சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

மு.புவனேசுவரி


சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்து நூல்களின் பட்டியலில் இரு கட்டுரைத்

தொகுப்புகளே இடம் பெற்றுள்ளன. ‘மண் புதிது ‘பயண நூல் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. குமுதம்-ஏர் இண்டியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்கு 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்த அனுபவங்கள் அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. வழக்கமான பயண அனுபவம் என்றில்லாமல் அந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் சிக்கல் பற்றியும், அவர்களின் படைப்புகள், சந்தித்த நண்பர்கள், அந்தந்த நாடுகளின் பண்பாட்டு வேறுபாடுகள் பற்றியும், இலக்கிய, திரைப்பட முயற்சிகள் பற்றியும் அத்தொகுப்பு பேசியது.தற்சமயம் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு ‘படைப்பு மனம் ‘.

இந்நூலின் கட்டுரைகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். திருப்பூர் நகரம் 6000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி தரும் பின்னலாடை உற்பத்தி நகரத்தின் பூதாகரத்தோற்றத்தின் பின் உள்ள சிதைவுகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் பேசுகிறது. இரண்டாம் பகுதி படைப்பாளியின் படைப்பு மனம் செயல்படும் விதம், ஆழ்மனம் படைப்பாக்கத்தில் செயல்படும் தன்மை பற்றியும் பேசுகிறது.

உலகமயமாக்கல் அனைத்திலும் பண ஆசை, அதிகாரவெறி, உள்நாட்டுக்கலவரங்கள், இனப்பிரச்சினைகள் மனிதர்களை இடம் பெயரச் செய்கின்றது இதற்கிடையில் உலகமயமாக்கல் ஒரு புறம் மனிதர்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறது.நவீனத்தொழிற்பெருக்கம், வறுமையின் காரணமாக குறைந்த சம்பளத்தில்

தற்காலிகத் தொழிலாளர்கள் உருவாதல், குறைந்த கூலியில் சில சலுகைகள் கொடுத்து அடிமைப்படுத்துதல் முதலியன மக்களை கொத்தடிமைகளாக்குகின்றன. தாராளமயமாக்கல் மனித வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி உள் நாட்டிற்குள்ளேயே மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உலக மயமாக்கலின் விளைவுகள் ஒரு பக்கம் வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போனாலும் அதன் பாதிப்பு மனித வாழ்வின் தன்மையை கேள்விகுறியாக்குவதைப் பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன.

இயற்கையில் மனிதனுக்குக் கிடைக்காத வியப்பூட்டும் அதிசயங்களுடன் வாழ்பவை கானக உயிர்கள். அவற்றின் இயல்பிற்கேற்ப வாழ்கிற போது மனிதன் தனக்கெதிரானதாக அவற்றை கற்பிதம் செய்து கொள்கிறான். கிராபிக்ஸ் உலகில் ஊடகங்களும் பல உயிரினங்களை எதிரிகளாக சித்தரிக்கின்றன.சமச்சீரான வாழ்க்கையைத் தருபவை கான் உயிர்கள். இதனைப்புரிந்து கொள்ள , உயிரினங்கள் குரூரமானவை என்ற தவறானக் கருத்தாக்கங்கள் மாற புதிய கல்விக்கொள்கையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் .இயற்கையுடன் இயைந்த வாழ்வு அமையும் போதுதான் வாழ்க்கை பாதுகாப்பானதாக அமையும் என்பதையும் இவர் கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.

நாகரிக வளர்ச்சி, தொழில் பெருக்கம் இவற்றால் மனிதன் தன் தேவைகளை அதிகரிக்க பணத்தேடல் என்றத் தளத்தில் சமூகச்சீர்கேடு நிகழ்கின்றது.பணவெறியில் நகரத்தில் முகமற்ற மனிதர்களாய் வாழும் மக்களிடையே குழந்தைகள், இளம் பெண்கள்

கடத்தல் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருவதை விரிவாகப் பேசுகிறார். அன்பும்,ஆதரவும் இல்லாத நிலையில் குழந்தைகள் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர். நவீன கணிப்பொறிசாதனங்களுடே இக்கடத்தல் மிகச் சாதாரணமாக நடைபெறுதலையும் சுட்டிக்காட்டுகிறார்.உலக மயமாக்கல் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பதில் குழந்தைகளும், பெண்களும் சந்தைப்பபொருளாகிவிட்டனர் என்பதையும் தெளிவாக்குகிறார்.

படைப்பு மனம் செயல்படும் விதம்பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் ஒரு படைப்பாளன் தனக்கு நேரிடும் அனுபவங்களை படைப்பாக்குவது பற்றி விளக்கிச் சொல்கிறார். சந்தித்த அனுபவங்கள், ஆழ்மனக்கருத்துக்கள் இவற்றிற்கு மொழியும், கற்பனையும் கைகொடுக்க படைப்பு அழுத்தம் பெறுகிறது. விரிவான வாசிப்பு அனுபவம், சமூக முரண்பாடுகள் பற்றிய புரிதல் படைப்பிற்கு அடித்தளமாகவும், முக்கியத்தன்மையானதாகவும் அமைகிறது.வேறு வேலையில் இருந்து கொண்டு சண்டே எழுத்தாளர்களாக இருப்பவர்களின் மன நெருக்கடி

பற்றின கட்டுரை நிதர்சனமானது.

கனவில் தோன்றிய காட்சி உறக்கம் கலைந்த நனவில் பதட்டத்தை உண்டாக்குகிறது. இந்தப்பதட்டமே தினசரி வாழ்க்கையாகவும் அமைந்து விடுகிறது.மனிதனை மனிதனாக வாழ விடாத நெருக்கடிகள். இயல்பு மீறிய வாழ்க்கை.பதட்டத்தின் புள்ளியிலிருந்து படைப்பு ஆரம்பமானாலும் சூழ்நிலை மனதிலிருந்து சட்டென உறைந்து போனதிலிருந்து கிளம்பும் பதட்டம் பற்றிப் பேசுகிறார்.

தன்னை எழுத்தாளனாகப்பிரகடனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட நிலையில் மேலோட்டமாக எழுதப்படும் அவர்கள் படைப்புகள் பாராட்டுக்குறியதாகின்றன. இது ஒரு வகை இலக்கிய அரசியல். இலக்கியக்குழுக்களிடையே முரண்பாடுகள், எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். இலக்கிய வாசிப்பும், அனுபவமும் உலகத்தை, வாழ்தலைக் கற்றுக்கொள்ளச் செய்யும் விரிந்தத் தளத்தில் அது தரும் தரிசனம் ஆறுதல் தருவது. வாசிப்பு அனுபவத்தை உயிர்ப்புள்ளதாக ஆக்குவதே படைப்பின் வெற்றியாக அமைகிறது.

வணிக நகரம் சார்ந்த வாழ்க்கை மதிப்பீடுதான் இந்தத் தொகுப்பின் பலம். ஆசிரியரின் அனுபவ வெளிப்பாடுகளை அவரின் அனுபவங்களோடும் போராடும் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதோடும் அமைவதால் நெருக்கத்தைத் தருகிறது.உலக மயமாக்கலின் விளைவுகளையும் அதனூடே படைப்பாளிகளின் சிதைவுறும் மனதையும் இத்

தொகுப்பு காட்டுகிறது.

( படைப்பு மனம்: சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள்

ரூ 45., அகரம் பதிப்பகம், தஞ்சை 1. )

====

bhuvanibhavana@yahoo.co.in

Series Navigation

மு.புவனேசுவரி

மு.புவனேசுவரி