சுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

சித்ரா ரமேஷ்


‘சித்திரம் கரையும் வெளி” – கவிதை தொகுப்பு ஆசிரியர்: சுப்ரமணியம் ரமேஷ்

‘மருதம்’ – சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: எம்.கே. குமார்

நூல் அறிமுகம்.

இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களான நண்பர் ரமேஷ், மற்றும் குமார் இருவரும் இணைந்து
சிங்கப்பூர் பிஷான் சமூக நூலகத்தில் தங்கள் இரு நூல்களையும் வருகிற சனிக்கிழமை(19-5-07) மாலை ஐந்து மணியளவில் வெளியிடவிருக்கிறார்கள். அவர்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள். அதற்கு முன்னால் ஒரு சிறு நூல் அறிமுகம்.

சித்திரம் கரையும் வெளி:
தலைப்பே ஒரு ஓவியம் போல் நம் கண் முன்னே விரிகிறது. வெண்மேகங்கள் ஓவியங்களாகி வித வித உருவம் பெற்று அவை மீண்டும் நகர்ந்து உருமாறி. வேறு உருவங்கள் காட்டி முதுகில் பயாஸ்கோப் மூட்டையுடன் சிறிய மனிதர்களுக்கு அவர்கள் அறியாத புது உலகத்தைக் காட்டும் பாயாஸ்கோப்காரனின் படச் சுருளைப் போல் மாறும் காட்சிகள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கடிகாரக் கணக்குக்குக் கட்டுப்படாதக் காலம் ஓடி மெல்ல இருளின் ரேகைகள் படரும் சாயங்காலப் பொழுது. இதுவரை காட்டிய முகத்தை கலைத்து விட்டு வேறு ஒப்பனைக்குத் தயாராகும் வானம். இந்த அந்திப் பொழுதின் தனிமையையும் இனிமையையும் மேகச்சித்திரங்கள் செங்குழம்பாகக் கரையும் வான்வெளியையும் நினைத்துக் கொண்டே புத்தகத்தைப் பார்த்தால் அதே அந்திப் பொழுதை அட்டைப் படமாக்கியிருக்கிறார் ரமேஷ். இவர் கவிஞர் மட்டுமில்லை. ஒரு ஓவியரும் கூட!!!

தலைப்பில்லாக் கவிதைகள் தலைப்பில்லாமலேயே நம் மனவெளிகளில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.
ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன? பெயரே இல்லாத காட்டு மலராக இருந்தாலும் ரோஜா ரோஜாதானே என்று நினைத்து தலைப்பில்லாக் கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறாரா?

சராசரி வாழ்க்கையில் இருக்கும் அவசரங்கள், தினந்தோறும் பழக்கமாகிப் போகும் வழக்கங்கள், அதில் தோன்றும் சலிப்பு,அதைத் தூக்கி எறிந்து விட்டு விச்ராந்தியாக பயணப்பட நினைக்கு ஒரு அசாதரணின் துடிப்பு இவை நிறைய கவிதைகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது. நிலையாமையை நிலைத்து நிற்க விரும்புவதாய்த் தூண்டும் கவிதைகள். மரணம், இறப்பு, தேடல், ரத்தம் மௌனம், முதுமை இவையெல்லாம் அநித்தியத்தின் குறியீடுகள்.

எதைத் தேடுகிறோம் என்ற இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையின் யந்திரத்தனம்,
‘காலடியில் மலர் மிதிபட்டதை அறியாமலேயே இப்போதைக்கு இன்னமும் ஒரு முறை கதவுகள் மூடிக் கொள்ள’
என்ற வரிகள் மூலம் கருணையற்ற உலகின் குரூரத்தில் ஒரு மலர் மட்டும் எல்லையற்ற கருணையுடன் பார்ப்பது,
கருணை வழியும் உன் தண் விழிகள் மௌனமாய் என்னுள் அரும்புகளை முகிழ்க்கிறது, புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும் என்னை என்ன செய்ய உத்தேசித்தித்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியிலும் உலகத்தையே புன்னகையோடும் கருணையோடும் பார்க்க ஏங்கும் மனது தெரிகிறது.

உலகமே விழித்துக்கொண்டிருக்கும் போது இருட்டறையில் முடங்கிக் கிடப்பவனைப் பிரதிபலிக்கும்

“தலையசைத்துக்
கொள்கிறது சிட்டுக்குருவி
ஜன்னலின் மறுபுறம்
பிஸியாய் மனிதர்கள்
இருட்டில்”

இந்தப் பக்கம் இருக்கும் சிட்டுக் குருவி பகலை ரசித்து அந்தப் பக்கம் அறையில் முடங்கிக் கிடக்கும் மனிதனைப் பார்க்கிறது. இரவு வேலைப் பார்த்து விட்டுப் பகலில் தூங்கும் மனிதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிட்டுக் குருவிக்கு ஏது நைட் ஷி·ப்ட்? இருவருக்குமிடையில் ஒரு சின்ன கண்ணாடித் தடுப்புதான்! பாரதியைப் போல் ‘விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல்’ இந்தத் தடுப்புகளை கழற்றியெறிந்து விட்டு பறக்க நினைக்கும் கவிஞன்! அது ஒன்றும் மந்திரவாதிக் கதைகளில் வரும் ஏழுமலை, ஏழுகடல் தாண்டி போகும் தூரமல்ல! இளவரசன் சித்தார்த்தனுக்கும் பாரிஸ்டர் மோகன்தாஸ¤க்கும் ஏற்பட்டக் கணநேர மாற்றம் தான்! புற வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் அகவாழ்க்கையின் வெறுமையை அதிகப்படுத்துகின்றன.
· ·
சிறியப் பனிப்பந்து உருண்டு உருண்டு பனித் துகளை மேலும் மேலும் தன்னிடம் சேர்த்துக் கொண்டு பெரிய பாறையாகி விட்டதாக பம்மாத்து செய்தாலும் ஒரு கணத்தில் மோதிச் சிதறி ஒன்றுமில்லாமல் ஆகி விடும். “இந்த வாழ்க்கையின் நினைவுப் பேரேடுகளை நிகழ்காலம் அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு ” என்று முகமூடியின் புழுக்கம் தாளாது பேசும் கவிஞர்! அன்று கண்டதும் அதே நிலா இன்று கண்டதும் அதே நிலா, பழமைவாதம், இருத்தலியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் எது தெரிந்தாலும் நாம் அதே ‘நான்தானா’ இதற்கு ரமேஷ் காட்டும் உவமை நம்மை புன்னகைக்க வைக்கிறது. இதையும் மீறி ஏதோ ஒரு அலுப்பும் தெரிகிறது.

வாழ்க்கையோடு தேவையில்லாமல் முரண்பாடு கண்டு அதிக சிக்கலாக்கிக் கொள்கிறோமா? சாதாரணர்களுக்கு இருக்கும் வாழ்க்கைப் பிடிப்பு படைப்பாளிகளுக்கு இருக்காதா? பறக்கத் துடிப்பவனின் தவிப்பு ரமேஷின் கவிதைகளில் இருந்தாலும் பறந்து மேலேச் சென்று ஒரு பறவைப் பார்வையில் உலகைப் பார்க்காமல் பறந்து அப்படியே வான்வெளியில் கலந்து விடும் வேட்கையும் நிறையக் கவிதைகளில் தெரிகிறது. ஒரு வேளை இந்தத் தொகுப்பிற்காக இவர் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் ஒரேகோட்டில் ஒத்த கருத்துள்ளவையாக தற்செயலாக அமைந்தனவா? இவர் அடுத்த கவிதைத் தொகுப்பு, வாழ்க்கையை இன்னும் சற்று உற்சாகத்தோடு பார்க்க வைத்து வாழ்தலின் அர்த்தங்களைத் தேடும் கவிதைகளாக இருக்க வேண்டும்.

‘அடங்கோ அடங்கு’ கவிதையில் ‘பிரபஞ்சம் வைதர்ணி நதிக்கரையில் அனுபூதியாய் பொத்தி வைத்திருக்கும்……
அடங்கோ இந்த கஸ்மால உலகில் இத்தனை பிரச்னை’ என்று முடிப்பது தேர்ந்தெடுத்த வரிகளில் ஒரு முரண்தொடை!

நான் யாருக்கேனும் எழுதும்
வரிகளில் உனக்கான வார்த்தைகள் இருக்கும்.
நீ யாருக்கேனும் இசைக்கும்
கானத்திலும் எனக்கான
இதமிருக்கும்
அடையாளம் காணும்
ஆழ்பரப்பில்
அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும்
எல்லோருக்குமான பாடல்களும்

என்ற முதல் கவிதையிலேயே அடிமனதில் ஒளிந்திருக்கும் ஒரு நுட்பமான வாழ்க்கை சூட்சுமங்களை கவித்துவமாக சொல்ல நினைப்பது புரிகிறது. பித்தர்களுக்கும், குடிகாரர்களுக்குமிடையில் சித்தராக வாழமுடியுமா? குடிகாரர்களுக்கும் பைத்தியங்களுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையைத் தொலைப்பதும், தொலைந்து போய் விடுவதும், இருப்புக்கும் இறப்புக்கும் உள்ள இடைவெளி! இப்படி ஆன்மீகத்தேடலில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பமிருகம்!

‘எல்லாவற்றுக்குமாய்….’ ஒளிர்ந்து கொண்டது விளக்கு’ கவிதையில் வரும் குட்டி இளவரசனின் விளக்கேற்றுபவன் சுழற்சிதான் நிற்குமா? இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஆயிரத்து நானூற்று முறை விளக்கேற்றுபவனோடு குட்டி இளவரசன் தங்க விரும்பினாலும் இது நடக்காத விஷயம்! அவ்வப்போதுத் தோன்றும் சிறு சலனங்கள், நாம் விரும்பிய மாற்றங்களைத் தராத வாழ்க்கை இருக்கும் வரை கவிஞர்களும் கவிதைகளும் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.

மருதம்:

வயலும் வயலைச் சார்ந்த இடம் மருதம். பச்சைப் பசேல் பசுமை! எந்த வித குறுக்கீடும் இல்லாத அடர்ப்பச்சை, பச்சை, இளம்பச்சை அட்டை. திரு எம்.கே.குமார் எழுதிய மருதம் சிறுகதைத் தொகுப்புக்கான அட்டை! கிராமத்தில் பிறந்து, நகரங்களில் வளர்ந்து, வெளிநாட்டில் வாழும் வாழ்க்கையை அங்கங்கே தொட்டிருக்கிறார். கிராமியக் கதைகள் எழுதும் போது இவர் காட்டும் சரளமான நடை இன்னும் மண் மணத்தை நுகர விரும்பும் எளிய மனிதனாகவே அடையாளம் காட்டுகிறது.

மருதம் கதையில் வரும் வயல். அதற்குக் கூட பெயர் உண்டு என்பதை கதையைப் படித்த போது தான் தெரிந்து கொண்டேன். ‘கமலஞ்செய்யி’ தாமரைப் பூத்த தடாகம் என்ற அர்த்தம் தரும் வயலின் பெயர். திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்குப் பயன்படுத்த விலை பேசப் படுகிறது. மருது சேர்வைக்கு பணத்தேவைகள் இருந்தாலும் நிறை மாத கர்ப்பிணி போல் முற்றிய கதிர்களோடு இருக்கும் வயலை தன் பெண் குழந்தைப் போல் நினைத்து மறுத்து விடுகிறார். நவீன வாழ்க்கையின் குரூரமான மறுபக்கம். நன்றாக பயிர் விளைந்த வயலை குண்டு வைத்து தகர்த்து தீ பரவுவது போன்ற இறுதிக்காட்சி! இதைக் கேட்டு மனம் பதைத்து முதலில் மறுத்து விட்டாலும் பின்னால் ஏற்படும் நெருக்கடிகள் அவரை குழந்தைப் போல் பார்த்து வளர்த்த வயலை விலை பேச வைக்கிறது. நடந்த கதையைச் சொல்வது போன்ற இயல்பான நடை.

மஹால் சுந்தர் (அன்புக்குரிய சுந்தர்) பிழைக்க வழி தேடும் வீட்டுப் பணிப்பெண்ணாக சிங்கப்பூருக்கு வரும் பிலிப்பின்ஸ் பெண் ஏஞ்சி! அவளது பங்களாதேஷ் காதலன். பண நெருக்கடியினால் அவளுக்கு பழக்கமாகும் சுந்தர். பங்களாதேஷ் காதலனால் ஏற்படும் கர்ப்பம். அதை கலைக்க உதவும் கதாநாயகன் சுந்தர் அவளது அன்புக்குரியவன் ஆகிறான். வெளிநாட்டில் சொந்தங்கள் யாருமற்றத் தனிமையில் இதைப் போன்ற தற்காலிக உறவுகள், துணைகள் உடலுக்கும் மனதுக்கும் தேவைப்படும். ஆனால் நிரந்தர துணையைத் தேடும் போது ஊருக்குப் போய் முறைப்படித் திருமணம் செய்து கொண்டு வாழும் சராசரி இந்திய இளைஞனின் மனக் குழப்பதை பிரதிபலிக்கும் கதை. இந்தத் தொகுதியிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதையாக நான் தேர்ந்தெடுத்ததும் இதுவே! இந்தச் சலனங்கள் எப்போதாவது ஒருமுறை வெறும் நினைவுகளாக மட்டும் தொடரும் யதார்த்தத்தில் முடியும் கதை.

தான் என்ன தப்பு செதாலும் தனக்கு நெருக்கமான பெண் உறவுகள் அம்மா, மனைவி, சகோதரி, மகள் இவர்கள் எல்லாத் தவறுகளுக்கும்காப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்மகன். சிறுவயதில் ஒளிந்து விளையாடிய கோவில் வீட்டில் இன்று தன் மகள் அதே விளையாட்டை தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தததும் பதறும் தந்தை மனம். சிறு வயதிற்கே உரிய குறுகுறுப்புடன் தன் நண்பனின் தங்கையை முத்தமிட்டது நினைவுக்கு வந்தால் ஏன் பதறாது? சிறு வயது நினைவுகளை நினைவு கூறல் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

பிறை நிலவுகள் என்ற கதை சென்னை நகரத்துத் துணை நடிகை ஒருத்தியின் கதை. பார்க்கச் சற்று அழகாக இருந்து விட்டால் குழு நடனத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். கதாநாயகியை விட அதிகமாக துணை நடிகை ஜொலிப்பதை எந்தக் கதாநாயகி பொறுத்துக் கொள்வாள்? அவர்கள் வாழ்க்கையில் விரும்பும் ஒரு விஷயம் நல்லவனாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக இருப்பது இல்லை துணை நடிகை அந்தஸ்த்திலிருந்தது மேலேறி படத்தில் ஏதாவது வசன் பேசி நடிப்பது, சிறு வேஷங்களில் தலைக் காட்டுவது, இன்னும் சற்று முன்னேறினால் இரண்டாவது கதாநாயகி. ஆனால் தினன்தோறும் சாப்பாட்டுக்கேத் திண்டாடுவதும், பணத்தேவைகளுக்காக எந்த விதத்திலாவது அவர்கள் ஏஜெண்ட், துணை இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களோடு அனுசரித்துப் போக வேண்டும் என்ற கசக்கும் உண்மை. இதில் ராசாத்திக்கு ஒரு திரைப்படத்தில் நல்ல அருமையான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அவளைத் தேடி வருகிறது. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் கதை.

தொகுப்பு முழுவதும் எளிமையானவர்கள் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சம்பவங்கள் இயல்பாக அமைகின்றன.
ஆனாலும் சட்டென்று ஒரு செயற்கையான நடைக்கு காதாசிரியர் ஏன் மாறுகிறார்? சில வார்த்தைகளை வலுக்கட்டாயமாக சேர்ப்பது போல் தோன்றுகிறது. வேட்டை கதையை கஷ்டப்பட்டு வித்தியாசமாக எழுதி நம் மண்டைக்குள்ளும் புழுக்கள் நெளிய வைக்கிறார்.
பனைமரமும் கருக்கு என்ற பெண்ணும் கொண்டாடும் சொந்தம் சங்க இலக்கியப் பாடலில் வரும் தலைவி தன் தலைவனிடம் இந்த மரம் என்னுடைய சகோதரி போன்றது, என் அம்மா வளர்த்த மரம் என்று மரத்துடன் உறவு கொண்டாடும் மனிதர்களைப் பற்றியது. கருஞ்சிறுக்கி என்று பனை மரத்தைத் திட்டும் கதாநாயகியின் வாழ்க்கையை மௌன சாட்சியாகப் பார்க்கும் பனைமரம். அவள் துணவனின் அச்சாக கருக்குவின் மகன் வந்து அவளைக் கூப்பிட்டுப் போவதை எதுவும் அறியாதது போல் பார்த்திருக்கும் பனை மரம். கிராமம் என்றால் முன்பே சொன்னது போல்
குமாருக்கு மிகவும் வசதியான தளம் என்பது புரிகிறது.

இரு நண்பர்களின் நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

சித்ரா ரமேஷ்

chitra.kjramesh@gmail.com

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்

1 Comment

Comments are closed.