சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

ரவிக்குமார்


சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல.அது எவரையும் இழிவு

படுத்தவுமில்லை.தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம்.

அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை,ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண் என இரண்டு கதை சொல்லிகள் வருகின்றனர்.தங்கக்கண் கொஞ்சம் ‘கூட்டிச் சொல்கிறவன் ‘ அவனிடம் ‘கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு ‘.

‘பொட்டையா ? போடாதே மேல் சீலை ‘ என்று ஒடுக்கப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிலிருந்து வருபவள் தாயம்மா.ஒரு ஜெர்மன் பாதிரியாரின் உதவியால் ‘ஐரோப்பாவில் மிகப்பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராகக் ‘ கல்வி பெறுகிறாள்.மனசுக்குள் ஆங்கிலம் பேசி;

யாருமில்லாத நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளை வாய்விட்டுச்

சொல்லிப்பார்த்து,தனது திறமையைப் புரிந்துகொள்ள அந்த ஊரில் ஒருவருமில்லையே என்று ஏங்கிக்

கொண்டிருந்த தாயம்மா ‘காலத்தின் கூத்தால் ‘ ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்கப்படுகிறாள்.1950களில் அவளுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம்.தினமும் மீன் சாப்பிட்டு, நாளுக்கொரு சேலை உடுத்தி,பார்க்கிற பெண்களும் பொறாமை கொள்கிற அளவுக்கு அழகோடு இருக்கும் தாயம்மாவை தேர்தலில் நிற்கச் சொல்லிஅரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்.இப்படி பேரும் புகழுமாக இருக்கும் அவளை ஒரு நாள் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் ரகஸியமாகக் கூடி சதி செய்து பழி சுமத்தி அடித்து விரட்டுகிறார்கள்.

ஐம்பத்துமூன்று வருடங்கள் தாயம்மாள் போன இடம் தெரியவில்லை.எண்பது வயதைத் தண்டிவிட்ட நிலையில் மீண்டும் அவள் அந்த ஊருக்கு வருகிறாள்.அப்போதும் அவள் பகலில் வெளியே தலை காட்டக் கூடாது என அந்த ஊர் கட்டுப்பாடு போடுகிறது. ‘நாம் ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு ‘அவளை

நல்ல முறையில் காப்பாற்றலாம் என தங்கக்கண்ணிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தவர்கள் முன்வரும் வேளையில் தாயம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லி கதையை முடிக்கிறான் தங்கக்கண்.

‘கல்மனசையும் உருகச் செய்யும் ‘ இந்தக்கதை ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் தங்கக்கண்ணால்தான் சொல்லப்படுகிறது.அது அவன் சொன்ன கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் அவன் கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு என முன்பே ஒரு குறிப்பு தரப்பட்டுள்ளது.

தாயம்மாமீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதைப் புரிந்துகொள்ள சுந்தரராமசாமி கதையில் பல தடயங்களை விட்டுச் செல்கிறார்.தாயம்மாவின் அழகு மட்டுமின்றி அவளது செல்வச் செழிப்பும் அவள்மீது

பொறாமை உண்டாகக் காரணமாகியிருக்கலாம்.அவளுக்கு அபவாதம் வந்துசேரக் காரணமாக இருந்த

மாணவன் மணிகண்டன் வசதியான ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகன்.கணக்கில் ஓட்டையான அவனுக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு தனியே பாடம் சொல்லித் தருகிறாள் தாயம்மா.மணிகண்டன் வீட்டுக்கு வரும்போது அவன் முகம் வீங்கி இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.அவனை கன்னத்தில் அடித்து தாயம்மா பாடம் சொல்லித் தந்ததால் அப்படி முகம் வீங்கிப் போயிருக்கலாம்.அதனால் கோபம் கொண்ட அந்தப் பையனின் தாய் ஊரெல்லாம் தாயம்மாமீது கோபப்படுகிறமாதிரி ஒரு பொய்க் கதையைக் கிளப்பி

விட்டிருக்கலாம்.இப்படி பார்ப்பதற்கான தடயங்களே அந்தக் கதையில் உள்ளன.தாயம்மாவின் ஒழுக்கம்பற்றி சந்தேகம் கொள்கிறமாதிரி கதைக்குள் ஒரு குறிப்புமே இல்லை.ஊர்ப் பிரமாணிகளும்,சக ஆசிரியர்களும் பதுங்கியிருந்து அவளை அடித்துத் துன்புறுத்தும் காட்சியின் வர்ணனை மட்டுமின்றி மிகவும் துயரார்ந்த முறையில் சொல்லப்பட்டுள்ள அவளது மரணமும் அவள்மீது சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன.

மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(sign system) என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர்.ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். ‘விளை ‘ என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா,தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை

‘தாழ்ந்தஜாதிப் பிள்ளை ‘என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்;அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த மக்களுக்கு ஆதரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.

மாடக்குழியை ஓரிடத்தில் மாங்குளம் எனத் தவறாகக் குறித்திருப்பது,உள்ளூர் தினசரியின் தலைமை நிருபருக்கு இப்போது 40 ரூபாய் சம்பளம் எனச் சொல்வது போன்ற சிறு பிழைகள் இருந்த

போதிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக வைப்பதற்கு தகுதிபெற்றது இந்தக்கதை.இது தலித்துகளுக்கு எதிரானதென்றும்,இதை எழுதியவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வன்கொடுமைத் தடுப்பு

சட்டத்தில் வழக்குபோடுவோம் என்றும் சொல்லுவது, ‘தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும்

அறிவு கிடையாது,அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில் ‘ செய்யக்கூடியவர்கள் ‘என்பதுபோன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும்.அது நிச்ச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.

-ரவிக்குமார்,பாண்டிச்சேரி,21.4.2005

—-

adheedhan@rediffmail.com

Series Navigation

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

ஆதவன் தீட்சண்யா


படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே.

தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கெளபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை ‘. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.

19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே நாடார் பெண்களும் (26.07.1859 ), தாழ்த்தப்பட்ட பெண்களும் (01.07.1865) தோள்சீலை அணிந்து கொள்ளும் உரிமையை அடைந்துவிட்டனர். ஆனால் 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதிரியார் வரும்போது தாயம்மாளின் உறவுப்பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ள அவஸ்தையுறுகிறார்கள் என்கிறது கதை. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும் வரலாற்றைத் திருத்தும் சுந்தரராமசாமியை மன்னிப்பார்களாக.

தாழ்ந்த சாதியென்று தெரிந்தும் தாயம்மாளின் கல்வியறிவை மதித்து தங்கள் ஊரின் பள்ளிக்கு அவளை தலைமையாசிரியையாக நியமித்து அப்போதே முன்னூறு ரூபாய் ஊதியம் வழங்குகின்றனராம் மாடக்குழி மகான்கள். சுதந்திரத்திற்கு பின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் இங்கிலிசில் பேசி பிரச்சாரம் செய்யுமாறும் கட்சிகள் அவளை மொய்க்கின்றனவாம். (இன்றுவரை பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் வேட்புமனு கூட தாக்கல் செய்யமுடியவில்லை.) இந்தளவுக்கு அவளைக் கொண்டாடி ஊரார் தரும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை தாயம்மாள். அடித்தள மக்களின் மேலெழும்பும் முயற்சிகளை ‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் ‘ என்று இளக்காரம் பேசி மறுக்கும் ஆதிக்கசாதியின் மனோபாவம் தான் கதையின் அடியோட்டம்.

அவளளவு படித்த ஆம்பளையே இல்லை அவளது சாதியில். கல்யாணமில்லை. அதற்காக காமத்தை அடக்கிக் கொள்ளமுடியுமா ? தன்னிடம் டியூசன் படிக்கும் நாலாங்கிளாஸ் பையனை சூறையாடுகிறாளாம். மரணப்படுக்கையிலிருக்கும் போதும் ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ளவர்கள் வாழும் ஊர், இந்த ஒழுக்கக்கேட்டை தாங்கிக்கொள்ளுமா ? பிரம்பாலடித்து உதட்டைக் கிழிக்கிறது. ஆளாளுக்கு அடித்து துவைக்கின்றனர். பெருகி வழியும் அவளது ரத்தம் தொட்டு அவள்மீது கதை எழுதுகிறார் சுந்தரராமசாமி.

முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு வயதேறிய தாயம்மாள் அதன்பின் ஊரை விட்டோடி ஐம்பத்துமூன்று வருடங்கள் கழித்து ஊர்திரும்பிச் சாகிறாள். காலக்கணக்கின் துல்லியம் கிட்டத்தட்ட 2005 என்று சமகாலத்தை எட்டுகிறது. ஆனால், தாயம்மாள் செத்து 16 நாள் கடந்த பின் அவளது கதையைச் சொல்லும் சூறாவளி தினசரியின் பிரதம நிருபர் தங்கக்கண்ணுக்கு தற்போதைய மாதச்சம்பளம் நாற்பதுரூபாயாம். கள்ளக்கணக்கெழுதி நாளொன்றுக்கு ஒருரூபாயை இசுக்கிவிடப் பார்க்கும் அவன் 1942 இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப்போராட்டத் தியாகி என்கிறார் கதாசூடாமணி சுந்தரராமசாமி. தான் எழுதுவதில் குற்றம்காண யாரிருக்கிறார்கள் என்று காலம் இடம் வரலாற்றுத் தரவுகளை குளறுபடியாக பொறுப்பின்றி கையாள்வது மமதையின் உச்சம்.

– 2 –

‘பலான ‘ விசயத்தில் ஆள் கொஞ்சம் வீக் தெரியுமோ என்ற தகவலை, உண்மையா என்று சோதிக்காமலே ஒரு குற்றச்சாட்டாக பதிவுசெய்துகொள்வது பொதுஉளவியல். பிற மதத்தாரால்தான் நம்நாட்டுப் பெண்களின் கலாச்சாரம் பாழ்பட்டது என்று இந்துத்வவாதிகள் சொல்வதையே – பாதிரியார் பேச்சைக் கேட்டு படிக்கப்போய்த்தான் அவளுக்கு இவ்வளவு கேடுகளும் வந்துசேர்ந்தது என்று சுந்தரராமசாமியும் சொல்வதாய் கருதவும் இக்கதை இடமளிக்கிறது.

அத்துமீறலை படைப்புச் சுதந்திரமெனக்கூறி தப்பித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை.

– visaiaadhavan@yahoo.co.in

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

சின்னக்கருப்பன்


சுந்தர ராமசாமி என்ற சிறந்த எழுத்தாளர் சமீபத்தில் எழுதிய அற்புதமான கதையை படித்தேன்.

மனதாழத்தில் அமுங்கிக் கிடக்கும் வன்முறையை சுந்தர ராமசாமி ஒவ்வொரு கதையாக வெளிக்காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அது சுந்தர ராமசாமியின் வன்முறை அல்ல. அது அவர் வாழும் சமூகத்தின் வன்முறை. வன்முறையை அலங்காரம் பண்ணுபவரல்ல அவர். அதன் அவலத்தை, கும்பல் மனப்பான்மையில் வன்முறை வெளிப்படும் விதத்தை வெளிக்காட்டுபவர்.

இந்த கதையில் அவர் தலித்துகளைப் பற்றியோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியோ எழுதியிருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. இது சமூகத்தில் தொடர்ந்து மாறுபடும் உறவுகளும், அந்த உறவுகள் மூலம் மனிதர்கள் கொள்ளும் உணர்வுகளுமே கதை.

இதில் யாரும் சுய சிந்தனையோடு நடந்து கொள்வதில்லை. இதில் சுய சிந்தனையோடு நடந்து கொள்வது தாயம்மா மட்டுமே. அவளது ஒரே ஒரு சுயசிந்தனையும் ஆர்வமும், அந்த ஊரையே மாற்றுகிறது. மாற்றத்தை ஏற்படுத்துபவள் தாயம்மாதான். ஊர் பெயரை மாற்றுவதிலிருந்து ஊரை மாற்றுவதிலிருந்து முன்பு தூற்றியவர்களை இன்று பாதுகாவலர்களாக ஆக்குவது வரை மாற்றுவது தாயம்மாவின் சுய சிந்தனை. மற்ற அனைவரும் செலுத்தப்பட்டவர்களே.

பாதிரியாரும், தையல்காரரும் தங்கக்கண்ணும், ஊராரும், மோகன் தாசும் வேறொரு சிந்தனைகளின் தாக்கங்கள். வேறொரு விஷயத்துக்காக தங்களை பலி கொடுக்கின்றவர்கள். வேறொரு விஷயத்தைக் காப்பதற்காக போராடுகிறவர்கள். தாயம்மா மட்டுமே தனக்காக இருக்கிறாள்.

அவளது சுய ஆர்வம் அவளை படிக்க வைக்கிறது. அவளை பள்ளிக்கூட வாத்தியாராக ஆக்குகிறது.

பிள்ளை கெடுத்தாள் விளை – கதை யாருக்கும் எந்த போதனையையும் தருவதில்லை. பிரச்சாரம் அல்ல அது. ஒரு தலித்தின் சோகமயமான வாழ்க்கையை சொல்லுவதில்லை. அது தலித் இலக்கியம் அல்ல. தன்னைப் பற்றிய எல்லா விமர்சனங்களையும் அறிந்த சுந்தர ராமசாமி, இந்தக் கதையை எழுதியதன் மூலம் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கண்டு அஞ்சுவதில்லை என்றே பறை சாற்றுகிறார். அது மட்டுமல்ல, அப்படிப்பட்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்காமல் தான் சொல்ல வந்த கதையை சொல்லிவிட்டு போவதிலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். தன் கதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி படிக்கப்பட்டு ஒவ்வொரு வரியிலும் டாகன்ஸ்ட்ரக்ஷன் ஆட்கள் நோண்டப்போகிறார்கள் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அஞ்சாமல், அவர் தான் சொல்ல வந்த கதையை சொன்னதற்காக பாராட்டுக்கள். (என் பாராட்டுக்கள் அச்சிறந்த எழுத்தாளருக்குத் தேவையில்லை என்றாலும்.)

இந்தக் கதை மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. முதலாவது தாயம்மாவின் உண்மையான கதை. அது நமக்குத் தெரியாது. அந்தக் கதையைச் சொல்வது தங்கக்கண். தங்கக்கண் சொன்னதுதான் நமக்கு வந்து சேர்ந்ததா என்றும் தெரியாது. நம்மிடம் கதை சொல்வது தையல்காரர்.

தாயம்மாவின் கதையை தங்கக்கண் சொல்வது ஒரு தேர்ந்த கதை சொல்லியின் வார்த்தையாக வருவதாக தையல்காரர் கூறுகிறார். கதையை அழகுபடுத்துவதற்காக தங்கக்கண் சொன்னது என்ன, சொல்லாமல் விட்டது என்ன என்று வாசகரான நமக்கு தெரியாது.

சுந்தர ராமசாமி முதலாவதாக பேசுவது, கதை சொல்லியின் பங்கு கதையில் என்ன என்பது ? வியாசர் எழுதிய மகாபாரதத்தில் வியாசரே ஒரு கதாபாத்திரமாக வருவது போல தங்கக்கண் சொல்லும் கதையில் தங்கக்கண்ணும் ஒரு கதாபாத்திரமாக வருகின்றான். சஞ்சயன் பார்த்து திருதராஷ்டிரனுக்குச் சொன்னதை திருதராஷ்டிரனுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது என்று வியாசர் சொன்னகதை போல, தாயம்மாவின் கதையை தங்கக்கண் சொல்வது தையல்காரரின் வார்த்தைகளில் நமக்கு சுந்தர ராமசாமி மூலம் சொல்லப்படுகின்ற தாயம்மாவின் கதை பல அடுக்குகளுக்குப் பின்னால் உண்மையான தாயம்மாவின் கதை ஒளிந்திருக்கிறது.

இரண்டாவது, தாயம்மா கதையில் முக்கிய நிகழ்வு நிச்சயமின்றி வேண்டுமென்றே விடப்பட்டுள்ளது. அது கதைசொல்லியான தங்கக்கண்ணுக்கும் தெரியவில்லை (என்று தையல்காரர் சொல்கிறார்). ஏனெனில் அங்கு உண்மை நிகழ்வும், குற்றச்சாட்டின் உண்மையும் முக்கியமில்லை என்பதுதான். கும்பல் மனப்பான்மை மேலெழும்போதும், சமூகத்தின் வன்முறை வெளிப்படும்போதும், உண்மையை விட, நிகழ்வு எப்படி பார்க்கப்படுகிறது என்பதே முக்கியமானதாக ஆகிவிடுகிறது.

மூன்றாவது இந்த கதையை அல்லிகோரிக்கல்(allegorical) என்று எடுத்துப் பார்க்கவும், அதில் சுந்தரராமசாமியின் அரசியல் சார்பை பார்க்கவும் மிகவும் சிரம்பப்பட்டு தோண்ட ஏதுவானதாக இருக்கிறது. (சுந்தர ராமசாமி கருத்தின் படி) கிரிஸ்துவத்தின் வரவு மூலம் கல்வி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வந்தது, அதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாகவும் கல்வி கற்றவர்களாகவும் முண்டி முன்னேறுவது. அதற்கு பக்கபலமாக இருக்கும் உள்ளூர் முற்போக்கு சக்திகள் (மோகன் தாஸ் (கரம் சந்த் காந்தி!) தாயம்மாவுக்கு வாத்தியார் உத்யோகம் கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது ) அதற்கு சமூகத்தில் கொடுக்கப்படும் அரைகுறை அங்கீகாரம், மனச்சாய்வுகள் ஏதோ காரணத்தை முன் கொணர்ந்து, மற்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை குறைக்கவும் மறுக்கவும் முனைவது. ஆனால் பாதிரியாரும் மோகன் தாசும் போட்ட விதை காலம் கடந்தேனும் மாற்றத்தை கொண்டு வந்து விடுவது.

**

இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது. அது sacred க்கும் profane க்கும் உள்ள உறவு. எது வணங்கத்தக்கதாக சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறதோ அது காலபோக்கில் வணங்கத்தகுதியற்றதாக ஆக்கப்படுகிறது. இது நிலைபெற்ற விஷயம் இல்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்டவளாக இருக்கும் தாயம்மா வணங்கத்தகுதியற்றவளாக இருக்கிறாள், அவள் படித்து பள்ளி ஆசிரியையாக ஆகும்போது வணங்கத்தகுதியானவளாக ஆகிறாள். அவளை வணங்கத்தகுதியற்றவளாக சமூகத்தால் கற்பிக்கப்பட, நிகழ்வு காரணமாகிறது. நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் வணங்கத்தக்கவளாக கதை சொல்லி (தங்கக்கண்) உருவாக்குகிறான். profane ஆக இருக்கும் தாயம்மா sacred ஆவதும், அவள் பின் profane ஆவதும், மீண்டும் அவள் sacred ஆவதும் சமூகத்தால் நடத்தப்படும் நாடகமாகின்றது. அவள் இறுதியில் sacred ஆகும்போது மட்டுமே அது சமூக ஒழுக்கத்தைக் காப்பாற்ற இல்லாமல், அந்த மனுஷிக்கான மரியாதையாக ஒரு மனித வாழ்வின் மகத்துவத்துக்கான புனிதமாக ஆகின்றது.

**

தாயம்மாவின் ஆதரவாளர்கள் யாருமே தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர். பாதிரியாரும் மோகன் தாசும், சொத்தை விற்று பள்ளிக்கூடம் கட்டித்தந்தவரும், தையல்காரரும், தங்கக்கண்ணும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர். தாயம்மாவுக்கு அவர்கள் பரிந்ததும் அவள் தாழ்த்தப்பட்டவள் என்பதற்காக அல்ல. அவள் ஒழுக்கத்தில் சிறந்தவள் அதனால்தான் அவள் பக்கம் நிற்கிறார்கள் என்றும் இல்லை. அது அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. இறுதியில் அவர்கள் அவளைக் காப்பாற்றுவதற்காக பணம் எடுக்கும் போதும் அவர்களுக்குத் தெரியாது. அது நன்றிக்கடனும் இல்லை.

அதுவே இந்தக் கதையின் உன்னதத்துக்குக் காரணம். இங்கு வெளிப்படுவது உண்மையான கதை சொல்லியான சுந்தர ராமசாமியின் குற்றம், குறைகள், நிறைகள் கடந்த மனித நேயம். அவரது மனித நேயம் வெளிப்படும்போது யாரோ அதனை அறிய அங்கு இல்லை என்பது சுந்தர ராமசாமியின் தனி மனித சோகமாக ஏனோ எனக்குத் தோன்றுகிறது.

**

பின் குறிப்பு: நான் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவது இல்லை. அதற்கும் எனக்கும் வெகு தூரம். இருப்பினும், இந்த கதை பற்றிய சில கட்டுரைகளைப்படித்துவிட்டு ஆர்வம் காரணமாக சுந்தரராமசாமி அவர்களின் கதையைப் படித்தேன். தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். இது இலக்கிய திறனாய்வு கட்டுரை என்று கருதி எழுதவில்லை.

karuppanchinna@yahoo.com

Series Navigation