சின்னஞ்சிறு சிட்டு அவள்…

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

கோச்சா ( எ ) கோவிந்த்


உயிர் மெய் இரண்டும்
கொதிக்கிறது..!!!
—-
வண்ணத்துப் பூச்சிபோல்
புன்னகை வண்ணம் ஏந்தி
சிரித்து திரிந்திருந்த
சின்னஞ்சிறு சிட்டு அவள்..
—-
துள்ளித் துள்ளி
மகிழ்வாய்ப்
பள்ளிக்குச் சென்று வந்த
சின்னஞ்சிறுமி அவள்..

மோட்டு வளை பார்த்து
கனவு மழைக்கு ஏங்கும்
காலம் அது.
—-
இனிதான அவள்
வாழ்வில்
இடியாய் வந்தான்
அவன்.

பள்ளியறைப் பாடம் படிக்க
தன்வீட்டில் துணையிருந்தும்-
பள்ளிசெல் குழந்தைக்கு
பாதகம் செய்தான் அவன்…
—-
காவல் வேலை
பார்த்த இடத்தில்
பயிரை மேய்ந்த
வேலி அவன்..
—-
ஓநாயாய் மாறி அவன்
ஒரு பாவம் அறியா
பிஞ்சுமலரைப்
பிய்த்து தன்
காமம் தணித்தான்-
அப்
பஞ்சமா பாதகன்…
—-
கனவுடன் வாழ்ந்த
அவள் சுவாசம்
கணப்பொழுதில்
நின்றது-
கயவன் அவனால்..!
—-
மனிதநேய நம்பிக்கையின்
மிச்சம் போல்-
நீதிபதியும் தந்தார்
அவனுக்கு
மரண தண்டனை…!!
—-
கயவனுக்கு
கொடிப் பிடித்து
தண்டனை ரத்து கேட்டோரே..

மனித உரிமை மறந்தவனுக்கு
மரணம் உரிமையாவதில்
தவறென்ன
இளகிய மனதோரே…
—-
உன் பெண்டு புள்ளைகளைத் தூக்கிப் போய்
சிறிதும் இடம் விடாமல்
சிதைத்து காமுற்றால் –
இப்படித் தான்
மெழுகுவர்த்தி ஏந்தி
அவனை
இயேசுநாதர் என்பீரோ… ?
—-
தன்னை
சிலுவையில் அடித்தப்
பாவிகளைக் கூட
மன்னிக்கச் சொன்ன
அந்த தேவதூதனே –
இந்தக் காமுகக் கயவன்
விஷயத்தில்
மன்னிப்பை
மறுபறுசீலனை செய்வார்..
—-
கல்லால் அடித்துக்
கொல்ல வேண்டிய
கயவனை
கணப்பொழுதில்
வலியின்றி
சுகமாய் கொன்றதை
நினைக்க நினைக்க
உயிர் மெய்
இரண்டும் கொதிக்கிறது…!!!
—-
gocha2004@yahoo.com
—-

Series Navigation

கோச்சா (எ) கோவிந்த்

கோச்சா (எ) கோவிந்த்