவரது முழுக்கவனத்தையும் ஈர்ப்பதிலும் வெற்றி பெற்றேன்.

லாம் ரீச்சர் எப்போதும் யாராவது நல்ல பகிடி விட்டால் கன்னத்தில் குழி விழ, மிதந்து தணியும் தனது மலர் மார்பில் கை வைத்தபடி இரசித்து ரசித்துச் சிரிப்பார். இதனால் எங்கள் வகுப்பின் மாணவர்களிடையே லாம் ரீச்சர் பாடம் நடத்துகிற போது நல்ல பகிடி விடுகிறதற்குப் போட்டி நிலவியது. வேறொருமுறை அவர் உலகப் படத்தை தனது மார்புக்கு நேரே பிடித்த படி அதில் வண்ணம் தீட்டிக் காட்டி யிருந்த பால்ப் பண்ணைப் பிரதேசங்களை தொட்டுக் காட்டினார். எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது. தொடர்ந்து வகுப்பில் மணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் கொல்லெனச் சிரித்தார்கள். லாம் ரீச்சர் கோபப் படவில்லை வெட்க்கத்தில் சிவந்த கன்னங்களில் குழிவிழ, மார்பைத் தாங்க முந்திய கைகளை கஸ்டப் பட்டுத் தவிர்த்தபடி அசடு வளிந்தார். பின் மலர்ந்த செவ்வாயும் பனித்த நீல விழிகளுமாக வகுப்பை விட்டு வெளியேறினார். மாணவிகள் சிலர் எனக்கு பண்பாடு தெரியாதென்றும் தங்களைப் படிக்க விடுவதில்லை என்றும் சினந்தார்கள். நவரட்ண சிங்கம் மாஸ்டரிடம் முறையிடப் போவதாக அவர்கள் மிரட்டிய போது நான் உண்மையிலேயே பயந்துபோய்க் கண் கலங்கி விட்டேன்.

. இந்தப் பின்னணியில் கிறிஸ்மஸ் கொண்டாடம் நெருங்கிக் கொண்டிருந்தது. அது லாம் தம்பதியர்கள் நெடுந்தீவில் கொண்டாடும் முதல் கிறிஸ்மஸ் திருநாள். எங்கள் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் எல்லோரும் அவர்களிடம் கிறிஸ்மஸ் கேக் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் கிறிஸ்மஸ்ஸுக்குப் பெரிய கேக் செய்யத் திட்டமிட்டார்கள். பொதுவாகவே கிறிஸ்மஸ் காலங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். அன்று லாம் ரீச்சர் வகுப்பு நடத்தும்போது கிறிஸ்மஸ் கதை சொன்னார். தாங்கள் பெரிய கேக் செய்யப் போவதாகவும் வீட்டுக்குவந்தால் உங்களுக்கும் கேக் கிடைக்கும் என்றார். அவருக்கு முட்டைகள் வேண்டியிருந்தது. பணம் தருவதாகவும் தனக்கு யாராவது ஐம்பது கோழி முட்டைகள் கொண்டுவந்து தரமுடியுமா எனவும் கேட்டார். மாணவர்கள் பலர் ஐந்து பத்து என முட்டைகள் கொண்டுவந்து கொடுக்கத் தயாரானார்கள். நான் மற்ற மாணவர்களை முந்திக் கொண்டு எழுந்தேன். லாம் ரீச்சரின் அழகிய முகத்தில் ஈடுபட்டு மெய் மறந்தவாறே ஐம்பது முட்டைகளையும் நானே கொண்டுவந்து தருவதாக வாக்களித்தேன். லாம் ரீச்சர் எப்பவுமே கொஞ்சம் எச்சரிக்கையானவர். என் அருகில் வந்து வாஞ்சையுடன் எனது தோழில் கை போட்டபடி எப்படி ஐம்பது முட்டை உனக்குக் கிடைக்கும் என வினவினார் ?. வீட்டில் 60 கோழிகள் இருப்பதாகச் சொன்னேன். வீட்டில் கோழிப் பண்ணை வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார். சற்றும் தயங்காமல் மீண்டும் ஆம் என்றேன். எனக்கு இது பற்றி ஒரு தயக்கமும் இல்லை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சொல்லி வைத்தாலே ஒரு நாள் தவணையில் ஐம்பது முட்டைகள் சேகரித்து விடலாம். லாம் ரீச்சர் என்னை நம்பினார். ஐந்து முட்டை பத்தாக முட்டையென கொண்டுவந்து கொடுக்கத் தயாராக இருந்த மாணவர்கள் புறக்கணிக்கப் பட்டதில் நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

(அடுத்த வாரம் முடிவு பெறும்)

Series Navigation