சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சின்னக்கருப்பன்


யுக்ரேனில் தேர்தல். கலாட்டா, நீதிமன்றம், மறு தேர்தல்

யுக்ரேன் என்ற நாடு முன்பு சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளில் ஒன்றாக சோவியத் நாட்டின் அங்கமாக இருந்தது. அப்புறம் அமெரிக்காவும், இன்ன இதர பிற கலகக்காரர்களும் ஆடிய ஆட்டத்தில் சோவியத் நாடு உடைந்து (இந்திய இடதுசாரிகளின் மனமும் கூடவே உடைந்து) துண்டு துண்டாக ஆனது. இதில் யுக்ரேன் ஒரு தனி நாடாக ஆனது. அப்படி ஆனாலும், சி.ஐ.எஸ் என்ற புதிய ஒரு அமைப்பை ரஷியா உருவாக்கியது. இது ரஷியாவின் கீழ் இந்த புதிய நாடுகள் இருந்து கொண்டே இருப்பதற்கான அடித்தளமாக இருந்தது.

இந்த அமைப்பு, முன்னாள் கம்யூனிஸ்ட் தாதாக்கள் தொடர்ந்து கேபிடலிஸ்ட் தாதாக்களாக ஜனநாயக மேற்போர்வையில் தொடரவும் வழி வகுத்தது. இதனால், யுக்ரேனின் முன்னாள் கம்யூனிஸ்ட் தாதா லியோனித் குச்மா யுக்ரேனின் ஜனாதிபதியாக நீடித்தார். இவரது ஆட்சி நீடிப்புக்கு நேரடியாக ரஷ்ய ஆதரவு உண்டு.

விக்டர் யுஷ்செங்கோ என்பவர் 2002இல் நமது யுக்ரேன் என்ற அரசியல் கூட்டமைப்பை உருவாக்கி அரசியல் சக்தியாக வளர்ந்தார். 2004இல் இவர் அதிபர் பதவிக்கு குச்மாவின் ஆளான விக்டர் யானுகோவிச்-ஐ எதிர்த்து போட்டியிட்டார். இவரது மனைவி இன்னமும் அமெரிக்க குடியுரிமையோடு இருக்கிறார். இவர் மேற்கு (அதாவது ரஷ்யாவுக்கு மேற்கு) நாடுகளின் ஆதரவு பெற்றவராகவும் அமெரிக்க சார்புடையவராகவும் பார்க்கப்படுகிறார். இவர் ஏறத்தாழ இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், அரசாங்கமே செய்த தேர்தல் குளறுபடிகளால் குச்மாவின் ஆளான பிரதமர் நண்பர் விக்டர் யூனுகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இவரது தேர்தல் காலத்தில் இவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக இவரும் பலரும் கூறுகிறார்கள்.

தேர்தல் ஆரம்பிக்கப்பட்டபோது அவர் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசத்தைக் காணுங்கள்.

ஆனால், நம் ஆட்களை விட இவர்கள் கொஞ்சம் மோசம் தான். நம் ஊரில் எதிர்கட்சி ஆட்களின் முகத்தில் அமிலம் ஊற்றித்தான் அழிப்பார்கள். இங்கே விஷமே வைக்கிறார்கள். (ஊடகங்கள் இன்று ஜெயலலிதாவைக் கொண்டாடும் ஜல்லியில் மறந்து போயிருப்பீர்கள்.. சந்திரலேகா என்ற அரசியல்வாதி முகத்தில் கொட்டிய அமிலத்தைத்தான் சொல்கிறேன்)

*

இவர் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்ளாத இவரது ஆதரவாளர்கள் பண்ணிய கலாட்டாவினால், நீதிமன்றம் விசாரணை நடந்து இப்போது மறுதேர்தல் நடத்தும்படியும், அதே நேரத்தில் எதிர்கால ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து இந்தியா போன்ற ஒரு பாராளுமன்ற ஜனநாயகமாக மாற்றியும் சட்டதிருத்தம் செய்திருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Leonid_Kuchma

http://en.wikipedia.org/wiki/Viktor_Yushchenko

***

சூடான் டார்ஃபார் விஷயம் கொஞ்சம் பேச வேண்டும்.

இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம்.

அமெரிக்க சமீபத்தில் டார்பாரில் இருக்கும் மக்களுக்கு ஆதரவாக தன்னுடைய படைகளை அனுப்பாமல் அமெரிக்க ராணுவத்துக்கு உதவி செய்யும் ராணுவ காண்ட்ராக்டர்களை அனுப்பியிருக்கிறது.

இப்படிப்பட்ட ராணுவ காண்ட்ராக்டர்கள் தனியார் நிறுவனத்தினர். இவர்கள் பெரும்பாலும் ராணுவத்தினருக்கு தேவையான உணவு, உடை மற்றும் ராணுவ வண்டிகள் பழுதுபார்த்தல் ஆகியவற்றை செய்வதற்கே முதலில் ஆரம்பித்தனர். இன்று இவர்களது பங்கு வளர்ந்து, கூலி ராணுவம் அளவுக்கு ஆகியிருக்கிறது. இப்படிப்பட்ட தனியார் ராணுவத்தில் வேலை செய்பவர்கள் முன்னாள் அமெரிக்கப்படையினரே என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இப்படிப்பட்ட படைகள் செய்யும் தவறுகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பொறுப்பேற்காது என்ற மட்டில் அமெரிக்க அரசாங்கம் இப்படிப்பட்ட கூலி ராணுவத்தை மிகவும் விரும்புகிறது. சமீபத்தில் சூடான் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் டார்பார் மக்களுக்கு உதவ அமெரிக்க அரசாங்கம் இந்த தனியார் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் விட்டிருக்கிறது. இவர்கள் டார்பார் மக்களின் எதிர்ப்புப்படைக்கு ‘எல்லாவிதமான ‘ உதவிகளும் செய்வார்கள். ரொம்ப நல்லது என்று நீங்கள் சொல்லும் முன்னர் இன்னும் விஷயம் பாக்கியிருக்கிறது.

சூடான் அரசாங்கத்தின் ராணுவத்துக்கும் உதவி செய்பவர்கள் இதே தனியார் நிறுவனத்தின் கூலி ராணுவத்தினரே. அதற்கு தனி காண்ட்ராக்ட். அதே போல சூடானில் இருக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய மனித உரிமைப் போராளிகளுக்கு உதவ அவர்களை சூடானில் சுற்றிக் காண்பிக்க அமெரிக்க ராணுவம் இவர்களுக்கு இன்னொரு காண்ட்ராக்ட் விட்டிருக்கிறது. ஒரே தனியார் நிறுவனம். மூன்று காண்ட்ராக்ட்கள். எல்லா தரப்பிலும் அமெரிக்காவின் ஒரு தனியார் நிறுவனமே இருக்கிறது. எல்லா தரப்புக்கும் உதவுவதாக அமெரிக்க அரசாங்கமே கூறி பணமும் கொடுக்கிறது.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுவது என்று கேள்விப்பட்டிருப்பீர்களே… அதனை இன்னொரு உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது அமெரிக்கா.

***

ஏர் இந்தியா 18 போயிங் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

இதன் விலை சுமார் 1 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாயில் 5000 கோடி ரூபாய்.

2002இல் இந்தியன் ஏர்லைன்ஸ், 43 ஏர் பஸ் விமானங்களை வாங்க 2 பில்லியன் டாலர் செலவழித்தது. அதாவது 10000 கோடி ருபாய்கள்.

பாஜக ஆட்சியில் சரஸ் என்ற ஒரு சிவிலியன் விமானம் தயாரித்து வெள்ளோட்டம் விடப்பட்டது. அதற்கான ஆராய்ச்சி தயாரிப்பு செலவு மொத்தமே 135 கோடி ரூபாய்கள்தான்.

எனது நண்பர்கள் சிலர் HAL நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். கடனெழவே என்று இந்த நிறுவனம் நடத்தப்படுவதாகவும், இதில் இருக்கும் சிறந்த பொறியியலாளர்கள் வீணடிக்கப்படுவதாகவும் புலம்புகிறார்கள்.

மிக அதிக விலை கொண்ட அமெரிக்க உழைப்பைக்கொண்டு தயாரிக்கப்படும் இப்படிப்பட்ட விமானங்களை இந்தியாவிலேயே தயாரித்தால் இதன் விலை பத்தில் ஒரு மடங்காகத்தான் இருக்கும். கடந்த 50 வருடங்களில் நாம் இன்னமும் விமானங்களை தயாரிக்க முடியவில்லை என்று சொல்வது இந்தியாவுக்கே வெட்கக்கேடு. இத்தனைக்கும் சந்திராயணா என்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவதைப் பேசிக்கொண்டே, இன்னும் எவ்வளவு நாளைக்கு போயிங் நிறுவனத்திடமிருந்தும், ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்தும் வாங்கிக்கொண்டிருப்போம் ?

(இந்த சந்திராயணாவைப் பற்றி பேசுவதையும் தற்சமயம் நிறுத்திவிட்டார்கள் 🙂

கடந்த 50 வருடங்களில் பெரும்பான்மையான அளவு அரசில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அதன் அரசியல்வாதிகளும், நாறும் லஞ்சமும் ஊழலுமே காரணம் என்று என்னைப்போன்ற பார்வையாளர்கள் கருதாமல் என்ன செய்வார்கள்.

http://en.wikipedia.org/wiki/Saras

**

ஜவஹர்லால் நேரு யூனிவர்ஸிடி என்ற JNU பல்கலைக்கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இது வெகுகாலமாக இந்திய இடதுசாரிகளை உற்பத்தி செய்து தரும் அரசாங்க நிறுவனமாக இருந்துவருகிறது. இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதனை நிர்வகித்த இடதுசாரி சிந்தனையாளர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதற்கு ஏராளமான கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.

சமீபத்திய நிகழ்வு ஒன்று.

இங்கே

NSUI என்ற காங்கிரஸ் சார்பு மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். சீனா தொடர்ந்து அருணாசல பிரதேசத்தை இந்தியாவைச் சாராததாகவும் சீனாவை சார்ந்ததாகவும் தனது வரைபடங்களில் காட்டி வருவதை கண்டிப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூறுகிறது என்பதே இந்த தீர்மானம்.

JNU Students Union (JNUSU) அமைப்பில் பெரும்பான்மையாக இருக்கும் Students Federation of India (SFI) (இது சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பு) All India Students Federation (AISF) (இது சிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பு), AISA (இது சிபிஐ-மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு) இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுப்போட்டு தோல்வி அடைய வைத்திருக்கின்றன. சிபிஐ மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பே இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைமைப் பதவியில் இருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்களும், அதன் நிர்வாகமும் எவ்வாறு மார்க்ஸிஸ்ட் தத்துவத்தை ஆதரிப்பவர்களே அதில் முக்கிய பதவிகளில் இருக்க முடியும் என்பதாக சட்டதிட்டங்களை உருவாக்கியும் வளைத்தும் அமைத்திருக்கிறார்கள் என்பது பலமுறை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. எவ்வாறு இந்த பல்கலைக்கழகத்துக்குள் தீவிர இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு வளர்க்கப்படுகிறது என்பதைப்பற்றியும் பலமுறை உரத்து குரலெழுப்பப்பட்டிருக்கிறது.

இதன் ஆசிரியர்களும், இதன் விளைச்சலாக உருவாகும் மாணவர்களும் சென்ற இடங்களிலெல்லாம் தீமையையே விளைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக, நேபாளத்து மாவோயிஸ்டு தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே. அவர்களது தீவிர சீனா ஆதரவும், இந்திய எதிர்ப்பு நிலைப்பாடும் இந்த பல்கலைக்கழகத்தில் விளைந்தவையே.

***

ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெஹெல்கா பிரச்னையில் மாட்டிக்கொண்டபோது, காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தினந்தோறும் வெளிநடப்பு செய்தன. அதன் பின்னர் சமாதானம் செய்தபோது கூட, ஒவ்வொருமுறை ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேச எழும்போதெல்லாம் காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதனை ஆதரித்து தி இந்து எழுதிய தலையங்கம் இதோ.

http://www.hindu.com/thehindu/2001/10/16/stories/05162511.htm

பங்காரு மீதும் ஜெயா ஜெட்லி மீதும் இப்போதுதான் சிபிஐ வழக்கு தொடுத்திருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது இன்னமும் சிபிஐ வழக்கு தொடுக்கவில்லை.

ஆனால் இப்போது காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள்.

http://www.hindu.com/2004/12/09/stories/2004120906721100.htm

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு ஆளையும் எந்த மந்திரி பதவி கொடுக்கவும் பிரதமருக்கு உரிமை இருக்கிறது எந்த ஒரு சட்டப்பூர்வமான தடையும் கிடையாது என்று கூறுகிறது.

ஹிந்து எழுதிய தலையங்கத்திலும் காங்கிரஸ் முன்பு வெளிநடப்பு செய்தபோதும் சட்டப்பூர்வத்தைப் பற்றி பேசவில்லை.

http://www.hindu.com/thehindu/2001/10/16/stories/02160001.htm

பொது வாழ்வின் மிக உயர்ந்த நிலைப்பாட்டை (public morality of highest order) அன்றைய பிரதமர் வாஜ்பாயியிடம் கோரியவர்கள் இன்று பொது வாழ்வின் மிகக்கீழான நிலைப்பாட்டையே ( public morality of lowest order) நாங்கள் எடுப்போம் எங்களுக்கு சட்டப்பூர்வம் என்று பேசத்தெரியும் என்று காட்டுகிறார்கள்.

இதற்கு பாராட்டுத்தான் கிடைக்கும் (அவ்வப்போது கவலையுடன்)

http://www.hindu.com/2004/05/24/stories/2004052402291000.htm

இதனை எதிர்த்து தி இந்து தலையங்கம் ஏதும் எதிர்பார்க்காதீர்கள். வகுப்பு வாதம்(அதாவது பாஜக மட்டும்)க்கு எதிரான போராட்டத்தில் எல்லாமே நியாயம்தான். அது தி இந்து என்ற மாபெரும் ராட்சச ஊடகத்திலிருந்து, இந்தியன் எக்ஸ்பிரஸிலிருந்து, கம்யூனலிஸம் காம்பாட் போன்ற NGO போர்வையிலிருக்கும் தனியார் நிறுவனங்களிலிருந்து, இணையத்தில் எழுதும் செகுலரிஸம் காப்பவர்கள் வரை கம்யூனிஸ்த்தைப் பாராட்டவேண்டும், தற்போதைக்கு காங்கிரஸை எதிர்க்கக்கூடாது என்ற நிலைப்பாடே கொடி கட்டிப் பறக்கிறது.

***

ஈராக் (அல்லது ஐராக்) வினாடிக்கு வினாடி புதைகுழியாக மாறிவருகிறது. அப்புறம் என்னதான் நடக்கும் ?

ஆனாலும் அவ்வப்போது சில ஒளிக்கற்றைகள் தென்படுகின்றன. தேர்தல் நடத்துவதில் ஜார்ஜ் புஷ் தீவிரமாக இருக்கிறார். ஷியா பிரிவினர் ஒரு கூட்டமைப்புக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஐராக்கில் பெரும்பாலோர் அரபி இனத்தவரே. குர்து இனத்தவர் சன்னி பிரிவைச் சார்ந்தவர்கள். அரபி இனத்தவரில் சிறுபான்மையினர் சன்னி பிரிவைச் சார்ந்தவர்கள். பெரும்பான்மையான ஐராக் அரபி இனத்தவர் ஷியா பிரிவைச்சார்ந்தவர்கள். பாரசீகத்தினர் இங்கிருக்கும் ஷியாபிரிவினருக்கு பணஉதவி மற்றும் இதர உதவிகள் செய்வதாக அமெரிக்க அரசாங்கத்தினர் அஞ்சுகிறார்கள்.

தேர்தல் நடந்தால், அது ஒழுங்காக நடந்தால், அது சட்டப்பூர்வமானதாக மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டால், நல்லதுதான்.

ஜப்பானில் செய்ததைப்போல ஐராக்கில் செய்துவிடலாம் என்று அமெரிக்க அரசாங்கத்தில் இருக்கும் நவ கன்சர்வேட்டிவ்கள் கருதுகிறார்கள். (நியோ கான் என்பதை நவ சனாதனி என்று பலர் மொழிபெயர்க்கிறார்கள். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. சனாதனி என்பது ஒரு சனாதன தர்மத்தைச் சார்ந்த ஒரு இந்துவைக் குறிக்கும் வார்த்தை). இது தீய எண்ணம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் இதில் அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆதாயம் இல்லாமல் இங்கு இறங்கவும் இல்லை. எண்ணெய் என்பது ஒரு சாபம். என்னதான் முயற்சி செய்தாலும் அது சர்வாதிகாரத்துக்கே இட்டுச் செல்லும். ஐராக் சாபம் தப்புமா என்று பொறுத்து பார்ப்போம்.

***

karuppanchinna@yahoo.com

**

Series Navigation