சூடான்: தொடரும் இனப் படுகொலை

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

ஆசாரகீனன்


ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப் படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில் வெளிவந்துள்ளன.

இந்த இனப் படுகொலை பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் href= ‘http://www.nytimes.com/top/opinion/editorialsandoped/oped/columnists/nicholasdkristof/index.html ?inline=nyt-per ‘>நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் தொடர்ந்து எழுதிவருகிறார். பிப்ரவரி 23, 2005 நியூயார்க் டைம்ஸ் இதழில் அவர் எழுதியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி விட்டதாக சூடான் அரசாங்கம் தொடர்ந்து புளுகி வருகிறது. இந்த இனப் படுகொலை தொடர்பான ஆயிரக் கணக்கான புகைப்படங்களையும் செய்திகளையும் ஆப்பிரிக்க ஒன்றிய கண்காணிப்பாளர்கள் திரட்டியுள்ளனர். இவை அனைத்தும் ரகசியமான ஆவணங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இந்த கண்காணிப்பாளர்களால் மட்டுமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள டார்ஃபர் பகுதிக்குச் செல்ல முடியும். பிற வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை.

பிரச்சினையின் தீவிரத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவற்றுள் சில படங்களை மட்டும் ஒரு கண்காணிப்பாளர் நிக்கோலஸ் க்ரிஸ்டாஃபிடம் கொடுத்துள்ளார்.

மேற்கண்ட படம் ஜனவரி 15 அன்று சூடான் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செயல்படும் ஜஞ்ஜாவீதுகள் என்ற ஆயுதம் தாங்கிய கும்பல் ஹமாடா கிராமத்தை தாக்கி 107 பேர்களைக் கொன்ற பின்னர் எடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களுள் இந்த சின்னஞ் சிறுவனும் ஒருவன். இவனுடைய ஐந்து வயது அண்ணனும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டான். சகோதர சிறுவனின் முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருப்பதால் அந்தப் படம் இங்கு வெளியிடப்படவில்லை. இந்தச் சிறுவர்களின் உடலுக்குப் பக்கத்திலேயே இவர்களுடைய தாயின் உடலும் கிடந்தது.

மேற்கண்ட படத்தில், கால்களில் ஏற்கனவே காயம்பட்ட ஒருவரின் இறந்த உடலைப் பார்க்கலாம். ஓட முடியாத காரணத்தால் இவரால் ஜஞ்ஜாவீதுகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை.

மேற்கண்ட படத்தில் நாம் பார்ப்பது வெறுங்காலுடன் ஓடித் தப்பிக்க முயன்று இந்தப் புதரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் உடல்.

இந்தப் படத்தில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படும் எலும்புக்கூடு ஆணின் உடலா அல்லது பெண்ணின் உடலா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. முழங்காலுக்குக் கீழே உடைகள் இழுக்கப்பட்டிருப்பதிலிருந்து, கொல்லப்படுவதற்கு முன்னால் இந்த உடலுக்கு உரியவர் பால்-வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெளிவு. ஆணாக இருக்கும் பட்சத்தில் இந்த உடலுக்கு உரியவரின் ஆண்குறி சிதைக்கப்பட்டிருக்கும் (castrated). பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்த உடலுக்கு உரியவர் பால்-வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்.

இதே போன்ற ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பல குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் காட்டுபவை. இவை எந்த ஒரு பத்திரிகையிலும் பிரசுரிக்க முடியாத அளவுக்குக் கொடூரமானவை.

மற்றொரு புகைப்படம் சுலேயா பெண்கள் பள்ளியில் படித்த பதின்ம-வயது (டான்-ஏஜ்) மாணவி ஒருத்தியின் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவள் உயிருடன் எரிக்கப்பட்டதைக் காட்டுகிறது. பதின்ம-வயது பெண்களைக் கூட்டமாகக் கற்பழித்து பின்னர் அவர்களைக் கொலை செய்வது சூடானின் ஆயுதம் தாங்கிய கும்பல்களின் வழக்கம்.

இன்னொரு புகைப்படம் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் பரிதாபகரமான உடலைக் காட்டுகிறது. மற்றொரு புகைப்படம் ஆண்குறி சிதைக்கப்பட்ட நிலையில் தலையில் சுடப்பட்ட இன்னொரு ஆணின் உடலைக் காட்டுகிறது.

இனப் படுகொலை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்த்த கண்காணிப்பாளர்கள் பலர் கொடுத்துள்ள அறிக்கைகள், அரேபியர் அல்லாத இனத்தவர் வாழும் இடங்களைக் காலி செய்ய இந்த இனப் படுகொலையை சூடான் அரசாங்கமே தூண்டிவிடுவதை அம்பலப்படுத்தியுள்ளன. சூடான் ராணுவ உடையை அணிந்திருப்பவர்கள் ஆப்பிரிக்க கிராமங்களை நிர்மூலமாக்குவதையும் கொளுத்துவதையும் பல புகைப்படங்கள் காட்டுகின்றன. அனைவரும் பார்க்கும் விதத்தில் இந்த ஆவணங்களையும் படங்களையும் ஆப்பிரிக்க ஒன்றியம் வெளியிட்டால், டார்ஃபர் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகும்.

இந்த இனப் படுகொலைக்கான திட்டங்களை வெளிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணம் ஒன்று ஜஞ்ஜாவீது அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ‘குடியரசின் அதிபர் சொல்லும் அனைத்தையும் செயல்படுத்துமாறு ‘ வட்டாரத் தலைவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அந்த ஆவணம் அழைப்பு விடுக்கிறது. மேலும், ‘டார்ஃபர் பகுதியின் அடையாளத்தையே மாற்றும்படியும், ஆப்பிரிக்க பழங்குடியினர் ஒருவர் கூட இல்லாமல் செய்துவிடும்படியும் ‘ அந்த ஆவணம் வற்புறுத்துகிறது. ‘கொலை செய்வது, கிராமங்களையும் பண்ணைகளையும் கொளுத்துவது, மக்களை அச்சுறுத்துவது, ஆப்பிரிக்க பழங்குடியினரின் சொத்துகளை பிடுங்கிக் கொண்டு அவர்களை டார்ஃபர் பகுதியிலிருந்து விரட்டியடிப்பது ‘ ஆகியவற்றையும் செய்யச் சொல்லி அந்த ஆவணம் தூண்டுகிறது.

படுகொலைகள் நடப்பது பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகவில்லை. வன்முறை அல்லாத பட்டினி போன்ற காரணங்களால் ஏழு மாத காலத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் இறந்ததாக ஐ.நா. மதிப்பிடுகிறது. ஆனால், இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடத்தப்படும் இனப் படுகொலைகளில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. ஐ.நா. மதிப்பீட்டுக் குழுவை டார்ஃபர் பகுதிக்கு செல்ல அனுமதிக்காமல் சூடான் அரசாங்கம் தடுப்பதே இதற்கு முக்கியமான காரணம். தனிப்பட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேர்களாவது கொல்லப்பட்டிருப்பது சாத்தியமே. ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கையில் பத்தாயிரம் அதிகரிக்கிறது.

இந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த என்னதான் வழி ? முதலாவது வழி: சூடானுக்கு எதிராக தடைகள், சூடானின் மேல் விமானங்கள் பறக்க அனுமதி மறுப்பது (no-fly zone), சூடான் அதிகாரிகளின் வெளிநாட்டுச் சொத்துகளை முடக்குவது, கொலைகாரர்களை பன்னாட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டிப்பது, ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் சூடானை வலியுறுத்துவது, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளின் படையை சூடானுக்கு அனுப்புவது – இதற்குத் தேவையான நிதி மற்றும் திட்டமிடல் தொடர்பான உதவிகளை மேலை நாடுகள் செய்வது போன்றவை.

அதை விட முக்கியமான இரண்டாவது வழி: சூடான் பிரச்சினையில் தலையிடக் கோரி தம் நாட்டு அரசாங்கங்களை அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்துவது.

இந்தப் படங்களை வெளியிட்டதன் நோக்கம் அச்சத்தை ஏற்படுத்துவது அல்ல. படங்களை வெளியிடுவது தவறான செயல் அல்ல – நம்முடைய செயல்படாத தன்மையே பலர் கொல்லப்பட காரணமாகிறது.

ஆர்மீனியர்களுக்கும், யூதர்களுக்கும், கம்போடியர்களுக்கும் எதிரான முந்தைய இனப் படுகொலைகளின் போதாவது என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியவில்லை என்று சாக்கு சொல்ல முடிந்தது. இந்த முறை அப்படி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நடப்பது இனப் படுகொலைதான் என்று அறிவித்து விட்டன. போதாக்குறைக்கு இந்த புகைப்படங்கள்.

மேலதிக விவரங்களுக்குப் பார்க்க:

href= ‘http://www.darfurgenocide.org ‘>www.darfurgenocide.org

href= ‘http://www.savedarfur.org ‘>www.savedarfur.org

(புகைப்படங்களுக்கு நன்றி: href= ‘http://www.nytimes.com/slideshow/2005/02/22/opinion/20050223_KRIS_SLIDESHOW_1.html ‘>நியூயார்க் டைம்ஸ்)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்