சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

மைக்கல் ஏ லீடான்


எல்லோரும் சொல்வதுபோல, சீனா கம்யூனிஸ அமைப்பிலிருந்து, இன்னும் அதிக சுதந்திரமான இன்னும் அதிக ஜனநாயகமான அமைப்புக்குச் செல்லவில்லை. மாறாக, இதுவரை யாரும் பார்த்தறியாத ஒரு நாடாக மாறி வருகிறது. அது முதிர்ந்த பாஸிஸ நாடாக.

இந்த புதிய அமைப்பு உடனே கண்டறிய கடினமானது. ஏனெனில் இன்னும் சீனாவின் தலைவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இன்னொரு காரணம், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய பாஸிஸ நாடுகள் இளமையான கவர்ச்சிகரமான புரட்சிகரமான தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது. அனைத்தும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அழிந்துவிட்டன. சீனா எந்தவிதத்திலும் இளமையானது அல்ல. அதனை ஆட்சி புரிபவர்கள் கவர்ச்சிகரமானவர்களும் இளைஞர்களும் அல்லர்.

இன்றைய மற்றும் முந்தைய சீனாவின் தலைவர்கள், டெங் ஜ்யாவோ பிங் ஆரம்பம் முதல் ஜியாங் ஜெமின் வரை, கம்யூனிஸ பொருளாதார அமைப்பை தகர்த்தெறிந்திருந்தாலும், அவர்கள் முதலியத்தை அணைத்துக்கொள்ளவில்லை (முதலாளித்துவம் என்ற வார்த்தையை விட சரியான வார்த்தை முதலியம் (capitalism). அதுவே இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது) அரசாங்கம் எல்லா ‘உற்பத்திக் காரணிகளையும் ‘ சொந்தமாக வைத்துகொண்டு இருக்கவில்லை. இன்று தனிச்சொத்து அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. 2001 ஆம் வருட சூன் மாதம் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முதலாளிகளும் வியாபாரிகளும் அனுமதிக்கப்பட்டுவிட்டார்கள். லாபம் என்பது தவறானது என்று போதிப்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது. இன்று சீனாவில் எல்லா மட்டங்களிலும் லாபநோக்கு தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது. அரசாங்கம் சொந்தமாக வைத்திருக்கும் தொழிற்சாலைகளிலும் தனியார் தொழிற்சாலைகளிலும் வியாபாரங்களிலும் லாபமே தாரக மந்திரம். இன்று அரசாங்கமே ஏராளமான தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது வியாபாரத்தில் ஈடுபடுகிறது. ராணுவம் தொழிற்சாலைகளை சொந்தமாக வைத்திருக்கிறது. ராணுவ அதிகாரிகள் பல நிறுவனங்களில் பெரும் பதவிகள் வகித்துக்கொண்டே ராணுவத்தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது சோசலிஸமும் அல்ல காபிடலிஸமும் ( முதலியமும் ) அல்ல. இது கார்பரேட் ஸ்டேட் என்று தூற்றப்பட்ட மூன்றாவது வழி. 1920இல் பாஸிஸத்தின் நிறுவனரான பெனிடோ முஸோலினியால் உருவாக்கப்பட்டு பிறகு மற்ற ஐரோப்பிய பாஸிட்டுகளால் காப்பி அடிக்கப்பட்ட முறை.

அந்த கால பாஸிஸ அரசாங்கங்களைப் போலவே, சீனாவும் இரக்கமற்ற ஒரு கட்சி சர்வாதிகாரத்தை அமல் செய்துவருகிறது. ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்ததை விட இப்போது ஏராளமான குரல்கள் பொது மேடையில் கேட்டுவந்தாலும், இந்த அமைப்பை விமர்சிப்பவர்களுக்கு எந்த இடமும் இல்லை என்று சொல்லியாக வேண்டும். மேற்கத்திய முறை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களுக்கு எந்த வித சகிப்புத்தன்மையையும் சீன அரசாங்கம் காட்டுவதில்லை. அன்றைய ஆரம்பகால பாஸிஸ நாடுகளைப் போலவே, சீனாவும் தேசியவாதத்தை தீவிரமாக முன்னிறுத்துகிறது. ஆனால், ‘பாட்டாளிவர்க்க சர்வதேசீயத்தை ‘ (proletarian internationalism) சீன மக்களிடம் பேசுவதே இல்லை. அன்றைய ஆரம்பகால பாஸிஸ அரசாங்கங்களைப் போலவே, சீன அரசாங்கமும், தனிமனித சுதந்திரம் மற்றும் ஆர்வங்களை தேசத்தின் நன்மைக்காக தியாகம் செய்ய வலியுறுத்துகிறது. வெளிநாட்டில் வசிக்கும் சீனர்களைக் கூட விட்டுவைக்காமல் சிறை பிடிக்கும் சீன அரசாங்கம், எல்லா சீனர்களையும் அவர்கள் எங்கிருந்தாலும், மேலாண்மை செய்ய சீன அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது என்றே வலியுறுத்துகிறது. சீனாவின் தலைவர்கள் தாங்கள் ஒரு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்கிறோம் என்றே நம்புகிறார்கள், ஒரு புவியியல் ரீதியான இடத்தை அல்ல.

பாரம்பரிய கலாச்சாரத்தை கொன்று அதன் மீது மலட்டுத்தனமான மார்க்ஸிஸ-லெனினிஸத்தை நிறுத்திய பழங்கால கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலன்றி, இன்றைய சீனத் தலைவர்கள் ஆயிரம் வருடப் பழைய சீன சிந்தனையிலிருந்து தேவையான விஷயங்களைப் பொறுக்கி எடுத்து பிரபலப்படுத்தி தங்களது செயல்களுக்கு நியாயம் வழங்கிக்கொள்கிறார்கள். இங்கு எந்த விதமான சோஷலிஸ யதார்த்தமும் கிடையாது. மேற்கத்திய பார்வையாளர்களைக் குழப்பிய பெரிய விஷயம், இந்த பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பகிரங்கமாக சீன கம்யூனிஸ்டுகள் தழுவிக்கொண்டதுதான். மிகப்புராதனமான வேர்களைக் கொண்ட இந்த நாடு எப்படியிருந்தாலும் தன்னுடைய சமூக மற்றும் அரசியல் நடைமுறைகளில் தனது மனிதத்துவத்தை காட்டிவிடும் என்றே பலரும் நம்புகிறார்கள். இருந்தும், 1920 மற்றும் 1930களில் இருந்த பாஸிஸ்ட் தலைவர்கள் இதனையே செய்தார்கள். முஸோலினி ரோம் நகரை மீண்டும் கட்டி அதன் பழைய செழுமையை காட்சி மூலம் நிரூபிக்க விரும்பினார். ஹிட்லரின் அரசாங்க கட்டமைப்பாளர் architect ஹிட்லரின் அரசு முழுவதும் நவசெவ்வியல் கட்டிடங்களைக் கட்டினார்.

அவர்களது ஐரோப்பிய பாஸிஸ மூதாதையர்களைப் போலவே சீன அரசாங்கத் தலைவர்களும், தங்களது வரலாறு மற்றும் கலாச்சாரம் காரணமாக, உலக விவகாரங்களில் முக்கிய அந்தஸ்து தங்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களது இன்றைய வலிமையின் காரணமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலாச்சார சாதனைகள் காரணமாகவோ அந்த அந்தஸ்து கொடுக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. முந்தைய ஜெர்மனி மற்றும் இத்தாலி போலவே, இன்றைய சீனாவும், தான் அவமானப்படுத்தப்பட்டோம் என்றும், துரோகம் செய்யப்பட்டோம் என்று பேசுகிறது. வரலாற்று ரீதியாக பட்ட காயங்களை வஞ்சம் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறது. ஹிட்லரும் முஸ்ஸோலினியும் பேசிய autarky (சுயசார்பு) போலவே இன்றும் சீனா தன்னளவில் தேவையான கோதுமை அனைத்தையும் தாங்களே உற்பத்தி செய்யவேண்டும் என்று திட்டங்கள் தீட்டி வருகிறார்கள்.

ஆகவே, ஒரு புறம் கம்யூனிஸத்தின் அடக்குமுறை சிந்தனையும் இன்னொரு புறம் முதலியத்தின் ஜனநாயக சிந்தனையும் முரண்படும் இன்றைய சீனா அடிப்படையிலேயே நிலையற்ற அமைப்பு கொண்டது என்ற சிந்தனை தவறானது. ஹிட்லரின் ஜெர்மனியும் முஸோலினியின் இத்தாலியும் காட்டிய தீவிரமான சக்தியைத் தாண்டியும், உண்மையிலேயே பாஸிஸம் ஒரு நிலையான அமைப்பாகக்கூட இருக்கலாம். பாஸிஸத்தின் உள் முரண்பாடுகளால் பாஸிஸம் வீழவில்லை. அதனை விட அதிகமான ராணுவபலம் கொண்ட எதிரிகளாலேயே அது வீழ்ந்தது. ஹிட்லரும் முஸோலினியும் உண்மையிலேயே மக்கள் இயக்கத்தின் சக்தியாலேயே ஆட்சிபலம் பெற்றார்கள். இத்தாலியர்களும் ஜெர்மானியர்களும் இந்த பாஸிஸ அரசுகளுக்கு எந்தவித உண்மையான எதிர்ப்பையும் (தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபின்னர் தவிர) காட்டவில்லை.

ஐரோப்பிய பாஸிஸம் அப்படிப்பட்ட ஒரு சிறிய வாழ்நாள் உடையதாக இருந்தமையால், உண்மையிலேயே ஒரு நிலையான நீண்டகாலம் இருக்கக்கூடிய பாஸிஸ அரசாங்க அமைப்பு சாத்தியமா இல்லையா என்பது நாம் அறியக் கடினமாக இருந்தது. பொருளாதார ரீதியில், மத்திய ஐந்தாண்டுத் திட்டங்களால் நடத்தப்பட்டதாலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாலும் உடைந்த சோவியத் அமைப்பைக் காட்டிலும், கார்பரேட் ஸ்டேட் இன்னும் வளைந்து கொடுக்கக்கூடியதாகவும், சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல மாறக்கூடியதாகவும் இருக்கலாம்.

‘சமமானவர்களில் முதலானவர் ‘ என்று தன்னை ஹிட்லர் கூறிக்கொண்டாலும், அவர் தனது அரசை உண்மையான ஜனநாயகத்துக்கு இட்டுச் சென்றிருக்கமாட்டார். அதே போல முஸோலினியும் இத்தாலிய மக்களின் சுதந்திரக் கருத்து வெளிப்பாட்டுக்கு இணங்கி அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருக்கமாட்டார். அதே போல, சீனாவின் அரசாங்கத்தலைவர்களும் அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக மாற்றத்தை சீனாவுக்குள் கொண்டுவரமாட்டார்கள். தைவானின் ஜனநாயக மாற்றத்தைப் போல சீனாவிலும் அப்படி ஒரு மாற்றத்தை சீன மக்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று உண்மையாகவே அஞ்சுகிறார்கள்.

கடந்த காலம் என்பது எதிர்காலத்தை கணிக்க நம்பத்தகுந்த வழிகாட்டி அல்ல. மிகக்குறுகிய காலத்தில் தன்னை வெகு விரைவில் மாற்றிக்கொள்ளும் திறமையை சீனா உலகுக்குக் காட்டி ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்துக்குள் சீனா வந்திருப்பது இன்னும் அதிகமான வியாபாரப்போட்டிக்கும், அதிக வெளிநாட்டவர் சீனாவுக்கு வருவதும் சீனாவை இன்னும் ஜனநாயக வழிக்குள் கொண்டுவரும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சரியாகவே இருக்கலாம். ஆனால் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தின் தொடர்ந்த உயிர்ப்பு முக்கியமாக இருக்கும் போது பொருளாதாரத்தை விட அரசியலே முக்கியம். மைக்கல் கோர்பசேவின் வழிமுறைகளை பின்பற்ற சீனத் தலைவர்கள் தயாரில்லை என்பதை சீனத்தலைவர்களே தெளிவாக பல முறை தெரிவித்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஆரம்பகால பாஸிஸம் போர்களின் விளைவு. பாஸிஸத் தலைவர்கள் ராணுவத்தை புகழ்வதும், ராணுவ ஆக்கிரமிப்பையும் அடிக்கடி புகழ்ந்திருக்கிறார்கள். சீனாவின் தலைவர்கள் தங்களது சமாதான நோக்கத்தை அடிக்கடி பேசுகிறார்கள். இருப்பினும், அவர்கள் தெளிவாக போருக்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டே வருகிறார்கள். கடந்த பல வருடங்களாக இதேதான் நடக்கிறது. சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடு அல்ல என்று நம்பிக்கை கொண்டுள்ள பலர் உறுதிகூறுகிறார்கள். ஆனால் இதே போன்ற ஆட்கள்தான் ஹிட்லரின் விஸ்தரிப்பு பேச்சுக்களையும் உதாசீனம் செய்தார்கள். பீஜிங்கின் வரலாற்று ரீதியான இடம் என்று பலமுறை சீனதலைவர்கள் பேசியிருக்கிறார்கள். வரலாற்று ரீதியாக அவர்களுக்குத்தான் சூப்பர்பவர் நிலை உண்டு என்றும் கோருகிறார்கள்.

ஆகவே, ஐரோப்பிய பாஸிஸமே இன்றைய சீனாவைப் புரிந்து கொள்ள நம் ஆரம்பப் புள்ளியாக இருக்கவேண்டும். பாஸிஸப் புரட்சி நடந்து 50 வருடங்கள் கழித்து இத்தாலியைக் கற்பனை செய்யுங்கள். முஸோலினி இறந்து புதைத்தாய்விட்டது. கார்பரேட் ஸ்டேட் அப்படியே இருக்கிறது. கட்சி இன்னும் கட்டுக்கோப்பாக மக்களை கட்டுப்பாடுக்குள் வைத்திருக்கிறது. நாடு தொழில்முறை அரசியல்வாதிகளாலும், ஊழல் நிறைந்த மேல்தட்டு வர்க்கத்தினராலும் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு கவர்ச்சிகரமான அரசியல்தலைமையை அடிப்படையாகக் கொண்டு நடக்கவில்லை. இது அரசியல் அடக்குமுறை மூலமாக நடத்தப்படுகிறது. ‘மாபெரும் இத்தாலிய மக்களின் ‘ மேன்மையை தூண்டிவிட்டுக்கொண்டு அரசியல் நடக்கிறது. மூதாதையர்களின் மேன்மையை காப்பி அடித்து நம்மை சீர்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவே இல்லாத பேருரைகள்.

அதுதான் இன்றைய சீனா. இதேபோலத்தான் இன்னும் பல வருடங்கள் இருக்கும்.

**மொழிபெயர்ப்பாளர் பின் குறிப்புகள்

Totalitarianism(முழுக் கட்டுப்பாடுள்ள அரசு)

ஒரு சமூகத்தின் அனைத்து வளங்களையும் அரசுடமையாக ஆக்கிக்கொண்டு, அரசாங்க அமைப்பின் மூலமாக பிரச்சார சாதனங்கள், , அரசு பயங்கரவாதம், தொழில்நுட்பம் மூலமாக ஒரு சமூகத்தின் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஊடுருவி ஆட்சி செலுத்தும் ஒரு அரசாங்கம் Totalitarianism அரசாங்க முறை என்று அழைக்கப்படுகிறது.

Totalitarianism நிறுவனங்களும் இப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டை ஒழுங்கை தங்கள் உறுப்பினர்களிடம் கோருகின்றன. இப்படிப்பட்ட Totalitarianism சமூகங்கள் ஒரு கட்சி அரசுகளாகவும், ஒரு தலைவர் ஆட்சியாலும் மேலாண்மை செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட கட்சி, முழு நாட்டையும், பிரதேச, பிராந்திய அமைப்புகளிலிருந்து அடிப்படை கிராம அமைப்பு வரை ஊடுருவி கட்டுப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட கட்சி இளைஞர், தொழிலாளர், கலாச்சார மற்றும் விளையாட்டு அமைப்புகள் இந்த கட்சியின் அரசியல் கட்டுப்பாட்டை மற்ற துறைகளிலும் கொண்டுவருகின்றன. ரகசிய போலீஸ் அமைப்புக்கள் ஒழுங்கினை நடைமுறைக்குக் கொண்டுவருகின்றன. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள் மற்றும் கல்வி மூலமாக செய்திகளும் கருத்துக்களும் அமைப்புக்கு வெளியே வராதவாறு கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.

Totalitarian அரசுகள் , பழங்கால கருத்துருவங்களான சர்வாதிகாரம் (dictatorship), கொடுங்கோன்மை (tyranny), ஆகியவற்றிலிருந்து பெரிதும் வித்தியாசமானவை. இப்படிப்பட்ட Totalitarian அரசாங்கங்கள் அரசியல், சமூக மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளை நிறுவவும், அவற்றை முழு கட்டுப்பாட்டுடன் சமூகம் பின்பற்றவும் விழைகின்றன. நாஸிஸமும் பாஸிஸமும் வலதுசாரி தீவிரவாதத்தின் விளைவாக தோன்றின. இடதுசாரி தீவிரவாதத்தின் விளைவாக ஸ்டாலினிஸமும் மாவோவிஸமும் உருவாகின. பாரம்பரியமாக இரண்டும் வெவ்வேறு சமூக வர்க்கங்களினால் ஆதரிக்கப்பட்டன. வலதுசாரி Totalitarian இயக்கங்கள் பெரும்பாலும் மத்திய வர்க்கம் தனது பொருளாதார மற்றும் சமுக நிலைகளை தக்கவைத்துக்கொள்ளும் விழைவினால் உருவாகியிருக்கின்றன. இடதுசாரி Totalitarian இயக்கங்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் (கொள்கை ரீதியாகவாவது) வர்க்க வித்தியாசங்களை உடைத்தெறிய (தக்கவைக்க அல்ல) விரும்பும் விழைவினால் உருவாகியிருக்கின்றன. வலதுசாரி Totalitarian பெரும்பாலும் தொழில் வளத்தையும் அதன் மேல்தட்டு சொத்துரிமையையும் தக்கவைக்கும் விழைவினால் தோன்றியிருக்கின்றன. Totalitarian ஆட்சி முறை எப்படி கம்யூனிசத்திலிருந்து வேறுபடுகிறது ? கம்யூனிஸம் இப்படிப்பட்ட தொழில் மற்றும் மூலதனம் பொதுச்சொத்தாக ஆக்கும் விழைவை முன் வைக்கிறது என்பதே மிக முக்கிய வேறுபாடு.

எல்லா Totalitarian அரசாங்கங்களும், ஏராளமான பொது மக்கள் அரசியலில் பங்கெடுப்பதையும் அவற்றின் தலைவர்களாக கவர்ச்சிகரமான (மாயையால் உருவாக்கப்பட்ட) தலைவர்கள் தலைமை தாங்குவதையும் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கல்ட் தலைவர்கள் , இடதுசாரிகளான மாஒ ட்ஸே துங் (சீனா), ஜோஸஃப் ஸ்டாலின் (ருஷ்யா- சோவியத்யூனியன்), வலதுசாரிகளான் அடால்ஃப் ஹிட்லர் (ஜெர்மனி) பெனிடோ முஸோலினி (இத்தாலி) ஆகியோரை சமீபத்திய வரலாற்றில் காணலாம்.

வலது சாரி Totalitarian அரசாங்கங்கள் (முக்கியமாக நாஸிகள் ) சுமாராக முன்னேறிய சமூகங்களில் தோன்றின. தலைமுறை தலைமுறையாக பொருளாதார மேல் தட்டு வர்க்கத்தின் ஆதரவில் ஆட்சியை பிடித்தன. இதற்கு மாறாக, இடதுசாரி Totalitarian அரசாங்கங்கள் அதிகம் வளர்ச்சியடையாத நாடுகளில் புரட்சிகர வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தன. இரண்டு வகை அரசாங்கங்களும் இப்படிப்பட்ட வன்முறைகளை தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உபயோகித்துக்கொண்டன.

Fascism

பாஸிஸம் (Fascism)

இத்தாலியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் 1919ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலாம் உலகப்போரின் அரசியல் மற்றும் சமூக விளைவுகளினாலும், சோஷலிஸம் மற்றும் கம்யூனிஸ கொள்கை பரவலினாலும் உந்தப்பட்டு தோன்றிய சர்வாதிகார அரசியல் இயக்கம். குச்சிகள் ஒன்றாக கட்டப்பட்டு அருகே ஒரு கோடாலி இருக்கும் பழங்கால ரோமானிய சின்னத்தின் பெயர் fasces. இந்தக் குறியீட்டின் பெயரைத்தான் பாசிஸம் தாங்கியுள்ளது. முன்னாள் புரட்சிகர சோஷலிஸ்ட் தலைவரான பெனிடோ முஸோலினியால் மார்ச் 23, 1919ஆம் ஆண்டு இத்தாலிய பாஸிஸம் நிறுவப்பட்டது. இவரைப் பின்பற்றியவர்கள் பெரும்பாலும் முன்னாள் போர்வீரர்கள். இந்த கட்சி ராணுவரீதியில் அமைக்கப்பட்டு சீருடையாக கறுப்புச் சட்டைகளை அணிந்திருந்தது. ஆரம்பகால பாஸிஸம், இடதுசாரி சிந்தனைகளும் வலதுசாரி சிந்தனைகளும் கலந்த கலவையாக, தேசியவாதம், அதிக உற்பத்தி செய்தல், சோசலிஸ எதிர்ப்பு, மேல்தட்டு மக்களைப் போற்றுதல், வலிமையான தலைவரின் தேவை ஆகியவற்றை முன்னிருத்தியது. முஸோலினியின் பேச்சுத்திறமை, முதலாம் உலகப்போருக்குபின்னர் விளைந்த பொருளாதார சிக்கல், பாரம்பரியமாக இருந்த அரசியல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை, சோஷலிஸத்தின் மீதான அச்சம், இவை அனைத்தும் 1921க்குள் 30000 முழு நேர உறுப்பினர்களாக பாஸிஸக் கட்சி வளர உதவி புரிந்தது. அந்த வருடம், இத்தாலியப் பாராளுமன்றத்துக்கு பாஸிஸக் கட்சியின் உறுப்பினர்களாக 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பாஸிஸக் கொள்கை

பாஸிஸத்தின் அறிவுஜீவித ஊற்று புத்தியையும், தருக்கச் சிந்தனையையும் விட எண்ணமே will முதன்மையானதும் மேலானதும் என்றும் வாதிட்ட தத்துவ ஆசிரியர்களே.

ஆர்தர் ஷோபனாவர் (1788-1860)- இவர் ஜெர்மனிய தத்துவாசிரியர். இவர், கருத்தே முதன்மையானது என்றும், அதுவே இறுதி உண்மை என்றும், பார்க்கும் இந்த உலகம் வெறுமே நம் கருத்தின் வெளிப்பாடு மட்டுமே என்றும் வாதிட்டார். மனிதர்கள் சுதந்திரக் கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களே ஒரு கருத்து என்ற அளவில் மட்டுமே தானே தவிர அவர்கள் தங்களது விதிகளையோ, தங்கள் நடத்தைகளையோ குணாம்சங்களையோ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கவில்லை என்றும் வாதிட்டார். வெளியும், காலமும், காரண காரிய விளைவும் கூட மாறாத விதிகள் அல்ல என்றும் அவைகள் நம் மூளையின் செயல்பாடுகளே என்றும் வாதிட்டார்.

பிரடெரிக் நீட்ஷே (1844-1900). இவர் ஒரு ஜெர்மானிய தத்துவாசிரியர் மற்றும் கவிஞர். இவரது ‘இவ்வாறு ஸோராதுஸ்த்ரா கூறினார் ‘ என்ற நூல் புகழ்பெற்றது. இவர் இரண்டு ஒழுக்க நியதிகள் இருக்கின்றன என்றும், ஆளும் வர்க்கத்தின் ஒழுக்க நியதி (இது ஆள்பவன் நியதி), அடக்கப்படும் வர்க்கத்தின் நியதி (இது அடிமை நியதி) என்றும் கூறினார். பழங்கால பேரரசுகள் ஆள்பவன் நியதியால் தோன்றின. இன்றைய மதங்கள் அடிமை நியதியால் தோன்றின (இந்த மதங்கள் பணம், வலிமை, காரண காரிய வாதம், பாலுறவு ஆகியவற்றை இழிவு செய்கின்றன) இவர் overman (superman- மாமனிதன் ) என்னும் கருத்தை உருவாக்கினார். இப்படிப்பட்ட மனிதன் மிகச்சிறந்த அறிவுஜீவியாகவும், புதியவற்றை ஆக்குபவனாகவும் இருப்பான் என கற்பிதம் செய்தார்.

ஹென்றி பெர்க்ஸன் (1859-1941) இவர் யூத பெற்றோருக்குப் பிறந்த பிரஞ்சு தத்துவாசிரியர். அறிவியற்பூர்வமான சிந்தனையும் கொள்கையும் எல்லா இருப்பையும் விளக்கிவிடும் என்ற கருத்தினை தீவிரமாக எதிர்த்தார். அறிவியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைகளும் இதில் அடங்கும் என்று வாதிட்டார். டார்வினின் உயிரியல் கொள்கைகளை சமூகத்தில் (தவறாக) பயன்படுத்த தூண்டினார்.

ஜார்ஜ் ஸோரெல் (1847-1922) முஸோலினியை வெகுவாகப் பாதித்த ப்ரெஞ்சு தத்துவாசிரியர். வன்முறையை உபயோகித்து அரசு அமைக்கும் தலைவர்களாலேயே ஒரு சமூகம் அழிந்து போகாமல் காக்கப்படுகிறது என்றும், அப்படி யாரும் இல்லை என்றால் ஒரு சமூகம் இழிந்து ஒருங்கிணைவு அற்று நாசமாகும் என்றும் இவர் நம்பினார். அன்றைய காலத்தில் இருந்த பலரும் விரும்பாத அளவுக்கு ஜனநாயக எதிர்ப்புடனும், தாராளவாத எதிர்ப்புடனும், சமூகத்தைப் பற்றிய அவநம்பிக்கையுடனும் இவரது கருத்துக்கள் இருந்தன.

காப்ரியல் டானன்ஸியோ (1863-1938) இவர் இத்தாலிய அரசியல்வாதி, கவிஞர், நாடக எழுத்தாளர், நாவலாசிரியர். முன்னாள் போர்வீரர். இவர் முஸோலினியின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

பாஸிஸக் கொள்கை

நவ-கருத்துமுதல்வாத தத்துவாசிரியரான ஜியோவான்னி ஜெண்டைல் ( Giovanni Gentile) என்ற இத்தாலிய தத்துவாசிரியரது கொள்கையே பாஸிஸக்கொள்கை. ஒரு நாட்டின் எல்லா வாழ்க்கையையும் முழுமையாக கட்டுப்படுத்தும் totalitarian அரசாங்கத்தின் கீழ் ஒவ்வொரு தனி மனிதனும் அடிபணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியது. பாஸிஸக் கொள்கையின் முக்கியமான குணாம்சம், வன்முறையை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பார்ப்பது. தேசிய வாதம் மூலமாகவும், கார்பரேட் ஸ்டேட் மூலமாகவும் , வர்க்க போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது. தொழிற்சாலைகளுக்குள்ளே இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கவும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், எல்லா உற்பத்தியாளர்களையும் விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சாலை சொந்தக்காரர்கள் ஆகிய அனைவரையும் 22 நிறுவனங்களாக ஒழுங்கமைத்தார். இந்த அரசாங்கத்தின் பிரச்சாரத்துக்குப் பொருத்தமில்லாமல் இந்த முறை மிகவும் மோசமாக ஓடியது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சுடனும், பெரும் தொழிற்சாலை சொந்தக்காரர்களுடனும் அவர் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டியாகி விட்டது. கார்பரேட் ஸ்டேட் முழுமையாக எப்போதுமே நிறுவப்படவில்லை. அடிப்படையிலேயே ஆக்கிரமிப்பும், ராணுவ குறிக்கோளும் உடைய பாஸிஸ அரசாங்கம், எதியோப்பியா பால்கன் இடங்களில் புகுந்து இறுதியாக இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது.

நாஸிஸம்

அடால்ஃப் ஹிட்லர் உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்த totalitarian பாஸிஸ்ட் கொள்கையே நாஸிஸம் என்று அழைக்கப்படுகிறது. Nazi என்பது National Socialist German Worker ‘s Party என்பதன் சுருக்கமே. நாஸிகள் தங்களை ஆரியன் என்ற இனமாகவும், இந்த ஆளும் இனமே உலகத்தையும் மற்ற இனங்களையும் ஆளப்பிறந்தது என்றும், யூதர்களை தீவிரமான வன்முறை மூலம் எதிர்ப்பதாகவும், ஜெர்மானியின் எல்லாப்பிரச்னைகளுக்கும் யூதர்களையே குறை சொல்வதாகவும் அமைந்தது. எல்லா ஜெர்மானிய மொழி பேசும் மக்களையும் ஒரே நாட்டின் கீழ் கொண்டுவரும் ஆர்வமும், தீவிர தேசிய வாதமும் நாஸிஸத்தின் முக்கிய குணாம்சங்கள். கார்பரேட் ஸ்டேட் சோஷலிஸம் என்பதை பொருளாதாரக் கொள்கையாக நாஸிஸம் சொன்னது. இந்த கொள்கையை ஆதரித்த நாஸிக்கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் 1934இல் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்கள்.

கட்சிக்குள்ளும் நாட்டுக்குள்ளும் ஒழுங்கினை ஏற்படுத்த நாஸிக்கட்சி ஏராளமான ராணுவரீதியான அமைப்புக்களை உருவாக்கியது

S.A. (Sturmabteilung): மற்ற ஜெர்மானிய அரசியல் கட்சிகளுக்கு எதிராக வன்முறையும், தெருப்போராட்டமும் செய்ய இது பயன்பட்டது. (புயல் துருப்புகள் – அல்லது பழுப்புச் சட்டைகள் என்று இவர்கள் அழைக்கப் பட்டார்கள்.)

S.D. (Sicherheitsdiest): இது ரகசியப் போலீஸ்

S.S. (Schutzstaffel): எஸ்.ஏவில் இருக்கும் சிறந்த ஆட்களைக்கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு ஹென்ரிக் ஹிம்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது

Gestapo (Geheime Staatpolizeil): அரசாங்க ரகசியப்போலீஸ்

நாஸிஸமும் விளையாட்டு மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் இளைஞர்கள் தீவிரப்பங்கெடுக்க வேண்டும் என்று கோரியது. ஜோஸப் கோபல்ஸ் மூலம் பிரச்சாரத்தை தீவிரமாக உபயோகப்படுத்தி எல்லோரும் மாபெருந்தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு அடிபணிய வேண்டும் என்று கோரியது.

—-

Series Navigation

மைக்கல் ஏ லீடான்

மைக்கல் ஏ லீடான்