அரவிந்தன் நீலகண்டன்
‘குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்… ‘
1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய இந்தியவியலாளர்கள் நிர்ணயித்திருந்த காலமான கி.மு.1500 பின்னோக்கி தள்ளப் பட வேண்டியது அவசியமானது. அத்துடன் அது இந்திய கலாச்சாரத்துடனேயே உறவற்றதோர் புதிராக அறியப்பட்டது. எனினும் அகழ்வாராய்வாளர்கள் தொடர்ந்து பண்பாட்டு தொடர்ச்சியினை நிறுவும் விதமான கண்டுபிடிப்புகளை கண்டு வந்தனர். எனவே ரிக் வேத கால நாகரிகத்துக்கு தொடர்பற்ற அதற்கு முந்தையதோர் பண்பாடாக சிந்து சமவெளி நாகரிகம் அறியப்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எழுப்பப் பட்ட ஆரியப்படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டுச் சித்திரம் பின்வருமாறு அமைகிறது:
1. வேதங்களில் கூறப்படும் ஆரியர்களின் எதிரிகளான பூர்வீகக்குடிகள் உயர் நாகரிகத்துடன் வாழ்ந்த நகரவாசிகள். அந்நகரங்களை அழித்த படையெடுப்பாளர்களே ஆரியர்கள்.
2. ஆரியர்கள் இயற்கையை குறிப்பாக நெருப்பினை வழிபடும் நாடோடிகள். சோம பான சடங்குகள் ஆரியர்களின் சமய வாழ்வில் முக்கியமானவை. சிந்து சமவெளி மக்களோ உயர் தெய்வ வணக்கம் உடையவர்கள், குறிப்பாக சிவன் மற்றும் தாய் தெய்வ வழிபாடு.
3. சிந்து சமவெளி மக்கள் கடல் பயணம் செய்பவர்கள். ஆரியர்கள் கடல் குறித்து அறியாதவர்கள்.
4. சிந்து சமவெளி மக்கள் எழுத்து வடிவம் பெற்ற மொழி கொண்டவர்கள்.ஆரியர்கள் எழுத்தறிவற்றவர்கள்.
5. வேத கலாச்சார இறுதிச்சடங்கு உடலை எரிப்பதாகவும் சிந்து சமவெளியிலோ புதைப்பதாகவும் உள்ளது.
இந்த உயரிய நாகரிகத்தின் மீது விழுந்த ‘வேத இருட்காலத் திரை ‘ விலகுகையில் நாம் காண்பது வர்ணாஸ்ரம தர்மம் சார்ந்த சமுதாயமும், அதில் விஷ்ணு,சிவன், சூரியன் மற்றும் அன்னைத் தெய்வங்களை மையம் கொண்ட சமயமும்.அகழ்வாராய்வு கண்டுபிடிப்புகள் மூலம் இக்கருத்தியலுக்கு முக்கிய வடிவம் கொடுத்தவர் சர் மொர்ட்டிமர் வீலர். தற்போது மிகவும் பிரசித்தி பெற்று விட்ட அவரது வார்த்தைகளில் ‘குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன், மொஹஞ்சதாரோவில் பேரழிவையும் படுகொலைகளையும் நடத்தியதற்காக. ‘
‘…ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும் உணர்வு… ‘
1960 களில் வீலரின் கோட்பாட்டினை மேலும் உறுதிப்படுத்த சிந்து சமவெளி பகுதிகளில் மேலும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க அகழ்வாய்வு நிபுணர் ஜியார்ஜ் டேல்ஸ் மிகுந்த ஆச்சரியமடைந்தார். வீலரின் பல முடிவுகள் வெளிப்படையாகவே தவறானவையாக இருந்தன. திறமையானவரும் சர்வதேச அளவில் அகழ்வாய்வு பிதாமகருமான வீலர் எவ்விதத்திலும் படுகொலை என கருத முடியாததோர் சூழலை படுகொலையாக மாற்றியிருப்பதை கண்டார். உதாரணமாக ஆரியப்படையெடுப்பில் மண்டை உடைக்கப்பட்டு இறந்ததாக வீலர் கண்ட மண்டையோடொன்று காயம் ஆறி பல வருடங்கள் உயிர்வாழ்ந்ததற்கான சான்றுகளுடன் இருந்தது. டேல்ஸ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார், ‘படையெடுப்பும் படுகொலையும் நடந்திருந்தால் எரிக்கப்பட்ட கோட்டைகள் எங்கே ? அம்பு முனைகளும், ஈட்டிகளும், உடைபட்ட (படையெடுத்தோரின்) தேர்களும், படையெடுத்தோர் மற்றும் படுகொலைச் செய்யப்பட்டவர் களின் சடலங்களும் எங்கே ? …மிகக் கடினமான, முழுமையான அகழ்வாராய்ச்சிக்குப் பிறகும், ஆராயப்பட்ட எந்த சிந்து சமவெளி நாகரிக மையமும், ஆயதமேந்திய ஆரியப் படையெடுப்பின் விளைவாக வீழ்ந்ததற்கு எந்த சான்றும் இல்லை. ‘1 எனில், இந்த நாகரிகம் எவ்வாறு சுவடற்று அழிந்தது ? அந்நாகரிகம் அழியவில்லை மாறாக இன்றும் வாழ்கிறது என்கின்றனர் பல அகழ்வாய்வாளர்கள். இன்றும் தொடரும் வேத நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான இடைவெளியின் போலித்தன்மையினை அகழ்வாய்வு
வெளிப்படுத்தி வந்தது. உதாரணமாக மிகவும் பிரபலமானதாக கருதப்படும், சிந்து சமவெளி நாகரிக முத்திரையான ஒற்றைக் கொம்பு விலங்கு ஆராய்ச்சியாளர்களால் ரிக் வேத சின்னங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அவ்விலங்கின் முன் காணப்படும் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ‘2 மேலும் ஆரியர்களுக்கே உரியதாக அறியப்பட்ட நெருப்பு வழிபாட்டுடன் தொடர்புடைய வேள்வி பீடங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் பல தளங்களிலும் அறியப்பட்டுள்ளது. ‘சல்ப சூத்திரம் மற்றும் சதாப்த பிரமாணம் ஆகியவற்றில் வேத வேள்விக்காக அமைக்கப்படும் சூத்திரங்களுக்கும் ஹரப்பா அகழ்வாய்வில் காணப்படும் உறைந்த கணித அறிவிற்கும் தொடர்புள்ளது ‘3 என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஜியார்ஜ் ஜிவர்க்கீஸ் ஜோசப். மூத்த சிந்து சமவெளி அகழ்வாய்வாளரான பிஷ்ட் கூறுகிறார், ‘சிந்து சமவெளி நாகரிக மையங்களூடே நடக்கையில் ரிக்வேத காலத்திற்கே பயணம் செய்கிறோம்.ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது. ‘4
வாமதேவ சாஸ்திரியின் முரண் புதிர்
டேவிட் ஃப்ராலி ஒரு ஆயுர்வேத வைத்தியர். ஆரிய சமாஜ சடங்கின் மூலம் தன்னை வாமதேவ சாஸ்திரியாக மாற்றிக் கொண்டவர். பல விதங்களில் புது யுக (New Age) தன்மை கொண்டதாக இவரது சில கருத்துகள் இருப்பதால் ‘அறிவியல் ‘ தன்மை கொண்ட தொழில்முறை வரலாற்று வட்டங்களில் இவருக்கு மதிப்பு குறைவு. ஆனால் அவரது வேத இலக்கிய அறிவு அத்தனை குறைவாக மதிப்பிடப் படகூடியதல்ல. வேதங்களை பல வருடங்கள் கற்று பிந்தைய புராணங்களில் காணப்படும் வேத தொடர்புடைய தகவல்களை அவர் திரட்டியுள்ளார். இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட தொழில்முறை வரலாற்றறிஞர்கள் மிகக் குறைவுதான் என்பதை நாம் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். (வேத இலக்கியத்தை இவ்வாறு நேரடியாக கற்று அதன் மூலம் பழம் வரலாற்றை உருவாக்க முயன்ற அண்மைக் கால மற்றோர் குறிப்பிடதக்க அறிஞர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.) இவர் வைக்கும் முரண்புதிர் இந்திய ‘இடதுசாரி தொழில்முறை வரலாற்றறிஞர்கள் ‘ வட்டத்தில் எள்ளி நகையாடப்பட்டாலும், வாமதேவ சாஸ்திரியின் கேள்வி முக்கியமானது, ‘சிந்து சமவெளி நாகரிகத்தின் பல கூறுகள் இன்றும் வாழ்வது ஆரிய படையெடுப்பு கோட்பாட்டாளர்களால் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் இத்தகைய பெரும் நாகரிகம் எத்தகைய இலக்கியத்தையும் (சில குறியீட்டு தொடர்களைத் தவிர) எதையும் உருவாக்கவில்லை.அதே சமயம் வேத இலக்கியம் போன்ற பெரும் இலக்கியத்தை உருவாக்கிய ஒரு மக்கள் கூட்டமோ அதற்கு தகுந்ததோர் பெளதீக கலாச்சார அமைப்புகளை உருவாக்கவில்லை. இந்த மிகவும் தற்செயலான இல்லாமைகள் ஒரு தொடர்பினை ஏற்படுத்துகின்றன. ‘
‘இன்றைக்கும் வாழும் இந்தியச் சூழல்… ‘
வாம தேவ சாஸ்திரியின் முரண் புதிருக்கு எதிராக வைக்கப்படும் வாதம், வேத இலக்கியத்தில் மிகுந்து காணப் படுவதாக கூறப்படும் கிராமத்தன்மையும் மற்றும் நகர நாகரிகத்தின் மீதான வெறுப்பும். ஆனால் இதுவும் உருவாக்கப்பட்ட மாய பிம்பம்தானோ எனும் கேள்வியை எழுப்புகிறது இன்றைய ஆய்வுகள். பகவான் சிங் தனது ‘வைதீக ஹரப்பாவினர் ‘ எனும் நூலில் வேதங்களில் காணப்படும் பெளதீக கலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் திரட்டி அளித்துள்ளார். ‘ கற்கோட்டைகள் ‘, ‘ஆயிரம் கால் மண்டபங்கள் ‘, ‘தேவர்கள் வாழும் ஆயிரம் கதவுகள் கொண்ட அரண்மனைகள் ‘, ‘நூறு பேர் துடுப்பு வலிக்கும் கப்பல்கள் ‘ போன்றவை இதில் அடங்குகின்றன5. ஆனால் ஹார்வர்ட் பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர் மைக்கேல் விட்ஸெல் இதனை கடுமையாக எதிர்க்கிறார், ‘இந்திரனின் ஆயிரம் ஆணுறுப்புகள் போன்ற அதீத கற்பனைகள்தாம் இவை. ஆரியர்களின் உண்மையான பெளதீக கலாச்சாரம் கிராமம்/மேய்ச்சல் சார்ந்ததுதான். ‘ 6ஆனால் வரலாற்றாசிரியரான எட்வின் பிரயண்ட் இதனை விரிவாக ஆய்வு செய்கிறார், அகழ்வாய்வு மற்றும் இலக்கிய சான்றுகளை ஆதாரமாக கொண்டு அவர் பின்வருமாறு கருதுகிறார், ‘…அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் ஆரியப்படையெடுப்பால் சிந்து சமவெளி மீது கவிழ்ந்த இருண்ட இடைக்காலத்தை பொய்ப்பித்துள்ளன. சிந்து சமவெளி குடியிருப்புகளில் நிச்சயமாக ஒரு மாற்றம் தெரிகிறது.சிந்து சமவெளியின் பிற்கால தளங்களில் தெரியும் இம்மாற்றம் முக்கியமாக இந்த நாகரிகத்தின் அதீத பரவல் பற்றியது. (300% அதீதப் பரவல்). குஜராத் மற்றுமல்லாது பஞ்சாபிலும் தெரியும் இப்பரவல் சிறிய குடியிருப்புகள் அல்ல பெரிய பரப்பளவும் உடையவை. இத்தகைய இயற்கை உடைய அதிகரிப்பு ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவானதல்ல. ஏனெனில் ரிக் வேதத்தில் இத்தகைய எந்த நிகழ்வுகள் குறித்தும் செய்திகள் இல்லை. வேதங்களின் பிறப்பிடமான சப்த சிந்து பிரதேசத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை குறித்து வேதம் வேண்டுமென்றே மெளனம் சாதிப்பதாக எடுத்துக்கொண்டால், அது தான் உருவான நகர்ப்புற நாகரிகம் குறித்தும் வேண்டுமென்றே மெளனம் சாதிப்பதாக கொள்ளலாம். இது அறிவியல் வயப்பட்ட சிந்தனை அல்ல. ஆனால் வேதங்கள் உண்மையிலேயே ஓர் மேய்ச்சல் சார்ந்த கிராம வாழ்க்கை வாழும் நாடோடிக் கூட்டத்தின் இலக்கியம் தானா ? ஆயிரம் கால் மண்டபங்களும், பிரபஞ்ச தரிசனத்தை விளக்க பயன்படும் பெரும் கடல் குறியீடுகள், நூறுபேர் துடுப்பு வலிக்கும் கப்பல்கள் இவை எல்லாம் கடல் பயணம் அறியாத கிராம வாழ்க்கை வாழும் நாடோடிகளின் அதீத கற்பனையாக ஒதுக்கிவிட முடியுமா ?…உண்மை என்னவென்றால் மேய்ச்சல் சார்ந்த கிராம வாழ்க்கை அதனூடே ஒட்டி வளர்ந்த நகர்ப்புற நாகரிகம்,இரண்டும் இணைந்ததோர் வாழ்க்கையையே ரிக்வேத இலக்கியம் தருகிறது, இன்றைக்கும் வாழும் இந்தியச் சூழல் போன்று. ‘7
குதிரைகள் மற்றும் இரதங்கள்
சிந்து சமவெளி நாகரிகத்தில் அதன்முத்திரைகளை ரிக்வேதச் சடங்குகளின் அடிப்படையில் பொருளுணரத் தலைப்படும் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கூட சிந்து சமவெளி நாகரிகத்தில் குதிரைகளின்மை மற்றும் ஆரமுடைய சக்கர வாகனங்கள் கிடைக்காமை ஆகியவற்றால் அதனை முழுமையாக வேதநாகரிகம் என கருத தயங்குகின்றனர். உதாரணமாக ஐராவதம் மகாதேவனின் கீழ்கண்ட கூற்றினைக் காணலாம், ‘ (சிந்து சமவெளி நாகரிகச் சடங்காக சோமபானச் சடங்கு அறியப்படுவதன் மூலமாக) சிந்து சமவெளி நாகரிகமே ஆரிய நாகரிகம் எனக் கூறத் தோன்றலாம். ஆனால் சிந்து சமவெளியில் ஆரமுடைய சக்கரஇரதங்கள் இல்லை…எனவே சோமபானச் சடங்கினையே ஆரியர்கள் ஹரப்பாவினரிடமிருந்து கற்றனர் எனத்தான் கருத வேண்டும். ‘8 அலாச்சின் இத்தகையதோர் விளக்கத்தினை நெருப்பு வழிபாட்டுக்கு கூறுகிறார்.
இது அறியப்பட்ட சில வரலாற்றுண்மைகளை வைத்து பார்க்கையில் மேலும் பல முரண்புதிர்களை அளிக்கும். சோமபானச் சடங்கும் நெருப்பு வழிபாடும் எவ்வாறு பாரசீகர்களிடம் போயிற்று ? பிற்கால ரோமானிய மித்ரா வழிபாடு வரை பரவி கிடக்கும் சோம சடங்கினை ‘ஆரியர்கள் ‘ ஹரப்பாவினரிடமிருந்து கற்ற பின் இந்தியாவிலிருந்து மீண்டும் ஒரு மேற்கு நோக்கிய இடப்பெயர்வு நிகழ்ந்ததா ? அதற்கு எவ்வித அகழ்வாய்வு அல்லது இலக்கிய ஆதாரமும் இல்லை.
ஆனால் இப்புதிர் ஒரு தவறான கருத்தான குதிரைகள் மற்றும் இரதங்கள் சிந்து சமவெளியில் கிடைக்கவில்லை என்பதன் அடிப்படையில் எழுந்தவை. மாறாக குதிரைகளின் எலும்புகள் சிந்து சமவெளியில் (குறைந்த அளவுகளில்) அனைத்து தளங்களிலும் கிட்டியுள்ளன. இக்குறைவான அளவே வேத பண்பாட்டில் குதிரையின் மிகுந்த மதிப்பினையும் விளக்கும். மிகப்பழமையான பிம்பேதகா குகைச்சித்திரங்கள் ஆரங்கள் கொண்ட தேர்களை சித்தரிக்கின்றன. ஆரங்கள் கொண்ட வட்ட மற்றும் நீள்வட்ட வடிவங்களை கொண்ட முத்திரைகள் மிகவும் அதிகமாகவே சிந்து சமவெளியில் கிடைக்கின்றன.9 எனவே மிக கடினமான மிகவும் சாத்திய கூறுகள் அருகிய, அகழ்வாய்வால் பொய்ப்பிக்கப்பட்டு விட்ட முன்யூகமாகவே ‘ஆரியர்கள் ‘ ஹரப்பாவினரிடமிருந்து தங்கள் சமய வாழ்வின் மிக மைய சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதனை கருதவேண்டும். ‘ஆரியர்கள் ‘ ஹரப்பாவினரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்பட்ட அதே சமய கூறுகள்தான் அவர்களை ஹரப்பாவினரிடமிருந்து வேறுபடுத்த முந்தைய தலைமுறை ஆரிய படை
யெடுப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு கால வேடிக்கை.
பேழையில் வைக்கப்படும் வேதம்
மற்றொரு வாதம் வேதங்கள் எழுத்தறிவற்ற நாடோடிகளால் பாடப்பட்டதென்பது. இதற்கடிப்படை வேதங்கள் எழுதப்படாமல் பல காலங்களாக சொல் வழியாக தலைமுறை தலைமுறையாக வந்தவைதான். ஆனால் எழுத்தறிவு குறித்த குறிப்புகள் வேதங்களிலேயே இருப்பதை எல்ஸ்ட் சுட்டிக் காட்டுகிறார், உதாரணமாக, ரிக் வேதம் (10:62:7) காதில் எட்டு போன்ற அடையாளமுள்ள பசுவினைப் பற்றி கூறுகிறது. மேலும் ‘…வாசித்த பின் வேதம் பேழையில் வைக்கப்படுகிறது ‘ (அதர்வ வேதம் 19:72:1) என்பதையும் எல்ஸ்ட் சுட்டிக் காட்டுகிறார்10. எழுத்தறிவுடைய பல கலாச்சாரங்களிலும் சமய/புனித இலக்கியங்கள் எழுத்து வடிவத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இன்றைக்கும் யூத சமயத்தில் இறைவனின் புனித பெயர் முழுமையாக எழுதவோ அல்லது சொல்லவோ படக்கூடாதென்னும் கட்டுப்பாடு உண்டு. ஆனால் எழுத்தறிவினை உணர்ந்தவர்களாலேயே வேதம் இயற்றப்பட்டதென்பதற்கு தெளிவானதாஆதாரங்கள் வேத இலக்கியத்திலேயே
உள்ளன.
இனி இறுதிச்சடங்குகள். சிந்து சமவெளி நாகரிகத்தில் இரு வித இறுதிச் சடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. ‘இறுதி சடங்கிடம் H ‘ மற்றும் ‘இறுதி சடங்கிடம் Rெ37 ‘ ஆகியவை எரித்தல் மற்றும் புதைத்தல் ஆகிய வகை சடங்குகளை காட்டுகின்றன. இவ்விருவித இறுதிச்சடங்குகளுமே வேத இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதை
ஞான ஸ்வரூப் குப்தா சுட்டிக்காட்டுகிறார். ரிக் வேதத்தின் 10 வது மண்டலத்தின் 16 வது சூக்தம் எரிக்கும் இறுதிச்சடங்கையும், 18 வது சூக்தம் புதைக்கும் இறுதிச்சடங்கினையும் விவரிப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்11.
அழிந்துவிட்ட நாகரிகமா ?
ஆரிய படையெடுப்பினை நியாயப்படுத்த ஹரப்பா நாகரிகமே ஒரு புதிராக காட்டப்பட்டு வந்துள்ளது. அண்மையில் ஒரு இடது சாரி பத்திரிகை திருத்தப்பட்ட வரலாற்று நூலில் இருந்த பல பிழைகளில் ஒன்றாக ‘ஹரப்பா நாகரிகத்தை இந்திய நாகரிகமாக காட்ட முற்படுவதை ‘ கூறியது. ( ‘திருத்தப்பட்ட ‘ அந்நூலில் இருந்த ஆங்கில பிழைகளும் ,
வெளிநாட்டு வரலாறுகள் குறித்த தவறுகளும் ஏராளமானவை என்பது வேறு விஷயம். இந்திய வரலாறு குறித்தே இத்தகைய பிழைகளை இதற்கு முந்தைய நூல்களில் காணமுடியும் என்கிற உண்மை தற்போதைய நூலின் பிழைகளுக்கு சமாதானம் ஆகிவிட முடியாது.) இதைப்போலவே தமிழகத்தின் மிக பிரபலமான திறந்த வெளி பல்கலை கழகத்தின் வரலாற்று முதுகலை பாடநூல் பினவருமாறு கூறுகிறது, ‘ஆரிய முனிவர்களின் தாடி மோகத்திற்கு மாற்றான பண்பாட்டினை ஹரப்பா நாகரிகத்தில் கிடைக்கும் முடி திருத்தும் கருவிகள் காட்டுகின்றன. ‘ இது 2002 இல்!
ஹரப்பா நாகரிகத்தில் விடுவிக்கப்படாத புதிர்கள் உள்ளன. ஆனால் அது மறைந்து விட்ட நாகரிகம் இல்லை. அதன் மிகப் பல கூறுகள் (ஏறக்குறைய 90% எனலாம்.)இன்னமும் நம் அன்றாட கலாச்சார வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிறிஸ்து திரும்பி வந்தால் இன்றைய கிறிஸ்துவத்தை தான் உருவாக்கிய போதனைகளுடன் அடையாளப்படுத்திக்
கொள்வதை விட, ஒரு ஹரப்பாவினர் திரும்பி வந்தால் அவர் தன்னை பல வைதீகச் சடங்குகளுடன் தன் சமயத்தை மிக நன்றாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
கி.மு. 1700 இல் இந்நாகரிகம் சில சுற்றுப்புற சூழல் மாற்றங்களை சந்திக்க வேண்டியிருந்தது, படையெடுப்புகளை அல்ல. புகழ் பெற்ற அகழ்வாய்வாளர்களான ஜிம் ஷாஃபரும், டயேன் லிக்டென்ஸ்டைனும் இது குறித்து பின்வருமாறு கூறுகின்றனர்,
‘தெற்காசிய அகழ்வாய்வு பதிவுகள் எவ்வித இடப்பெயர்வு/படையெடுப்பு முன் யூகங்களுக்கும் இடமளிக்கவில்லை. மாறாக அகழ்வாய்வு செய்யப்பட்ட மையங்களின்
பெளதீக அமைவுகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், பல தள பதிவுகள், ரேடியோமெட்ரிக் காலநிர்ணயங்கள் ஆகிய அனைத்தும் தரும் முழுமைப் பார்வை வேதங்களின் வாய்வழி பாரம்பரியம் காட்டும் அயல் குறுக்கீடற்றதோர் பண்பாட்டு பரிணாமத்திற்கே சான்று பகர்கின்றன. ’12
ஹரப்பா அகழ்வாய்வு ஆராய்ச்சி (HARP) பொறுப்பாளரான ஜோனதன் கெனோயர் கி.மு. 1700 முதல் கி.மு. 600 வரையான பண்பாட்டு சமூக பரிணாமம் குறித்த காரணிகளையும் மாற்றங்களையும் விவரிக்கிறார், ‘ஏறக்குறைய கி.மு. 1700 இல் ஹஹ்ரா நதிக் கிளைகள் மேற்கே சிந்துவுக்கும் கிழக்கே யமுனாவுக்குமாக மாற்றம் கொள்ள ஆரம்பித்தன. இவ்வறட்சியினை தொடர்ந்து சிந்து நாகரிக மக்கள், மத்திய சிந்து சமவெளி, கங்கை: யமுனை சமவெளி, குஜராத்தின் வளமான சமவெளிகள் ஆகியவற்றிற்குள் வர ஆரம்பித்தனர். சிந்து நதியே இச்சமயத்தில் தன் போக்கினை மாற்ற ஆரம்ப்த்தது. இதன் விளைவாக பெரும் வெள்ள சேதங்களை இம்மக்கள் சந்தித்தனர். அவர்களது சில முக்கிய பண்பாட்டு கூறுகள் இச்சமயத்தில் மறைந்தன. ஆனால் எழுத்து, வர்த்தக எடைகள் வரைகலை, கைவினை கலைகள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைத்தையுமே கி.மு 600 இல் எழும் நகர்ப்புற நாகரிகங்களில் நாம் சந்திக்க முடிகிறது. ’14
பேரா. பி.பி.லால் கூறுவது மிகச்சரியானது, ‘ஹரப்பா நாகரிகத்தின் சிற்பிகள் எங்கும் மறைந்துவிட வில்லை.நம்மில், நம் சமயத்தில், நம் அன்றாட கலாச்சார நிகழ்வுகளில் நம்முடன் வாழ்கின்ற கலாச்சாரத்தில் அவர்கள் வாழ்கின்றனர். சரஸ்வதி மறைந்து விடவில்லை. கலாச்சார நீரோட்டமாய் பாரதமெங்கும் பாய்ந்து வருகிறது. ‘
எனில் நம் சமுதாய அமைப்பின் வேர்களை நாம் ஹரப்பாவில் அறிய முடியுமா ? எனும் கேள்வி விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இன்று சமுதாய மாற்றம் கருதி உருவாக்கப்பட்ட பல வரலாற்று கண்ணோட்டங்களை மிகவும் பாதிக்கும் ஆய்வாக அது அமையும் என்பதில் ஐயம் இல்லை.
பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இணைய தள ஏடுகள்
1. ஜியார்ஜ் டேல்ஸ், ‘மொஹஞ்சதாரோவில் ஒரு கற்பனைப் படுகொலை ‘, Expedition, (பென்ஸில்வேனிய பல்கலைக் கழகம், 1964, பாகம் VI, பக்கங்கள் 36:43)
2. பார்க்க இணைய முகவரிகள் : http://www.harappa.com/seal/10.html மற்றும் http://www.harappa.com/seal/11.html இவ்விளக்கங்கள் கெனோயரால் கொடுக்கப்பட்டவை.
3. ‘வேத யாக பீடங்களின் வரை கணிதம் ‘ , ஜியார்ஜ் ஜிவர்க்கீஸ் ஜோசப், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், (http://www.nexusjournal.com/96/joseph.html).
4. இரவீந்திர சிங் பிஷ்ட், தோலவிரா அகழ்வாய்வு குறித்து. 12/6/1998, ‘தி வீக் ‘. (தேதிகள் நாள்/மாதம்/வருடம் முறையில்)
5. பகவான் சிங் ‘Vedic Harappans ‘ ஆதித்ய பிரகாஷன், புது டெல்லி, 1995 .
6. மைக்கேல் விட்ஸல், ‘Autochthonous Aryans ? ‘, Electronic Journal for Vedic Studies (EJVS) (Vol.7) மே 25, 2001 வெளியீடு 3.
7. எட்வின் பிரயண்ட், (கொலம்பியா பல்கலைகழகம்) ‘உள்நாட்டு ஆரியர்கள் ‘ குறித்த RISA_L இணைய விவாத தொகுப்பு , பிரயண்ட்டின் கருத்து உள்ளீட்டு தேதி, 20/10/1996)
8. பார்க்க, ஐராவதம் மகாதேவன் நேர்முகம், www.Harappa.com
9. உதாரணமாக காண்க : http://www.harappa.com/seal/90.html
10. எல்ஸ்ட், ‘The Vedic Harappans in writing ‘, 7/2/200, வாய்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பக வெளியீடான ‘Update on the Aryan debate ‘ எனும் நூலிலும் இக்கருத்துகள் முழுவடிவம் கொடுக்கப்படுகின்றன.
11. ஞான் ஸ்வரூப் குப்தா, ‘India from Indus valley to Mauryas ‘, பக். 45 ,Concept publishing company, புது டெல்லி, 1999.
12. ஜிம் ஷாஃபர் & டயேன் லிக்டென்ஸ்டைன் 1998. ‘Migration, philology and South Asian archaeology. ‘ மிச்சிகன் பல்கலைக்கழக தெற்காசிய வரலாற்றுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுத்தாள்.
13. ஜோனதன் கெனோயர், ‘Legacy of the Indus Cities in Modern Pakistan and India ‘ எனும் தலைப்பில் www.harappa.com இன் சிந்து சமவெளி புகைப்பட விளக்க உரையில். தேதி: 11/9/1996
***
hindoo_humanist@lycos.com
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்