செல்லம்மாவின் இருமுகங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

பவளமணி பிரகாசம்


வானத்தையே வளைக்குறாரு
வாண வேடிக்கை காட்டுறாரு
வார்த்தையில விளையாடி
வளைக்கிறாரு கோட்டைய
வக்கணையா பேசுறாரு
வரிஞ்சி வரிஞ்சி எழுதுறாரு
வடிச்சகஞ்சிக்கும் வக்கில்ல
வயிறு காஞ்சி கெடக்குது
வரும்படியில்லா கவிஞரு
வாக்கப்பட்டு வந்த பாவி
வாய்விட்டு புலம்புறேன்
வஞ்சியெனை வரித்ததேனோ
வஞ்சித்து வாட்டத்தானோ
வாழத்தான் விருப்பமில்லை
வெறுத்துப்போச்சு எம்மனசு
வெட்டிப் பேச்சி உதவாது
வரிவரியா எழுதுறாரு
விவரங்கெட்ட மனுசன
வரிசையில வந்து நின்னு
வாழ்த்துறாங்க பல பேரு
வாழ்த்தோடு முடிஞ்சி போச்சி
வாசப்படி தேஞ்சி போச்சி
வரவில்லை வரலட்சுமி
வாசமில்லா மாலையாக
வாடிப் போச்சி என் உசிரு
வருவது வரட்டும் இனி
வடுவாக காஞ்சி போச்சி
வாராதோ என் சாவு
விடுதலையும் தாராதோ
**** **** ****
உள்ளது உரைக்க வந்தேன் நான் செல்லம்மா
கள்ளூறும் கவிதைகளில் மிதக்கும் நல்லம்மா
கேட்டு ஒரு நல்வாக்கை நீயும் சொல்லம்மா
அறுசுவை விருந்தில்லை உண்ண சோறில்லை
ஆயின் என் இல்லறம் போல் இனிது வேறில்லை
முன்னம் செய்த தவப்பயனோ தனி வரந்தானோ
தாரமாய் நான் வந்தது சரித்திர நாயகனுக்கே
கண்ணன் அவன் என் காதலன் சேவகன் தோழன்
கண்டேன் அவனில் ஏழு கடல் வண்ணந்தானே
கனியமுதாய் அவன் முத்துசுடர் நிலவொளியில்
காற்று வெளியிடை காதலில் கரைந்திருந்தோம்
தீர்த்தக்கரையினில் காத்திருந்து களித்திட்டோம்
கைசேர்த்து உலவி வந்தோம் வெள்ளிப்பனிமலையில்
நிலைகெட்ட மாந்தரையெண்ணி நெஞ்சு பொறுக்காமல்
என்று தணியும் சுதந்திரதாகமென்று ஏங்கிக் கிடந்து
திக்கித் தெரியாத காட்டில் திகைத்து நின்று தேடியும்
ஒளி படைத்த கண்ணில் நெஞ்சுக்கு நீதியும்
பகைவனுக்கருளும் பட்டொளி வீசிப் பறந்த
தாயின் மணிக்கொடியும் மேலை ஞானமும்
கண்டதினால் ஆடினோம் பள்ளு பாடினோம்
எத்தனை கோடி இன்பம் என்று வியந்தோம்
ஞானச்செருக்கில் அக்னிக்குஞ்சுடன் குலாவி
மாதரை இழிவு செய்யும் மூடரை மிதித்தோம்
நிமிர்ந்த நன்னடையுமாய் நேர்கொண்ட பார்வையுமாய்
உதய ஞாயிறொப்ப நானே புது யுகத்துப் பாவையாய்
பொலிந்திருப்பேன் எத்தனை பிறவியெடுத்தாலும்
பாரதியெனும் காதலன் இவன் விரல் மீட்டும்
நல்லதோர் வீணையாய் என்றும் நானிருப்பேன்

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்