சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மஞ்சுளா நவநீதன்


(தலைப்பு எனக்கும் பிடிக்கவில்லை தான். விவாதத்தில் மற்றவர்களின் தரம் இப்படித்தான் எனில் நான் என்ன செய்யட்டும் ? சூத்திரன் என்ற வார்த்தையே பெரியார் புண்ணியத்தில் வழக்கொழிந்து போய் விட்டது. ஆனால் பெரியார் வழி வந்தவர்களிடம் மட்டும் இந்த வார்த்தை இன்னமும் புழங்குகிறது.)

சில வாரங்களுக்கு முன்னர் இண்டாம் நடத்தும் வானவில் இதழில் தலித் முரசில் வெளியான தொ பரமசிவனின் பேட்டி வெளியாகி இருந்தது. இந்த வாரம் திண்ணையில் ஞாநி, நந்தன் வழி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது. நந்தன் வழியில் ஞாநியைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை ஞாநியே எழுதி அனுப்பியிருந்ததற்கு நன்றி. எனக்கு நந்தன் வழி கிடைப்பதில்லை, அதனைப் படிக்கும் ஆர்வமும் எனக்கில்லை. முன்பு ஒரு முறை மனஓசை, புதிய கலாச்சாரம் போன்ற இடதுசாரி இதழ்களும், உண்மை, விடுதலை போன்ற திராவிட இயக்க இதழ்களும் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாவது இதழுக்கு அப்புறம் அதனைப் படிப்பது வீண் என்பது தானாகத் தெரிந்துவிடும். (அய்யா, மனுசனுக்கு சுவாரஸ்யமாக விஷயம் இருக்க வேண்டும், அரைத்த மாவையே எத்தனை நாளைக்கு அரைக்க முடியும் ? அப்படி அரைத்தாலும் அதனை சுவாரஸ்யமாக அரைப்பதற்கு எம்ஜியார் போன்ற அதிபுத்திசாலிகள் வேண்டுமே. )

ஞாநியும், அருணாச்சலமும் பெரியாரின் சீடர்களாகத் தங்களைக் காண்பித்துக்கொள்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொள்ள யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பெரியாரின் சீடனாக இருவரும் ஆக முடியுமா என்பது வேறு விஷயம் இல்லையா ?

ஒருவன் பிறப்பால் பிராம்மணனாகப் பிறந்துவிட்டால், அவன் என்ன செய்தாலும் தப்பு என்பது பெரியார் கொள்கை. அதுவே, சூத்திரவேடம் போடும் பார்ப்பனனைக் கண்டு ஜாக்கிரதையாக இரு என்று சொன்னதன் காரணம். (இந்த விதத்தில் தான் வெறுத்த இந்து மதத்தின் கொள்கையை – பிறப்பால் பிராமணன் எப்போதும் பிராமணன் என்ற தத்துவத்தை – பெரியார் மிகத் தீவிரமாய்க் கடைப்பிடித்தார்.) சூத்திரனுக்கு ஆதரவு தந்தாலும் பிராமணன் எதிரிதான் என்ற கருத்தாக்கம், பார்ப்பன வேடம் போடும் சூத்திரனைக்கண்டு ஜாக்கிரதையாக இரு என்ற அறிவுரையாக வருகிறது. அவ்வளவு தீவிரமாக , தமிழ்க்குடும்பத்தைப் பிரிக்கிறார் ஈ வே ராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கர். (வரிந்து கட்டிக்கொண்டு என்னைத் திட்ட வரும்முன்னர், எனக்கு தெலுங்கர்கள் மீது எந்த விதமான வெறுப்போ, மரியாதைக்குறைவோ இல்லை என்பதை குறித்துவிடுகிறேன். ராமசாமி நாயக்கர் தெலுங்கராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும் எனக்கு எந்தவித வித்தியாசமும் இல்லை. அவரது வார்த்தைகளையும், சிந்தனைப் போக்கையும் அவருக்கே எதிராகப் பிரயோகப்படுத்தினால் எத்தனை புண்படுத்தும் என்பதற்காகவுமே இந்த வார்த்தை.) ராமசாமி நாயக்கர் தெலுங்கர். ஆனால், தமிழ் தவிர வேறு மொழி தெரியாத தமிழ்ப்பிராமணர்கள் தமிழர் இல்லை. இதை ஒரு தெலுங்கரும், கூடவே ஆங்கிலேயர்களும் சொல்லி, நம்பியிருக்கிறது ஒரு பெரிய தமிழ்க் கூட்டம். ஆச்சரியமாக இல்லை ?

அப்படி இருக்கையில், பிறப்பால் பிராமணரான ஞாநி தன்னை பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்வது எப்படி சரியானதாக இருக்கமுடியும் ? அப்படிச்சொல்லிக்கொள்ளும் ஒரு பிராமணரைப் பார்த்து பெரியாரின் வழியில் நடக்கும் சூத்திரர் ஒருவர் , அந்த பிறப்பால் பிராம்மணரை பெரியாரின் சீடர் என எப்படி ஒப்புக்கொள்ள முடியும் ? யார் வேண்டுமானாலும் தன்னை ஹிட்லரின் சீடன் என்று சொல்லிக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு யூதர் அப்படிச் சொல்லிக்கொண்டால் அது முரண்பாடாக இருக்காதா ? (தற்கொலை விருப்பம் உள்ள ஒரு யூதரைத்தவிர.)

பெரியாரின் சீடராக அருணாசலம் இருப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது ? ஆனால், பெரியாரின் சீடராக ஞாநி இருப்பதில், அல்லது பிறப்பால் பிராம்மணராக இருக்கும் எவரும் பெரியாரின் சீடராக இருப்பதில் உள்ள முரண்பாட்டை யாரால் தவிர்க்க முடியும் ? எக்காலத்திலாவது பிராமணரையும், பிராமணியத்தையும் வெவ்வேறு விஷயங்களாகப் பேசியிருக்கிறாரா பெரியார் ? அப்படியே பேசினாலும், அதனை பொதுஜனபுழக்கத்துக்கு தெரிவிக்கும்போது , ‘பாம்பையும் பார்ப்பனரையும் கண்டால், பாம்பை விட்டு பார்ப்பனரை அடி ‘ என்று சொன்னதன் மூலம், இரண்டையும் இறுக்கமாக அல்லவா பிணைக்கிறார் பெரியார்!

ஞாநி அருணாசலத்தை ‘நீங்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள், நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ‘ என்று கேட்கிறார். அவர் செய்வதோ செய்யாததோ அவரவர் உரிமை. ஆனால், அது கொள்கைக்கு முரண்பட்டதில்லையே. அப்போது அவர் பெரியாரைச் சரியாகப் படிக்காமல் இருந்திருக்கலாம், அந்த விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம், பெரியாரின் கொள்கைளால் ஞானஸ்நானம் பெற அவருக்குக் கொஞ்சம் அவகாசம் பிடித்திருக்கலாம். அல்லது அவர் தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் சொல்லியிருக்கலாம். ஞாநிக்கு இருந்தது போன்ற வெகுஜன தொடர்புச் சாதனம் அவரிடம் அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

இன்னும், இந்த பிராம்மணரை நண்பராக, மனைவியாக கொண்ட சூத்திரரை(!) நீங்கள் பாராட்டியிருக்கிறீர்களே என்று ஞாநி கேட்பது எப்படிப் பொருத்தமாகும் ? அப்படிப் பாராட்ட வேண்டும் என்றுதானே பிராமணரான ஞாநி விரும்புகிறார் ? ஒருமுறை பாராட்டிவிட்டால், பார்க்கும் பிராம்மணரை எல்லாம் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அருணாசலத்தின் தலைவிதியா ? தற்சமயம் ஒருவர் யார் மீது காதல் கொண்டிருக்கிறார் என்பதை வைத்துத்தான் அவரது மொத்த வாழ்க்கையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா ? (எனக்குச் சந்தேகம், பிராமணப்பெண்ணை திருமணம் செய்த சூத்திரர், பிராமணர் மீது ஓரளவுக்கு வெற்றி பெற்றவராக சூத்திரர்களால் பாராட்டப்படுகிறாரோ என்னவோ ? அதுவே, ஞாநிக்கு கோபம் வருகிறதோ என்னவோ ? )

பெரியாரின் சீடராகத் தன்னைப் பார்க்கும் ஞாநி பெரியார் சொன்ன விஷயங்களில் என்னத்தை செய்திருக்கிறார் ?

பெரியார், ‘பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால், பாம்பை விட்டு பார்ப்பனனை அடி ‘ என்று சொன்னார். ஞாநி கண்ணாடி முன் நிற்கும் போதெல்லாம் தன்னை அடித்துக்கொள்கிறாரா ? (நான் கண்ணாடி பார்க்கும்போது பக்கத்தில் பாம்பு இல்லையே என்று வேண்டுமானாலும் ஞாநி தப்பித்துக்கொள்ளலாம்). அது வெறும் ரெட்டரிக் என்று தப்பித்துக்கொள்ள முடியுமா ?

அருணாசலம் தன்னுடைய கட்டுரையில் எழுதும்போது, தம்மை ‘தமிழர்கள் ‘ என்று கூறுகிறார். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பது இதன் அர்த்தம். இந்த அர்த்தத்தில்தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் பேசி தமிழர் என்ற வார்த்தைக்கு பொருள் மாற்றம் செய்துவைத்தார்.

இதனை ஞாநி ஒப்புக்கொள்கிறாரா ? ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் எப்படி பெரியாரின் சீடராக ஆக முடியும் ?

***

பெரியாரை ஆதரிக்கும் ஒரு பார்ப்பனருக்கும், முஸ்லீம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் காஷ்மீர இந்துக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே தன் கழுத்துக்கு வரும் கத்தியை கூர் செய்து தரும் முட்டாள்தனம். அது மட்டுமல்ல, இந்த இனவெறிக்கு அல்லது இன வெறுப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டுவது இன்னும் அபத்தமானது. அதுவும் வலிந்து அப்போதைய அரசியலுக்காக உருவாக்கப்பட்ட இனவெறுப்பு.

சங்ககாலப்பாடல்களில் ஒன்றிலாவது வடவர்களையும், பார்ப்பனர்களையும் ஒன்றாகக்காட்டிய ஒரு வரியையாவது காட்ட முடியுமா இந்த திமுக/திக வினரால் ? சங்கப்பாடல்களில் பிராமண வெறுப்பு எங்கேனும் வெளிப்படுகிறதா ? ஒளவையார் இருபிறப்பாளர்களை காப்பாற்றுவது அரசனின் கடமை என்று எழுதிய புறநானூற்றுப்பாடலை நான் காட்டட்டுமா ? சிலப்பதிகாரத்தில் பிராமணர்கள், முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களெல்லாம் காப்பாற்றப்படவேண்டிய பலவீனர்களாய்த் தானே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் ? கண்ணகி தமிழ்ப் பண்பாட்டின் குறியீடு என்றால் பிராமண வெறுப்பை விட்டு விட்டு , பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டியது தானே தமிழர்களின் கடமை ?

உ வே சாமிநாதய்யர் கண்டு எடுத்துக் கொடுத்த சங்க இலக்கியங்களில் கண்ட ‘வசதியான ‘ காட்சிகளைக் கொண்டு அமைத்த மீட்பு இயக்கம்தான் தி க /திமுக என்று சொல்ல எத்தனை பேருக்கு அறிவு நேர்மை இருக்கிறது இன்று ?

சிலப்பதிகாரம் பலரால் பலமுறை பலமாதிரி மறுவிளக்கம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. (திமுகவினர் எழுதிய மறுவிளக்கத்தில் விளக்கைத் தட்டிவிட்டுத்தான் மதுரை எரிகிறது. ‘அதனை ‘ வெட்டி வீசினால் மதுரை எரியும் என்று சொன்னால் ‘பகுத்தறிவுக்கு ‘ ஒத்துவராதே.) ஆனால் பெரியார் சிலப்பதிகாரம் பற்றி என்ன சொல்கிறார் ? ‘ சிலப்பதிகாரத்தில் ஆரியம், மடமை கலக்காமல் இருக்கும் பத்து வரிகளைக் கூடக் காண முடியாது. ‘ என்பது பெரியார் கூற்று. இதைத் தானே மறுபடியும் சொல்கிறார் ஞாநி. ஆனால் ஞாநி இந்தக் கருத்துக்காக, பெரியாரின் இந்தக் கருத்துக்காக பிராமணர் என்று திட்டப் படுகிறார்.

அதே நேரத்தில் இன்னொரு தவறை படிப்பவர்கள் செய்யும்முன்னர் அதனை விளக்கி விடுகிறேன்.

எல்லா தலித்துகளும் பெரியார் ஆதரவாளர்கள் என்ற பொய்யான பிரமையை நந்தன் வழி ஆசிரியர் போன்றவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். தலித்துகளில் எத்தனை பேர் பெரியார் ஆதரவாளர்கள் என்ற ஒரு சர்வே எடுத்துப்பார்த்தால், பலருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும். சர்வே எடுக்காமலே கூட இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் பெரியாரின் சீடர்கள் இதைப் பேசுவதில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் மேல்சாதி இந்துக்கள் மட்டும் வந்தால், கோவில்கள் காலியாக இருக்கும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். இது பேசாத உண்மை. அந்த இடத்தில் நின்று கொண்டு அருணாசலத்தால் பெரியாரியம் பேச முடியுமா ?

ஒரு முறை, எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடது சாரிச் சிந்தனையாளர், அதிமுகவின் வெற்றி தாழ்த்தப்பட்டவர்களும், பிராமணர்களும் கொண்ட அரசியல் கூட்டினால் வந்தது என்று உண்மையை எழுதி கல்லடி பட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். இன்றைய நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் , மற்ற மேல்சாதியினரைக் காட்டிலும் பிராமணர்களைத் தான் நம்பத் தயாராய் இருக்கிறார்கள் என்பது உண்மையல்லவா ?

உண்மை உள்ளே இருக்கும்போது கசப்பதில்லை. அது மனத்திலிருந்து வெளியே வரும்போது மட்டுமே நாவில் கசக்கிறது.

ஞாநி பார்க்கும் பெரியார், இந்து மத எதிர்ப்பாளர், ஜாதிகளற்ற சமுதாயம் உருவாக உழைத்தவர். இந்துமதமும், ஜாதியமும், கடவுள் என்ற கருத்தாக்கமும் இறுக்கமாகப் பிணைந்து மக்களை அடிமைப்படுத்த உருவானவை என்று சொன்னவர்.

அருணாசலம் பார்க்கும் பெரியார், தமிழ் இனமானப் பாதுகாவலர், பிராமண எதிர்ப்பாளர். பிராமண எதிர்ப்பைத் தீவிரமாக கொள்வதன் மூலம் பிராம்மண குலத்தையும், சூத்திர குலத்தையும் நிரந்தரமாக பிரித்தவர். பிராமணரோடு சமரசம் சாத்தியமில்லை என்ற கொள்கை கொண்டவர்.

எது சரி ?

பெரியாரை இப்போது போற்றுகிறவர்களில் பரமசிவன், அருணாசலம், ஞாநி மூவரும் மூன்று வெவ்வேறு திசைகளில் நிற்கிறார்கள்.

அருணாசலம், பெரியாரின் பார்ப்பன வெறுப்பை எடுத்துக் கொள்கிறார். அதை மிக மூர்க்கமான தீவிரத்துடனேயே பாவிக்கிறார். தமிழ்ப்பிரிவினைவாதத்தை எடுத்துக் கொள்கிறார். தமிழ் மொழி பற்றியும், பண்பாடு பற்றியும் பெரியார் சொன்ன கண்டனங்களை எடுத்துக் கொள்ளவில்லை. தி மு க விலிருந்து அர்த்தமில்லாத பட்டங்களைத் தம் பெயருடன் வால் போல ஒட்ட வைத்துக் கொள்கிற செயலை எடுத்துக் கொள்கிறார். (அய்யா, வள்ளல் : அய்யகோ!)

பரமசிவன் பிராமண எதிர்ப்பை எடுத்துக் கொள்கிறார். ஆனால், கடவுள் மறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. கலாசாரம் பற்றிய பெரியாரின் கருத்துகள் தவறு என்பது அவர் கருத்து. தலித்துகளின் கடவுள் பாமரர்களின் கடவுள் அதனால் அதை எதிர்க்க வேண்டாம் என்பது அவர் கருத்து. இப்படிப்பட்ட பிரிவினை எந்த அளவு சரி என்பது வேறு விஷயம். பிராமணக்கடவுள் என்று இவர் எண்ணுபவை கூட நாட்டார் கடவுளராக இருந்து உருமாற்றம் பெற்றவை தான் என்பது சமூகவியலாளர் கருத்து.

ஞாநி பெரியாரின் சாதி எதிர்ப்பை எடுத்துக் கொள்கிறார். பெரியாரின் பிராமண வெறுப்பு, இவரிடம் தான் பிராமணராய்ப் பிறந்ததற்கான குற்ற உணர்வாய் வெளிப்படுகிறது. தமிழ்ப்பண்பாடு பற்றி ஞாநி சொல்வது பெரியார் சொன்ன அதே கருத்துகள் தான். ஆனால், என்ன விசித்திரம் பாருங்கள் : நந்தன் வழி ஆசிரியர் பெரியாரைத் திட்டவில்லை. ஞாநியின் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுகிறார். பெரியார் கருத்துகளைச் சொன்னால் கூட அவரைப் பார்ப்பான் என்று தான் தமிழ்க்காவலர்கள் சொல்வார்கள்.

ஆனால் உண்மையான அர்த்தத்தில் மூவருமே பெரியாரின் சீடர்கள் இல்லை. இவர்கள் தம்மை இந்துக்களாக பாவித்துக்கொள்ளும் வரை, அருணாசலம் , ஞாநி, பரமசிவன் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கும்வரையில் அவர்கள் பெரியாரின் சீடர்கள் ஆக முடியாது.

எந்தப் பெரியார் உண்மையான பெரியார் ? அல்லது இன்று எந்த பெரியார் நமக்குத் தேவை ? அல்லது பெரியார் இன்று தேவை தானா ?

தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும்.

********

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts