சுஜாதா – எனது பார்வையில்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

கணபதி சுப்பு


கடந்த சில இதழ்களில், சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் பற்றியும், சுஜாதாவின் எழுத்து இலக்கியமா என்பது பற்றியும் கட்டுரைகள் பார்த்தேன். இங்கு, சுஜாதா என்ற எழுத்தாளர் என்னை, எனது எண்ணங்களை பாதித்ததை பதிவு செய்ய விரும்புகிறேன்.

எனது பதினைந்தாவது வயதுவாக்கில் தமிழில் எல்லாக் குப்பையையும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அப்பொழுது சுஜாதாதான் என்னைக் கவர்ந்தவர் என நினைத்து பார்க்கும் பொழுது சில காரணங்கள் உடனடியாக மனதில் தோன்றுகின்றது. முதல் காரணம், அவரது ‘விஷய ஞானம் ‘. நமக்கு தெரியாத பல செய்திகளை மூச்சு முட்டுமளவிற்கு கட்டுரைகளிலோ, கதைகளிலோ அவர் அள்ளித் தரும் போது, எனக்கு முதலில் தோன்றுவது ஆச்சரியம், பிறகு ‘இதெல்லாம் நமக்கு தெரியவில்லயே ‘ என்ற எண்ணம். அவர் பேசும் விஷயங்களில் அவருக்கு எவ்வளவு தெரியும், அவர் நுனிப்புல் மேய்கிறாரா, இதில் அவரது ‘ஒரிஜினாலிடி ‘ எவ்வளவு என்பது பற்றியெல்லாம் அப்பொழுது யோசிக்கத் தோன்றவில்லை. மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற சமுதாய அங்கீகாரங்களை மட்டுமே பார்க்கத்தெரிந்த அந்த காலகட்டத்தில், அவரும் ஒரு ‘பொறியாளர் ‘ என்பது மிக முக்கியமாகப்பட்டது. நானும், பிறகு பொறியியல் படிக்க நேர்ந்ததால், பொறியியல் படித்தவர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என, சுஜாதாவை எனது இலட்சியவாதியாக ( ‘ideal ‘) பார்க்க ஆரம்பித்தேன்.

இந்த எண்ணம் கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் அப்படியே இருந்தது. நான் சுஜாதா குறிப்பிட்ட மற்ற எழுத்தாளர்களையும், ‘சு.ரா ‘ போன்றவர்களையும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அப்பொழுதுதான், எழுத்தின் ‘தரம் ‘ மற்றும் ‘ஒரிஜனாலிடி ‘ பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல, மெல்ல, ‘நிறைய தெரிவது பெரிய விஷயமில்லை ‘ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணம், நானும் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்க ஆரம்பித்திருந்ததும், நூலகங்கள் மூலமாக சுஜாதா சொல்லாத செய்திகளை படித்ததும்தான். அப்பொழுது எனக்கு சில எண்ணங்கள் தெளிவாயிற்று : சுஜாதாவிற்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் மிக அதிகம். ஆனால் அது மட்டும் போதாது. நிறைய படிக்க வேண்டும், அதற்கு நூலகங்கள் மற்றும் புத்தகங்களை அணுக வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வாய்ப்பு அவரது -தாழில் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ சுஜாதாவிற்கு கிடைத்திருக்கிறது. இது எல்லாவற்றையும் விட, படித்ததை கிரகித்து கொள்ளும் ஆற்றல் மற்றும் அவற்றை எளிய முறையில் எழுதும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இதுவே அவரது வெற்றிக்குக் காரணம் என எண்ணினேன். இது அவரது எழுத்தின் தரம் பற்றிய பெரிய மாறுதலை கொண்டுவராவிடினும், அவரது ‘ஒரிஜனாலிடி ‘ பற்றி யோசிக்க வைத்தது. மேலும் அது வரை சுஜாதா எனது வாசிப்பின் ‘ஒரு தவிர்க்க முடியாத அங்கம் ‘ என எண்ணி இருந்தேன். புதிய விஷயங்களை எனக்கு அறிமுகப்படுத்தவும், அதைப் பற்றி கருத்து சொல்லவும் அவரது எழுத்துகளுக்கு நான் கொடுத்து வந்த முக்கியத்துவம் மெல்லக் குறையத் தொடங்கியது. கடந்த நான்கு வருடமாக வெளிநாடுகளில் வசிக்க ஆரம்பித்ததும், இணையம் மூலமாக உலக நடப்புகள் அறிய ஆரம்பித்ததும், சுஜாதா பற்றிய எனது ப ‘ர்வையை பதப்படுத்த உதவியது.

இந்த இடத்தில் ‘ப்ளூம் ‘ என்ற கல்வியாளரின் ‘கற்கும் விதம் ‘ பற்றிய வகைப்படுத்தலை (Bloom ‘s Taxonomy of learning skills) குறிப்பிட விரும்புகிறேன். கற்பித்தல் மூலம் ஒருவர் பெறும் அறிவை ‘ஆறு அடுக்கு பிரமிடு ‘ ஆக வகைப்படுத்தும் இவர், பிரமிடின் அடிப்பாகமாக ‘அறிதல் (knowledge) ‘, பிரமிடின் உச்சியாக ‘மதிப்பீடு (evaluation) ‘ என வகைப்படுத்துகிறார். பிரமிடின் மற்ற அடுக்குகள் (கீழிருந்து மேலாக) :

‘புரிதல் (understanding) ‘, ‘செயலாக்கம் (application) ‘, ‘பகுத்தறிதல் (analysis) ‘, ‘உருவாக்கம் (synthesis) ‘. சுஜாதாவின் எழுத்தை இதில் பொருத்திப்பார்த்தால், அவை, ப்ளூம் பிரமிடின் கீழ் இரண்டு அடுக்குகளைச் சாறும்.

ஒரு வாசகனாக, சுஜாதாவின் விலாசமான அறிந்து கொள்ளும் ஆர்வம் (அறிவியலிலிருந்து ஆழ்வார்கள் வரை) பற்றி இன்றும் ஆச்சரியப்படுகிறேன். வாசிப்பு உலகத்தில் திசை தெரியாமல் ‘மாத, வார நாவல்களே ‘ பேரின்பம் என இருக்கும் வாசகனை, ஆரோக்கியமான எழுத்துக்கள் மற்றும் அறிவியல், கவிதை போன்றவற்றை அறிமுகம் செய்ததில் சுஜாதாவுக்கு உள்ள பங்கை யாரும் மறுக்க முடியாது.

வெகு ஜன இதழ்கள் தமிழ்நாட்டை குட்டிசுவராக்கும் வரையில் சுஜாதா போன்றவர்கள் மிக அவசியம் என்பது என் கருத்து. சுஜாதா இலக்கியவாதி இல்லை என தொண்டை கிழிய வாதிடும் இலக்கியவாதிகளை விட அவர் மறைமுகமாக தமிழ் இலக்கியத்திற்கு உதவி வருகிறார்.

(அவரது பல சிறுகதைகள் மனதைத் தொடுபவை, சிறப்பாக எழுதப்பட்டவை என்பது என் கருத்து. உ.ம் : குதிரை, அரை வைத்தியன்). இங்கு சுஜாதாவின் எழுத்து எனும் போது, என்னையும் அறியாமல் அவர் விகடன், குங்குமம், கணையாழி போன்ற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையே பெரும்பாலும் அலசி இருக்கிறேன் என உணர்கிறேன். இதுவே நான்கு தலைமுறை இளைய சமுதாயத்திற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் அவரின் பெரிய பங்களிப்பு என எண்ணுகிறேன்.

gsubbu240@hotmail.com

Series Navigation

கணபதி சுப்பு

கணபதி சுப்பு