சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


புகழ் பெற்ற ‘டாவின்ஸி கோட் ‘ நூலின் பின்னாலிருந்த ஆராய்ச்சியில் ஒரு கணிசமான பங்கு மார்க்ரட் ஸ்டார்பர்ட் எனும் பெண்மணியினுடையது. ரோமன் கத்தோலிக்கரான இப்பெண்மணி கிறிஸ்தவத்தில் மறைக்கப்பட்ட பெண்மையினை மீட்டெடுக்க அயராது பாடுபடுபவர். ஏசுவின் மணமகளாக மேரி மகதலேனை முன்வைக்கும் இவர் அதற்கான ஆதாரங்களை பலவருடங்களாக தேடி கண்டடைந்தவர். தாம் கூறுபவை ஆதாரங்களின் மூலம் வழக்கறிஞரின் அல்லது பல்கலைகழக பேராசிரியரின் கறாரான வாதங்களின் அடிப்படையில் ‘அப்படியல்ல இப்படித்தான் ‘ என நிரூபிக்க முடியாதவை மாறாக ஆதாரங்களினை உணர்ந்து அதன் மூலம் உள்ளார்ந்து கண்டடையும் உண்மைகள் என்பதனை வெளிப்படையாக கூறும் இந்த மென்மையான அம்மையாருக்கு சில கேள்விகளை அனுப்பி பதில்களை பெற்று அப்பதில்களில் இருந்து பிறந்த கேள்விகளையும் அனுப்பிட அதற்கும் அவர் பொறுமையாக பதில்கள் அளித்தார். இன்றைய கிறிஸ்தவ இறையியலில் இருக்கும் சோகமான வெற்றிடத்தினை உணர்ந்து அதனை நிரப்ப மார்க்ரட் ஸ்டார்பர்ட் தமது தேடலின் மூலம் வைக்கும் தீர்வே ஏசுவின் மணப்பெண்ணாக மகதலேனை ஏற்றல். அவள் வெறும் மணப்பெண்ணல்ல கிறிஸ்தவத்தினும் பழமையான தொன்மங்களில் வேர்கொண்ட தொன்மங்களின் பரிமாணமாக மகதலேனை ஸ்டார்பெர்ட் காண்கிறார். கிறிஸ்தவ இறையியலில் இப்பார்வை முக்கியமான முன்னகர்வு. ஆனால் கிறிஸ்தவ நிறுவன கட்டுறுதிகளை மீறி கிறிஸ்தவத்தின் மைய இறையியல் தம் மீட்பரின் பெண் தேவியையும் அவர்களின் புனித கலவையையும் ஏற்குமா ? மகதலேனும் ஏசுவும் நடனமாடும் ஒரு ஓவியத்தை எதிர்பார்க்கமுடியுமா ? ராதையின் ஸ்ரீகிருஷ்ணனின் முழுமையை மகதலேனின் ஏசுவால் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்தமுடியுமா ? இக்கேள்விகள் ஒரு ஹிந்துவின் மனதில் ஏற்படுகின்றன. அவற்றிற்கான விடைகளை மனதாலும் சிந்திக்கும் அளவுக்கு கிறிஸ்தவத்தின் பெண்மைத்துவம் இப்போதைக்கு பரிணமிக்க முடியாது. எனினும் இவ்விதையின் வளர்ச்சியை நாம் ஆவலுடன் கண்காணிப்போம். என்னுடைய கேள்விகளுக்கு பொறுமையுடன் ஆழமான பதில்களை அளித்து அவற்றை திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள செய்த மார்கரெட் ஸ்டார்பர்ட் அம்மையாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அரவிந்தன் நீலகண்டன்(அநீ): தேவி வழிபாடு ஹிந்து தர்மத்தின் இணைபிரியா அங்கமாகவே இருந்துள்ளது. எனவே மேரி மகதலேன் கிறிஸ்துவின் பெண்மை அம்சம் என்பது ஹிந்துவால் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ள முடிந்த ஓர் இறைக்கோட்பாடாகும். ஆனால் இன்று (கத்தோலிக்க) திருச்சபை குறிப்பாக கார்டினல் ராட்ஸிங்கரின் ‘டொமினிய ஈஸஸ் ‘ தன்மையுடன் பின்னகருகையில் அதற்கு ஏசுவின் பெண் தன்மையாக மகதலேன் பிரபலப்படுத்தப்படுவது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் ?

மார்கரெட் ஸ்டார்பர்ட்(மாஸ்): ஆயிரமாண்டுகள் பாலைவனவாசத்திற்கு பின்னர் மேரி மகதலேனை மீண்டும் வரவேற்கும் ஓர் திருச்சபையை நான் எதிர்நோக்குகிறேன். கார்டினல் ராட்ஸிங்கர் அவளை என்றைக்கும் வரவேற்கப்போவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் மக்கள் கட்டாயமாக வரவேற்பார்கள். அதற்கு சில காலமாகலாம். ஆனால் மேரிமகதலேன் ஏசு கிறிஸ்து ஆகியோரது மண-இணைவு திருப்பாடு-கதையாடலின் (Passion) மையமாக – சில அண்மை நாகரிகங்களின் தொன்மங்களுடன் இணைதன்மையுடன் (தாமுஸ் ஓஸிரிஸ் அடோனிஸ் மற்றும் டயோனிஸ்)- விளங்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன. பல கிறிஸ்தவர்கள் ‘தி டாவின்ஸி கோட் ‘ நூலுடன் ஒருங்குணர்ந்தார்கள்.அத்துடன் எனது நூலான ‘வெள்ளைக்கல் பரணியுடனான பெண் ‘ (The Woman with the Alabaster Jar) ‘மகதலேனின் இழந்த சிறப்பு ‘ (Magdalene ‘s lost legacy) ஆகியவற்றையும் கண்டடைந்துள்ளார்கள். இந்நூல்கள் கூறும் விஷயங்களை ஆராய முற்படுபவர்களுக்கு ஆதாரங்களே அவர்களை ஏற்க வைக்கும். மேலும் இணையத்தின் விளைவாக ‘புனித இணைவு ‘ என்னும் கருத்தாக்கம் நிச்சயம் மரணமடையாது. புனித நற்செய்தியில் இறைவி ‘ எனும் எனது நூலில் நானும் அங்கமாக இருக்கும் ஒரு பிரார்த்தனை குழுவினரின் கதையை நான் கூறியுள்ளேன். நாங்கள் பல வருடங்களாக கிறிஸ்தவத்தில் இருக்கும் இந்த சோககரமான தவறினை – இழக்கப்பட்ட பெண்மை- குறித்து பிரார்த்தித்தோம். எண்பதுகளின் நடுவில் ஒரு தீர்க்கதரிசினி போப்பிடம் காண அனுமதி கேட்டு அவரிடம் அல்பிஜென்ஸியன் பேத-போதனைகள் (Albigensian heresy) மீண்டும் ஐரோப்பாவில் எழும்பும் என்றும் அதனை எவராலும் தடுக்கமுடியாது என்றும் கூறியதாக கேள்விப்பட்டோம். நாம் இப்போது அப்புத்தெழுச்சியை காணுகிறோம் என நினைக்கிறேன். (அச்சமயம்) யாருக்குமே Albigensian heresy என்றால் என்ன என்று தெரியாது ஆனால் இன்று தெரிய வந்துள்ளது. அல்பிஜென்ஸிய சமய நம்பிக்கைகளில் ஒன்று ஏசுவுக்கும் மேரி மகதலேனுக்கும் நடந்த திருமணமாகும்.

அநீ: ஹிந்துக்கள் பல்தேவி தத்துவங்களை உடையவர்கள். எனவே மகதலேனை கிறிஸ்தவ பெண் தத்துவமாக ஏற்பார்கள். இத்தன்மையில் மேரி மகதலேனை ஒரு கால-வெளி வரலாற்றுச் சட்டகம் அவசியம்தானா ? என்ன கூறுகிறேனென்றால் ஏசு மற்றும் மகதலேன் வரலாற்றில் வாழ்ந்தார்களா இல்லையா என்பது ஆன்ம பரிணாமத்திற்கு அவசியமான ஒன்றா ?

மாஸ்: பெளதீக உலகம் ஒரு புலனறிவுக்கப்பாலான உண்மையின் பிரதிபலிப்பெனில் – தொன்மம் இப்பதிப்பில் ‘இருப்பது ‘ வேண்டும். தொன்மம் ‘வாஸ்தவமாக நடந்து முடிந்ததில்லை ‘ ஆனால் ‘சாஸ்வதமாக என்றென்றும் நடந்தவாறே உள்ளது ‘. ஏசுவையும் அவரது போதனைகளையும் பலதளங்களில் மக்கள் அர்த்தப்படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கிறிஸ்தவ போதனைகள் மணவறைக்கு (அல்லது வானுலக சிங்காதன அறைக்கு) ஒரு ‘பிரம்மச்சாரி மகனையும் ‘ ஒரு ‘கன்னி அன்னையும் ‘ ஏற்றிவிட்டது. எனது நம்பிக்கை என்னவென்றால் இப்படி செய்ததன் மூலம் உலகில் எங்களை ஒரு செயல்தன்மையற்ற குடும்ப தன்மை கொண்டவர்களாக ஆக்கிவிட்டார்கள். ஒரு இணைவான பங்களிப்பு என்பதற்கு எங்களுக்கு கிறிஸ்தவத்தில் ஒரு மாதிரி இல்லை. ‘பெண்மைத்துவம் ‘ எப்போதும் மதிப்பிழக்க வைக்கப்படுகிறது. இடது தன்மை- கலைத்தன்மை-உள்ளுணர்வுத்தன்மை ஆகியவை புறக்கணிக்கப்படுகின்றன. பெண்கள் மனைவிகளும் மகள்களும் அடித்துதைக்கப்படுகின்றனர். பூமி அன்னை மாசுபடுத்தப்படுகிறாள். தொன்மம் பலம் வாய்ந்தது…ஏசு மானுட கற்பனையை கவர்ந்ததன் காரணம் எந்த மானுடனைக் காட்டிலும் அவரில் ‘மணமகன் அரசனின் பலியிடப்படல் ‘ என்னும் தொன்மம் வெளிப்பட்டதுதான் – அல்லது குறைந்தபட்சம் அதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை. நாம் எவ்வாறு புனித மணப்பெண்ணை- அவள் நிலத்தையும் அவள் மக்களையும் குறிக்கும் மணப்பெண்ணை – ஏசாயா 62 இல் கூறப்படும் ‘நீ இனிக் கைவிடப்பட்டவள் எனப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசம் எனப்படாமலும் ‘ ‘பிரியமானவள் ‘ என்றும் ‘மணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவள் ‘ (பியூலா, எப்சிபா) என்றும் கூறப்படுபவளை காணத்தவறினோம் ?

அநீ: அல்லது நாம் இங்கு காணுவது ஒரு மிகவும் ஒடுக்கப்பட்ட ஆன்மிக பிரயாணமாக இருக்கலாமா – யோக அகப்பயணமாக ? புனித இரத்தத்தை ஏந்திய கிண்ணத்தின் தொன்மத்தில் கூறப்படுவது போல ? இறுதியான புனித கிண்ணம் எப்போதுமே தம்முள்ளேயே கண்டடையப்படுவதாக ?

மாஸ்: ‘மேலெவ்வாறோ அவ்வாறே கீழேயும் ‘ அதுவா இதுவா என்றல்ல. இரண்டுமே. அதுவும் இதுவுமாக.

அநீ: தெயில் டி சார்டினின் பரிணாம ஆன்மிகத்துவம் கத்தோலிக்க திருச்சபையினால் ஒடுக்கப்பட்ட மற்றோர் பேதகம். ஏசுவினை ஆதியும் அந்தமும் இணையும் ஓர் இயக்கமாக அது காண்கிறது. சார்டினின் ஆன்மிகப்பார்வையில் இயக்கமாக விளங்கும் பிரபஞ்ச கிறிஸ்துவும், நீங்கல் கிறிஸ்தவ பிரக்ஞையில் மீண்டும் வெளிக்கொணர பாடுபடும் ஞான பெண்மை பரிமாணமும் – எந்த அளவுக்கு ஒன்றொக்கொன்று ஒப்புறவு கொண்டுள்ளன ?

மாஸ்: நான் டி சார்டினை முழுமையாக படிக்கவில்லை எனவே ஒப்புறவு என்பது குறித்து நான் பேசமுடியாது. ஆனால் பிரபஞ்ச கிறிஸ்து எனும் பதத்தில் நான் ஒரு ஆபத்தினை காண்கிறேன். அது ‘லாகோஸ் ‘ (Logos) ஸின் ஆண்மைத்துவ தொனி உடையது. மீண்டும் இங்கும் பாருங்கள் பெண்மைத்தன்மைக்கு ஒரு பெயரில்லை…. ‘ஏசு ‘ என்பது மானுடம் எனவே அழிவுடையது. ஆனால் கிறிஸ்து ஒரு தத்துவமாக கிறிஸ்துவர்களால் காணப்படுகிறது அவ்வார்த்தை மானுட உருபெற்றது எனவே முழுமையாக ஆண்தன்மை உடையது. கிறிஸ்துவத்தில் ஒரு ‘கிறிஸ்தா ‘ (பெண்பால்) இல்லை. எனவே பிரபஞ்ச கிறிஸ்து எனும் பதம் கிறிஸ்தவர்களுக்கு ஓர் அதி உன்னத ஆண் தத்துவம் என்பதாகவே காணப்படும். ஒருமுறை நான் பிரபஞ்ச கிறிஸ்து என்பது குறித்து விவாதித்தபோது அது ஒரு இரும்புப் பிணைப்பாகவே விளங்கும் என அறிந்தேன் – ஒரு நெகிழ்வற்ற கனத்த பிணைச்சட்டமாக எங்களை ஒரு ஆண்தத்துவத்திற்கு அடிமைப்படுத்துவதாகவே அமையக்கூடும் – அப்பதத்தை உருவாக்கியவரின் நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் கூட- அப்பதம் ஒரு இரும்புப் பிணைப்பாவது தவிர்க்க இயலாததாகும்.

அநீ: ஜோஸப் காம்பெல் மற்றொரு முக்கியமானவர். உலக தொன்மங்களை ஆராய்ந்தவர். தொன்மங்களை கீழான பகுத்தறிவற்ற கதைகளாக காணும் கிறிஸ்தவ போக்கினின்றும் தைரியமாக விலகி அவற்றினை மானுடத்தின் அகப்பயணத்துடன் தொடர்புபடுத்தி ஆய்ந்தவர். ஞான நற்செய்திகள் குறித்து அறிந்திருந்த அவர் கூட மகதலேனை கவனிக்கத் தவறிவிட்டார். அவரது புகழ்பெற்ற மேற்கத்திய தொன்மங்கள் (கடவுளின் முகமூடிகள் பாகம்- III/Occidental Mythology Vol -III of The Masks of God) என்னும் நூலில் ஒரே ஒரு மேம்போக்கான வார்த்தையில் மகதலேனை அவர் முடித்துவிடுகிறார். புனிதக்கிண்ணத்தேடல் கூட (மகதலேனுடன் தொடர்புபடுத்தப்படாமல்) ஒரு அகப்பயணமாக மட்டுமே குறிக்கப்படுகிறது. என்றபோதிலும் காம்பெல் ஒரு மனமண்டல மாற்றத்தை ஏற்படுத்தினார். உங்கள் கருத்துகளும் எழுத்துகளும் எந்த அளவு காம்பெலின் ஆக்கங்களுடன் இசைவுடையதாக உள்ளன ?

மாஸ்: சொன்னது போல காம்பெலுக்கு மகதலேன் குறித்து கூற ஏறக்குறைய எதுவுமே இல்லை. மேற்கு ஐரோப்பாவின் கருப்பு மடோனா சிலைகள் குறித்து அவர் அதீத ஆர்வம் காட்டினார். அவற்றினை ரோமன் கத்தோலிக்க மரபு சார்ந்து கன்னி மேரியாகவும் ஏசுவின் அன்னையாகவுமே கண்டார். கருப்பு மடோனா சிலைகள் இஸிஸ் ஆர்தெமிஸ் மற்றும் சிபில் ஆகிய பழம் கிரேக்க/ரோமானிய தேவியரின் கருப்புத் தோற்றம் கொண்டவராக காணும் பிரதிமைகளிலிருந்து உருவாகியிருக்கலாம். சாலமோனின் உன்னதப்பாட்டுகளில் அன்னையல்ல மணப்பெண்ணே (தம் சோதரரின் திராட்சை தோட்டங்களில் சேவகம் செய்தமையால்) கருப்பு நிறம் கொண்டவளாக கூறப்பட்டிருப்பதை நினைவு கூறலாம். அவள் தன் திராட்சை தோட்டங்களை கவனிக்கவில்லை. (உன்னதப்பாட்டு 1:6) அவள் பெண்மைதத்துவம் ஆணுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கான அடையாளமாக இருக்கிறாள். மேற்கத்திய நாகரிகத்தின் சூரிய (ஆண்) தன்மையில் பெண்மை உழல்வதை அவள் காட்டுகிறாள். காட்லின் மாத்யூஸ் எழுதிய சோஃபியா குறித்த நூலில் எவ்விடத்திலும் மேரி மகதலேன் குறிப்பிடப்படவேயில்லை என்பதை நான் கண்டேன். ஏசுவின் இக்காதலி மிகவும் மறைவாக்கப்பட்டு நூற்றாண்டுகளாகக் கவனிக்கப்படாமலேயே போய்விட்டாள். ஏனெனில் அவள் விபச்சாரியாக முத்திரை குத்தப்பட்டிருந்தாள். அவள் குரல் திருடப்பட்டது. அவளது அரச ஆடைகள் சுவர்களின் காவலாளிகளால் (சாலமனின் உன்னதப்பாடல்களில் போல) துகிலுரியப்பட்டன. ஜோஸப் காம்பல் மேரி மகதலேனை புனித அரச மணவாளனின் மணவாட்டியாக கண்டடைய முடியவில்லை. மாறாக, அவர் கத்தோலிக்க மரபின் கோட்பாட்டாலும் பாரம்பரிய அழுத்தத்தினாலும் அவருக்கு முன்னால் வந்த பலரைப்போலவே அவளது இடத்தில் ‘அன்னையை ‘ கண்டார். ஐரோப்பிய மரபில் ஏசு அவரது அன்னைக்கு முடிசூட்டுவிக்கும் பல ஓவியங்கள் உண்டு. ஒன்றில் மேரி மகதலேன் அவர்களது பாதங்களில் மண்டியிட்டுள்ளதாக காட்டப்படுகிறது – அவள் வெள்ளைக்கல் பரணியை பிடித்தபடியே உள்ளாள். அவள் செவ்வாடையில் உள்ளாள் – இரத்தத்தையும் சதையையும் – புனித இணையாக அடையாளப்படுத்தும்படியாக. ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் அவள் கிறிஸ்தவ தொன்மங்களிலிருந்தும் எங்கள் கூட்டு பிரக்ஞையிலிருந்தும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக விலக்கி பிரஷ்டம் செய்யப் பட்டுவிட்டாள். ‘மேலிருப்பது போலவே கீழேயும் ‘

அநீ: இப்போது அது நம்மை ‘வாழும் பூமி ‘க்கு கொண்டு செல்கிறது. அண்மைக்காலங்களில் ‘கயா ‘ கருதுகோளில் மக்களுக்கு பெரும் ஈடுபாடு ஏற்பட்டிருப்பதை நாம் காணலாம் – உயிரியல் அறிவியலில் முழுமைப்பார்வையின் தேவைக்கானதோர் அவசியம் -மற்றும் பூமியை அதி உயிரியாக காணல். இது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?

மாஸ்: இழந்த மணப்பெண்ணை மீட்பதின் மூலம் பெண்மையை மீட்டெடுப்பதென்பது அனைத்து தளங்களிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதென நான் கருதுகிறேன். ஏனெனில் பெண்மை என்பது பெளதீகத்தில் வெளிப்படும் தெய்வீக சிருஷ்டி ஆற்றல்தான். இந்த இறையியல் ஸோஃபியா (இறையின் ஞானம்) இறையின் உள்ளீடு யூதத்தில் ஷெகினா – மணப்பெண் தன்மையுடனாக மக்களுடன் உறைவது இறையின் கண்ணாடி ,தெய்வீகத்தின் வெளிப்பாடு என்பனவற்றை உள்ளடக்கியது/ பூமி (கயா) ஓர் உயிர் என்ற முறையில் (சிருஷ்டியின் கர்ப்பப்பை) ஓர் மணப்பெண் மற்றும் சூரியக்கடவுளின் துணைவியாக அனைத்து குழந்தைகளையும் அவள் உடலிலிருந்தே உற்பத்தி செய்கிறாள். நீர்நிலைகளை காற்றினை தெருக்களை மாசுபடுத்துபவர்கள் மணப்பெண் தெய்வத்தை இறையின் பெண்முகத்தை நிந்தனை செய்கிறார்கள். பூமி என்றும் செழுமையுடையவள். வாழும் அனைத்துயிரையும் அவள் அவளிலிருந்தே உத்பவிக்கிறாள். கயாவினுடன் இணைக்கப்பட்டு அவள் உதரமாக பேசப்படும் குறியீடு அல்மாண்ட். அதுவே மகதலேன் எனும் பெயருடன் தொடர்புடையது. அது கிரேக்க மொழியில் 153 எனும் எண்ணுடன் குறியீட்டுத்தொடர்புடையது அதுவே ‘மீனின் கலமும் ‘கூட.

அநீ: டான்ப்ரவுனின் வெற்றி குறித்து எவ்வாறு உணர்கிறீர்கள் ?

மாஸ்: எனது நூல் செய்யவே முடியாததை டான் ப்ரவுனின் நூல் சாதித்துள்ளது. பூமி முழுவதுமுள்ள பல கோடி மக்களின் கைகளில் மகதலேனின் சரிதத்தை வைத்துள்ளது. ‘டாவின்ஸி கோட் ‘ படித்த பலர் எனது நூலிற்கு திரும்புகின்றனர். ‘தங்க முட்டையிட்ட வாத்தினை ‘ பார்த்தது போன்ற ஆனந்தம். இதனை ஒரு அதிசயமான பரிசாகவே நான் உணர்கிறேன். டான் தனது நூலை வெளியிட்டபின்னர் என்னை தொடர்பு கொண்டு தனது நூலில் எனது நூல்களை (The Woman with the Alabaster Jar and Goddess in the Gospels) குறிப்பிட்டிருப்பதாக கூறினார். ஆனால் அப்போதுதான் (2003 இன் வசந்தத்தில்) மேலும் இருநூல்கள் வெளிவருவது (Magdalene ‘s Lost Legacy and The Feminine Face of Christianity) டானுக்கு தெரியாது. எனது அனைத்து நூல்களும் இந்த உற்சாக சுவாரசிய அலையில் மேலெழுந்தன. எனது நூல்கள் இப்போது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்டு பலரது வாழ்க்கைகளை மாற்றுகின்றன. மக்களை விடுவிக்கின்றன. எனது பிரார்த்தனை எல்லாம் புனித இணைவு பாலைவனத்தை மீண்டும் பூக்க வைக்கட்டும்.

இதன் ஆங்கில வடிவம் ஸ்டார்பர்ட்டின் இணையதளத்தில் விரைவில் வெளியாகும்.

மார்கரெட் ஸ்டார்பட் இணைய தளம்:

மேரி மகதலேனின் நற்செய்தி :http://www.thinnai.com/pl12250313.html

[copyright 2005 Margaret L. Starbird; all rights reserved]

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts