சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘விஜி இங்கே வா! நம்ம பிரியா கையில ஏதோ நாய்க்குட்டி மாதிரித்தெரியுது ‘..

‘மாதிரி என்ன ? நாய்க் குட்டியேதான். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல புதுசா வந்திருக்காளே.. பேரு கூட என்னவோ சொன்னாளே.. மறந்து போச்சு. அவளோட நாய்க்குட்டி ‘. சமயலறையிலிருந்து, என் மனைவியின் குரல்.

தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த என் நான்கு வயது மகளின் அணைப்பில் புசு புசு வென்று அடர்த்தியான முடியுடன், பனிக்குவியலாக ஒரு நாய்க்குட்டி. என்னைப் பார்த்துவிட்டு தலையை இருமுறை ஆட்டியது. என்ன நினைத்தாளோ என் பெண். அதனைக் கீழே இறக்கிவிட , உட்கார்ந்து தன் உடம்பை ஒரு முறை சிலிர்த்துவிட்டு, என்னிடம் வந்து நின்றது.

‘ பப்பா.. மத்மஸல் கரீனோட நாய்க்குட்டி. அழகாயிருக்கில்ல. ?

‘ ஆமாம், அழகுதான் ‘. அவள் கேள்விக்கான ஒப்புதல் வாக்குமூலம் என்றாலும். உண்மையிலே அழகாகத்தான் இருந்தது.

எனக்கும் இது மாதிரியான பிராணிகளுக்கும் உள்ள உறவு என்பது ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் தமிழ்நாட்டில் உள்ள உறவு. செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது ஐரோப்பியர்களிடையே ஒரு அத்தியாவசியத் தேவையாயிிருக்க எனக்கு என்னவோ அது அநாவசியத் தேவையாகத் தோன்றியது. ஒருமுறை என் மூத்தபையனும் அடுத்தபெண்ணும் நாய் வளர்க்க வேண்டுமென்று விரும்பி அந்த விண்ணப்பம் என் மனைவியின் ஒப்புதலுக்குப் பிறகு என்னால் நிராகரிக்கப்பட்டது என்பதை இங்கே உங்களிடம் சொல்லியாக வேண்டும். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பிள்ளைகளின் அநேக வேண்டுதல்கள் என் மனைவி மட்டத்திலேயே ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன.

நாயை என் செல்லப்பிராணியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு வீட்டிற் கொட்டுகின்ற அதன் முடிகளால் ஒவ்வாமை பிரச்சினை என சுகாதாரக் காரணம் ஒருபுறம் இருக்க, அதனை வளர்ப்பதற்காக ஒரு மினி பட்ஜெட் போட வேண்டியிருந்ததே, உண்மையான காரணம். தவிர என் குடும்பம் தமிழ்நாடு பட்ஜெட் தரத்தில் இருந்தது. அது அர்ஜென்டைனா பட்ஜெட் ஆக விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதைதான்.

‘ஏங்க என்ன யோசனையில் நிக்கறீங்க, குழந்தையைப் பாருங்க.. சோர்ந்து போய் நிக்கறா.. ‘

‘ ம்.. நான் அவளை ஒன்றும் சொல்லலை. முதல்ல அந்த நாயைச் சேர்க்க வேண்டியவங்கக்கிட்ட சேர்த்துட்டு வந்துடு ‘..

‘ஏங்க..! இப்பத்தானே சொன்னேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல ஒரு பெண் புதுசா வந்திருக்குது. அவளோட ‘பெட் ‘ இது. யூனிவர்சிடியில் படிக்கிறாளாம். நேற்றுதான் முதன் முதலாப் பார்த்தேன். அசப்புல எங்க சித்தி பெண் வினிதாவேதான்! போன ஜூன்ல நாம இந்தியா போயிருந்தப்ப, பிரியாஎப்போதும் அவளோடதான் பிடிவாதமா இருப்பா என்பது உங்களுக்குத் தெரியுமே. அதிலும் இந்த நாய்க்குட்டியோட அந்தப் பெண்ணைப் பார்த்ததும் பிரியாவுக்கு அவளை ரொம்பப் புடிச்சுப் போச்சு. இன்னொண்ணு, அவ இங்கிலீஷ் பேசினதுல எனக்குச் சந்தோஷம். இந்தியாவுக்கெல்லாங் கூட போயிருக்காளாம். ஆனால் பனாரஸ், ஆக்ராங்கறா. நம்ம பக்கம் இன்னும் போகலை. ‘

‘ நான் அவளைப்பத்திக் கேக்கலை… ‘

‘ஆமாங்க அதைத்தான் சொல்ல வந்தேன்.. அவ யூனிவர்சிடிக்கு போற சமயத்துல, வீட்டுலதான் இந்த நாய்க்குட்டி அடைஞ்சு கிடக்குதாம். பிரியாவுக்கு நாய்க்குட்டியப் பிடிச்சிருக்குண்ணு கொண்டாந்து விட்டிருக்கா. நானும் வேண்டாம்னு சொன்னேன். கேட்கலை.. ‘

‘மக்கு.. மக்கு அவளுக்குப் பராமரிக்கறதுக்கு ஒரு ஆளு தேவைப்பட்டிருக்குது. இங்கே கொண்டுவந்து உங்க தலையில கட்டிட்டா. நேரத்திற்கு வெளியே அழைத்துபோகணும்னு சொல்லியிருப்பாளே ? ‘

‘ஆமாம் சொன்னா!.. ‘

‘இப்ப புரியுதா ? நம்மச் சரியான இளிச்சவாயர்கள்னு நினைச்சுத் தலையில் கட்டிட்டா.. ‘

‘என்ன நடந்து போச்சுண்ணு இந்தக் குதி குதிக்கிறீங்க. முடியாதுண்ணு சொல்லிட்டாப் போச்சு. இங்கே பாருங்க. நானா அவளிடம், ‘நாயைக் கொண்டுவந்து எங்க அபார்ட்மெண்ட்ல விட்டுட்டுப் போன்னு ‘ சொல்லலை. உங்க பெண்ணுதான் ஆசைப்பட்டா. அவளும் இருக்கட்டுமேன்னு விட்டுட்டுப் போயிருக்கா.. இதுல என்ன தப்பு ?

‘விஜி.. நான் என்ன சொல்லவறேன்னு புரிஞ்சுகிட்டுப் பேசு.. நாளைக்கே நாயை வளர்க்கணும் பூனையை வளர்க்கணும்னு நம்ம பிள்ளைங்க ஆசைப்பட்டா, நம்மால முடியுமான்னு கொஞ்சம் யோசிச்சுப்பாரு. கடைசியா ஒரு சந்தேகம், கோபிச்சுக்காதே.. இதற்குமட்டும் பதிலைச் சொல்லிடு. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. நாயைவிட்டுட்டு அப்படி எங்க கிளம்பிட்ட ‘ ? ‘ ‘.

‘பாங்கு ஒன்றுல, தற்காலிக வேலைக்கு எடுத்துள்ள மாணவர்கள்ல அவளும் ஒருத்தியாம், ஞாயிற்றுக் கிழமையிலும் வேலை இருக்காம் ‘. அப்படித்தான் அவள் சொன்னாள்.

‘சரி சரி.. விடு விடு . நான் அவளிடம் பக்குவமாச் சொல்லிக்கிறேன் என்று சொல்லி பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது ‘ எனப் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டேன். இடைக்கிடை, என் மனைவியின் ‘பக்குவமா பேசுங்க. என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரி. ஏதாவது உளறிவச்சு மானத்தை வாங்காதீங்க ‘ என்று கூடுதல் எச்சரிக்கை வேறு.

முஷாரப்பைச் சந்திக்க இருந்த வாஜ்பாயைப்போல, நான் அவளை வரவேற்கத் தயாரானபோது மாலை மணி ஆறு.

அழைப்பு மணி ‘ர்… ர்… தேவையில்லாமல் என்னை படபடக்க வைக்க., என் மனைவிதான் சென்று கதவைத் திறந்ந்தாள். நான் அவள் பின்னால். துணைக்கு என் மகள், நாய்க்குட்டியுடன்.

அவளும் என் மனைவியும் பரஸ்பர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்ட பிறகு பிரெஞ்சு முறைப்படி கன்னங்களில் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். அடுத்து என்பெண்ணின் மூக்கினைச் செல்லமாகக் கைத்தொட்டு சீண்டிவிட்டு, அவளது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு என்னைப் பார்த்தாள். அந்நியப் பெண்களைக் கண்டால் ஆண்கள் தடுமாறுவது இயற்கையே என்றாலும், என்னிடம் அன்றைக்கு ‘அது ‘ சற்றுக் கூடுதலாக. அவள் அழகியல்ல ஆனால் வசீகரி என்பதைப் புரிந்துகொள்ள இரண்டொரு விநாடிகள்.

.

‘என் கணவர் ‘ என்று வார்த்தைப் பிரவேசம் செய்தவள் என் மனைவி. எனக்கும் அறிமுக முத்தமிட்டுக் கொள்ள ஆசைதான், என்றாலும் பக்கத்திலேயே நான் தாலிகட்டிவள் இருக்கிறாள் என்பது ஞாபகத்திற்கு வர, தவிர்த்தேன். அவளிடம் கைகுலுக்கிக் கொண்டேன். என் பெண்ணிடமிருந்த நாய்க் குட்டி எஜமானி விசுவாசத்துடன் வாலை ஆட்டியது. எனக்குச் சிரிப்பு வந்தது. ஒரு வேளை எனக்குக் கூட வால் இருந்தால் இப்படித்தான் ஆட்டிச் சந்தோஷத்தை தெரிவித்திருப்பேனோ ?

‘என் நாய்க்குட்டியால் தொந்தரவு ஒன்றும் இல்லையே ? ‘ வசுந்தரதாஸ் குரலில் கேள்வி.

இப்போது அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது நான். மனைவி என்னைப் பார்த்தாள்.அவளிடம் சொல்லவேண்டும் என நினைத்துப் பயிற்சி எடுத்திருந்த வசனங்கள் மறந்து போயிருந்தன.

‘இல்லை.. இல்லவே இல்ைலை.. இப்படி ஒரு நாய்க்குட்டியை இங்கே விட்டுச் சென்றதற்கு, நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வளவு அழகான ஒரு நாய்க்குட்டின்னா, ஒன்றல்ல ஆயிரம் கொண்டுவாங்க… நாங்க சமாளிப்போம் ‘. ந ‘ன் ட்ராக் மாறியதில் என் மனைவிக்குக் கோபமா ?, வியப்பா ? அவள் பார்வையில் வித்தியாசமிருந்தது. அதனை ஒதுக்கிவிட்டு, அந்தப் பெண்ணிடம்,. ‘கொஞ்சம் உள்ளே வந்து உட்காரலாமே ? ‘ என்றேன்.

‘இல்லை மன்னிச்சுக்குங்க. நேரமில்லை .. பக்கத்தில்த ‘னே இருக்கேன். அடிக்கடி வறேன். நாய்க் குட்டியைப் பார்த்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ‘எனப் பாதிபிரெஞ்சிலும் பாதிஆங்கிலத்திலும் தெரிவித்துவிட்டு, என் பெண்ணைப் பார்த்தாள்.

‘ப்ரியா.. நீ என்னோட வறியா ?… ‘

‘நோ நோ.. இப்போதைக்கு வேண்டாம் . பிறகு அனுப்பறேன் ‘ என்னை முந்திக் கொண்டு என் மனைவியின் பதில்.

‘ஓகே.. அ பியாந்த்தோ (பிறகு சந்திப்போம்) எனப் பிரெஞ்சில் செ ‘ல்லிவிட்டு நாயுடன் விடைபெற்றபோது, என் மனைவிக்கும், நாயைப் பிரிந்த சோகத்தில் இருந்த என் பெண்ணுக்கும், மனதில் என்ன இருந்ததோ ?, ஆன ‘ல் என் மனதுக்குள் கொஞ்சம் சந்தோஷத்தை வைத்துச் சென்றிருந்தாள். இந்தச் சந்தோஷத்தை எப்படி விவரிப்பது, சரியா தவறா ?. விவரிக்கவே வேண்டாம். இந்தச் சந்தோஷம் உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம். உணர்வை மதித்து, அறிவின் அனுமதிக்குக் காத்திராமல் மனதிற்குள் வருபவைகளில் சந்தோஷமும் ஒன்று. பூர்வாசிரமத்தைப் பார்த்து யாரும் சந்தோஷத்தை அனுமதிப்பதில்லை. சரியா ? தவறா ? என்ற கேள்வியும் சராசரி மனிதனுக்கு அதிகம்.

அவளை வழி அனுப்பிக் கதவடைத்துவிட்டு வந்த என் மனைவி, என்னை நம்பாததுபோல் பார்த்தாள்.

‘என்ன நடந்தது ? அவள் வரும்வரை தாம் தூம் என்று குதித்துவிட்டு, இப்போ எதிர் பாட்டு பாடறீங்க ? வேற ஏதேனும் காரணம் இருக்கா ? ‘

‘பைத்தியம், பைத்தியம் ஏதாவது கற்பனை பண்ணிக்காதே. ‘

‘கற்பனையை நான் பண்ணிக்கலே, நீங்க பண்ணிக்கறீங்களோன்னு நெனைச்சேன். பிரியா காலையிலிருந்து பார்க்குக்கு போகணும்னு அடம் பிடிக்கிறா.. கொஞ்சம் ‘குடும்பஸ்த்தன் ‘ங்கறதை மறக்காம அவளை அழைச்சுக்கிட்டுப் போயிட்டு வாங்க.. ‘

அவள் ‘என்ன சொல்லவறா ‘ என்பது புரியாத மர மண்டை இல்லை நான்.. இருந்தாலும், தராசின் அடுத்தத் தட்டில் அந்தப் பிரெஞ்சுப் பெண், அழுந்த உட்கார்ந்துக்கொண்டு, ‘இறங்க மாட்டேன் ‘ ன்னு பிடிவாதம் பிடிச்சா மனசுக் கேக்குமா ? நீங்களே சொல்லுங்க.

அடுத்த சில நாட்களுக்கு, அவளால் கிடைத்த சந்தோஷத்தை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதற்காகக் காரணங்களைத் தேடினேன்.

மறுநாள் அலுவல் முடித்துக் காரில் வரும் பொழுது மிகப்பெரிய அந்த விளம்பரம் கண்ணிற் பட்டது. அது ஐரோப்பியக் கூட்டமைப்பு வளாகத்தில் நடக்கின்ற நாய்கள், பூனைகள் பற்றிய, ஐம்பதாவது கண்காட்சிக்கான விளம்பரம். ஒருவேளை அந்தப் பெண்ணும் அங்கே சென்றிருப்பாளோ ?, என்ற உணர்வின் கேள்விக்கு மனசு, ஆமாம் சொல்ல நகரத்தைவிட்டுத் 60 கி.மீ தள்ளியிருந்த அந்த வளாகத்திற்குச் சென்று, நூற்றுகணக்கான கார்களுக்கு மத்தியில் என் காரை நிறுத்தி, வரிசை எண்ணை ஞாபகத்தில் ஒற்றி, ஐந்து யூரோ கொடுத்து நுழைவுச்சீட்டைப் பெற்று உள்ளே நுழைந்தால் ஏமாற்றம். ஸ்டால்கள் ஈயடித்துக் கொண்டிருந்தன. நின்றிருந்த இரண்டொரு ஐரோப்பியத் தலைகள், ஆசியன் ஒருவனை எதிர்பார்க்கவில்லையோ என்னவோ என்னை ஆச்சரியமாகக் கவனித்துவிட்டுத் திரும்பிக் கொண்டன.

வீட்டிற்குத் திரும்பிவிடலாம் ‘ என்று நினைத்தபோதுதான் நுழைவுவாயிலை ஒட்டியிருந்த அந்த வரவேற்பு ஹால் என் கண்ணில் பட்டது. ‘வரவேற்பு ‘ப் பணியில் இருந்த பெண்களிடம் நெருங்கிச்சென்று ‘போன்ழூர் ‘ என்றேன். அவர்களும் பதிலுக்குச் ‘போன்ழூர் ‘ சொல்லிவிட்டு ‘நாங்கள் ஏதாவது உதவ முடியுமா ? என பிரெஞ்சில் திரும்ப கேட்டார்கள்.

‘உய். நான் முதன் முறையாக வந்திருக்கிறேன். எங்கே ? எப்படி, ஆரம்பிக்கவேண்டும் என்பதில் குழப்பம்.. ‘

‘நீங்கள் நாயா ? பூனையா ? ‘ என்று சிரித்துக் கொண்டே கேட்க, பதிலுக்கு நானும்

‘இரண்டுமில்லை, மனிதன் ‘ என பதிலுக்கு சிரித்துக் கொண்டே சொன்னேன்.

‘இல்லை..நாயைப்பற்றிய தகவல்கள் வேண்டுமா, பூனைபற்றிய தகவல்களா ? என அறிவதற்குக் கேட்டோம். நீங்கள் நாய்களைப்பற்றி அறிய வேண்டுமென்றால் உங்களுக்கு வலப்புறம் செல்ல வேண்டும். நாய்களின் ரகம், பூர்வீகம், குணநலன், உணவுமுறை, பராமரிப்பு, ஆலோசனைகள், உபகரணங்கள் எனச் சுமார் 50 ஸ்டால்கள் உள்ளன. பூனைகள் பற்றி அறிய வேண்டுமென்றால். ‘ எனத் தொடர்ந்தவளை இடைமறித்து,

‘மெர்ஸி (நன்றி), எனக்கு நாய்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே வேண்டும் ‘என்றவனிடம் நாய்கள் பற்றிய ஸ்டால்கள் தகவல்கள் அடங்கிய குறிப்பினைக் கொடுத்தார்கள். மீண்டுமொருமுறை நன்றி சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன். நாய்களின் பூர்வீகம் மற்றும் குணநலன்கள் என்ற பகுதி கண்ணிற்பட நுழைந்துவிட்டேன்.

நூற்றுக் கணக்கில், நாய்களின் புகைப் படங்கள். அவற்றைப் பற்றிய செய்திகள். எங்கள் வீட்டிற்கு அந்தப் பிரெஞ்சுப் பெண் கெ ‘ண்டுவந்தது எந்த ரகம் எனக் கண்டு பிடிக்க அரைமணி நேரம் ஆயிற்று. ரோமம் அடர்ந்த வெள்ளை செம்மறி ஆட்டுக் குட்டிபோலிருந்த அந்த நாய்க்குப் பெயர் ‘கனீஷ் ‘ எப்சி 1, குரூப் 9, செக்ஷன் 2 – ஆயுள் 17 வருடம் என்றிருந்தது. கூடவே அதனைப் பற்றிய வர்ணணை கலந்த, குட்டியான தகவல்கள்…. புத்திசாலித் தனமும், சுறுசுறுப்பும் கொண்ட அழகான நாய் ( அவளைப் போலவா ?) நம்பிக்கைக்குப் பெயர் போனது ( அவள் எப்படியோ ?) பழக்குவதற்கு எளிதானது( அப்படியா ?) . சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

‘அடடே!.. உங்களுக்கும் நாய்கள் என்ற ‘ல் பிடிக்குமா ? ‘ பின்னாலிருந்து ஒரு குரல்.

குரலுக்குடையவள் யார் என்று நினைத்தீர்கள். உங்கள் ஊகம் தப்பில்லை. அவள்தான். எதை நினைத்து யாரை நினைத்து வந்திருந்தேனோ, அது நிஜமாக்கப்பட்டதில் இன்ப அதிர்ச்சி. சில சமயங்களில், அதிசயமாகச் சில எதிர்பார்ப்புகள் இப்படித்தான் நிறைவேறும். மனத்தில் குப்பென்று பரவிய சந்தோஷத்தை மறைக்க முயன்று தோற்றுப்போனேன்.

‘என்னப் அப்படி பார்க்கறீங்க ?.. நேற்று உங்கள் அப்பார்ட்மெண்டிற்கு வந்திருந்தேனே மறந்துட்டுதா ?

‘பர்தோன் மத்மசல்.. நான் உங்களை இப்படி திடாரென்று இங்கே எதிர்பார்க்கலை.. ‘

‘ இதிலென்ன ஆச்சரியம். உங்களை இங்கே நான் பார்க்க நேர்ந்ததுதான் ஆச்சரியம். ‘

‘ நீங்க .. சொல்றதும் ஒரு வகையில உண்மைதான். எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. நேற்று எங்க வீட்டுக்கு நீங்க வந்திருந்தது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா ? நாய்கள் மேலேகூட, உங்களால் எனக்கு திடார்னு ஒரு பிடிப்பு வந்து விட்டது ‘

‘அப்படியா ? எனக்குக்கூட சந்தோஷம்தான்.. வாவ்..உங்க சின்னப் பெண் எவ்வளவு அழகு.. ‘

‘அவள் என் ஜாடை ‘ என்று செ ‘ல்லிவிட்டு அவள் கண்களைப் பார்த்தேன்..

‘உங்கள் மனைவி மட்டும் என்ன ? எவ்வளவு அழகா இருக்காங்க.. என்ன அன்பா பழகறாங்க.. நீங்க கொடுத்து வச்சிருக்கணும் ‘

அவள் பதில் என்னை யோசிக்க வைத்தது.. அவளை வளைத்துப் போடவேண்டும் என்று மனது பரபரத்தது. வாத்தைகளைத் தேர்ந்தெடுத்து ஒருமையில் பேச ஆரம்பித்தேன்.

‘ என் மனைவியும் அழகா இருக்காங்க, அன்பாப் பழகறாங்கன்னு சொல்ற. நன்றி. எப்படி சொல்றது. எங்களோட கசப்பான வாழ்க்கையை இப்ப சொல்லக்கூடாது. சுருக்கமாச் சொல்லணும்ணா. எங்களோட பெண்ணுக்காகத்தான் நாங்க சேர்ந்து இருக்கோம். மனம் துணிந்து பூசணிக்காய் அளவிற்குப் பொய்யை அவிழ்த்தேன். உடம்பு மறைக்க மறுத்து வேர்த்தது.

அப்படியா ? என்று கேட்ட அவள் குரலில் அவநம்பிக்கையின் சாயல். ‘அயோக்கியப் பயலே! அவசரப் பட்டுவிட்டாயே என்றது மனது.

‘ வேண்டாம் கரின்.. உன்னிடம் இதைப் பற்றி பேசியிருக்கக்கூடாது. மன்னிச்சுக்க. ‘ என, என் வார்த்தைகளில் நடிப்பைக் காட்ட, அப்போதுதான் அவன் வந்ந்தான். நல்ல உயரம், அதற்கேன்ற உடம்பு. தலையை மொட்டையிட்டு, முகத்தில் பாதியை மறைத்த தடித்த உதடுகள். நல்ல கறுப்பு. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்தவனோ ?

மிஸியெ .. ராஜ். இவன் என்னோட நெருங்கிய நண்பன். பெயர் பசீல் போலி, நம்ம ‘ஸ்ட்ராஸ்பூர்க் புட்பால் கிளப்ல விளையாடறான். பசீல் .. இவர் என்னோட பக்கத்து வீட்டுக்காரர் ‘. இருவரையும் அறிமுகம் செய்துவைத்தாள்.

‘நெருங்கிய நண்பன் ‘ என அழுந்த உச்சரித்ததில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது. இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். அந்தக் கணநேரக் கைகுலுக்கலில் நான் துவம்சம் செய்யப்பட்டிருந்தேன். தோற்றவனாய். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, விபத்தில் சிக்காமல் காரைச் செலுத்தி வீட்டை அடைந்தபோது, வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் சந்தோஷ மூடில் . அவர்களிடம் பேசாமல், அறையில் நுழைந்து உடைகளைக் களைந்துவிட்டு,

‘விஜி ஒரு காபி கொடு, தலைவலி மண்டையப் பிளக்குது ‘ எனக் குரல் கொடுத்தேன்.

‘என்னங்க மணி ஏழாகுது.. எங்க போயிருந்தீங்க ? பிள்ளைங்க எல்லாம் அஞ்சுமணியிலிருந்து காத்துகிட்டிருக்க்காங்க. ‘

‘எதுக்கு. ? ‘

‘காலையில நீங்க ஆபீஸுக்கு போயிட்ட பிறகு, அந்தப் பெண் கரீன் போன் செய்திருக்கா. அவ பிரண்டுக்கிட்ட நல்ல ஆப்கானிய ரக நாய் ஒண்ணு இருக்காம்ம்.. ‘ எனத் தொடர்ந்தவள் என் முகம் போன போக்கைப் பார்த்து நிறுத்திக்கொண்டாள்.

‘நாய்க்கு என்ன பேரு ? பின் லேடனா ? நாய், பூனைன்னு இன்னொருமுறை இந்த வீட்டில யாரும் பேசக்கூடாது. சொல்லிட்டேன். நம்ம வீட்டுக்கு, அவ என்ன சிபாரிசு ? கொஞ்சம் முன்னாடிதான் ஒரு ஆப்ரிக்கனோட அவளைப் பார்த்தேன்… மேயற ஜென்மம்னு நினக்கிறேன் ? ‘ என நான் சொல்லிக் கொண்டுபோக என் மனைவி குழம்பிப் போய் நின்றாள்.

வரவேற்பறையில் இருந்த மேசையில், பழத்தட்டு நிறையப் பச்சைத் திராட்சை.

‘என்னது ? இத்தாலிய திராட்சை மாதிரி இருக்குது. சீசன் இன்னும் ஆரம்பிக்கலையே. ‘

‘ஆமாங்க அவசரப்பட்டு நிறைய வாங்கிட்டேன். ரொம்ப புளிக்குது ‘.

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா