செந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

சி. ஜெயபாரதன், கனடா


செவ்வாய்க் கிரகம் பற்றிச் சிந்தித்த விண்வெளி விஞ்ஞானிகள்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியன் வானியல் நிபுணர்கள் செவ்வாய்க் கோளை ‘அழிக்கும் கிரகம் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்கள். செந்நிறத்தில் மின்னும் செவ்வாய்க் கிரகத்தைப் போர்க் கடவுளாய் ரோமானியர் கருதி வந்தார்கள். சூரிய மண்டலத்தில் பூமியைப் போல் தோன்றும் செவ்வாய்க் கிரகத்தில், உயிரினங்கள் உண்டா என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக, உலக வானியல் மேதைகள் பலரது ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. செவ்வாயில் வாயு மண்டலம், மிதமான தட்ப, வெப்ப நிலைகள், துருவப் பனிப் பாறைகள் பூமியைப் போல் இருந்தாலும், உயிரினம் எந்த உருவிலாவது வாழ்ந்து வருகிறதா என்பது தற்கால விஞ்ஞானிகளின் பில்லியன் டாலர் கேள்வி!

கி.பி.1609 இல் ஜெர்மன் வானியல் மேதை, கெப்ளர் செவ்வாயின் போக்கைக் கூர்ந்து நோக்கி, அது நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதலில் கண்டார். அடுத்து அதன் வக்ர நகர்ச்சியைப் [Retrograde Motion] பற்றியும் விளக்கி யிருக்கிறார். ‘நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் வானியல் ரகசியங்களை ஊடுருவிக் கண்டு பிடிக்க செவ்வாய்தான் கைகொடுக்கும் ‘ என்று கெப்ளர் தன் வாயாலே சொல்லி யிருக்கிறார். 1610 இல் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தனது தொலை நோக்கியில் செவ்வாய் கிரகத்தைக் கண்டு, அது ஒழுங்கற்ற உருண்டை வடிவில் இருப்பதாக முதன் முதலில் குறிப்பிட்டார். அவரே செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும் இரண்டு சந்திரன்களையும் முதலில் கண்டவர்.

செவ்வாய் தன்னைத் தானே சுற்றுவதைக் கண்டு பிடித்து, 1659 இல் செவ்வாய்த் தளப் படத்தை விளக்கமாக முதலில் வரைந்தவர் டச் [Dutch] விஞ்ஞானி கிறிஸ்டியான் ஹூஜன்ஸ் [Christiaan Huygens]. 1866 இல் இத்தாலிய வானியல் வல்லுநர், காஸ்ஸினி பல மில்லியன் மைல் தூரத்தில் இருக்கும், செவ்வாயின் சுய சுழற்சி நேரத்தைத் துள்ளியமாக 24:40 மணியாக 3 நிமிடப் பிழையில் கணித்தது மெச்சத் தகுந்த சாதனை. 1877 இல் அமெரிக்க வானியல் நிபுணர், அஸாஃப் ஹால் [Asaph Hall] தனது சக்தி வாய்ந்த தொலை நோக்கிச் [Telescope] சோதிப்பின் போது, சுற்றி வரும் செவ்வாயின் இரண்டு சந்திரன்களை முதன் முதலில் படம் பிடித்தார்.

1960 இல் முதன் முதல் ரஷ்யா தன் ஆய்வுக் கோளை [Probe] செவ்வாய் மண்டலத்துக்கு ஏவியது. ரஷ்யா அனுப்பிய 12 ஆய்வுக் கோள்கள் முயற்சியின் போது முடமாகித் தோல்வி யடைந்தன. 1973 இல் ஏவிய மார்ஸ் [Mars-4, 5, 6] விண்வெளிக் கோள்களில் ரஷ்யா சிறிது வெற்றி யடைந்தது. 1988 இல் ரஷ்யா ஏவிய ஃபோபாஸ்-1 [Phobos-1] செவ்வாய்க் கிரகத்தின் சந்திரன் ஃபோபாஸை ஆராய்ந்து, அதன் பின் பயணத்தின் இடையே செவ்வாய் விண்வெளியில் காணாமல் போனது. அடுத்துச் சென்ற ஃபோபாஸ்-2 வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தையும், ஃபோபாஸையும் படமெடுத்து பூமிக்கு அனுப்பியது. நவம்பர் 1996 இல் ரஷ்யா தயாராக்கிய Mars-96 விண்கோள் ஏவு தளத்திலே சிதைந்து, பூமியிலே விழுந்து நொறுங்கிப் போனது.

1960 முதல் 1997 வரை அமெரிக்காவில் நாசா [NASA] மாரினர் [Mariner], வைக்கிங் [Viking 1, 2] செவ்வாய் வழிதேடித் [Mars Pathfinder] திட்டங்களை நிறைவேற்றிப் பல விண்வெளிக் கப்பல்களை ஏவிச் செவ்வாய்க் கிரகத்தை முற்றுகை யிட்டுப் படம் எடுத்து மண்டலத்தின் பெளதிக, ரசாயனக் குணா திசயங்களை ஆராய்ந்தது.

அமெரிக்காவின் மாரினர், வைக்கிங் அண்டவெளித் திட்டங்கள்.

1971 இல் அமெரிக்காவின் மாரினர்-9 மே மாதம் 30 ஆம் தேதி கிளம்பி செவ்வாய்க் கோளை நவம்பர் 14 ஆம் நாள் நெருங்கி ஓராண்டு காலம் சுற்றிப் படமெடுத்து ஏராளமான தகவலைச் சேகரித்தது. மாரினர்-9 எடுத்த படங்களில் செவ்வாயில் நீண்ட கால்வாய்கள் [Canals] குழிவட்டங்களை [Craters] ஒட்டிக் காணப் பட்டன. அவை நீர்க் குளங்களையும், நீரோடிய பள்ளத் தாக்குகளையும் காட்டுகின்றன. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பெருத்த காலநிலை வேறுபாட்டால் செவ்வாயில் நீர் தளமட்டத்தில் இருந்ததாகக் கருதப் படுகிறது. துருவச் சிகரங்களில் [Polar Caps] பனி மூடிய பாறைகள் காணப் படுகின்றன. அவை நீர்ப்பனிக் கட்டி, அல்லது குளிர்ந்து போன கரியமில வாயுக் கட்டிகளாக [Frozen Carbon dioxside] இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

அதற்குப் பிறகு வைக்கிங்-1, வைக்கிங்-2 விண்வெளித் திட்டங்கள் 3.7 பில்லியன் டாலர் பெருத்த செலவில் தயாராகின. 1975 இல் அடுத்தடுத்து ஏவப்பட்ட வைக்கிங்-1 [ஆகஸ்டு 20], வைக்கிங்-2 [செப்டம்பர் 9] விண்வெளிக் கப்பல், வீதிச்சிமிழ் [Orbiter Capsule], தளச்சிமிழ் [Lander Capsule] ஆகிய இரண்டை ஏந்திக் கொண்டு பயணம் செய்து, ஒழுங்காக விஞ்ஞான விபரங்களைப் பூமிக்கு அனுப்பின. வைக்கிங்-1 பத்து மாதங்கள் பறந்து வீதிச்சிமிழ் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்து, இறங்க வேண்டிய தரை மண்டலத்தைக் கண்டு பிடித்து, 1976 ஜூலை 20 ஆம் தேதி தளச்சிமிழ் எவ்விதத் தடங்கல் இல்லாமல் மெதுவாக வந்திறங்கி விண்வெளியில் ஓர் புதிய வரலாற்றைத் துவங்கியது. அதே சமயத்தில் பயணம் செய்து கொண்டி ருந்த வைக்கிங்-2 வீதிச்சிமிழ் ஆகஸ்டு 7 ஆம் தேதி செவ்வாய்க் கோளைச் சுற்றி வரத் தொடங்கியது.

தளச்சிமிழில் காலநிலை மானிகள், ரசாயன ஆய்வகம், தளத்துடிப்பு மானிகள் [Seismic Instruments], தொலைக் காட்சிக் காமிராக்கள் அமைக்கப் பட்டிருந்தன. அதற்கு மின்சக்தி அளிப்பது 35 watts திறமுள்ள இரண்டு வெப்பமின் ஜனனிகள் [Thermo Electric Generators]. அவற்றுக்குத் தொடர்ந்து வெப்பம் தருவது, கதிரியக்கப் புளுடோனியம்-238 [Plutonium 238] இன் தேய்வு நிகழ்ச்சி [Decay Process]. மேலும் ஜனனி பழுதுற்றால் நேரும் அபாயத் தவிர்ப்புக்கும், மின்சக்தி பின்னுதவிக்கும் [Backup Power] 70 watts மின்திறம் பரிமாற பாட்ரிகள் [Nickel Cadmium Battery] பல இருந்தன. கட்டளை மின்கணணி சீராய் ஆளும் [Guidance Control Sequencing Computer] தளச்சிமிழ் பல மில்லியன் தூரத்தில் பூமியிலிருந்து முடுக்கப் பட்டது. நீளும் கரம் கொண்ட தளச்சிமிழ் மண் மாதிரிகளைத் தோண்டி அள்ளி, அருகில் இருக்கும் ரசாயன ஆய்வகத்தில் சோதித்து, முடிவுகளைப் பூமிக்கு அனுப்பும் திறமுடையது.

செவ்வாய் மண்டலத்தில் உலாவிய ஆறு சக்கர ஆமை வண்டி

வைக்கிங் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் செவ்வாய் நோக்கிப் பயணம் செய்ய ‘செவ்வாய் வழிதேடி ‘ [Mars Pathfinder] என்னும் அண்டவெளிக் கப்பல், 265 மில்லியன் டாலர் செலவில் தயாரானது. அந்த விண்வெளிக் கப்பலை டிசைன் செய்து, கட்டி முடித்து, சோதித்துப் பயணத்தைத் துவங்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. 1996 டிசம்பரில் செவ்வாய் வழிதேடி ஏவப் பட்டு, அதன் தளச்சிமிழ் [Lander Capsule] 1997 ஜூலை 4 ஆம் தேதி வெற்றிகரமாய் தரையில் வந்து இறங்கியது. மூன்று சூரியத் தட்டுகள் [Solar Panels] தாங்கிய தளச்சிமிழில் செவ்வாய் மண்டலக் காந்த சக்தியை அறியும் மானி, காலநிலைக் கருவி, வாயு மண்டல அழுத்த மானி, விரிந்த நோக்குக் காமிராக்கள், உச்ச மிகுதி மின்னலைத் தட்டு [High Gain Antenna] அமைந்திருந்தன.

தளச்சிமிழில் சிறிது நேரத்தில் பூலோகத்திலிருந்து 119 மில்லியன் மைல் பயணம் செய்த ஆறு சக்கர ‘அற்ப ஆயுள் வண்டி ‘ [Sojourner] ஒன்று தானாக இயங்கித் தரையில் ஊர்ந்தது. இரண்டு அடி நீளம், ஓரடி உயரம் உள்ள அந்த வண்டி, ஆமை வேகத்தில் நிமிடத்திற்கு 2 அடி ஊர்ந்த்து. மேல்தளத்தில் வெப்ப சக்தியை மாற்றி மின்சக்தி ஆக்கும் சூரிய தட்டு. வழி காட்ட லேசர் கண்கள் [Laser Eyes]. நிறப் படம் பிடிக்க இரண்டு சக்தி வாய்ந்த காமிராக்கள். சுழலும் லேசர் கண்கள் [Rotating Laser Eyes] வழி காட்டும் ஆமை வண்டி, எதிர்ப்படும் பெரும் பாறையைத் தவிர்த்து ஒதுங்கிச் செல்லும் திறமை யுடையது. தளத்தை ஆராய்ந்து தகவலை அனுப்ப மின்னலைக் கம்பம் [Radio Antenna]. மேலும் அந்த ஆமை வண்டியை பூமியிலிருந்தே ஓட்டலாம்; நிறுத்தலாம்; போக்கைத் ஆணை யிட்டுத் திட்டமிடலாம்.

தளச்சிமிழ் 1997 செப்டம்பர் 27 ஆம் தேதி வரைப் பூமிக்குத் தகவல் அனுப்பியது. எதிர்பாராத நிலையில் செவ்வாயின் கடும் காலநிலை வேறுபாட்டால், மின்சாரக் கம்பிகளில் ஒன்று துண்டிக்கப் படவே, தகவல் போக்கு வரத்துத் தடைப் பட்டுப் போனது. ஆனால் சூரிய சக்தியில் ஓடும், ஆறு சக்கர ஆமை வண்டி அனாதை போல் இன்னும் ஓடிக் கொண்டிருக்கலாம். செப்டம்பர் 27 தேதி வரை, வண்டி உலாவிச் சோதித்த பரப்பளவு 20,000 சதுர அடி. தளச்சிமிழில் பழுது ஏற்பட்டு முடங்கிப் போனதால், கட்டளை யிட்டு வழி நடத்த எதுவும் இல்லாமல், வண்டி தலை இல்லாத வனவிலங்கு போல் திசை மாறி அலைந்து கொண்டிருக்கலாம். தளச்சிமிழும், அதன் வண்டியும் மொத்தம் 17,000 உருவப் படங்களை பூமிக்கு அனுப்பி யுள்ளன. அனுதினமும் கால நிலை உஷ்ணம், வாயு அழுத்தம், காற்றின் வேகம், காற்றடிக்கும் திக்கு யாவும் பதிவு செய்யப் பட்டு பூமியில், கலிபோர்னியா ஜெட் உந்து ஆய்வகத்துக்குத் [JET Propulsion Laboratory JPL] தொடர்ந்து வந்து சேர்ந்தன.

செவ்வாய்த் தளத்தில் காற்று அடித்து மழுக்கப் பட்ட மடிப்புச் செம்மண் திட்டுக்கள் அலை அலையாய்க் காணப் பட்டன. தளச்சிமிழ் அருகே இருந்த பல பாறைகள் கடும் பனிக்கனல் காற்றுகளால் பல்லாயிரம் ஆண்டுகள் செதுக்கப் பட்ட வடிவில், அமெரிக்காவின் மாபெரும் செங்குத்து மலைத் தொடர்களைப் [Grand Canyon] போல் தோன்றின. செவ்வாயில் நீரோட்டம் இல்லாததால், மண்கட்டிகள் மணலாக மாற முடிய வில்லை. ஆனால் ஒரு காலத்தில் செவ்வாய் மண்டலத்தில் ஓடிய ஆறுகள், நீர்த்தடம் இருந்ததைத் தளச்சிமிழ் அனுப்பிய படங்களில் தெரிந்தது. தளச்சிமிழ் மேனி யெங்கும் பதிக்கப் பட்ட காந்தக் கட்டிகள் செந்நிறத் துகள்களை அப்பிக் கவர்ந்துள்ளதைக் காமிரா படமெடுத்துக் காட்டியது. இரண்டு மைக்ரான் [micron] அளவுள்ள அந்தத் துகள், இரும்பின் ஆக்ஸைடு [Ferric Oxide] செந்நிறத் துருப்பு [Rust]. ஒரு காலத்தில் பூமிக்குள் இருந்த நீரும் இரும்பும் இரண்டறக் கலந்து ஃபெர்ரிக் ஆக்ஸைடாக மாறி, மேலே கசிந்து எழும்பிக் காய்ந்து போய் செம்மண் துகள்களாய் ஆகிவிட்டன. ஆதலால் ஒரு காலத்தில் செவ்வாயில் இருந்த நீர் மண்டலம் சூரிய வெப்பக் கனலில் கொதித்து ஆவியாகி மறைந்து போனது. துருவங்களில் தங்கிப் போன நீர்க்குளங்கள் கடும் குளிரில் இறுகிப் பனிப் பாறைகளாய் மாறிப் போய் இருக்கலாம். அல்லது பெரும்பான்மையாக இருக்கும் கரியமில வாயு [Carbon dioxide] கடும் குளிரில் சுருங்கி ‘வரட்சிப் பனியாக ‘ [Dry Ice] துருவங்களில் அடைபட்டிருக்கலாம்.

பெர்க்கிலியில் [Berkeley] உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், டாக்டர் ஜியார்ஜ் பிமெண்டெல் [Dr. George C. Pimentel] செவ்வாயில் உலவிய வண்டியின் வெப்பக்கதிர் வீச்சு நிறப்பட்டை மானி [Infrared Spectrameter] கண்டு பிடித்து அனுப்பிய ரசாயன முடிவுகளில், இம்மியளவு அம்மோனியா, மீதேன் வாயு [Ammonia, Methane Gas] இருப்பதைக் கண்டார். கரிவாயுக் கூட்டுகள் கிருமிகளால் சிதைவு பெற்று, [Organic Decay by Bacteria] கிளைப் பண்டங்களாய் [By-products] அதே வாயுக்கள் பூமியில் உண்டாகின்றன. செவ்வாய் மண்டலத்திலும் அவற்றைப் போல் உண்டாக்கும் ஏதோ ஒரு வகை நுண்ணுரு ஜீவிகள் [Microorganisms] இருக்கலாம் என்று கருதுகிறார்.

உயிரினம் வாழத் தகுதியற்றப் பயங்கரப் பாலைத்தளம்

முதன் முதலில் 6118 மைல் தூரத்தில் செவ்வாய் அருகில் பறந்து சென்ற நாசாவின், மாரினர்-4 பூமிக்கு 21 படங்களை எடுத்து அனுப்பியது. அடுத்து 1969 இல் மாரினர்-6 பிப்ரவரி 24 ஆம் தேதியிலும், மாரினர்-7 மார்ச் 27 ஆம் தேதியிலும் ஏவப் பட்டுப் பல விஞ்ஞான ஆய்வுக் கருவிகளையும், தொலைக் காட்சிக் காமிராக்களையும் ஏந்திக் கொண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு 2130 மைல் நெருங்கித் தகவல்களைச் சேகரித்தன. அந்தப் பயணங்களில் கண்ட தகவல் பல எதிர்பாராதவை. செவ்வாயின் தளத்தில் பூமியின் சந்திரனைப் போன்று கரடு முரடான எண்ணற்ற வட்டக்குழிகள் [Craters] பல காணப் பட்டன. அவற்றில் பெரும்பான்மை 30-50 மைல் குறுக்களவு உள்ள பாதாளக் குழிகள். அத்துடன் 300 மைல் அகண்ட ஒரு மாபெரும் வட்டக்குழியும் காணப் பட்டது. முக்கியக் கண்டுபிடிப்பு, செவ்வாய்ச் சூழ்வெளியில் பெரும்பான்மை கரிமில வாயு [96%], உயிரனத்தின் தேவையான நைட்ரஜன், மிகச் சிறிய அளவு [2%], பிராண வாயு மிக மிகச் சிறிய அளவு [0.1%]. நைட்ரஜன் எரிமலை வெடிப்பில் எழுகின்ற வாயுக்களில் ஒன்று. குன்றிய அளவு தோன்றும் நைட்ரஜன் வாயு, செவ்வாயில் கோடான கோடி ஆண்டு களாய் அடிக்கடி எரிமலைக் கிளர்ச்சிகள் அதிகம் இல்லாத ஒரு வரலாற்றைக் காட்டுகிறது. செவ்வாய் மண்டலச் வாயுச் சூழ்நிலை அழுத்தம் [Atmospheric Pressure] 0.1 psi. பூமியின் வாயு மண்டல அழுத்தம் 14.7 psi. மொத்தத்தில் செவ்வாய் மண்டலம், தட்ப வெப்ப நிலை ஏற்ற வகையில் இருந்தாலும், உயிரினம் ஏதும் வாழத் தகுதியற்றப் படு மோசமான பயங்கரப் பாலைத்தளம் என்று தெரிந்தது.

செவ்வாய்க் கோளுக்கும், பூமிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்

இரத்தச் சிவப்பில் இரவில் ஒளிரும் இந்தக் கிரகம் பூமியின் எடையில் பத்தில் ஒரு பங்கு கொண்டது. சூரிய மண்டலத்தில் மற்ற கோளங்களை விட வெகு வேகமாய்ச் சுற்றி வருவது, செவ்வாய் கிரகம். பூமிக்கு அருகே செவ்வாய் வரும் சிறிதளவு தூரம், 35 மில்லியன் மைல். அச்சமயத்தில் அது மிகப் பிரகாசமாய் செவ்வொளி வீசுகிறது. செவ்வாய் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் நேரம் பூமியை விட சற்றே கூடுதல் [24:37 மணி]. செவ்வாய் சுழலும் அச்சு சற்றே மிகுந்து 24 டிகிரி சாய்ந்து உள்ளது. பூமியின் சுழல் அச்சு 23.5 டிகிரி திரிபுள்ளது. அதனால் செவ்வாயின் காலநிலை மாறுபாடுகள் பூமியை ஒத்தவை யாக இருக்கின்றன. ஆனால் சூரியனைச் சுற்றவரச் செவ்வாய் [687 நாட்கள்] பூமியைப் போல் [365 நாட்கள்] ஏறத்தாழ இரு மடங்கு எடுக்கிறது. செவ்வாய் மண்டலத்தில் உள்ளது, மிகச் சிறிய அளவு ஆவிநீர் [0.016% Water Vapour]. பூமியில் இருக்கும் ஆவிநீர் அளவு 2%.

செவ்வாய் தட்ப வெப்ப நிலை பகலில் உச்சம் +24 டிகிரி C, இரவில் குறைந்த அளவு -128 டிகிரி C. செவ்வாயின் விட்டம் பூமியின் விட்டத்தில் [7918 மைல்] கிட்டத் தட்ட பாதி [4222 மைல்]. அதன் பளு பூமியின் பளுவில் சுமார் பத்தில் ஒரு பங்கு. செவ்வாயின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் மூன்றில் ஒரு மடங்கு. செவ்வாய்க் கோளின் விடுதலை வேகம் வினாடிக்கு 3 மைல். பூமியின் விடுதலை வேகம் வினாடிக்கு 7 மைல். பூமியைச் சுற்றிவரும் இயற்கைக் கோள் [Satellite] சந்திரன் போன்று, செவ்வாய் கிரகத்தை ஃபோபாஸ் [Phobos], டைமாஸ் [Deimos] என்னும் இரண்டு சந்திரன்கள் சுற்றி வருகின்றன. உருளைக் கிழங்குபோல் பிறழ்ந்த வடிவமுள்ள அவை, பூமியின் சந்திரன் போன்று முழுக் கோளம் அல்ல. 8.4 மைல்/6 மைல் அளவு கொண்ட ஃபோபாஸ், 5700 மைல் தூரத்தில் நாளுக்கு இருமுறைச் செவ்வாயைச் சுற்றி வருகிறது. 4.7 மைல்/3.4 மைல் அளவு கொண்ட டைமாஸ், 15,500 மைல் தூரத்தில் செவ்வாய் கிரகத்தை நாளுக்கு ஒருமுறை வலம் வருகிறது.

2019 ஆண்டு முடிவுக்குள் செவ்வாய் மண்டலத்துக்கு மனித யாத்திரை.

இதுவரை மனிதர் எவரும் செவ்வாய்த் தளத்தில் தமது தடத்தை வைத்தில்லை. பழைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஸ், செவ்வாய் விண்வெளிப் படையெடுப்பில் பெற்ற வெற்றிகரமான விளைவுகளைப் புகழ்ந்து, 2019 ஆண்டு முடிவுக்குள் அமெரிக்கா மனிதர்களைச் செவ்வாய்த் தளமீது தடம் வைக்க அனுப்ப வேண்டும் என்ற ஒரு மாபெரும் குறிக்கோளை பறைசாற்றி யிருக்கிறார். அந்த ஆண்டு நீல் ஆர்ம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் முதல் தடமிட்டு மீண்ட ஐம்பது ஆண்டுகள் முடிந்த பொன்விழாக் கொண்டாட்ட மாக இருக்கும்.

**********************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா