‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

அன்புடன் புகாரி


ஒவ்வொரு விரலும்
எழுத்தாணியாக
பத்து விரல்களாலும்
எழுதியவர் சுஜாதா

கணினிக்குள்
சிப்புகளாகவே ஆகிப்போக
இளைஞர்களை
உசுப்பிவிட்டவர் சுஜாதா

நவீனத்தின் மடிகளில்
தமிழைத் தாலாட்டியவர்
சுஜாதா

தமிழின்
மரபுகளையும் விசாரித்து
தொல்லிலக்கியங்களிலும்
தோய்ந்தவர் சுஜாதா

பத்திரிகை விற்பனையை
எழுத்துத்தரம் மாறாமல்
உயர்த்தியவர் சுஜாதா

தமிழ்த் திரைப்படங்களில்
ஹாலிவுட் மின்னல்கள்
தெறிக்கச்செய்தவர் சுஜாதா

நகைச்சுவைகளுக்கும்
அறிவுப்பொறிகளுக்கும்
தையலிடாமலேயே
நெய்து வென்றவர் சுஜாதா

அவதூறு விமரிசங்களுக்கும்
அளவோடு மறுமொழி
தந்தவர் சுஜாதா

கைநாட்டுகளும்
அறியும் வண்ணம்
கணினித் தகவல்களை
பாமரர்களுக்கு
எடுத்துச் சென்றவர் சுஜாதா

இருபது வயது
இளைஞனோடும்
இளமைதுள்ள
தோள் சேர்ந்தவர் சுஜாதா

இவரைப்போல்
இன்னொருவர் இல்லை
இவரை நகலெடுத்தோருக்குக்
குறைவே இல்லை
அவர்தான் சுஜாதா

சிற்றிதழ்களிலும்
பத்திரிகைகளிலும்
ஒரே உயரப்
புகழ் வென்றவர் சுஜாதா

இணையத்திலும்
அச்சுக்களிலும்
இணையாக உலாவந்த
முதல் எழுத்தாளர் சுஜாதா

இப்படியாய்
இன்னும் எத்தனையோ
சொல்லிச் சொல்லி
அவர் புகழ் பாடலாம்

தமிழின் தங்க விளக்கு
அது அணைந்தது என்பது
அழுகைதான் என்றாலும்
எத்தனை
யுகங்களானாலும்
இவரின் வாசனை மட்டும்
தமிழ் முற்றங்களில்
நீங்குமா

தன் நாள்
நெருங்கி வருவதை
அறிந்தவராகவும்
அதை நமக்கெலாம்
அறியத்தந்தவராகவும்
இருந்தார் சுஜாதா

பலகோடி தமிழர்களின்
கண்ணீர் அஞ்சலிகளால்
அவர் வழியனுப்பப்படுவார்
என்றும் அறிந்திருந்தார்
சுஜாதா

அனைத்தும் அறிந்த
அந்த அறிவுச் சுடருக்கு
நம் அஞ்சலிகளை
கண்ணீரோடு சமர்ப்பிப்போம்


anbudanbuhari@gmail.com

Series Navigation

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி